Monday, February 20, 2012

கதம்பக் கூடை.....



                          1980 களில் தீவிரமாக நவீன இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு...டாக்டர் செல்லப்பா படிக்கக் கிடைத்தன. அவர் முகமறியாமல் வரலாறு அறியாமல் படித்த நாவல்கள் அவை. அன்றைக்கு அவையும் என்னைப் புதிய தளத்திற்கு இட்டுச் சென்ற நாவல்களில் கலந்து கிடைத்தன வாசிப்பிற்கு. அவர் இன்றைக்கு மறைந்துவிட்டதாக இன்றைய குங்குமத்தில் படித்தபோது இப்போதுதான் அவரின் முகத்தைப் பார்க்கிறேன். இருப்பினும் அவரின் பங்களிப்பு தமிழ் நாவல்உலகில் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகிறது என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அம்மா அவர்களின் ஆன்மாவிற்கு எனது இதயபூர்வமான அஞ்சலிகளை உங்களோடு சேர்ந்து செலுத்துகிறேன்.



 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



  ஒவ்வொரு நாளும்
 கூறு போடப்படுகிறது...

  முகூர்த்த நாள் என்கிறார்கள்
  ஒரு முகூர்த்தமகிழ்ச்சியை
  அனுபவிப்பதற்குள்
  ஒரு மரண அறிவிப்பை அந்த
  முகூர்த்த நாள் வழங்கிவிடுகிறது...

  மேடுபள்ளம்போல் மகிழ்வும் துன்பமும்
  ஒன்றெனத் தத்துவமாய் உணர்ந்தாலும
   அதனை ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை...

   ஏதேனும் ஒன்றால் கண்ணுக்குப் படாத
    கத்தியாய் காலம் நின்று ஒவ்வொரு
    நாளையும் அதன் விருப்பமாய் வெட்டித்
   தள்ளுகிறது... அள்ளிக்கொள் எனும் வற்புறுத்தலோடு...

   காலையில் ஒன்றுமாய்
   மாலையில் ஒன்றுமாய்
   இடைப்பட்ட பொழுதுகளில்
   சிலதுமாய்  நாளின் கூறுகள்...

    ஒரு முதிர்ந்த பாட்டியின் சிரிப்பு
    ஒரு மொட்டின் எதுவுமறியா சிரிப்பு
    அன்றைய சேமிப்பாய் வாழ்க்கைக் கணக்கில்

    வாழ்தல் என்பது விதிக்கப்பட்டாலும்
    அது யாரின் விருப்பமுமாய் இல்லையெனும்
    கசப்பே மறுபடியும் நினைவூட்டலாய்
    திகட்டத் திகட்ட...

     அலுப்பாய் ஓய்ந்து இரவின் மடியில்
     படரும்போது ஏதேனும் ஒரு கவிதைதான்
     உனக்கு வாழ்வதற்குக் கூடுதலாய்
     தந்திருக்கிற வரம் நானென்று
     உணர்த்தி மலர்கிறது
     நாளைக்கான எதிர்கொள்ளலை
     நம்பிக்கையோடு....

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


       நேற்றுடன் அம்மாவுடனான
       சண்டை முடிவுக்கு வந்துவிட்டது...

       நேற்றுடன் அப்பாவுடனான
       ஒரே தலையணை உறக்கம்
       முடிவுக்கு வந்துவிட்டது...

       நேற்றுடன் தம்பியுடனான விளையாட்டு
       அழுகை மோதல் முடிவுக்கு வந்துவிட்டது...

        நேற்றுடன் மொட்டை மாடி... சந்தனமுல்லைக்கொடி
        காதல் பறவைகள்...ஜோவென்றதும் வாலாட்டும்
        பப்பிகுட்டி...எல்லாமும் முடிவுக்கு வந்துவிட்டன...

        பருவத்தின் முதிர்வில் ஒரு மஞ்சள் கயிறு
       எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது
       இருபத்தைந்தாண்டுகளைப் புறந்தள்ளிப்போட்டுவிட்டு...

       அம்மாபோல...அப்பா போல....
       தம்பி போல... எல்லாரும் இருக்கிறார்கள்
       உன்வீட்டில் உன் உறவுகளாய்
       அத்தனை பேரையும் அப்படியே நேசிக்கவும்
       நான் ஆவலாய்க் காத்திருக்கிறேன்...
       நீயெப்படியிருப்பாய்...?

       ஒரு சின்னப் புன்னகை... ஒரு செல்ல நிமிட்டல்...
       ஒரு மெல்லிய கைப்பற்றல்...ஒரு மயிலிறகாய் தலைகோதல்..
       ஏதேனும் ஒன்றுபோதும்..சொல் வேண்டாம்...
       சொல்லவேண்டாம்...

       தள்ளிய அறைக்குள்
       காத்திருக்கிறோம் நானும்
        என் மனமும்....

     

4 comments:

  1. அலுப்பாய் ஓய்ந்து இரவின் மடியில்
    படரும்போது ஏதேனும் ஒரு கவிதைதான்
    உனக்கு வாழ்வதற்குக் கூடுதலாய்
    தந்திருக்கிற வரம் நானென்று
    உணர்த்தி மலர்கிறது
    நாளைக்கான எதிர்கொள்ளலை
    நம்பிக்கையோடு....//

    பருவத்தின் முதிர்வில் ஒரு மஞ்சள் கயிறு
    எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது
    இருபத்தைந்தாண்டுகளைப் புறந்தள்ளிப்போட்டுவிட்டு...//


    முத்துக்களாய் அருமையாய்
    இரண்டு கவிதைகளும்
    ரசித்துச் சுவைத்தேன்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. உணர்ந்து எழுதப் படும் எல்லாமே சிறப்பாய் இருக்கும். உங்கள் கவிதைகள் உணர்ந்து எழுதப் பட்டவை. ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அலுப்பாய் ஓய்ந்து இரவின் மடியில்
    படரும்போது ஏதேனும் ஒரு கவிதைதான்
    உனக்கு வாழ்வதற்குக் கூடுதலாய்
    தந்திருக்கிற வரம் நானென்று
    உணர்த்தி மலர்கிறது
    நாளைக்கான எதிர்கொள்ளலை
    நம்பிக்கையோடு....

    அழகாய் மனசு மலர்கிறது..

    ஹெப்சிபா மறைவுக்கு எனது அஞ்சலியும்.

    ReplyDelete
  4. ஏக்கம் தொனிக்கும் வரிகள்

    ReplyDelete