அன்புள்ளங்களுக்கு...
ஹ ரணி வணக்கமுடன்.
நான் பதிவிட நேரம் வாய்த்து உட்கார நினைக்கையில் மின்வெட்டாகிவிடுகிறது. மின்சாரம் இருக்கையில் நான் வெளியில் வகுப்பில் இருக்கிறேன். ஆகவே இதில் தாமதம். எனவே தாமதம் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
தொட்டிமீன்கள்....
குறுந்தொடர் ...... 2
சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள். பெரிய தடடில் கொட்டிய சாதத்தின்மேல் ஊற்றப்பட்ட குழம்பு பனிக்காலத்தில் மலைத்தொடர்களில் படிந்திருக்கும் பனியைப்போல அழகாக இருந்தது, அதில் மேலாக ஒரு கத்தரிக்காய் துண்டும் ஒரு முருங்கைக்காய் துண்டும் துருத்திக்கொண்டு இருந்தன,
சாதத்தையும் குழம்பையும் சேர்த்து பிசைய ஆரம்பித்தாள்.
கேஸ் இல்லாமல் விறகடுப்பில் வெந்த சாதமும் கொதித்த குழம்பும் சேர்ந்த கலவையில் இளகிப்போயிருந்த காய்கறிகள் மணத்தை வெளியே வீச ஆரம்பித்தன.
அம்மா,, சீக்கிரம்மா பசிக்குது என்றாள் சங்கரி..
ஆமாம் எனக்கும்தான் என்றார் கோபாலன்.
மற்ற இரு பெண்பிள்ளைகளும் அப்படியே கோரசாகக் கத்தினார்கள்.. பசிக்குதும்மா..
நல்லா பறக்கறீங்க.. பிசைய வேண்டாமா? குழம்பு சோர வேண்டாமா? இல்லாட்டி வெள்ளையா வெள்ளையா சோறு இருக்கும்,, என்றாள் சாரதா.
பரவாயில்லை உருட்டி வையும்மா,, என்றார்கள் பிள்ளைகள்,
உருட்டி ஒவ்வொருவரும் நீட்டிய கைகளில் சோற்றை வைத்தாள், பக்கத்து கிண்ணத்தில் தக்காளியை மசாலாபோட்டு வறுத்திருந்தாள், அதை எடுத்து உள்ளங்கையில் உலக உருண்டைபோல நின்றிருந்த சோற்றின்மேல் தக்காளி வறுவலின் சிறிதை ஒவ்வொருத்தருக்கும் வைத்தாள்,
அப்படியே பழத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல சோற்று உருண்டையைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்,
சங்கரி கண்களில் நீர் கொட்டியது, சூடும் காரமும் சுவையும் சேர்ந்து கண்களில் நீரை வரவழைத்திருந்தன, கூடயே புரையேறித் தும்மினாள்,
அவசரமாக அவளது தலையில் தட்டிவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டு மெதுவா சாப்பிடுடா,, என்றான் கோபாலன்,
சாப்பிடுகிற தன் குடும்பத்தை வேடிக்கை பார்த்தபடி சாதத்தை கைகளில் உருட்டிக்கொண்டிருந்தாள் சாரதா,
சாப்பிட்டு முடித்ததும் அவரவர அப்பாடா,, என்று களைத்துப்போனார்கள், சுவையின் சுமையில் களைத்த களைப்பு அது, ஆனந்த களைப்பு அது, அப்படியே தரையில் அவரவர்கள் மல்லர்ந்து படுத்துக்கொண்டார்கள்,
சாரதா சாப்பிட்டுவிட்டு வந்து கோபாலன் அருகில் உட்கார்ந்துகொண்டாள்,
கோபாலன் அவளது முகத்தைப் பார்த்தான், எப்படி இருந்தவள் சாரதா, தன்னைத் திருமணம் செய்துகொண்ட எந்த சுகதையும அனுபவிக்காதவள், அதைவிட அதைக் காட்டிக்கொள்ளாதவள், கணவன் பிள்ளைகள் வீடு என்று தன்னை அந்த அசையாத வீடுபோல சுருக்கிக்கொண்டவள், அவளது உலகத்தில் வேறு எதுவும் இல்லை, முகம் மட்டும் எந்த நிலையிலும் சோர்வில்லாது இருக்கும், சாரதாவின் இயல்பு அது, எதற்கும் கவலைப்படமாட்டாள், சரியான முடிவு எடுப்பதில் பிசகமாட்டாள்,
என்ன பாக்கறீங்க? என்றாள்,
காலையிலே வந்துட்டுப் போனாங்களே மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து,, என்றிழுத்தபடி நிறுத்தினான் கோபாலன்,
ஏங்க அந்தம்மாவ பார்த்தா எனக்குப் பிடிக்கல்லே ,, என்றாள் சாரதா,
எதுக்கு அப்படி சொல்றே?
ஒரு பெண்ணைப் பாக்க வர்ற பொம்பள இப்படியா வருவா,, கோழிக்குஞ்ச நோட்டமிடற கழுகு மாதிரி கண்ணு அந்த அலைச்சல் அலையுது,, வாயோரம் எச்சில் வழியுது,, ரொம்ப பேராசைப் பிடிச்ச பொம்பளயா இருக்கும்போலருக்கு,, வரும்போதே பெண்ணைக் கட்டிக்கிட்ட வீட்டுலே பூந்து வர்றமாதிரி அதிகாரமா வருது,, பேச்சும் நடவடிக்கையும் சரியில்லீங்க,,,ஒரு முடிவும் எடுக்கவேயில்லை,, அதுக்குள்ள இப்படின்னா,, நாளை எம்பொண்ண கொடுத்திட்டு நான் சிரிப்பா சிரிக்கமுடியாது,, இதுவும் வெவரணை தெரியா பொண்ணா இருக்கு,, அந்த பொம்பளய பார்த்தா எனக்கு சகுனி மாதிரியே இருக்கு,, எதுக்கும் மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுடுங்க,,, எனக்கு ஐயறவா இருக்கு,,, சாரதா படபடவென்று பேசி நிறுத்தினாள்,
என்ன இது ஒரு தடவை பார்த்ததிலே இத்தனை பேசறே,,, மாப்பிள்ளை நல்லவர்,,, பிரைவேட்டா வேலை பார்த்தாலும் நல்ல சம்பளம்,, ரொம்ப எதிர்பார்க்கலேன்னு சொன்னாங்க,, அதான் நான் ஜாதகத்தைக் கொடுக்கச் சொன்னேன்,, நினைச்சு பாரு சாரதா,,, எல்லார்கிட்டேயும் குறைங்க இருக்கு,, குறையில்லாத மனுஷன் கிடையாது,, இப்படியே பார்த்துகிட்டு போறதுக்கு நாம ஒண்ணும் டாடா,, பிர்லா இல்லே,,, இவ போனாத்தான் அடுத்த ரெண்டுக்கும் நாம மூச்சுவிடமுடியும்,, மாமியார் எப்படி யிருந்தா என்ன மாப்பிள்ளை சரியான்னு பார்க்கணும்,,
தாயோட குணந்தானே பையன்கிட்டே இருக்கும்,,,
சங்கரி பெற்றோர்கள் தனக்கான வாழ்வின் யுத்தத்தைத் தொடங்கியிருப்பதைக் கண்டு உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தாள், வறுமை எல்லாவற்றையும் தோற்கடித்துவிடுகிறது, வறுமையை வெல்வதற்கான யுத்த வியுகங்களை வகுப்பதற்கே பலரின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது, வியுகத்தை வகுத்தபின் சிலருக்கு முடிகிறது, அதையும் தாண்டி யுத்தக்களத்தில் வந்து ஒரு வெற்றியைக் கண்டவன் அதை ஏண்டா வெற்றிபெற்றோம் என்று எண்ண வைத்துவிடுகிறது,,
மனிதனின் நிழல்போல வறுமை தொடர்ந்து நிற்கிறது, ஆனால் கண்ணுக்குத் தெரியாமல்,
எதுவும் பேசாமல் மௌனமாய் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள், எதுவாயினும் அனுசரித்து அவர்கள் எடுக்கும் முடிவிற்கு ஒத்துப்போய்விடவேண்டும், தன்னுடைய இரு தங்கைகளைப் பார்த்தாள் அவர்கள் அசந்துபோய் துர்ங்கிக்கொண்டிருந்தார்கள், இந்த நிம்மதி எல்லாநிலையிலும் அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமே என்று நினைத்தாள்,
என்னம்மா யோசனை என்றான் கோபாலன்,
ஒண்ணுமில்லேப்பா,, என்றாள் சங்கரி,
அவள எதுக்கு கேக்கறீங்க? பச்சப்புள்ள,, நாமதான் எதுவாயிருந்தாலும் நல்லது கெட்டது பாத்து வைக்கணும் என்று இடைமறித்தாள் இருவரின் எண்ணங்களையும் படம்பிடித்ததுபோல சாரதா,
அப்பாவும் மகளும் சாரதாவை பார்த்தார்கள், என்ன இவள் அப்படியே மனத்தைப் படிக்கிறாள் என்று,
சரி,, இந்த நகைசீட்டுக்குப் போய் பணத்தைக் கட்டிட்டு வந்துடுங்க அடுத்த மாசம் முடியுது,,, மாப்பிள்ளைக்கு உதவும்,, நானும் ஒவ்வொரு மாசமும் சீட்டு விழுந்திடும்னு நினைச்சேன்,, கடைசி சீட்டுவரைக்கும் வந்துடுச்சி,,
கோபாலன் சிரித்தபடியே அந்த நகைசீட்டை வாங்கி பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தான்,, இருபது வருஷத்திற்குமேலாக இந்த சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கிறது, அதில் பெல்லைத் தவிர எல்லாமும் சத்தமிடும் சைக்கிள் அது, ஆனாலும் ஒரு தந்தையின் பரிவைப்போல அவனைத் தாங்கியோடுகிறது,,
சங்கரி வாசலுக்கு வெளியே வந்தாள்,
தெருவில் ஒரு புதுமண ஜோடிகள் புது வண்டியில் போனார்கள், அந்தப் பெண் ஒருக்களித்து அவன் முதுகின்மேல் சாய்ந்திருந்தாள், இருவரும் சிரிப்பும் பேச்சுமாக வண்டி கட்ந்துபோனது, மேலத்தெரு வாத்தியார் வீட்டுப் பொண்ணு அது,, சங்கரியைவிட வயதில் சின்னவள்,
அப்படியே சாணிமெழுகிய திண்ணையில் சரிந்து உட்கார்ந்தாள், மதியப்பொழுதுகளில் சிலசமயம் தெரு அழகாக இருக்கும், காரணம் அவரவர்கள் வீடடஙகிக் கிடப்பார்கள், ஒருசிலர் சாப்பிட்டவுடன் வெற்றிலைப்பெட்டியுடன் திண்ணைக்கு வருவார்கள், பெரும்பாலும் ஆண்கள் திண்ணையில் உட்கார படியில் பெண்கள் உட்கார்ந்துகொள்ள குடும்பக் கதை பேசுவார்கள், அதுதான் சமயம் பல விஷயங்களைப் பேச,,
இதுபோன்ற சமயங்கள் சங்கரிக்குப் பிடிக்கும், யாருமற்ற தெருவில் அவள் கற்பனையில் ஓடிக்கொண்டேயிருப்பாள், ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் உட்கார்ந்து பார்ப்பாள், படுத்துப்பார்ப்பாள், போடப்பட்டிருக்கும் வைக்கோற்போரில் ஓடிப்போய் ஏறி சறுக்குவாள்,, தென்னை மரத்தில் பாதி ஏறுவாள்,, தெருவின் மதகருகில் கிடக்கும் குளத்தில் குதித்து பார்ப்பாள், எருக்கம் செடிகளில் அந்தப் பூக்களை விரல்களால் அமுக்கி கேப் வெடிப்பாள்,, தட்டான் பிடிப்பாள்,, பாவாடையை மேலாக செருகி சில்லு விளையாடுவாள்,, எல்லாம் கற்பனையில்தான் எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்ததுதான் ஆனாலும் வயதுக்கு வந்தவுடன் நின்றுவிட்டன, அம்மா கண்டிப்பானவள் படிப்பையும் ஆட்டத்தையும் ஒருசேர நிறுத்திவிட்டாள், காசில்லாட்டி என்ன மானத்தோட வாழணும்,, செத்தாலும் மானத்தோட சாவணும்,, ஏழைக்குத்தாண்டி ரோஷமும் மானமும் அதிகமா இருக்கணும், உசிருபோல,, என்று அடிக்கடி சாரதா சொல்வாள்,,
சங்கரி நினைவு கலைந்தாள், ஆனால் சொர்ணத்தாயி நினைவுக்கு வந்தாள், அவள் உள்ளே நுழையும்போதே பிடிக்கவில்லை, பார்ப்பதற்கு கூனிக்கிழவிபோலத்தான் இருந்தாள், அவளுடைய பல்லும் எச்சில் ஒழுகும்வாயும் சூனியக்காரி மந்திரக்கோலை வைத்துக்கொண்டு கண்களை அலையவிடுவதுபோல அலையவிட்டபடிதான் உள்ளே வந்தாள், அவளது பார்வை சரியில்லைதான், அவளோடும் அவளின் மகனோடும்தான் காலம்முழுக்க வாழவேண்டியிருக்குமோ என்றதும் உடலில் இருந்து எதிர்பாராமல் ஒரு நரம்பை சட்டென்று உருவியதுபோல அதிர்ந்தது,
அப்போது சுவற்றின் மூலையிருந்து ஒரு பல்லி உச்சுக்
கொட்டியது,
அய்யோ கௌளி சொல்லுதே என்றதும்,,,பதறிப்போய்
வெளிப்படையாக உடம்பை ஒருமுறை குலுக்கிக்கொண்டாள்,
உள்ளிருந்து சாரதா காலை தாங்கியபடியே வெளியே வந்தாள்,
சங்கரி பதறிப்போய் என்னம்மா ஆச்சு? என்றாள்,
அடுப்புக்கு சட்டம் ஒடச்சிப்போட்டிருந்தேன்,, அதுலே ஒரு ஆணி இருந்தது கவனிக்கல்லே காலை அழுத்தி வச்சிட்டேன்,,
வலது கட்டைவிரலுக்கு கீழாக ரத்தம் கொட்டிக்கொண்டேயிருந்தது, சங்கரி பதறிப்போனாள, என்னம்மா நீன்னு,,
பார்த்து நடக்கக்கூடாது,,, உக்காரு முதல்லே,, என்றபடி அவளைத் தாங்கி திண்ணையில் உட்கார வைத்துவிட்டு உள்ளே ஓடிப்போய் பழைய வேட்டியைக் கிழித்துத் துண்டாக்கி வந்து அவள் விரலைச் சுற்ற வந்தவள் அதிர்ந்துபோனாள்,
திண்ணையில் அப்படியே மல்லாக்கச் சரிந்து மயங்கிப் போயிருந்தாள் சாரதா, ரத்தம் கொட்டுவதும் நிற்கவில்லை, அம்மா என்றலறியபடி அவளை எழுப்பினாள்,, எழுந்திருக்கவில்லை சாரதா,, அம்மா,, என்று மறுபடியும் அலறிய அலறலில் தெரு கூடி ஓடிவந்தது, யாரோ ஒருத்தர் ஓடிப்போய் ஆட்டோவை அழைத்துவர,, ஆட்டோவிற்குத் துர்க்கிக்கொண்டுபோனார்கள், ஆட்டோவில் கிடத்திவிட்டு
அந்தக் கால்ல ஈரத்துணிய சுத்தும்மா என்றார்கள், சங்கரிக்கு அது காதில் விழவேயில்லை, ஆட்டோவில் அம்மாவைத் தாங்கியபடி அம்மா, என்று அழுதுகொண்டிருந்தாள், அதற்குள் அவளின் தங்கைகள் எழுந்துவந்து அம்மா என்று கத்தி அழ ஆரம்பித்தார்கள்,
ஒண்ணுமில்லேம்மா,, ரத்தத்தப் பார்த்து மயங்கியிருக்கும், பயப்படாத,, ஆமா கோவாலு எங்கே,,
அப்பா நகை சீட்டு கட்டப்போயிருக்கு,,
சரி,, பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோங்க,, கோவால அங்க வரச்சொல்லுப்பா,,
ஏம்பா,, இந்த பொட்டப் புள்ளங்கள பாத்துக்கங்கப்பா,, மிரண்டுபோயிருக்குங்க,,
ஆட்டோ அரசு மருத்துவமனை நோக்கிப்போனது,
பற்கள் கட்டிப்போயிருந்தன சாரதாவிற்கு, சங்கரி பார்த்து பார்த்து அழுதுகொண்டிருந்தாள்,
அதற்குள் கோபாலைப் பார்த்து விவரம் சொல்ல,, சீட்டுக்கட்ட கடைக்குள் நுழைந்தவன் கட்டாமல் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்தான் அரசு மருத்துவமனை நோக்கி
கட்டைவிரலில் சுற்றியிருந்த வேட்டித்துண்டை மீறி ரத்தம் பெருகியிருந்தது,
மருத்துவனையில் ஆட்டோவில் இருந்து துர்க்கிக்கொண்டு அவசரச் சிகிச்சைப் பரிவுக்குக் கொண்டுபோனார்கள்,
பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தார்கள்,
ஒரு டாக்டர் சாரதாவின் நாடியைப் பார்த்துவிட்டு பல்ஸ் டவுனாகுது உடனே ஐசியு கொண்டுபோங்க என்றார்,
ஐசியுவிற்குள் கொண்டுபோனார்கள்,
கோபாலன் ஓடிவந்தபோது சாரதாவை கண்ணாடி அறைக்கு வெளியே நின்று பார்த்தான், உள்ளே உயிர்வாயு முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது,
டாக்டர் வந்தார்,,
கோபாலன் அழுதான்,, என்னாச்சு டாக்டகர்?
பதட்டப்படாதீங்க,, லோ பிரசஷர் ஆயிடிச்சி,, பல்ஸ் டவுனாயிடிச்சி,, பார்க்கலாம்,, மதியம் என்ன சாப்பிட்டாங்க? கால்ல எப்படி அடிபட்டிச்சி,, ரொம்ப ரத்தம் போயிருக்கு,,ரத்தம் தேவைப்படலாம்,
ரத்தமா?
ஆமாம்,, என்றபடி டாக்டர் போனார்,
அதுக்குள்ள என்னம்மா ஆச்சு?
அடுப்புக்கு வெட்டிபோட்டிருந்த சட்டத்துலேர்ந்து ஆணி குத்திடிச்சுப்பா,, துருப்பிடிச்ச ஆணிவேற,, சங்கரி சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்,
அட மகமாயி,,, என்ன நேரம் என்னத்தானா ஆட்டி வைக்கணும்,,
கோபாலும் அழ ஆரம்பித்தான்,
அப்போ நர்சு வந்தாள்,, சாரதாவோ வந்தவங்க யாரு,,
கோபாலன் முன்னே போனான்,
நீங்க யாரு?
என்னோட மனைவிதான் சிஸ்டர்,,
அவங்களுக்கு ரத்தம் ஏத்தியாகணும்,, என்ன குரூப்?
தெரியாது டாக்டர்,,
என்ன மனுஷங்க நீங்க? என்றபடி திரும்பி ஓடினாள் நர்சு,
ஓடிய வேகத்திலேயே திரும்பி வந்தாள்,
ஓ பாசிடிவ்,,, மூணு பாட்டில் வேணும் வாங்கிட்டு வாங்க,,
உங்க கிட்ட இல்லையா சிஸ்டர்?
ஒரு பாட்டில்தான் இருக்கு,, நாலு பாட்டில் ஏத்தணும்,, போங்க வாங்கிட்டு வாங்க உடனடியா,,
சங்கரியை பார்த்து இரும்மா நான் வீட்டுக்குப் போயிட்டு ரத்தம் வாங்கிட்டு வந்துடறேன்,
வீட்டுக்கு வந்து சங்கரிக்கான சேமித்து வைத்திருந்த இரண்டு பவுன் சங்கலியை எடுத்துக்கொண்டு அடகுக் கடைக்குப்போய் அடகு வைத்து பணத்தை வாங்கிகொண்டு எங்கே ரத்தம் கிடைக்கும் என்று யோசித்தபடி சைக்கிளை மிதித்தான்,
அவனுக்குத் தெரிந்த எல்ஐசி ஏஜண்ட் குமாரவேலு இருக்கிறார், அவரைக் கேட்டால் தெரியும்,,
அவரைத் தேடிப்போய் பார்த்து சொன்னதும்
எனக்குத் தெரிந்த நாலைந்து இடங்கள் இருக்கு வா போய் பார்க்கலர்ம் என்று அவன் வண்டியை தன் வீட்டில் போடச்சொல்லிவிட்டு அவருடைய வண்டியில் ஏற்றிக்கெர்ண்டு போனார்,
நாலைந்து ரத்த வங்கிகளிலும் ஓ பாசிடிவ் ரத்தம் இருப்பு இல்லை என்றார்கள்,
கோபாலனுக்கு சாரதாவை நினைக்க நினைக்க மயக்கம் வந்தது, சாரதாவை கை நழுவ விடப்போகிறோமோ என்ற கலக்கம் வந்தது. அப்படியே மயங்கி விழுந்தான்,
(மீன்கள் துள்ளும்)
வறுமை பற்றிய வரிகள் உண்மை வரிகள்...
ReplyDeleteகோபாலனும் மயக்கமாகி விட்டது மேலும் பரபரப்பு கூடுகிறது...
சாரதாவை கை நழுவ விடப்போகிறோமோ என்ற கலக்கம் தொட்டி மீன்களாய் துள்ளுகின்ரது மனதில் ...
ReplyDeleteஇறுகிய மனங்கள் கூட இளகும் தங்கள் கை வண்ணத்தில்....
ReplyDeleteபட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. திருமணச் செலவுக்கே இருப்பு போதாத நிலையில் இருப்பதற்கும் வந்துவிட்டது ஆபத்து! கோபாலன் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்ப்பிலும் மண்! கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் எழுத்து மனம் தொடுகிறது. தொடருங்கள்... தொடர்கிறோம்.
ReplyDeleteஅடடா..
ReplyDeleteகோபாலும் மயங்கி விழுந்தார் எனப் படிக்கும்போது மனது பதறுகிறது....