Saturday, April 27, 2013

தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....4




                                    தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....4



                              அந்த மருத்துவமனை வராண்டாவெங்கும் மருந்துவாடை  மிதந்துகொண்டிருந்தது.

                              ஐசியுக்கு வெளியே சங்கரி தரையில் சரிந்து உட்கார்ந்து இருந்தாள். மனமெங்கும் வேதனை கொப்பளித்துக்கொண்டிருந்தது,

                                அப்பாவை இன்னும் காணவில்லை.

                                மருத்துவமனையில் இருந்த பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது, இன்னும் எத்தனை பாட்டில்கள் என்பதைவிட இந்தப் பாட்டில் முடிவதற்குள் அப்பா வந்துவிடவேண்டுமே என்கிற கவலை அவளை அரிக்கத்தொடங்கியிருந்தது,

                                 ஒருவேளை பணம் போதவில்லையோ என்கிற எண்ணமும் அவளை மேலும் வதைத்தது,

                                  ஏழையாய் பிறப்பதில் வருத்தமில்லை,  பட்டினியாய் கிடப்பதில்கூட சோகமில்லை, ஆனால் இதுபோன்ற இம்சைகளைத் தருவதில் அப்படியென்ன ஏழைகள் பாவம் செய்தார்கள்? ஏழைகளாகப் பிறந்திருப்பதே பெரிய சாபமும் பாவமும்தானே? இதைவிட கொடிய தண்டனை வேறு வேண்டுமா? ஆண்டவன் நல்லவங்களைத்தான் சோதிப்பான் என்கிறார்கள். இப்படி மரத்தின் வேரையறுப்பதுபோல சோதிப்பவன் எப்படி கடவுளாக இருக்கமுடியும்? அவனை எப்படி நம்பமுடியும்?

                                 ஆனாலும் அவளை மீறி அவளது குலதெய்வம் காமாட்சியம்மன் நினைவுக்கு வந்தது, மனதுக்குள் குலதெய்வக் கோயிலைக் கொண்டு வந்து விழுந்து வணங்கியழுதாள்,

                                   கதவைத் திறந்துகொண்டு நர்சு வந்தாள்,,

                                   சங்கரி நினைவை உதறிவிட்டு எழுந்தாள்,

                                   என்னம்மா ஆச்சு ரத்தம் வரலியா? இது தீரப்போவுது,,

                                   எங்கம்மா எப்படியிருக்காங்க சிஸ்டர்?

                                   நான் என்ன கேக்கறேன்,, நீ என்ன பதில் சொல்றேன்,, உயிரைக் காப்பாத்தத்தானே போராடறோம்,, ரத்தம் நாலைந்து பாட்டில் ஏத்துனாதா எதையும் சொல்லமுடியும்,,,

                                   அப்பா அதுக்குத்தான் போயிருக்காங்க சிஸ்டர்,,,

                                    சீக்கிரம் போன்பண்ணி வரச்சொல்லும்மா,,,

                                   அப்பாகிட்ட செல்பேன் கிடையாது சிஸ்டர்,,,

                                    என்னது? என்றபடி அவளை ஒருமாதிரியா பார்த்துவிட்டு,, எப்படியாச்சு தகவல் சொல்லு,, என்றபடி போனாள்,

                                    சங்கரிக்கு வீட்டில் இருக்கும் தங்கைகள் நினைவு வந்தது, பாவம் அவர்கள் என்ன செய்கிறார்களோ? அவர்களுக்கு அந்தளவுக்கு விவரம் தெரியாது, அப்பாவுக்கு என்னாச்சு? மறுபடியும் அப்பா நினைவு,

                                    அப்பாவை எப்படித் தொடர்பு கொள்வது,,

                                    சங்கரிக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பி நின்றாள், மறுபடியும் மனதுக்குள் காமாட்சியம்மன் உருவம் வந்து தோன்றியது,

                                     நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்து  மருத்துவமனையை விட்டு வெளியே வந்து மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள், சிறிது துர்ரம் சென்றதும் ஒரு அம்மன் கோயில் தெரிந்தது, அதை நோக்கி நடந்தாள், அது ஒரு மாரியம்மன் கோயில்,

                                       உள்ளே போனாள், கோயிலில் அதிக கூட்டமில்லை, அர்ச்சகரும் யாருமில்லை,

                                       போய் உள்ளே சன்னதி முன் மாரியம்மனைப் பார்த்தபடி உட்கார்ந்தாள், பச்சைப்புடவை உள்ளங்கை அகல தங்க சரிகையுடன் அலங்காரத்துடன் அமர்க்களமாக இருந்தாள்,

                                       முகத்தில் சிரிப்பு வேறு,

                                       அம்மனைப் பார்த்தாள், உனக்கு சிரிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை அடக்கியபடி பார்த்தாள்,

                                        அம்மனின் சிரிப்பு மாறாமல் இருந்தது,

                                         கண்களை மூடிக்கொண்டாள்,

                                         நாங்க என்ன பாவம் செய்தோம்,,, என்னோட அம்மா அவ என்ன பாவம் செய்தா?  ஏன் இப்படி சோதிக்கறே,,, கஷ்டத்தைக் கொடு,, வேண்டாம்னு சொல்லலே அதைத் தாங்கிக்கற சக்தியையும் கொடுக்கக்கூடாதா? எனக்குத் திருமணப் பேச்சு எடுத்ததுமே அந்த சின்ன இன்பத்தைக்கூட அனுபவிக்க்க்கூடாதுன்னு அப்படி என்ன வன்மம் உனக்கு?,, தாங்கிக்கமுடியாத கஷ்டத்தைக் கொடுத்துட்டு அதை சோதிக்கறேன்னா எப்படி உன்னை கடவுள்னு சொல்லமுடியும்? அப்படி சோதிச்சு அப்புறம் மகிழ்ச்சியைக் கொடுப்பேன்னா இது என்ன விளையாட்டு? அப்படி என்ன அதுல உனக்கு அப்படியொரு ஆர்வம்?... எல்லாக் கேள்விகளையும் உள் வாங்கிகொண்டவள்போலவும் ஆனர்ல் பதில்கூற விரும்பாதவள்போலவும்  பேசும்வரை பேசு என்பதுபோலவே மாறாதிருந்தது அந்தச் சிரிப்பு,

                                         எழுந்து அப்படியே சன்னதியில் விழுந்து வணங்கினாள்,

                                         மறுபடியும் ஒருமுறை அம்மனை உற்றுப் பார்த்தாள், அதில் அம்மா சாரதாவின் முகம் தெரிவதுபோல இருந்தது, அப்படி நினைக்கப் பயமாக இருந்தது,

                                         குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே வந்து மறுபடியும் மருத்துவமனையை நோக்கி நடந்தாள்,

                                         உள்ளே நுழைந்தும் அப்பாவைத் தேடினாள், அப்பா வரவில்லை,

                                       மனதுக்குள் மறுபடியும் படபடப்பு ஏறி நின்றது,

                                       ஐசியுக்கு முன்னே போய் நின்றாள், அப்போது கதவைத் திறந்துகொண்டு நர்சு வெளியே வந்தாள்,சங்கரியைப் பார்த்ததும் அவள் முகத்தில் கோபம் பொங்கியது,,

                                        எங்கம்மா உங்கப்பா,, அந்தப் பாட்டில் முடிஞ்சிடுச்சி,, இன்னுமா வரலே,, அப்புறம் ஏதாச்சுன்னா,, எங்ககிட்ட வம்புக்கு வர்றது,, டாக்டர் கோபமா இருக்காரு,,, ஏதாச்சும் செய்யும்மா,, போ உங்கப்பா எங்கருந்தாலும் கூட்டிட்டு வா,,

                                        சங்கரி நிலைகுலைந்துபோனாள், அப்பாவை எங்க போய் தேடுவது? கையில் பைசா  கிடையாது, அப்பா எங்க போயிருப்பார் என்கிற யோசிப்பும் இல்லை,,,நர்சு சொன்னது அவளை உலுக்கிப்போட்டது,,

                                         அப்புறம் ஏதாச்சுன்னா,,,

                                         அம்மாவுக்கு ஏதும் ஆயிடுமா,,, அம்மா இல்லாமப் போயிடுமா,, அம்மா எங்கள விட்டுட்டுப்போயிடுவியா ,,, நினைக்க நினைக்க அவளுக்கு உள்ளுக்குள் பொங்கியது,,

                                          என்னம்மா குத்துக்கல்லாட்டம் நிக்கறே,, வந்து சேர்றீங்க பாருங்க,, எங்களுக்குன்னு,, சே,,, என்றபடி நர்சு திரும்பி திட்டிக்கொண்டே போனாள்,

                                         அவள் பின்னே ஓடினாள் சங்கரி,

                                         ஓடிப்போய் அவள் முன்னே நின்றாள், நின்றவள் அப்படியே அந்த நர்சின் கால்களில் விழுந்து அவள் கால்களைக் கட்டிக்கொண்டு,,, அக்கா,, எங்கம்மாவை விட்டுடாதீங்கக்கா,, காப்பாத்துங்கக்கா என்று கதறினாள்,

                                              நர்சு அதிர்ந்துபோனாள், பதறியபடி,, சட்டென்று சங்கரியைத் துர்க்கியபடி,, அட,, என்னம்மா நீ என் கால்லே போய் விழறே,,
அய்யய்யே இது என்ன ரோதனையாபோச்சு,, சட்டென்று அவளுக்கு சங்கரியைப் பார்க்க இரங்கினாள்,

                                        அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதும்மா, தைரியமா இரு,,, எங்ககிட்ட அம்மாவுக்கு தேவைப்படற ரத்தக்குருப் இல்லே,, இருந்தத ஏத்தியாச்சு,, அதான்,, பாப்போம்,, எப்படியாச்சும் காப்பாத்திடலாம்,, கடவுளை வேண்டிக்க,,

                                        நர்சு ஆறுதலாய் சொல்லிவிட்டுப்போனாள், ஆனால் அவளின் மனது லேசாக சங்கரிமேல் அனுதாபமாக அசைந்திருந்தது,

                                        அங்கே

                                        கோபாலின் மயக்கத்தை குமரவேல் தெளிவித்திருந்தார், தெளிவித்துப் பேசினார்,

                                   என்ன கோபால் நீங்க? இப்படி கவலைப்பட்டா காரியம் ஆகாது, மனச விட்டுடாதீங்க,, தைரியமா இருங்க,, எங்களோட ஏஜண்ட் சங்கத்திற்கும்  அதிகாரிங்க சங்கத்திற்கும் பணியாளர்கள் சங்கத்திற்கும் போன் பண்ணி பேசியிருக்கேன்,, எங்காச்சும் யாருக்காச்சும் இந்த ரத்தம் இருந்தா உடனே ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லியிருக்கேன்,,,

                                     இல்லண்ணே,,, எனக்குப் பெரிய பலமே அவதாண்ணே,, அவ இல்லாட்டி என்னால வாழமுடியாதுண்ணே,,

                                      உணர்ச்சிவசப்படாதே கோபாலா,,, ஒண்ணும் ஆகாது,, கடவுள் இருக்காரு,,, அவருக்குத் தெரியும்,, இதெல்லாம் ஒரு சோதனைக்காலம்னு நினைச்சுக்க,, சரியாயிடும்,, வா போகலாம்,,

                                       வண்டியில் ஏற்றிக்கெர்ண்டு மருத்துவமனை நோக்கிப் போனார்கள்,

                                       வண்டியில் போகும்போது கோபாலன் மனசு முழுக்க சாரதாவைச் சுற்றியபடியே இருந்தது,

                                       அம்மாடி,, என் வாழ்க்கைக்கு வந்து உனக்கு எந்த சுகமும் இல்லம்மா,, பஞ்ச பராரி மாதிரி ஒரு வாழ்க்கை,, ஆனாலும் அதை சந்தோஷமா எப்பவும் நீதான் மாத்தி வச்சிருந்தே?,,, நீ இல்லாம ஒரு வாழ்க்கையை எப்படிம்மா என்னால வாழமுடியும்?  எனக்கு என்ன தெரியும்? இந்தப் புள்ளங்கள வச்சிக்கிட்டு நான் அல்லாடப்போறேன்,, அல்லாட விட்டுட்டுப் போயிடுவியா சாரதா,,, யாருக்குமே எந்தக் கெடுதலும் பண்ணலீயேம்மா,, நமக்கு ஏம்மா இப்படியொரு சோதனைய கடவுள் கொடுத்தாரு,, எதுவுமே சொல்லாம மறைச்சிட்டியா,,, இல்ல சொல்லி என்ன ஆவப்போவுதுன்னு விட்டுட்டியா நடக்கறது நடக்கட்டும்னு,,, இன்னி வரைக்கும் கயித்தைதான் மாத்திக்கிட்டிருக்கே,, முடிச்சுப் போட்டதிலேர்ந்து அது தங்கத்தையே பாக்காத கயிறு,, அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கேன்,, அதை எனக்கும் கொடுன்னு என் வாழ்க்கைக்கு வந்தியா சாரதா?  ஆனா என்னை விட்டு போக முடியாது சாரதா,, நான் உலகத்துக் கண்ணுக்கு வேணா மஞ்சக் கயிறுல முடிச்சு போட்டிருக்கலாம்,, ஆனா என்னிக்கிப் போட்டேனோ அப்பவே மனசுல முடிச்சு போட்டுட்டேன்,, நான் போட்டிருக்கி மனமுடிச்சை யாராலும் அவிழ்க்கமுடியாது,, அது முழுக்க முழுக்க என்னோட ரத்தம்,,,சதை,, உணர்வு,, என்னோட ஆயுள் எல்லாத்தையும் கல்ந்து போட்டிருக்கிற மனமுடிச்சு,, அதை அழிக்க அந்த ஆண்டவனாலும் முடியாது,, ஒருவேளை முடிஞ்சா அவனும் யோசிப்பான்,, அவனுக்கும் மனசு இருக்கில்லே,,, அய்யய்யோ என்ன பண்ணப்போறேன்னு தெரியலியே,, காமாட்சியம்மா எங்களைக் காப்பாத்து,,,

                                கோபாலனின் மனசு என்னும் பட்டாம் பூச்சி நிம்மதி எனும் தேனைத் தேடி கவலைத் தோட்டத்தின் ஒவ்வொரு பூ தோறும் அலைந்தது,,

                               மருத்துவமனையில்  அந்த நர்சால் உட்கார முடியவில்லை,

                               என்ன இது என்னைவிட ஒன்றிரண்டு வயதுதான் சின்ன வயசாக இருக்கும்,, அக்கா எங்கம்மாவைக் காப்பாத்துன்னு கால்ல விழுந்திட்டாளே,,, பார்க்க பாவமாக இருந்தது, அவளால் உட்கார முடியவில்லை, எனவே வார்டை விட்டு நேராக ரிசப்சன் நோக்கி நடந்தாள்,

                               என்ன சிஸ்டர்?
                               ஒரு போன் பண்ணிக்கறேன்,,

                                 பண்ணுங்க சிஸ்டர்,,
                               போன் செய்து யாருக்கோ பேசினாள், ஓ குருப் ரத்தம் இருந்தா உடனடியாக வேணும்,
                                யாருக்கு சிஸ்டர்?
                                என்னோட சொந்தக்கார அம்மா ஐசியுக்கு வந்திருக்காங்க,, அவங்களுக்குத்தான்,, யாராச்சும் எனக்குப் போன் பண்ணா வார்டுக்கு கூப்பிடுங்க,,

                                 சரி சிஸ்டர்,

                                 அவள் போன பத்து நிமிடங்கள் கழித்து, நாலைந்து இளம் பெண்கள் ரிஷப்சன் நோக்கி வந்தார்கள்,

                                  என்னம்மா வேணும்?

                                  நாங்க பாரதியார் மகளிர் கல்லுர்ரியில் படிக்கறேர்ம்,  இதோ இவ இருக்காளே அவளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்,, நாங்க ஒரு பாலிசி வச்சிருக்கோம்,, எங்க பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடாம அன்னிக்கு ரத்ததானம் செய்யறதுன்னு,, அதுக்குத்தான் வந்திருக்கோம் என்றதும் ரிசப்னஸிட் வியந்தாள்,,

                                 அடே,, இது நல்ல விஷயமா இருக்கே,, என்ன குருப் என்றாள்,

                                 அவளோட ஓ குருப்,,

                                 என்ன குருப்,,

                                  ஓ குருப்,,

                                   ரிஷப்னிஸ்ட் மகிழ்ந்துபோனாள், அய்யோ,, கடவுளுக்கு நன்றி,, இருங்க என்றபடி போனை எடுத்து வார்டுக்குப் பேச அந்த நர்சு ரிசப்ஷன் நோக்கி ஓடிவருவது தெரிந்தது,

                                   வந்தவள் அப்படியே ரத்ததானம் செய்யப்போகும் பெண்ணைப் பார்த்து கையெடுத்துக் குமபிட்டாள், வாம்மா,, உன்னால ஒரு உயிர்பிழைக்கப்போவுது,, ஒரு குடும்பமும்தான்,, வா,, உடனே,,

                                   எல்லாம் முடிந்தது,

                                   அந்தப் பெண் ரததம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள், அதை உடனடியாக சாரதாவிற்கு ஏற்ற மாட்டிவிட்டு வந்தாள்,

                                   சங்கரியிடம் அந்த நர்சு,,, கவலைப்படாதே ரத்தம் வந்துடிச்சி,, பயப்படவேண்டாம்,,  என்றதும் சங்கரி கையெடுத்துக் கும்பிட்டபடியே அக்கா,, உங்கள மறக்கவே மாட்டேன்,, ரொம்ப தேங்ஸ்க்கா,, என்றாள்,

                                 எனக்கு சொல்லாத,, இந்தப் பெண்ணுக்கு சொல்லு,,

                                சங்கரி அவளைப் பார்த்து கையெடுததுக் கும்பிட்டாள்,

                                உடனே தோழிகள்,, யேய்.. பாரு அவ கையெடுத்து சாமி கும்பிடமாதிரி கும்பிடறா,, உடனே வரம்கொடு,,,

                                   அவ கொடுத்தாலும் கொடுப்பாடி,,,அவ பேரு அப்படி,,

                                    என்ன பேரு? என்றாள் நர்சு,

                                     காமாட்சி,,, என்றார்கள்,

                                    இல்லே,, இல்லே,, காஞ்சிக் காமாட்சி,,, என்றபடி கேலி பேசி சிரித்தபடி வெளியே போனார்கள்,

                                     சங்கரிக்கு இப்போது அழுகை பெருகி வந்தது, அழுதாள்,

                                     கோபாலன் வாசலில் இருந்து உள்ளே ஓடிவந்தான் சங்கரியை நேர்க்கி பதட்டமாக,,,

                                                                                                (மீன்கள் துள்ளும்)

                               

                                       

                                                     

6 comments:

  1. காமாட்சி கை விடமாட்டாள்....

    ReplyDelete
  2. மரத்தின் வேரையறுப்பதுபோல சோதிப்பவன் எப்படி கடவுளாக இருக்கமுடியும்? - சிந்தனையினைத் தூண்டும் வேதனை வரிகள் அய்யா

    ReplyDelete
  3. என்ன பேரு? ....காமாட்சி,,! nice...

    ReplyDelete
  4. வரம் கிடைத்ததா...? ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. காமாட்சி காப்பாற்றட்டும்......

    ReplyDelete
  6. மனத்துக்கு ஆறுதலாக உள்ளது. தெய்வமே வருவதாக இருந்தாலும் மனித வடிவில்தானே வரவேண்டும்! வந்துவிட்டதோ? இனி என்ன நடக்கப்போகிறது என்று அறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete