என்னமோ நடக்குது……
குறுந்தொடர்…
அத்தியாயம் 6
இதுவரை
ராகவன் என்பவர் தன் மகனுக்குப் பெண் பார்க்கப்போகிறார்.
போகிற இடத்தில் பெண் கொலைசெய்யப்படுகிறாள். வளவன் என்பவன் படித்துவிட்டு சும்மா இருப்பதாக
அவனின் பெற்றோர்கள் கண்டிக்க அவன் தன்னை ஒரு துப்பறிவாளனாக ஒரு வேலையை அமைத்துக்கொள்கிறான்.
கதிர் என்பவன் கிராமத்திலிருந்து சென்னைக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் வந்து
கொலைக்குற்றம் சாட்டப்படுகிறான். லோகு என்பவனின் தந்தையார் அதிர்ச்சியான தகவலால் மருத்துவனையில்
சேர்க்கப்பட்டு கோமோ நிலைக்குப் போகிறார்.
இனி
இரவு மணி எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது.
அந்த அகலமான தெருவில் இரண்டு பேருந்துகள் சேர்ந்து போகின்ற அளவுக்கு அகலமான தெரு. தெருவின்
இருமருங்கிலும் பெரிய பங்களாக்கள். அந்த தெருவில்
காற்றுகூட அமைதியாக இருந்தது. ஒவ்வொரு பங்களா வாசலிலும் புங்க மரங்கள் காலிப்ளவர் பூவைப்போன்று
தலைவிரித்து உயரத்தில் அகன்று நிழலைத் தரையில் கொட்டி வைத்திருந்தன. இடையிடையே மெர்க்குரி
விளக்குக் கம்பங்களில் இருந்து ஒளி தெருவின் நீளவும் ஒளிப்பாயை விரித்திருந்தன. நடமாட்டம்
முற்றிலுமாக இல்லாமல் இருந்தது. சில பஙகளாக்களின்
வெளியே பெரிய கார்கள் நிறுத்தப்பட்டு ஆடை போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தன. இடையில்
துணி அயனிங் செய்யும் ஒருவன் எல்லாவற்றையும் முடித்து வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான்.
இனி நாளைக்காலைதான் அவனுக்கு வேலை. நாலைந்து இரு சக்கர வாகனங்கள் ஒலியின்றிக் தெருவினூடாக
சென்றன.
எண். 25 யோகா நிவாஸ் என்ற பங்களாவின் கேட்டருகே
வந்து நின்றார் அந்த மனிதர். கேட்டில் கைவைக்குமுன் ஒருமுறை அக்கம் பக்கம் திரும்பிப்
பார்த்தார். தெருவின் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் நீள்வாட்டில் கண்களில் யாரேனும்
சிக்குகிறார்களா என்று அளந்து பார்த்தார். அப்பாடா.. யாரும் இல்லை. ஈ, கொசுக்கள் வண்டுகளுக்கு
எதுவும் தெரியாது. அவைகள் பேசாது. இப்போது அந்தக் கேட்டை மெதுவாகத் தள்ளி உள்ளே போனார்.
உள்ளே போய் மறுபடியும் கேட்டை மூடினார். வீட்டின் கதவருகே போய் அழைப்பு மணியை அழுத்துவிட்டுக்
காத்திருந்தார்.
உடன் கதவு திறந்து ஒரு நடுத்தர வயது பெண்
வெளிப்பட்டாள். வாங்க சீக்கிரம் உள்ளே என்று படபடத்தாள். பக்கத்துப் பங்களாவில் விளக்கு
எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தபடியே.,
இவர் உள்ளே நுழைவதற்குள் அவள் அவரை உள்ளே
இழுத்துக்கொண்டாள் அவரின் சட்டையைப் பிடித்து. இழுக்கப்பட்ட பொருளாய் உள்ளே போனதில்
தடுமாறினார்.
நாளைக்கு தானே வரேன்னு சொன்னீங்க?
ஏன் இன்னிக்கு வரக்கூடாதா?
அதுக்கில்ல… நீங்க சொல்லலியே.. அதான் கேட்டேன்.
சட்டென்று அவளைக் கட்டிப்பிடித்தார்.
இருங்க.. உள்ளே சமைலறையில் பால் சுடவச்சேன்.
ஆப் பண்ணிட்டு வரேன்.
உள்ளே போய் ஆப் பண்ணிவிட்டு வந்து சோபாவில்
அமர்ந்தாள். உள்ளே விளக்கு அணைக்கப்பட்டிருந்தது.
அவளருகே உட்கார்ந்து மறுபடியும் அவளைக்……
இன்னிக்கு என்ன டிபன்? என்றார்.
நான் போட்டு காலிப்ளவர் குருமா வச்சிருக்கேன்.
அவருக்குச் சுத்தமா பிடிக்காது.. உங்களுக்குப் பிடிக்குமேன்னு செஞ்சேன்.. இன்னும் ஒரு
வாரத்துக்கு உங்களுக்குப் பிடிச்சதுதான்.. கம்பெனி ஆடிட் நடந்துகிட்டிருக்கு.. இயர்
எண்டிங் கண்க்கு பார்க்கணுமாம்.. கம்பெனி கெஸ்ட்
ஹவுஸ்லேயே தங்கிட்டாரு வழக்கம்போல…
ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது?
நீ பண்ண காரியம் அப்படி.. உனக்கு விஷயம்
தெரியுமா? தெரியாதா?
என்னது?
அந்த காயத்ரிய யாரோ கொன்னுட்டாங்க..
என்ன சொல்றீங்க?
கொன்னுட்டாங்களா?.. இருங்க வரேன்.. என்று
படபடத்தபடி யாருக்கோ போன் செய்து பேசினாள்..
முட்டாள் நாய்ங்களா.. லேசா தட்டுங்கடா
உயிர்ப்பயம் வரும். யார்கிட்டயும் சொல்லமாட்டான்னா கொன்னுட்டிங்களா.. நாய்ங்களா..
இல்ல மேடம்.. லேசாதான் இடிச்சோம்.. கீழே
விழுந்ததுல பின் மண்டையில அடிபட்டு இறந்துட்டா… சாரி மேடம்..
கொலை பண்ணிட்டு சாரியா.. அடப்பாவிங்களா
நானும் உங்களோட சேர்ந்து மாட்டுவேனே.,, படபடப்படாய் பேசினாள்.
இல்லமேடம் நாங்க டெல்லி வந்துட்டோம்..
எங்க வண்டிய பிடிச்சாலும் அதோட பிளேட் நம்பர் ஆந்திரான்னு மாத்தி வச்சிருந்தோம்.. எந்த
சாட்சியும் இல்ல. நீங்க கவலைப்படாதீங்க.. மேடம். ..அப்புறம் கொஞ்சம் செலவுக்குப் பணம்
கொடுங்க மேடம்..
அதான் பேசின தொகை கொடுத்திட்டேனே..
சரிங்க.. சும்மா தட்டறதுக்குக் கொடுத்தீங்க..
கொலையாயிடிச்சே.. ரிஸ்க் ஆயிடிச்சு மேடம்.. நீங்க கவலைப்படாதீங்கன்னு சொன்னோமே தவிர
எங்கள நினைச்சுக் கவலைப்படுங்க மேடம்.. அக்கவுண்ட் நம்பர் அனுப்பறேன். தொகையையும் சொல்றேன்..
போட்டுவிடுங்க மேடம்.. ஆனா இது கடைசி மேடம் உங்கள தொந்தரவு பண்ணமாட்டோம்..
போனை வச்சிச் தொலை. போடுடவிடறேன்.
என்ன இப்படிப் பண்ணிப்புட்டே.. நான்
இனிமே இங்க வரமாட்டேன்.. என்றார்.
உங்களாலதான் நம்பள அவ பார்த்துட்டு
என் புருஷன்கிட்ட சொல்லிடுவாளேன்னுதான்.. அப்படிச் செஞ்சேன்.. எப்படியும் மாட்டுனா
ரெண்டுபேரும்தான்..
பயத்தில் இறுக்கமாக அவளருகே நெருங்கி
உட்கார்ந்தார்.. நாம மாட்டமாட்டோம்ல.. என்றார்.
நிச்சயம் இல்ல.. உங்க பிரெண்ட்டுக்கும்
தெரியுமே அவர என்ன பண்ணப்போறிங்க..
அவன் கோமா ஸ்டேஜ்ல இருக்கான். ஏற்கெனவே
பைபாஸ் பண்ணவன்.. கண் விழிக்கறது கஷ்டம்னு சொல்லியிருக்காங்க.. என் பையன வச்சித்தான்..
அவனை ஆசுபத்திரில படுக்கவச்சேன்.
உங்க பையன வச்சியா..
ஆமாம். அவன் ரொம்ப சென்சிடிவ்.. எதுக்கெடுததாலும்
உணர்ச்சி வசப்படுவான். ரொம்பப் பயப்படுவான்.. அத வச்சித்தான். ஒரு போன்கால்..
போன்ல என்ன பண்ணிங்க?
அவன் பையனுக்குக் கல்யாணம் பிக்ஸ் பண்ணியிருந்தான்.
அவனோட மருமகள் என் பையனோட லவ்வர்.. நிறைய போட்டோ இருக்குன்னு சொன்னதும் அதிர்ச்சியாயிட்டா..
கல்யாணமும் நின்னுப்போச்ச.. ஆளும் படுத்திட்டான். இப்போதைக்கு அவன் பேசமுடியாது. எப்படியும்
ஒரு வருஷம் ஆகும்.. விழிப்பு வந்தாதான்.. வராமலேயேயும் போயிடும்னு டாக்டர் சொல்லிட்டாரு..
அவர் நண்பனிடம் மாட்டிக் கொண்டதை நினைத்துப்
பார்த்தார். அவரோடு படித்தவர். நல்லவர். ஒழுக்கமானவர். எங்கோ இருப்பார் என்று நினைத்தால்
பக்கத்துவீட்டிலேயே இருப்பார் என்று அமைந்தது கெட்ட காலம்தான். படிக்கிற காலத்திலேயே
அவர் மிக ஒழுக்கமும் பயந்தாங்கொள்ளியுமாக இருப்பார்.
அன்னிக்கு இந்த பங்களாவுக்கு வந்துவிட்டு
விடியற்காலை 5 மணிக்குக் கிளம்பி வெளியே வந்தார். கேட்டைத் திறந்து தெருவில் இறங்குமுன்
அவரைப் பார்த்துவிட்டார்.
டேய் ராகவா.. எங்கே இங்க வந்துட்டுப்போறே?
தெரிஞ்சவங்க.. இந்த வீடு?
தெரிஞ்சவங்களா.. ஒருமுறைகூட நான் உன்னை
இங்க பார்த்ததில்லியே.. அவரு கம்பெனி வச்ச நடத்தறாரு.. பெரும்பாலும் கம்பெனிலேயே இருப்பாரு.
அந்தம்மா மட்டும்தான் வீட்டுலே இருக்கும். அதப்பத்திகூட நல்ல பேரு இல்லியே.. நீ இங்கருந்து
வரே-. என்று சந்தேகமாக இழுத்தார்
ராகவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. படிக்கற
காலத்திலேயே அவனின் குணம் தெரியும். இப்போ தன் விஷயம் தெரிந்துவிட்டதே என்று அதிர்ச்சியானார்.
மறைக்க முடியாது. கண்டுபிடித்துவிட்டார். ஒருவேளை அவள் கணவனிடம் போட்டுக்கொடுத்துவிட்டால்..
மேலும் அதிர்ந்தார்.
வா.. நான் விவரமா சொல்றேன்.. தயவுசெஞ்சு
யார்கிட்டயும் சொல்லிடாத..
ச்சீ.. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. எப்ப
தன்னோட மனைவியை விட்டு அடுத்தவன் பொண்டாட்டிய
மனசுல நினைக்கறோனோ அப்பவே அவன் மிருகம்தான்.. தயவு செஞ்சு இனிமே நாம இதுபத்தி பேசவேண்டாம்..
எக்கேடோ கெட்டுப்போ.. ஒழுக்கங்கெட்டவன் நீ.. உன்னோட என்னையும் பார்த்தா என் மானம் மரியாதை
எல்லாம் போயிடும்.. என் மகனுக்குப் பெண் பார்த்திருக்கேன். அதுவும் கௌரவமான குடும்பம்..
உன்னால அது கெட்டுப்போயிடக்கூடாது. இனிமே நாம சந்திக்கவேண்டாம்.. உன்னோட படிச்சவன்னு
யார்கிட்டயும் சொல்லிடாத.. கருமம்.. காலங்காத்தாலே இப்படி ஒரு சந்திப்பு.. தலையில்
அடிததுக்கொண்டார்.
டேய்.. யார்கிட்டயும் சொல்லிடாதடா..
நீ யாருன்னே எனக்குத் தெரியாது இனிமே..
போய்த்தொல,., உன்ன பார்த்த பாவத்த எங்கபோய் கழுவுறது? அடக்கடவுளே.. ராமா.. இது என்ன
இப்படி அபசகுனம்..
விறுவிறுவென்று ராகவனை விட்டு விலகித்
தூரமாய் போனார். திரும்பித்திரும்பிப் பார்த்து படபடத்தபடியே போனார்.
அப்படிப்போனவர்.. லோகுவின் அப்பா.
(இன்னும்
நடக்கும்.)
விறுவிறுப்பாக செல்கிறது...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDelete