Tuesday, June 22, 2010

ஆராய்ச்சிமணி



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். அந்த அரிய மானிடப் பிறவியைக் காப்பதே பெரும்பாடாகிவிடும் சூழல் இப்போது. அந்தக் காலம்போல் எதுவும் இல்லை. உடல் பராமரித்தலும், உணவு தயாரித்தலும், உணவு உண்ணும் முறையும் மாறியுள்ளது. அதனால்தான் சொற்ப வயதில் எல்லா நோயும் வருகின்றது. மரணமும் நேருகிறது. இது காலத்தின் கட்டாயம் என்று ஒத்துக்கொண்டுபோனால். மனிதனே சக மனிதனை அழிக்கும் கொடூரம் என்றைக்கும் மன்னிக்கமுடியாதது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படிதான் எல்லாமும் எனும்போது மனது வேதனைப்படுகிறது. எடுத்துக் காட்டு போபால் விஷவாயுவில் பலியானவர்களுக்கான நீதி இரண்டாண்டுகள்தான். அதுவும் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் எனும்போது பலியான உயிர்களை நினைத்து மனம் கசிகிறது. தற்போது போலி மருந்து. மனசாட்சியேயில்லாமல்...வீட்டுப் பத்திரங்களை அடகு வைத்து...தாலியை அடகு வைத்து...5 காசு 10 காசு என வட்டிக்கு வாங்கி எப்படியாவது நோய் தீர்ந்துவிட்டால்போதும் சம்பாதித்துவிடலாம் எனும் நம்பிக்கையோடு மருத்துவமனைக்குப் போனால்....போலி மருந்துகள்...இது தெரியாமல் பல ஆண்டுகள்..எத்தனை எத்தனை உயிர்கள் பலியானதோ...யாரறிவார்..அந்த ஆண்டவனை அன்றி...இப்படி ஈடுபட்டவனைப் பெற்றவளும் ஒரு பெண்தானே? அவள் தாய்தானே?...அவளுக்குத்தான் இந்த வேதனை கவிதை...

அன்புள்ள அம்மா...
இந்த முகந்தெரியாத மகனின்
வேதனை வணக்கங்கள்....

என் மனைவி...என்னைப் பெற்ற தாய்...
என் பிள்ளைகள்..என் உறவுகள்...
இப்படியாக அடுத்தடுத்து
இழந்திருக்கிறேன்....

என் வேதனையெதற்கு உங்களுக்கு
என்று நினைக்கலாம்...

உங்கள் மகன்தான்
எங்களுக்கு மரணத்தை மருந்துகளில்
தந்தவன்...

மரண மிருகத்தை உங்கள் கருவறையில்
சுமந்து எங்கள்மீது ஏவிவிட்டிருக்கிறீர்கள்..
பலரைக் கொன்று வைத்த நெருப்பில்தான்..
உலை வைத்து உயிர் வளர்த்திருக்கிறீர்கள்..
மருந்துக்கூட மனிதனாக இல்லாதவன்
தந்த காசில்தான் நீங்கள் உங்கள் மானத்தை
மறைத்த ஆடை தொடங்கி எல்லா சுகத்தையும்
அனுபவித்திருக்கிறீர்கள்...

உங்கள் குடும்பம் வாழ அழகியவீடு
அதனால் பலகுடும்பம் கண்டதோ எரியும் சுடுகாடு..
பலருக்கு பிணமாலை
உங்களுக்குப் பணமாலை...

நியாயமா அம்மா...?

அம்மா ஒரு தாயாக நிற்கிறீர்கள்
உலகமெங்கும் உங்களை நினைக்கிறது..
எரிகிற பிணங்களின் முன்நின்று கண்ணீரோடு...

என்ன செய்யப்போகிறீர்கள்?

தன் மகன் போரில் புறமுதுகிட்டான் என்ற
சொல்லுக்காகப் பால்கொடுத்த மார்பை
அறுத்தெறிவேனென்ற தாய்கள் வாழ்ந்த தேசத்தில்..
பல தாய்களின் தாலிகளை அறுத்தவன்
உங்கள் மகன் புறமிருந்து...

என்ன செய்யப்போகிறீர்கள்?

உங்களின் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
ஒரு தாயை இழந்த மகனின் கண்ணீர்...
ஒரு மகனை இழந்த தாயின் ரத்தம்...
ஒரு கணவனை இழந்த மனைவியின் துடிப்பு...
ஒரு மனைவியை இழந்த கணவனின் வேதனை..
என நிரம்பி வழிகிறது...

சாகும்வரை நின்று உறுத்தும்
இதற்கு மருந்தேதும் கிடையாது அம்மா..

உங்களுக்கும்...உங்கள்..
இனிவரும் எல்லா தலைமுறைக்கும்...

என்ன செய்யப்போகிறீர்கள் அம்மா....?