Thursday, January 26, 2012

கடைசிவரைக்குமான கேள்வி....



                           இருபதாண்டுகளாக சுமந்து
                           கொண்டிருக்கிறேன்...

                           காலம் சருகைக் கிள்ளியெறிவதுபோல
                           எனது பருவத்தின் ஒவ்வொரு நொடியையும்
                           கிள்ளியெறிந்தார்கள் சுடுசொற்களால்...

                           முகம் பார்க்கிற திசையெங்கும் முகத்தில்
                            வேதனை சேற்றள்ளிப் பூசினார்கள்...

                            எதற்கும் பதில்பேசமுடியாத
                            ஊமையாகவே நானிருந்தேன் பேச்சிருந்தும்
                            பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...
                           
                             ஆளுக்கொரு வாழ்வில்
                             அப்பா என்றழைக்கிற உரிமையை
                             அவரும் பறித்தார் நீயும் பறித்தாய்...

                              பொறுமைசாலி என்கிறார்கள்
                               பிள்ளைப்பூச்சி என்கிறார்கள்
                               சுரணையற்றவன் என்கிறார்கள்
                               பரவாயில்லை பிழைச்சிக்குவான் என்கிறார்கள்
                               வலியற்றவன் வலிமையற்றவன் என்கிறார்கள்

                               நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத
                               சுவையைப்போல எனதன்பை எனக்குள்ளே
                               கரைத்துக்கொண்டிருக்கிறேன்...

                               எனக்கென்று ஒரு வாழ்க்கை
                               எனக்கென்று ஒரு பாதை
                               எனக்கென்று ஒரு தீர்வு
                               எனக்கென்று ஒரு இருப்பு

                               இல்லாமல் போய்விடவில்லை
                               மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
                               என்பதற்கு ஒரு சான்றைப் போலிருக்கும்

                               நான் ஒரேயொரு கேள்வியைத்தான்
                               கேட்கிறேன்

                                என்னைவிட ,,,,, சாகும்வரை உன்மேல்
                                வைத்திருக்கும் அன்பைவிட,,,, பெற்ற
                                பிளளையைவிட,,,,

                                காமம் பெரிதா அம்மா?

12 comments:

  1. மனதை நெகிழ வைத்த கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை ஐயா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எதற்கும் பதில்பேசமுடியாத
    ஊமையாகவே நானிருந்தேன் பேச்சிருந்தும்
    பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...

    கனத்த வரிகள்!

    ReplyDelete
  3. காமத்தீயில் தடம்புரண்ட பல்வேறு
    தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் சார்பாக
    அவர்கள் மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்
    ஒருபதிலற்ற வாய்திறந்து கேட்க முடியாத கேள்வியை
    ஒரு அருமையான படைப்பாக தந்துள்ளீர்கள்
    அவர்களின் வேதனையின் உச்சத்தை இதைவிட
    அழகாகச் சொல்வது கடினமே

    ReplyDelete
  4. பேச்சிருந்தும்
    பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...//

    ஆளுக்கொரு வாழ்வில்//

    நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத
    சுவையைப்போல //

    எனக்கென்று ஒரு இருப்பு

    இல்லாமல் போய்விடவில்லை//

    ம‌ன‌தைத் துருவிக்கொண்டே வ‌ந்த‌ வ‌ரிக‌ளின் இறுதிக் கேள்வி ப‌ளாரென‌ அறையும் வ‌ன்மையுட‌ன்... அவ‌னின் வ‌லி ந‌ம்முள்ளும் மெல்ல‌ப் ப‌ர‌வுகிற‌து.

    ReplyDelete
  5. 'நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத
    சுவையைப்போல'- ரசித்த வரி. ஆனால் கவிதையின் வீரியம் நெஞ்சைக் கனக்க செய்கிறது.

    ReplyDelete
  6. ஆளுக்கொரு வாழ்வில்
    அப்பா என்றழைக்கிற உரிமையை
    அவரும் பறித்தார் நீயும் பறித்தாய்...
    கவிதை தடம் புரளாமல் அதன் கேள்வியைச் சுமந்து வந்து படிக்கிறவர் மனசிலும் வலியோடு ஏற்றிவிட்டு போனது.

    ReplyDelete
  7. வலிமையான வரிகள் சொல்லும் வலிகள் ஐயா...

    ReplyDelete
  8. என்னைவிட ,,,,, சாகும்வரை உன்மேல்
    வைத்திருக்கும் அன்பைவிட,,,, பெற்ற
    பிளளையைவிட,,,

    காமம் பெரிதா அம்மா?

    These words are pregnant with more meanings than what they appear to convey. You must have written these with a very heavy
    heart. ,,

    ReplyDelete
  9. வணக்கம் விச்சு. தங்களின் புதிய வருகைக்கும் பகிர்ந்த கருத்திற்கும் நன்றிகள். தொடர்ந்துவாருங்கள்.

    ReplyDelete
  10. அன்பான நன்றிகள்.

    1. திருமிகு ஆர்.ஆர்.ஐயா.
    2. மரு. சுந்தரபாண்டியனார்.
    3. திருமிகு ரிஷபன்.

    ReplyDelete
  11. ஜிஎம்பி ஐயா..

    நான் உண்மையில் கண்ட கதாபாத்திரம். 30 ஆண்டுகளுக்கு முன். இன்னும் மனதைவிட்டு அகலவில்லை. அதைத்தான் இந்தக்கவிதையாக. நன்றிகள்.

    ReplyDelete