Thursday, July 25, 2013

ஜால்ரா... குறுந்தொடர் 8
                         கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

                          எல்லா வேலைகளும் துரிதமாக முடிந்துவிட்டன.

                          வேணுகோபால் சுழன்று சுழன்று முடிநத்வரை வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார். கோயில் காரியம். தன்னுடைய பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தார். அடுத்த கும்பாபிஷேகத்திற்கு தன்னுடைய ஆயுள் இடங்கொடுக்கவேண்டுமே என்ற தீர்மானத்தில் செய்து
கொண்டிருந்தார்.

                           தாமோதரனும் இன்னொருபுறம் எது தேவையோ சொல்கிறார்களோ அதை செய்து கொடுத்தர்ர்.

                           அன்று மாலை குமரேசன் கோயிலுக்கு வந்தான்.

                           சங்கடஹர சதுர்த்தி என்பதால்  கோயிலில் கூட்டம் இருந்தது.

                          வேணுகோபால் யாரு? என்று விசாரித்தான்.

                          நான்தான் என்று முன்னால் வந்தார்.

                          வாங்க கோயில் உள்ள வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
என்றான்.

                          உள்ளே போனார்கள்.

                          சற்றுக் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தார்கள்.

                          விழாக்குழு மட்டும் இருந்தது. தாமோதரனும் இருந்தார். யார் இவன் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

                          குமரேசன் பையிலிருந்து ஒரு சிறிய பையை எடுத்து அதை வேணுகோபால் கையில் கொடுத்தான்.

                              என்ன இது? நீங்க யாரு ? என்றார் வேணுகோபால்.

                           நர்ன் கோயில்ல மேளம் வாசிக்கிறவன். தனத்து அக்காவுக்கு தெரிஞ்சவன். ரொம்ப உறவுமுறையும் கூட. உங்ககிட்டே அக்கா இதைக்
கொடுத்திடச் சொன்னாங்க..இதை கோயில்ல விநாயகருக்கு முன்னால வச்சிப் பிரிக்கச் சொன்னாங்க.. என்றர்ன்.

                              ஆச்சர்யமுடன் வேணுகோபால் அந்தப் பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்தார்.

                               அதனுள் பளபளவென்றிருந்த ஒரு ஜால்ரா.

                              ஐம்பொன்னால் செய்யப்பட்டிருந்தது.

                              அக்கா இதை என்கிட்டதான் செய்யச்சொன்னாங்க,, செய்து கோயில்ல கொடுக்கச் சொன்னாங்க,, இந்தக் கடிதத்தையும் கொடுக்கச்
சொன்னாங்க,,

                                 கடிதத்தைப் பிரித்து உரக்கவே படித்தார்,

                               அன்புள்ள ஐயாவுக்கு...

                                முப்பது வருஷமா கோயில் வாசல்ல குடித்தனம் இருந்தேன்.
கூட்டுறதும் பெருக்கறதும் நமக்கு கிடைச்ச வரம்னு செஞ்சுக்கிட்டிருந்தேன்,
என் புருஷன் செத்துப்போன பிற்பாடு எனக்கும் என் மவளுக்கும் எல்லாமும் அந்த விநாயகருதான்,, அப்படித்தான் நெனச்சிக்கிட்டேன்.. செஞ்சதெல்லாம் போதும்னு அங்கருந்து கௌப்பிட்டாரு.. சும்மாவா கௌப்பினாரு.. ஜால்ரா திருடுன பாதகின்னு ஒரு பட்டப்பெயரோட,, எத்தனை நாள் அழுது துடிச்சிருப்பேன்.. ஏன் இப்படி பண்ணே விநாயகரேன்னு.. யோசிச்சுப் பார்த்தேன்.. கோயில் கும்பாபிஷேகம் வருது.. எல்லாரும் என்னென்னமோ
கோயிலுக்கு செய்யறாங்க.. நம்மால முடியலியேன்னு விசனப்பட்டுக் கிடந்தேன். அப்பத்தான் திருட்டுப் பட்டம் கட்டுனாரு விநாயகரு... யோசிச்சு பார்த்தேன். என்புருஷன் போனபொறவு எனக்கிருந்தது ஒரு வீடும் அறுத்துப் போட்ட தாலிப்பவுனும்தான்,, வீடு போயிடிச்சி..மிச்சம் தாலிதான்,, ஆளுக்காள் செய்யும்போது நீயும் செய்யலேன்னு கவலைப்படாத தாலிய வித்து செய்யுன்னுதான் இந்த திருட்டு நாடகத்தை ஆடினாருன்னு நினைச்சிக்கிட்டேன். அப்படி சமாதானபப்டுத்திக்கிட்டேன். தாலிய வித்து இந்த ஜால்ராவ செஞ்சுட்டேன்.. அவர் வேண்டியத கேட்டு வாங்கிட்டாரு.. ஆனாலும் மனசு ஆறலே....திருட்டுப் பட்டம் வாங்கிட்டோம்னு.. என்னால முடிஞ்ச பரிகாரம். என் மேல விழுந்த பழிய துடைச்சிட்டேன்.. எல்லாரும் மனசுவந்து ஏத்துக்கணும்...

                                எல்லோரும் ஒருநிமிடம் கண்கலங்கினார்கள் தனத்திற்காக.
வலம்புரி விநாயகரைப் பார்த்தார்கள். அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.
தங்கள் கைப்படவே அதை திருஞானச்சம்பந்தரின் திருக்கரங்களில் வைததார்கள். அளந்து பார்த்து செய்ததுபோல் அது அவரின் பொற்கரங்களில் பொருந்தி நின்றது.

                               தாமோதரன் மனமெங்கும் உறுத்தல் தேள்கள் ஊர்ந்து
கிடந்தன.

                               ஒவ்வொன்றும் கொட்ட ஆரம்பித்தது.

                              உடலெங்கும் மனமெங்கும் வலி ஊடுருவியது.

                              கூட்டத்திலிருந்து எழுந்தார். விநாயகரை மனசார
வணங்கினார். பின் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்..

                             எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய வேண்டுகோளைக்
கேளுங்கள். என் விருப்பத்திற்கு உங்க எல்லாருடைய அனுமதியும் வேண்டும்னு பணிவோடு கேட்டுக்கறேன். நான் சிறுபிள்ளைத் தனமாக எது பேசியிருந்தாலும் என்னையும் என் குடும்பத்தாரையும் மன்னிச்சிடுங்க.. இந்தக் கோயில்ல விவரம் தெரிஞ்சு என்னென்ன பொருள்கள் இருநது இப்ப
காணாமப் போயிடிச்சோ அத்தனைனையும் ஒண்ணுவிடாம நான் வாங்கி வச்சிடுறேன், இது சத்தியம். எல்லாரும் ஏத்துக்கணும். இந்த சன்னதியில் தனலெட்சுமிமேல அந்தத் திருட்டுப்பழியைக் கட்டிப் பேசினது நான்தான்.
விநாயகர் முன்னால தனத்துக்கிட்டே மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன்.
அவ முன்னாடி நான் ரொம்ப பாவியாயிட்டேன்... தனம் என்னை மன்னிச்சிடு.. என்று கண்கலங்கினார்.

                           எல்லோருமே விநாயகரை வணங்கினார்கள்.

                            குமரேசன் ஐயா.. நான் கிளம்பறேன் என்றான்.

                            வேணுகோபால் சொன்னார்..  தம்பி.. அடுத்தவாரம் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் .. அவசியம் தனத்தை வரச்சொல்லுங்க...

                             அவங்க வரமாட்டாங்கய்யா என்றான்.

                             ஏம்பா?

                            அவங்க உடம்பு முடியாம இருந்து போனவாரம் செத்துப்
போயிட்டாங்கய்யா,,

                                                        (ஜர்ல்ரா ஓய்ந்தது)


                              

6 comments:

 1. முடிவில் மனம் கனத்தது...

  ReplyDelete

 2. தனம் செய்யாத குற்றத்துக்குப் பிராயச் சித்தமா.புது ஜால்ரா.? தாமோதரனோ அவர் குடும்பமோ செய்த குற்றத்துக்குப் பரிகாரமா அவர் கேட்ட மன்னிப்பு, ?நெகிழ வைத்த தொடர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. கதை என்றாலும்
  கண்களை பனிக்க வைத்தன.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 4. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் .

  ReplyDelete
 5. (ஜர்ல்ரா ஓய்ந்தது) மனம் கனத்தது ..!

  ReplyDelete
 6. அடடா.... முடிவு வருத்தம் தந்தது.....

  ReplyDelete

Follow by Email