Thursday, December 16, 2010

என்றும் தமிழ் இன்பம்

தமிழ் செம்மொழியாகியிருக்கிற தருணம் இது. அதுதோன்றிய காலத்திலேயே செம்மொழிக்கான தகுதியிருந்தும் காலமும் பல்வேறு அரசியல் பின்னணிகளாலும்தான் காலதாமதமாக செம்மொழிக்கான தகுதி கிடைத்திருக்கிறது. தமிழில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் அனைவராலும் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய அவசியத்திற்குரியவை. அதில் பேசப்படாதவை இல்லை. சிந்திக்கப்படாத புதுமைகள் இல்லை. எல்லாவற்றையும் யோசித்து அவற்றைப் பாடல்களாகப் பதிவு செய்து வைத்திருக்கும் அறிவு வியக்கத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க அற்புதம் என்னவென்றால் ஒவ்வொரு பாடலும் அறிவியல் பின்னணியோடு இருப்பதுதான். அறிவியல் பார்வையோடு உள்ள மொழிதான் உலகில் நிலைக்கும் என்பார்கள். ஒவ்வொரு பாடலைப் புனையும்போது தனக்குத் தெரிந்த வானியல் அறிவு, உயிரியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, புவியியல் அறிவு எனப் பரந்துபட்ட அறிவைப் பாடல்களில் அதன் இயல்பும் சுவையும் கெடாமல் இணைத்துப் பாடியிருப்பதான் அற்புதம்.

ஓர் அரண்மனையைக் கட்டுவதற்குரிய தொழில்நுட்பத்தை நக்கீரர் நெடுநல்வாடை எனும் இலக்கியத்தில் தெளிவாகப் பாடுகிறார். யானைக்கு நாற்பது வயது வந்துவிட்டால் மலர் மலர்ந்து தானே உதிர்வதுபோல யானையின் தந்தம் உதிர்ந்துவிடும் முதிர்ந்து என்கிற குறிப்பையும் இவ்விலக்கியத்தில் காணலாம்.

நகரவியல் அமைப்புப்பற்றிய செய்திகளை அகநானுர்று தெளிவுறுத்தும். இதில் இன்றைக்கு இருக்கும் ஊராட்சி அமைப்புமுறையைக் காணலாம். கணிதவியலில் பேசப்படும் அளவைகள் பற்றி தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார். கனஅளவு குறித்து ஔவையார் பாடலில் அறியமுடிகிறது. டெலஸ்கோப் தத்துவத்தைக் கபிலர் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அணுவைப் பிளக்கமுடியும் என்பதை அணுவைப் பிளப்பதற்கான கருத்து வருமுன்னே பாடிய தமிழ்ப்பாடலால் அறியலாம்.

இவையெல்லாம் கடுகு அளவு சான்றுகளேயாகும்.

இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

இத்தோடு இலக்கியச் சுவை என்றால் தமிழில் அலுக்கும்வரைக்கும் அள்ளிப் பருகலாம் தேனின் சுவையோடு.

பாரதியைப் பொறுத்தளவில் மஉறாகவி மட்டுமல்ல. என்போன்றோருக்குப் போதி மரமும் அவன்தான். படிக்கும் யாருக்கும் அவனே ஞானகுரு மற்றும் எல்லாமும்.....

அவன் இயற்றிய சிறுகாப்பியம் பாஞ்சாலி சபதம்

தமிழின் சுவையனைத்தைம் இக்காப்பியத்தில் அனுபவிக்கலாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவன் இயற்றிய காப்பியம் இது. பாரத தாயைப் பாஞ்சாலியாகவும் கௌரவர்களை ஆங்கிலேயர்களாகவும் பாண்டவர்களை மக்களாகவும் உருவகித்து இக்காப்பியத்தை அமைத்தவன். இது விடுதலைக்காலக் கட்டத்தில் ஓர் ஆயுதமாகத் திகழ்ந்தது எனலாம்.

இக்காப்பியத்தின் சிறப்பிற்குப் பல காரணங்கள் உண்டு.

மிகச் சிறந்த உவமைகள். எளிமையான சொற்கோர்வை. அத்தனையும் அழகியல் மட்டுமன்றி காப்பியப்பொருண்மைக்கேற்றவாறு அழுத்தமான விவரிப்பு.. சொல்லுகிற முறையில் பாரதியை விஞ்சுவதற்கு இன்னொருவன் பிறந்து வரவேண்டும். உவமைகளைச் சொல்லுகிற முறையில் இழிந்தனவற்றை இழிந்த உவமைகளாலும் உயர்ந்தனவற்றை உயர்ந்த உவமைகளாலும் பாடிய திறன் போற்றுதலுக்குரியது.

சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்துவிடுகிறான் தருமன்.
கடைசியாக விதி சகுனியின் வாயால் வலியுறுத்த பாஞ்சாலியை அடகு வைக்கிறான்.
உலகத்தில் யாருமே செய்திராத செயல் இது. மனைவியை சூதாட்டத்தில் பணயப்பொருளாக அடகு வைப்பது என்று. எனவே எல்லோரும் தருமனின் இந்தச் செயலுக்குக் கடிந்து பேசுகிறார்கள். எல்லோரும் திட்டியபிறகும் பாரதிக்கு இது பொறுக்கமுடியவில்லை. தன் பங்குக்கும் அவன் திட்டுகிறான். அந்த வரிகள் பின்வருமாறு

கோயிற் பூசை செய்வோர்
சிலையைக் கொண்டு விற்றல்போலும்
வாயில் காத்து நிற்போன்
வீட்டை வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான்
சீச்சீ சிறியர் செய்கை செய்தான்...

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சாதாரண மனிதன் செய்திருந்தால்கூட மன்னித்துவிடலாம். ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த தருமன் என்கிறார். மட்டுமல்ல ஒரேயொரு சொல் சீச்சி..சிறியர் செய்கை...என்கிறான். ஒற்றைச்சொல்லில் உயிரை விட்டுவிடலாம். அத்தனை வலுவானது. அதேபோல பாஞ்சாலியை இழுத்துவர ஆள் அனுப்புகிறான் துரியோதனன். ஒரு தேர்ப்பாகனை அனுப்புகிறான். அவனிடத்தில் பாஞ்சாலி ஒரு கேள்வி கேட்கிறாள். சூதாட்டத்தில் தன்னை இழந்தபின் என்னை அடகு வைக்கும் உரிமை அவர்க்கில்லை. என்ன சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்? எனப் பலவற்றைக் கேட்டுப் போய் கேட்டுக்கொண்டு வா என்கிறாள். தேர்ப்பாகனும் இவள் கேட்பது நியாயம்தான். அதற்குப் பதில் தெரியாமல் அவளிடத்தில் செல்லமாட்டேன் என்று மனஉறுதியுடன் செல்கிறான். தேர்ப்பாகன் துரியோதனனிடம் கேட்கிறான். துரியோதனம் பெருங்கோபம் கொள்கிறான். பாகனோ பயப்படாமல் சொல்கிறான்.

அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி சொல்லில்
அக்கணமே சென்று அழைக்கின்றேன்

அந்த மகாசபையில் சாதாரண ஒரு தேர்ப்பாகனுக்கு இத்தனை துணிச்சல் அதுவும் உயிர் போய்விடும் என்றாலும் துரியோதனனை எதிர்த்துப்பேசும் துணிச்சல் எப்படி வந்தது? வேறு ஒன்றுமில்லை. அந்தத் துணிச்சல் பாரதி கொடுத்ததுதான். இன்னும் சொல்லப்போனால் அந்தத் தேர்ப்பாகன் யாருமில்லை பாரதியேதான்.

இப்படி பல சுவைகளைப் பாஞ்சாலி சபதத்தில் அனுபவிக்கலாம்.

இன்னும் பல இலக்கியச் சுவைகளை வாய்ப்பு அமையும்போது சுவைக்கலாம்.

7 comments:

  1. தொடருங்கள்..தமிழ் பருக காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  2. அற்புதம் ஹரணி.

    நண்பனே பேராசிரியனாய் வாய்க்க சிறியேன் பெரியேனானேன்.

    ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை விஞ்சுகின்றன ஹரணி.

    எப்போதுமே நாம் பேசுகையில் சொல்வது போல் நம்மையன்றி யாருமில்லை. நம்மால் எல்லோரும் உண்டு.

    ReplyDelete
  3. தமிழ்ச்சுவை இனிது.. இன்னும் இன்னும் என்று ஆர்வமாய் நாங்கள்..

    ReplyDelete
  4. இதை .. இதைத்தான் உன்னிடமிருந்து
    எதிர்பார்த்தேன் அன்பு.
    நிறைய எழுது. ஒவ்வொன்றைப் பற்றியும்
    தனித் தனியே எழுது.
    படிப்பதற்கு சுகமாக உள்ளது.
    தமிழ ஒப்பில்லாச் சுகமன்றோ?

    ReplyDelete
  5. இதை .. இதைத்தான் உன்னிடமிருந்து
    எதிர்பார்த்தேன் அன்பு.
    நிறைய எழுது. ஒவ்வொன்றைப் பற்றியும்
    தனித் தனியே எழுது.
    படிப்பதற்கு சுகமாக உள்ளது.
    தமிழ் ஒப்பில்லாச் சுகமன்றோ?

    ReplyDelete
  6. ///இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவன் இயற்றிய காப்பியம் இது///.
    ஆம். உண்மை. ஓரிடத்தில் விதுரன் சொல்கிறான்.
    "போச்சுது போச்சுது பாரத நாடு
    போச்சுது நல்லறம் போச்சுது வேதம்"
    இந்த இடத்தில் விதுரனை தள்ளிவிட்டு பாரதி புகுந்து விடுகிறான்.
    இன்னொரு இடத்தில் பாஞ்சாலி
    "பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என்பாள். இங்கும் பாரதி தான் பேசுகிறான் ஆங்கிலேய அரசை மனதில் கொண்டு..
    பாஞ்சாலி சபதம் ஒரு விடுதலைக் காவியம்

    ReplyDelete
  7. உண்மை சிவகுமாரன். நன்றி.

    ReplyDelete