Monday, January 2, 2012
இடறிவிழும்போது
எழுகின்ற வலி
வலிக்கவே செய்கிறது
யாரையேனும்
இடறச் செய்த வலியை
வலியுறுத்தி...
00000
புத்தாண்டில்
கடவுளுக்கும் எனக்குமான
விவாதம் நடந்தது
யார் யாருக்கு முதலில்
புத்தாண்டு வாழ்த்து
தெரிவிப்பது..
ஆச்சர்யமுடன் சொன்னேன்
இதென்ன கூத்து
எப்போதும் உலகின் முதல்வன் நீதானே
உன்னை வாழ்த்தி உன்பெயரால்
மற்றவர்களை வாழ்த்துதல்தானே
வழக்கம்..என்று..
கடவுள் சிரித்தபடி சொன்னார்
கோடானுக்கோடி யுகங்களாய்
உங்கள் வாழ்த்துக்கள்
குவிந்துவிட்டன..ஆனால் எதுவும்
வாழ்த்தாக இல்லை..
அதனால்தான்
ஒரேயொரு வாழ்த்தை
கோடானுககோடி உயிர்களுக்கு
சொல்கிறேன்..
முதலில் உங்களுக்கு
உண்மையாய் இருங்கள்...
00000
குட்டிக்கதைகள்..
புத்தாண்டில் கடவுள் பூமிக்கு வந்தார். விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் போய் உனக்கு ஒரு அற்புத வரம் தருகிறேன் கேள் என்றார். குழந்தை சட்டென்று திரும்பி ஓங்கிக் கடவுளை அறைந்துவிட்டு சொன்னது நான் சாமியோட விளையாடிக்கிட்டிருக்கேன்..போ.. என்று தன் விளையாட்டுப் பொருள்களுக்கிடையே கிடந்த கடவுள் பொம்மையைக் கைகாட்டிவிட்டு சிரித்தது. கடவுள் மறைந்துபோனார்.
0000
கொலு வைத்திருந்தார்கள். கடவுள் பொம்மைக்குப் பக்கத்தில் ஒரு நாய் பொம்மையை வைத்துவிட்டு பாப்பா சொன்னாள் சாமியை ஜிம்மி பாத்துக்கும்ல...
0000
ஒரு குடிகாரன் நிறைய குடித்திருந்தான். சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து பாதி சாப்பிடும்போதே மயங்கிவிழுந்துவிட.. வழக்கமாய் காத்திருக்கும் நாய் அந்த பொட்டலத்தைச் சாப்பிட்டு முடித்த்து. மறுநாள்..ஏம்பா இப்படி குடிச்சிப்புட்டு வயித்தைக் காயப்போடறே..பாதி சாப்பிடறே மிச்சத்தை நாயில்ல சாப்பிடுது...பரவாயில்ல சார்..எப்படியோ வீணாப் போவாம யாரோ சாப்பிட்டா சரி..
000
ஔவையார் அதியமான் இறந்தபோது ஒரு பாடல் எழுதினார். புறநானுர்ற்றுப் பாடல் அது. அது இலக்கணத்தை மீறிய பாடல். ஔவையாருக்கு மரபு தெரிந்திருந்தும் ஒரு இடத்தில் 4 சீரும் இன்னொரு இடத்தில் 5 சீரும் என இலக்கணம் மாறிக்கிடந்தது அப்பாடல். இதைப் பற்றி அப்துல் ரகுமான் குறிப்பிடும்போது கவிதைக்கு இலக்கணத்தைவிட உணர்ச்சி முக்கியம். அதியமானிடம் கொண்டிருந்த நட்புணர்ச்சி அப்படி. எனவேதான் அழுகை பெருகி வரும்போது அது ஆசிரியப்பாவுக்கு அடங்குவதில்லை. கண்ணீர் பெருக்கெடுக்கும்போது அது கட்டளைக் கலித்துறைக்குக் கட்டுப்படாது என்று எழுதினார். அற்புதமான ஆய்வுக்கருத்து இது. அனுபவிக்க அந்தப் பாடல் கீழே.
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கட் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெறுஞ்சோற்றாலும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
நரந்தம் நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று அவன்
அருநிறுத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே
பாடலின் பொருள்
அதியமான் எனக்குத் தந்தை போன்றவன். அவனைக் கொன்ற மரணம் என்ற அம்பானது அவன் மார்பகத்தைத் தைத்தபின்..அவனை இரந்து வாழும் பாணர்களின் சோற்றுப்பானைகளை உடைத்தது..அவனின் சுற்றத்தினரின் கண்களைப் பறித்தது..அவனை நம்பி வாழ்ந்த என்போன்ற புலவர்களின் நாக்கையும் துளைத்தது..இனி பாடுவோரும் இல்லை.. பாடுவோர்க்குப் பொருள்தரும் அவனும் இல்லை..அப்படிப்பட்டவன் அதியமான். அவன் சிறிது கள் கிடைத்தால் எனக்கே கொடுத்துவிடுவான் அருந்த. நிறைய கிடைத்தால் எனக்கும் கொடுத்து அவனும் அருந்துவான். கொஞ்சம் சோறு கிடைத்தால் எனக்குத் தந்துவிடுவான். நிறைய சோறு கிடைத்தால் எனக்கும் கொடுத்து தானும் உண்ணுவான். பூவாசம் வீசம் கையால் கறிநாற்றம் வீசும் என் தலையைத் தடவி அன்போடு ஏராளமான பொருள்கள் தருவான். இப்போது எங்கே போனான்? நீர்த்துறையில் யாருக்கும் பயன்படாமல் அழியும் பகன்றை எனும் பூக்களைப்போல அதியமான் இல்லாமல் அழியப்போகிற உயிர்கள் இனி ஏராளம். ஐயகோ...
அனுபவிக்க தமிழ் ஆனந்தம் மட்டும் அல்ல. நட்பில் தந்தையையும் மகளையும் காட்சிப்படுத்தும் பாடல் இது.
0000
தமிழில் எல்லாம் இருக்கிறது என்றால் அது தவறு என்பார்கள். அறிவியலும் வானியலும் கணிப்பொறி அறிவியலும் பூகோளவியலும் மானிடவியலும் சுவையும் உளவியலும் எல்லாமும் ஒருங்கே பெற்றது தமிழ். அதனால்தான் பலமொழிகளைத் தேர்நது கற்ற பாரதி உரைத்தான் யாமறிந்த மொழிகளிலே....என்று.
000
ஜென் கவிதை ஒன்று..
மனிதன் சும்மா இருக்கிறான்
வசந்தம் வந்ததும்
மலர்கள் மலர்ந்துவிட்டன.
0000
Subscribe to:
Post Comments (Atom)
பதிவெங்கும் தமிழ் பொங்கி வழிகிறது. என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்! :-)
ReplyDeleteதங்களின் வேகமான கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றிகள் ஆர்விஎஸ்.
ReplyDeleteபேராசிரியர் க.அன்பழகன் அவர்களே!தமிழ் ததும்பும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅத்தனையும் முத்து.
கல்யாண்ச் சீர்தட்டில் வைக்கப்பட்ட
ReplyDeleteஅறுசுவை பழங்களைப் போல
ஒரே பதிவில் இத்தனை அழகிய பதிவினைக் கொடுத்ததில்
திக்குமுக்காடிப் போனேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அனைத்தும் அருமை.முதல் இரண்டு கதையை என்றும் மறக்க முடியாது போலிருக்கே.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
முதலில் உங்களுக்கு
ReplyDeleteஉண்மையாய் இருங்கள்...
அருமையான பகிர்வு..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
மனிதன் சும்மா இருக்கிறான்
ReplyDeleteவசந்தம் வந்ததும்
மலர்கள் மலர்ந்துவிட்டன.
வசந்தம் வந்து வாழ்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ஹா.. வாசிப்பனுபவம் என்பது இதுதான்.. ஒவ்வொன்றும் ரசனையில் தோய்த்த திகட்டாத சுவை.
ReplyDeleteபுத்தாண்டு களைகட்டி விட்டது உங்கள் அழகான பதிவால்.
பரந்த பசும்புல்வெளியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பசுவினைப்போல் பரவசத்துடன் திரிகிறேன். பார்த்தவற்றை, படித்தவற்றை மனத்தில் பதித்துச் செல்கிறேன். இனி அவற்றை மெல்ல மெள்ள அசைபோடவேண்டும். அற்புத ரசனைக்கு என் ஆழ்ந்த வணக்கம்.
ReplyDeleteவாங்க சுந்தர்ஜி. புத்தாண்டு வணக்கம். பேராசிரியர் பணி என்பது ஒப்பனை. உறரணி என்றே அழையுங்கள் அதுதான் அமுதம். நன்றி.
ReplyDeleteநன்றி ரமணி சார்.
ReplyDeleteநன்றி ஸ்ரீதர் மேடம்.
புத்தாண்டு வணக்கமும் நன்றியும் ரத்தினவேல் ஐயா.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி அவர்களுக்கு...
ReplyDeleteதங்களின் இனிய இரு கருத்துரைகளுக்கு நன்றி.
நன்றி ரிஷபன். பதிவின் வழியாக உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம் எழுதும் வேகம் கூடுகிறது. இவ்வாண்டில் இன்னும் எழுத்துலகில் மின்னுவோம். நன்றிகள்.
ReplyDeleteகீதா..அவர்களுக்கு..
ReplyDeleteஉங்களின் ரசனை மிகு பின்னுர்ட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எழுத்துதான் நமக்கெல்லாம் தவம். அதுதான் நமக்கு வாழ்வில் கிடைத்தவரம். நன்றிகள்.
இடறச் செய்த வலி
ReplyDeleteஉண்மையாய் இருக்கச் சொன்ன கடவுள்.
கடவுளை அறைந்த குழந்தை.
சாமிக்குக் காவலன ஜிம்மி
குடிகாரனின் தெளிவு
அவ்வையின் தமிழ்
ஜென் கவிதை
அனைத்தும் இனிமை.
இது தான் புத்தாண்டு பரிசு.
நன்றி ஹரணி சார்.
நன்றி சிவகுமரன்.
ReplyDelete