இன்றைய வாசிப்பில் கிடைத்த புத்தகம் இது.
தலைப்பு கணித மேதை சீனிவாச இராமானுஜன். இதன் ஆசிரியர் திருமிகு கி.ஜெயக்குமார் அவர்கள்.
புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அதன் ஆசிரியர் பற்றி குறிப்பிடவேண்டும்.
பொதுவாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருசிலரைத் தவிரப் பெரும்பான்மையானவர்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிப்பதிலும் அல்லது வேறு பல உப தொழில்களிலும் கவனம் செலுத்தி வருமானம் பெறுவது என்பதைத்தான் கவனத்தில் கொண்டிருப்பார்கள். இதுதவிர அவர்களின் பணிச்சூழலில் வகுப்புகள் எடுப்பதும், வகுப்புத் தேர்வுகள் நடத்துவதும், விடைத்தாள் திருத்துவதும், இன்ன பிற பணிகள் என அமைந்திருப்பதால் விட்டால் போதும் என்றிருப்பார்கள்.
ஆனால் இதிலிருந்து மாறுபட்டு ஒரு கணித ஆசிரியராக இருந்து தனது பணிகளை செய்துகொண்டும் வருமானத்திற்கு வழிதேடாமல் புத்தகம் எழுதுகிறார் என்றால் அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தானே? சொந்தமாகப் புத்தகம் போடுவது என்பது தற்கொலைக்கான முயற்சி. அதிலும் ஏனோதானோவென்று போடாமல் உண்மையான உழைப்பில் தேர்ந்த நடையில் முழுத்தகவல்களுடன் கணிதமேதை குறித்த இந்த புத்தகம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
அதற்காக ஆசிரியர் ஜெயக்குமாரை பாராட்டலாம். தவிரவும் இதுதவிர இன்னும் 3 புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றுவது தஞ்சையின் கரந்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கத்தின் உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியில். பாரம்பரியப் பெருமைமிக்க சங்கத்தில் இருந்து வந்துள்ள திரு ஜெயக்குமார் அதன் பண்பாட்டைப் பேணும் தகைமையைக் கொண்டவராக இருப்பதும் மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.
இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்குகிறது இப்புத்தகம். அவரின் கல்விச்சூழல் எத்தகைய இடர்களையும் வறுமையையும் கொணடிருந்தது என்று தொடங்கி அந்தக் கல்விக்காக அவர் பட்ட இன்னல்களையும் விவரிக்கிறது. மூன்று உடன்பிறந்தவர்களை இழந்து கணிதம் தவிர மற்றபாடங்களில் தோல்வியுற்றதால் உதவிதொகைப் பெறமுடியாமல் படிப்பை நிறுத்திவிட்ட சூழலில் ஊரைவிட்டு ஓடி இப்படி பல மனஉளைச்சல்களைச் சந்தித்தவர் ராமானுஜன். இருப்பினும் பல்வேறு உதவும் மனம்கொண்ட பலரால் அவரின் கணித அறிவுக்கு இலண்டன் சென்றால்தான் வெளிச்சம் கிடைக்கும் என்பதை உறுதிச்செய்யப்பட்ட சூழலில் இலண்டன் செல்கிறார். இதற்கிடையில் நடந்த பல்வேறு கடிதப் பரிமாற்றங்களை இப்புத்தகம் எடுத்துக் காட்டுகிறது. அவற்றின் வழி கணிதமேதையின் அறிவை உலகம் அறிய என்ன பாடுபடவேண்டியிருந்தது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
இல்ண்டனில் இராமானுஜனை நிலைக்க உறார்டியும் நெவிலும் மேற்கொண்ட செயல்கள் பெருமிதமானவை. இராமானுஜனின் கணித தேற்றங்களைக் கண்டு மலைத்துபோனவர் உறார்டி. ஏற்கெனவே கண்டறியப்ப்ட்டதும்... 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட தேற்றங்களும்.. இதுவரை கணித உலகம் கண்டறியாத தேற்றங்களும் என அவை குவிந்து கிடந்தன. ஏழாண்டுகளுக்கு மேல் இராமானுஜத்தின் கணித தேற்றங்களை ஆராய்ந்த உறார்டி குறிப்பிடுகிறார் இதுவரை இரண்டு அத்தியாயங்களை மட்டுமே ஆராய்ந்துள்ளேன் என்று. இது இராமானுஜத்தின் மிகப்பெரும் மேதையைமைப் பறைசாற்றும் சத்தியங்கள்.
பலவகைகளிலும் பாதிக்கப்பட்ட கணிதமேதை காசநோயால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவிக்கும் தாயாருக்கும் இருந்த முரண் அவரையும் பாதித்திருக்கவேண்டும். மன உளைச்சல் அவரைப் படுத்தியது. 1918 இல் அவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதும் அதனால் கைதானது பின்னர் விடுவிக்கப்பட்டதும் எல்லாம் படிப்போரை மனம் கசியவைக்கும் செய்திகள். பெலோ ஆல் ராயல் சொசைட்டியின் விருதையும் பெற்றார். மிகச் சிறிய வயதில் அதாவது 33 வயதில் கணித மேதை இறந்துபோனார்.
பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற மாமேதையின் மரணம் குறித்த செய்தி மிகவும் வேதனையைத் தருவதாகும். இப்புத்தகத்தில் ஆசிரியர் எழுதகிறார்..
தங்கள் சமுக நெறிகளை மீறி கடல் கடந்து சென்றதாலும் இந்தியா
திரும்பியபின் இராமேசுவரம் சென்று தன்னைப் புனிதப் படுத்திக்
கொள்ளாததாலும் இராமானுஜனது நெருங்கிய உறவினர்களில்
பெரும்பாலானவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை.
பாரதி இறந்தபோது அவன் உடலில் மொய்த்த ஈக்களைவிட அவன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் குறைவு என்று கேட்டதுண்டு. மாமேதைகளுக்குப் பாரத தேசம் தரும் கௌரவம் மரியாதை இதுதான் போலும்..
கணித மேதை இராமானுஜன் பற்றி அறிந்திருந்தாலும் நுர்லாசிரியர் இந்நுர்லைத் திறம்பட எழுதியுள்ளமை மறுபடியும் வாசிக்க வைக்கிறது. அவசியம் வாசிக்கலாம்.
புத்தக விவரம். கணித மேதை சீனிவாச இராமானுஜன். ஆசிரியர் கி.ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), உமாமகேசுவரனார் மேனிலைப்பள்ளி, கரந்தை, தஞசாவூர்/613 002.
புத்தகத்தின் விலை 60 ரூபாய்.
கி.ஜெயக்குமார் - Karanthaijayakumar.blogspot.com கைப்பேசி எண்.9443476716
கணித மேதை இராமானுஜத்தின் வாழ்க்கை இவ்வளவு இடர்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கணிதத்தின் சூத்திரங்களைக் கண்டறிந்தவர்க்கு வாழ்க்கையின் சூத்திரங்கள் கைவராமற்போனது மிகவும் பரிதாபத்துக்குரியது. மேதைகளின் வாழ்க்கை சிக்கல்கள் நிரம்பியது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.
ReplyDeleteநூலாசிரியர் ஜெயக்குமார் அவர்களுடைய பணி மிகவும் போற்றுதற்குரியது. பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றி. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பேன்.
அன்பிற்குறியீர்,
ReplyDeleteவணக்கம்.கணித மேதை சீனிவாச இராமானுஜன் நூலினை உடனே படித்தது மட்டுமன்றி, வலைப்பூவில் உடனடியாய் பாராட்டிய தங்களின் செயலுக்கும், பண்பானப் பாராட்டிற்கும் எனத நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.
நன்றி....
அருமையான புத்தக அறிமுகம்
ReplyDeleteபுத்தக த்தின் விலை மற்றும் பதிப்பகத்தின் பெயர்
முதலானவைகளை சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ
வாங்கிப் படிக்க நினைக்கும் என்போன்றோருக்கு அது உதவும்
மனம் கவர்ந்த பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்
கடந்த இரு வருடங்களில் என் வாசிப்பு நிறையவே குறைந்துவிட்டது...எனவே கடந்த மூன்று வாரங்களாய் புத்தகங்கள் கொஞ்சமாய் மீண்டும் சேர்க்க தொடங்கியுள்ளேன்...இராமானுசம் கணித மேதை என்பதை தவிர வேறொன்றும் அறியேன் நான்..இந்த புத்தகம் விரைவில் என் மேசை அடுக்கில் இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா...நன்றி..
ReplyDeleteஅன்புள்ள கீதா அவர்களுக்கு
ReplyDeleteவணக்கம். எப்போதுமே மேதைகள் இந்த உலகிற்கு சத்தியங்களை வழங்கப் படாதபாடுதான் படுகிறார்கள். இந்தப் புத்தகத்தில அவர் எழுதிய கடிதங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன அவற்றில் அவரின் எச்சூழலிலும் மயங்காத பண்பட்ட மனத்தையும் அவரின் போராட்ட உளைச்சலையும் உணர்ந்துகொள்ளமுடியும். இதுபோன்ற புத்தகங்கள்தான் இன்றைய காலத்தேவையை வலியுறுத்துபவை. தவிரவும் தேவையில்லாத சிறு விஷயங்களுக்கெல்லாம் உயிர் மாய்க்கும் இளைய சமூகம் இதுபோன்ற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் வாழ்வை மீட்டெடுத்துக்கொள்வதோடு சாதிப்பதற்கும் உதவும். நன்றிகள்.
அன்புள்ள ஜெயககுமார்..
ReplyDeleteஉங்கள் புத்தகம் வாசிப்புக்கு மட்டுமல்ல அது உடனடியாகப் பலரின் பார்வைக்கு செல்லவேண்டிய ஒன்றாகும். இது சமுகத்தின் தேவையாகும். குறிப்பாக இளைய சமுகத்திற்கு. அதன் தேவை அப்படி. என்னால் முடிந்தது. நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள ரமணி சார். வணக்கம். நன்றிகள். தாங்கள் சொன்னதை உடன் செய்துவிட்டேன். புத்தக விவரம் கொடுத்துள்ளேன்.
ReplyDeleteஅன்புள்ள மயிலன் வணக்கம். வாசிப்புதான் நம்மை உயிர்க்க வைப்பது. நன்றிகள்.
ReplyDeleteம்னம் கனத்துப் போகிறது ராமானுஜனுக்கு நமது தேசம் அளிக்கும் மரியாதையை நினைக்கும் போது.மேதைகளின் வாழ்வும் மறைவும் ஒரு நாட்காட்டியின் தாள் தோன்றி கிழிந்து மறைவது போல் ஆகிவிடுகிறது.
ReplyDeleteஅறிமுகத்துக்கும் எழுதிய ஜெயக்குமாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
உண்மைதான் சுந்தர்ஜி உங்களைப் போலவே மீண்டுமொருமுறை கணிதமேதைக்காக மனம் கனத்துப் போயிருக்கிறேன் இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு. அதன் விளைவே இந்த அறிமுகம். தவிரவும் எளிமையான நடையில் சிக்கல் இல்லாமல் எழுதப்பட்ட புத்தகம் இது.
ReplyDeleteநீங்கள் சொல்லியது போல பாரதிக்கும் கணிதமேதை ராமானுஜம் அவர்களுக்கும் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் இந்த சமுதாயம்... செய்யத் தவறிவிட்டோம்...
ReplyDeleteபுத்தகம் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் கொடுத்தமைக்கு நன்றி.
வணக்கம் வெங்கட் நாகராஜ். தங்களின் கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.
ReplyDelete