Sunday, February 5, 2012

கொஞ்சம் கவிதைகள்....



ஒவ் வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய் மாறுகிறது
விருப்புக்களையும் வெறுப்புக்களையும்
கடந்த அலட்சியத்தில் பயணிக்கிறது
சில சமயம் கேட்பதுபோல பணிகிறது
சில சமயம் பணிவதுபோல கேட்கிறது
எல்லாமும் மெய்யல்லவென்றுணர்கையில்
மெய்யற்றுப்போகிறது
உன்னோடு வாழ்தல் அரிதென்று விலக்கமுடியாமலும்
விலக்கவும் அதனிடமே அனுமதிகேட்கவேண்டியிருக்கிறது
எப்படியிருந்தாய் மூலத்திலென்று பார்ப்பதற்காகவே
வாழவேண்டியிருக்கிறது சொச்சத்தையும் மிச்சத்தையும்
வைத்துக்கொண்டு..

000000000000
000000000000

இம்சையாவே இருக்கிறது
இயலாமையிலும் சங்கடத்திலும்
சகித்துக்கொள்ளமுடியாமலும்
அவமானத்திலும் காயங்களிலும்
சில சமயம் சில மிருகங்களிடம்
பொழுதுகளைத் தொலைக்கவேண்டியிருக்கிறது
ஆனாலும்
வாழ்வின் கடைசி இருப்புவரை அவை
மிருகங்களாகவே வாழ்ந்து மிருகங்களாகவே சாகும்
என்ற ஊழ்வினையின் நிறைவில்
மிச்ச வாழ்வு மீந்தேறும் எப்போதும்..

00000000
00000000

ஒரு துயரத்தினை விலைபேசலாம்
விலை பேசுதல் எளிதுதான்
துயரத்திற்குப் பதிலாய் சுகத்தினையும்
சுகத்திற்குப் பதிலாகத் துயரத்தையும்
பண்டமாற்றுச் செய்யமுடியாத
நிலைதான் கடினமானது எப்போதும்
அது
வியாபாரமாக இருந்தாலும் கூட...

00000000
00000000

உன் சுகத்தையே பார்த்துப் பார்த்து
அதனையே வாழ்வின் நிலையென்று அனுபவித்து
என்னையும் சேர்த்து எதைப்பற்றியும் கவலைப்படாமல்
கடைசிவரை இருந்து கரைந்துவிட்டாய்
மனத்தையடக்கி நடித்து நின்றாலும்
ஒவ்வொரு இரவிலும் என்னுடல் கேட்கிறது
தின்ன
நெருப்பில் எரிந்த உன்னுடல் எரியாதிருந்த
நிலைபோல
பசிக்குக் கொடுப்பதுதானே தர்மம்....

000000
000000

எங்கு எரிகிற சுடராயினும்
அதற்குள் உருவம் காட்டாத
ஒரு கண்ணாடி நிற்கிறது
அதற்குள் யுகங்களின் இசை
யாரும் வாசிக்க எப்போதும்


------ (ந்ன்றி ..... உயிர் எழுத்து (இலக்கிய மாத இதழ்), பிப்ரவரி 2012)
                            படம் - உயிர்எழுத்து.
                             

4 comments:

  1. எதைச் சொல்ல எதை விட..

    எங்கு எரிகிற சுடராயினும்
    அதற்குள் உருவம் காட்டாத
    ஒரு கண்ணாடி நிற்கிறது
    அதற்குள் யுகங்களின் இசை
    யாரும் வாசிக்க எப்போது

    ஆஹா..

    ReplyDelete
  2. உன்னோடு வாழ்தல் அரிதென்று விலக்கமுடியாமலும்
    விலக்கவும் அதனிடமே அனுமதிகேட்கவேண்டியிருக்கிறது
    எப்படியிருந்தாய் மூலத்திலென்று பார்ப்பதற்காகவே
    வாழவேண்டியிருக்கிறது சொச்சத்தையும் மிச்சத்தையும்
    வைத்துக்கொண்டு.

    இந்த வரிகளுக்குள் எதை நிறுத்தினாலும் அது அதுவாகவே பரிணமிக்கிறது. கவிதையின் அசுரபலமான வரிகள். அற்புதம் ஹரணி சார்.

    துயரத்தை விலைபேசும் விநோதமும், சுடருக்குள் யுகங்களின் இசையைச் சுருட்டிவைத்திருக்கும் வித்தையும் படிக்கப் படிக்க விழிகள் விரிக்கின்றன. உயிர் எழுத்தில் வெளிவந்ததற்குமாகப் பாராட்டுகள் இன்னும்.

    ReplyDelete
  3. அன்பு ஹரணி ஐயா, வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதை உங்களுக்கு வழங்குகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இது குறிதத விவரங்களை நாளை 8-2-2012 மாலை என் வலைப் பூவில் எழுதுகிறேன்
    நன்றி

    ReplyDelete