மூன்றாம் அத்தியாயம்..........மனசு கொல்லிகள்...
பாண்டியன் வண்டியை நிறுத்தியதும் ஜெயக்குமாரிடம் சொன்னார். போச்சு இன்னய பொழப்பு, என்றபடி வண்டியை விட்டு இறங்கினார். எல்லோரும் அவசரஅவசரமாய் இறங்கினார்கள். கூட்டம் வண்டியை நோக்கி ஓடி வந்தது. அதற்கு முன்னால் ஒரு நடுத்தர வயதைத்தாண்டிய பெண் கையில் ஒரு துரட்டியுடன் ஓடி வந்தாள்.
பரபரப்புடன் காருக்கு கீழே குனிந்து பார்க்கையில் ஒரு ஆடு அடிபட்டிருப்பது தெரிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் குட்டியைப் போடும் நிலையில் இருந்தது. நடக்கமுடியாமல் நடந்து பேருந்து வருவதைக் கவனிக்காமல் தலைப்பகுதி முன்சக்கரத்தில்பட விழுந்து முன்சக்கரம் ஏறி பின்சக்கரமும் ஏறியிருந்தது. சுற்றிலும் ரத்தக்குவியல். பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
இந்தாப்பா டிரைவர் கொஞ்சம் வண்டிய முன்னால நவுத்து.. என்று யாரோ சொல்ல. பாண்டியன் உள்ளே ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்து சற்று தள்ளி நிறுத்தினார். பளீரென்ற வெளிச்சம் அந்த ஆட்டின்மேல் விழுந்தது.சுற்றிக் கூடிக்கொண்டார்கள். பழத்தை நான்காகக் கத்தியால் பிளந்ததுபோல அந்த ஆட்டின் மேடான வயிற்றுப்பகுதியில் சக்கரம் ஏறி அழுத்தியதில் வயிறு வெடித்து பிளந்திருந்தது. அந்த ஆடு வாய் திறந்து கத்துவதற்கு உயிர் போயிருக்கக்கூடும். கண்கள் திறந்தபடி வானத்தைப் பார்த்துக் கிடந்தது. வயிற்றுப் பகுதியில் நாலைந்து கருப்புநிறக் குட்டிகள் இறந்து கிடந்தன. ஒன்று மட்டும் லேசாக அசைவதுபோலிருந்தது- ஆனால் அது ரத்தச் சகதிக்குள் முண்டிக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது. முடியவில்லை. அதுவும் சற்று சேரத்தில் தனது கடைசிக் கதறலை என்றைக்கும் கேட்கமுடியாமல் இறந்துபோயிருந்த தனது தாயின் காதுகளுக்கு அனுப்பிவிட்டு மண்சரிவதைப் போல அந்த சாலையில் சரிந்து படர்ந்தது.
கையில் துரட்டியுடன் வந்த பெண் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்திருந்தாள்.
பாவிப்பய...இருந்தும் கெடுத்தான். செத்தும் கெடுத்தான். வாக்கப்பட்டு வந்தப்ப வச்ச நெருப்பு இன்னும் எரியுதே.. இனி என்ன பண்ணுவேன் என்று அந்த அந்த ஆட்டின் மேல் விழுந்து அழுதாள். அவள் முகமெங்கும் ரத்தம் படர்ந்தது.
பாவங்க... செனையாடு... என்ன பாவம் செஞ்சதோ?
வண்டிய எங்க ஓட்டுறானுங்க.. பாத்து ஓட்டறதில்லே.. இதுவே மனுஷங்க மாட்டியிருந்தா...
ஓடிவந்த கூட்டம் ஆளுக்காள் பேசினார்கள்.
அய்யய்யோ நம்ப தனத்துக்காவோட,,ஆடு... அவ பொழப்பே இதுலதான்.. அடப்பாவிங்களா..
எவன்டா அவன் டிரைவர்..அவன புடிச்சி ஒதடா மாப்பிள்ளே...
பொறு மாமா,,, அவசரப்படாதே...
ஜெயக்குமார் முன்னால் போய் பேசினார்.. இந்த பாருங்க அதா வந்து சிக்கிடிச்சி.., டிரைவர்மேல தப்பில்லே...
என்னக்கிடா தப்ப நீங்க ஒத்துக்கிட்டிருக்கீங்க?
யாரா இருந்தாலும் மரியாதயா பேசுங்கப்பா...யாராச்சும் வேணுமின்னு வண்டிய விடுவாங்களா? ஒரு பெரியவர் பேசினார்.
ச்சும்மா இரு பெரிசு...இவனுங்க வண்டியிலே ஏறினா பிளைட்டு ஓட்டறமாதிரி வர்றானுங்க... ஒதுங்க விடுறதில்லே.. அதுக்குள்ள உட்டு ஏத்திப்புட்டுப் போயிடாறானுங்க...நாயம் பேசவந்திட்டே நீ?
ஆட்டிடமிருந்து அந்த ஆட்டுக்குரியவளை..தனத்தை பிரித்து அழைத்துப்போனார்கள்.
நானும் இன்னொரு நண்பர்களும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆளுக்காள் கோபம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவன் பாண்டியனிடம் போய் வெட்டி வம்பு இழுத்துக்கொண்டிருந்தான். எப்படியும் அவனுடைய நோக்கம் பாண்டியனை வம்புக்கிழுத்து அடித்துவிடவேண்டும் என்பதுதான்.
போ..போ..அந்தப்பக்கம்.. என்று அவனைத் தள்ளிக்கொண்டேயிருந்தார்.
யேய்.. என்மேலயே கய்ய வைக்கிறியா நீ? மாப்ளே இங்க் பாருடா.. செய்யறதையும் செஞ்சிப்புட்டு அடிக்க வர்றாண்டா?
யேய்.. என்று ஒருகூட்டம் பாண்டியனை நோக்கி பாய்ந்தது.
நானும் நண்பர்களும் குறுக்கே போனோம். விடுங்க.. அவரு அடிக்க வர்றலங்க...போங்க என்றதும்..மீறி வந்தார்கள். உடனே என்னுடைய நண்பர்... சார் இது சரிப்பட்டு வராது.. நீங்க போலிச கூப்பிடுங்க...ரோட்டுல ஆடு வந்தது நம்ப குத்தமில்லே.. போலிசு வந்து சொல்லட்டும்.. அதப் பாத்துக்கலாம்.
அதற்குள் ஒருவர் வந்து விடுங்கப்பா.. அவங்கஅவங்க அவசரமா போய்க்கிட்டிருக்கோம்..பின்னாடி பாருங்க.. எத்தனை வண்டி நிக்குது... காலத்துல ஆபிசுக்குப் போகவேண்டாம்.. பேசி முடியுங்கப்பா...
என்னத்தயா பேசறது? அவளோ தாலியறுத்தவ... அவ பொழப்பே இந்த ஆடுதான்.. அதுவும் போயிடிச்சி.. இனி என்ன பண்ணுவா,, சாவ வேண்டியதுதான் அவளும் ஆட்டைப்போல...
பின்னால் நின்றிருந்த வாகனங்களிலிருந்தும் மக்கள் இறங்கி வந்து இந்தப் பேருந்தைக் கூடிநின்றார்கள். அப்படியே வெயிலில் ரத்தம் உறையத் தொடங்கியது. நான் மணியைப் பார்த்தேன். எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆட்டைப் பார்த்தேன். எல்லாக் குட்டிகளும் இறந்துபோயிருந்தன. யாருக்கானாலும் விதிக்கப்பட்டதுதான் விதியும். இன்னும் நாலைந்து தினங்களில் உலகத்தைப் பார்ப்போம் என்று விதிக்கப்படவில்லை போலும் அந்தக் குட்டிகளுக்கு. அவற்றின் ராசி தாயையும் கொன்றுவிட்ட ராசி போலும்..
இத என்ன பண்ணுவாங்க? என்றபடி ஒரு இளம்பெண் தன் கணவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
இவ்வளவு பேசறானுங்க பஸ் போனதும் ஆளுக்காள் கூறுபோட்டு எடுத்திட்டுப் போயிடுவானுங்க.. சாப்பிடறதுக்கு என்றான் அந்த இளைஞன் தன் மனைவியிடம்.
பொதுவா இதுமாதிரி ஆக்ஸிடெண்ட்ல அடிபடறத சாப்பிட மாட்டாங்க..
ஒருவன் லேசான குடியுடன் தலையில் கட்டிய முண்டாசுடன்.. பிஞ்சாட்டுக் கறி ருசி மாப்பிளே என்றான்.
எனக்கு சங்கடமாய் இருந்தது. பேசி முடித்தார்கள். ஜெயக்குமார் கண்டக்டர் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்தார். அந்த ஆட்டுக்குரிய பெண்ணை அழைத்தார்கள்.
இந்தாம்மா வா இங்கே...இதப்புடி சர்க்காரு ரோட்டுமேல ஆடு மேக்கறது தப்பு.. உன் ஆட்டுமேலதான் தப்பு... ஆட்ட அள்ளிட்டுப்போ... என்றபடி அவள் கையில் பணத்தைத் திணிக்க அழுதழுது சிவந்த கண்களுடன் தன் கையில் திணிக்கப்பட்ட அந்தப் பணத்தையே பார்த்தபடி திக்பிரமை பிடித்தவள் போலானாள்.
டிராபிக் ஜாம் ஆயிடிச்சுப்பா... ஏறுங்க ஏறுங்க.. அவங்கஅவங்க வண்டிய பாத்து ஏறுங்கப்பா என்று ஒருவர் சத்தமாய் சொல்ல அவரவர் வண்டி நோக்கி ஓடினார்கள்.
சார் வாங்க போகலாம்.. பாண்டிய வண்டிய எடு... இன்னிக்கு ஒரு சிங்கிள் கட்டு...கிளம்பு..
வண்டியில் ஏறினோம்.
டிரைவருக்கு அருகிலிருந்த பேனட்டின்மேல் முக சோர்வாய் ஜெயக்குமார் உட்கார்ந்தார். நான் கேட்டேன். எவ்வளவு கொடுத்தீங்க?
சுளையா அய்ந்துர்று ரூவா சார்.. இன்னிக்குப் படிக்காசு போச்சு.. கைப்பணமும்போச்சு... மாசாமாசம் இப்படி ஆயிடுது சார்...இதுக்கு ஒரு நடவடிக்கை கார்ப்பரேசன் எடுக்கமாட்டேங்குறாங்க... வண்டி கலெக்சன் காமிக்கலன்னா ஆயிரம் கேள்விகேட்டுக் கொல்றாங்க...
பாண்டியன் முகம் சாதாரணமாகவே இறுக்கமாக இருக்கும். இப்போது இன்னும் சிறிது அடர்த்தியாய் இறுகிக்கொண்டது.
ஆடுதுறையிலிருந்து காவிரி பாலத்தைக் கடந்து திரும்பிப் போகையில் பாண்டியன் வாய் திறந்தார்..
தினமும் வேண்டிக்கிட்டுதான் வர்றேன்..சார்.. அதயும மீறி நடந்துடுது..ஒரு சின்ன உயிருக்குக்கூட தீங்கு வரக்கூடாதுன்னுதான் எல்லா டிரைவரும் ரொம்ப கவனமா ஓட்டறோம்.. மோட்டார் லைன் அப்படி..இப்படி அடிபடும்போது கஷ்டமாயிடுது.. நாம கொடுக்கற பணம் பத்தாது. ஆனா அத மீறி கொடுக்க எங்களோட வருமானம் பத்தாது. கார்ப்பரேசன் இதல்லாம் கண்டுக்காது. ரோட்டுல எது நடந்தாலும் கண்டக்டரும் டிரைவரும்தான் பாத்துக்கணும். மோட்டார்ல ஏறினவன் எல்லாருடைய தலையெழுத்தும் இதான் சார். அந்தம்மா கதறும்போது என்னால எதுவும் செய்ய முடியல்லே...இதனால நான் ஆடு, கோழி கறி திங்கறதே விட்டு பத்து வருஷமாச்சு சார்.. என்னமோ அத தின்னாலே இப்படி ரோடு ஞாபகம் வந்துடுது.. என்ன வேலைக்கு வேணாலும் போகலாம் சார்.. மோட்டார் வேலைக்கு மட்டும் வரவே கூடாதுசார்.. இதெல்லாம் சாப பொழப்பு சார்..
பாண்டியன் தழுதழுக்கப் பேசினார். எல்லா டிரைவர்களின் குரலிலும் பேசினார். எனக்குள் ஒரு பிரமிப்புகலந்த ஆச்சர்யம் வந்தது. பாண்டியன் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொன்னபோது. இப்படியும் ஒரு டிரைவர் என்று அவர்மேல் ஒரு கூடுதல் மரியாதை வந்தது.
நான் அந்த ஆட்டுப் பெண்ணைப் பார்த்தேன். அவள் தலையில் லேசாக ஓரிரு நரைமுடிகள் விழுந்திருந்தன. நெற்றியில் பொட்டு இல்லை. விதவை. இளம் வயதில் விதவை ஆகியிருக்கவேண்டும். கைகளில் நசுங்கிப்போன தன்னிறத்தை இழந்திருந்த கவரிங் வளையல்கள். கழுத்திலும் அப்படியே ஒரு கவரிங் சங்கலி...வெளுத்துப்போன புடவை. வறுமை அவளைப் படம பிடித்திருந்தது. எனக்கு என்னுடைய கிராமத்து சித்தி ஒருத்தி நினைவுக்கு வந்தாள். போனமாதம்தான் வைக்கோல்போரில் வைக்கோல் பிடுங்கும்போது பாம்பு கடித்து பத்துநாட்கள் ஐசியுவில் இருந்து இறந்துபோனாள்.
அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவளுக்கும் என்னைப் பிடிக்கும். அவளுடைய வாழ்க்கையும் இப்படித்தான் பரிதாபகரமானது. அம்மாவின் கடைக்குட்டி சின்னம்மாவின் மகள் அவள். கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் நன்றாக இருந்த கணவன் மஞ்சள் காமாலை திடீரென்று தாக்கி இறந்துபோனான். நிலைகுலைந்துபோனாள். அப்புறம் ஒரு குழந்தையோடு தோப்பில் இருந்த ஒரு சிறுவீட்டில் இரண்டு மாடுகள் சில ஆடுகளை வைத்துக்கொண்டு வாழத்தொடங்கிவிட்டாள். மிகவும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு தன்னுடைய பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள்..என்னைக் கண்டுவிட்டால் போதும் ஒரு தாயின் பரிவோடு,,தம்பி.. என்னப்பா வேணும்? என்று கேட்டபடியே படபடவென்று இளநீர் வெட்டித்தருவாள். வேண்டாம் என்றாலும் இளநீர்குடித்த சில நிமிடங்களிலேயே காபி போட்டு தருவாள். வடை சுடுவாள். தெய்வத்தைக் கண்டதுபோல் ஆடுவாள். உண்மையில் ம்னிதர்கள் மனிதர்களிடம் செலுத்தவேண்டிய அன்பும் பரிவும் பாசமும் உண்மையும் கிராமங்களிடம்தான் இருக்கின்றன என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் மருத்துவமனையில் சென்று பார்த்தபோது அசைவற்ற சருகைப்போலக் கிடந்தாள். வயிறு மட்டும் ஏறிஇறங்கி அவள் உயிருக்குப்போராடுவதைக் காட்டிக்கொண்டிருந்தது. அவள் பக்கத்தில் அவளுடைய தாய் என்னுடைய அம்மாயி அசைவற்று உறைந்திருந்தாள்.
தன்னுடைய ஆட்டின் மேல் விழுந்து கதறிய அந்தப் பெண் இறந்துபோன என்னுடைய சித்தியைப் போலவே எனக்குத் தெரிந்தாள். இன்னும் இந்த தமிழ்தேசத்தில் எளிய மக்களின் வாழ்க்கை அவர்கள் சொல்வதுபோல நாங்க நாதியத்தவங்க...ரோட்டுல நிக்கறோம் உதவுங்க என்பதுபோல இன்னும் சாலைகளில்தான் இருந்து முடிகிறது. பெரும்பாலும் அடுத்தவர் கொல்லைகளிலும் அறுவடை முடிந்த வயல்களிலும்தான் ஆடுகளை மேயவிட்டு பிழைப்பார்கள். இதுதான் அவர்களின் வாழ்வாதாரம்..மனசுக்குள் இன்னும் அந்த ஆட்டுப்பெண்ணின் முகம் நிழலாடியது. பாண்டியன் அதை நினைவுப்படுத்தியிருந்தார் ஆழமாக.
மாயவரம் பேருந்து நிலையத்தில் நுழைந்து சிதம்பரம் போகும் கட்டையில் வ்ண்டியை நிறுத்திவிட்டு பாண்டியன் சோர்வாக இறங்கினார். ஜெயக்குமார் வாங்க சார்..டீ சாப்பிடலாம் என்றார். போய் டீ சாப்பிட்டோம்.
என்ன பாண்டியா அதே நினைச்சிக்கிட்டிருக்கியா? விடு,, எத்தனை பாத்திருக்கோம்?
ஜெயக்குமார் ஆறுதல் சொன்னாலும் பாண்டியன் முகஇறுக்கம் விடுபடவில்லை. கையும் உதடுகளும் இயந்திரம்போல இயங்க டீயை அருந்தினார்.
நான் எப்போதும் பேருந்தில் படியேறும்போது வலதுபக்கம் உள்ள இருக்கையில் சன்னலோரம் உட்காருவதுதான் வழக்கம். என்னுடைய பேக்கை வைத்துவிட்டுதான் டீ குடிக்க இறங்கியிருந்தேன். திரும்ப வண்டியில் ஏறும்போது என்னுடைய சீட்டிற்கு அருகில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். நன்றாக சிவந்த உருவம். ஒல்லியான தேகம். தலை முழுக்க வெள்ளிக்கம்பிகளாய் நரையோடி மிக அழகாக இருந்தது. முகத்தில் கோல்டுபிரேம் போட்ட கண்ணாடி. உதடுகள் ரத்தச்சிவப்பாய் இருக்க வெற்றிலை மென்றுக்கொண்டிருந்தார்.
நான் ஏறியதும் வேண்டா வெறுப்பாய் விலகுவதுபோல லேசாக கால்களை நகர்த்தி எனக்கு வழிவிட்டார். நான் ஏதோ வேறுபாட்டை அதில் உணர்ந்தேன்.
பேருந்தை எடுக்கப் புறப்பட்டது. அவர் என்னை நெருக்கிக் கொண்டேயிருந்தார்..ஒரு கட்டத்தில் நான் பொறுமையிழந்து..
ஏன் சார்? இப்படிப் போட்டு அமுக்கறீங்க? என்றேன்.
யாரு அமுக்குறா? எனக்கென்ன ஆசையா? கூட்டம் தள்ளுது..இப்படி பேசுறவங்க சொந்தக் கார்ல வரணும்.. எங்க உயிரை எடுக்கக்கூடாது.. அமுக்கறாங்களாம்.. என்று படபடவென்று பேசினார்..
என்ன இது ஒருவார்த்தை பேசியதற்கு இப்படிப் பேசுகிறார் என்று அவரைப் பார்த்தபடியே பேசாதிருந்தேன். அவர் பேசிவிட்டு என்னைக் காணாதைப்போலவே ரோட்டைப் பார்க்க ஆரம்பித்தார்.
ஜெயக்குமார் கத்தினார்.. பாண்டியா இரு,, டெலிபோன் நிக்குது ரோட்டுல.. லேசா அணை என்றார்.
காவிரிபாலத்தைத் தாண்டிய திருப்பத்தில் ஒருவர் கையில் வயர் பையுடன் வேகமாகப் பாண்டியனைப் பார்த்தபடி ஓடிவந்தார்.
பாண்டியன் நிறுத்தினார்.
ஏறியவர் நிற்பவர்கள் யாரையும் லட்சியம் பண்ணாமல் கூட்டத்தைப் பிளந்தபடி முன்னேறி போய் பாண்டியனுக்குப் பக்கத்தில் பேனட்டில் உட்கார்ந்துகொள்ள ஜெயக்குமார் விசில் கொடுக்க பாண்டியன் வண்டிய எடுத்தார்..
உட்கார்ந்தவர் பேச ஆரம்பித்தார்... என்ன பாண்டியா,,,டைம் பிரகாரம்தான் வண்டிய எடுப்பிங்களோ?..என்ன இன்னிக்கு இவ்வளவு லேடடு? கடலுர்ர் வண்டிய விட்டுட்டு உக்காந்திருக்கேன்..என்ன ஜெயக்குமார் சொல்றதில்லியா?,.. வண்டி இந்த லைன்லே ஓடணுமா வேண்டாமா? என்று தொணதொணவென்று விட்டுவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். திக்குவாய்போல.
பேசாம இருங்க..திருவிடை மருதுர்ர்ல ஓரு ஆடு அடிபட்டுடுச்சி.. பாண்டியன் மூடு அவுட்டாயிட்டான் என்றார் ஜெயக்குமார்..
அ..அ...அ...அவ்வளவுதானா? விடுங்க எடுத்துப்போட்டுட்டு வந்திருந்தா பிரியாணி போட்டிககலாம் என்றபடி சிரித்தார்..
பாண்டியன் எதுவும் பேசவில்லை.
நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தேன்.. நெருக்கி நெருக்கி நெருக்கடி கொடுத்துக்கொண்டேயிருந்தார். நான் எதுவும் பேசாமல் பொறுத்துக்கொண்டேன். வைத்தீஸ்வரன் சன்னதியில் சாமியை வணங்கிவிட்டு சற்று கண்களைக் மூடி துர்ங்கலாம் என்று முடிவெடுத்தபோது படிக்கருகில் வந்து படியில் நின்றுகொண்டு ஜெயக்குமார் பேசஆரம்பித்தார்..
மதியம் எப்ப வருவீங்க சார்? என்றார்.
சொல்லமுடியாது ஜெயக்கமார் அது வேலை முடியறத பொறுத்தது. என்றேன்.
நம்ப வண்டி சிதம்பரம் போய் உடனே பத்து அஞ்சுக்கு டிரிப் எடுத்து வரணும்.. இப்போ மாறிப்போயிடிச்சி. கும்பகோணத்தோட சிங்கிள் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.. இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம், ஆனா படிக்காசு போயிடிச்சி என்றார் வருத்தமுடன்.
எனக்குப் பக்கத்திலிருந்தவர் என்னாச்சு ? என்றார்.
ஆடு மாட்டிடிச்சி சார்.. பஞ்சாயத்து..பணம் கொடுத்திட்டு வர்றதுக்கு முக்காமணிநேரம் ஆயிடிச்சி..அதான்லேட்டு...
அவர்அதற்குமேல் பேசவில்லை. சீர்காழி பழைய பேருந்து நிலையம் வந்ததும் என் பக்கத்திலிருந்தவர் எழுந்து இறங்கினார். போகும்போது என்னை ஒருமுறை திரும்பி முறைப்பதுபோல போனார்.
இது யார் ஜெயக்குமார் என்றேன்.
அவரு போஸ்ட்மாஸ்டர் சார்.. இங்கதான் வேலை பாக்கறாரு.. நம்மோட ரெகுலர் கஸ்டமர்.. நீங்க உக்காந்திருக்கீங்களே அந்த சீட்டுதான் அவரோடது. வேற சீட்டுல உக்கார மாட்டார்..
டிக்கட் போடப் போய்விட்டார் ஜெயக்குமார்.
அவர் நெருக்கியதன் காரணம் புரிந்தது. சொன்னால் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்றும் தோணியது. நாளைக்கு வந்தால் கொடுத்துவிடலாம் என்று முடிவுசெய்துகொண்டேன்.
பாண்டியனிடம் தொணதொணவென்று அந்த திக்குவாய் பேசிக்கொண்டே வந்தார். எனக்கே எரிச்சலாக இருந்தது. பெரும்பாலும் வண்டி ஓட்டும்போது டிரைவரிடம் யாரும் பேச்சுக்கொடுக்கக்கூடாது. அதுகூடவா தெரியாது ஒரு மனுஷனுக்கு என்று நினைத்துக்கொண்டேன்..
இவனுக்கு இதே வேலையாப் போச்சு...தினமும் இப்படித்தான் உயிர எடுக்கறான் என்று யாரோ அவரைக் காட்டிக் கோபப்பட்டார்கள்.
வல்லம் படுகை வரும்போது பேனட்டில் உட்கார்ந்திருந்தவர் படிக்கு வந்திருந்தார். வரேன் ஜெயக்குமார்.. என்றார்.. இறங்குங்க..பேச்சுதான் என்றபடி ஜெயக்குமார் சொல்ல வண்டியை மெதுவாக ஓட்டினார் நிறுத்தாமல் அவர் இறங்கிகொள்ள வண்டி வேகமானது-
வண்டியில் லேசாக கூட்டம் குறைந்திருந்தது. என் பக்கத்தில் வந்து ஜெயக்குமார் உட்கார்ந்து இன்வாய்ஸ் எழுத ஆரம்பித்தார். அப்போதுதான் முதுகிற்குப் பின்னால் யாரோ திட்டுவதுபோன்ற குரல் கேட்டது திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்சீட்டில் சன்னலோரம் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அதாவது தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்ததையும் அவர் கவனிக்கவில்லை. கைவிரல்களை உயர்த்தி உயர்த்தி திட்டிக்கொண்டிருந்தார்.. இப்படி செஞ்சிருக்கக்கூடாது.. நானும் இப்படியாகும்னு நினைக்கல்லே..கொஞ்சம் கவனிக்காம இருந்திட்டேன்.. நீயாவது கத்தியிருக்கலாம்ல.. என்றபடி அவரது பேச்சில் தெளிவாகக் கேட்டது சொற்கள். தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார் எதைப்பற்றியும் கவலைப்படாமல்.
சிதம்பரம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போது மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது. இன்னிக்கு முடிந்தது கதை என்று நினைத்துக்கொண்டேன். வருகைப்பதிவேடு அலுவலகத்திற்குப் போயிருக்கும். கையொப்பமிட முடியாது எனத் தோணியது. அவசரமாக இறங்கி வேகமாக நடந்தேன். காந்திசிலை அருகில் போகும்போது நண்பர் ஒருவர் தன் வண்டியில் எற்றிக்கொண்டார். வண்டியை விட்டு இறங்கி வேகமாக உள்ளேபோகும்போது அலுவலக உதவியாளர்வருகைப்பதிவேட்டுடன் படியிறங்கிக்கொண்டிருந்தார். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே அவரிடம் வாங்கி படியில் வைத்துக் கையொப்பமிட்டுவிட்டு மாடிப்படியேறினேன். முதல் தளத்தில் என்னுடைய அலுவலகம். என்னுடைய இருக்கையில் அமர்ந்ததும் துறைத்தலைவர் என்னை அழைப்பது கேட்டது. எழுந்து உள்ளே போனேன்.
போனதும் வணக்கம் சார் என்றேன்..
என்ன இப்பத்தான் வர்றியாய்யா? என்றார்.
ரோடுலே ஒரு ஆக்ஸிடெண்ட் சார்.. அதான் லேட்டாயிடிச்சி சார் என்றேன்.
ஏதாவது ஒரு மயிறு காரணம். சொல்றே நீ எப்பவும்?
எனக்குள் ஒரு கோபம் சுர்ரென்று கிளம்பி எழுந்தது.
எப்ப லேட்டா வந்து காரணம் சொல்லியிருக்கேன் சார்.. சொல்லுங்க ? என்றேன் கோபமாக..
சட்டென்று நிமிர்ந்து என்ன எதிர்த்து பேசறியா நீ? சொச்ச காலம் இருக்கு. வேலைய பாரு..ஏதாவது பேச்சுமயிறு பேசிக்கிட்டிருக்கே.. என்றார் மறுபடியும்.
மிருகத்திடம் மல்லாடுவது வீண் என்று நான் பேசாதிருந்தேன்.
போ...இன்னிக்கு அந்த ஆண்டறிக்கை அனுப்பணும்.. தயார்
பண்ணு என்றார்.
நான் அறையைவிட்டு வெளியே வந்தேன்.
அந்த சாலையில் சிதைந்துபோயிருந்த அந்த தாய் ஆடும் குட்டிகளும் மனக்காட்சியாக விரிந்தது.
தானேபேசிக்கொண்டிருந்த அந்த மனிதரும் மனதிற்குள் வந்து பேச ஆரம்பித்திருந்தார்.
கைப்பேசி அழைத்தது.
எடுத்து அழைப்பைத் திறந்து காதுகளில் வைத்தபோது அக்கா பேசினாள். அவள் சொன்னது மனதை அதிரவைத்தது.
(பேருந்து ஓடும்)
ஒவ்வொரு ஓட்டுனரும் காலையில் கிளம்பும்போதே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாள் முழுதும் நல்லதாக நடக்க வேண்டும் என்று எண்ணியபடியே வருகிறார்கள்....
ReplyDeleteபல சமயங்களில் நான் பயணம் செய்யும்போது ஓட்டுனர் பக்கத்திலே இருந்து பயணம் செய்வதை விரும்புவேன்.. அவர்கள் வேலையை பார்த்தபடி....
இந்தப் பதிவினை இன்னும் படிக்கவில்லை. படித்துக் கருத்திட மீண்டும் வருவேன்.
ReplyDeleteநேரமிருந்தால் என்னுடைய இந்தப் பதிவைப் பார்வையிடுமாறு அன்புடன் அழைக்கிறேன். நன்றி ஹரணி சார்.
http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_08.html
பேரூந்து பயணங்களே இவ்வள்வு சுவையான( எல்லா சுவைகளும் ) அனுபவங்களைக் கொடுக்கும்போது வாழ்க்கைப் பயணம் எத்தனை சுவை தரக் கூடியது. எல்லாப் பயணங்களும் அனுபவங்களும் நிறையவே கற்பிக்கும். நாம் தயாராக இருக்கிறோமா.?பயணச் சுவைகளை அனுபவிக்கத் தொடருகிறேன்.
ReplyDeleteஎறும்பு பகிரும் வெல்லக்கட்டி
ReplyDeleteதீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்
குடைகிறது .!
நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்
பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்
பதட்டம்...
பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு
தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்
வாய்ப்பையும் தந்தது.
பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
விருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்
பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
எலிக்கு யோகம்..!
சுந்தர்ஜி -பரிவின் இசை
இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
ஹ ர ணி -ஹரணிபக்கங்கள்
கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்
என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ? என அன்றாடம் மணி
அடிக்கிறது!
ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது
குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
எழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...
அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
எறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
குழந்தைகள் சுவைப்பார்கள்....
அம்மாவும் கூட
காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..
பேசாமல் பாண்டியனுக்குப் பதில் அந்த துறைத் தலைவர் அந்த பஸ்ஸை ஓட்டியிருக்கலாம்..அவ்வளவு காழ்ப்புணர்ச்சி..எல்லா ஆடுகளையும் சின்னா,பின்னமாக்கியிருப்பார், அந்த கொடுங்கோலன்!
ReplyDeleteகதை வீரியம் அதனுடன் ஒன்றிப் போக வைத்தது!
மெத்தப் படித்தவர்களிடம், பண்பாடும், மனிதநேயமும் , நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்கிடமான உண்மையாகும்.
ReplyDeleteசொல்லப்போகும் அதிர்ச்சி என்னவென்று தெரியவில்லை. நான் இப்போதே மிகவும் அதிர்ந்துபோயிருக்கிறேன் ஹரணி சார். அந்த ஆட்டின் மரணம்... அடிவயிற்றில் உந்திய வேதனை இன்னும் குறையவில்லை எனக்கு. மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்ட அந்நிகழ்வை அதிர்வுகளடங்கிய எழுத்துக்களால் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆடு மேய்க்கும் பெண்ணின் நிலையை எடுத்துக்காட்டிய வரிகளும், அவரோடு ஒப்பிடப்பட்ட சித்தியின் வாழ்க்கையும்... என்ன சொல்வது? இப்போது என் மனதிலும் அவர்கள் வாழத்தொடங்கிவிட்டார்கள். அதிர்வு மறையும் வரையிலும் வாழ்வார்கள்.
ReplyDeleteமனிதர்கள் பற்றிய எழுத்து வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைத் திறந்து காட்டுகிறது. பாண்டியனின் குற்றவுணர்வு, எந்தக் குறுகுறுப்புமற்று, குட்டியாட்டுக்கறி சுவைக்க விருப்பம் காட்டிய குடிகாரனுக்கு சற்றும் குறைவிலாத டெலிபோன், தன் இடத்தை தாரை வார்த்துவிட்ட அதிருப்தியை காட்டத் தெரியாமல் காட்டிய போஸ்ட் மாஸ்டர், தானே பேசிய மனிதர், மயிரளவும் மரியாதை தெரியாத துறைத்தலைவர்.... அப்பப்பா... எத்தனை மனிதர்கள்!
உடன் பயணிப்பது போலொரு உணர்வெழுந்து பதறவும், உதறவும் வைக்கிறது. அடுத்த அதிர்ச்சிக்கு மனத்தை தயார்படுத்த கணகாலம் தேவைப்படும் எனக்கு.