அவசர நிகழ்வு. எனவே சென்னைப் பயணம் வாடகைக் கார் எடுத்து. போன காரியத்தை முடித்துவிட்டு 30.05.2012 மதியத்திற்குமேல் சென்னையிலிருந்து கிளம்பி வருகையில் பாதி வழி வந்ததும் ஒரு விபத்து. கூல் ட்ரிங்ஸ் நிரப்பப்பட்ட பாட்டில்கள் ஏற்றப்பட்ட வண்டி வேறொரு வண்டியுடன் முகப்பில் மோதிக்கொள்ள நிலைதடுமாறி கவிழ்ந்துகிடக்க பாட்டில்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை. அந்தந்த வண்டிகளின் ஓட்டுநர்கள் அங்கேயிருந்தார்கள். எங்கோ போய்விட்டு வந்து ஆம்புலன்ஸ் வண்டியொன்று விபத்து நடந்த இடத்திற்கு சற்று தள்ளி நிறுத்தி அதிலிருந்து இறங்கி வந்தவர்கள் கைக்கு நான்கு பாட்டில்களாக இரண்டு கைகளிலும்,...அதேபோன்று ரோந்து போகும் ஜீப்பில் இருந்தவர்களுக்கு சில பாட்டில்கள் அள்ளிக்கொண்டு போனார்கள். இதிலென்ன இருக்கிறது என்று கேட்கலாம். நான் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்களும் அவர்களின் முதலாளிகளிடம் சொல்லப்போகும் இயலாமைப் பதில்களையும் அவற்றின் விளைவுகளையும் எண்ணிப் பார்க்கிறேன். எனவே ஒன்று மட்டுமே தோன்றியது. எரிவதில் பிடுங்கியமட்டும் ஆதாயம் என்றிருக்கிற சமுகத்தில் வாழத்தானே வேண்டியிருக்கிறது வந்து பிறந்துவிட்டபின் எதுவும் செய்யத் திராணியற்று.
அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு செல்லப்படும் சாலையோர ஓட்டல்களின் உணவுப் பண்டங்களையும் அவற்றின் கொள்ளை விலைகளையும் மறுபடியும் மறுபடியும் கவனிக்கவேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. இதனை அரசு கவனித்து ஆவனச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். பயணிக்கும் அத்தனைபேரும் மகிழ்ச்சியான நிகழ்விற்கெனப் பயணிப்பதில்லை. எனவே கையில் இருக்கும் பணத்தின் சூழலும் அப்படியே. அவர்கள் சென்று திரும்புவதற்குள் பசிக்கிற வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு பரிதவிக்கும் நிலையை அன்புகூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். இப்படியே அவர்கள் நடத்தும் கழிப்பறைக்கென வாங்கும் கட்டணத்தொகையையும் குறிப்பில் கொண்டுவரவேண்டும் நடவடிக்கைக்கு.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதைகள் மூன்று ...
மரத்தில் உள்ள பழங்களை
அணில்களுக்கு விட்டுவிடு,,,
செடியில் உள்ள பூக்களை
பட்டாம்பூச்சிகளுக்கு
விட்டுவிடு,,,
கிளையில் உள்ள இலைகளை
புழுக்களுக்கு விட்டுவிடு,,,
இப்படி விட்டுவிட்டதால்
கிடைக்கும் ஆனந்தத்தை
நீ சாப்பிடு,,,
(2)
பழைய டிரங்குப் பெட்டியை
எதற்கோ குடைந்தபோது
தட்டுப்பட்டது அந்த
சின்னஞ்சிறு பொட்டலம்,,,
உள்ளே காய்ந்து சுருண்ட
ரப்பர் குழாய் போல
ஏதோ ஒன்று
காரணமில்லாமல் வயிற்றைக்
கலக்கியது,,,
அப்பாவிடம் கேட்டேன்
சிரித்தபடி சொன்னார் நீ பிறந்தபோது
பிரசவம் பார்த்த
மருத்துவச்சி
கொடுத்த உன் தொப்பூழ்க் கொடிடா,,,
இடிபோன்ற சொற்களை
எளிதாக உச்சரித்துவிட்டார்
செத்துப்போன அம்மாவின்
சிறிய மிச்சம்...
கண்ணில் நீர்மல்க
எடுத்தேன் பார்த்தேன்
தொட்டேன் துவண்டேன்
மெல்ல நீவி
யாருக்கும் தெரியாமல்
அம்மா என்றேன்,,,
(3)
கல்லில் கவியெழுத
தவித்த சிற்பிக்குக்
கிடைத்த கருதான் யாளி,,,
,,,,,,,,,,,,,,
பிளந்த வாய்க்குள்
திணித்துவிட்டான்
பிரபஞ்ச ரகசியத்தை
,,,,,,,,,,,,,,,
காவல் மிருகமா
கடவுளின் நண்பனா?
பார் என் படைப்பை என
சிற்பியே பிரமனுக்கு
விடுத்த சவாலா?
ஒவ்வொரு கடவுளும்
சிற்பியின் கற்பனை
எனில்
ஒவ்வொரு யாளியும்
சிற்பியின் கர்ஜனை,,,
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பயணத்தில் நினைத்த கவிதை....
முடிந்தவரை
வேண்டி வைப்போம்...
ஒவ்வொரு இரவும்
உறங்கப்போவதற்குமுன்
நாம் நிம்மதியாய்
உறங்கும் இரவில்...
சாலைகளில் பல்வகை
வாகனங்களில் பயணிக்கும்
அவர்களின் துர்க்கமும்
நிம்மதியாய் கலையாதிருக்கட்டும்..
முடிந்தவரை
வேண்டி வைப்போம்...
ஒரு நாளேனும் விபத்தச்சில்லா
வெள்ளைத்தாளாய் செய்தித்தாள்
மலரட்டும்....
சொல்வது ஓயாது....
ஒவ்வொரு கடவுளும்
ReplyDeleteசிற்பியின் கற்பனை
எனில்
ஒவ்வொரு யாளியும்
சிற்பியின் கர்ஜனை,,,
கவிராயரின் கர்ஜனை அருமை.
எரிவதில் பிடுங்கியமட்டும் ஆதாயம் என்றிருக்கிற சமுகத்தில் வாழத்தான் வேண்டியிருக்கிறது.ஆம் இன்றைய வாழ்வின் யதார்த்தம்
ReplyDeleteஎரிவதில் பிடுங்கியமட்டும் ஆதாயம் என்பது எரியும் வீட்டின் உரிமையாளனுக்கல்லவா பொருந்தும். இங்கே அடுத்தவனை வயிறெரியச் செய்து பிடுங்கிச் செல்வது என்ன நியாயம்? இப்படிப்பட்ட மனிதர்களை நினைத்து மனம் கொதிக்கிறது. இவர்களுக்கிடையில் வாழ்ந்தேயாக வேண்டிய நிர்பந்தமே நிதர்சனமாய் உங்கள் வரிகளில்.
ReplyDeleteதஞ்சாவூர்க் கவிராயரின் கவிதைகளில் மனம் பறிகொடுத்தேன். இரண்டாவது கவிதை இன்னும் மனம் பிசைந்துகொண்டிருக்கிறது. பயணத்தில் உதயமான கவிதையின் கடைசிவரிகள் மனம் நெகிழ்த்திய ஆதங்கம். மனந்தொட்டப் பதிவுக்குப் பாராட்டுகள் ஹரணி சார்.
ஹரணி அவர்களே, பிரயாணத்தின்போது விபத்த்க்களைக் காண்கிறீர்கள் என்பது மட்டுமல்லாது மன உளைச்சல்களுக்கும் உள்ளாகிறீர்கள் என்பது தெரிகிறது. உடைந்த பாட்டில்களின் எண்ணிக்கை கூடுதலாகக் கணக்கில் எடுக்கப் படலாம். இழப்பு பெரிதாயிருக்கையில் இந்த பாட்டில்களும் இழப்பில் அடங்கும். என்னதான் சமாதானம் சொல்ல முயன்றாலும் மனம் வலிக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteயாளியின் உருவத்துக்கு இப்படியும் ஒரு பதில். கவிதைகள் எல்லாமே நன்று. எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆனந்தப் படுவது, கவிஞர்களுக்கே சாத்தியம். இரண்டாவது கவிதை நெகிழ வைக்கிறது.
தஞ்சாவூர் கவிராயரின் கவிதைகள் அத்தனையும் அருமையாக உள்ளன. மிகவும் ரஸித்தேன்.
ReplyDeleteதங்கள் பயண அனுபவங்களும் நல்ல பகிர்வு தான்.
பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
சொல்லி சொல்லி மாய்தல்,,,!!!!!!!??/
ReplyDelete1. இப்படித்தான் 'தானே' புயலடித்தபோது பக்கத்து வீட்டில் நாலைந்து தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்த வேதனையில் அவ்வீட்டினர் வெளியே வராமல் தவித்திருக்க (வாசலடைத்து மாமரக் கிளைகள்) பக்கத்துத் தெருவிலிருந்து சாக்கு, சைக்கிள் சகிதம் வந்தவர்கள் புயல் முற்றிலும் ஓயும் முன்பே தெருவில் சிதறிக்கிடந்த காய்களை பொறுக்கியெடுத்து சென்றனர். அப்படியென்னடா சாமி அவசரம்... அடுத்தவன் உடைமைக்கு! தெருவில் கிடப்பதெல்லாம் பொது சொத்தாகிவிடுகிறது. நமக்கு பாத்தியதையா, எடுத்தால் உடம்பில் ஒட்டுமா என்ற சிந்தனையெல்லாம் இல்லை.
ReplyDelete2. கவிராயர் கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்தமானதையே தாங்களும் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி. பெயர்ப்பொருத்தம் அவருக்கு பிரமாதம்!
3. பயணம் செல்லாத நாள்களின் இரவுகளிலும் விபத்தின்றி நாளேடுகள் வர வேண்டுதல் நெகிழ்ச்சி. சர்வ மதத்தினரும் இதைப் பொதுப் பிரார்த்தனையாக்கலாம் தினசரி!