Sunday, June 3, 2012

குட்டி....சுட்டி.....பெட்டிக் கதைகள்


     
                ஒன்று

                      பெரிய வேப்ப மரம் அது. பருத்த அடிப்பகுதி அதன் வயதையும் முதுமையையும் காட்டிக்கொண்டிருந்தது. அந்த மரத்தில் எப்போதும் சில காகங்கள்...சில பச்சைக்கிளிகள்...இரண்டு ஆந்தைகள்...நாலைந்து தவிட்டுக் குருவிகள்.. எப்போதாவது குயில்கள் அமர்ந்து கதைகள் பேசும் அதனதன் மொழியில்.

                     இந்த மரத்தோடு எனக்குத்தான் அதிக உறவு இதன் நிறமும் எனது நிறமும் ஒன்று என்று பச்சைக்கிளியொன்று கூறியது.

                     நீங்கள் வருவதற்கு முன் இதனோடு எனக்குத்தான் அறிமுகம். இரண்டுமுறை கூடுகட்டி எனது பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறேன் என்றது காகம் பதிலுக்கு.

                      நல்ல காற்றும் நல்ல இளைப்பாறலும் இங்குக் கிடைக்கிறது, அனுபவிக்கவேண்டும் என்றன தவிட்டுக்குருவிகள்.

                      அமைதியாய் இருந்துவிட்ட குயில் சொன்னது... உங்களால் இந்த மரத்திற்கு என்ன பயன்?  நான் இங்கு அமரும்போதெல்லாம் இசைக்கிறேன். அதனை காற்று ஆமோதிக்கிறது. இந்த மரம் தலையசைக்கிறது.


                      தன் பிள்ளைகளின் பேச்சை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தது அந்த வேப்பமரம்.

                           ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


                  இரண்டு


                   எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

                     ஏய்.. என்னது இன்னமும் விளையாடிக்கிட்டேயிருக்கே,, எடுத்துவை ..
                     முடியாது,,,போ,,,

                     எதிர்த்தா பேசறே நீ?

                     அப்பாக்கிட்டே நீ  பேசறே,,,

                      அப்பா சொன்னார்...

                      அம்முக்குட்டி,, அப்படியெல்லாம் எதிர்த்துப் பேசக்கூடாது,,

                      தாத்தாக் கிட்டே நீ பேசறே?

                      அமைதியானது வீடு,,,

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

               மூன்று

                                 
                                    மூன்று அக்காக்கள் இரண்டு அண்ணன்கள் சேர்ந்து சொன்னார்கள்.. இந்த சொத்தில் எதுவும் எங்களுக்கு வேண்டாம். நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். எல்லாத்தையும் தம்பிக்கிட்ட கொடுத்துடலாம், எழுதி கையெழுத்துப் போட்டுடறோம்..

                                    ஒரே தம்பி வேலையில்லாதவன்.  நிரந்தர வருமானம் இல்லாதவன். அவனுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்தார்கள்.

                                    தம்பி சொன்னான்..

                                    உங்க அன்பிற்கு நான் கொடுத்து வைத்தவன், எல்லோரும் எடுத்த முடிவு எனக்கு உறுத்துது,  நான் ஒருத்தன்தான் கையாலாகாதவன்னு உணர்த்துது, வேண்டாம், எனக்குரிய பங்கை மட்டும் கொடுங்க, அதை வச்சி நான் முன்னேறிக்கிறேன், என்னால முடியும், நம்பிக்கை வந்திருக்கு,


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

             நான்கு

                               எனக்கு இன்னும் வாழ்க்கையில் பிடிப்பு வரவில்லை குருவே என்றான் ஒருவன்,

                             உனக்கு என்ன வயதாகிறது? என்றார் குரு,

                             என் கேள்விக்கும் வயதிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
என்றான்,

                             உனக்கு கடைசிவரை பிடிப்பே வராது என்றார் குரு?

                             எதை வச்சு சொல்றீங்க குருவே என்றான் அதிர்வுடன்,

                             குரு அமைதியாக சொன்னார்,

                             உனக்கு சாதாரண கேள்விகளையே கேட்கத் தெரியவில்லை,


))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


           ஐந்து


                                   ரயிலில் சரியான கூட்டம்,

                                   ஓடி வந்து உட்கார்ந்துவிட்ட ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணிடம் இன்னொரு குழந்தையுடன் இருந்த பெண் சண்டையிட்டாள்,

                                   அறிவு கெட்டவளே,,, நான்தான் முதல்ல சீட்டு போட்டேன், கைக்குழந்தை வச்சிருக்கறது உன் அவிஞ்ச கண்ணுக்குத் தெரியலியா?

                                   மரியாதையா பேசு நாயே,,, என் கையில இருக்கறது என்ன இரும்பா? இது குழந்தையா உன் பொட்டைக் கண்ணுக்கு தெரியலே
என்றாள்,,

                                    சண்டை தொடர்ந்துகொண்டிருந்தது,

                                   இருவரிடமும் இருந்த குழந்தைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு பரஸ்பரமான ஒரு சிரிப்பைப் பரிமாறத் தொடங்கியிருந்தன,



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







               




                 


           

12 comments:

  1. சுவையான,எளிமையான கதைகள்! ரசித்தேன் ஹரணி சார்!

    ReplyDelete
  2. //நான் இங்கு அமரும்போதெல்லாம் இசைக்கிறேன். அதனை காற்று ஆமோதிக்கிறது. இந்த மரம் தலையசைக்கிறது.//

    குயில் எழுதிய கவிதை அனைத்திலும் மனதுக்கு நெருக்கமாக.

    ReplyDelete
  3. //இருவரிடமும் இருந்த குழந்தைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு பரஸ்பரமான ஒரு சிரிப்பைப் பரிமாறத் தொடங்கியிருந்தன,//

    முத்தாய்ப்பான கவிதையாய் மனம் கவர்ந்தது.. அருமை..

    ReplyDelete
  4. அதி அற்புதமான சிறு கதைகள் காப்ஸ்யுல் வடிவிலே !

    ReplyDelete
  5. நல்ல கதைகள். அனைத்தையும் ரசித்தேன்

    ReplyDelete
  6. குட்டி சுட்டி பெட்டி கதைகள் என் பேரக் குழந்தைகளுக்குச் சொல்ல. நன்றி.

    ReplyDelete
  7. கதைகள் அனைத்தும் அருமை.
    வேப்ப மரத்தின் இறுதிவரிகள் - கவிதை. .

    ReplyDelete
  8. We enjoyed your stories, my mother is continuously reading your books. Each article/story highlights day to day life in simple and lovely tamil. She will write her detailed comments separately.

    ReplyDelete
  9. your stories are very instering

    ReplyDelete
  10. your stories are very instering

    ReplyDelete