Monday, June 11, 2012

இளமையைத் துரத்துகிறேன்...



             ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகவே விடிகிறது, ஏதாவது வேலைகள் இருக்கும், பரபரவென்று பார்த்து முடித்தால் அப்புறம் என்ன வேலை என்று யோசித்துக்கிடப்பதில் நேரம் நகரும், சில சமயம் இருக்கிற வேலைகளை முடிக்காமல் நாள் கழியும். நிறைய வேலைகள் இருக்கும், இன்றைக்கு எதுவும் செய்யக்கூடாது என்று பேசாமல் சாப்பிட்டு சாப்பிட்டு துர்ங்கவும் விழித்திருக்கும் நேரம் தொலைக்காட்சியைத் திறந்து எதையாவது சாப்பிடுவதுமாக பொழுதைக் கழிக்கத் தோணும், அப்படித்தான் எனக்கு சில நாட்கள் வெறுமையாகக் கழியும், அப்போதெல்லாம் நான் இளமையில் நடந்த சில நினைவுகளை நினைத்துப்பார்ப்பேன், அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இளமையைத் துரத்துகிறேன்,


        1,   நான் அக்கா மூன்றுபேர்கள் தம்பி அம்மா அப்பா அப்புறம் பெரியப்பா
              பையன் (எங்கள் வீட்டில் தங்கிப் படித்தார்) சில ஆயாக்கள் எனக் கூட்டம்
              இருக்கும், அம்மா 100 பால் வாங்கி இந்திரஜாலம் போல காபி போடுவாள்,
             கிட்டத்தட்ட கலர் வெந்நீர் அது, பாகைக் கரைத்ததுபோல அது இருக்கும்,
             சூடான பானகம் அது, இருந்தாலும் அந்த காபி ஒவ்வொரு காலைப்
             பொழுதிலும் குடிக்க நாக்கு ஏங்கிக் கிடக்கும், பெரும்பாலும் அரை டம்ளர்
             காபிதான் கிடைக்கும், தம்பிக்கு அது போதாது என்று எப்போதும் அந்த
            அரை டம்ளர் காபியில் பச்சை தண்ணீரை ஊற்றி டம்ளர் வழியவழியக்
            குடிப்பான், ஒருமுறை தர்த்தாவின் திதி, அம்மா மெனக்கெட்டு பசு மாட்டுக்
            கோமியம் வாங்கி வைத்திருந்தாள், வழக்கம்போலவே தம்பி வந்து
            டம்ளர் நிறைய இருப்பதைப் பார்த்தவுடன் கடகடவென்று எடுத்துக்
            குடித்துவிட்டான்,  அம்மாவிடம் அவன் கேட்ட கேள்வி இதுதான் என்னது
             காபி இன்னிக்கு உப்பு கரிக்குது?
             இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்,

       2,  நகராட்சிப் பள்ளியில் படித்த நேரம் அது, ஐந்தாம் வகுப்பு படித்துக்
     கொண்டிருந்தேன், எங்கள் தெருவில் இருந்த ஒரு பையன் அவன் நண்பன்
     பள்ளியிறுதித் தேர்வு படித்துக்கொண்டிருந்தார்கள், அவர்கள் வகுப்பில்
    இருந்த ஒரு ஐயர் வீட்டுப்பெண் அழகாக இருப்பாள், பள்ளிக்கூடத்திற்கருகில அவள் வீடு, ஒரு தடவை பள்ளி விட்டதும் என்னிடம்
அந்த இரண்டுபேரும் ஒரு கடிதத்தைக் கொடுத்து அவள் வீட்டுத் திண்ணையில் போட்டுவிடு என்றார்கள், எனக்கு விவரம் தெரியாததாலும் போடாவிட்டால் அடிப்பதாகவும் பயமுறுத்தியதால் கடிதத்தை வாங்கிக்கொண்டு போடச் சென்றேன், அந்த வீட்டுத் திண்ணையில் அப்போது ஒரு டைலர் கடை வைத்திருந்தார், நான் திண்ணையில் கடிதத்தைப் போடச் சென்றபோது என்னடா அது? என்றார் அதட்டலாக, நான் பயந்துபோய் இந்தப் பேப்பரை இந்த வீட்டுத் திண்ணையில் அந்த அண்ணணுங்க போடச்சொன்னாங்க என்றேன்,  சரிஎன்கிட்ட கொடு என்றார், கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்,  மறுநாள் காலையில் வத்சலா டீச்சர் (நல்ல குண்டு உருவம், அகலக் கண்ணாடி, எப்போதும் கடுகடுன்னு,, அடிக்கடி பிரம்பால அடிப்பார்கள்) வந்து டேய் எழுந்திருடா என்று என் காதைப் பிடித்து திருகியபடியே இழுத்துக்கொண்டு தலையாசிரியை அறைக்கு அழைத்துப்போனார்கள், அங்கே போய் பார்த்தால் ஐயர்,,, டைலர்,,, அந்த இரண்டுபேரும்,, என்னடா பண்ணே? என்றார் தலையாசிரியை,  இவங்கதான் போடச்சொன்னாங்க, போட்டேன் என்றேன், சரி போ என்று முதுகில் ஒரு அடி கொடுத்து விரட்டிவிட்டார்கள், அன்றைக்கு அந்தப் பள்ளியை விட்டு பயந்து வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன்,

         3,  இரவு ஏழு மணிக்கெல்லாம் படுக்கைப் போடப்பட்டு எல்லோரும் படுத்துவிடுவார்கள், இருந்தாலும் நானும் தம்பியும் கண்ணை மூடிக்கொண்டு துர்ங்குவதுபோல் படுத்திருப்போம். ஏனென்றால் என்னுடைய அப்பா சாப்பிடும் நேரத்திற்காகக் காத்திருப்போம். அப்பா வந்து சாப்பிட உட்கார்ந்து சாதத்தில் சாம்பாரை ஊற்றி நன்றாகப் பிசைந்தவுடன் அம்மாவிடம் கேட்பார் பசங்க துர்ஙகிட்டாங்களா என்று, அதற்கெனக் காத்திருந்ததுபோல எழுந்துபோய் அப்பாவிடம் நின்றுவிடுவோம், அப்பா தன் உள்ளங்கையில் பெரிதாக சாதத்தை உருட்டி உருண்டையாக வைத்து அதன் தலைமேல் கிரிடம் வைத்ததுபோல உருளைக்கிழங்கை வைத்து தருவார், ஆளுக்கொரு உருண்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு படுப்போம், இது தினமும் நடக்கும், முதலில் அப்பா என் கையில் வைப்பார் நான் தின்றுவிடக்கூடாது, அடுத்த உருண்டையை உருட்டி தம்பி கையில் வைக்கும்வரை காத்திருககவேண்டும், இரண்டுபேர் கையிலும் வைத்தபின்தான் ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்,
அப்பா இறந்துபோய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன, இன்று என் பிள்ளைக்கும் பெண்ணுக்கு உருண்டை உருட்டும்போது அப்பாவின் உருண்டைகள்தான் கண்முன் உருள்கின்றன கண்ணீரைப்போல.

           4. நான் படித்த நகராட்சிப்பள்ளிக்கு எதிரில்தான் என் அப்பா வேலை பார்த்த மருத்துவமனை இருந்தது, அடிக்கடி அப்பா ஹோட்டலுக்கு அழைத்துப்போய் ரவா தோசை வாங்கித்தருவார், எனக்கு பிடித்தமான உணவு அது, எனவே அந்த வயதில் பள்ளிக்கூடத்தை விட்டு ரோட்டைக் கடந்து மருத்துவமனை கேட் வரை வந்து உள்ளே போக வழிதெரியாமல் அந்த பெரிய கேட்டைப் பிடித்துக்கொண்டு அப்பா எப்படியும் வருவார் தோசை வாங்கித் தருவார் என்ற நினைப்பில் நின்று அப்படியே துர்ங்கியும் போய்விட்டேன், யாரோ போய் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொல்ல அப்பா பதறிப்போய்ஓடிவந்து என்னைத் துர்க்கிக்கொண்டு வீட்டுக்குப்போனார். மறக்காமல் ரவா தோசையையும் வாங்கிகொடுத்து, ஆனால் அம்மாவிடம் அன்றைக்கு தின்ற ரவாதோசைகள் அதிகம், அடி பின்னியெடுததுவிட்டார்கள்,
அப்பா இறக்கும் எங்கள் ஐந்துபேரையும் விளையாட்டுக்குக்கூட கைநீட்டி அடித்ததில்லைஎன்பதுதான் ரவாதோசை சாப்பிடும் தருணங்களில் எல்லாம் நினைவுக்குவருகிறது, என்னுடைய பையன் பெண்ணின் பேவரைடடும் இப்போது தோசைதான்,

            5,  நான் கல்லுர்ரியில் சேர்ந்த நேரம் அது, பியுசி படித்துக்கொண்டிருந்தேன், திருச்சிபொன்மலையில் என்னுடைய பெரியப்பா வீடு, விடுமுறைக்கு அங்குப் போயிருந்தோம், நானும் என்னுடைய சின்ன அண்ணனும் ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கக் கிளம்பினோம், காட்டூரிலிருந்து அரியமங்கலம் ரோட்டில் சைக்கிளில் வேகமாக அண்ணன் மிதிக்க நான் பின்கேரியரில் உட்கார்ந்துபோனோம், அப்போது ரோட்டை பாதி வெட்டி  வேலை பார்த்துக் கொண்டிருந்தது தெரியாது, எனவே பெரிய பள்ளம், அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதன் ஓரத்தில் சதுரமான பெரிய கருங்கற்களை சின்ன கைப்பிடிசுவர் போல அடுக்கியிருந்தார்கள், இது இருட்டில் தெரியவில்லை. வேகமாக போய் அந்த சுவற்றில் அடித்து சைக்கிள் ஒருபுறமும் நாங்கள் ஒருபுறமும் விழுந்தோம், சைக்கிள் முன் சக்கரம் கண்ணகி சிலம்புபோல வளைந்துவிட்டது, நாங்கள் எழுந்து நின்றிருந்தோம், லேசான சிராய்ப்பு, அப்போது ஒருவன் டூவீலரில் நிறைய பால்கேன்களுடன் நாங்கள் விழுந்த திசையிலேயே வந்தான்,  எங்களுக்கு அவனுக்கு எச்சரிக்கை ச்யவேண்டும் என்று தெரியவில்லை, அவனும் வந்து மோதி விழட்டும் என்று காத்திருந்தோம், அந்தவயதில் அது நகைச்சுவையாகவே பட்டதே தவிர விபரீதம் புரியவில்லை,  நினைத்ததுபோல அவனும் விழுந்து பால்கேன்கள் சிதறின, எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, அவன் எழுந்துஎங்களைப் பார்த்து விட்ட கெட்ட வார்த்தைகளை இன்றைக்கும் மறக்கமுடியாது, அந்த உடைந்த சைக்கிளை அங்கேயே ஒரு கடையில் போட்டுவிட்டு தொடர்ந்து சினிமா பார்க்கப்போனோம், அந்தப் படம்  பாலைவனச் சிங்கம் என்றழைக்கப்படும் ஓமர் முக்தார்,

                       சந்திக்கலாம் இன்னொரு பகிர்வில் இளமையைத் துரத்தி,

           

11 comments:

  1. வெகு வெகு சுவாரஸ்யம்
    சிறுவர்களாய் இருக்கையில் எதிர்காலக் கனவுகளும்
    பெரியவர்களானதும் இளமைக்கால நினைவுகளும்
    நிச்சயம் பரவசமூட்டுபவையே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் இளமை அனுபவங்கள் சுவாரசியமாகவே உள்ளது. தொடருங்கள்

    ReplyDelete
  3. மறக்கவோ தவிர்க்கவோ இயலாத மலரும் நினைவுகள் !

    ReplyDelete
  4. அப்பா விட்டுச் சென்ற ஆழமான நினைவுகள்.தொடரும் சங்கிலித் தொடர்.தங்கள் பால்ய கால நினைவுகள்.படித்து நெகிழ்ந்தேன் .

    ReplyDelete
  5. அம்மா 100 பால் வாங்கி இந்திரஜாலம் போல காபி போடுவாள்,
    கிட்டத்தட்ட கலர் வெந்நீர் அது, பாகைக் கரைத்ததுபோல அது இருக்கும்,
    சூடான பானகம் அது, இருந்தாலும் அந்த காபி ஒவ்வொரு காலைப்
    பொழுதிலும் குடிக்க நாக்கு ஏங்கிக் கிடக்கும்

    அவரவர் அனுபவங்களில் எத்தனை நெகிழ்ச்சிகள்.. சில பொதுவாய்.. சில் பிரத்தியேகமாய்.. வாழ்க்கை அனுபவக்கண்ணிகளில் கட்டுண்டு கிடக்கிறது அதன் போக்கில் ..

    ReplyDelete
  6. ஹரணி ஐயா, இளமையைத் துறத்தவில்லை நீங்கள். அசை போடுகிறீர்கள்.அனுபவங்கள் வாழ்க்கையை செதுக்க உதவும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ஹரணி சார்! மிக அழகாய் அந்த காலத்தை நினைவு படுத்திப் பார்த்திருக்கிறீர்கள். இனிய தருணங்கள். அருமை நண்பரே!

    ReplyDelete
  8. சுக‌மோ துக்க‌மோ ந‌ட்புட‌ன் ப‌கிர்ந்து கொள்ளும்போதுதான் எத்துணை உன்ன‌த‌மாகிவிடுகிற‌து! உங்க‌ இள‌மைக்கால‌ நினைவுக‌ள் ர‌சித்து சிரித்து க‌சிந்து க‌ல‌க‌ல‌ப்பாக்கி எங்க‌ளையும் அந்த‌க்கால‌த்தில் அமிழ்த்தி விட்ட‌து. த‌ம்பி கோமிய‌த்தை த‌வ‌றுத‌லாக‌ குடித்த‌தை ப‌டித்த‌வுட‌ன் 'ப‌க்' என‌ சிரித்து, அப்பா சாத‌ம் உருட்டித் த‌ந்த‌தை ப‌டித்துக் க‌சிந்து, அடுத்து வ‌ருப‌வ‌ர் விழுவ‌தைப் பார்க்க‌ வ‌லியோடு காத்திருந்த‌ பால்ய‌த்தை ர‌சித்து உள‌ம் நிறைக்கிற‌து ப‌திவு!

    ReplyDelete
  9. அன்புள்ள ஹரணி சார், தாங்கள் குறிப்பிட்டுள்ள பல நிகழ்வுகள் என்னையும் தாக்கிவிட்டன. பானகக் காப்பி எங்கள் அம்மாச்சியின் வீட்டில் மட்டுமே கிடைக்கும் அதிசயக் காப்பி. அப்பாவின் கைபட்டுப் பிசைந்த தயிர்சாதத்துக்கு ருசி அதிகம் என்று சொல்லி அப்பா சாப்பிடும்போதெல்லாம் பக்கத்திலிருந்து நானும் தம்பியும் கவளம் கவளமாய் உண்ட அனுபவம். ரவாதோசைக்கான டிமாண்ட் இன்னும் மறையவில்லை. போனவாரம் அப்பாவுக்கு போன் செய்தபோது, பேரப்பிள்ளைகளுக்கு ரவாதோசை வாங்கவந்திருப்பதாக சொன்னார்.

    இன்னும் துரத்துங்கள் இளமைக்காலத்தை. கூடவே துரத்தி ரசிக்கிறோம் நாங்களும்.

    ReplyDelete
  10. தொடர்ந்து நினைவுகளைப் பதியுங்கள். வாழ்க்கை வரலாறாக மிளிரும்.

    மு.இளங்கோவன்,
    புதுச்சேரி,இந்தியா

    ReplyDelete
  11. இரண்டு நாட்களுக்கு முன்னரே ஒரு நீண்ட பின்னூட்டம் எழுதினேன். இடையூறுகளினால் இட முடியாது போயிற்று.

    என் தந்தையைப் பற்றிய நினைவுகளைக் கிளறிச் செல்லுகிறீர்கள்.

    ReplyDelete