உறங்குகிற இரவில் பாதியைத்தான்
உறக்கத்திற்குப் பயன்படுத்துகிறேன்...
மீதியைப் பகலின் செலவுகளுக்கான
நியாயங்களுக்குப் பதிலீடு செய்துவிடுகிறேன்..
அப்போது கசடுகளைப்போல
சில தேங்கிவிடுகின்றன...
ஒரு நாளினைச் சான்று காட்டலாம்...
இன்றைக்கு
கோயிலுக்குள் வேண்டுதலைப்போல பதினெட்டு
விளக்குகளை அந்தப் பெண் ஏற்றத் தொடங்கினாள்..
சுற்றுப்பிரகாரத்தின் ஒருபக்கம் மட்டும் திறந்திருந்த
மேற்கூரையின் வழியாக குதித்தோடும் காற்று
அந்த விளக்குகளை ஏற்ற அனுமதிக்கவில்லை..
தடுமாறுகிறாளே என்று அருகில் போனால்
வேண்டாம் போங்க.. இது வேண்டுதல்.. என்றாள்..
ஒரு நிமிடமாவது அந்த பதினெட்டு விளக்குகளும்
அணையாதிருந்து அவள் அமைதியாக வேண்டுகோளை
நிறைவேற்றியிருப்பாளா?
நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த மாடு
முட்டிவிடுமோ என்று சாக்கடையோரம் ஒதுங்கிய
பெரியவரின் கைத்தடி சாக்கடையில் ஊன்றிவிட
விழுந்துவிட்டார் சற்று அதிகமான முனகலுடன்...
ஓடிப்போய் துர்க்கிவிட்டாலும்.. தடுமாறிய வலி
அவர் வாயின் காதில் கேட்காத முனகல் சொற்களாய்
விழுந்துகொண்டேயிருந்தது...
இன்றைக்கு ஆறுமுறை 108 ன் ஒலிகள்
மனது அதிர்ந்துபோனது...ஒவ்வொரு முறையும் 108
கடக்கும்போதும் இறைவா அந்த உயிரைக் காப்பாற்று என்று..
காப்பாற்றுகிறவன்தான்.. 108 ஐயும் இயக்குகிறான் என்று
தெரிந்திருந்தும்...
முதல்நாள் தலையில் சூடியிருந்து சடையிலிருந்து
உதிர்த்து சிதறிக்கிடக்கும் மல்லிகைப் பூக்களைப்போல
வானத்தில் நட்சத்திரங்கள்.. இரவு வானம் இளமையானது...
டீக்கடையில் நான்குமுறை.... பேப்பர் கடையில் 5 நிமிடங்கள்
பெட்ரோல் பங்கில் 20 நிமிடங்கள்...மகளைக் கொடுமைப்படுத்தும்
மருமகன் குறித்து பூக்கடை மாதவன் புகாருக்குக் காதும் மனதும்
கொடுத்தது 42 நிமிடங்கள்...மளிகைக்கடை குமாரிடம் கொஞ்சம்..
கூரியர் செராக்ஸ் கடையில் ரசீது எழுதும் நேரங்கள்...
தொ(ல்) லைப்பேசியில்... அப்புறம் கைப்பேசியில்...
பரபரப்பில்லாமல் சில நேரங்கள் பரபரப்பில் பல நேரங்கள்...
எல்லாம் முடித்து உடம்பு அசந்து கசகசத்து.. ஒரு குளியலும்
தளர்வான் இரவுணவும் முடித்தபின் என்னைக் கிடத்து என்று
கெஞ்சும் உடலை சமாதானப்படுத்தி...
உறக்கம் கண்களை அழுத்துவதற்கு முன்னர் ஒரு கேள்வி
பாம்பு படமெடுத்து நிற்கிறது... என்ன நடந்தது இன்றைய நாளில்..
அமைதியாக இந்தக் கவிதை முட்டையை உடைத்துவிட்டு
கண்களை மூடிக்கொள்கிறேன் இன்றைக்குக் கெட்ட கனவு
வருமா.. நல்ல கனவு வருமா... யார் வருவார் காப்பாற்ற?
எப்படித் தப்பிப்போம்...
வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கிடையில் எப்போதும்
போல தவமிருக்கும் ஒளிர்ந்த நிலவு...
ஒரு நாளின் சாதாரண நிகழ்வுகளை அசாதாரணமாகவும் அழகாகவும் பட்டியலிட்டு சுவையாக எழுதியுள்ளீர்கள். மிக்வும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள், ஐயா. அன்புடன் vgk
ReplyDeleteஒவ்வொரு நாளும் நம்மை இடறிச் செல்லும் பலவற்றின் மாதிரிப்பட்டியலொன்று கவிதையாய் விரிய, நிர்மலமாகும் மனசு புத்துயிர்த்து எழட்டும்; மறுநாளின் நூதன அனுபவங்களுக்குத் தயாராய்.
ReplyDeleteஆஹா... ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை அழகாக கவிதை வடிவில்.... அருமை... சார். Blogger-Dyanmic views நல்லா இருக்கு ...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteDynamic view மிக நன்றாக உள்ளது.
ReplyDeleteநாளும் நடக்கும் நிகழ்ச்சிகளே கவிதையாக....
ReplyDeleteஅருமை..
அருமை :)
ReplyDelete