Wednesday, July 3, 2013

நத்தையோட்டுத்தண்ணீர் ...... விமர்சனங்கள்



       நத்தையோட்டுத் தண்ணீர் என்ற என் புத்தகத்திற்கு இன்றைய 03.07.2013 தினமலரில் விமர்சனம் வந்துள்ளது.

               வாழ்க்கை அனுபவங்களை நிதானமாக அசைபோடுவது ஒருவித சுகம்.  இந்த நுர்லைப் படிப்பவர்கள், அந்த சுகத்தில் மூழ்கித் திளைக்கலாம். இந்தக் கட்டுரைத் தொகுப்பில். வாசித்தல். சுவாசித்தல். நட்பென்று வைக்கப்படும். வழிகாட்டிகள். சந்தர்ப்பவாதிகள். இளம்பருவமும் மனவெளி விளையாட்டுக்களும். எனது ஆசிரியர்கள் உட்பட 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமையான அனுபவங்களை மையமாக்கி கவித்துவமான நடையில் கட்டுரைகளை எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.

              நுர்லில் இருந்து சில இனிய துளிகள் : வாசிப்பதால்தான், பலவற்றை
மறந்து இன்னும் மிச்சம் இருக்கிற வாழ்வை வாழ நம்பிக்கை கொள்கிறோம்;
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு திருத்தம் பெறாத யோகா ஒளிந்து கிடக்கிறது; ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது, வழிகாட்டலுக்கு;
நீதிபோதனை வகுப்பு நீக்கப்பட்டதால், நீர்த்துப்போனது வாழக்கை.

                                                                                                              - பிரபா.

(நன்றி / தினமலர் / 03.07.2013)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நத்தையோட்டுத் தண்ணீருக்கு கரந்தை திரு ஜெயக்குமார் அவர்கள் எழுதிய விமர்சனம் பின்வருமாறு.


ஹரணியின்

நத்தையோட்டுத் தண்ணீர்

     இன்று (27.6.2013)  வியாழக் கிழமை காலை 11.30 மணியளவில், ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தேன். ஜெயக்குமார். குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே ஹரணிவாருங்கள் வாருங்கள், அமருங்கள் என மகிழ்வோடு வரவேற்றேன். ஒரு நிமிடம் வாருங்கள் என வெளியே அழைத்துச் சென்றார். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து, நூலொன்றினை எடுத்து வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.


படிப்பை அறிவியலில் தொடங்கி, ஆய்வுப் படிப்பைத் தமிழில முடித்தவர்.

     தமிழை நேசிப்பவர்கள் பலருண்டு. ஆனால் இவரோ தமிழை சுவாசிப்பவர்.
வாசிக்காத நாட்களெல்லாம், சுவாசிக்காத நாட்கள்
என்னும் உயரிய, உன்னத கொள்கையினை உடைவர்.

     ஹரணி அவர்களின் இல்லம் இருப்பதோ கரந்தையில். பணியாற்றுவதோ அண்ணாமலையில். நாள்தோறும் 200 கி.மீ பயணிப்பவர். பேரூந்தில் பயணித்த நாட்களை நெஞ்சில் நிறுத்தி பேரூந்து என்னும் புதினத்தைப் படைத்தவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிப்பவர். தொடர் வண்டிப் பயணத்தில், நாள்தோறும் குறைந்த்து 200 பக்கங்களையாவது படிப்பவர். இப்பழக்கத்தினை இன்று வரையில் தொடர்பவர். விரைவில் தொடர் வண்டி என்னும் புதினத்தைப் படைத்தாலும் படைப்பார்.

      படைப்பிலக்கியத் துறையில் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, ஆங்கிலக் கவிதைகள், பெண்ணியம்என்னும் நிலைகளில், தனது படைப்புத் திறனை வெளிப்படுத்திவரும், பன்முக ஆளுமை உடையவர்.

நத்தையோட்டுத் தண்ணீர்
ஹரணி அவர்களின் கைவண்ணத்தில ஓர் புதிய படைப்பு. புதுமைப் படைப்பு.

     நூலின் மூன்றாவது பக்கத்திலேயே, நம்மை முழுவதுமாய் நூலுக்குள் ஈர்த்து விடுகிறார்.

       சூழல்களாலும் ...
       இயலாமையாலும் ...
       மனம் புழுங்கும்
       சத்திய
       உள்ளங்களுக்கு....
       இச்சிறு நூல்

     14 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நம்மை பெருமூச்சு விட வைக்கும். ஆம் உண்மைதான்.

    நல்ல வாழ்க்கை வாழ்வது என்பது
    நல்ல புத்தகங்களை வாசிப்பது போல

    வாசிப்பு என்பது ஒரு கலை
    வாசிப்பு என்பது ஒரு தவம்
    வாசிப்பு என்பது ஒரு பரவசம்
    வாசிப்பு என்பது ஓர் உணர்வு
என தொடர்ந்து எழுதி, நம்மையும் அந்தச் சுழலுக்குள் இழுத்து விடுகிறார்.

நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது
என்ற ஒரு வரியே, இவர் அனுபவம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

     கடிதம் ஓர் வாழ்வின் உன்னத அடையாளம்
     கடிதம் எழுதுதல் ஒரு கலை
     நாம் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்றல்ல
     இதுதான் ஒன்று
சம்மட்டி கொண்டு நம்மைத் தாக்குகின்றன் இவரின் எழுத்துக்கள். வளர்ச்சி என்னும் பெயரில் நாம் இழந்தது அதிகம். எதை எதை இழந்தோம் என்பதையே அறியாமல், உணராமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     ஓடி பிடித்து விளையாடல்
     சடுகுடு
     திருடன் போலிஸ்
     கிச்சு கிச்சு தாம்பாளம்
     சில்லு செதுக்கல்
     கிட்டிப் புள் விளையாட்டு
     பளிங்கு உருட்டல்
இப்படி பல விளையாட்டுக்களை, இருள் சூழும் வரை, தெருவிலே நின்று விளையாடினோமே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று நம் பிள்ளைகளுக்கு, இவ்விளையாட்டுக்களின் பெயராவது தெரியுமா?

நாம் குழந்தைகளை ஏமாற்றுகிறோம்
நாம் குழந்தைகளுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை
தேவையில்லை என நாமாகவே தன்னிச்சையான முடிவு எடுக்கிறோம்
என நம்மைச் சாடுகிறார். உண்மை சுடுகிறது.

     கூட்டுக் குடும்பம் என்கிற அற்புதத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே. அது சுக்கு சுக்கலாகிவிட்டதே
என இவர் வருந்துவதைப் படிக்கும் பொழுது, நமது மனதில் வலி, மெல்ல மெல்ல கூடுகிறது.

     அவர்கள் எங்கே இருக்கிறார்கள்... எப்படியிருக்கிறார்கள்... இருக்கிறார்களா? புகழுடம்பு எய்திவிட்டார்களா? தெரியாது. ஆனாலும அவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு பார்த்த்து போலவே மனத்தில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அழியாப் பிம்பமாய், அதே ஆசிரியர்களாக. மிடுக்குடன்
என ஹரணி அவர்கள், தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூற, கூற, நாமும் நமது இளமைக் கால, பள்ளிக் கால நினைவலைகளில் மூழ்கி மூச்சுத் திணறுவதை உணர முடிகிறது.

நத்தையோட்டுத் தண்ணீர்
இந்த நத்தையோட்டில் தேங்கியிருப்பது வெறும் தண்ணீரல்ல. தெளிந்த அனுபவம். அந்த அனுபவம் புகட்டிய பாடம். அந்தப் பாடத்தால் விளைந்த உயர் ஞானம்.

     ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம்.
வாருங்கள். வாசித்துப் பாருங்கள்.

ஹரணி அவர்களின்
அலைபேசி 9442398953
மின்னஞ்சல் uthraperumal@gmail.com

நூல் வெளியீடு
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002






5 comments:

  1. சூழல்களாலும் ...
    இயலாமையாலும் ...
    மனம் புழுங்கும்
    சத்திய
    உள்ளங்களுக்கு....
    இச்சிறு நூல்

    விமர்சனம் சிறப்பு..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் கருத்துக்கள்... தகவல்கள்... உண்மைகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    நல்லதொரு சிறப்பான விமர்சனத்திற்கு நன்றி...

    ReplyDelete
  3. எனக்கு - தங்களுடைய கை வண்ணத்தை வாசிக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ!.. எனினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் - என, திரு.ஜெயகுமார் அவர்களின் ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம் - என்ற வரிகளே போதும்!.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  4. வாழ்த்துகள்... ஹரணி !

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஹரணி ஜி......

    ReplyDelete