Friday, August 16, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்..... சிவஒளி...


 அன்புள்ள

                  ஹ ர ணி வணக்கமுடன்.

                  திருவாரூரிலிருந்து சிவஒளி எனும் ஆன்மீக இதழ் வெளிவருகிறது. அதில் என் நுர்லுக்கு வந்துள்ள விமர்சனம்.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      உலகில் நல்லவை. அல்லவை எனப்படுவது வாழ்க்கை என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இந்த இரண்டனுள் ஒன்றில்லாவிட்டால் அர்த்தம் நீர்த்துப்போகும். இதைத்தான் ஹரணியின் நத்தையோட்டுத் தண்ணீர் நம் மீது தெளிக்கிற தீர்த்தவாரியாகும்.

           அவரது எண்ணங்கள் பதினான்கு சிறு தலைப்புக்களில் பெரும் புவனங்களாக உருக்கொள்கிறபோது ஒன்றே பலவனவாக இருக்கிறது. தெய்வத்திற்குப் பெயர்களும் குணங்களும் உருவங்களும் கிடையாது. காரணம் எல்லா குணங்களும் பெயர்களும் அதனுடையதாகவே மிளிர்கிறது. இதுபோலவே ஹரணியின் நத்தையோட்டுத் தண்ணீரில் வ(ர்)சிக்கும் ஒவ்வொருவரின் எண்ணற்ற கனமான சிந்தனைக் கப்பல்களும் சிரமமின்றி எளிதாகப் போக்குவரத்து நடத்துகின்றன.

              ஆம் அவரது முதல் அத்தியாயமான வாசித்தல்....சுவாசித்தல்
              அறிவு நோக்கில் வாசிப்பு முக்கியமானது
              ஆய்வு நோக்கில் அதைவிடக் கூர்மையானது
              அறிவு நிலையில் உரிய வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வாசிப்பு
              உதவுகிறது
என்றும்

         பிறிதோரிடத்தில் வாசிப்பு பிள்ளைகளைப் பண்படுத்துகிறது. தவறான வழியைத் தேர்ந்து எடுப்பதைத் தவிர்க்கிறது சக நேயத்தைத் தக்க வைக்கிறது. உறவுகளை நேசிக்கக் கற்றுத் தருகிறது. உயர் பண்புகளைப் பெற்றெடுக்கக் கூடவே நிற்கிறது. பிறருக்கு உதவும் மனோபாவத்தைக் கற்றுத் தருகிறது. எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை நோக்கி வழிகாட்டுகிறது. நம்பிக்கையோடு எதனையும் எதிர்கொள்ளும் திறனைப் பெருக்குகிறது. என்றும் சொல்லி இன்றைய சமூகத்தின் பிறழ்வான இருத்தலியல் சூழலில் இந்த தேசத்தின் எதிர்காலத் தலைமுறை தடம்பிறழாத வாழ்க்கைக்கு வாசிப்பு எத்தனை அவசியம் என்று இதமாக இந்த நுர்லில் எடுத்துக் காட்டுகிறார்.

         அடுத்து மூன்றாவது அத்தியாயமான மடலேறுதல் இப்படிப் பேசுகிறது. எல்லாம் கைப்பேசி மயம் . காலன் கைக்குள் சிக்கிய உயிர்போல கைப்பேசிக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த வாழ்வையும் கைப்பேசிக்குள் புதைத்துக்கொண்டிருக்கிறோம். கைப்பேசி காலன்தான். செல்லரிக்கும் வாழ்க்கை என்றும் அதே அத்தியாயத்தின் பிறிதோரிடத்தில் கடிதம் வாழ்வின் பேறாக நின்றது. வேராகக் கண் பிடித்தது. குடும்ப அமைப்பைச் சார்ந்தது. குலப்பெருமையைப் பறைசாற்றியது. தவறுகளைத் திருத்திக்கொள்ள. ஒழுக்கமாகப் பண்புகளைப் போற்றிட. அன்பு காட்ட.. உறவுகளைக் கட்டிக்காக்க செய்த தவறுக்குப் பிராயசித்தம் தேட பரிகாரம் செய்துகொள்ள இப்படி எல்லாவற்றையும் சுமைதாங்கியில் இறக்கி வைப்பதுபோல கடிதத்தில் இறக்கிவைத்தார்கள்.

            கடிதம் வல்லமை பெற்ற கடவுள் போல. வரம் கொடுக்கும் சாமி போல. எல்லாமும் கொடுத்தது, எல்லா குறைபாடுகளையும் போக்கியது. தனிமையில் அது உற்ற தோழமையாய் கவலையுண்ட மனதிற்கு மாமருந்தாய்  கடிதம் தன்னைப் பங்கிட்டுக்கொண்டது. கடிதம் எழுதுங்கள். அது நம்மைப் பண்படுத்தும். வாழ்க்கையை வாழச் சொல்லும் சுகமாய் அனுபவிக்க வைக்கும். கடிதம் ஒரு வரலாற்றுப் பதிவு.

          செல்லால் செல்லரித்துப் பழுப்பேறும் வாழ்வில் எழுத்துக்களால் பசுமையைப் பயிரிடத் துர்ண்டுகிறார் ஹரணி. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு தஞ்சையில் நிகழ்ந்தபோது நானும் தஞ்சை ப்ரகாஷ்ம் சேர்ந்து தமிழில் முதன் முதலாகச் சாளரம் என்கிற கடித இலக்கியத் திங்களிதழை முழுக்க முழுக்க கடிதங்களாலேயே நடத்தினோம். தமிழகம் முழுக்க அலைந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை சேகரித்தோம். தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மடலில் கடிதங்களாலேயே முழுக்க முழுக்க வெளியாகும் இதழ் இதுவாகத்தான் இருக்கும் என்று முன்மொழிந்தார்கள். அப்போது கி.ராஜநாராயணன் எழுத்தாளர்கள் சிலரோடு தாமும் இணைந்து ஊஞ்சல் என்ற பெயரில் கடிதங்களில் எண்ணங்களை பங்கிட்டோம். ஆனால் அச்சில் அது வரவில்லை. நாங்கள் வெளிக்கொணர்ந்த சாளரம் என்ற தமிழின் முதல் கடித இலக்கிய இதழில் க.நா.சுப்ரமணியம். தொ.மு.சி.ரகுநாதன். புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலரது கடிதங்களைப் பதிவுசெய்தோம். இதை ஏன் நான் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் கலக்கவேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஹரணியின் மனத்தில் இன்றைக்கு வெடித்துக் கிளர்ந்தெழுந்திருக்கிற ஏக்கம். ஆதங்கள்ம அப்போதே எங்களை ஆட்டிப் படைத்தது என்பதைக் குறிக்கவே.

          ஈரேழு பதினான்கு புவனங்களும் படைப்புக்களும் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மிதக்கின்றன. அவரவர் கையளவு அள்ளி அருந்தலாம். என்ன நீங்கள் தயாரா?

            தஞ்சைப் ப்ரகாஷ் சொல்லுவார் இலக்கியம் பலி கேட்கிறது. அதன் பசி தீர நாம் பலியாக வேண்டுமென்று. ஹரணியின் எழுத்துக்களும் இந்த வரிசையில் சேருகிறது.

                                   (நன்றி ......சிவஒளி.....கா. விஜயராகவன்...ஆகஸ்ட் 2013)

5 comments:

  1. // ஈரேழு பதினான்கு புவனங்களும் படைப்புக்களும் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மிதக்கின்றன. அவரவர் கையளவு அள்ளி அருந்தலாம். என்ன நீங்கள் தயாரா?

    தஞ்சைப் ப்ரகாஷ் சொல்லுவார் இலக்கியம் பலி கேட்கிறது. அதன் பசி தீர நாம் பலியாக வேண்டுமென்று. ஹரணியின் எழுத்துக்களும் இந்த வரிசையில் சேருகிறது.//

    பாராட்டுக்கள் ஐயா.

    மிகவும் விரிவாகவே விமர்சித்துள்ளர்கள்.

    மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஈரேழு பதினான்கு புவனங்களும் படைப்புக்களும் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மிதக்கின்றன. அவரவர் கையளவு அள்ளி அருந்தலாம். என்ன நீங்கள் தயாரா?

    ஒளிமிக்க விமர்சனம் ..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  3. ஈரேழு பதினான்கு புவனங்களும் படைப்புக்களும் இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மிதக்கின்றன.
    சுடர்விட்டுப் பிரகாசிக்கும் கருத்துரை ஐயா. வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  4. மிக நேர்த்தியான விமர்சனம். ரசித்துப் படித்தேன் ஹரணி.

    ReplyDelete
  5. விமர்சனமே இவ்வளவு சுவையாக இருந்தால் நூல் எவ்வளவு சுவையாக இருந்தாக வேண்டும்!

    ReplyDelete