Monday, June 23, 2014

மொய்மொய்னு பேசாதீங்க



                            மொய்மொய்னு பேசாதீங்க....



                     மொய் எனும் சொல்லுக்கு இரண்டு பொருள்களைக் கொள்ளலாம் ஒன்று வினைச்சொல் இன்னொன்று பெயர்ச்சொல் என இரண்டின் அடிப்படையில பொருள் கொள்ளலாம்,

                   1. வினையாக வரும்பொழுது அது கூட்டமாகச் சேர்தல். குழுமுதல் அல்லது சேர்ந்து ஒன்றில் பொருந்துதல் (அதாவது இனிப்புப் பணடத்தில் ஈக்கள் மொய்த்தன- பூக்களில வண்டுகள் மொய்த்துக்கிடந்தன- போர்க்களத்தில் வீரர்கள் போரிடுவதற்கு மொய்த்தனர்) என்று பொருள்
கூறலாம்.  எனவே மொய் என்றால் கூடு. கூட்டமாக சேர்ந்து நில் என்பது
பொருளாகக் கொள்ளலாம்.

                   2. மொய் எனும் இரண்டாவது பெயர்ச்சொல்லாக வரும்பொழுது ஒரு  நிகழ்வில் உறவினர்கள் அன்பளிப்பாகத் தரும் பணம் எனறு பொருள் கொள்ளலாம். அது இன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி துன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி. இவ்விரு நிகழ்வுகளிலும் கூட்டமாக உறவினர்கள் வந்து பணம் செய்வதால் கூட்டமாக வந்து செய்ததால் சேர்ந்த பணம் எனும் நிலையில் பொருள் விரிவாக்கத்தில் மொய் (கூட்டமாய்) யாய் வந்த பணம் என்று பொருள் வந்திருக்கவேண்டும்.

                           மொய் விருந்து என்பது உறவுகளில் தடுமாறி சாகிற நிலைக்கு ஆளாகிற ஓர் உறவினைத் துர்க்கி (பொருளாதார ரீதியாக) நிலைநிறுத்த நடத்தப்படுவது உண்டு. வன்முறை வரைக்கும் சென்ற மொய் நிகழ்வுகளும்
உண்டு.

                       எனவேதான் கூட்டங்கூட்டமாய் பேசும்போது வயதில் பெரியவர்கள் ஏம்பா மொய்மொய்னு பேசாதீஙக் ஒரு முடிவுக்கு வாஙக் இப்ப என்ன தாலி கட்டச் சொல்றதா? வேண்டாமா? என்பார்கள், அல்லது பொணத்த எடுக்கறதா? வேண்டாமா? என்பார்கள்.

                         மொய் என்பதற்கு அகராதிகள மேலும் நெருக்குதல். இறுகுதல். பெருமை. போர்க்களம். அன்பளிப்புப் பணம் எனும் கூடுதல் பொருள்களைத்
தருவதைக்   காணலாம்.

                          சரி எதற்கு இத்தனை இப்போது விளக்கம் என்று யோசிக்கலாம்.
என்னுடைய அனுபவம் மொய்யோடு நெருஙகிய தொடர்புடையது அதற்காகவே இந்த பீடிகை.

              நீங்கள் ஒரு திருமண நிகழ்விற்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம் அங்கு நீங்கள் கடைபிடிக்கவேண்டிய சில விதிகள் உண்டு.

                                   1. எக்காரணம் முன்னிட்டும் மொய் எழுத ஒப்புக்
கொள்ளக்கூடாது. முடிந்தவரை தப்பித்துவிடுவது  நல்லது. மாட்டிக் கொண்டால் அது பெரிய ஆபத்தில்  சிக்கிக்கொண்டது போலத்தான்.

                                   2. மொய் எழுதும் தைரியம் உங்களுக்கு இருந்தால்
 பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

                                   அ, உங்கள் கையெழுத்து கிறுக்கலாக இருக்கக்கூடாது.

          ஆ. கையெழுத்து அழகாக இருக்கவேண்டியதில்லை. ஆனால்  குண்டு குண்டாக இருக்கவேண்டும். ஒரு எழுத்திற்கும் இன்னொரு எழுத்திற்கும் இடைவெளி   தாராளமாக விடப் பழகியிருக்கவேண்டும்.

          இ.  எக்காரணம் முன்னிட்டும் கோபப்படக்கூடாது.
                               
           ஈ.  உங்களுக்குக் காதுகள நன்றாகக் கேட்கவேண்டும்.

           உ. உங்களுக்குப் பக்கத்தில் உக்காருபவர் சரியாகவும் விரைவாகவும் பணத்தை வாங்கி பையில் போடுபவ ராக இருக்கவேண்டும.

          ஊ. மொய் எழுதுவற்கு முன்பு அந்த வீட்டில் குறைந்தபட்சம் காலை டிபனாவது சாப்பிட்டுவிடவேண்டும். மொய் எழுத உட்கார்ந்தால் கண்டிப்பாகக் கடைசிப்பந்தி குறைந்த பட்சம் சாப்பாடும் ரசம் அல்லது மோர் மட்டுமே பசி மரத்துபோனவுடன் கிடைக்கும், அதற்குத் தயாராக இருக்கவேண்டும்,

          அப்புறம் மொய் எழுதும்போது ஏற்படும இடையூறுகள் பின்னால் கடைசி யில் கணக்கு ஒப்படைக்கும்போது பணம் குறையும்போது தெரியும். எனவே ஆரம்பத்திலேயே இடையூறுகளை முடிந்தவரை குறைத்து தவிர்க்க  வேண்டும். முற்றிலும் தவிர்க்கமுடியாது.

                                     இடையூறுகள்.

  1, மொய் நோட்டில்  முதல் பக்கம் விழா பற்றிய விவரம். எழுதாமல்   விடுவது.

  2. அதற்கப்புறம் எத்தனைப் பக்கங்கள் விடுவது என்று   மொய் எழுதச் சொன்னவரிடம் கேட்டுக்கொள்ள  வேண்டும்.

  மோதிரம் போடும் தாய்மாமாக்கள், சம்பந்திப் பணம்   போடு பவர்கள். பட்டம் கட்டும் முறையுள்ளவர்கள்  (எவ்வளவு கிராம்? மாங்காய் வடிவக் காசா.வட்டக் காசா..காது உள்ளதா இவ்வளவு விவரம்  எழுத    வேண்டும்) பெரிய தொகையாக மொய் எழுதும்  முக்கிய நெருங்கிய உறவுகள். இவர்களுக்கான  வரிசைமுறைகளை மொய் நோட்டில் எழுதப்படவேண்டும்.
இல்லையெனில் பெரிய சண்டையாகிக் கடைசியில எல்லாத்துக்கும்
மொய் எழுதுனவன்தான் காரணம்னு முடிந்துவிடும்..

  3.   சில்லறை  கொடு என்று ஆயிரம் ஐந்நுர்று நீட்டுபவர்கள்.

   4.  இரண்டு பேருக்கு மொய் எழுதிவிட்டு பாக்கிகொடு என்று வங்கிக் கவுண்டர் முன் நிற்பவர்கள் போல்   கேட்பவர்கள்.

    5. சில்லறை கொடுத்துவிட்டு சட்டென்று நினைவுக்கு வரும் சில்லறை கொடுத்தோமே அதற்குரிய நேர்ட்டை வாங்கினோமா? என்று.

   6. இவ்வளவு களேபரத்திற்கிடையில் ஒருவர் ஊர். தாத்தா.அப்பா வகையறா சொல்லி மொய் எழுதச் குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்.

  7. வயதானவர்கள் சிலர் இதற்கிடையில் ஏம்பா சீவல்  இல்லே? என்பார்கள். சுண்ணாம்பு காஞ்சிப்போச்சி தண்ணி ஊத்தச்சொல்லுப்பா என்பார்கள்.

  8. ஏண்ணே அவங்களக்கு மீதி ஐம்பது ருபா கொடுங்க. இருநுர்று கொடுத்தாரு நுர்த்தம்பதுதான் மொய்..

 9.  சரி நாலாயிரம் கொடு மைக் செட்டுக்காரனுக்கு செட்டில் பண்ணணும். ஒரு ஓரமா எழுதிக்கோ என்று மொய் எழுதச் சொனன்வர் கை நீட்டிக் கேட்பார்.

 கிட்டத்தட்ட நான் ஒரு ஐம்பது திருமண நிகழ்விலாவது மொய் எழுதி யிருப்பேன் (வற்புறுத்தி மாட்டி வைப்பார்கள்- முகத் தாட்சண்யத்திற்காக
மாட்டிக்கெர்ள்வது மறுக்கமுடியாமல்). அதன் அனுபவம்தான்மேலே கண்டது.

                           நான் கடைசியாக மொய் எழுதும் போரை முடித்து ஞானம் கொண்டதை சொல்கிறேன்.

            அது கள்ளர் வீட்டுக் கல்யாணம். என்னுடைய நண்பன் கல்யாணம்.  மொய் எழுதச் சொன்னார்கள். எழுதுடா உன் எழுத்து நல்லா இருக்கும் (எந்த எழுத்து கையெழுததா? தலையெழுத்தா?) நண்பர்கள் உசுப்பல் அப்புறம் உனக்குத்தாண்டா பொறுமை அதிகம். உசுப்பி விடுவார்கள்.

           மொய் நோட்டைப் பிரித்து வைத்து முதல் போணி பண்ணக் காத்திருந் தேன். ஒரு வயதானவர் வந்தால். இடுப்பில் வேட்டி  மேல் சட்டையில்லை. ஆனால் ஒரு வெள்ளைத்துண்டு. இடுப்பில் வெத்திலை சீவல் வைக்கும் பெரிய முடிச்சு இருந்தது.

                               என் அருகே வந்து என்னை ஏறஇறங்கப் பார்த்தார். அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு

                                   சொல்லுங்க தாத்தா என்றேன்.
                                   நான் தாத்தாவா உனக்கு? என்றார்.
                                   சரி சொல்லுங்க என்றேன்.
                                   யாரு மொய் புடிக்கிறது என்றார்.
                                    நான்தான் எழுதுறேன் என்றேன்.
                                    என்ன படிச்சிருக்கே? (மொய்க்குன்னு படிப்புண்டா?)
                                    டிகிரி படிச்சிக்கிட்டிருக்கேன்.
                                    சரி ஒழுங்கா எழுதுவியா?
                                    எழுதுவேன்,
                                    பேனாவக் காட்டு என்றார்.
                                    (கோபத்தை அடக்கிக்கொண்டேயிருந்தேன்.)
                                     நல்லா எழுதும் பேனா இது. (அப்போ அந்த ரீபில் 1
ரூபாய் பத்திரம் என்று சொல்லி நண்பனின் அப்பா தந்துவிட்டுப்போனார்.)
                                     சரி எழுது என்றார்.
                                     சொல்லுங்க என்றேன்.
                                     அதுவரை பணம் எடுக்கவில்லை.
                                      சொன்னார்.
                                        நாஞ்சிக்கோட்டை..
                                        நாஞ்சிக்கோட்டை
                                        விளார்  ரோடு
                                        விளார் ரோடு
                                        வல்லுண்டாம் பட்டு கிராமம்
                                        வல்லுண்டாம் பட்டு கிராமம்
                                        ஆவன்னா கோவன்னா ராமசாமி தஞ்சிராயர்
                                        ஆவன்னா கோவன்னா ராமசாமி தஞ்சிராயர்
                                        மகன் ஆர் பாலய்யா தஞ்சிராயர்
                                        பாலய்யா தஞ்சிராயர்
                                        எழுதிட்டியா
                                         எழுதிட்டேன்
                                         குனிந்து மொய் நோட்டைப் பார்த்தார்..
                                         என்ன இது கோழி சீச்சமாதிரி எழுதியிருக்கே
                                         அவர் சொன்னதைப் படித்துக் காண்பித்தேன்
                                         ஓரளவுக்கு திருப்தியானார்.
 பின் மெல்ல தன் இடுப்புப் பகுதியிலிருந்த வெத்திலைப் பொட்டலத்தை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு பின் வேட்டி மடிப்பில் இருந்து சுருண்ட அந்த ரூபாய் நோட்டை எடுதது மொய்நோட்டுமேல போட்டு ரெண்டு ரூபாய் எழுதிக்கோ என்றார்..
                                           அப்போது இருந்த ரெண்டு ரூபாய் நோட்டு
                                           எழுதிக்கொண்டேன்.
(குறிப்பு  - அப்போது எல்லாம் 2 ரூபாயில் ஆரம்பித்து 5. 10. 15.. 20. 21. 25. 31. 40. 50. 51. 100.101.200. 201 இப்படித்தான் மொய் வரிசை எழுதுவார்கள் இது அவர்களின் பழக்க வழக்கங்களைப் பொறுத்து மொய் அதிகத் தொகையில் எழுதுவார்கள். 10 க்கு மேல் எழுதினால் அது அதிகம்)
                                          இப்படியாக அந்த மொய் எழுதி முடித்தேன்.
         அன்று மாலை 4 மணியளவில் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வந்து விட்டேன்.
                                           மறுநாள் சனிக்கிழமை.

      அதற்கடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி இருக்கும். அந்த திருமணமான நண்பன் வீடு தேடி வந்தான்.
                                                 என்னடா இது காலையிலேயே என்றேன்.
                                                  அவன் முகம் சிரிப்பாக இல்லை.
                                                 என்னடா என்ன பிரச்சினை? என்றேன்,
 அவன் ஒரு நோட்டை நீட்டினான். அது நான் எழுதிய மொய் நோட்டு.
                                                 எதுக்குடா இது என்றேன்,
                                                 அவன் சொன்னான்.
                                                 உன் எழுத்து புரியலியாம். அதனால எல்லாத்தையும் நிறுத்தி அழகாக எழுதிக்கொடுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க எங்க அப்பா.
                                                  என்ன இது இந்த எழுத்து புரியலியா?
                                                 ஆமாம் எழுதிக்கொடு.
 சரி கொண்டா எழுதி வைக்கறேன். சாயங்காலம் வாங்கிக்க.
இந்தா என்று அந்த 2 ரூபாயைக் கொடுத்தான். முதல் போணி பண்ணன நோட்டு அது.
      இது கிழிஞ்சிருக்கு செல்லாதாம். பாத்து வாங்க மாட்டானான்னு உன்ன எங்கப்பா திட்டறாருடா.. இத வச்சிக்கிட்டு வேற நோட்டுக் கொடு.

     சரி கொண்டா என்று உள்ளே போய் எங்கப்பாவிடம் இருந்து ஒரு ரூபாய் நாணயம் இரண்டு வாங்கிட்டு வந்து அவனிடம் கொடுத்தேன். சாயங்காலம் வரேன மொய் நோட்டு வாங்க என்று சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
                 உனக்கு இதெல்லாம் தேவையா என்றபடி அந்த செல்லாத நோட்டை அப்பா வாங்கிப் பையில் வைத்துக்கொண்டார்.

                 பளளியில் ஒரு பாடத்தைப் படிக்கவில்லை என்றால் வாத்தியார் தண்டனையாக அந்தப் பாடத்தை 5 முறை எழுது என்று இம்போசிசன் கொடுப்பார்கள்.

               உலகத்திலேயே மொய் நோட்டை இம்போசிசன் எழுதியவன் என்ற பெருமை எனக்கே உண்டு.

               இன்றைக்கும் நானும் அந்த நண்பனும் நட்பில் இருக்கிறோம். நட்பைவிட உயர்ந்தது ஒன்று உண்டோ.

             வெட்டப்படும் ஆட்டிற்குத் தண்ணீர் ஊற்றும்போது ஒரு சிலிர்ப்பு சிலிர்க்குமே அதுபோல யாராவது மொய் என்று உச்சரித்தாலே போதும் இன்றைக்கும் எனக்கு சிலிர்க்கும்.

                                                              00000000000000


                                 




                             

6 comments:

  1. மொய் நோட்டுக்கே இம்போசிசனா
    ஆகா

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா..
    மணிகணக்கா மொய் எழுதி, அத இன்னொரு காபி வேற எழுத வச்சுட்டாங்களா?

    ReplyDelete
  3. இனிய நினைவுகள்... ரசிக்க வைக்கும் பெருமை ஐயா...

    ReplyDelete
  4. பிழைக்கத்தெரியாத ஆசாமி ஐயா நீங்கள் ! மனத்தைக் கொஞ்சம் தளரவிட்டிருந்தால் பெரிய 'மொய்யதிபர்' ஆகியிருக்கலாமே! (இன்றும் இருக்கிறதா இந்த மொய்ப் பழக்கம்?)

    ReplyDelete
  5. மொய்யனுபவம் ரசிக்கவைத்த மெய்யனுபவம். மொய் எழுதுவதில் இவ்வளவு பிரச்சனைகள் உண்டு என்று இன்றுதான் அறிந்தேன். சிக்கல் உண்டாக்கிய அனுபவங்களையும் சுவாரசியமாய்ப் பகிர்ந்துகொண்டமைக்கும் இனி எவரும் அப்பொறுப்பை ஏற்குமுன் எச்சரிக்கையாய் இருப்பதற்கான பதிவுக்கும் மிக்க நன்றி ஹரணி சார்.

    ReplyDelete
  6. வித்தியாசமான மெய் உணர் மொய் அனுபவம்..!

    ReplyDelete