Sunday, June 29, 2014

மாறாதய்யா மாறாது... தொடர்ச்சி



மாறாதய்யா மாறாது....

                        
                           இரவு எட்டுமணிக்கு டாக்டர் வந்தார். எப்படி இருக்கப்பா
ராகவன்? என்றார்.

                           நல்லாயிருக்கேன் டாக்டர்.

                           காரம் அதிகம் சாப்பிடுவியா?

                           இல்ல டாக்டர்.

                           மசாலா அயிட்டங்கள் அதிகம் சேத்துக்குவியா?

                           இல்ல டாக்டர்.

                           என்வி அயிட்டங்கள் வெளியில் நிறைய சாப்பிடுவியா?

                           இல்ல டாக்டர்.

                           அப்புறம் ஏன் அல்சர் ஆச்சு? அதனாலதான் டைஜஸ்ட் ஆகாம
வாந்தியாகி புட் பாய்சனாகியிடுச்சி..

                           நாங்க சாப்பிடறதே ஒருவேளைதான் டாக்டர்.. ராகவனின்
அக்கா சொன்னாள்.

                           ராகவன் பேசாமல் அவளைப் பார்த்தான்.

                           என்னம்மா சொல்றே?

                           ஆமாம் டாக்டர். நாங்க அஞ்சுபேரு. அப்பா இல்ல. இவனுக்கும் வேலை கிடைக்கல்ல. அம்மா வீட்டு வேலை பாக்கறா.. அதுல மூணுவேளை சாப்பிடமுடியாது டாக்டர்.. படபடவென்று பழகிய உறவிடம் பகிர்வதுபோல பேசினாள்.

                            அக்கா பேசாம இரு என்றான் ராகவன்.

                            ராகவனைப் பார்த்து கேட்டார் என்ன படிச்சிருக்கே?

                            பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி சார்.. பர்ஸ்ட் கிளாஸ்..

                            சரி உடம்பப் பாத்துக்க. இன்னிக்கு டிஸ்சர்ர்ஜ் போட்டுடறேன். நாளைக்கு என்னை கிளினிக்ல வந்து பாரு. தெற்கு வீதியிலே டிடிடிசி கூரியருக்கு எதிரில் இருக்கு..

                             சரிங்க டாக்டர்.

                             வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ரெர்ம்பவும் சோர்ந்து
போயிருந்தான்.

                             ராகவன் அம்மா கேட்டாள் எப்படிப்பா இருக்கு?

                             பரவாயில்லம்மா. குடிக்க சூடா வரகாப்பி கொடேன்.

                             காபி வேண்டாம்பா. டீ தரேன். பால் இல்லாத டிகாசனைப் பனங்கல்கண்டு போட்டு ஆற்றி அதில் எலுமிச்சம்பழத்தை நாலைந்து சொட்டுகள் பிழிந்து கொடுத்தாள். 

                             குடித்தான்.

                             ஏண்டா கவலைப்படறே ராகவா. நடக்கறதுதான் நடக்கும்.
எங்களுக்கு என்னிக்கு நடக்குமோ அன்னிக்கு நடக்கும். நீ உடம்பக் கெடுத்துக்காத.. நமக்கு சொத்துன்னு ஆண்டவன் கொடுத்திருக்கறதே இந்த உடம்பும் நம்பிக்கையும்தான்.. 

                              சரிக்கா என்றான் ராகவன்.

                              நாம ஜெயிப்போம்டா ராகவா.. என்றாள் இன்னொரு அக்கா.

                              ஆமாங்க்கா.. கண்டிப்பா..

                              நாளைக்கு மறக்காம டாக்டரைக் கிளினிக்ல பாத்துடு. 
பெரிய அக்கா சொன்னாள்.

                               ஏன் என்னாச்சு? எதுக்கு பாக்கச் சொன்னாரு. மகமாயி எம் புள்ளய காப்பாத்து..அம்மா உணர்ச்சியில் சொற்களைக் கொட்டினாள்.

                              அம்மா... தம்பிய பாத்த டாக்டர் ரொம்ப நல்லவரும்மா. இவன் படிப்ப பத்தி கேட்டாரு.. ஏதாவது வேலை விஷயமா இருக்கும். அதான் வரச்சொல்லியிருக்காரு.

                              போயிட்டு வாப்பா.. அப்படி ஏதாச்சும் வேலைன்னு சொன்னா.. நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்னு சொல்லு.. உடம்பு முக்கியம்.

                              ஏம்மா அவரே டாக்டரு.. கிளினிக்லகூட வேலை போட்டுத்
தரலாம். அவரு பாத்துக்க மாட்டாரா?

                               சரி சரி சாப்பிட்டுப் படுங்க.. அவன் கொஞ்சம் துர்ங்கட்டும்.

                              மறுநாள் சனிக்கிழமை.

                              வடக்குவீதி மூல அனுமார் கோயிலில் பதினெட்டு சுத்துசுத்திவிட்டு டாக்டர் கிளினிக்கிற்குப் போனான்.

                               கிளினிக் பெரிய கிளினிக்காக இருந்தது. வாசலிலே
அவரின் போர்டு இருந்தது.

                               வரவேற்பில் கேட்டுவிட்டு அவரின் அறைக்குப்
போனான். டாக்டர் இருந்தார்.

                               வாப்பா ராகவா என்று மறக்காமல் பேருடன் கூப்பிட்டு சிரித்தார்.

                               நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்.

                                வணக்கம் டாக்டர் என்றான்.

                               இங்க கிளினிக்ல ஆபிசுல வேலைபாரு. இது இரக்கப்பட்டு இல்லே. உன்னோட நிலைமைக்கு உதவணும்னு தோணிச்சி.அவ்வளவுதான். படிச்சவனா இருக்கறதாலதான். மாதம் நாலாயிரம் சம்பளம். உன்னோட சர்டிபிகேட் செராக்ஸ் மட்டும் ஆபிசுல கொடுத்துடு. வேலைய ஒழுங்கா பார்க்கணும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. வேற அரசுப் பணிக்கு தேர்வு எழுது. கிடைச்சா போயிடலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். வேற எந்த சலுகையும் கிடையாது உனக்கு. சரியா.திங்கட்கிழமையிலேர்ந்து வந்துடு.

                               சரிங்க டாக்டர்.

                               சரி போய்ட்டு வா..

                               வீட்டிற்குத் திரும்பி செய்தியைச் சொன்னான். 

                               ரொம்ப சந்தோஷம்பா.. டாக்டர் வழியா உனக்கு
ஒரு விமோசனம் பொறக்கட்டும்.. மகமாயி இருக்கா. கண் திறந்து
வைப்பா.. நம்பள.. அம்மா வேண்டிக்கொண்டு வாழ்த்தினாள்.

                                சரிம்மா என்னோட ஆஸ்பத்திரி செலவுக்காக யார்
யார்கிட்டே எவ்வளவு கடன் வாங்கினே சொல்லு.. அத முத மாச
சம்பளத்துல கொடுத்திடணும்..

                                 அன்று இரவு துர்க்கம் வரவில்லை.இந்த வேலை திருப்திதான். ஆனால் இது நிரந்தரம் அல்ல. இளைப்பாறல். சற்று தளர்வாக மூச்சுவிட இது ஒரு நிம்மதி. ராகவன் அடுத்தக்கட்ட தன்னுடைய இலக்கைப பற்றி யோசித்தபடி இருந்தான். 

                                  இரவில் அருகே படுத்திருந்த அம்மா மெதுவாகத்
தலையைத் திருப்பி ராகவா என்றாள் மெதுவாக.

                                  அம்மா ஏதோ ரகசியம் சொல்லப்போகிறாள் என்ற
ஆவலோடு என்னம்மா? என்றான் இவனும் மெல்லிய குரலில்.

                                  இனிமே பழைய ரசமும் கரப்பான் பூச்சி விழுந்த
சோறும் நமக்கு வேண்டாம்பா.. நம்ப குலதெய்வம் கருப்பையாவை
வேண்டிக்கப்பா..

                                                    (நிறைந்தது)

6 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    உதவும் மனப்பாண்மை கொண்ட நல்லவர்கள் இருந்தால் பலர் வாழ்கையில் விமோசனம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது அத்தோடு இறைநம்பிகையும் வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நனறி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மாறாது ஐயா.. மாறாது..
    நல்ல எண்ணங்களின் நிலைக் கலனாகிய மனிதம் நிறைந்த மனங்கள் என்றைக்குமே மாறாது ஐயா.. மாறாது..

    ReplyDelete
  3. மனிதம் மரித்துவிடவில்லை
    எங்கோ ஒரு மூலையில் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

    ReplyDelete
  4. நல்ல மனதிற்கு அடுத்த இலக்கு என்றும் வெற்றியைத் தரும்...

    ReplyDelete
  5. நம்பிக்கைக்கீற்று எட்டிப்பார்க்கும்
    நிறைவான முடிவு.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. ஐயாவுக்கு டாக்டர்கள் மேலிருந்த கோபம் குறைந்து விட்டது போலத் தெரிகிறது.....

    ReplyDelete