Monday, June 29, 2015

                                 நட்பில் தாய்மை...

            இடுக்கண் களைவதாம் நட்பு என்று வள்ளுவம் உரைக்கிறது. மிகச் சிறந்த நட்பை எல்லா இலக்கியங்களும் பேசியிருக்கின்றன.  இருப்பினும் அதியமானுக்கும் ஔவைக்கும் இருந்த நட்போடு எதனையும் ஒப்பிடமுடியாது என்றே தோனுகிறது.  இருவருக்கும் தொடங்கிய நட்பு முரண்பாட்டில்தான் தொடங்கியது பின் அதியமான் புரிந்துகொண்டதாலும் புலவர்களை மதிக்கும் மாண்பினாலும் நட்பாக மலர்ந்தது.
              ஔவையின் மீது கொண்ட  நட்பின் காரணமாக தன்னுடைய வாழ்நாளையே குறைத்துக்கொள்ள மனம் துணிந்த மாண்பை அவன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்தவன்.  ஔவையும் அவன் மீது கொண்ட  நட்பைப் பல பாடல்களில் உரைத்து மேன்மைப்படுத்துவதையும காணமுடிகிறது.
                                    ஆதல்  நின்னகத் தடக்கிச்
                                    சாதல் நீங்க எமக்கீந் தனையே
சாதல் (மரணம்) நீங்க எனக்குத் தந்த உன் மாண்பை என்னவென்று சொல்வேன் என்கிறார் ஔவை அதியமானின் உயர்ந்த பண்பை.
                        அவனுக்காகத் தூதுபோகிறார் தொண்டைமானிடம். அது வெகு சிறப்பான பாடல்.  இருவருக்குமான நட்பின் உச்சம் அதியமான் இறந்துபோக ஔவை பாடிய பின்வரும் பாடல்தான். உலகின் சிறந்த நட்பிற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.


                        சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
                        பெரியகட் பெறினே
                        யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
                        சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
                        பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
                        என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
                        அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே
                        நரந்தம் நாறும் தன்கையால்
                        புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
                        அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீ
                        இரப்போர் கையுளும் போகிப்
                        புரப்போர் புன்கண் பாவை சோர
                        அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
                        சென்றுவீழ்ந் தன்று அவன்
                        அருதிறத்து இயங்கிய வேலே
                        ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
                        இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
                        பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
                        சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
                        ஈயாது வீயும் உயிர்தவப் பலவே (புற.235)

            அதியமானுக்குக் கொஞ்சம் கள் கிடைத்தால் முதலில் எனக்கு அளித்துவிட்டுப் பின் எஞ்சியதைத் தான் உண்பான். நிறைய கள் கிடைத்தால் அப்பவும் அப்படியே செய்வான். அதுபோன்றே சிறிது சோறாக இருந்தாலும் பலருடன் சேர்ந்து உண்பான்.  சோறு அதிகமாக இருந்தாலும் அப்படியே பலருடன்தான் சேர்ந்து உண்பான்.  அது எல்லாம் போய்விட்டது.  எலும்புடன் நிறைய கறி சேர்ந்திருக்கும் கறியை (என்பொடு தடிபடு) எங்களுக்குத் தருவான். போர் என்றால் தான் மட்டும் சென்று துணிவாய் எதிர்கொள்வான். ஈயும் பண்புகொண்டவனாதலால் மட்டுமன்றி வருவோர்க்கு மலர் மாலையைச் சூட்டிசூட்டி அவன் கைகள் பூவாசத்துடன் இருக்கும். அந்தக் கையால் புலால் (கறி) நாற்றம் வீசும் என் தலையைத் தடவிக்கொடுப்பான். இப்போது எல்லாம் போய்விட்டது. அவன் இறந்துவிட்டான். அவன் மார்பில் தைத்த அம்பானது (அவனைக் கொண்ட மரணம்என்கிற அம்பு) முதலில் பாணரின்  மண்டை துளைத்தது, பின் அவனிடம் இரப்பவரின் கையைத் துளைத்தது,  கடைசியாக என்போன்ற புலவரின் நாக்கில் வந்து தைத்தது என அதியமான் இறந்துபோனதால் யார் யார் வாழ்வெலாம் அழிந்தது என்கிறார். எனவே இனிப் பாடுவோரும் இல்லை. பாடுவோர்க்கு வேண்டிய அருள்காட்டும் ஈகுநரும் (அதியமானும்) இல்லை.

                        இப்பாடலில் பூ வாசம் அடிக்கும் கையால் புலால் நாற்றம் அடிக்கும் தலையைத் தடவுதல் என்பதுதான் தாய்மைக்குரிய பண்பாகும். அதாவது அதியமான் தாயாகவும் ஔவை பிள்ளையாகவும் இருக்கின்ற நட்பின் மாண்பை இதைவிட யாரால் சொல்லமுடியும்?

                        இந்தப் பாடலில் இன்னொரு சிறப்புமிருக்கிறது. இதைத்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிட்டு இது இலக்கணம்  பிறழ்ந்த பாடல் அல்லது இலக்கண வரம்பை மீறிய பாடல் என்று குறிப்பிட்டு இவ்வாறு ஔவை பாடக்காரணம் ஔவைக்கு இலக்கணம் தெரியாதா என்பதல்ல பாடலுக்கு உணர்ச்சி முக்கியம் என்பதால் சீர்கள் மாறி மாறி வருகின்றன. எனவே புதுக்கவிதைக்கான வித்து சங்க இலக்கியக் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு பல்வகை சிறப்புடைய பாடல் இது.  அதியமானின் சிறந்த போர்த்திறன்,  மிகச்சிறந்த கொடைத்தன்மை,  ஔவையின் மாண்பு என இங்கு ஈவோரும் சரி பெறுவோரும் சரி சரியான தகுதியில் இருக்கும் பான்மையையும் இப்பாடல் சுட்டுகிறது. அனுபவியுங்கள்.

    




4 comments:

  1. கல்லூரியில் படித்த பாடல்.. சோகம் வழிந்திருக்கும்..

    மீண்டும் தங்களின் கை வண்ணத்தில்...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    பாடலும் அதற்காக சொல்லிய கருத்தும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. புதுக்கவிதைக்கான வித்து சங்க இலக்கியக் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது
    வியப்பிற்குரிய செய்தி ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. என்னவொரு சிறந்த நட்பு...!

    ReplyDelete