Tuesday, November 19, 2019



                     வலை… (நாடகம்)
            காட்சி – ஒன்று  உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி.
      (விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிற இருள் சூழ்ந்த பொழுது. விடியற்காலைக்கு முந்தின நேரம். அந்த வீடு கீற்றால் வேயப்பட்டிருந்தது. அகலம் ஒடுங்கிய வீடு.  வாசலில் இரண்டு படிகள் வைத்த வீடு. இருபக்கமும் சதுர திண்ணைகள். ஒற்றை மூங்கில் தூண்கள். மூங்கில் தூணை ஒட்டிய இடதுகாலை உள்செருகி வலதுகாலை இடதுகால் மேல் கொக்கிபோல செருகி மருதமுத்து உட்கார்ந்திருக்கிறார். அப்படியே ஒருபீடியைப் பற்ற வைக்கிறார். பீடியில் பற்றிய நெருப்பு அசையாத மின்மினியைப் போல மினுக்கிறது. கன்னத்தில் பெருங்குழிகள் விழ பீடியை உள்ளிழுக்கிறார்..)
மருதமுத்து : ஏண்டி.. கனகவல்லி.. இந்நேரத்துல என்னடி கொல்லையில
உருட்டிக்கிட்டிருக்கே..பூச்சிப்பொட்டு கடிச்சு தொலைக்கப் போவுது..

கனகவல்லி – :அப்படியாச்சும் ஒண்ணு நடந்தா நல்லாத்தான் இருக்கும்.
மரு -:         ஏண்டி இத்தனை சலிப்பு கொட்டித் தீர்க்கறே.. விடிஞ்சுடுமா
கனகு - :     என்ன கேட்டுத்தான் எல்லாம் நடக்குது.. விடியாம
               போயிடுமா..

மரு..  :        உன்கிட்ட பேச முடியாது.. நான் கௌம்பறேன். .

         (என்றபடி உள்கூடத்தில் மூங்கில் தட்டி பரணிலிருந்து அந்த வலையை எடுத்து உதறுகிறார்.. கூடவே கூடையை எடுக்கிறார்.. இடது கையால் பீடியை உள் இழுத்தபடி…)
         கொல்லைப்புற இருளிலிருந்து கசிவதுபோல கனகவல்லி வருகிறாள். கூடவே வறட்டு இருமலையும் அழைத்துக்கொண்டு)
மரு…    (முனகுகிறார்) – போன வாரமே பெரியாஸ்பத்திரிக்கு   அழச்சிட்டுப் போலாம்னு நெனச்சேன் மறந்துடுச்சி.. வறட்டுறா பாவம் தொண்டை வலிச்சுக் கெடக்கும்..
கனகு…    பாடையிலே போறப்ப எல்லாமும் போயிடும்.. பொக்க இரும
           எல்லாம்..

மரு  -     ஏண்டி இப்படி நாளு முழுக்க ஓயாம பேசி..சாவறே..

கனகு –    இப்ப எங்க பயணம்?
மரு –      ரொம்ப நாளாச்சுடி.. மடுவுக்குப் போயி.. நாக்கு மீன்  
           திங்கணும்னு   துள்ளுது.. நானே போய் வல வீசிட்டு
           அள்ளிட்டு வரேன்..

கனகு –   ஆறு தெவசம் போயிடுச்சி.. அவன் செத்து.. இப்ப என்ன மீன்
           துள்ளுது நாக்குலே…

மரு –      கெண்ட மாதிரி சலசலங்காத.. போயிட்டு வரேன்..

       (தோளில் துண்டுபோல வலையைப் போட்டுக்கொண்டு கூடையை சைக்கிளின் பின் கேரியரில் வைத்துக்கொண்டு வெண்ணாறு நோக்கி சைக்கிளில் ஏறி மிதித்துப்போகிறார்)
                        0o0  

                          
                காட்சி 2  - கனகவல்லி.. (நினைவலைகள்) மகன் கோவிந்தராஜன்…

கனகு. -  (தனக்குள் பேசுகிறாள்)  புள்ள போயி ஆறு தெவசம் ஆயிடிச்சி..
           கவுச்ச நாத்தமும் போயிடிச்சி புள்ளயோட.. )

           (கனகவல்லியின் பிள்ளை கோவிந்தராஜ்.. அருமையாக மீன் பிடிப்பவன்.  அவன் இறந்துபோய் ஆறாண்டுகள் ஆகிவிட்டன. அவன் உயிரோடு இருந்த காலங்களை நினைக்கிறாள் கனகவல்லி.)

கனகவல்லி – கோவிந்தராசு.. ஏம்பா இந்த அகாலத்துல ஆத்துக்கு
                 கௌம்பிட்டே.. கொஞ்சம் வெள்ளி மங்கட்டும்..

கோவிந்தராஜ் – என்னம்மா நீன்னு.. இந்நேரத்துக்குப் போனா மடுவுல
                  தண்ணி அசயாம கெடக்கும்.. விராலும் மயிலையும்
                  விலாங்கும் ஒதுங்கி  நிக்கும்..ஒரு வீச்சு விட்டாப்போதும்
                .. ஆறு கிலோ தேறும்..6 மணிக்குள்ள கூடய ரொப்பிட்டு
                 வந்துடுவேன்.. இன்னிய  பொழப்பு ஓடிப்போயிடும்.
.
கனகவல்லி –   பாத்துப் போயிட்டு வாப்பா..
கோவி -  நெதமும் இதே பாட்டுப் பாடறே.. அலுக்கவே அலுக்காதா
           ஒனக்கு.. மார்க்கெட்டுக்குப் போவ மிச்சத்துல வரால வறுத்து
           மயிலையை கொழம்பு வை.. புளிப்புருண்ட மாங்காவ
           வெட்டிப்போட்டு புளிப்ப ஏத்து செம புடி புடிக்கணும்மா..

கனகு  :  - சரிப்பா.. உன்னாசப்படியே வச்சிடறேன்..  பாத்துப் போயிட்டு
             வா.. நீன்னு,

கோவி –:    சரி வரேம்மா.. விடமாட்டே  ஒரே பல்லவிய..


      (  பொழுது விடிந்து 8 மணியைத் தாண்டுகிறது. வாசலுக்கும் உள்ளுக்குமாக நடை காட்டுகிறாள் கனகவல்லி..

          வாசலில் குரல் கேட்கிறது..)
குரல் – ; அப்பாயி.. கனகவல்லி அப்பாயி.. மோசம் போயிட்டோம் அப்பாயி..
     (குரல் பதறுகிறது.. கனகவல்லி வாசலுக்கு தாவி வருகிறாள்..)
கனகு : – என்னடா ஆச்சு.. ஏண்டா இப்படி கத்துறே..
குரல் கொடுத்தவன் :– அப்பாயி.. நம்ப மாமா தண்ணியிலே மாட்டிக்கிச்சி..
                         நம்பள மோசம் பண்ணிடிச்சி அப்பாயி..

கனகு :  – அடப்பாவி பாவி.. என்னடா சொல்றே என் மவனுக்கு
           என்னாச்சு?

      (  கோவிந்தராஜ் இறந்துபோனதை உறுதி செய்கிறான் குரல்
          கொடுத்தவன்)

      ( ஓடுகிறார்கள் ஆற்றுக்கு.. மடுவு தண்ணீரில் உள்ளங்கால்கள் இரண்டு முகம்போல தெரிய உடம்பு முழுக்க தண்ணீருக்குள் அமுங்கி கோவிந்தரா.ஜ்..)

      கனகு : – அய்யய்போ மகமாயி.. எம்புள்ள பறிச்சிட்டியே.. என்னாச்சு
                 எப்பா கோவிந்தராசு.. கோவிந்தராசு.. என்றபடி அப்படியே
                  ஆற்றங்கரையில் மயங்கி விழுகிறாள்..

           கூட்டம் கூடிநின்று கதறுகிறது. மருதமுத்து கேள்விப்பட்டு ஓடிவந்து கதறுகிறார்.. கோவிந்தராசு உடலை அப்படியே எடுத்துக் கரையில் போடுகிறார்கள்.


ஒருவர் –: என்னப்பா ஆச்சு கோவிந்தராசுவுக்கு.. நல்லா நீச்சல் தெரியும்..
          அவன் வலைக்கு மாட்டாத மீன் இல்லியேப்பா..

ஒருவர் –: இல்லண்ணே எல்லாம் புடிச்சிட்டான்.. கடசியா வலய அலச
           தண்ணில போட்டிருக்கான் அதுபோய் பாறாஙகல்லுல
           சிக்கிடிச்சு.. தண்ணியில முங்கி அத எடுத்துட்டிருக்கான்.. பாறை
           நழுவி கை மாட்டிக்கிடிச்சுப்போல..அப்படியே தண்ணிக்குள்ள
           கைய எடுக்கமுடியாம தண்ணிய குடிச்சிருப்பான் போல..

ஒருவர் –: பாடிய தூக்குங்கப்பா.. வண்டி வந்துடிச்சா.. இப்படியே பழைய
            ரோட்டுலேயே வீட்டுக்குப் போயிடலாம்..

ஒருவர் :– ஏம்பா யாராச்சும் மருத்முத்து அண்ணனையும் அண்ணியையும்
           அழச்சிட்டு வாங்க..
                                 000
                  காட்சி – 3   மருதமுத்து கனகவல்லி
மரு   : - நான் உசிரோட இருந்து என்ன பண்ணப்போறேன்.. இனி
        வாழணுமா நான்.. எம் புள்ள வாழாத வாழ்க்கை எனக்கு
         வேண்டுமா..

கனக :– இனிமே ஒரு கணம் இருக்கமாட்டேன்.. ஏதாச்சும் செஞ்சுட்டு
         எம்புள்ள போன இடத்துக்கு நானும் போயிடுவேன்.. மகமாயி..
         கண்ணில்லாவளே.. பழிகாரி.. ஒனக்கு எம்புள்ளதான் கெடச்சுதா..
          இப்படி வாரிப்போட்டுக்கிட்டியே நீ நல்லாவே இருக்கமாட்டே..
         ஒங்கோயில்ல ஒரு சூடம் ஏத்தமாட்டேன்.. ஒரு விளக்கு எரியாது..
         பாவி கொலகாரி.. உங் கண்ணு அவிஞ்சுப்போயிடிச்சா..




மரு  - அப்படி திம்பானே விராலு வறுத்து வச்சா.. அத்தனையும் திம்பான்..
        அப்பாவுக்கு வேணாம்பான்னு.. என் தட்டுல உள்ளதயும் எடுத்து
        திம்பானே.. விலாங்க யாருக்கும் கொடுக்கமாட்டான்.. அத்தனயும்
        எனக்குத்தாம்பா. நறுவுசா திம்பான்..  அந்த கடவுளுக்குக்
        கண்ணில்லியா.. இப்படி கன்னி கழியாம எம்புள்ள
        தூக்கிட்டுப்போயிடிச்சே.. அய்யோ. அய்யோ..

      (தலையிலடித்துக்கொள்கிறார்) வேண்டாண்டி கனகம்  நாம்பளும் செத்துடுவோம்..
                           00000000000

                    காட்சி 4 மருத முத்து கனகவல்லி பக்கத்து வீட்டு
                              பையன் ஒருவன்.

          விடியும் பொழுது  வெறுங்கூடையுடன் திரும்பி வருகிறார் மருதமுத்து. சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு  கூடையையும் நனைந்த வலையையும்  கொண்டு வந்து திண்ணையில் போடடுவிட்டு உட்கார்ந்துகொள்கிறார்.

    வாசலில் குரல் கேட்கிறது பக்கத்துவீட்டு பையன்.

பையன் :  – ஏத்தா.. தாத்தாவுக்கு பயித்தியம் புடிச்சிடிச்சா.. கிறுக்கு தாத்தா.
கனகு –   ஏண்டா அப்படிப் பேசறே.. வாய ஒடச்சிப்புடுவேன்.. அவரப்
           பேசுனா..

பையன் : – என் வாய ஒடக்கறதிலேயே இரு.. என்னா காரியம் பண்ணாரு
           தெரியுமா

கனகு – என்னடா பண்ணாரு?

பையன் :  – நல்ல வலை போட்டாரு நாலஞ்சு வீச்சுலேயே வலயில
          விராலும் விலாங்கு அத்தன மாட்டிக்கிச்சு..

கனகு   – வெறுங்கூடல்ல வந்துருக்கு.. நீதான் பயித்தியமாட்ட உளறுறே

பையன் :–
) இல்லாத்தா.. எல்லாத்தயும் கூடயில போட்டுட்டு வலய
             கழுவினாரு.. அப்புறம் ரொம்ப நேரம் உக்காந்துக்
            கிட்டிருந்தாரு.. ஏந் தாத்தா வூட்டுக்குப் போவுலியான்னே..
            போவணும்டான்னாரு.. சட்டுன்னு கிறுக்குப் புடிச்சமாதிரி
            அத்தன மீனயும் அப்படியே கூடயோடு ஆத்துல
            கவுத்துப்புட்டாரு ஆத்தா.. அது மாதிரி விலாங்கு
           பாத்துருக்கமுடியாது ஆத்தா.. இப்படி யாரு செய்வா.. அதான்
           கிறுக்குபுடிச்சிடிச்சுன்னு சொன்னே..நா வரேன்.. (பையன்
           ஓடிப்போகிறான்)

(கனகவல்லி அப்படியே மருதமுத்துவுக்கு எதிரே உட்கார்ந்து அப்படியே அவரைப் பார்க்கிறாள். அவர் அவளைப் பார்க்கிறார்..)
(எதுவும் கேட்காமல் அவரையே பார்ததுக்கொண்டிருக்கிறாள்)
மருதமுத்து –:  என்னமோ ஆச வந்துடிச்சி.. போய் புடிச்சேன்..
                விலாங்குதான் நெறய மாட்டுனுச்சி.. என்ன என்னிக்கு
                விலாங்க சாப்புட வுட்டுருக்கான் அவன்.. நெனப்பு
             வந்துடுச்சி. யப்பா எல்லாத்தையும் நாந்தான்
              திம்பேங்கறான்.. அதுவும்  ஆத்துக்குள்ளே    
               இருந்து கேக்றான்.. அப்படியே கூடயோட
                 கவுத்துட்டேன்..

                              (முற்றும்)

அடுத்த நாடகம்  -  ஆடிப்பாவை (இலக்கிய நாடகம்)
 




5 comments:

  1. நன்றி ஜெயக்குமார். தொடர்ந்து என் படைப்புகளுக்குப் பின்னூட்டம் தாருங்கள். அது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  2. நெகிழ்ச்சி...

    வலைப்பதிவிலும் தொடர வேண்டுகிறேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் ஐயா.

      Delete
    2. கண்டிப்பாகத் தொடருவேன் இனி.நன்றிகள்.

      Delete