குறுங்கதை 10
நினைப்பதெல்லாம்…
ஹரணி
விமானநிலையத்தில் வெறுத்துப்போய் உட்கார்ந்திருந்தான்
செழியன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. கொரோனா பரிசோதனைகள் செய்ததில் உறுதியாகிவிட்டது.
ஐந்தாண்டுகள் இருந்துவிட்டு சொந்த
ஊருக்கு வருவதற்குப் படாதபாடுபட்டு அனுமதி தந்தார்கள். சென்னை விமானநிலையத்தில் பரிசோதித்ததில்
பாசிடிவ் என்றாகிவிட்டது. எங்கே சிகிச்சைக்கு வைப்பது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை.
சென்னையிலா அல்லது சொந்த ஊரின் உள்ள கல்லூரி, அல்லது வேறு இடத்திலா என்று.
சொந்த ஊருக்குப் போனால் போதும் என்றநிலையில்
நொந்துபோய் உட்கார்ந்திருந்தான்.
ஒருவழியாகச் சொந்தஊருக்கும் அந்த ஊரில்
உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வைப்பது என்றும் முடிவாயிற்று.
மறுபடியும் மிகவும் பாதுகாக்கப்பட்ட
வேனில் இவனோடு இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.
மனைவியிடம் பிள்ளைகளிடம் பேசினான்.
மனைவி ஒரளவு திருப்தியானாள்.
எனக்குப் பயமாயிருக்குப்பா ? என்றான்
மனைவியிடம்.
ஏங்க பயப்படறீங்க.. இங்கே பக்குவமாச்
சிகிச்சை அளிக்கிறாங்க.. பயப்படவேண்டாம்.. நிறைய பேர் குணமாகி வீட்டுக்கு வர்றாங்க..
இல்லப்பா.. உங்களப் பார்கக முடியாமப்
போவுதுன்னு வருத்தமா இருக்கு.
அட ஏங்க.. இதுக்குப் போய் வருததப்படறீங்க..
அஞ்சு வருஷமாப் பாக்காமத்தானே இருக்கோம்.. இன்னும் கொஞ்சநாள்.. சமாளிச்சுக்கிறோம்..
நம்ப பாப்பா பிளஸ்டுவுலே நல்ல மார்க் எடுத்திருக்கா.. நீட்டுலயும் நல்ல மார்க் எடுப்பேன்னு
சொல்லியிருக்கா..நிச்சயம் டாக்டர் சீட்டு கிடைக்கும்.. அத நினைச்சுக்கிடே இருங்க..
தினமும் போன்ல பேசுங்க.. சரியாயிடும்.
சொந்த ஊருலக் குவாரன்டைன் பண்ணியாயிற்று.
தினமும் போனில் பேசினான். இங்கே டாக்டர்களும்
நர்சுகளும் மற்ற ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்டு பிரமித்துப்போனான்.
ஒரு நர்சு சொன்னார்… ஏங்க.. எங்களுக்கும்
குடும்பம் இருக்குங்க.. நான் என் வீட்டுக்குப் போயி ஒரு மாசம் ஆவப்போவுது.. சிப்ட்
முறையில வேலை பார்க்கிறோம்.. என்னோட வேலை பாத்தவங்க வீட்டுக்குப் போயிட்டு வர்ற நாள்
இது.. திடீர்னு அவங்களோட கணவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு.. அந்தக் காரியங்களப்
பாத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டாங்க..அதான் நான் வீட்டுக்குப் போறதில லேட்டு என்றார்.
அவர்களின் சேவையைக் கண்டு உண்மையில் நம்பிக்கை
கொண்டான். ஆறுதலும் அடைந்தான். அதிக மதிப்பெண் எடுத்த மகளிடம் பேசினான்.
ஒருவாரம் போனது. திடீரென்று செழியனின்
அம்மா இறந்துபோனாள்.
சிறிய வயதிலேயே அப்பாவை இழந்து நான்கு
பெண்கள் செழியன் கடைசி. ஐந்துபேரைக் கரையேற்ற அம்மா பட்ட பாடுகள் அவனுள் பெரிய போராட்டத்தை
நடத்தின.
கண்டிப்பா நீங்க போகமுடியாது.. அனுமதி
கிடையாது. நீங்கப் போனால் பலபேரு இங்க வரநேரும். அவங்க குடும்பம் முழுக்கப் பாதிக்கும்..
கண்டிப்பாக அனுமதி மறுத்துவிட்டார்கள்.
செழியனின் மனைவி பேசினாள். என்னங்க பண்ணறது? நடக்கறது நடக்கட்டும்.
நான் போய் அத்தையோடக் காரியங்களப் பார்க்கறேன்..
சரி.. யாரும் எந்த செலவு செய்யவேண்டாம்.
எல்லாம் பொம்பளப் புள்ளங்க.. அதனால நீயே எல்லாச் செலவையும் செஞ்சுடு.. என்றான். அம்மாவுக்கு
நல்ல துளசிமாலை போடு.. அதுக்குத் துளசிப் புடிக்கும்..
காரியங்களைச் செழியன் மனைவியே நின்று
நடத்தினாள். எல்லாச் செலவையும் அவள் செய்கிறாள்
என்றவுடனேயே வாயைப் பொத்திக்கொண்டார்கள்.
கொள்ளி யார் வைப்பது என்கிற பிரச்சினை
வந்தது. ஒரே ஆம்பளப்புள்ள அவனும் மருத்துவமனையில் இருக்கிறான்.
சொந்தத்தில் மகன் முறையுள்ளவர்கள்
யாரும் வரவில்லை. செழியனின் அம்மா இருந்தது பூர்வீக வீடான ஓட்டு வீட்டில். அதுவும்
கொஞ்சமாய் பாழடைந்துபோய்க்கொண்டிருக்கிறது-. இல்லாதவளுக்கு யார் கொள்ளியிடுவார்? கொள்ளியிட்டால் ஏதேனும் கிடைக்கவேண்டுமல்லவா?
கடைசியில் செழியனின் மனைவி சொன்னாள்..
யாரும் வைக்கவேண்டாம். அத்தைக்கு எங்க வீட்டுக்காரர ரொம்பப் புடிக்கும். அவரு கொள்ளி
வைக்கமுடியாத சூழல். அதனால அவர் சார்பில நான் வைக்கிறேன். யாரும் எதுவும் பேசவேண்டாம்
என்று கொள்ளிச் சட்டியை எடுத்துக்கொண்டு முன்னே போனாள் பின்னே ஊர்வலம் கிளம்பியது.
நல்ல முடிவு.
ReplyDeleteநக்கீரன் வெளிப்படுத்திய உண்மை சம்பவம் நினைவுக்கு வந்தது...
ReplyDelete