Thursday, July 9, 2020

குறுங்கதை 2



குறுங்கதை  2.

                       மாஸ்க்… முகவுறை…


           நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்றாலும் அதற்கிணையாகவும் அதனைத் தாண்டியும் குணமாகித் திரும்புகிறவர்கள்எண்ணிக்கையும் இருக்கிறது என்பதுதான் ஆறுதல்.
           இந்த தொற்றுக் காலத்தில் திருவள்ளுவர் நகர் கவுன்சிலர் நாகராஜன் தன்னால் முடிந்ததை செய்துகொண்டேயிருக்கிறார்.
             கூடுதலாகத் தன் பெண்ணுக்குச் சேமித்து வைத்திருந்த கல்யாணப் பணத்தை எடுத்தும் செலவிட்டுள்ளார். அதற்கு எல்லோரும் பாராட்டும் தெரிவித்திருந்தார்கள்.
             எதிர்ப்பு இல்லையென்றாலும் அவரின் மனைவி சற்றே வருததமடைந்திருந்தாள்.
             ஏதாச்சும் வரன் வந்துட்டா என்ன பண்ணுவீங்க? என்றாள்.
             கவலைப்படாத நல்லபடியா முடிச்சிடலாம். ஒரு பிரச்சினையும் இல்ல.
             இல்லங்க வச்சிருந்த பணத்தை கொரோனாவுக்காகச் செலவழிச்சிட்டிங்க.. அதான் கேட்டேன்.
             ஓரளவுக்கு மகளுக்கு வேண்டிய நகைகள் இருக்கு. சீர்வரிசை, மண்டபம், சாப்பாடு இதுமாதிரி செலவுகளுக்குத்தான் பணம் வேணும். இதுல மண்டபச் செலவு இல்ல. செய்யக்கூடாதுன்னு அரசு உத்திரவு. சாப்பாட்டுச் செலவும் ரொம்பக் குறைஞ்சிடும். அதிகக் கூட்டம் போடக்-கூடாது. சீர் வரிசை மட்டுந்தான்.. பார்த்துக்கலாம்.. எங்காச்சும் கடன் வாங்கிக்கலாம். அல்லது தவணை முறையிலே சீர்வரிசை சாமானுங்கள் வாங்கி நல்லபடியா முடிச்சிடலாம்..
               அவரின் மனைவி சமாதானம் ஆனமாதிரி தெரியவில்லை.
               மாலையில் உட்காரந்து பேசிக்கொண்டிருந்தார்கள் கட்சிக் காரர்களுடன்..
                அண்ணே.. நீங்க பாப்பா கல்யாணத்துக்காக வச்சிருந்த பணத்த செலவுபண்ணது ரொம்ப பெரிய புண்ணியம்,ணே என்று ஆரம்பித்துப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
                 நாகராஜன் சொன்னார்..
              கூட்டுறவு வங்கி வாசல்ல பாரு.. அத்தனைக் கூட்டம் இருக்கும். கொத்தனார், சித்தாள், பெயிண்டர்னு தினமும் கூட்டம் இருக்கு. யாராச்சும் கூப்பிடமாட்டாங்களான்னு.. இந்த தொற்றுக் காலத்துல வீடு, கடையும் கட்டறவங்க ரொம்பக் குறஞ்சிடுச்சி.. தினமும் வேலை கொடுத்தாதான் அவங்களுக்குச் சாப்பாடு.. என்னால அத்தனை பேருக்கும் வேல கொடுக்கமுடியாது…ஆனா சாப்பாடு போடுற அளவுக்கு ஆண்டவன் சக்திய கொடுத்திருக்கான்.. செய்யறேன். என்னோட மனசு புரிஞ்சுக்கிட்ட யாராச்சும் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா வருவாங்க.. எல்லாம் என் கையிலயா இருக்கு.. அவன் பார்த்துக்குவான் என்று வானத்தைப் பார்த்துச் சொன்னார்.
               மரம் வச்சவன் தண்ணி விடாமலா போய்விடுவான் என்று ஒருவர் சொன்னார்.
               தண்ணி விடவேண்டாம் தண்ணி வச்ச இடத்தக்கூடவா காட்டாமப் போயிடுவான் என்றார் நாகராஜன். சொல்லிவிட்டு மறுபடியும் சொன்னார்..
             இன்னிக்கு ஒரு வேல செய்யலாம்.. எனக்குப் போட்ட சால்வைங்க நிறைய இருக்கு.. அதுல காட்டன் சால்வைங்களா எடுத்து நம்ப முருகன் டைலர்கிட்ட கொடுத்து எல்லாத்தையும் மாஸ்க் தைக்கச் சொல்லுங்க.. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்துடலாம்.. அடுத்த நம்மோட கொரோனா பணி இதுதான் என்றபடி எழுந்து உள்ளே போனார் கவுன்சிலர் நாகராஜன்.


                         0000
    

4 comments:

  1. சிறப்பான கதை. நல்லதே நினைப்போம். நல்லது நடக்கும்! தொடரட்டும் Good Vibes குறுங்கதைகள்.

    ReplyDelete