குறுங்கதை
6
சார் மன்னிச்சிடுங்க..
ஹரணி
மதியம் 2 மணி தூக்கம் கண்களைத் தடவிக்
கெஞ்சியது. பொதுவாகவே மதியத்தில் தூங்குதல் கெடுதல் என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தக் கொரோனாக் காலத்தில் வேறு வழியில்லை.
வேலையுமில்லை. நன்றாகச் சாப்பிடுவதும் டிவி பார்ப்பதும் தூங்குவதுமாகவே பழகிவிட்டது.
இனி இதை மாற்றுவது கடினம்தான்.
தினமும் ஆட்டோவில் அறிவிப்பு செய்துபோகிறார்கள்
நகராட்சியினர் அன்புகூர்ந்து வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். குறிப்பாக காய்கறிக்
கடைகள் கறிக்கடைகள் மீன்கடைகள் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் என்று. ருசி கண்ட நாக்கு
ஞாயிற்றுக் கிழமை என்று வந்துவிட்டால் கறி சாப்பிடாவிட்டால் தலை வெடித்துவிடும். இப்போது
ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அசைவம் சாப்பிடுவது என்று முடிவெடுத்தாயிற்று.
யாரு கட்டுப்படுத்தினாலும் நாக்குக் கட்டுப்படமாட்டேங்குது..
வள்ளுவரும் சொல்லிப்பார்த்துவிட்டார்.. நாவை அடக்கு என்று.. என்ன பண்ணுவது கேட்கமாட்டேங்குது..
இன்றைக்கு மட்டன் பிரியாணி.. சிக்கன்
கிரேவி முட்டை இத்யாதிகள்…
ஒரு கட்டு கட்டியாச்சு. தூக்கம் கண்களைச்
செருகியது. சரி என்று ஃபேனைப் போட்டு தலையணையை எடுத்து வைக்கும்போது வாசலில் பெண் குரல்
கேட்டது.. சார்.. சார்.. யாரு வீட்டுல இருக்கீங்க?
கோபம் வந்தது. எல்லோரும்தான் வீட்டில்
இருக்கிறோம்.. கோபத்தையும் பதிலையும் அடக்கி வாசலுக்கு வந்தேன்.
ஒரு இளம்பெண் சற்றே குண்டானவள்.
என்ன சொல்லுங்க?
வீட்டுல எத்தன பேருசார்?
நாலு பேரு. பதில் சொல்ல ஆரம்பித்தேன்.
ஆண் எத்தனை? பெண் எத்தனை சார்?
ஆண் இரண்டு. பெண் இரண்டு
சின்ன புள்ளங்க இருக்காங்களா சார்.
இல்லை.
யாராச்சும் சமீபத்தில் வெளியூர்லேர்ந்து
வந்திருக்காங்களா சார்.
இல்லை.
அறுவது வயசுக்கு மேல யாராச்சும் இருக்காங்களா
சார்.
இல்லை.
யாருக்காச்சும் தலைவலி, சளி, இருமல், சுரம்
இருக்கா சார்.
இல்லை.
மூச்சுத் திணறல் இருக்கா சார்?
இல்லை.
யாராச்சும் சுகர் பேஷண்ட் இருக்காங்களா
சார்.
நான் மட்டும்தான். டேபிளட் எடுத்திக்கிட்டு
இருக்கேன். கண்ட்ரோல்லத்தான் இருக்கு.
உங்க போன் நம்பர் சொல்லுங்க சார்.
சொன்னேன்.
நன்றி சார்.. என்று சொல்லிக் கிளம்பினாள்.
கொஞ்சம் நில்லும்மா என்றேன்.
சொல்லுங்க சார்.. என்றாள்.
உங்களுக்கு நேரம் காலம் கிடையாதா.. ஒரு
நாளைக்கு காலையில வர்றீங்க.. இன்னொரு நாளைக்கு மதியத்துல வர்றீங்க.. நினைச்ச நேரத்துல
வருவீங்களா.. தூக்கம் கெட்ட எரிச்சலில் கேட்டேன்.
சார்.. அப்படியில்ல நான் பால்வாடி டீச்சர் சார்.. சின்னக் குழந்தைகள
கொண்டு வந்து விடுறாங்க.. அவங்கள வச்சிக்கிட்டு காலையில வந்து கணக்கெடுத்துட்டுத் திரும்பப்போனா..
நம்மால குழந்தைகளுக்கு வந்துடுமோன்னு ஒரு பயம் இருக்கு சார்.. அதான் மதியத்தோடு குழந்தைகள
அனுப்பிட்டு வரேன் சார்.. எங்களுக்கு சொற்ப சம்பளம் சார்.. கணக்கெடுக்க வரும்போது பயத்தோடதான்
வரேன்.. இத முடிச்சிட்டுப்போய் அப்புறமா நல்லா கை கழுவி, கால் கழுவி. முகம் கழுவி..
சாப்பிடுறோம்.. மன்னிச்சிடுங்க சார்.. முடிந்தவரை அடுத்தமுறை சீக்கிரம் வரேன்.. என்றபடி
போனாள்.
அருமை...
ReplyDeleteநல்ல மனம் வாழ்க...
நன்றி ஐயா.
Deleteசிறப்பு. அவர்களுடைய கடினமான பணி பலருக்கும் புரிவதில்லை.
ReplyDeleteஉண்மை நன்றி ஐயா.
Delete