Tuesday, July 14, 2020


குறுங்கதை 7
                         அம்மா..அம்மா…
                                                    ஹரணி

         அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தார்கள் பாலாவும் சீனுவும். பாலா மூத்தவன் பிகாம் இரண்டாமாண்டு படிக்கிறான். சீனு பிசிஏ முதலாமாண்டு படிக்கிறான்.

           படிப்பில் கெட்டிக்காரர்கள் இல்லை. ஆனால் மோசமில்லை. படித்து சீக்கிரம் வேலைக்குப் போகவேண்டும் என்று படிப்பவர்கள்.

            இப்போது கொரோனாக் காலம் என்பதால் வீட்டிலேயே இருக்கிறார்கள். அரசு விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். எதிலும் ஒழுங்கானவர்கள். இருவரும் எதை செய்தாலும் சொல்லி வைத்தே செய்வார்கள்.

             இந்த வளர்ப்பிற்குக் காரணம் அவர்களது அப்பாவும் அம்மாவும் காரணம்.

             அப்பா தனபாலனின் கெட்டக் குணங்கள்.

             அம்மா லட்சுமியின் நல்ல குணங்கள்.

             நடுத்தரக் குடும்பம். அதற்கேற்ற செயல்பாடுகள். வாழவேண்டும் என்கிற ஆசையில் வாழ்க்கையை வாழத்துடிப்பவர்கள் நடுத்தரக் குடும்பம்தான்.

            தனபாலன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துப் போய்விட்டான்.

           லட்சுமி திகைத்துப்போய்விடவில்லை. தவிக்கவும் இல்லை. இதை எதிர்பார்த்ததுதான். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனியே வந்துவிட்டாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவேண்டும் என்று தீர்மானமாய் உறுதிஎடுத்தாள். பிள்ளைகளும் அம்மா சொன்னதை சத்திய வாக்காக எடுத்துக்கொண்டன. ஒரு பெயிண்ட் கம்பெனியில் சூபர்வைசர் வேலை லட்சுமிக்கு. பத்தாவது படித்த அவளுக்கு இந்த வேலை அதிகம்தான். ஆனால் சம்பளம் கொஞ்சம் அதிகம். அதற்கு லட்சுமியின் உழைப்புக் காரணம்.

             நன்றாகப் போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் பெரிய இடி விழுந்தது.

               லட்சுமியின் மனத்தை ஒருவன் கலைத்தான். பெயிண்ட் கம்பெனியில் மேனேஜர் வேலை பார்த்தவன். பணம், ஆடம்பரம், வசதியான வாழ்க்கை, உன் பிள்ளைகள் சீக்கிரம் மேலே கொண்டு வரலாம் என்று தூண்டில் போட்டான்.

                பிள்ளைகள் தெரியாமல் உடன்படலாம் என்று தூண்டிலை நோக்கிப் போனாள் லட்சுமி. தூண்டிலில் சிக்கியவள் திரும்பவேயில்லை. எல்லாம் மறந்தாள்.

              பிள்ளைகளால் மறக்கமுடியவில்லை.

              அதன் விளைவால் இன்று அதிகாலையில் எழுந்துவிட்டார்கள். வீட்டின் குறுக்கே போன விட்டத்தில ஆளுக்கொரு கயிற்றை இறுகக் கட்டினார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள்

               அண்ணே நான் ரொம்ப ஆசைப்பட்டு நிறைய கனவெல்லாம் கண்டேன்.. என்றான் சீனு.

              ஆமாண்டா நானுந்தான்.. அம்மா ஏண்டா இப்படி பண்ணாங்க?

               அப்பா செஞ்ச தப்பையே அம்மாவும் செஞ்சுடடாங்கண்ணே.. அதான் தாங்க முடியல..

              இருவரின் கழுத்திலும் சுருக்கை மாட்டிக்கொண்டார்கள். காலின் கீழேயுள்ள பெஞ்சிலிருந்து சட்டென்று காலை மடக்கித் தொங்கினார்கள். கழுத்து இறுகத்தொடங்கியது உடல்கள் துடிக்கத் தொடங்கின.

00000


இன்னொரு முடிவு


            தம்பி பேசாம நாம செத்துப்போயிடலாண்டா.. நம்பியிருந்த அம்மா இப்படிப் பண்ணிட்டாங்களே.. தாங்க முடியலடா.. நாளக்கி எல்லாருக்கும் தெரிஞ்சா அசிங்கமாப் பேசுவாங்க.. அவமானப்படுத்துவாங்க.. நாம வாழமுடியாதுடா..

            ஆமாண்ணே.. நீ சொல்றதுதான் சரி.. இப்பயே உங்கப்பா எங்கடான்னு கிண்டல் பேசறாங்க.. வேண்டாண்ணே.. நீங்க சொல்ற மாதிரி செத்துப்போயிடலாம்..

             மேற்கூரை விட்டத்தின் குறுக்கேபோன மரத்தில் கயிற்றைக் கட்டினார்கள். சுருக்குகள் தயாராக இருந்தன.

             கழுத்தில் மாட்டிக்கொண்டார்கள்.

             காலுக்குக் கீழே உள்ள பெஞ்சிலிருந்து இருவரும் காலை மடக்க முயன்றபோது கதவு உடைந்து உள்ளே ஓடிவந்தாள் லட்சுமி…

              அய்யோ..  எம்புள்ளஙகளா.. பாதகத்தி.. புத்தி கெட்டவ தெரியாம தப்புப் பண்ணிட்டேன்… இப்ப வந்துட்டேன்.. இனிமே தப்பு பண்ணமாட்டேன்.. உங்கள விட்டுப்போகமாட்டேன்.. இனிமே தப்பு செஞ்சா நான் தொங்கிடுவேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க ரெண்டுபேரு மேலயும் சத்தியம் என்றாள்.

               அம்மா என்று ஆனந்தமாய் கத்திக்கொண்டே கயிற்றிலிருந்து கழுத்தை விடுவித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள் பெஞ்சிலிருந்து.
                           0000

               

5 comments:

  1. இரண்டாவது நல்ல முடிவு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. ஆனால் இது உண்மை செய்தி. நடந்தது முதல் முடிவுதான்.

      Delete
  2. இரண்டாவது முடிவே எனக்கும் பிடித்தது.

    ReplyDelete
  3. நன்றி வெங்கட் ஐயா. செய்தித்தாளில் படித்து மனங்கசிந்த சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த கதை இது. ஆனால் உண்மையில் முதுல் முடிவுதான் நேர்ந்தது.

    ReplyDelete
  4. இரண்டாவது முடிவு சினிமாடிக்

    ReplyDelete