குறுங்கதை
8
பிழைக்கவேண்டுமே….
ஹரணி
கொரோனா தொற்றியிருந்தால்கூடப் பரவாயில்லை
என்று நினைத்தான் வெங்கடேசன். ஆம் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன வேலைக்குப் போய். பெயிண்டர்
வேலை. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளலாம் என்று அரசு அனுமதித்தும் ஒருசில கட்டிடங்கள்தான்
வேலை நடக்கின்றன. ஆனால் ஒராயிரம் பேர் இருக்கிறார்கள் கொத்தனார்கள், சித்தாள்கள், உதவியாளர்கள்,
பெயிண்டர்கள், சென்ட்ரிங் அடிப்பவர்கள் என்று.. தினமும் காத்திருக்கவேண்டும் யாருக்கு
யோகம் அடிக்கிறதோ அவர்களுக்கு அது கிடைக்கும்.
அப்படி வெங்கடேசனுக்கு அதிர்ஷ்டம் அடித்து
முடித்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன.
இனிமேல் முடியாது. ஐந்து பேர் சாப்பிடவேண்டும்.
அரை வயிறாவது சாப்பிடவேண்டும். மூன்று வேளை இல்லை சாப்பிட ரேசன் அரிசி இருக்கிது. தினமும்
கஞ்சியே குடிப்பது சிரமம்தான். மளிகைப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. மண்ணெண்ணெய் தீர்ந்து
ஸ்டவ் வறண்டுக் கிடக்கிறது. குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் அக்கா பரவாயில்லை. தன்
வீட்டில் சோறு வடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். கூடவே மோர் மிளகாயும் நிறைய வறுத்துக்கொடுத்துவிடுகிறார்கள்.
இஞ்சி ஊறுகாயும் தருகிறார்கள். இதுவே அதிகம்தான். கௌரவமும் காப்பாற்றப்படவேண்டும் வயிறும்
நிரம்பவேண்டும். நிறைய கஷ்டந்தான். ஆனாலும் போராடத்தான் வேண்டும்.
அடுத்த வேலை வரும் வரை வேறு வழியில்லை.
யாரிடமும் கடன் வாங்கமுடியாது. எல்லோரும் தன்னைப் போன்றவர்களே.
யோசித்தான். நாளும் ஒரு வேலை செய்யவேண்டும்.
அது எதுவாக இருந்தாலும் சரி என்று.
யோசித்தான். அவன் குடியிருக்கும் வீட்டிலிருந்து
கொஞ்சம் தள்ளித்தான் ஆறு ஓடுகிறது. அதன் கரையில் ‘மீன்கடைகள் இருக்கின்றன. இன்றைக்குப்
பிழைப்பு அதுதான் என்று முடிவெடுத்தான்.
வீட்டில் மனைவி ஈசுவரியை அழைத்தான்.
உன் தோட்டைக் கழட்டிக்கொடு நாளை மீட்டுக்கொடுக்கிறேன் என்றான்.
மறுபேச்சு பேசாமல் கொடுத்தாள்.
வாங்கிக்கொண்டு போய் கனகு அடகுக்கடைக்குப்
போனான். வைத்தான். ஆயிரம் ரூபாய்க்கு வைத்தான். சீட்டுக்காசு போக எண்ணூற்றுச் சொச்சம்
கிடைத்தது. சொச்சத்தை தனியாக வைத்துக்கொண்டான்.
நேரே ஆற்றங்கரை மீன்கடைக்குப் போனான்
பெரிய பையுடன் சைக்கிளில்…
எல்லாரும் தெரிந்தவர்கள்தான். ஆனாலும்
அதில் நியாயமானவன் வேலாயுதம். அவனிடம் போனான்.
வா வெங்கடேசா..
வேலாயுதம் ஒரு வேலையும் இல்ல பத்து
பதினைஞ்சு நாளா.. பொண்டாட்டி தோட அடகு வச்சிப் பணம் எடுத்திட்டு வந்திருக்கேன். எனக்குக்
கொஞ்சம் மீன்கொடு.. தெருவுக்குள்ள வியாபாரம் பாத்துக்கறேன்..
சரி என்றான். இன்னிக்கு பொடிக் குரவைதான்
விலை குறைச்சல் இருநூத்தி ஐம்பது போவுது..
எரநூறுன்னு எடுத்துக்க என்றான் வேலாயுதம்.
சரி மூணு கிலோ கொடுன்னு வாங்கிக்கொண்டான்.
அதை அரைஅரை கிலோவா பிரிச்சு கவர்களில் போட்டு வாங்கிக்கொண்டான். அப்படியே சைக்கிள்
ஹேண்டில் பாரில் வலது கை பக்கம் மூணும் இடது கைப்பக்கம் மூணும் என மாட்டிக்கொண்டு நேரே ஆற்றுப்பாலம் தாண்டி
ஒரு கிலோ மீட்டர் உள்ளிருந்த நகருக்குள் போனான்.
சொல்லி வைத்தாற்போல எல்லாரும் பொடிக்
குரவை மீனுக்கு ஆசைப்பட்டதுபோல விறுவிறுவென்று விற்றுப்போக வாங்கிக் கொண்டார்கள்.
மூணு கிலோவுக்கும் 150 ரூபாய் நின்றது.
நேரே வீட்டுக்குப் போய் மனைவியிடம்
கொடுத்தான். இந்தா நூத்தம்பது ரூபாய் இருக்கு.. பாத்து சூதனமா செலவு பண்ணிக்க.. இந்தா
இந்தப் பணம் நகைய மீட்டுக்க வச்சிக்கலாம்.. நாளைக்குப் புடிச்ச சீட்டுக்காசு தேத்தி
மீட்டுத்தரேன்..
மனைவி சொன்னாள்.. வேண்டாம் உனக்கு வேலைக்குப்
போகும்போது மீட்டுக்கலாம். இந்தா இந்த மிச்சத்த வச்சி நாளைக்கும் மீன வாங்கி வியாபாரம்
பாரு.. என்றாள். இல்ல நாளைக்கு வேறு வேலை இந்தப் பணத்த வச்சி அது என்னவென்று யோசிக்க
ஆரம்பித்தான்.
அவள் கையிலிருந்த நூற்று ஐம்பதுரூபாயில்
அந்த வீடே வெளிச்சமாய் இருந்தது.
000000
நல்லதொரு கதை. பாசிட்டிவ் கதைகள் மனதுக்கு இதம்.
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜன் சார்.
Deleteஅன்பின் நன்றிகள் ஐயா.
ReplyDeleteஇல்லாள் இருப்பவளாகிறாள்
ReplyDelete