குறுந்தொடர் என்னமோ நடக்குது
அத்தியாயம் 9
அழகான வண்ண ஓவியங்களால் நிரப்பப்பெற்ற குளிரூட்டப்பட்ட
அறை அது.
அகலமான வெல்வெட் சோபா தங்கக் கலரில் மின்னியது.
அறை முழுக்க வெள்ளை விளக்குகள் ஒளியை இறைத்துக் கிடந்தன, தடிமனான உடம்பைப் பொருத்துவதற்கென்றே
செய்தது போன்ற சோபாவில் அமர்ந்திருந்தார் பகவன்தாஸ் சேட். தமிழ் சினிமா உலகின் பிதாமகன்.
பைனான்சியர். தயாரிப்பாளர். பல வெற்றிப்படங்களைத் தயாரித்து கோடிக்கணக்கில் ஈட்டி அவற்றின்
எண்ணிக்கையை மறந்து இருப்பவர்.
கழுத்தில் விரல்கள் அளவுக்கு தங்க செயின்
மின்னியது. அதில் வைரத்தில் ஸ்வஸ்திக் பளபளத்தது.
எதிரே உட்கார்ந்திருந்த சோபாவே வெட்கப்படும்படியாகக்
கூனிக் குறுகி அமர்ந்திருந்தான் இளம் இயக்குநர் பரதன்.
சொல்லுங்க பரதன்ஜி என்றார் சேட்.
பகவான்ஜி… அதான் இந்த எட்டுக்காட்சிகள்தான்
நாம எடுக்கப்போற படம். ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் டெவலப் பண்ணினா 16 ரீல் படம் வரும்.
இடையிடையே சில காமெடி டிராக்.. அப்புறம் கொஞ்சம் சண்டைக் காட்சிங்க.. டைட்டில் சாங்க்
அப்புறம் நாலஞ்சு சாங்க் போட்டுடலாம்.. ஒவ்வொரு காட்சி இணைப்பும் திரிலிங்கா செஞ்சுடலாம்.
பரதன்ஜி எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.
இதை ரொம்ப மர்மமா இணைச்சு திரைக்கதை எழுதிடுங்க.. அப்புறம் இதுல சில விடுபாடுங்க இருக்கு
அத எப்படி இணைக்கணும் பாருங்கஜி…
ஐயா அந்த வளவன் துப்பறிவாளன் கேரக்டர்…
வேறமாதிரி போய் அவனே ஒரு கொலைகேசுல மாட்டிக்கறமாதிரி வச்சு கிளைமாக்ஸ் முன்னால அவனக்
காப்பாத்தறோம். அதக் காப்பாத்தபோறது காமெடியன்ஜி., அப்புறம் நான் இளம் இயக்குநர் கதிர்ங்கற
பேர்ல வரேன். போலிஸ் ஸ்டேஷனில் கொலைக்குற்றவாளியா போற நான்.. அங்க புதுசா வர்ற ஏஎஸ்பி
என்னோட கிளாஸ்மேடன்னு வச்சி.. அங்கிருந்து வேறொரு திருப்பம் வச்சிருக்கேன். அப்புறம்
ராகவனுக்குத் தண்டனை, அந்தப் பணக்காரிக்குத் தண்டனை எல்லாம் இயற்கையா நடக்கறமாதிரி
பிளான் இருக்கு சேட்ஜி…
ஓகே… திருப்தி பரதன்ஜி. ரெண்டு படம்
நம்பளுக்கு ஜெயிச்சுக் கொடுத்துருக்கு.. இது மூணாவது படம்.. என்னமோ நடக்குது நல்லாயிருக்கு
தலைப்பு..
ஆமாம் சேட்ஜி.. தலைப்பிலேயே டைட்டில்
சாங்ககூட நான் எழுதியிருக்கேன்..
ஓ.. வெரிகுட் பரதன்ஜி… இந்தாங்க அட்வான்ஸ்
என்றபடி சிறிய சூட்கேஸ் ஒன்றைத் தூக்கு பரதன் கையில் கொடுத்தார். பரதன் வாங்கிக்கொண்டான்.
பரதன்ஜி அந்த டைட்டில் சாங்க சொல்லுங்க என்றார் சேட்.
சொல்றது என்ன ஜி பாட்டாவே ட்யூன் போட்டிருக்கேன்.
கேளுங்க என்றபடி தன் செல்லை அமுக்கி அந்தப் பாட்டைப் போட்டான் பரதன். பாடல் ஒலிக்க
ஆரம்பித்தது
.
என்னமோ என்னமோ நடக்குது
எங்கெங்கோ எங்கெங்கோ நடக்குது
எதுவும் தெரியல எதுவும் புரியல
இதயத்தில் வெடிக்குது வெடிக்குது…
(என்னமோ)
கண் பார்க்கத் தெரியல..தெரியல..
கண் பார்க்கத் பார்க்கத் துடிக்குது
பயத்துல ரத்தம் ரத்தம் கொதிக்குது
பக்கத்தில் போனா துப்பாக்கி வெடிக்குது..
(என்னமோ)
நல்லவன் எல்லாம் சாவறான் சாவறான்
கெட்டவன் எல்லாம் சுகமாத் திரியறான்
கடவுள் வேடிக்கைப் பார்ப்பானா இல்ல
கணக்க முடிச்சி சீக்கிரம் வைப்பானா
(என்னமோ)
பகவான் தாஸ் அப்படியே கண்களை மூடிக்கொண்டார்.
பரதன்ஜி அவரை ஆர்வமாய் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
(முடிந்தது)
பாடல் வரிகள் அருமை...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. தொடர் முழுமையும் பொறுமையாகக் காத்திருந்து வாசித்த பெருந்தன்மைக்கு.
Deleteநல்லதொரு குறுந்தொடர். முழுவதும் ரசித்தேன் ஐயா.
ReplyDeleteநன்றி வெங்கட் சார்.
Delete