குறுங்கதை
9
மொய்
ஹரணி
வேதமூர்த்திக்கு மிக வருத்தம். பெண்ணுக்குக்
கல்யாணம் நிச்சயித்துக் கல்யாண நாளையும் குறிச்சி மண்டபம், சமையல், மேளம், எல்லாம்
அட்வான்ஸ் தந்து பத்திரிக்கையும் அடிச்சு வீட்டுக்கு வந்த ஒருவாரத்தில கொரோனா லாக்டவுன்.
நகரத்தில் பெரிய இரும்புக்கடை பிசினஸ் வேதமூர்த்திக்கு.
நிறைய தொழிலதிபர்கள் பழக்கம். வியாபாரிகள் சங்கத்திற்கு வேறு தலைவர். மிகப் பிரமாண்டமாக
நடத்துவது சைவத்துக்கு ஒரு மண்டபம் அசைவத்துக்கு ஒரு மண்டபம் என்று பிடித்ததெல்லாம்
வீணாகப் போயிற்று,
இப்ப என்னங்க பண்ணறது? என்று புலம்பினார் அவர் மனைவி ஈசுவரி.
எனக்கும் அதான் புரியலே… முப்பது பேருக்குமேல
கூடாது… மண்டபத்துல கல்யாணம் வைக்கக்கூடாது.. ரேடியோ வைக்கக்கூடாது.. வாண வேடிக்கைக்
கூடாது.. சே.. பரதேசி கல்யாணம் மாதிரி என் வீட்டுக் கல்யாணம் நடக்கக்கூடாது..
என்னங்க பண்ணப்போறே? என்றாள் அவரின்
மனைவி ஈசுவரி.
அவர் மனசுக்குள் வரவேண்டிய மொய் போய்விட்டதே
என்று வருத்தம். உள்ளுக்குள் வைத்திருந்தார். காட்டிக்கொள்ளக்கூடாது. ஆனால் எப்படியும்
வசூலித்துவிடவேண்டும். சொந்தக்காரனும் நண்பர்களும் பலே கில்லாடிகள் அப்படியே கொரோனா
அழுகை அழுதிட்டு நடிச்சிட்டுப் போயிடுவானுங்க..
யோசித்தார். சமையல் காரர்களைக் கூப்பிட்டார்.
என்னண்ணோ சொல்லுங்க?
தனித்தனியாக சமையல்காரர்களைப் பிரித்து
சொன்னார்.
நீங்க வழக்கம்போல 200 பேருக்கு சைவம்
100 பேருக்கு சைவம் தயார் செய்யணும். ஆனா ஒரே நாள்ல இல்ல. அசைவம் நீங்க நாலு நாளைக்குச்
செய்யுங்க.. சைவம் மூணு நாளைக்குச் செய்யுங்க.. நான் ஐட்டம் சொல்லிடறேன்.. என்று அவர்களை
அனுப்பி வைத்தார். அவர்கள் குழப்பமுடன் போனார்கள். ஆனால் ஒத்துக்கொண்டார்கள்.
என்னங்க சொல்றீங்க ஏழு நாளைக்கு விருந்தா?
ஆமாம். ஏழு நாளைக்கு ஏழு தேதில பத்திரிக்கை
அடிக்கணும். ஒரு நாள் விட்டு ஒருநாள் விருந்து. ஏன்னு கேளு.. என்னோட பார்ட்னர்ஸ் மத்தவங்க
எல்லாருக்கும் அவங்க வீட்டுத் தேவைல ஐயாயிரம் பத்தாயிரம் பவுனுன்னு செஞ்சு வச்சிருக்கேன்.
அவங்க எல்லாரூம் வரணும். அதுல லிஸ்ட் எடுத்தா 200 பேரு தேருவாங்க. அவங்க மொய் செஞ்சா
போதும்.. மேக்சிமம் வந்துடும். அவங்க எல்லாரும் அசைவந்தான் சாப்பிடுவாங்க.. அதனால ஐம்பது
ஐம்பது பத்திரிக்கையாப் பிரிச்சுக் கொடுத்திட்டா ஒரு நாளைக்கு ஐம்பது பேரு பிரச்சினையில்லாமப்
போயிடும்.. நம்ப வீட்டு மாடியிலே டைனிங் டேபிள் சேர் வாடகைக்கு எடுத்து ஒருவாரம் கழிச்சு
கொடுத்திடலாம்.. அதேபோல சைவம் 30 பேருன்னு வச்சிக்கிட்டா மூணு நாளைக்குப் போட்டுடலாம்..
அங்கயும் ஐந்நூறுக்குக் கொறையாம செஞ்சு வச்சிருக்கேன்.. மத்தவங்கள விட்டுடலாம். அவங்களையும்
கூப்பிட்டமாதிரியும் இருக்கும் நம்ப கல்யாணமும் கிராண்ட்டா நடக்கும். அந்தக் காலத்துக்
கல்யாணம் மாதிரி எழுநாள் கல்யாணம்னு சிறப்பாப் பேசிக்குவாங்க.. நாம்பளும் அப்படியே
சொல்லிப்புடணும்.. கொரோனா வாழ்கன்னு சொல்லுடி.. என்றார்.
0000
ஹா...ஹா... நல்லதொரு திட்டமிடல்...
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஎன்ன ஒரு கால்குலேஷன்! :) ரசித்தேன்.
ReplyDeleteநன்றி வெங்கட் சார்.
Delete