Tuesday, January 31, 2012

பாரதி தரிசனம்...


                        இம்முறை திருநெல்வேலி பயணம். ஒவ்வொரு முறை திருநெல்வேலி போகும்போதும் வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெறும். மாலையில் வகுப்புகள் முடித்த களைப்பினாலும் முந்தைய இரவு முழுக்கப் பயணம் செய்த களைப்பினாலும் சோர்ந்துபோயிருந்தாலும். டிபன் சாப்பிட ச் செல்லும்போது சொன்னார்கள் இதுதான் பாரதி படித்த பள்ளி என்று. பார்த்துவிட்டு மனசுக்குள் வணங்கிவிட்டு சாப்பிட்டு படுத்தால் போதும் என்று உறங்கப்போய்விட்டு மறுநாள் வகுப்புகள் முடித்ததும் உடன் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்கிற முனைப்பிலேயே திருநெல்வேலி பயணங்கள் முழுக்க அமைந்திருந்தன.

                        ஆனால் இந்தப் பயணம் வெகு சுவையானது. கொடுப்பினையானது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் வகுப்புகள் இம்முறை பாளையங்கோட்டையில் இல்லை. ரயில்வே நிலையத்திற்கருகில் உள்ள ம.தி.தா..இந்து கல்லுர்ரி மேல்நிலைப்பள்ளியில். இதுதான் மகாகவி பாரதி படித்த பள்ளி. வெகு உற்சாகமாகிவிட்டது. நான்தான் வகுப்புகள் நடத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர் எனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் இருக்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தமை மகிழ்ச்சியானது.

                       எங்கள் வகுப்புகள் முதல் தளத்தில். பாரதி படித்த வகுப்பறை தரை தளத்தில். உடன் இறங்கிப்போனோம் நானும் சக நண்பர்களும். அந்த பள்ளியின் வாட்ச்மேனை வேண்டிக்கொண்டு பாரதி பயின்ற வகுப்பறையைத் திறந்துகாட்டச் சொன்னோம். திறந்து காட்டினார். நிலைப்படியைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே போனேன். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் பாரதி பயின்ற வகுப்பறையின் தரிசனம் கிடைத்தது கொடுப்பினை.

                       பாரதி அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்ட இடத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தபோது நான் என்னை மறந்துபோனேன். மனசெங்கும் ஒரு இனந்தெரியாத உணர்வை அனுபவித்தேன். அதனை என்னால் சொற்களில் சொல்லமுடியாது. அந்த வகுப்பறையில் பாரதியின் புகைப்படம். பாரதி நேசித்த ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் புகைப்படம். புதுமைப்பித்தனும் அந்தப் பள்ளியில்தான் பயின்றதால் அவரின் புகைப்படம். பாரதி வகுப்பறையில் மேல் வரிசையில் உட்கார்ந்து எழுந்து ஏதோ ஆசிரியரிடம் வினவுவது போன்ற புகைப்படம் என் அமைந்திருந்தன. இவையாவும் வரையப்பட்ட படங்கள்.

                     இனி அந்த கொடுப்பினை தரிசனம் உங்களுக்கும்.


மேற்கண்ட படத்தில் இடதுபுறம் மேற்பெஞ்சில் வலதுபுறம் பாரதியின் இருக்கை.


மேல் வரிசையில் கையுயர்த்தி நிற்பதுதான் பாரதி. இது வரையப்பட்ட படம். இப்படத்தில் அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் ஓர் பாலத்தின் அருகில் உள்ள விநாயகர் கோயில்.                     பாரதி நேசித்த அற்புதக் கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் புகைப்படம்.‘

பாரதி அமர்ந்து இருந்த இடத்தில் நானும் அமர்ந்து அனுபவித்த உணர்வுகள் மிகக் கொடுப்பினையானவை.
11 comments:

 1. //ரயில்வே நிலையத்திற்கருகில் உள்ள ம.தி.தி.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில். இதுதான் மகாகவி பாரதி பள்ளி.//

  ம.தி.தி. இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளி என்று தவறாகத் தட்டச்சு ஆகிவிட்டது. ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளி. மதுரை திரவியம் தாயுமானவர் மேல் நிலைப் பள்ளி என்பதன் சுருக்கம்.

  நான் ஒன்பதாவது வகுப்பில் படித்தது இந்தப் பள்ளியில் தான். அது 1956-57 கல்வி ஆண்டு.
  திரு. ஆறுமுகம் என்பவர் பள்ளித் தலைமை ஆசிரியர். அப்பொழுதெல்லாம் பள்ளிக் கல்வி 11 வகுப்புகள். வண்ணாரப்பேட்டையில் வீடு. அங்கிருந்து நடந்தே தாமிரபரணி ஆற்றைக் கடந்து தினமும் பள்ளிக்கு வருகை. மஹாகவி படித்த பள்ளியில் படிக்கிறோம் என்று எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமை. எனது திருநெல்வேலி இளம் பருவ நினைவுகள் குறித்து எனது பதிவில் இலக்கிய இன்பம் பகுதியில் புறநானூற்றின் 243-வது தொடித்தலை விழுத்தண்டினாரின் பாடலுடன் இணைத்துப் பதிவிட்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும்.

  பாரதி படித்த இந்தப் பள்ளியும், வேலை பார்த்த மதுரை சேதுபதி ஹைஸ்கூலும் மறக்க முடியாத பள்ளிகள். இத்தனை வருடங்கள் கழித்து, இந்தப் பள்ளி வகுப்புகளின் புகைப்படங்களைப் பார்க்க மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  மிக்க நன்றி, ஹரிணி சார்!

  ReplyDelete
 2. நல்லதொரு அனுபவத்தோடு புகைப்படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 3. க‌விப்பிரிய‌ர்க‌ளுக்கு பார‌தியொரு க‌ற்க‌ண்ட‌ல்ல‌வா! உங்க‌ள் ப‌ர‌வ‌ச‌ம் உண‌ர‌ முடிகிற‌து ப‌திவில்.

  ReplyDelete
 4. பாரதி வாழ்ந்த நாட்களை மனசுள் கொண்டு வந்த உணர்வுகளை அழகாய் பகிர்ந்து விட்டீர்கள்

  ReplyDelete
 5. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.பாரதி அமர்ந்த இடத்தில் அமர்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். புகைப் படத்தைக் கண்டவுடன், பாரதி அமர்ந்திருந்த அறைக்கும் நானும் நுழைந்ததைப் போன்ற ஒரு உணர்வு. நன்றி

  ReplyDelete
 6. ஹரணி!மறக்கமுடியாத கொடுப்பினை அது.

  1980-1982ல் அங்குதான் என் மேல்நிலை +2 வகுப்புகள் பயின்றேன். பாரதியின் வகுப்பறையில் நானும் மாணவனாய் அமர்ந்து எடுத்துக்கொண்ட கறுப்பு வெள்ளை புகைப்படம் காணாமல் போய்விட்டது என்னால் தாங்கமுடியாத இழப்பு. ஆனாலும் அந்த பென்ச்களை உங்கள் படத்தின் வாயிலாக மறுபடியும் தொடவும் அமரவும் வாய்த்தது.

  மற்றொரு தகவல் புதுமைப் பித்தன் கல்வி பயின்றதும் இப்பள்ளியில்தான். அங்குள்ள அலுவலகத்தில் பாரதி-புதுமைப்பித்தன் இவர்களின் ஓவியம் தொங்கும்.அப்போதுதான் எனக்குள் இருந்த கவிஞனும் அவர்கள் கால் பட்ட இடத்திலிருந்து கவி பயிலத் துவங்கினான்.

  நெஞ்சை விம்ம வைத்த அற்புதமான பதிவு ஹரணி.

  ReplyDelete
 7. //மற்றொரு தகவல் புதுமைப் பித்தன் கல்வி பயின்றதும் இப்பள்ளியில்தான்.//

  ”மற்றுமொரு தகவல்” ”மறக்கவியலாத தகவல்” என்று இருக்கவேண்டும். பிழை பொறுக்க.

  ReplyDelete
 8. என்ன ஒரு ஆனந்தமான உணர்வு உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்பதை உங்கள் எழுத்திலிருந்து உணர முடிகிறது. இரண்டு முக்கியமான நபர்கள் படித்த பள்ளியில் சென்று சில மணித்துளிகள் இருந்தாலே கிடைக்கும் ஆனந்தம் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாதுதான்....

  புகைப்படங்களையும் பகிர்ந்ததற்கு நன்றி சொல்லவேண்டும்... படம் பார்த்தாவது நாங்களும் எங்களை தேற்றிக்கொள்ளலாம் அல்லவா....

  ReplyDelete
 9. ஜிவி தஙகள் கருத்துரைகளுக்கு நன்றி. ம.தி.தா. திருத்திவிட்டேன். வேகமாக தட்டச்சிடும்போது ஏற்பட்ட பிழை. பொறுக்க.

  ReplyDelete
 10. புதுமைப்பித்தன் பயின்றைதையும் என்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன். படம் இருக்கிறது. அதனை வெளியிடாமைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 11. பாரதி பயின்ற வகுப்பறையைத் திறந்துகாட்டச் சொன்னோம். திறந்து காட்டினார். நிலைப்படியைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே போனேன். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் பாரதி பயின்ற வகுப்பறையின் தரிசனம் கிடைத்தது கொடுப்பினை.

  பதிவைப் படித்ததே கொடுப்பினையாக உணர்கிறோம்..

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

  ReplyDelete

Follow by Email