Wednesday, June 25, 2014

காவிரிக்கரையில்.....பொட்டல நினைவுகள்...                             திருவையாற்றுக்கு அருகில் திரண்டோடுகிறது காவிரி. எனக்கு
விவரம் தெரிந்த நாள் முதலாக காவிரி எனக்குப் பழக்கம்.

                             அம்மாவின் பிறந்த ஊர் காவிரிக்கருகில். சிறு வயதிலிருந்து அம்மா அவள் பிறந்த ஊரில் நடக்கும் கோயில் திருவிழாவிற்கு அழைத்துக்கொண்டு போய்விடுவாள்.

                               காப்பு கட்டிய மறுநாளிலிருந்து நாங்கள் அங்கிருப்போம். அம்மாவின் தம்பிகள் மாமாக்கள் அவர்களின் குடும்பங்கள் என அந்த கிராமத்தையே அல்லோகப்படுத்திவிடுவோம். காலையில் சாப்பிட்டு கிளம்பினால் வயல் வரப்புகளில் ஒடுவோம். நண்டுகள் பிடிப்போம். ஈச்ச பழங்கள். இலந்தைப்பழங்கள் எனப் பறித்து தின்போம். இலந்தைப் பழங்கள் நாவில் புண்ணாக்கி எரிச்சல் வரும்போது அருகேயுள்ள வாய்க்கால் நீரை அள்ளிஅள்ளிக் குடிப்போம். அப்புறம் குளத்தில் நீச்சல். தாமரை பறிப்போம். அதைன் தன்னை மடக்கி ஒடித்து மடக்கி மாலையாக்கி திரௌபதையம்மனுக்குப் போட்டுவிட்டு மதியச் சாப்பாட்டிற்கு 4 மணிக்கு வீட்டிற்குள் நுழைவோம்.

                             அறுவடை செய்த வயலில் வாணவேடிக்கை. தீமிதிக்காகப் போடப்பட்டுள்ள படுகளம்.. பாரதக்கதையின் இறுதிக்கதை என ஒவ்வொரு நாளும் போதாமல் ஏக்கமுறச்செய்யும்.

                               காவிரிக்கரையோரமாக அம்மாவின் ஊருக்கு நடந்தே போவோம். ஊரு தொடங்கும் முக்கில் முனியாண்டவர் கோயில் உண்டு. அங்கு அம்மா கண்டிப்பாகச் சாமி கும்பிடவைத்து திருநீறு பூசிக்கொள்ளவேண்டும். அப்புறம் அருகிருக்கும் டீக்கடையில் சூடாகப் பொட்டலங்கள்  காராச்சேவு. மணி காராபூந்தி. பக்கோடா. ஓலைப் பக்கோடா எனப் பொட்டலங்கள் வகைவகையாக இருக்கும். தின்று முடிப்பதற்குள் நடையும் முடிந்துவிடும். ஊரும் வந்துவிடும்.

                                எனவே ஒவ்வொருமுறை போகும்போது காவிரி பற்றி பல கதைகளை அம்மா சொல்லிக்கொண்டேவருவாள். கடைசியாக காவிரியைக் கடந்துதான் அம்மாவின் கிராமத்திற்குப் போகவேண்டும். எனவே ரோட்டை விட்டுக் காவிரிக்கு இறங்கும் ஒற்றையடி மண்பாதையைப் பார்த்துவிட்டால் பறந்துகொண்டு ஓடுவோம். ஓடி வரும் எங்களை குளிர்காற்றால் வரவேற்பாள் காவேரி. அங்கங்கே திட்டு திட்டாக தண்ணீர் கிடக்கும். அதில் அப்படியே பொத்தென்று விழுந்து உடல்முழுக்கக் குளித்து பின் காய்ந்து பின் குளித்து எனப் போவோம்.

                                  காவிரிக்கரையேறும்போது கரையோரம் பெரும்பான்மை பல தோட்டங்கள் கிடக்கும். அம்மாவின் சின்னம்மாக்கள் பயிரிட்டிருப்பார்கள். அவரை. கீரை. புடலை. பாகல். முள்ளங்கி. எனவிருக்கும். எங்களைப் பார்த்ததும் அம்மாச்சிக்கள் படபடவென்று முள்ளங்கிகளைப் பிடுங்கி காவிரித் தண்ணீரில் அலசிவிட்டு ஆற்றில் கிடக்கும் உருக்காங்கல்லில் வைத்து அந்த முள்ளங்கியை முழுசாக நசுக்கி பின் இடுப்பில் வைத்திருக்கும் சிவப்பு மிளகாய் உப்பு சேர்த்து பொடித்த பொடியைத் துர்வி அந்தப் பச்சை முழு முள்ளங்கியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அதன் சுவையை எழுத ஒரு நாவல் ஆகும். பின் அப்படியே காவிரி தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்துவிட்டு அம்மாவின் பிறந்த வீடு நோக்கி ஓடுவோம்.

                                  அம்மாவின் சித்தப்பா அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி சின்ன அக்காவைத் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்துகொண்டு போனார். நகரத்தில் வளர்ந்த அக்காவிற்கு கிராமம் ஒத்துவரவில்லை. பல பிரச்சினைகள். அக்கா நிமமதியாகவே இல்லை. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமாகப் பழகிக்கொண்டது. அப்போது எல்லாம் தஞ்சையில் இருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு அக்காவைப் பார்க்கப் போவது வழக்கம்.

                                 போவதற்கு அடிப்படையான காரணங்கள்.

                                 1. அக்காவின் பாசம்.
                                 2, அக்காவின் வாசனையான சமையல்.
                                 3. சமைப்பதற்கு ஆகும் நேர இடைவெளியில் கிராமத்து
டீக்கடையில் வாங்கிகொடுக்கும் பொட்டலம். பெரும்பாலும் காராசேவுதான்.
அப்புறம் இனிப்புப் போண்டா.
                                 4. வரும்போது குறைந்த பட்சம் 1ரூபாய் கைச்செலவுக்குத்
தருவார்கள். அது பெரிய தொகை.

                               எப்படியும் வாராவாரம் அக்காவீட்டிற்குச் சென்றுவிடுவோம்.
அக்கா வீட்டில் தங்கியிருக்கும் நாட்கள் சுகமானவை. எங்களைவிட அக்கா
ரொம்ப நிம்மதியாக இருக்கும். எப்பவாவது திருவையாறு ஜெயம் தியேட்டரில் சினிமா பார்க்கக் காவிரியாற்றைக் கடந்துபோவது உண்டு. தியேட்டரில் நாற்காலிகள் கிடையாது. மணல் பரப்பியிருபபார்கள். ஆனால் அக்கா கிளம்பும்போதே போட்டு உக்கார துண்டும் படம் முடியும்வரை தின்பதற்கு இனிப்புப் போண்டாவும் காராச்சேவும் வாங்கி மஞ்சள் பையில் கொண்டு வந்துவிடும்.

                               காலையில் சாப்பிட்டுவிட்டு துணிகளை எடுத்துக்கொண்டு அக்கா காவிரிக்குக் குளிக்கப்போகும். துணைக்குப் போவேன். அக்கா துணிகளைத் துவைத்துக் கொடுத்தபின் வாங்கி வாளியில் வைத்துவிட்டு. பின் அக்கா நீச்சலடித்துக் குளிக்கும். ஆசையாக இருக்கும். அப்புறம் நீச்சல் பழகியபின் காவிரியை அக்கா வீட்டிற்கருகில் இறங்கி நீந்தி எதிர்க்கறையில்
தியாகராசர் உற்சவம் நடக்கும் படித்துறையில் போய் ஏறி பின் அதேபோன்று ஆட்கொண்டார் கோயிலுக்கருகில் இறங்கி அக்காவின் கிராமத்திற்குப் போகும் பாதையில் கரையேறுவோம்.

                           எனவே அதற்குப் பின் அடிக்கடி கிராமங்களில் நடக்கும் துக்க காரியங்கள் என்றால் முன்னால் நிற்பேன் போவதற்கு. காரணம் பிணம் எடுக்கும் வரை எங்கும் சாப்பிடமுடியாது. ஆனால் அக்கா கிராமத்து டீக்கடையில் வாங்கிக்கொடுக்கும் பொட்டலங்கள் தின்பதற்குக் கிடைக்கும்.
பின்னாளில் வளர்ந்து ஆளான பிற்பாடும் ஒவ்வொரு அம்மாச்சியாக உயிர் பிரிந்துகொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் ஆசையுட்ன் போவேன். முதலில் பொட்டலம் காராசேவு தின்றுவிட்டுதான் சாவு வீட்டிற்கே போவேன்.

                          கட்லை மாவு அதிகம் இருக்கும் காராச்சேவுவில். அரிசி மாவும் கலந்து இருக்கும். ஆனாலும் அப்போதெல்லாம் 1 ரூபாய் பொட்டலம் நிறைய இருக்கும். கலர் வெந்நீரைப் போல டீ இருக்கும். ஆனாலும் அந்தப் பொட்டலத்தின் ருசியும் டீயின் ருசியும் வேறு எங்கும் கிடைக்காதது. அந்தப்
பொட்டலத்தின் அளவு  அந்தக் கிராமத்தின் பெருந்தன்மையை சூடிக் கொண்டு
இருக்கும்.

                           வயது வித்தியாசமின்றி எல்லோரும் பொட்டலங்கள் சாப்பிடுவார்கள். பல் முளைத்த குழந்தைக்குக்கூட அந்தப் பொட்டலங்களைத் தின்னக் கொடுப்பார்கள்.

                             அக்காவிற்கு ஒரு நோய் வந்து முடக்கிப்போட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையிலேயே இருந்தாள். ஏதோ நரம்புப் பிரச்சினை என்றார்கள். நாளுக்கு நாள் அக்காவின் உடல் சுருங்கிக்கொண்டே வந்தது அளவில். பார்க்காத வைத்தியங்கள் இல்லை. மருத்துவம் நடந்து
கொண்டேயிருந்தது. மாத்திரைகளும் லேகியங்களும் எனத் தின்றுகொண்டே
இருந்தாள் அக்கா.

                               ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய இளம் வயதில் அக்கா இறந்துபோனாள். வாழவேண்டிய வயதில் துர்ர்ந்துபோனாள். காவிரிக் கரையில்தான் தகனம் செய்தோம்.  மறுநாள் பால் தெளியலுக்குப் போனோம்.
ஆனால் அக்காவின் உடம்பில் கடுகளவுகூட எலும்பு கிடைக்கவில்லை. மைதா மாவைப்போல உடம்பு முழுக்க பவுடராகவே இருந்தது. அவள் பதினேழு ஆண்டுகள் சாப்பிட்ட மாத்திரை மருந்துகளின் மோசமான விளைவுகளால் உடம்புமுழுக்கத் தீபட்டதும் வெண் சாம்பலாக இருந்தது.
எனவே பால் தெளியலுக்கு ஒரு கொட்டாங்குச்சியில் அந்தளவுக்கு சாம்பலை
எடுத்து எல்லாக் காரியமும் நடந்த்து. அந்தக் கொட்டாங்குச்சி அளவு என்பது
ஒரு காராச்சேவு பொட்டலத்தின் அளவுதான்.

                              இன்றுவரை பொட்டலம் சாப்பிடுவது பிடிக்காமல் போய்விட்டது. அக்காவே பொட்டலம்போல ஆகிவிட்டாள். இன்றைக்குக் காவிரி வறண்டுப்போய்விட்டது. அக்கா வாழ்ந்த காலங்களில் நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடிய காவிரி அக்காவின் துர்ர்ந்த வாழ்வைப்போலவே அவளுக்காகவே வறண்டுப்போய்விட்டது போலும் அழுது அழுது.

                               ஏதேனும் நிகழ்வு குறித்து திருவையாறு தாண்டிச் செல்லும்போதெல்லாம் காவிரியைப் பர்க்கிறேன். வறண்டுக் கிடக்கிறது.
அக்காவின் நினைவில் வறண்டுபோகிறது மனதும்.
                               

17 comments:

 1. தங்களின் சகோதரியின் நினைவில் உருக்கமான பதிவு. அக்கா - இன்னுமொரு தாய் என்பார்கள். அக்காளின் பாசம் எத்தனை பேருக்குக் கிடைக்கின்றது?.. அது எல்லாருக்கும் கொடுத்து வைப்பதில்லை.
  எனது மனமும் கலங்குகின்றது.

  ReplyDelete
 2. காவிரிக்கரை ஊரின் நினைவுகள் இனிமையாக இருந்ததை ரசித்துக் கொண்டு வந்தபொழுதே ..சோகம் வந்துவிட்டதே. //ஒரு காராச்சேவு பொட்டலத்தின் அளவுதான்.// கண்ணீர் நிறைந்து விட்டது ஐயா..

  ReplyDelete
 3. ஐயா வணக்கம் . எனக்கு உங்கள் பதிவை படிக்கும் போது கிராமத்தில் வாழக் கொடுத்து வைக்கவில்லையே என்னும் ஏக்கம் வருகிறது. என் சிறிய வயதுகள் கிராமமும் அல்லாத நகர்மும் அல்லாத அரக்கோணத்தில் கழித்தது நினைவுக்கு வருகிறது. முன்பே ஒரு பதிவு அரக்கோணம் நாட்கள் என்று எழுதி இருக்கிறேன் அந்தவயது நினைவுகளும் நிகழ்வுகளும் என்றும் பசுமையாக மனசில் உலாவருகிறது. பாலக்காட்டில் எங்கள் அக்கிரகாரத்தில் ஒரு வருடம்போல் இருந்தேன். அதையும் பதிவாக்கி இருக்கிறேன் அந்த நினைவுகளும் சுகமானவை உங்கள் அனுபவங்கள் படிக்கும்போது இதை எழுதாமல் இருக்க முடியவில்லை. நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் கண்ட காவிரிபோல் இப்பவும் இருக்கிறதா.

  ReplyDelete
 4. காவிரிக்கரையில் உற்சாகமாக நீந்திய பதிவு
  தமக்கையின் சோகமான முடிவில் கனத்துப்போனது..!

  ReplyDelete
 5. மனம் கனத்துப் போனது ஐயா...

  ReplyDelete
 6. தங்கள் வலைத்தளப் பின்புலம் எழுத்துகளைப் படிக்க விடாமல் செய்கிறது . மேசைக்கணினி யில் பரவாயில்லை . அலைபேசி யில் மிக கடினமாக உள்ளது. வண்ணம் மாற்ற வேண்டிய அவசியம் தெரிகிறது .(2) இந்த ஆண்டு இறுதிக்குள் 'நினைவுக் குறிப்புகள் ' வெளி யிடப் போகும் யோசனை இருக்கிறதோ ?

  ReplyDelete
 7. மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
  நானும் இழந்தவைகள் பலவற்றை
  நினைக்கச் செய்து போனது இப்பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஆற்றுக்குளியல், காராசேவுப் பொட்டலம், திருவிழா கதைகள், அம்மாச்சிகளின் ஆதுரம் என்று வரிசையாய் அறியாப் பாலகனின் உற்சாகத் துள்ளலோடு கிராமத்து அனுபவங்களை வாசித்துக்கொண்டே வந்த எனக்கு அக்காவின் அகால மரணம் வேதனையைத் தந்தது. இறுதிவரிகள் சுமக்கும் மொத்தப் பதிவின் பாரமும் வாசித்த எனக்குள்ளும் மெல்லப் பரவுகிறது.

  ReplyDelete
 9. அன்புள்ள செல்வராஜ் சார்

  வணக்கம்.அந்த அக்காவின் அன்பும் சமையலும் இன்றைக்கும் மனதுககுள் வாசமாய் இழையோடிக்கொண்டிருக்கிறது. நனறி.

  ReplyDelete
 10. அன்புள்ள கிரேஸ்

  வணக்கம். நினைவைவிட்டு அகல மறுக்கிறது அந்தக் காட்சி. சுற்றிலும் எரிந்தடங்கிய கங்குகள் அவற்றின் நடுவே மைதாமாவைக் கொட்டியதுபோல அக்காவின் சாம்பல். மருந்துக்குக்கூட ஒரு சிறு எலும்புகூட கிடைக்கவில்லை. அக்காவிற்கு சிகிச்சை செய்த மருத்துவர்களில் இருவரைத் தவிர மற்ற மருத்துவர்களை மன்னிக்கவே அவ்வளவு வலிமையான மருந்துகளைத் தந்தவர்கள். என்னவென்று சொல்லாமலே சரியாகிவிடும் என்று தொடர்ந்து தாள்களில் பட்டியல் எழுதியவர்கள்.

  ReplyDelete
 11. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

  வணக்கம் காவிரியை என்றைக்கும் மறக்கமுடியாது. இன்பமான காலங்களில் அதில் நீந்திக் களித்த காலங்கள் அதேபோன்று பல மரணங்களுக்காக காவிரிக்கரையில் நின்ற காலங்கள் எதையும் மறக்கமுடியாது. அப்பா நகரத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தாலும் ஒவ்வொரு விடுமுறைக்கும் அம்மாவுடன் கிராமத்தில் இருந்த நாட்கள் அதிகமானவை. அதேபோன்று அம்மாவின் சின்னம்மாக்கள் (அம்மாச்சிகள் நாலைந்துபேர்கள்). எனவே கிராமத்தை அணுஅணுவாக ரசித்த காலங்கள் அவை.

  காவிரிக்கரையின் இருபுறமும் எல்லாமும் பயிரிட்டிருந்தார்கள். எல்லாம் அம்மாச்சிகளின் கொல்லைகள். பாத்தி கட்டி கீரை வகைகள் இடையிடையே வெண்டை..கொத்தவரங்காய். புடலை (இதற்கு சிறு பந்தல்
  போட்டிருப்பார்கள்) பக்கத்தில் வாழைக் கொல்லை இடையிடையே ஒல்லியாக உயர்ந்த அகத்திகீரை மரங்கள் (மரம்போல இருக்கும்) முள்ளங்கி. அவரைக்கொடிகள் இப்படி அவற்றின் அனுபவமும் அதிகம். தென்னந்தோப்பு. மல்லிகைத் தோட்டம் கனகாம்பரச் செடிகள் (அவற்றின் மீது தண்ணீர் ஊற்ற விதைகள் வெடித்து சிதறும் அழகு அற்புதம்) அம்மாச்சிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்குள்ளும் தோட்டங்களுக்குள்ளும் வரப்புகளிலும் ஓடி வாய்க்கால்களில் குளித்து இவையெல்லாம் வாழ்வின் உன்னதத்தை அனுபவித்தவை.

  இதேபோன்று பெரியம்மா வீட்டிற்குப் போகும்போதெல்லாம் அங்கு கடலை. கத்தரிக்காய் தோட்டங்கள். மிகப்பெரிய தோட்டங்கள் தோட்டத்தைச் சுற்றி வந்தால் இரண்டு நாளைக்கு கால்கள் வலிக்கும். அப்படியே தோட்டத்தின் நடுவே பெரியம்மா கடலைச்செடியை கொத்தாகப் பறித்து அப்படியே பக்கத்தில் ஒடும் தண்ணீரில் அலசி அவித்துக் கொடுப்பார்கள். சுடசுடச் சாபபிட சுவையாக இருக்கும். அப்புறம் பச்சைக் கத்தரிக்காய் பிஞசுகளைச்சாப்பிடக் கொடுப்பார்கள். அத்தனை சுவை அது. இதேபோன்று பிஞசுக் கொத்தவரங்காள். வெண்டைக்காய் என பச்சையாய் தின்ற காலஙக்ள சுகமானவை.

  அப்புறம் பெரியப்பா குதிரை வண்டி வைத்திருந்தார். குதிரை ரேசும் உண்டு. நாலைந்து குதிரைகள் உணடு, அவற்றுக்கென பெரிய நிலத்தில் பயிர் செய்யாமல் வெட்ட வெளியாக விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவற்றில் அவிழ்த்துவிடப்பட்ட -குதிரைகளைத் துரத்திப்போய் பிடித்து வருவோம். குறிப்பாக வெண்மையும பழுப்பு நிறமுமான குதிரை இன்றைக்கு மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

  அடுப்பில் சமையல் சுள்ளிகளால் எரியும அடுப்பு. எது சமைத்தாலும் மணக்கும். திண்ணையில் அமர்ந்து சாப்பிடுவோம்.

  எல்லாமும் முடிந்துவிட்டன காலவெளிகளில்.
  கல்மரங்கள் முளைத்த காடு எனும் நகரத்தில் இப்போது அந்தக் கிராம நினைவுகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது இப்போதான வாழ்க்கை ஐயா.

  நன்றிகள்.

  ReplyDelete
 12. நன்றி இராஜராஜேஸ்வரி

  நன்றி தனபாலன்

  ReplyDelete
 13. அன்புள்ள ஐயா

  வண்ணத்தை மாற்றியிருக்கிறேன் பாருங்கள்.

  தங்களின் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
  ReplyDelete
 14. அன்புள்ள ரமணி ஐயா

  வணக்கம். உண்மைதான் எப்போது நினைத்தாலும் அல்லது காவிரியைக் கடக்கிறபோதெல்லாம் மனம் கணத்துப்போகிறன்.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. அன்புள்ள கீதமஞ்சரி

  வணக்கம். என்னுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் ஒரு சகோதரன். சகோதரிகளில் இவர் இரண்டாவது. இப்போது இல்லை. என்மீது மட்டுமல்ல எல்லோர் மீதும் அள்வற்ற பாசத்தைக் கொட்டியவர். விவரமறியாத பதினாறு வயதில் கிராமத்தில் திருமண வாழ்க்கைக்கு உடன்பட்டு வாழவேண்டிய நிர்ப்பந்தம். மனத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் தனக்கு இடப்பட்ட வாழ்க்கையை மனதார ஏற்றுக்கொண்டவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயானவர். (இப்போது அந்த மூன்று பேரும் நன்றாக இருக்கிறார்கள் ஆனால் அக்காவிற்குக் கொடுத்துவைக்கவில்லை). கடைசிவரை பாசம் குறையாமல் ஆனாலும் படுக்கையில் கிடந்து துன்பப்பட்டவர். அந்தக் காட்சி இன்றைக்கும் மனசுலுக்கும். எல்லாம் கடந்தும் இழந்தும்தான் வாழவேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 17. மனதினை கனக்கச் செய்த பதிவு.....

  தண்ணீர் இல்லாத காவேரி ஆற்றினைப் பார்க்கும்போதெல்லாம் மனதினுள் ஒரு விம்மல்......

  ReplyDelete

Follow by Email