Sunday, October 26, 2014

அன்புள்ள...

                  இன்றைக்கு தினமணியில் ஒரு கவிதைபோன்ற செய்தியை வாசித்தேன்.

                    எந்த ஓர் உயிரையும்
                    அதிகம் நேசித்துவிடாதே
                    அவர்கள் பேசாத
                    ஒவ்வொரு நொடியும்
                    மரணத்தைவிட
                    கொடுமையாக இருக்கும்..

உண்மைதான். இந்த நேசிப்பு என்பது ஒருவரோடு காலம் முழுக்க அருகில் இருந்துதான் நேசிக்கவேண்டும் என்பதில்லை.  அது வாய்த்தவருக்குக் கொடுமையானது. அதைப்போன்றுதான் அவர்களின் எழுத்துக்களும். ஒரு படைப்பாளியைப் பார்த்துப் பேசாமலேயே அவரின் எழுத்துக்களோடு வாழ்வது அதனை நேசிப்பது என்பது அற்புதமானது.

               இந்த வாரம் முழுக்க மனம் கணத்திருக்கிறது.

               காரணம் மூன்று மரணங்கள். பேரிழப்புகள்.

               1. நடிகர் எஸ்எஸ்ஆர் என்றழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்.
              2.  எழுத்தாளர்  பெருமைமிகு ராஜம் கிருஷ்ணன் அவர்கள்.

              3. எழுத்தாளர் கலை விமரிசகர் தேனுகா அவர்கள்.

              முதல் இரண்டுபேரோடு பழக்கமில்லை என்றாலும் படங்களின் வழியாக முன்னவரும் எழுத்துக்களின் வழியாகப் பின்னவரும் என் மனதை நனைத்தவர்கள். தெளிவான உச்சரிப்பில் வசனம் பேசி காட்சிக்கு உயிர்கொடுத்தவர் எஸ்எஸ்ஆர். அவரின் படங்கள் படங்களல்ல வாழ்க்கை. வாழ்க்கையாக அவரின் படங்களின் அவரின் நடிப்பு. அவரின் குடும்பத்திற்கு மனத்தின் ஆழத்திலிருந்து அஞ்சலியும் ஆறுதலும்.

              2. தஞ்சை ப்ரகாஷ் அவர்கள் எங்கள் குரு எங்களுக்கு நல்ல இலக்கியங்களுக்கான திசையில் வழிகாட்டி நின்றபோது எண்பதுகளில் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் படித்து நெகிழ்ந்தது உண்டு. காலந்தோறும் பெண் என்கிற அவரின் சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையிலான பெண் குறித்த சிந்தனைப் பதிவுகளான நுர்லை வாசித்தபோது நிறைவு. படைப்புலகிலும் ஆய்வின் பரப்பிலும்  அவரின் தேர்ந்த தெளிவும் எழுத்தும் நாளைவரையும் அழியாக கோலங்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமை செலுத்திய பெண் எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன். சூடாமணி அநுத்தமா அம்பை சிஆர் ராஜம்மா காவேரி வாஸந்தி என பெண் எழுத்துக்களில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர்கள். இதற்குக் காரணம் இவற்றை வாசிக்கச் சொன்ன குரு ப்ரகாஷ் அவர்கள்.

              பலர் பல எழுத்தாளர்களுடன் குறிப்பிடத்தக்க நினைவுகளில் கலநதுகொண்டு சரியாக அவர்களுட்ன் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் புகைப்படம் எடுத்துப் பரிமாறும்போது பொறாமையாக இருக்கிறது. எப்போதும் நம்மைவிட்டுப் போகமாட்டார் என்று ஒவ்வொரு மணிக்கணக்கில்அருகில இருந்தும் என் குரு ப்ரகாஷ்உடன் ஒரு புகைப்படம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு அணிந்துரை வாங்கமுடியவில்லை கடைசிவரை. எனவே ராஜம கிருஷ்ணன் போன்றவர்களை எப்படியேனும் ஒருமுறை சந்தித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது. இது என் ராசி போலும். ஒவ்வொருவரின் இழப்பின் பின்னேதான் இதனை உணரும் வாய்ப்பை எனக்களிக்கிறார் கடவுள்.

             இப்போது என் கண்களில் கரிப்பு மணிகள். அம்மாவின் ஆன்மா அமையுறட்டும்.

               மூன்றாவது கலை விமரிசகர் தேனுகா. வங்கிப் பணியில் இருந்துகொண்டு ஓவியங்களைப் புதுஉலகின் திரையில் தரிசிக்க வாய்ப்பளித்தவர். வண்ணங்கள் வடிவங்கள் வழியாகவே அவர்அறிமுகம். ஒவ்வொரு தஞ்சைக் கூட்டத்திற்கும் அவர் வருவார். ப்ரகாஷ் அழைத்திருப்பார். முதல் அறிமுகத்தில் ஹரணி என்று அறிமுகம் செய்துகொண்டேன். இனிமையாக ஓவியம் குறித்த புரிதலை உண்டாக்கினார்.

                அதற்கு சரியாக நான்கு முறைகள் சந்தித்திருக்கிறேன் அவரை. நான்காவது முறை சமீபத்தில் தி இந்து தமிழ் நாளிதழ் நடத்திய வாசகர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது நானும் நண்பர் அனன்யா அருள் அவர்களும் சென்று நலம் விசாரித்தோம். என்னுடைய சந்தேகப்புத்தி என்னைத் தெரிகிறதா சார் என்றேன். என்ன ஹரணி நன்றாகத் தெரிகிறது என்றார். உடல் தளர்ந்திருந்தது. பின் அவரிடம் கவிஞர் நா விச்வநாதன் அவர்கள் பேசத்தொடங்கப் பிரிந்தோம் நானும் அருளும். வழக்கமாகப் பேசுகிற பேச்சிலிருந்து மாறுபட்டிருந்தது தேனுகாவின் பேச்சு. மாறுபட்ட பேச்சு. உணர்ச்சி இழையோட இந்துவின் தன்மைகுறித்து தேவை குறித்து மிக அழகாகப் பேசினார். என்ன இது தேனுகா இன்றைக்கு மாறுபட்டிருக்கிறார் பேச்சில் என்றுகூட நானும் அருளும் நினைத்தோம். கூறிக்கொண்டோம் பரஸ்பரம். கடைசிப் பேச்சு என்றாலும் அவர் உடல் தளர்ந்திருந்தாலும் சுவை குறையாத தளராத பேச்சு அது.

                 இன்றைக்கு அவர் இவ்வுலகிலிருந்து உடல் வழியாகவும் விடைபெறுகிறார். அவரின் எழுத்துக்கள் அவரின் முகம் இன்றைக்கும் முகத்தில் ஓர் ஓவியம்போல மனத்திரையில் விரிந்துகொண்டேபோகிறது.

                 தி இந்து வாசகர் விழாவில் அவரிடம் கைகுலுக்கம்போது  சிறுபிள்ளைகளின் கழற்றிப்போட்ட சட்டைகளைக் கையில் எடுப்பதுபோது மிருதுவாக இருந்தது அவரின் குலுக்கல். அது தளர்வு என்றாலும் ஓர் ஓவியத்தைத் தொடடுத் தடவுவதுபோலிருந்தது.

                  தேனுகா சார்...

                    

Thursday, October 23, 2014

தீபாவளி கொண்டாடியவர்கள்...



              தீபாவளி கொண்டாடியவர்கள்...


              தீபாவளி ஒவ்வொரு ஆண்டு வந்தாலும் அதுவொரு எதிர்பார்ப்பை உருவாக்கியே வருகிறது.

                முன்கூட்டியே அவரவர் தகுதி, வேலை, சம்பளம், பட்ஜெட் இவற்றிற்கு ஏற்பத் திட்டமிட்டு குடும்பத்தின் அனைவரும் சேர்ந்துபோய் துணி எடுத்து வந்துவிடுகிறார்கள்.

                 தீபாவளி வருவதற்கு முன்னமே இரண்டு மாதங்களுக்கு முன்பே துணி எடுத்து ரிலாக்ஸாகத் தைத்துக் காத்திருப்பவர்கள். இவர்களின் திட்டமிடல் எப்போதும தவறாது.

                ஒரு மாதத்திற்கு முன்பு தீபாவளி குறித்து பேசத் தொடங்கி அது தொடர்பாகக் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டை வந்து அது அணையாத நெருப்புப்போல தீபாவளி வரும் ஒரு வாரத்திற்கு முன்பு அணைந்துபோகும். எப்படியோ பணம் புரட்டி எல்லாமும் எடுத்தவுடன்.

                தீபாவளிக்கு முன்தினம் கண்டிப்பாக அன்றைக்கு எப்படியும் மழை பெய்யும். ஒரு குடைதான் இருக்கும். குடை மறந்துபோகும். கூட்டம் நெருக்கும். எதையும் பார்த்து நிதானமாக எடுக்கமுடியாது. என்றாலும் வேறு வழியின்றிப் போய் எடுத்து வீடு வந்துசேரும்போது நேரம் மட்டுமல்ல எரிச்சலும் நீண்டிருக்கும்.

                           அவரவர் வசதிக்கேற்ப வாகனங்களில் வருகிற கூட்டம்.  வாயில் பற்ற வைத்த சிகரெட் அல்லது பீடியுடன் ஒரு கையால் வேட்டியின் நுனியைப் பற்றிக்கொண்டு முன்னே ஒரு கிராமத்து கணவன் அசைய.. பின்னே அவன் மனைவியும் பிள்ளைகளும் முகத்தில் மகிழ்ச்சியுடன்.. வேடிக்கைப் பார்த்தபடி நெரிசலில் நடப்பார்கள்.

                           பல விவாதங்கள்.. சிறுசிறு சண்டைகள்...பிரச்சினைகள்.. வீட்டிற்குப் போனவுடனே துணி பத்தவில்லை மாற்ற வாவென்ற அழைப்புக்கள். டாப் இருக்கு சரியான பாட்டம் கிடைக்கலே..  இவ்வளவு கலர் இருக்கு நான் நினைச்ச கலர் அமையலே.. எல்லாருக்கும் நல்லா அமைஞ்சுடிச்சி.. எனக்குத்தான் கலரும் அமையலே துணியும் அமையலே.. இப்படி பல உரையாடல்கள்.. பணம் பத்தாமை.. மனம் போதாமை... குணம் போதாமை..

                       எப்படியே தீபாவளி நாள் விடிகிறது.

                       முன்தினம் இரவிலிருந்து மத்தாப்புகளும் ராக்கெட்டுகளும் வண்ணம் காட்ட.. படபடவென்று பட்டாசுகள் வெடிக்கின்றன.

                       தீபாவளியன்று வீடுவீடாகப்போய் பலகாரங்கள் பரிமாறி துணிகுறித்த விசாரிப்புகள். எதிர்பார்ப்புகள்..

                         எல்லாம் முடிந்து அன்று மாலை..

                         ஒரே உரையாடல் எல்லோரிடத்தும்

                         என்னதான் பாத்துப் பாத்து எடுத்தாலும் இந்த வருஷமும்
டிரெஸ் சரியா அமையலே..  நாலைஞசு பேரு சொல்லிட்டாங்க.. இது மாட்ச் இல்லே.. இதப்போய் எடுத்தியான்னு.. சே..

                          குடிசைகள் அடர்ந்த  தெருக்களின் ஊடே நடந்தால்... நடக்க முடியாது...வாசல்தோறும் பளபளப்பான சேலைகளில் உள்ளே கன்னங்கரேலென்ற பெண்கள் வாயெல்லாம் சிரிப்பாக.. ஆண்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு,  எனப் புளொரெசண்ட் கலர்களில் சட்டை வெள்ளை வேட்டி.. பிள்ளைகள் உடம்பில் ஜாக்கெட் அணிந்ததுபோல மினி சர்ட்.. மேலே ஒரு கலர் கீழே ஒரு கலர்.. சட்டையில் அங்கங்கே பிளாப்புகள் பட்டன்கள்.. பாக்கெட்டுகள்.. கீழே பேண்டை மடித்துவிட்டிருப்பார்கள்.. கைகளில் உதிரி வெடிகளைப் பிடித்திருப்பார்கள்... கையெல்லாம் மருந்தின் படலம் முட்டையோட்டின் உள் சவ்வுபோலப் படர்ந்திருக்கும்.. அதை பேண்ட்டில் தேய்த்தபடி வெடி வெடிப்பதில் மும்முரமாக.. சின்னஞ்சிறு பிள்ளைகள் பாதி முறுக்கு கடித்தபடியோ.. அதிரசம் வாயில் பாதி சட்டையில் பாதி உதிர்த்தபடியோ..சட்டைப் பாக்கெட்டில் துருத்திக்கொண்டிருக்கும் வாழைப்பழம்.. இப்படி தெருமுழுக்க எல்லோருக்கும் தீபாவளியை உதிர்த்துக்கொண்டிருக்கும் சிரிப்பு.. சிரிப்பு...

                      ஒவ்வொருஆண்டும் இப்படித்தான்... இவர்கள்தான் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.. மறுநாள் எதுவுமில்லை என்ற உணர்வை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டு..

                            மனதால் கொண்டாடுவோம் தீபாவளி மட்டுமல்ல எல்லாவற்றையும் எல்லாமும் குறையாக இருந்தாலும்..


Saturday, October 11, 2014

செய்திகளும் உணர்வுகளும்



செய்தி 1


                     இவ்வாண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசினை இருவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

                       அ) இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி (60)
                      ஆ) பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (17)

                   
                 குழந்தைகள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக அவர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (நன்றி தினமணி- 11.10,2014)

                      அவர்கள் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது இந்த குழந்தைகள் கல்வி மற்றும் உரிமை இவற்றுக்காகத் தொண்டு  ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள.

                       நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

                        .........இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே
                       வலுவான உறவுகளைக் கட்டமைக்கக் கூட்டாகப் பாடுபடுவது
                       என்று சத்யார்த்தியும் நானும் முடிவு செய்துள்ளோம். நான்
                       அமைதியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியாவும்
                        பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது.
                        ஆஸ்லோ நகரில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள
                        நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்குமாறு நவாஸையும்
                        மோடியையும் நாங்கள் கேட்டுக்கொள்வோம்.

17 வயது சிறுமியின் ஆத்மார்த்தமாக மனிதநேயமிக்க பொறுப்பான உண்மையான உலகெங்கும் அமைதி நிலவவேண்டும் என்றெண்ணும் உள்ளங்களின் ஒட்டுமொத்தக் குரலாகப் பதிவு செய்துள்ளார் மலாலா. மகளே உன்னை வணங்குகிறேன்.  உன் எண்ணம் நிச்சயம் ஈடேறும்.

                சமீபமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான மோதலில் உயிரிழந்துபோன வீரர்களின் குடும்பங்களை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். எத்தனைக் கனவுகள். எத்தனை எதிர்பார்ப்புகள். எத்தனை திட்டங்கள். எல்லாமும் இழந்து அந்த முகந்தெரியாத குடும்பங்களின் துயரை யார் பகிர்ந்துகொள்வது.

                     எப்படியாயினும் உயிரற்ற குண்டுகளில் அரிதான மானிட உயிர் முடிந்துபோவது வேதனையாக உள்ளது.

                        மலாலாவின் வேண்டுகோளை நாமும் வழிமொழிந்து வேண்டிநிற்போம்.

                          0000000000000000000000000000000000000000000


செய்தி 2

                          அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் மறைவு.

                          காந்தியக் கொள்கைகளில் தன்னை இறுக்கமாக இணைத்துக் கொண்டு கடைசிவரை அப்படியே வாழ்ந்தவர் அக்டோபர் 2 அன்று  இயற்கை எய்தியது எத்தனை ஒற்றுமையானது.

                          அவரின் பணிகள் அல்லது தொண்டுகள் எண்ணிலடங்கா.

                          எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னிலை உயர்ந்தவர். அத்துடன் முடிந்துவிடவில்லை. உயர்ந்த நிலைக்குப் போனபிறகு தன்னிலும் தாழ்ந்து கிடக்கிற மக்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்திட முனைந்தவர்.

                            அவரின் நிதி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் பார்சல் நிறுவனங்களும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வையும் கொடுத்தன.

                            காந்தியம் ஆன்மீகம் எனும் இருநிலைகளில் தன்னைப் பிணைத்துக்கொண்டு வாழ்ந்த மகான்.

                           மட்டுமல்லாமல்  தமிழின் பழைய இலக்கியங்களையும் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காந்தியம், காப்பியங்கள் எனும் எல்லாவற்றையும் தரமான அச்சுப் பதிப்பில் அதிகப் பக்கங்களில் மிகக் குறைந்த விலைக்குக் கொடுத்தார்.

                          அச்சுக்காகும் செலவின் பெரும்பகுதியை தன் பங்காகக் கொடுத்து வாங்குவோருக்கு குறைந்த விலையிலும் கொடுப்போர்க்கு நிறைவான விலையிலும் அளித்த மாண்பு. அதேபோன்று அவரின் சிந்தனைகளையும் தொடர்ந்து ஓம் சக்தி இதழில் எழுதி வந்தார்கள். சமூகத்தின் பல்வேறு முககிய மக்கள் பிரச்சினைகள் குறித்து எழுதியதோடு அதற்கெனத் தீர்வுகளையும் பல ஆலோசனைகளையும் முன் வைத்தவர்கள்.

                          கடைசிவரை மாண்புமிக்க மாண்பாளராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் தொண்டுகளால் கடைசிவரை வாழும் பேறுபெற்றவர்.

                          அவரின் ஆன்மா அமைதிகொள்ள அவரின் குடும்பத்தார் அமைதிகொள்ள இறைவனை வேண்டி நிற்போம்.

                                        0000000000000000000000000000000


செய்தி 3

                        என்னுடைய பல கதைகள் பரிசு பெற்றிருக்கின்றன.

                        நிறைய கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

                        என்றாலும் தினமலரில் வெளிவந்து முதல் பரிசு பெற்ற கதைக்கு நான் பெற்ற கடிதங்களும் கைபேசி வழி பெற்ற பாராட்டுக்களும் நெகிழ வைத்தன. இன்னும் படைப்புலகில் மேலான இலக்கையடைய அவை உந்துதலாக இருக்கின்றன.

                          குறிப்பாக ஆய்வுலகிலும் படைப்புலகிலும் அளப்பரிய  சிந்தனைகளையும் நுர்ல்களையும் வெளியிட்டுப் பல பரிசுகளும் பெற்றவர்.
தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் முக்கியமான பல கமிட்டிகளில் அங்கம் வகிப்பவர்.

                        நேர்மை, சத்தியம், ஒழுக்கம், கடமை தவறாமை, கடின உழைப்பு, தேர்ந்த வாசிப்பு, தேர்ந்த எழுத்து, எல்லோரிடத்தும் அன்பு செலுத்துதல், உதவுதல் என இன்றுவரை பணிஓய்வு பெற்றும் தன் எழுத்துக்களில் ஓய்வுபெறாமல் எழுதிக்கொண்டிருக்கும் மூன்றெழுத்துத் தகைமை. பெருமை.

                                கு. வெ. பா.

                                எனும்

                               பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

                     அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு  தன்னுடைய மன எண்ணத்தைக் கவிதையாக்கித் தந்துள்ளதை நீங்களும் அறியத் தருகிறேன்.
இதனைத் தரக் காரணம். அவ்வளவு எளிதில் அவரின் பாராட்டுக் கிடைத்துவிடாது. அவர் மனதுக்குப் பட்டால்தான் அதனைக் குறித்துப் பேசுவார். எத்தகையே ஆளுமையாளரின் படைப்பாக இருந்தாலும்.

                               இந்தக் கவிதை எனக்கு கிடைத்த இரண்டாவது முதல் பரிசாகக் கருதுகிறேன்.

                              ஒருநங்கை            இறந்தா         ளாக
                                  உலகோர்தாம்   ஏற்றி                டாத
                              திருநங்கை             தனைம          ணந்தான்
                                   சீர்மிகும்              குடும்பம்       சேர்த்தான்
                              தருணங்கள்           சோதனை     தந்து
                                   தடைகளை        விளைத்த     போதும்
                               மரணங்கள்            கூட                 எம்மை
                                   விலக்கிடா         என்று             ரைதத்தான்.


                               மகள்மணம்            கொள்ள        வந்தோர்
                                    மணவறை         தன்னில்       இந்த
                               வகைத்திரு             நங்கை          வந்தால்
                                    மணமதே            வேண்டாம்   என்றார்
                                அகத்தினில்           மாற்ற            மில்லை
                                    அவளென்றன்   மனையே      யாவாள்
                                 சுகம்துக்கம்           இரண்டி          னுக்கும்
                                     துணையவள்    என்று             ரைத்தான்


                                  இப்படி                     யாக                  அன்பர்
                                       எழுதினர்          கதையொன்    றிங்கே
                                  செப்பிடு                வித்தை            யன்று
                                        செயலிது         மனித                நேயம்
                                  ஒப்பிடின்             அவளும்          தாயே
                                         உலகவர்         உணர்க            என்றே
                                   அப்படி                  உரைத்த          நண்பர்
                                        அன்பழகன்      வாழ்க              நன்றே.

                                   
                                    வனமலர்                  போற்பி           றந்து
                                           வாழ்க்கையே   கனவாய்ப்     போன
                                     இனமலர்                  என்று               மாலை
                                           எதனினும்          சேர்ந்தி            டாத
                                      குணமலர்                திருநங்           கைக்கே
                                           கொடுத்தனர்      ஏற்றம்            இங்குத்
                                       தினமலர்                  பரிச                 ளித்த
                                             சிறுகதை         சிறந்த                தன்றே

                                       
                                        அன்பழகன்            கதைக              ளெல்லாம்
                                              அடிநாதம்         மனித                நேயம்
                                         பண்புரை               திறத்தைக்       காண்மின்
                                               பலப்பல           நலிந்த               மக்கள்
                                         அன்பினுக்            கேங்கி               நிற்கும்
                                               அகத்துறை     துன்ப                  மெல்லாம்
                                          என்பினை             உருக்கு              மாறே
                                                இயம்பிடும்    நேர்த்தி               நன்றே...


           
                        இந்தக் கவிதையினை எனக்காக என் படைப்புக்காக எழுதிட எடுத்திட்ட நேரம் சிறிதெனினும அது எனக்குக் கிடைத்த பொன்னான வரம்.
அத்தகைய மாண்புடை பேரறிஞனின் வார்த்தைகளைத் தங்களோடு பகிர்ந்துகொள்வது மிக மகிழ்ச்சியான தருணம்.

                     0000000000000000000000000000000000000000000000000000

                                    

Sunday, October 5, 2014

அன்பு வேண்டுகோள்

அன்பு வேண்டுகோள்...

     
                    அனைவருக்கும் வணக்கம்.

                    என்னுடைய பேருந்து நாவல் வெளிவந்திருக்கிறது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதனை முன்னோட்டமாக வலைப்பக்கத்தில் எழுதியபோது இதற்கு நிறைய கருத்துக்கள் வந்தன. மகிழ்ச்சியாக இருந்தது.  ஐநது நாவல்கள் பாதிக்குமேல்  வளர்ந்து நின்றிருக்கும் நிலையில் இந் நாவல் முழுமையுற்றிருக்கிறது. கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

              குறிப்பாக வெளிவந்த குறிப்பிட்ட சில வாரங்கள் வரை தொடர்ந்து கருத்துக்கள் உரைத்தவர்கள்

                       மதிப்பிற்குரிய ஜிஎம்பி ஐயா
                       திருமிகு ரிஷபன்
                       சகோதரி கீத மஞ்சரி
                       சகோதரி நிலா மகள்
                       இளவல் ஜெயக்குமார்

உங்களுக்கு தனிப்பட்ட நன்றிகள். அன்புகூர்ந்து உங்கள் இல்ல முகவரியை எனக்கு மின்னஞ்சல் வழி தெரிவிப்பின் நாவலை அனுப்பிவைக்க ஏதுவாகும்.

                            நன்றிகள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000