Monday, October 21, 2013

எழுதப்படாத உயில்....குறுந்தொடர்...2

குறுந்தொடர்...


                                            எழுதப்படாத உயில்.....2



                                 ரங்கராஜன் அடிக்கடி மனம் சோர்ந்துபோனாலும் வேலையில்  சோர்ந்துபோவதில்லை.

                                 செய்கிற வேலையைத் திருத்தமாகச் செய்வார்.

                                 யாரும் அதில் குறைகாண முடியாதது மட்டுமல்ல. அந்த வேலையை மறுபடியும் செய்யவேண்டியதில்லை.

                                 அத்தனை நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்.

                                 ஆனால் உலகியல் நீதி வேறு என்பதுதான் ரங்கராஜ்ன் வரைக்கும் நிருபிக்கப்பட்டிருந்தது.

                                 உண்மை உழைப்பு நேர்மை இவற்றோடு பணி செய்பவனுக்கு எப்போதும் பணியிலும் சுமை இருக்கும் வாழ்க்கையிலும் சுமை கூடியிருக்கும்.

                                ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

                                ஒருவேலையும் செய்யாமல்.. செய்கிற வேலையிலும் கவனக் குறைவாகவும் செய்கிறார்கள்...  அலுவலகத்தில் நுழைந்தவுடனேயே அரசியல்...

                                 ஆனால் லஜ்ஜையே இல்லாமல் துளிகூட கூச்சமும் இல்லாமல் மாதம் பிறந்தால் சம்பளம் மட்டும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

                                   ரங்கராஜனுக்கு அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு விஷயம் அடிக்கடி மனத்திற்குள் கேள்வியாக வந்துபோகும்.

                                   இப்படி ஊரை ஏமாற்றி மனசாட்சியின்றி வேலையும் பார்க்காமல் ஆனால் சம்பளம் மட்டும் வாங்கிகொண்டுபோகும்போது அவர்கள் வீட்டில் இப்படி உழைக்காமலே ஊதியம் பெறுகிறாயே இது உனக்கு கேடில்லையா என்று யாராவது ஒருத்தராவது கேட்கமாட்டார்களா?

                                  எப்போதோ படித்த பழமொழி நினைவுக்கு வந்துவிடும்.

                                  நச்சு மரத்தில் எப்படி நல்ல பழம் பழுக்கும்?

                                  நிச்சயம் குடும்பமே நச்சாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உடனே சமாதானமாகிவிடுவார்.

                                 ஒவ்வொரு முதல் தேதியிலும் இந்த ஓரங்க நாடகத்தை மனதிற்குள்ளே அவரே நடித்து அவரே இயக்கி அவரே பார்த்து நடத்திக் கொள்வார்.

                                  யாரோ கூப்பிட நிமிர்ந்தார்.

                                  ரங்கராஜன் சார் ஓஏபி பில் போயிடிச்சான்னு தாசில்தாரு கேக்கறாரு..

                                  அனுப்பி நாலு நாளாச்சு... கண்ணன் என்றார்.

                                  சார்.. நமக்கு வேண்டியவரு.. ரொம்பநாள் குடும்ப நண்பர்.. அவரோட சால்வன்சி பைலு தாசில்தாரு மேசையிலேயே கெடக்கு..

                                  என் மேசைக்கு வந்தா உடனே அனுப்பிடுவேன் வெங்கட்ராமன் என்றார்.

                                  அதுபோதும் சார்... ரொம்ப நன்றி..
                 
                                   சார் டீ.. என்றபடி நாயர் கடைப் பையன் டீ கொண்டு வந்தான்.

                                   என்னடா எப்படியிருக்கே?

                                   ஏதோ சாரே..  நாள் கழிஞ்சி... நிம்மதியில்லா...

                                   உனக்கு என்னடா கவலை?

                                  இந்த உலகத்துலே வந்து பொறந்திட்டா சாரே எல்லோருக்கும் கவலைதானே மிச்சமிருக்கு.. எப்ப எது நடக்கும்னு யாருக்கு தெரியும் சாரே,, அவன் ஏட்டை படிச்சுட முடியுமா? வரேன் சாரே,, அப்புறமா டீ கிளாச எடுத்துப்போறன்..

                                    இவருடைய பதிலை எதிர்நோக்காமல் போய்விட்டான்.

                                    எதார்த்தமா பேசிவிட்டுப் போகிறான் வாழ்வின் நுட்பத்தை.

                                    யோசித்தபடியே டீயைக் குடிக்க ஆரம்பித்தார்.

                                    கடைசி மிடறை உறிஞ்சத் தொடங்கும்போது ப்யூன் நடேச்ன அவசரமாக வந்து அவர் மேசை முன் நின்றான்.

                                    என்ன நடேசா?

                                     தாசில்தாரு கூப்பிடறாரு சார்...

                                    என்ன விஷயம்?

                                    தெரியலே சார்... ஆர்டிஓ கிட்டேர்ந்து தபால் வந்துச்சி.. பிரிச்சு பார்த்ததும் போய் கூப்பிட்டு வான்னார்..

                                     என்ன  பிரச்சினை என்று தெரியவில்லை. ஏதாவது கடிதம் அனுப்பியதில் இணைப்பு விட்டுப்போயிருக்கும்.

                                    என்னவாயிருக்கும் என்று ஆர்டிஓ ஆபிசுக்கு அனுப்பிய தபால்களை வரிசையா மனத்தில் புரட்டியபடி எழுந்து தாசில்தார் அறை நோக்கிப் போனார்.

                                    வாங்க ரங்கராஜன் என்றார் தாசில்தார்.

                                    சொல்லுங்க சார்.. என்றார்.

                                    உக்காருங்க... என்றார்..

                                    ரஙகராஜன் உட்கார்ந்தார்.

                                    வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி தாசில்தார் பதவி உயர்வு வந்திருக்கு ரங்கராஜ்ன்..

                                     ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எதிர்பாராதது இது.

                                      சட்டென்று இப்படி வருமென்று தெரியவில்லை.

                                      இந்தாங்க தபால் என்று கொடுத்தார் தாசில்தார்.

                                      வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.  உண்மைதான்.

                                      மனசுக்குள் மகிழ்ச்சி புரண்டு படுத்தது.

                                      நாயர் கடைபையன் பேசியது நினைவோடையில் ஒருகணம் மிதந்துபோனது.

                                      ரொம்ப நன்றி சார்.

                                       நன்றி போதாது ரங்கராஜ்ன். இன்னிக்கு சாயந்தரம் எல்லாருக்கு எஸ்கசி தரணும்.

                                      கண்டிப்பா சார்.

                                      தன்னுடைய இருக்கைக்கு வந்தார்.  என்னவோ சாதித்ததுபோலிருந்தது அந்த பதவி உயர்வு கடிதம் வந்ததும்.

                                      தன்னுடைய உழைப்பிற்கு ஒரு மரியாதை இருக்கிறது என்று நம்பிக்கை துளிர்த்தது.

                                      இன்னும் நன்றாக உழைக்கவேண்டும் என்றுதான் அவருள் தோணியது.

                                      வீட்டிற்குத் தெரிவித்தால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். வேறு யாரிடத்தில் உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளமுடியும் தன் குடும்பத்திடம் தவிர.

                                    அப்போது டெலிபோன் மணியடித்தது.

                                    பதிவறை எழுத்தர் பஞ்சநாதம் எடுத்து... ரங்கராஜன் சார்..
உங்களுக்குத்தான் போன்.. என்று ரிசிவரை பக்கத்தில் வைத்துவிட்டு போனான்.

                                   எழுந்துபோனார். போனை எடுக்கும்போதே இனி இந்த மேசையில் உட்கார்ந்தபடியே போனை எடுத்துப் பேசலாம் .

                                    ஆமாம் அந்த மேசைதான் உதவி தாசில்தார் மேசை.

                                    போனை காதில் வைத்ததும் மறுமுனையில் அவருடைய
பையன் பேசினான்.

                                     அப்பா... அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க.. பின் மண்டையிலே நல்லா அடி.. ஏகப்பட்ட ரத்தம்.. மெடிக்கலுக்கு துர்க்கிட்டு போறோம் உடனே வாங்கப்பா என்று பதட்டத்துடன் போனை வைத்துவிட்டான்.

                                      அப்படியே போனை வைத்துவிட்டு தாசில்தாரிடம் சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு ஒரு ஆட்டோ பிடித்து ஓடினார்.

                                     ரங்கராஜன் மருத்துவ மனைக்குள் நுழையும்போது அவர் மனைவி சாரதாவை அவசரப் பிரிவிற்குள் கொண்டுபோனார்கள்.

                                                             
                                               (உயில் வளரும்)

                         


                                 




                     

Sunday, October 20, 2013

எழுதி வைக்கப்படாத உயில்.... குறுந்தொடர்..

குறுந்தொடர்...3

                                 

                                                   எழுதி வைக்கப்படாத உயில்...



                                          தினமும் தண்ணீர் ஊற்றினாலும் பூப்பதுதான் பூக்கிறது.

                                          ஆனால் ஒருநாள் லேசாக மழைத்துர்றல் விழுந்தாலும் சரி மறுநாள் பூத்துக் குலுங்குகிறது.

                                          ஒருமுறை செடிகளின் மீது ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு விசிறியதுபோல இலைகளை நனைத்துவிட்டு மறுநாள் பார்த்தால் பூத்துக் குலுங்கியது.

                                         செடிகளுக்கு உணர்விருப்பது உண்மைதான்.

                                         இயற்கையாக இருக்கும்போது அவை தன்னை வெளிப்படுத்துகின்றன.

                                       அப்படி மழைபெய்த மறுநாளில்தான் .. அதாவது ஐப்பசி தொடங்கிய முதல்நாளே இயற்கை தவறாது மழையை அனுப்பியிருந்தது.
இனி மழைக்காலம்தான் அனுபவியுங்கள் என்பதுபோல முதல் மழையைத் துர்து அனுப்பியிருந்தது வானம்.

                                      சந்தன முல்லைகள் நன்றாகப் பூத்துக் கிடந்தன.

                                      அதிகாலையில் சூரியன் வராத பொழுதில் ஐந்திலிருந்து ஆறுமணிக்குள்ளாகப் பறித்துவிட்டால் வெயிலும் இல்லை. மொட்டாகவும் இருப்பதால் மலர்வதற்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

                                      ஆறுமணிக்குள் பறித்துவிட்டு மாடியை விட்டுக் கீழே இறங்கிவந்தாள் பரமேசுவரி.

                                       கூடத்தில் எழுந்து உட்கார்ந்திருந்தாள்  அங்கையர்க்கண்ணி.

                                      பரமேசுவரியின் மாமியார்.

                                      என்ன அத்தை அடுப்படியிலே காபி வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டீங்களா? என்றாள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பூவை உள்ளே வைத்தபடி.

                                     சாப்பிட்டேம்மா... என்றாள் அங்கையர்க்கண்ணி.

                                     இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும் என்றாள் பரமேசுவரி.

                                     வெண் பொங்கல் செய். ரொம்ப நாளாச்சு பொங்கல் சாப்பிட்டு. நெய் போடாதே. மிளகை நசுக்கிப் போடு.

                                      சரிங்க அத்தை என்றாள்.

                                      அப்போதுதான் படுக்கையைவிட்டு எழுந்து வெளியே வந்தான் சிவராமன்.

                                      என்னம்மா காபி குடிச்சிட்டியா? என்றான்.

                                      குடிச்சிட்டேம்பா.  பரமு சிவாவுக்கு காபி எடுத்திட்டு வா.

                                       இதே வரேன் அத்தே..

                                       காபியை குடித்து முடித்தான். இந்தா பேப்பர் என்று அவனிடம் தி.இந்துவை எடுத்துக் கொடுத்தாள் அங்கையர்க்கண்ணி.

                                       இந்து தமிழ் நல்லாயிருக்கில்லம்மா? என்றான்.

                                      ஆமாம்மா.. நிறைய செய்திங்க. பல்சுவையா இருக்கு. எல்லாம் கலந்துகட்டி சுவையாப போடறாஙக்..எல்லாரையும் திருப்திபடுத்தற
மாதிரி இருக்கு.

                                      ஆமாம்பா.. நானும் நாலைஞ்சு நாளாப் படிக்கறேன்.. நல்லா யிருக்கு. அதுவும் குட்டிக்கதைங்க ரொம்ப நல்லாயிருக்கு.

                                       பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

                                       அப்போதுதான் அங்கையர்க்கண்ணி சொன்னாள்

                                       சிவா.. சாயங்காலம் உங்கண்ணனையும் அண்ணியையும் வீட்டுக்கு வரச்சொல்லி போன் பண்ணு?

                                        என்ன விஷயம் அத்தே என்றாள் பரமேசுவரி.

                                       இருக்கும்மா.முக்கியமான விஷயம்தான். நான் நல்லாயிருக்கறப்பவே முடிச்சுடணும்..

                                        பேப்பரை மடித்தபடி சிவராமன் கேட்டான்

                                        என்னம்மா பேசறே நீ?

                                       அங்கையர்க்கண்ணி சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சொன்னாள்.

                                       ஆமாம்பா.. நான் உயில் எழுதவேண்டிய நேரம் வந்துடுச்சிப்பா என்றாள்.

                                         இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது அங்கையர்க்கண்ணியின் இந்த திடீர் முடிவும் பேச்சும்.

                                                                                                         (உயில் வளரும்)
                                                        .

                                                     



                       





Friday, October 18, 2013

                      
அன்புள்ள 

             ஹரணி வணக்கமுடன்.

             என் நுர்ல் நத்தையோட்டுத் தண்ணீருக்கு விமர்சனக் கடிதங்கள் என்னை மேலும் பொறுப்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன. ஏனென்றால் இவற்றைத் தக்க வைத்துக் 
கொள்ளவேண்டும் என்கிற அச்சமும் எனக்குள் பரமபதத்தில் ஏறிக்கிடக்கும் பாம்புபோல ஏறிக்கிடக்கிறது. சில தினங்களுக்கு முன் என் நண்பன் மதுமிதாவின் அத்தை. எழுத்தாளர் அமரர் அகிலன் அவர்களின் சகோதரி மகள் திருமதி ஆர். மங்கையர்க்கரசி எழுதியதைப் பதிவிட்டிருந்தேன். தற்போது அவரின் இரண்டாவது விரிவான விமர்சனம் அதே என் நுர்லுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அவற்றைக் கீழே தந்துள்ளேன். ஒரு படைப்பாளனின் கருத்துக்களுக்கு இரு விமர்சனங்களும் ஒரே நபரிடமிருந்து வருவது எத்தனை கொடுப்பினையானது. அது எனக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் அனைவரின் முன்னிலையிலும் திருமதி ஆர்.மங்கையர்க்கரசியின் அவர்களுக்கு நன்றியும் அவர்கனின் அன்பிற்கும் பணிகிறேன். 

               கூடவே நன்றி மதுமிதா.

=================================================================================
ஆர். மங்கையர்க்கரசி
/////////////////////////////////////////////


 நத்தையோட்டுத் தண்ணீர்
                                  (ஹரணி)
01.   வாசித்தல் - சுவாசித்தல்
       வாசித்தலில் மேலோட்டமாக வாசித்தல், நுனியும் அடியும் மட்டும் வாசித்தல், தூங்குவதற்காக வாசித்தல் மற்றும் பொழுது போக்கிற்காக வாசிக்கும் பழக்மும் பலரிடம் உள்ளதைக் குறிப்பிட்டு, வாசித்தலின் பலன்களையும் கூறியுள்ளார்.
       குழந்தைகளையும் வாசிக்கத் தூண்டுதல், நேயம் வளர்த்தல், ஒற்றுமையாக வாழ்தல், உறவை வளர்த்தல், எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் வாசிப்பு வழங்குகிறது. அத்துடன் தன்னம்பிக்கையொடு செயல்படுவதற்கும் வாசித்தல் உறுதுணையாகிறது என்கிறார். வாசித்தல் சுவாசிப்பதைப் போன்றது. அதில் ஒரு சுகமும் உண்டு என்பதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
02.   நட்பு
   
       தாயின் நட்பு வட்டமோ பெரிது. அனால் தனயனின் நட்பை தடை செய்கிறாள் ஜாதகத்தை நம்பிய தாய். பள்ளிப் பருவ நட்பு ஆசிரியரை மிகவும் பாதித்திருப்பதாகத் தெரிகிறது. நட்பின் வலியை நெறி கட்டிய வலி என்று கூறும் போது அதனை,வலியின் வலியை உணர முடிகிறது.

                    எதிர்பார்ப்பது உறவு
                    எதிர்பாராதது நட்பு

       உண்மையான நட்பு அமையும் போது நெறி கட்டிய வலி குறைந்து சுகம் மேலோங்குகிறது என்பதை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

03.   மடலேறுதல் 

       குடைக் கம்பிக்குள் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளை, நன்றிகளை, ஏக்கங்களை, நட்பின் மேன்மைகளை, எண்ணப் பகிர்தல்களை எப்போழுது வேண்டுமானாலும் எடுத்துப் படித்து சுகம் கணலாம். வார்த்தைகள் பேச முடியாததை வரிகள் பேசும். எனவே கடிதம் எழுதுங்கள், எழுதப் பழகுங்கள், கடிதம் எழுதச் சொல்லிக் கொடுங்கள், காற்று நுழைய முடியாத இடத்திலும் கடித உணர்வுகள் நுழையும். உள்ளத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்க்க் கூடியது கடிதம் எனும் பொக்கிஷம் மட்டுமே என்கிறார் ஆசிரியர்.



04.   சந்தர்ப்பவாதிகள்
   
   நற்பண்பு இல்லாதோர்,தூய்மையற்றோர்,சுயநலவாதிகள் ஆகியோரை மண்குதிரை, எட்டிக்காய்,வெறி பிடித்த மிருகம் என்றும் பெயர் சூட்டுகிறர். காரியவாதிகளான இவர்களை அடையாளம் கண்டு தவிர்த்திடுங்கள், ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் ஆசிரியர்.

05.   பண உறவுகள்
 
  
    மனிதனை காசுஆசை ஆட்டிப்படைப்பதாக திரைப்படப் பாடல்களையும். தமிழ் அறிஞர்கள் மற்றும் பட்டினத்தாரின் வரிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கடவுளுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணமும்,பக்தியும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதாகத் தெரிகிறது.
 
    உறவுகளைச் சொல்லிக் கொள்ள, அடையளப் படுத்த,உயிரூட்ட உயிரற்ற பணமே தேவைப் படுகிறது. அனைத்தையும் மாற்றும் சக்தி பணத்திற்கு உண்டு, பணம் பெருத்து உறவு சிறுத்ததாகத் தோற்றம்தான். ஆனால் உண்மையில் உணர்வுள்ள உறவுகளே வளர்ந்து வருகிறது. வரவேண்டும் என்றும் வரலாற்றை முன்னுதாரணமாக்குகிறர் ஆசிரியர்.

06.   வழிகாட்டிகள்

   செயல்,எழுத்து,நடத்தை,வள்ளன்மை,பொறுமை,சகிப்புத்தன்மை போன்ற அரிய பொக்கிஷங்கள் தான் வழிகாட்டிகள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. பிரதிபலன் கருதா அவ்வழிக்காட்டிகளின் முக்கியமானதான தொல்காப்பியம் இன்றும்,என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    பெற்றோரும்,ஆசிரியரும் நல்ல வழிகாட்டிகளாக அமைந்தால் தலைமுறையும் சீர்படும். இல்லையேல் வரம்பில்லா நதி போல் சீர் கெட்டுவிடும். வழிகாட்டிகள் அருகிவரும் இத்தருணத்தில் இளைஞர்களின் நிலை என்னாவது என்று தனது ஏக்கத்தையும்,வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ள ஆசிரியர் நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.



07.   இளம் பருவமும், மனவெளி விளையாட்டுக்களும்

    குழந்தைகள் கூடி விளையாடும் விளையாட்டினால் கூடி வாழ்தல், விட்டுக் கொடுத்தல்,சகோதரப்பான்மை, உதவி செய்ய வேண்டும் போன்ற உந்துதலைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. உடலும் வளருது,உள்ளமும் வளருது என்பதைக் கூறியவர் குழந்தைகளுக்கு கதை மற்றும் பாட்டு மூலம் உணவின் அவசியத்தையும்,பலன்களையும் விளையாட்டாக்கக் கூறி சோறு ஊட்டலாம் என்கிறார் ஆசிரியர்.

    கணிணியின் வளர்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியை முடக்கி விடுவதாகவும் கூறியவர் பிள்ளைகள் வியர்வை சிந்தி விளையாடவும்,குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கும் பெற்றோரும் இருந்தால் குழந்தைகள் எப்படி நோயாளிகளாக இருக்க முடியும் என்று பெற்றோர்களுக்கும் அறைகூவல் விடுகிறர்.
08. தமிழாய்வுகள்
    வேறு வழியின்றி தமிழை எடுத்துப் படிப்போரும் சிபார்சுகளாலும், குறுக்கு வழியின் மூலமும் முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர். மேலும் படைப்பாளிகளைச் சந்திக்காமலும்,உரையாடாமலும் அவரின் அனுமதி இன்றியும் முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர் என்று மிகவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    வாசித்துக் கொண்டும்,சொற்பொழிவு,கருத்தரங்குகள் மூலமும் தமிழின் மேன்மையை பறைசாற்றிகொண்டு எவ்வித அடையாளமும் அங்கீகாரமும் வழங்கப்படாமல் இருக்கின்றவர்களையும் வேதனைப்பட வைத்து விடுவதையும்,இருப்பினும் உண்மையான ஆய்வுகள் சிலவும் நம்பிக்கையூட்டுவனாகவும் இருப்பதாகவும் சிறிய ஒளிவிளக்கை கையில் ஏந்தி நிற்கிறார் ஆசிரியர்.


09.   எனது ஆசிரியர்கள்
  அன்றைய ஆசிரியர்களின் எளிமையான தோற்றம்,பழக்கவழக்கம், பண்பு ஆகிய நற்குணங்களால் மாணவர் மற்றும் பெற்றோர்களின் மனதிலும் உயர்ந்து நின்றனர் ஆசிரியர்கள். அன்னையைப் போன்ற மேரி டீச்சர் எளிமையாக இலக்கணத்தைக் கற்பித்த ஆசிரியர்,வரலாற்றைக் கண்முன்னே கொண்டுவந்த வரலாற்று ஆசிரியரையும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சிலரையும் நினைவு கூர்ந்து தனது நன்றிகளைக் காணிக்கையாக்கியுள்ளார் நூலாசிரியர். இதைவிட வேறு என்ன வேண்டும் ஆசிரியர்களுக்கு?

10.   நீதிபோதனை வகுப்பும்,நீர்த்துப்போகா வாழ்வும்

   உலகம் விரிவடைந்து வருகிறது. மனதின் மனமோ குறுகி வருகிறது. கூட்டுக் குடும்பம் சிதைக்கப்பட்டதே சீரழிவிற்குக் காரணம். இதுவே அழிவை நோக்கிச் செல்லும் பயணம் ஆகும்.


   உறவுமுறை,விட்டுக் கொடுத்தல்,பாசம்,நேசம் யாவும் கற்றவர்கள் தனது வாரிசுகளுக்கும் அதனைக் கற்பித்தனர். பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் மூலம் நற்பண்புகளை ஆசிரியர்கள் வளர்த்தனர். ஆனால் இன்று தீயசெயல்களும் ஒழுக்கக் கேடுகளும்,வன்முறைகளும், பாலியல் குற்றங்களூம் பெருகி சமூகத்தைக் கெடுத்து வருகின்றன. நீர்த்துப் போகா வாழ்வு வேண்டுமெனில் நீதிபோதனை வகுப்புகள் மீண்டும் தொடங்கப் படவேண்டும் என்கிறார் ஆசிரியர்


11.   நம்பிக்கையான அனுபவ வைத்தியம்
      முதியவர்கள் வீட்டின் சொத்து. கைமருந்து பாட்டி வைத்தியம்       மூலம்    குழந்தைவளர்ப்பு,சுளுக்கு,விஷக்கடி,வயிற்று உப்புசம் போன்ற நோய்கள் எளிதில் குணமானதைக் குறிப்பிட்டு தனது அனுபவத்தை நினைவு கூறுகிறார்.

12.   சில அர்ப்பணிப்புகள்

புராண,வரலாற்றுக் காலங்களிலும் அறிஞர் பெருமக்கள் தங்கள் அர்ப்பணிப்புகளை நிலைநாட்டியுள்ளதை எடுத்துரைத்துள்ளார். அரிச்சந்திரன்,மணிமேகலை,வள்ளலார்,ராஜராஜன்,அன்னைதெரசா ஆகியோர் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். அதே போன்று ஒரு பார்வையற்றவர் தன்னால் இயன்ற உதவிகளை இட்லி கடை வைத்து அதன் மூலம் தனது அர்ப்பணிப்பை நல்கி வருவதை குறிப்பிடுகிறார். நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும் என உணர்த்திய ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.   


13.   வடவாற்றங்கரையில்  

ஆசிரியரின் வாழ்வில் வடவாற்றங்கரை முக்கிய பங்கேற்றுள்ளதை உணர முடிகிறது. ஆற்றில் அன்னையுடன் சென்று குளியல்,நீச்சல் கற்றல்,ஆடிப்பெருக்கில் கொண்டாட்டம்,குதிகாலைத் தேய்த்து தூய்மையாக வைத்திருப்பதைத் தந்தையிடம் இருந்தே தானும் பின்பற்றி வருவதாக்க் குறிப்பிடும் ஆசிரியர், மகிழ்ச்சியைக் கொடுத்த அதே வடவாற்றங்கரைதான் பின்னர் உறவுகளின் மரணங்களால் ஏற்பட்ட துயரங்களையும் தந்துள்ளது என்கிறார். தன் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த வடவாற்றங்கரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


14.   சபை நாகரீகம்

சபை நாகரீகம் என்றால் என்ன? சபையில் எப்படி கலந்து கொள்ள வேண்டும்,எப்படிப் பேச வேண்டும்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தான் சபை நாகரீகம். இது பலருக்குத் தெரிந்திருந்தும் அதனை பின் பற்றுவதில்லை. பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்திருந்தும் அதை மீறுபவர்கள் பாமரர்கள் அல்ல, மிகவும் படித்த மேதாவிகளே என்பது வருத்தத்திற்குரியது என்கிறார்.

நாகரீகம், பண்பாடு இவற்றில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கே நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர வேண்டி இருக்கிறதே என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். தனி மனித ஒழுக்கமும்,கடமையும் அடிப்படைக் குணங்களாகும். இனியாவது சபை நாகரீகம் அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் முடிக்கிறார் ஆசிரியர்.

   

Thursday, October 17, 2013

தி இந்து....




                     பாரம்பரியமான இந்து நாளிதழ் குழுமத்திலிருந்து தமிழில் தி இந்து எனச் செய்தித்தாள் வெளிவந்துகொண்டிருக்கிறது கடந்த ஒரு மாதமாக.

                     இந்த  செய்தித்தாளில் தினமும் சுட்டது நெட்டளவு என்று ஒரு பகுதியில் வாசகர்கள் தாங்கள் படித்த கதையை பிடித்த கதையை அனுப்பலாம். அப்படி நான் அனுப்பிய ஒரு சென் கதை வெளிவ்ந்துள்ளது.

                      இது தவிர நிமிடக்கதை என்று சின்னஞ்சிறு கதையும் வெளிவருகிறது.

                       இந்தப் பகுதியிலும் என்னுடைய சின்னஞ்சிறுகதை வெளிவந்துள்ளது.

                        அந்தக் கதை

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

                                        உங்களை பாரு புடிப்பா?

                                                                                   - உத்ரா


                        டிராபிக் அதிகமாக இருந்தது,

                        காலையிலிருந்து நின்று கால்கள் கடுகடுத்துப் போயிருந்தன.

                        எங்காவது உட்கார்ந்தால் போதுமென்றிருந்தது கான்ஸ்டபிள்
                        குமரவேலுக்கு.

                        டென்ஷன் வேறு. அதிகாரிகள் அடிக்கடி போகும் சாலை அது.

                        கூட்டம் சற்றுக் குறைந்தது.

                        தலையிலிருந்து தொப்பியைக் கழட்டி பைக்கின் மேல் வைத்து
விட்டு கொஞ்சம் தண்ணீரைக் குடித்தார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

                        அப்போதுதான் அந்தப் பள்ளிச் சிறுவனைக் கவனித்தார்.
 குமரவேலு.

                           என்னடா பாக்கறே?

                           இல்ல அங்கிள்... பப்ளிக்ல சிகரெட் பிடிச்சா போலீஸ்
பிடிப்பாங்கன்று அம்மா சொன்னாங்க. இப்ப நீங்களே பிடிக்கறீங்களே?
உங்கள யாரு பிடிப்பாங்க.....? என்றான்.

                           சட்டென்று அதிர்ந்துபோனார் குமரவேலு.

                                                     0000000000000


பின்குறிப்பு -  உத்ரா என்பது என்னுடைய இன்னொரு புனைப்பெயர்.
                            தொடக்கக்காலத்தில் உத்ரா என்கிற பெயரிலும் வேறுசில
                            பெயரிலும் நிறைய படைப்புக்கள் வந்தன. அதற்குப்பின்
                            ஹரணிதான் தொடர்கிறது. எப்பவாவது உத்ரா..வும் மற்ற
                            பெயர்களும்.

                            இரண்டாவது-

                                         நேற்று முன்தினம் பதிவிட்ட என் நத்தையோட்டு
                             நுர்ல் குறித்து விமர்சனம் எழுதியுள்ள திருமதி ஆர்.
                             மங்கையர்க்கரசி பிரபல எழுத்தாளர் அமரர் அகிலனின்
                             சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
                       




                      

Wednesday, October 16, 2013





                                                       குறை தீர்க்கும் நாள்


                                  அன்றைக்கு சிங்கத்திற்கு அலுப்பாக இருந்தது வேட்டைக்குப் போவதற்கு. ஆனாலும வயிறு பசிக்குமே என்கிற கவலையும் இருந்தது.

                                யோசித்துகொண்டேயிருந்தது.

                                அதற்குள் விடிந்து கதிரவனும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டான்.

                                  அப்போது ஒரு நரி வந்தது.

                                  நரியை அடித்துத் தின்றுவிடலாம் என்று யோசித்தபடியே நரியைப் பார்த்தது. சிங்கத்தின் கண்பார்வையிலேயே நரி புரிந்துகொண்டுவிட்டது. இருப்பினும் ஒடனே ஓடிவிடவும் முடியாது.சிங்கம் எப்படியும் கொன்றுவிடும் என்று அதற்குத் தெரியும்.

                                   நரி யோசித்தது.

                                   பின் சொன்னது

                                  என்ன மகாராஜா இன்றைக்கு வேட்டைக்குப் போகாமல் இருக்கிறீர்கள்?  நான் வரும் வழியில்தான் ஒரு இளம்மான் கூட்டத்தைப் பார்த்தேன். அத்தனையும் பிஞ்சுமான்கள்.

                                  சற்று நிறுத்தி  தான் வீசிய வலையில் சிங்கம் நுழைந்ததா என்று நோட்டம் பார்த்தது.

                                  பிஞ்சு மான்கள் என்றதும் சிங்கத்திற்கு எச்சில் ஊறியது. சட்டென்று அடக்கியபடி சொன்னது

                                    இல்லை நரியாரே இன்றைக்கு அலுப்பாக இருக்கிறது. எனவே வேட்டைக்குச் செல்லும் எண்ணம் இல்லை. ஆனாலும் வயிறு இப்போதைக்கு லேசாகப் பசிக்க ஆரம்பித்திருக்கிறது.

                                  அப்படியா அப்படியானால் நானொரு யோசனை சொல்கிறேன் என்றது,

                                  சிங்கம் தலையாட்டியது உடனே.

                                  நரிக்கு தான் தப்பித்துவிட்டோம் என்று உறுதியானவுடன் அந்த யோசனையை சொன்னது சிங்கத்திடம்.

                                 சிங்கம் அந்த யோசனையைக் கேட்டதும் மகிழ்ச்சியானது.

                                 உடனே காடெங்கும் அந்த அறிவிப்பு  ஒலித்தது.

                                  இன்றைக்கு வேட்டைக்கு செல்ல விருப்பமில்லாத நமது ராஜா அவர்கள் குறைகளைக் கேட்கவுள்ளார். எந்த விலங்காக இருந்தாலும் அதன் குறைகளைச் சொல்லலாம் உடனே தீர்த்து வைக்கப்படும். யாரும் வராமல் இருக்கக்கூடாது. இது அரச கட்டளை.

                                   எல்லா மிருகங்களும் ஓடோடி வந்து சிங்கக் குகை வாசலில்
குழுமி நின்றன.

                                     சிங்கம் எல்லோரையும் நோட்டமிட்டது.

                                     நரி சொன்னது பொய்யில்லை. நிறைய இளம் மான்களும் சற்றே பெருத்த விடலை மான்களும் நின்றுகொண்டிருந்தன.

                                     சரி ஒவ்வொருத்தராகக் குறைகளைச் சொல்லுங்கள்..

                                    முதலில் ஒட்டகச் சிவிங்கி வந்து சொன்னது.

                                     இந்த யானைகள் எல்லா மரங்களையும் முறித்துவிடுகின்றன. எனவே எங்களுக்கு இலை தழைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

                                     சரி. யானைகளே சில மரங்களை விட்டுவிடுங்கள். ஆமாம் இல்லையென்றால் நான் கொன்றுவிடுவேன் உங்களை.

                                     சரி மகாராஜா என்றன யானைகள்.

                                     இப்படி ஒவ்வொன்று ஒரு குறையை சொல்லச் சொல்ல அதனை மாற்றி மாற்றி மற்ற மிருகங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது சிங்கம்.

                                    அதற்குள் நன்றாக வெயில் வந்துவிட்டதால் சிங்கத்திற்கு பசி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

                                    குறைகள் சொன்னவர்கள் போகலாம் என்றது.

                                    கடைசியில் சில முயல்களும் நாலைந்து மலையாடுகளும் இளம் மான்களும் மிஞ்சியிருந்தன.

                                      சரி மான்களே உங்கள் குறை என்ன? என்றது சிங்கம்.

                                      மகாராஜா... நாங்கள் மேயும் புல்வெளிகளில் எல்லாம் பன்றிகளும் எருமைகளும் சேற்றோடு உருண்டு புரள்கின்றன அதனால் புல் மேயமுடியாமல் பட்டினியாகக் கிடக்கவேண்டியிருக்கிறது. எனவே உடம்பு பாதித்திருக்கிறது. சரி தண்ணீரை குடிக்கலாம் என்றாலும் இவைகள் குட்டைகளையும் குழப்பிவிடுகின்றன. சேற்று தண்ணீர் தெளியும்வரை காத்திருப்பதால் பட்டினியால் உடல் சோர்ந்துபோய்விடுகிறது  என்றன.

                                      அடடா,, இதென்ன பரிதாபம்.. அதனால்தான் எல்லோரும் மெலிந்து கிடக்கிறீர்கள்.. பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. என்னுடைய  காட்டில் யாரும் பசியாக இருக்கக்கூடாது.. சரி உங்களுக்கு மட்டும் அனுமதி தருகிறேன்..என் குகையைச் சுற்றி பசும்புற்கள் பரந்து கிடக்கின்றன நீங்கள் தினமும் வந்த மேய்ந்து பசியாற்றிக்கொள்ளலாம்.

                                  அரசே உங்களின் பெருந்தன்மையே பெருந்தன்மை என்று  பாராட்டின நரிகள்.

                                  மான்களும் மகிழ்ந்துபோயின.

                                  சரி வாருங்கள்..இன்றைக்கே உங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது சிங்கம்.

                                   மான்களும் உற்சாகமாய் ஓடிப்போய் மேய ஆரம்பித்தன.

                                   குகைக்கு அந்தப் பக்கம் பாருங்கள் எத்தனை பச்சையென்று.

                                  சிஙகம் காட்டிய இடத்திற்கு சென்றன சில மான்கள். அவற்றை யாருமறியாமல் அப்படியே வாயால் கவ்விக்கொண்டு குகைக்குள் போய் சாப்பிட ஆரம்பித்தது சிங்கம் உற்சாகமாய்.

                                  இதையறியாமல் மான்கள் குகையைச் சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன.

                                                    ====

Tuesday, October 15, 2013

நத்தையோடடுத் தண்ணீர் .....விமர்சனம்..


அன்புள்ள 

                        வணக்கமுடன் ஹரணி.


                       என் நுர்லான நத்தையோட்டுத் தண்ணீர் பொதுவான நமது விழுமியங்களின் தன்மைகளை நினைவில் தக்க வைக்கும் முயற்சியாக 14 கட்டுரைகளைத் தாங்கியதாகும். இதுகுறித்து பலரும் பல விமர்சனங்களை

முன்வைக்கும் சூழலில் அவர்களின் கருத்திற்கேற்ப மறுபடியும் பல சேர்க்கைகளுடன் மறுபதிப்பிற்காக அச்சில் இருக்கிறது. முதலில் அச்சிட்ட படிகள் (100 படிகள்) தீர்ந்துவிட்டபடியாலும். 

                         ஒவ்வொரு விமர்சனமும் எனக்குப் பெருமையானது. மதிப்பிற்குரியது. என்மேல் அவர்கள் கொணடிருக்கும் அன்பின் விளைவர்ல் விளைவது. அவற்றைப் பொன்னேபோல் போற்றி வைத்திருக்கிறேன். அதேசமயம் அவற்றை மற்றவர்களும் படிக்கப் பதிவிட்டும் வருகிறேன்.

                       தற்போது என்னுடைய சமகால எழுத்தாளன். நண்பன். சகோதரன் இப்படியும் இதற்குமேலும் சொல்லும் பேரன்பிற்குரியவன் மதுமிதா என்கிற பொன். சந்தானகிருஷ்ணன். பள்ளியில் தொடங்கிய நட்பு கல்லுர்ரி முடித்தும் வேலைக்குச் சென்றும் இன்றுவரை குடும்ப நட்பாக அன்புச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது அது. 


                        திரு சந்தானகிருஷ்ணனின் மாமியார் மரியாதைக்குரிய திருமதி ஆர். மங்கையர்க்கரசி நல்ல படிப்பாளி. அதேசமயம் விமர்சகரும்கூட. என்னுடைய நத்தையோட்டுத் தண்ணீரை வாசித்தவுடன் கைபேசியில் பேசினார்கள். என் நுர்ல் குறிதது அவர்கள் விமர்சனம் எழுதியனுப்புவதாகச் சொன்னார்கள். அவசியம் தாருங்கள் அது எனக்கு மிகவும் பெருமையானது என்று கூறினேன். உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை அப்படியே உள்ளது உள்ளபடியாகத் தாருங்கள் என்றேன். இன்றைக்குத் துர்து அஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அதை அப்படியே இங்கே பதிவிடுகிறேன். 


                      அதே தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஆர். மங்கையர்க்கரசி

                      பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய திரு ஹரணி அவர்களுக்கு
வணக்கம்.

                      தங்களின் உன்னத படைப்பான நத்தையோட்டுத் தண்ணீர் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. முக்கியமான காரணங்களில் ஒன்று வாசிப்பு - அது என்றென்றும் சுகமானது எனக்கும்,

                     திருவள்ளுவரின்  துணைவியார் வாசுகி அம்மையாரின் சிறப்பியல்புகளையும் நத்தை ஓட்டுத் தண்ணீரும் ஊசியும் எதற்காக உணவு உண்ணும்போது வைக்கப்பட்டது என்பது பற்றிய விளக்கங்களையும் எனது தந்தையார் எங்களுக்கு விளக்கியுள்ளார். மேலும்  அவரும் சாப்பிடும்போது ஒரு கிண்ணத்தில் வைத்துள்ள தண்ணீரில் சிதறிய பருக்கைகளை சுத்தம் செய்து மோர் சாதம் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடுவார். அவரது குதிங்காலிலும் வெடிப்பின்றி சுத்தமாகவே இருந்தது இறுதிவரை. தங்களின் வழிகாட்டிகள் படிக்கும்போது என் தந்தையை நினைவுபடுத்தி கண்களில் நீரை வரவழைத்தது,

                  அதுபோன்றே எனது மதிப்புமிக்க ஆசிரியர் திரு நாராயணசாமி அவர்கள் என்னைத் தனது சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்று உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க எனது பெற்றோருடன் போராடி வெற்றி கண்டார். அன்று அவரின் பேருதவி இல்லையேல் இன்று நான் பட்டதாரி ஆகியிருக்க முடியாது.

                   எனது தாய்மாமா திரு அகிலன் அவர்களின் துர்ண்டுதலால் புத்தகங்கள். கவிதைகள் படிக்கும் பழக்கமும் கடிதம் எழுதும் முறையையும் கற்றுக்கொண்டேன், மகிழ்ச்சி-யில் ச் என்ற எழுத்தை எழுதாமல் இருந்த எனது கடிதத்தின் பிழையை கடிதம் மூலமாகத் திருத்தியவர். மேலும் முறையே என்ற சொல்லையும் பயன்படுத்தப் பழக்கியவர் அவரே. என் வாழ்க்கையிலும் பலர் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். எனது பொக்கிஷங்களில் இடம் பெற்றுள்ளது இவரின் கடிதங்களும்.

                 உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் நீதி போதனையின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்துள்ளேன்.

                 சபை நாகரீகம். நீதிபோதனை போன்றவைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது என்போன்ற வாசகர்கள் பலரின் எண்ண எழுச்சியாக உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத வாழ்க்கை சீர்மை பெறுவது இல்லை அல்லவா?

                தமிழார்வமும் சமூக சிந்தனையும் மிகப் பெற்றத் தங்களுடன் உரையாடவும். சந்தித்துப்பேசவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன். நம் சமூகத்தைச் சீர்படுத்தத் தங்களின் நத்தையோட்டுத் தண்ணீர் பயன்படும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்வுடனும்,

                                             ஆர். மங்கையர்க்கரசி  11/10/13,


என் குறிப்பு

                        ஒரு படைப்பாளனுக்கு இதைவிடவா விருது வேண்டும்?
சரியான இலக்கில் அந்த படைப்பாளன் இந்த சமுதாயத்தில் பயணிக்கிறான் தன் எழுத்துக்களுடன் என்கிற அங்கீகாரம் சரியாகப் புரிந்துகொள்ளப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் நிறைவும் விட  உயர்ந்தவை எதுவும் உண்டா?



Monday, October 14, 2013

கல்விக் கண்ணீர்....



கல்விக் கண்ணீர்..


                   ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வருகின்ற கொலை. கொள்ளை தொடர்பான அடிக்கடி வருகின்ற செய்திகளைப் போன்று கல்வித் தொடர்பான பிறழ்வு செய்திகள் மனத்தை வேதனைப்படுத்துகின்றன.
பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரின் உயிர் பறிப்பு. மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான பாலியல் வன்முறையை மேற்கொள்வது போன்ற செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் ஒரு கல்லுர்ரியின் முதல்வர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். இறந்துபோன அந்த முதல்வரின் ஒரே மகள் சிறு வயது அவளின் சொற்கள் இவை

                      அங்கிள்... அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே,
                      ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா அப்பா
                      இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?
                     (நன்றி தி இந்து நாளிதழ்...12.10.2013)

நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன தந்தையை இழந்த மகளின் வேதனை.

                 இது இப்படியே தொடர்ந்தால் எதிர்கால கல்வியின் நிலை என்னவாகும்? எதிர்கால சமுதாயம் எப்படி நல் சமுதாயமாக மலரும். எப்படி ஆயினும் இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் வேதனையானதுமாகும். இதற்குரிய நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. உரியவ்ர்களுக்குத் தண்டனையும் உறுதி. என்றாலும் படிக்கவேண்டிய நிலையில் அந்த மாணவர்களின் மனத்தில் இத்தனை வன்மம் வளர்த்தது எது.

                    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்லாசிரியர் இயல்புகளையும் மாணாக்கர் இயல்புகளையும் ஆசிரியர் பாடங் கற்பிக்கும் முறையையும் மாணவர்கள் பாடம் கேட்கும் முறைகளையும் குறிப்பிட்டு இலக்கணம் வகுத்திருக்கிறது.

                  இவற்றுக்கான தீர்வு என்பது ஆசிரியர்களும் சரி மாணர்க்கர்களும் சரி தரமாக உருவாக்கப்படவேண்டும் என்பதுதான்.

                   இன்றைக்கும் ஆசிரியர் பணியை உப தொழிலாகக் கருதும் ஆசிரியர்களின் விழுக்காடுதான் அதிகமாக உள்ளது. ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன்பும் சரி வந்தபின்பும் சரி பணம் சம்பாதித்தல்  என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள ஆசிரியர்கள்தான் அதிகம்.  தன்னை மேன்மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதுமில்லை. மாணவர்களுக்குப் பாடம் சொல்வதில் சரியான பயிற்சியின்மையும் உள்ளது.

                கல்வி குறித்து சித்பவானந்தர் குறிப்பிட்டுச் சொல்கிறார்

                 ஆசிரியர்கள் என்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும்
                  ஈடுபாட்டோடும் எளிமையாகவும் இருக்கவேண்டும்.
                 ஏனென்றால் அவர்களை எப்போதும் மாணவர்கள்
                 கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள் என்று.
                 நாட்டிலுள்ள ஒழுக்கக் கேடுகளுக்கு ஒழுக்கமின்மையே
                 காரணம். ஒழுக்கசீலர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும்
                 இருத்தல் வேண்டும். எப்போதும் ஒழுக்கத்தையும் அறிவையும்
                 மேம்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
             

மேலும் காந்தியடிகள் குறிப்பிடும்போது

                     எந்தக் கல்வியின் இறுதிநோக்கமும் தொண்டாகவே இருக்க
                     வேண்டும். இப்படியொரு வாய்ப்பு ஒரு மாணவனுக்குக்
                      கிடைத்தால் அதனை அரிய வாய்ப்பாகவும் கருதவேண்டும்..  


ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
                 
                       Teach him always to him to sublime faith himself and faith in mankind.
                       Teach his never put a price tag on his heart and soul

தன்மீது தன்னம்பிக்கையும் இந்த மனிதகுலத்தின் மீது மாறாத அன்பு செலுத்துபவனாகவும் தன்னுடைய இதயம் மற்றும் ஆன்மாவின் மேல்
விலைப்பட்டியல் ஒட்டாத கல்வியையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் என வேண்டுகிறார்.

                    இந்துஸ்தானத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்ட ஔரங்கசீப்  தனக்குப் பள்ளிப்பருவத்தில் ஆசிரியராக இருந்த முல்லா சாகேப் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

                             மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத் தத்துவங்களை
                              நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனத்தை நிதானத்தில்
                             வைக்கப் பயன்படும். அரிய தத்துவங்களைப் போதித்திருந்தால்
                             ஒருவேளை அதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டு செல்வத்தில்
                             திளைத்துக்கிடந்தாலும சரி.. துரதிர்ஷ்டத்தில் தாக்கப்பட்டு
                             தோல்வியைத் தழுவினாலும் சரி இரண்டுக்கும் மயங்காத
                             மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள்
                             போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன?
                             எப்படி இந்த பூமி இயங்குகிறது என்பதையெல்லாம் உணர்ந்து
                             கொள்ள எனக்கு இந்தக் கல்வியைப் போதித்திருந்தால்
                              உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டனவாக இருந்திருப்பேன்
என்று எழுதுகிறான்.

                              எனவே ஆசிரியரின் நேர்மை. ஒழுக்கம். தரம் . தன்மை. திறமை இவற்றைப் பொறுத்தே மாணவர் சமுதாயமும் உருவாகிறது. எனவே எப்படியாயினும் இனிமேலாவது ஆசிரியர் தெரிவில் முழுக்க முழுக்கத் தகுதி திறமையை மட்டும் கொண்டவர்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் எதிர்காலச் சமுதாயம் பண்படும் தரமான மாணவர்களும் உருவாவார்கள். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் எவ்வித ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் முழுக்க கல்வித்தகுதியையும் அதற்கான திறனையும் கொண்டவர்களை மட்டுமே தெரிவு செய்தால் மிகுந்த நலமுடைய சமுதாயம் உருவாகும்.

                               இப்படியில்லாத சூழமைவில் நல்லாசிரியர்கள் இப்படித்தான் வன்முறைக்குப் பலியாகிப்போவார்கள். மாணவர்களும் நொடியில் ஏற்படும் மனச் சலனத்தில் ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து சிதைந்துபோவார்கள். கல்வி. மருத்துவம் இரணடும் உயிர்காப்பவை. இவற்றில் எவ்வித எதிரான நடவடிக்கைகளுக்கும் இடம் தந்துவிடக்கூடாது. அப்படி கடுகளவு  ஓட்டை விழுந்தாலும் அது பெரிய பிளவாகி எல்லாவற்றையும் விழுங்கிவிடும்.

                          கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின் பிரிவால வாடும் அந்த பெண் குழந்தைக்கும் மனதால் அஞ்சலியும் ஆறுதலையும் வாரி வழங்குவோம்.

                               ஒரு ஆசிரியனாக மனம் கசிகிறேன் அடக்கமுடியாமல்.
                                               



Sunday, September 1, 2013

கதம்பக்கூடை

கதம்பக்கூடை....



                           வணக்கம்.

                           சில மனவோட்டங்களின் பகிர்வாக இப்பதிவு.

                         

         
                              சில தினங்களுக்கு முன்பு தினமணியில் தமிழக முதல்வர் அவர்கள் விலங்குகளுக்கென குறிப்பாக யானைகளுக்கென அவை ஊருக்குள் வந்து மக்களுக்கு இன்னல் விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக அவற்றுக்கென நீர்நிலை வசதி.. அதற்கென ஆழ்குழர்ய் கிணறுகள்.. நீர்தேக்கத் தொட்டிகள்.. விலங்குகளுக்குப் பிடித்தமான பயிர் விளைவித்தல் இவற்றுக்கென சில கோடி ரூபாய்களை ஒதுக்கியிருந்தார்கள். மேலும் விலங்குகளின் பசி தாகத்தை நீர் தாகத்தைத் தணிப்பதற்கும் காடுகள் தீப்பற்றிக்கொண்டால் அணைப்பதற்கும் என பல்வகை முனைப்புக்களில் அத்திட்டம் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.

                           முழுமையாகப் படித்தவுடன் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வனவிலங்குகளைப் பராமரிக்கும் எண்ணமுடனான இத்திட்டம் உண்மையில் வெகுவான பாராட்டிற்குரியது. ஒரு கவிஞர் வேடிக்கையாகக் கவிதை ஒன்று எழுதியிருந்தார் யானைகளா வீட்டிற்குள் வருகின்றன நாமல்லவா அவற்றின் வீடுகளில் வசிக்கிறோம் என்று. உண்மைதான் காடுகளின் எல்லைகளைக் குறுக்குவதால்தான் அவைகள் நம்மைநோக்கி வருகின்றன. எனவே இத்திட்டம் தொடர்ந்து செயல்படின் வனவிலங்குகளைப் பராமரிக்கும் பரிவு கொண்ட அருமையான திட்டமாக அமையும். தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


மறுபடியும் ஒரு பெண்  (புகைப்பட நிருபர். மும்பை) மீதான பாலியல் பலாத்காரம் மனதை வேதனைப்படுத்துகிறது. வழக்கம்போலவே கைதும்  விசாரணையும் எனத் தொடர்கிறது. இதுபோன்ற நிலைப்பாடுகளில் கடுமையான தண்டனைகளோடு இவற்றை ஒருபோதும் மனமெண்ணாத வகையில் மாறுபட்ட சிந்தனைகளுடன்கூடிய கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இதற்கான மூலக்காரணிகளை சமுகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் இருந்து அறிந்து அகற்றுதல் வேண்டும். அது முளையிலேயே கிள்ளியெறிவதாகும்.

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

குழந்தைகள் என்றாலே மனம் பதறுகிறது. சிரியாவில் ரசாயன குண்டு வீச்சிற்கு வாயில் நுரைதள்ளி சாலையில் கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் நெஞ்சையறுக்கின்றன. இது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்பதுதான் உண்மை. நியாயத்திற்கு சரியான மருந்திடவேண்டும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஐ.நா.வின் சார்பில் மதிப்பிற்குரிய நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருப்பது பொறுப்பான ஒன்றாகும். இதற்கு இலங்கையின் பொறுப்பான பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர் நான் வேண்டுமானால் அவரைத் திருமணம் செய்துகொண்டு இலங்கையை சுற்றிக்காண்பிக்கிறேன் என்று கூறியிருப்பது குறித்து திருமிகு வைகோ கண்டனம் தெரிவித்திருப்பது அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். பொறுப்பான பதவியிலிருக்கும் அமைச்சர் ஒருவரின் இத்தகைய பேச்சு எப்படி பண்பாடாகும்?  கவலைக்குரியதாக இருக்கிறது இதுபோன்ற நிகழ்வுகள்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


எனக்கு  வலைப்பக்கம் உருவாக்க உதவி செய்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழத்துறையில் பணியாற்றும் திருமதி கல்பனா சேக்கிழார் அவர்கள். அவர்களுக்குத்  தற்போது சிறந்த இளம் தமிழறிஞருக்கான செம்மொழி விருது கிடைத்துள்ளது. அவருக்கான பாராட்டை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அவருடைய வலைப்பக்க முகவரி sekalpana.blogspot.com

இதே விருதை பெற்றிருப்பவர்கள்

  எனது அன்பிற்குரிய நண்பர்கள்  நாமக்கல் அரசு கலைக்கல்லுர்ரியில் பணிபுரியும் பேராசிரியர் முனைவர் இரா.சந்திரசேகர் அவர்கள்.

         சேலம் ஆத்துர்ர் கலைக்கல்லுர்ரியில் பணிபுரியும் நண்பர்
பேராசிரியர் முனைவர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்.

             இவர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.



/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

     

     இந்திய ரூபாயின் மதிப்பு மதிப்புக் குறைந்துகொண்டேபோகிறது.
இது எங்கே போய் முடியும்? என்று தெரியவில்லை. நாம் பல்வேறு நிலைப்பாடுகளில் மதிப்புக்களை இழந்துகொண்டுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////