Monday, May 25, 2020


                  திருமந்திரத்தில் சில சொற்களும் தொடர்களும்


          சைவத்தின் மாண்புரைக்கும் பன்னிருதிருமுறைகளில் பத்தாம் திருமுறையாக மலர்ந்திருப்பது திருமூல நாயனார் இயற்றிய திருமந்திரம். ஒன்பது தந்திரங்களைக் கொண்டமைந்தது.ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சிறப்பை விளக்குவது. அவை மனித வாழ்வில் எல்லா நிலைகளிலும் பொருந்திவரக்கூடிய மெய்ம்மைகளைக் கொண்டு சிறப்புற்றிருப்பது. திருமந்திரத்தின் சிறப்பு என்னவெனில் எளிமை. எளிமையான சொற்களில் அவையமைந்த தொடர்களில் வெகு நுட்பமான செய்திகளையுரைப்பது. இது மிகப்பெரும் திறனையடக்கியது. இதனை எல்லோராலும் செய்யவியலுமா எனயறியமுடியவில்லை. திருமூலர் இதனைச் செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கான அனுபவத்தையும் அறிவையும் சிந்தையில் எண்ணிப் பார்க்கிறபோது வியப்பன்றி வேறுஎதுவும் நிலைப்பதில்லை. இக்கட்டுரை சில சொற்களையும் தொடர்களைக் குறிப்பிட்டு திருமந்திரத்தின் மாண்பை மேலும் மெருகேற்ற இயலுகிறது.

திருமந்திரம் பேசும் அடிப்படைகள்

             திருமந்திரத்தின் நோக்கம் சிவத்தின் அறிவை உணரச்செய்வதாகும். இதற்குத் தடையாகயுள்ளனவற்றைக் களைவது அவையெதுவெனப் பட்டியலிட்டு அவற்றின் தீமைகளையும் குறிப்பிட்டு உரைப்பதாகும். படைப்பாளி தான் சொல்லவந்த கருத்தை வெளிப்படுத்தும் முறையில்தான் அது படிப்போர் சிந்தையுள் வித்தைகளைப் புரிய வைக்கிறதெனலாம். எனவே எத்தகைய உயர்கருத்தாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்துகிற படைப்பாளியின் திறனால்தான் செழிக்கிறது. இதற்கு ஓர் அடிப்படையான மெய்யை நாம் புரிநதுகொள்ளவேண்டும். பழங்காலத்தில் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்கள் தங்களின் பெயரை எங்கும் சுட்டாமல் தங்களின் அனுபவத்தில் உணர்ந்த மேன்மைகளைக் கருத்தாக வெளிப்படுத்தப் பாடல்களை உருவாக்கித் தந்தனர். இதற்கு அவர்கள் மானுடச் சமூகத்தினை மேன்மைப்படுத்த, நல்வழிப்படுத்த, நெறிப்படுத்தவெனக் கொண்ட சுயநலமற்ற எண்ணத்தினால்தான் அவை இன்றைக்குத் தெய்வப் பனுவல்களாக ஒளிவீசித் திகழ்கின்றன. தாங்கள் வாழ்ந்த சமூகத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களைத் தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வரும் மானுடச் சமுத்திரத்திற்கெனப் பொறுப்புணர்ச்சியோடு அர்ப்பணிப்பு உணர்வோடு படைத்துக்காட்டிய இலக்கியங்கள் எண்ணற்றவை. படைப்பாளிகளும் எண்ணற்றவர்கள். இவர்களில் சிலரே என்றைக்கும் மாண்புடையவர்களாகத் திகழ்கிறார்கள் அவர்களில் ஒருவர் திருமூலர். அவரின் அற்புதப் படைப்புதான் திருமந்திரமெனும் பனுவல்.

      இத்தகைய திருமந்திரத்தில் முன்னரே குறிப்பிட்டதுபோன்று இத்தகைய எளிமை எப்படி சாத்தியப்பட்டதென்பது வியப்பாகவே உள்ளது. படிக்குந்தோறும் படிக்குந்தோறும் மனத்தில் ஏற்படுத்தும் சத்திய உணர்வுகளை விளக்கமுடியாது அவற்றை அனுபவிக்கவும் அதன்வழி நடக்கவுமே வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வை மேம்படுத்த உதவும். அவ்வகையில் இக்கட்டுரையில் திருமந்திரத்தின் சில சொற்களையும் தொடர்களையும் அவையுணர்த்தும் மாண்புகளையும் சிறு அறிமுகமாக விளக்கமுற்படுகிறது. இது கடலின் அருகே கடல் கொண்டு வந்து சேர்த்த சிறு கிளிஞ்சல்களைப் பொறுக்குவதை ஒப்பினாலும். அவையே எத்தகைய ஒளிவெள்ளத்தைப் பரப்புகின்றன முழு சமுத்திரம் எத்தகைய ஆற்றலுடையதாகவுள்ளதென்பதையும் உணர்த்தவும் புரிந்துகொள்ளவுமான முயற்சியாக இக்கட்டுரை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

திருமந்திரச் சொற்கள், தொடர்கள்

           கருத்து வெளிப்படுவது அது ஏற்றிருக்கும் வடிவத்தின் வன்மையைப் பொருத்ததாகும். இந்த வன்மையின் பின்புலத்தில் கருத்தினை அடையாளப்படுத்தக்கூடிய சொற்கள் இருக்கின்றன. சொல்லும் அதுவுணர்த்தும் பொருளும் இதனைக் காட்சிப்படுத்தும் வடிவமுமமே ஒரு பாடலின் சிறப்பை மேலும் அணிகூட்டுகிறது. அத்தகைய ஆற்றலான பல பாடல்களைத் திருமந்திரத்தில் காட்சி கண்டு களிக்கலாம்.
            
நிலையாமை எனும் சொல்லும் தொடரும்

           மனித வாழ்வின் சிக்கல்கள் அவிழ்க்கமுடியாமல் மனிதன் தடுமாறுவது வாழ்வின் நிலையாமையைப் புரிந்து கொள்ள முடியாமல்தான். உலகில் நிலையாமை என்பது நிலையாமை எனும் சொல்லின் நிலையாமை மட்டுமே. மற்ற யாவையும் நிலையற்றதுதான். இந்த நிலையாமையை உணர்த்தும் தொடர்கள். அதுவும் சிறுதொடர்கள். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை, செல்வம் நிலையாமை. இந்த குறுந்தொடரின் ஒவ்வொன்றிலும் முன்னொட்டாகவுள்ள சொற்கள் இளமை, யாக்கை, உயிர், செல்வம் எனும் ஒவ்வொன்றும் ஓராயிரம் பொருள்விளக்கங்களைக் கொண்டவை. அவை மானுட வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது பிறப்புத் தொடங்கி இறப்புவரை நிழலாகத் தொடர்பவை. இவைகுறித்த திருமந்திரப்பாடல்கள் இச்சொற்களின் உண்மைத் தன்மையை சிறப்புறக் காட்டும்.
        மனித வாழ்வில் அவன் செய்யவேண்டியது அன்பு செலுத்துவதும் அறஞ்செய்வதுமாகும். இதுதான் அவனுக்கு இறந்தபின்பு நிலையான வாழ்வையளிக்கும் என்கிறார் திருமூலர். மற்ற யாவும் நிலையற்றவை எனவும் தெளிவுபடுத்துகிறார்.

            யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
            யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
            யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
            யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே

அவ்வளவுதான். ஒரு பச்சிலை, ஒரு வாயுறை, ஒரு கைப்பிடி, ஓர் இன்னுரை இத்தகைய சொற்கள் போதும் ஒரு மானுட வாழ்வை நடத்தி முடிக்க.

ஐந்தொழில்கள் எனும் சொற்களும் தொடர்களும்

           இறைவன் ஆற்றுகின்ற தொழில்கள் ஐந்தென உரைக்கிறது திருமந்திரம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். இவைதான் ஒரு மனிதனைக் கட்டுக்குள் வைக்கும் சொற்கள். மனிதனை படைப்பதும் காப்பதும் அழிப்பதும் உயிர்களுக்கு மாயைத் தன்மையைத் தந்து மறைப்பதும் அவற்றை விலக்கி அருளுவதுமாகும். அறியாமைக்குள் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு அறிவு விளக்கம் ஏற்படும்வண்ணம் மாயையிலிருந்து உடல், மனம், உயிர்கள் உலாவும் இடங்கள், அனுபவிக்கும் போகப்பொருட்களை அளித்தலாகும். அவ்வாறு அளிக்கப்பட்ட உயிர்களுக்கு ஒரு கால எல்லையில் பயன்படும்படிச் செய்தல் காத்தலாகும்.  இவ்வாறு அனுபவித்தப் பொருட்களிலிருந்து உயிர்களைச் செயலற்று நிறுத்திப் பிரிப்பது அழித்தலாகும். இவ்வாறு உயிர்களுக்கு அளிக்கப்பட்டவற்றைக் கொடுத்தும் உயிர்கள் ஆணவ மலத்தில் நிற்கும். தன்மையில் இறைவன் தன்னை நினைக்காமல் அழியும் இந்தப்பொருட்களையே உயிர்களை நினைக்க வைப்பது மறைத்தலாகும். ஒருநிலையில் இந்த ஆணவமலத்தின் தன்மை குறைந்து உயிர்கள்  இறைப்பற்று மிகுதியாகிறபோது இறைவனிடம் மட்டும் பற்றுமிகும்போது ஒப்புக்கொடுக்கும்போது இறைவன் தன்னை அடைய வழிவகை செய்வதே அருளல் ஆகும். இச்சொற்கள் ஒவ்வொன்றினையும் விரிக்க இக்கட்டுரையில் இடம்போதா. .

சைவநெறிச் சொற்களும் தொடரும்

      சரியை, கிரியை , யோகம் , ஞானம் என்பது நான்குவகை சைவ நெறிச்சொற்களாகப் பேசப்படுகின்றன. இவ்வுலகத்தையே தன்னடிப்படுத்திக்கொண்டிருக்கிற சிவன் விளங்கத் தோன்றும் நிலைக்களமாக மேற்சுட்டிய நான்குவகை நெறிகளைச் சுட்டுவர் சான்றோர்.

            ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
            பேரறி வாளன் பெருமை குறித்திடில்
            ஏருமிம் மூவுல காளி, இலங்கெழுந்
            தாரணி நால்வகைச் சைவமு மாமே

என்கிறார் திருமூலர்.

           சிவனுக்குச் செய்யப்படும் புறப்பூசைகள் சரியை எனும் நெறிக்குள்ளடங்கும்.இறைவனை எவ்வகையிலாவது வழிபட்டு நிற்பது என்பது உயிர்களுக்கான உய்யும்நெறியாதலால் புறப்பூசையும் சரியை எனப்பட்டது.  கிரியை என்பது புறத்தேயும் அகத்தேயும் இறைவனுக்கு ஆற்றும் தொண்டினைப் புலப்படுத்துவதாகும். மலர்தூவி வழிபடுதல் கிரியை என்றும் சுட்டுவர். கிரியைப் பணியைச்செய்பவன் செயல்களைப் பின்வரும் பாடலில் உணர்த்துகிறார்.

                  அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
                  செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
                  முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
                  என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே

அன்பில் மனம் நெகிழ்ந்துருகி, அவனிடும் பணிகளைச் செய்தல், வேண்டுவது அவனருள் மட்டிலுமே வேறொன்றில்லை என்பதாகும்.
      வேறு எதிலும் பற்றறுத்து இறைவன் ஒன்றையே எண்ணித் திளைத்தல் என சுருங்க யோகத்தினை வரையறுக்கலாம். இது எப்படி இறைவன் யோகத்தில் வெளிப்பட்டு நிற்பான் என்பதைப் பின்வரும் பாடலில் தெளிவுறுத்துகிறார்.
         
                  பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
                  சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
                  ஓவியம் போல உணரவல் லார்கட்கு
                  நாவி அணைந்த நடுதறி ஆமே.

சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது என்கிறார். இந்த யோகத்தைத் தியானத்தில் ஆழ்ந்து செலுத்தியுண்டாகிற பேரன்பில் எல்லாப் பயன்களும் விளையுமென்பதைப் பின்வரும் பாடலில் எளிமையாகப் புலப்படுத்துகிறார் திருமூலர்.

            விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
            விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
            விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
            விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே

அடுத்து ஞானம் என்பது சிவனின் அறிவைப் பெறுவதாகும். அல்லது சிவ அறிவை இறைவன் உயிர்களுக்குப் புகட்டுவதாகும் என்றுரைக்கலாம். இதன் சிறப்பை

            ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
            ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
            ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
            ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே

என்று அழகாகக் காட்சிப்படுத்துகிறார்.

    சரியை என்பது – ஆண்டான் அடிமை உறவு
    கிரியை என்பது – தந்தை மகன் உறவு
    யோகம் என்பது – தோழனுக்கும் 
                               தோழனுக்குமான உறவு
    ஞானம் என்பது – குருவுக்கும் 
                                சீடனுக்குமான உறவு

என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். மேற் சுட்டியவற்றையே ஒன்று தாச மார்க்கம், சற் புத்திரமார்க்கம், சக மார்க்கம், சன் மார்ககம் என்றும் உணர்ந்து கொள்ளலாம். 

      திருமந்திரம் பற்றிப்பேச சொற்களும் போதா சொல்லியுரைக்க வாயும் போதா வாழ்நாளும் போதா. திருமந்திரத்தில் இதுபோன்ற பல சொற்கள் நிரம்பி வழிகின்றன. சைவ சித்தாந்தப்பொருளை அறியும் காட்சி அளவை, கருதல் அளவை, உரை அளவை என்றும், பதி, பசு, பாசம் என்றும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும், எண்குணங்களும்,என நிறைய தனித்தசொற்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக தொடர்கட்டுரைகள் எழுதி திருமந்திரத்தின் பெருமையை உலகிற்குத் தெரிவித்து அதனால் சிவனருளை நாமும் பெறலாம்.










Sunday, May 10, 2020




அன்புள்ளங்களுக்கு

                       வணக்கம்.

                       வலைப்பதிவில் தொடர்ந்து இயங்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்துகொண்டேயிருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் செய்யவேண்டும் என்றால் உடனே செய்துவிடும் நான் இவ்வளவு சுணக்கம் ஏன் கொண்டேன் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இருப்பினும் எழுதாமல் என்னால் இருக்கமுடியாது என்பதால் தொடர்ந்து நூல்கள் எழுதுவதிலும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதிலும் மாணவர்களுக்கு வழிகாட்டலிலும் எனத் தொடர்ந்து இறுக்கமாகத்தான் இருந்துவருகிறேன். என்றாலும் எனக்கு வலைப்பதில் இந்த ஆண்டு எழுதாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. ஆகவே நான்கு மாதங்கள் எழுதாதப் பதிவையும் கண்டிப்பாக எழுதிவிடுவேன். அதற்கான உறுதியுடன் இருக்கிறேன். அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற இருப்பதால் இந்த சுணக்கம் நீங்கிவிடும் எனவும் நம்புகிறேன்.
                    தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருப்பதால் வீட்டிலேயே இருக்கும் என் மாணவர்களுக்குப் பாடங்களை வலைப்பதிவு வழி சுருக்கமாக எழுதப்போகிறேன். அவர்களுக்குத் தெரிவித்து இதனை வாசித்துத் தேர்வில் பயன்கொள்ள வைக்கலாம் எனக் கருதுகிறேன். இது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. என்றாலும் தொடர்ந்து எழுத எண்ணுகிறேன்.
                     இதுதவிர  குரல்பதிவின் வழியாகவும் பாடங்களைத் தயாரித்துள்ளேன். அடுத்து யூ ட்யூப் வழியாகவும் பாடங்களைப் பதிவேற்ற நினைத்துள்ளேன்.
                     இத்தனையையும் எழுதக் காரணம் என் வலைப்பதிவிற்குக் கருத்துரையும் அன்பு வாழ்த்துகளையும் தரும்  நீங்கள் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதுதான்.
                      நன்றி.

                    மிகு அன்புடன்
                         ஹரணி.

Tuesday, November 19, 2019



                     வலை… (நாடகம்)
            காட்சி – ஒன்று  உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி.
      (விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிற இருள் சூழ்ந்த பொழுது. விடியற்காலைக்கு முந்தின நேரம். அந்த வீடு கீற்றால் வேயப்பட்டிருந்தது. அகலம் ஒடுங்கிய வீடு.  வாசலில் இரண்டு படிகள் வைத்த வீடு. இருபக்கமும் சதுர திண்ணைகள். ஒற்றை மூங்கில் தூண்கள். மூங்கில் தூணை ஒட்டிய இடதுகாலை உள்செருகி வலதுகாலை இடதுகால் மேல் கொக்கிபோல செருகி மருதமுத்து உட்கார்ந்திருக்கிறார். அப்படியே ஒருபீடியைப் பற்ற வைக்கிறார். பீடியில் பற்றிய நெருப்பு அசையாத மின்மினியைப் போல மினுக்கிறது. கன்னத்தில் பெருங்குழிகள் விழ பீடியை உள்ளிழுக்கிறார்..)
மருதமுத்து : ஏண்டி.. கனகவல்லி.. இந்நேரத்துல என்னடி கொல்லையில
உருட்டிக்கிட்டிருக்கே..பூச்சிப்பொட்டு கடிச்சு தொலைக்கப் போவுது..

கனகவல்லி – :அப்படியாச்சும் ஒண்ணு நடந்தா நல்லாத்தான் இருக்கும்.
மரு -:         ஏண்டி இத்தனை சலிப்பு கொட்டித் தீர்க்கறே.. விடிஞ்சுடுமா
கனகு - :     என்ன கேட்டுத்தான் எல்லாம் நடக்குது.. விடியாம
               போயிடுமா..

மரு..  :        உன்கிட்ட பேச முடியாது.. நான் கௌம்பறேன். .

         (என்றபடி உள்கூடத்தில் மூங்கில் தட்டி பரணிலிருந்து அந்த வலையை எடுத்து உதறுகிறார்.. கூடவே கூடையை எடுக்கிறார்.. இடது கையால் பீடியை உள் இழுத்தபடி…)
         கொல்லைப்புற இருளிலிருந்து கசிவதுபோல கனகவல்லி வருகிறாள். கூடவே வறட்டு இருமலையும் அழைத்துக்கொண்டு)
மரு…    (முனகுகிறார்) – போன வாரமே பெரியாஸ்பத்திரிக்கு   அழச்சிட்டுப் போலாம்னு நெனச்சேன் மறந்துடுச்சி.. வறட்டுறா பாவம் தொண்டை வலிச்சுக் கெடக்கும்..
கனகு…    பாடையிலே போறப்ப எல்லாமும் போயிடும்.. பொக்க இரும
           எல்லாம்..

மரு  -     ஏண்டி இப்படி நாளு முழுக்க ஓயாம பேசி..சாவறே..

கனகு –    இப்ப எங்க பயணம்?
மரு –      ரொம்ப நாளாச்சுடி.. மடுவுக்குப் போயி.. நாக்கு மீன்  
           திங்கணும்னு   துள்ளுது.. நானே போய் வல வீசிட்டு
           அள்ளிட்டு வரேன்..

கனகு –   ஆறு தெவசம் போயிடுச்சி.. அவன் செத்து.. இப்ப என்ன மீன்
           துள்ளுது நாக்குலே…

மரு –      கெண்ட மாதிரி சலசலங்காத.. போயிட்டு வரேன்..

       (தோளில் துண்டுபோல வலையைப் போட்டுக்கொண்டு கூடையை சைக்கிளின் பின் கேரியரில் வைத்துக்கொண்டு வெண்ணாறு நோக்கி சைக்கிளில் ஏறி மிதித்துப்போகிறார்)
                        0o0  

                          
                காட்சி 2  - கனகவல்லி.. (நினைவலைகள்) மகன் கோவிந்தராஜன்…

கனகு. -  (தனக்குள் பேசுகிறாள்)  புள்ள போயி ஆறு தெவசம் ஆயிடிச்சி..
           கவுச்ச நாத்தமும் போயிடிச்சி புள்ளயோட.. )

           (கனகவல்லியின் பிள்ளை கோவிந்தராஜ்.. அருமையாக மீன் பிடிப்பவன்.  அவன் இறந்துபோய் ஆறாண்டுகள் ஆகிவிட்டன. அவன் உயிரோடு இருந்த காலங்களை நினைக்கிறாள் கனகவல்லி.)

கனகவல்லி – கோவிந்தராசு.. ஏம்பா இந்த அகாலத்துல ஆத்துக்கு
                 கௌம்பிட்டே.. கொஞ்சம் வெள்ளி மங்கட்டும்..

கோவிந்தராஜ் – என்னம்மா நீன்னு.. இந்நேரத்துக்குப் போனா மடுவுல
                  தண்ணி அசயாம கெடக்கும்.. விராலும் மயிலையும்
                  விலாங்கும் ஒதுங்கி  நிக்கும்..ஒரு வீச்சு விட்டாப்போதும்
                .. ஆறு கிலோ தேறும்..6 மணிக்குள்ள கூடய ரொப்பிட்டு
                 வந்துடுவேன்.. இன்னிய  பொழப்பு ஓடிப்போயிடும்.
.
கனகவல்லி –   பாத்துப் போயிட்டு வாப்பா..
கோவி -  நெதமும் இதே பாட்டுப் பாடறே.. அலுக்கவே அலுக்காதா
           ஒனக்கு.. மார்க்கெட்டுக்குப் போவ மிச்சத்துல வரால வறுத்து
           மயிலையை கொழம்பு வை.. புளிப்புருண்ட மாங்காவ
           வெட்டிப்போட்டு புளிப்ப ஏத்து செம புடி புடிக்கணும்மா..

கனகு  :  - சரிப்பா.. உன்னாசப்படியே வச்சிடறேன்..  பாத்துப் போயிட்டு
             வா.. நீன்னு,

கோவி –:    சரி வரேம்மா.. விடமாட்டே  ஒரே பல்லவிய..


      (  பொழுது விடிந்து 8 மணியைத் தாண்டுகிறது. வாசலுக்கும் உள்ளுக்குமாக நடை காட்டுகிறாள் கனகவல்லி..

          வாசலில் குரல் கேட்கிறது..)
குரல் – ; அப்பாயி.. கனகவல்லி அப்பாயி.. மோசம் போயிட்டோம் அப்பாயி..
     (குரல் பதறுகிறது.. கனகவல்லி வாசலுக்கு தாவி வருகிறாள்..)
கனகு : – என்னடா ஆச்சு.. ஏண்டா இப்படி கத்துறே..
குரல் கொடுத்தவன் :– அப்பாயி.. நம்ப மாமா தண்ணியிலே மாட்டிக்கிச்சி..
                         நம்பள மோசம் பண்ணிடிச்சி அப்பாயி..

கனகு :  – அடப்பாவி பாவி.. என்னடா சொல்றே என் மவனுக்கு
           என்னாச்சு?

      (  கோவிந்தராஜ் இறந்துபோனதை உறுதி செய்கிறான் குரல்
          கொடுத்தவன்)

      ( ஓடுகிறார்கள் ஆற்றுக்கு.. மடுவு தண்ணீரில் உள்ளங்கால்கள் இரண்டு முகம்போல தெரிய உடம்பு முழுக்க தண்ணீருக்குள் அமுங்கி கோவிந்தரா.ஜ்..)

      கனகு : – அய்யய்போ மகமாயி.. எம்புள்ள பறிச்சிட்டியே.. என்னாச்சு
                 எப்பா கோவிந்தராசு.. கோவிந்தராசு.. என்றபடி அப்படியே
                  ஆற்றங்கரையில் மயங்கி விழுகிறாள்..

           கூட்டம் கூடிநின்று கதறுகிறது. மருதமுத்து கேள்விப்பட்டு ஓடிவந்து கதறுகிறார்.. கோவிந்தராசு உடலை அப்படியே எடுத்துக் கரையில் போடுகிறார்கள்.


ஒருவர் –: என்னப்பா ஆச்சு கோவிந்தராசுவுக்கு.. நல்லா நீச்சல் தெரியும்..
          அவன் வலைக்கு மாட்டாத மீன் இல்லியேப்பா..

ஒருவர் –: இல்லண்ணே எல்லாம் புடிச்சிட்டான்.. கடசியா வலய அலச
           தண்ணில போட்டிருக்கான் அதுபோய் பாறாஙகல்லுல
           சிக்கிடிச்சு.. தண்ணியில முங்கி அத எடுத்துட்டிருக்கான்.. பாறை
           நழுவி கை மாட்டிக்கிடிச்சுப்போல..அப்படியே தண்ணிக்குள்ள
           கைய எடுக்கமுடியாம தண்ணிய குடிச்சிருப்பான் போல..

ஒருவர் –: பாடிய தூக்குங்கப்பா.. வண்டி வந்துடிச்சா.. இப்படியே பழைய
            ரோட்டுலேயே வீட்டுக்குப் போயிடலாம்..

ஒருவர் :– ஏம்பா யாராச்சும் மருத்முத்து அண்ணனையும் அண்ணியையும்
           அழச்சிட்டு வாங்க..
                                 000
                  காட்சி – 3   மருதமுத்து கனகவல்லி
மரு   : - நான் உசிரோட இருந்து என்ன பண்ணப்போறேன்.. இனி
        வாழணுமா நான்.. எம் புள்ள வாழாத வாழ்க்கை எனக்கு
         வேண்டுமா..

கனக :– இனிமே ஒரு கணம் இருக்கமாட்டேன்.. ஏதாச்சும் செஞ்சுட்டு
         எம்புள்ள போன இடத்துக்கு நானும் போயிடுவேன்.. மகமாயி..
         கண்ணில்லாவளே.. பழிகாரி.. ஒனக்கு எம்புள்ளதான் கெடச்சுதா..
          இப்படி வாரிப்போட்டுக்கிட்டியே நீ நல்லாவே இருக்கமாட்டே..
         ஒங்கோயில்ல ஒரு சூடம் ஏத்தமாட்டேன்.. ஒரு விளக்கு எரியாது..
         பாவி கொலகாரி.. உங் கண்ணு அவிஞ்சுப்போயிடிச்சா..




மரு  - அப்படி திம்பானே விராலு வறுத்து வச்சா.. அத்தனையும் திம்பான்..
        அப்பாவுக்கு வேணாம்பான்னு.. என் தட்டுல உள்ளதயும் எடுத்து
        திம்பானே.. விலாங்க யாருக்கும் கொடுக்கமாட்டான்.. அத்தனயும்
        எனக்குத்தாம்பா. நறுவுசா திம்பான்..  அந்த கடவுளுக்குக்
        கண்ணில்லியா.. இப்படி கன்னி கழியாம எம்புள்ள
        தூக்கிட்டுப்போயிடிச்சே.. அய்யோ. அய்யோ..

      (தலையிலடித்துக்கொள்கிறார்) வேண்டாண்டி கனகம்  நாம்பளும் செத்துடுவோம்..
                           00000000000

                    காட்சி 4 மருத முத்து கனகவல்லி பக்கத்து வீட்டு
                              பையன் ஒருவன்.

          விடியும் பொழுது  வெறுங்கூடையுடன் திரும்பி வருகிறார் மருதமுத்து. சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு  கூடையையும் நனைந்த வலையையும்  கொண்டு வந்து திண்ணையில் போடடுவிட்டு உட்கார்ந்துகொள்கிறார்.

    வாசலில் குரல் கேட்கிறது பக்கத்துவீட்டு பையன்.

பையன் :  – ஏத்தா.. தாத்தாவுக்கு பயித்தியம் புடிச்சிடிச்சா.. கிறுக்கு தாத்தா.
கனகு –   ஏண்டா அப்படிப் பேசறே.. வாய ஒடச்சிப்புடுவேன்.. அவரப்
           பேசுனா..

பையன் : – என் வாய ஒடக்கறதிலேயே இரு.. என்னா காரியம் பண்ணாரு
           தெரியுமா

கனகு – என்னடா பண்ணாரு?

பையன் :  – நல்ல வலை போட்டாரு நாலஞ்சு வீச்சுலேயே வலயில
          விராலும் விலாங்கு அத்தன மாட்டிக்கிச்சு..

கனகு   – வெறுங்கூடல்ல வந்துருக்கு.. நீதான் பயித்தியமாட்ட உளறுறே

பையன் :–
) இல்லாத்தா.. எல்லாத்தயும் கூடயில போட்டுட்டு வலய
             கழுவினாரு.. அப்புறம் ரொம்ப நேரம் உக்காந்துக்
            கிட்டிருந்தாரு.. ஏந் தாத்தா வூட்டுக்குப் போவுலியான்னே..
            போவணும்டான்னாரு.. சட்டுன்னு கிறுக்குப் புடிச்சமாதிரி
            அத்தன மீனயும் அப்படியே கூடயோடு ஆத்துல
            கவுத்துப்புட்டாரு ஆத்தா.. அது மாதிரி விலாங்கு
           பாத்துருக்கமுடியாது ஆத்தா.. இப்படி யாரு செய்வா.. அதான்
           கிறுக்குபுடிச்சிடிச்சுன்னு சொன்னே..நா வரேன்.. (பையன்
           ஓடிப்போகிறான்)

(கனகவல்லி அப்படியே மருதமுத்துவுக்கு எதிரே உட்கார்ந்து அப்படியே அவரைப் பார்க்கிறாள். அவர் அவளைப் பார்க்கிறார்..)
(எதுவும் கேட்காமல் அவரையே பார்ததுக்கொண்டிருக்கிறாள்)
மருதமுத்து –:  என்னமோ ஆச வந்துடிச்சி.. போய் புடிச்சேன்..
                விலாங்குதான் நெறய மாட்டுனுச்சி.. என்ன என்னிக்கு
                விலாங்க சாப்புட வுட்டுருக்கான் அவன்.. நெனப்பு
             வந்துடுச்சி. யப்பா எல்லாத்தையும் நாந்தான்
              திம்பேங்கறான்.. அதுவும்  ஆத்துக்குள்ளே    
               இருந்து கேக்றான்.. அப்படியே கூடயோட
                 கவுத்துட்டேன்..

                              (முற்றும்)

அடுத்த நாடகம்  -  ஆடிப்பாவை (இலக்கிய நாடகம்)
 




அன்புள்ளங்களுக்கு...

           வணக்கம்.

           இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகிறேன்.
          அதன் தொடக்கமாக இந்த வலை நாடகம்.
          வலைப்பதிவில வெளியிட்ட பின் நூலாக்கம் பெறுங்காலத்தில் இன்னும் மெருகேறும் இவை.
        உங்கள் கருத்துகளை எதுவாயினும் எழுதுங்கள். அது என்னை மெருகேற்றும்.
           இனி ஒவ்வொன்றாய் உங்களுக்கு..
அன்புடன்
ஹரணி.
19.11.19

Tuesday, November 13, 2018



        என் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே

                               வணக்கமுடன் ஹரணி.

                               போன திசம்பர் வந்தேன். பல்வேறு சூ ழமைவுகள். ஆகவே வரும் 2019 இல் புதிதாக் வருகிறேன். நிறைய புதிய பதிவுகளுடன். மாறுபட்ட  சுவையான எண்ணங்களுடன். என் மேல் அக்கறை கொண்டுள்ள என் பதிவுகளை உடன் வாசித்து எனக்கு அன்புகாட்டும் மதிப்புமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள், திருமிகு ஜிஎம்பி ஐயா அவர்கள் திருமிகு செல்லப்பா அவர்கள்  எப்போதும் அடக்கத்துடனும் அமைதியுடனும் பொறுமையுடனும் தொடர்ந்து இயங்கும் என் இளவல் திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் திருமிகு எழுத்தாளர் ரிஷபன் போன்றோருக்கு என்றும் என் அன்பின் வணக்கங்கள்.

                          என்றும்போல எனக்கு அன்புரையுங்கள்.

                          நிறைய செய்திகளைச் சுவையுடன் பயனுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகிறேன் 2019 இல்.

                          வணக்கம்.

                          என்றும் வாழ்க செழித்து நீங்களும் உங்கள் குடும்பங்களும்.

                         இன்னும் பல நண்பர்களையும் இங்கே நினைக்கிறேன். அவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்.

                          வணக்கம்.

                          இனிய பொழுதில் அணையா நெருப்புடன் ஹரணி. 

Sunday, December 31, 2017

ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும்
நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள்.
மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும்
அல்லது
விளக்கைத் தேய்த்தவுடன் பூதம் வந்து கேட்டதை எல்லாம்
நிறைவேற்றித்தருவது ஒருபோதும் வேண்டாம்
அவை வாழ்வின் சுவையல்ல…சுவைக்காது..
அது வாழ்க்கையுமல்ல
கடந்துபோன ஆண்டுகளில்
நிகழ்ந்ததுபோன்றே நிகழ்ந்தாலும்
கவலையில்லை
எதனையும் எதிர்கொள்ளும் திறனும்
எல்லாவற்றிலும் வென்றெடுக்கும்
நம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கடின உழைப்பும்
ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும்
இவ்வாண்டிலும்
குறையாது
நமக்கு நிறைந்திருக்கட்டும்
இதனைப் போராடிப் பெறுவோம்
                                                பூவின் உன்னதமான ரகசியமான தேனை
எடுப்பதற்கு ஒரு தேனீ ஒருநாளைக்குத் தொடர்ச்சியாக ஆறு மைல்கள் பறக்குமென்று
அறிவியல் சொல்கிறது..
நம் கண்முன்னே பிருமாண்டம் காட்டும் மிகப்பெரிய தேன்கூட்டையும் அதில் சேகரிக்கப்பட்ட
தேன்துளிகளையும் எண்ணிப்பாருங்கள்..
எத்தனை தேனீக்கள்.. எத்தனை மைல்கள்.. சிறகடிப்பென்று..
நம் வாழ்க்கையும் உறவுகளும் தேன்கூடுதான்
உழைப்போம் உயர்வோம்
அதற்கெனப் போராடும் வாழ்வே அமையட்டும்
ஒவ்வொரு புத்தாண்டிலும்
அதுதான் வாழ்வதன் அடையாளம்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

Friday, July 14, 2017

ஊட்டும்.... (நாவல்)

அத்தியாயம் 3   ஊழ்வினை 1

காவேரியில்  நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்குப்பயன்படும். கரையோரங்களில் பச்சை இழைந்து கிடந்தது. எல்லாவகை கீரைகளும் பயிரிடப்பட்டு மண்டிக் கிடந்ததன. பாலத்தின்மீது நின்று நுரைத்தோடும் காவிரியை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். மேற்கில் சூரியன் மஞ்சள் நதிக்குள் இறங்கிக்கொண்டிருந்தான். சில பறவைகள் வரைந்து உயிர்பெற்றதுபோல பறந்துபோயின வடக்கிருந்து தெற்காக. வயல் வேலை முடித்தவர்கள் கொல்லை வேலை முடித்தவர்கள் தங்கள் மண்வெட்டிகளை.. கடப்பாரைகளைக் காவிரியில் கழுவி கரையில் போட்டுவிட்டு வேட்டியை அவிழ்த்துக்கொண்டு கோமணத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே குளித்துக்கொண்டிருந்தவர்கள் கழுத்தளவு மூழ்கிக்கொண்டு அப்படியே வாயால் தண்ணீரை விழுங்கி அண்ணாந்து உமிழ்ந்துகொண்டார்கள். சிலர் முழங்காலளவு தண்ணீரில் துண்டைப் பிழிந்து உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தார்கள்.

           என்ன மாமா.. வேலை முடிஞ்சிடிச்சா..?

           எங்க.. இன்னும் ரெண்டு மா கெடக்கு.
.
           மேற்கே போயிட்டு வந்திட்டியா..

           எங்க?

           உன் மாமியார் வழில யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு உம் பொண்டாட்டிதான் சொல்லிட்டுபோச்சு.. பிள்ளைகளை தரதரன்னு இழுத்துக்கிட்டுப்போனா.

           ஏம்மான்னே.. பஸ் போயிடும் பெரியப்பான்னுட்டு  பதில்பேசிக்கிட்டே போச்சு. நீ போவலியா..?

           நாந்தான்.. வயல்ல ஆள இறக்கிவிட்டுட்டேன்.. நடுறதுக்கு. நா போனா அவ்வளவுதான்.. பொழப்பு கெட்டுடும்.. மாமியாளுக்கு அத்தை மவளோட புருஷனாம்.. யாரு பாத்தா முன்னேர பின்னேர.. வயசானா சாவ வேண்டியதானே.. நாம போவாட்டி என்ன பொணம் வெந்துபோவாதா என்ன?
           அப்படியெல்லாம் பேசாதப்பா..  யாரு சாவ யாரு நிறுத்தி வைக்கமுடியும்? நாலு ஒறமுறை, சாதி, சனம் சொந்தப் பந்தம் வேணுமுன்னா அப்படித்தான் இருக்கும்.

           என்னங்கடா..பொழுதுபோயிடிச்சி.. உங்க அலப்பற முடியல்ல.

           இது வேற கதை மாமா..

           லேசாக இருள் கவியத் தொடங்கியது.

           பாலத்து முக்குக் கடையில.. குண்டு பல்பு உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்னு மினுக்குமினுக்குன்னு எரிய ஆரம்பித்தது.  பாய்லர் கிட்ட  வேலு டீ போட்டுக்கிட்டிருந்தான்..

           என்னா போட்டிருக்க வேலு இன்னிக்கு?

           காலிப்ளவர் பக்கடா போட்டேங்.. முடிஞ்சிடிச்சி.. காராச்சேவுதான் இருக்கு.  தூள் பக்கடா ஒரு ஆளு சாப்பிடலாம்.

           கொடு..

           இருள் அடர அடரக் குண்டு பல்பு வெளிச்சத்தில் சுவற்றில் வரைந்த ஓவியங்கள்போல இருந்தார்கள். கருப்பு உடம்பில் கட்டியிருந்த வெள்ளை வேட்டிதான் ஆளு கணக்குக் காட்டிக்கொண்டிருந்தது.

           தெருவுக்குள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

           மாப்ள.. நம்ப மாரிமுத்து சித்தப்பா வேஷங்  கட்ட ஆரம்பிச்சுடிச்சி.. ஒருமணிநேரம் கச்சேரிதான்.

           மாரிமுத்து கையில் அரிவாளுடன்..  யாரா இருந்தாலும் வெட்டுவேன்.. பாக்கறியா.. ஒரே வெட்டு ஓடிப்போயிடும் தலை கண் காணாம.. வா.. வா..

           நீ யாரு?

           மாணிக்கத்து மவன்.

           நீ போ.. உனக்கும் எனக்கும் பகையில்ல..  வா.. வெட்டுனா ஒரே வெட்டுதான்.. மாரிமுத்து குரல் அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் சுவற்றிலும் பட்டு திரும்பி வந்து தெருவை நிறைத்து அதிரடித்தது.

           மாரிமுத்து கதை ஒரு தனிக்கதை.

           காலம் கண்ணுக்குத் தெரியாதது என்பதால் அதுகுறித்த அச்சம் நம்மிடம் இல்லை. காலம் தன் வேலையைக் காட்டுகிறபோதுகூட அதுபற்றி சிந்தனையும் குறை கூறுவதும் இல்லை.

           ஆனால் காலம் பொல்லாதது. அது யாரை  வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால் செய்வது தெரியாமல் செய்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும் தன் விளையாட்டின் விளைவுகளை.

           மாரிமுத்துவின் கதையும் அப்படித்தான்.

           ஒல்லியான உடலமைப்பு. அதில் ஆங்காங்கே எலும்புகள் துருத்திக் கிடந்தாலும் அதில் ஓர் அழகு மண்டிக்கிடக்கும். நெஞ்செல்லாம் புதர்போல முடி நிறைந்திருக்கும். கை, கால்களிலும் விளைந்த வயலின் கதிர்களைப்போல மடித்தபடி மயிர்க்கற்றை மாரிமுத்துவிற்கு ஓர் தனித்த அடையாளத்தையும் அழகையும் தந்திருந்தது. நன்றாகத்தான் இருந்தார்.

           மூன்று மகன்களும் மூன்று மகள்களும் என ஆறுபிள்ளைகள் 
பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

           அப்படி நினைத்துக்கொண்டுதான் வாழ்ந்தார்.

           உள்ளூரிலேயே மாரிமுத்து மனைவியின் இரண்டு தங்கைகளும் வாக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் யாருடனும் ஒட்டாது. ஒட்டிய குடும்பத்தின் சகலை கோவிந்தன் மாரிமுத்துவுடன் அந்நியோன்ய சிநேகம்.

           அதுதான் செய்யக்கூடாத செயலை செய்ய வைத்தது.

           யாரறிவார் என்று அவர்கள் துணிந்து அந்த காரியத்தைச் செய்தார்கள்.

           அவர்கள் செய்த செயலை யாருந்தான் அறியவில்லை. ஆனால்  இருவருக்கு மட்டும் இவர்களின் செயல் தெரியும்.

           ஒன்று ஒரு பெண்.

           இன்னொன்று கடவுள்.

           பெண் என்ன செய்வாள். தவித்து அடங்கினாள். பதறிக் கலங்கினாள். பரிதவித்துப் புலம்பினாள்.

           ஆனால் மனதுக்குள் கோபம் நெருப்பாய் வளர்ந்து கிடந்தது.

           வளர்ந்து கிடந்த நெருப்பில் சொற்களைக் கொண்டி அள்ளி மனங்கொண்ட மட்டும் வீசினாள்.

           மாரிமுத்துவும் கோவிந்தனும் அதில் நனைந்தார்கள்.

           கவலையின்றிப் பேசி மறந்தார்கள்.

           கடவுள் மறக்கவில்லை என்பதை மாரிமுத்துவின் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வில் உணர்த்தினார்.

           கீரைக் கூடையில் கீரை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டிற்குப் போன மாரிமுத்துவின் மனைவி வேலாயி ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்கையில் அடிபட்டுத் துண்டுதுண்டாகிப்போனாள்.

           சிதறிய பழங்களைப் பொறுக்குவதுபோல அவள் உடலைப் பொறுக்கிக்கொண்டுபோனார்கள்.

      பார்த்த மாரிமுத்து அன்றிலிருந்து மனம்  வெதும்பி பைத்தியமானான். எத்தனை வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. யாரைப் பார்த்தாலும் கையில் அரிவாள் எடுத்துக்கொண்டு வெட்டுவேன் என்று துரத்தத் தொடங்கினான்.

           ஒரு நாள் கோவிந்தனை அந்த அரிவாளோடு துரத்த அதுவும் விபரீதமாய் முடிந்தது இன்னொரு கதை.

                                                                                                                (ஊழ்வினை தொடரும்)