Tuesday, April 16, 2013

முனைவர் பட்ட ஆய்வுகள்,,,,நெகிழ்ச்சி...



                  தமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்தலைப்பில் ஏற்கெனவே வேறு யாராவது ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா..நாம் தெரிவு செயதிருக்கும் தலைப்பைத் திறம்படச் செய்வதற்கான வாய்ப்புக்கள்,, செய்யப்போகும் ஆய்வுகுறித்த நமது நிலைப்பாடு (அதாவது கருதுகோள் என்பார்கள் ஆய்வுலகில். இதைப் பற்றிச் சுருக்கமாக சொல்வது என்றால் கருதுகோள் என்பது  தெரியாத ஊரில் கையில் உள்ள முகவரியைக் கொண்டு தேடுவது) இவற்றைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் ஏதோ ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து  அதுபற்றிய எந்த பார்வை நுர்லையும் வாசிக்காமல் நிறைவு செய்து முனைவர் பட்டம்  பெறுவது என்பது இயல்பாகியிருக்கிறது (இதில் வழிகாட்டிக்கும் தெரியாமல் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்கும் தெரியாமல் ஒரு தலைப்பில் நிகழும் கூத்தெல்லாம் இருக்கிறது) நோக்கம் எப்படியாவது ஒரு முனைவர் பட்டம் பெறுவது, இவர்களுக்கு முனைவர் பட்டம் வழஙகும் வாய்மொழித்தேர்வில் கலந்துகொண்டு பார்வையாளராக உட்கார்ந்தால் போதும் மூன்றாண்டுகள் பாடுபட்டு செய்யும் முனைவர் பட்ட ஆய்வுகுறித்து ஐந்துநிமிடம்கூட சொல்லத்தெரியாமல் அப்படியே பத்து பக்கங்கள் நோட்ஸ்போல் எடுத்துக்கொண்டு அபப்டியே மேடையில் வாசித்துவிட்டு ஏதேனும் பார்வையாளர்கள் கேள்விகேட்டால் அதற்கும் பதில் சொல்லத்தெரியாமல் ஆய்வேட்டைப் பார்த்து சொல்வது,, அல்லது தடுமாறுவது உடனே வழிகாட்டி ஆய்வேட்டில் குறிப்பிட்ட பக்கத்தைச் சொல்லி அந்தப் பக்கத்தில் விடை இருக்கிறது பார்த்து சொல் என்பதுபோல சொல்வது,,, இப்படி முனைவர்பட்டம்,,,,

                   இத்தனைக்கும் இப்படித் தரமற்ற ஆய்வுகள் நடப்பது 40 விழுக்காடுதான் ஆனால் அதேசமயம் 60 விழுக்காடுகள் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படும் ஆய்வுகள் உள்ளன, அவைதான் தமிழ்மொழியின் சிறப்பையும் பண்பையும் மதிப்பையும் இன்றளவும் கட்டிக் காத்துவருகின்றன, அதற்கு ஒரு சான்றாகத்தான் இந்தப் பதிவு,

                     திருச்சி துர்யவளனார் தன்னாட்சிக்கல்லுர்ரியில் ஒரு ஆய்வேடு, அதன் தலைப்பு வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமைச் சிந்தனைகள் என்பதாகும்,

                     ஆய்வாளர் பெயர்  கே, சரவணன்.

                     வழிகாட்டியின் பெயர். பேரா.எப். செல்வக்குமார்.

                     புறநிலைத்தேர்வாளர்  முனைவர் க. அன்பழகன்


                இந்த ஆய்விற்காக ஆய்வாளர் சரவணன் வைரமுத்துவின் ஒட்டுமொத்தப் படைப்புக்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார், ஆய்விற்காகக் கடினமாக உழைத்துள்ளார். ஆய்வின் பின்னிணைப்பில் வைரமுத்துவின் வாழ்க்கைக்குறிப்பு, இதில் பல புதிய தகவல்கள்,  அப்புறம் ஆய்வின் பாதை விலகாமல் ஆய்வுகுறித்து தரமான கேள்விகளைத் தயார் செய்துகொண்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து நேர்காணல் நிகழ்த்தியிருக்கிறார். அதில் பல கேள்விகள் வெப்பமான பகுதிகளைக் கொண்டவை என்றாலும் அதற்கு சிறிதும் முரண்படாமல் கோபப்படாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள்,

               இவ்வாய்வுத் தொடர்பாக கிட்டத்தட்ட 100 நுர்ல்களைப் படித்திருக்கிறார் ஆய்வாளர் சரவணன். இவை மனித உரிமை சார்ந்த நுர்ல்கள்.
அதுதவிர ஆங்கில நுர்ல்கள்..கலைக்களஞசியங்கள்..ஆய்வேடுகள்.. எனத் தெளிவாக தனது ஆய்வின் முனைப்பைக் கூர்மைப்படுத்த அத்தனை நுர்ல்களையும் வாசித்து தனது ஆய்வில் வைரமுத்துவின் 27 நுர்ல்களையும் வாசித்து (கவிதைகள்... சிறுகதைகள்.. நாவல்கள்..) அவற்றின் பொருண்மையோடு இவற்றையெல்லாம் ஒப்பிட்டுத் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்திருக்கிறார்.

                   அவர் ஆய்வின் போக்கிற்காக இயல்களைப் பகுத்திருக்கும் முறை பின்வருமாறு.

                 1.  உலக வரலாற்றில் மனித உரிமைச் சிந்தனைகள்
                   
                       (இந்த இயலில் மனித உரிமை என்கிற சொல்லுக்கான பொருள்
                     தொடங்கி உலகளவில் காலந்தோறும் மனித உரிமை குறித்த
                     பல்வேறு கருத்தாக்கங்களை வரலாற்றடிப்படையில் மாறாமல்
                     தொகுத்திருக்கிறார். மேலும் மனித உரிமை குறித்த எந்த ஐயப்
                    பாட்டிறகுமான தெளிவாக இவ்வியலை அமைத்திருக்கிறார்.

                2, இவ்வியலில் தமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்
                     இவற்றில் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் தமிழ
                      இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். காப்பியங்கள். பக்தி
                      இலக்கியங்கள் சித்தர்கள். தற்காலக் கவிதைகள் என அமைத்து
                     இவற்றில் பல்வேறு களங்களில் மனித உரிமைப் பற்றிய சிந்தனை
                      களைப் பட்டியலிட்டிருக்கிறார்,

                 3, வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமை சிந்தனைகள்
                       வைரமுத்து படைப்புக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்
                        பட்ட இயல்,

                  3, வைரமுத்து படைப்புக்களில் சமுக மதிப்புகள்

                              சமுகப் பதிப்புக்கள் குறித்த வைரமுத்துப் படைப்புக்கள்.

                  4, வைரமுத்து படைப்புக்களில் பெண்ணிச்சிந்தனைகள் - உரிமைகள்.

                              பெண்ணியம் குறிதத கருத்தாக்கங்கள்.

                   இப்படி மிகத்தெளிவாக ஆய்வாளர் சரவண்ன் அவர்கள் இவ்வாய்வேட்டை அளித்திருக்கிறார். இவற்றின் சிறப்புக்களாகச் சிலவற்றைக் குறிப்பிடவேண்டும்.

              1, வைரமுத்துவின் ஒரு நுர்லைக் கொண்டே ஒரு முனைவர் பட்டத்தை
                  அடைந்துவிடும் சூழலில் அவரின் 27 படைப்புக்கள் (ஒட்டுமொத்தம்)
                  முழுமையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது, அதாவது 27 முனைவர்
                  பட்டங்களை ஒரே முனைவர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்டது,
                  ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் தரமாக செய்யவேண்டும் என்ற
                 முனைப்புதான்,

              2, வைரமுததுவுடன் நிகழ்த்திய நேர்காணல். வைரமுத்து பதில்கள்.

              3, அதற்காக ஆய்வாளர் வைரமுத்துவின் 27 நுர்ல்களை வாசித்தது
                  மட்டுமின்றி மனிதஉரிமை தொடர்பாக 100 நுர்ல்களை வாசித்ததும்
                  அதனைப் பற்றி சரியாக ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டது.

              4, மேலும் ஆய்வேட்டை ஆய்வாளரே கணிப்பொறித்தட்டச்சிட்டது,

              5, வாய்மொழித்தேர்விற்காக பவர் பாய்ண்ட் விளக்கத்தையும்
                  ஆய்வாளரே மேற்கொண்டது,

               6, கையில் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் தான் மேறகொண்ட ஆய்வு
                  குறித்து 40 நிமிடங்களுக்கும் மேலாக ஆய்வாளர் சரவணன்
                  விளக்கம் சொன்னது, ஆய்வு தொடர்பாக கேட்கப்பெற்ற கேள்வி
                   களுக்கும் தரமான சரியான பதிலைச் சொன்னது,


                 இப்படி பல சிறப்புக்களைக் கொண்டது இவ்வாய்வு. பாராட்டிற்கு உரியவர் ஆய்வாளர் சரவணன்.

                     கடைசியாக ஒரேயொரு கேள்வி,,,,

                     இப்படித்தானே உலகில் எல்லா முனைவர் பட்ட (பிஎச்டி) ஆய்வுகளும் நிகழ்த்தப்படவேண்டும், இதுதானே ஆய்வின் முறை, இப்படித் தானே நிகழ்த்துகிறார்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது,

                        என்று கேட்கலாம்,

                         ஒரேயொரு பதில்,

                         ஆய்வாளர் சரவணன் அவர்கள் இரு கண்களும் தெரியாத பார்வையற்றவர்,

                    இத்தனையையும் இன்னொரு படிக்கக்கேட்டு மனதில் பதிய வைத்து நிகழ்த்தியவை,

                             என்றைக்கும் தமிழ்மொழி அழியாது. சரவணன் போன்ற உண்மையான தரமான தமிழ் ஆய்வாளர்கள் இருக்கும்வரை தரமற்ற ஆய்வுகள் மேலெழும்பியும் நிற்காது ,

                              எங்கள் வாழ்வும்
                              எங்கள் வளமும்
                              மங்காத தமிழென்று
                              சங்கே முழங்கு.......

                              எப்போதும் வெல்லும் தமிழ்,,,,,


             








Sunday, April 14, 2013

எங்கும் நிறைக்கட்டும்.....எப்போதும்....






                                 தொல்காப்பிய நெறியாய்

                                 சங்க இலக்கிய மாண்பாய்

                                 குறுந்தொகை காதலாய்

                                 கலித்தொகை பரிவாய்

                                ஆற்றுப்படை பெருமையாய்

                                 நாலடியார் நல்வழியாய்

                                 திருக்குறளின் பண்பாய்

                                 பைபிளின் புதுமையாய்

                                 குர்ஆனின் ஒழுக்கமாய்

                                 புத்தனின் மௌனமாய்

                                  எல்லாமும் எப்போதும்

                                 நிறைந்து வழியட்டும்

                                 திகட்டாது கனியட்டும்

                                 இந்தத் தமிழ்ப்புத்தாண்டு



                                 எல்லா வளங்களையும்

                                 எங்கும் நிறைக்கட்டும்,,,,


Monday, April 8, 2013

ஏற்றுக்கொள்ளுதல்.... சிறுகதை



                             
                                                   
 ஏற்றுக்கொள்ளுதல்.......


                          மனம் சோர்வாக உட்கார்ந்திருந்தான் ராகவன்,

                         வாசலில் குரல் கேட்டது,

                         தபால்காரப் பெண். தலையில் வெயில் குல்லாவுடன்,, சார்,, இந்தாங்க தபால்,, என்றபடி கொடுத்துப்போனாள்,

                             ராகவன் வாங்கி கடிதத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியானான்.
அவனுடைய நண்பன் விவேகன்  கடிதம் எழுதியிருக்கிறான். கடிதம் துபாயிலிருந்து வந்திருக்கிறது. வறுமையால் படிக்கமுடியாமல் ஐடிஐ படித்த கையோடு  தொழில்நுட்ப வேலைக்காக அயல்நாடு சென்றவன், 20 ஆண்டுகளாக இருக்கிறான், இப்போது வளமாகவும் இருக்கிறான், ராகவனுக்கு உள்ள ஒரே நெருங்கிய நட்பு அவன்தான், அவனிடமிருந்துதான் இந்தக் கடிதம், கடிததை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குப்போனான், மொட்டைமாடியின்மேல் விழுந்திருந்த தென்னை நிழலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தான்,

                        அன்புள்ள ராகவனுக்கு,,,

                                       உன் நண்பன் விவேகன்  எழுதிக்கொள்வது, நான் என் மனைவி பிள்ளைகள் நலம், உன் நலமறிய விரும்புகிறேன், உன்னுடைய கடிதம் கிடைத்தது, செய்திகள் அறிந்தேன், எனக்கு வியப்பாக இருந்தது, படிக்கிற காலத்திலேயே என்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் உன்னிடம்தான் நான் தீரவு பெறுவேன், இன்று உன்னுடைய பிரச்சினைக்காக என்னிடம் தீரவு கேட்கிறாய், என்னிடம் கேட்கிறாய் என்றாலே அது பிரச்சினையில்லை என்று புரிகிறது, உனக்குத் தெரியாததா?

                          உனக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பதவி உயர்வு வழங்கப்படவில்லை, இத்தனை ஆண்டுகாலம் உழைத்தும் பேரில்லை, தகுதிக்கும் நேர்மைக்கும் காலமில்லை, என்றெல்லாம் எழுதியிருந்தாய், உன்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்,

                          எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்,

                          பத்தாண்டுகள் நான் துபாயில் பட்டதை இன்னொருவன் பட்டிருந்தால் அவனுடைய நினைவுநாள் பத்தாம் ஆண்டு நினைவுநாளாக மாறியிருக்கும், வலியோடு வழி தேடி வந்தவன் நான், அனுபவித்தேன் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு, என்னுடைய துன்பங்களின் வேகத்தையெல்லாம் என்னுடைய உழைப்பில் காண்பித்தேன், உழைப்பின் நுட்பம் உணர்ந்தேன், நுட்பம் உணர்ந்தபோது நான் உயரத்திற்கு வந்துவிட்டேன், இது மாயமில்லை மந்திரமில்லை, உண்மை,

                      எழுதியிருந்தாய் உன்னுடன ஒரே நேரத்தில் பணியில் சேர்நதவர்கள் உனக்கு மேலே பணியுயர்வில் சென்றுவிட்டதாக, இன்றைக்கு உலகம் அப்படித்தான் இருக்கிறது, ஆனாலும் அதில் ஒரு நுட்பம் இருக்கிறது, எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்கமுடியாது, வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்வார்கள் வேலை தெரிந்தவனுக்கு மேலும் மேலும் வேலையைக் கொடு வேலை தெரியாதவனுக்கு பிரமோசனை கொடுன்னு, இது வேடிக்கையில்லை, நுட்பம்,

                         எளிமையா சொல்றேன், சுமாரா வேலை தெரிஞ்சவன் ஏதோ செய்து மேல வந்துட்டான்னு வச்சுக்குவோம், அவனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்போது அவன் ஜெயிச்சுட்டதா நினைப்பான், அது இல்லே, அதுவரைக்கும் அவன் செய்யாத வேலைகளை எல்லாம் செய்யணும், அவனுக்குக் கீழே இருக்கிற பலருடைய வேலை நுடபங்களையும் அவன் உணர்ந்துட்டாதான் அவனால வேல வாங்கமுடியும்,, நிருவாகம் பண்ணமுடியும்,, பணியாள்ர்கள் ஒவ்வொருத்தனும் ஒரு குணத்தோட இருப்பான், எல்லாரையும் அனுசரிச்சுப்போவணும்,, எல்லாரும் குறை பேசுவான், இவன் பதிலுக்கு எதுவும் செய்யமுடியாது, ஏன்னா இவன் அதிகாரம் பண்ணலாமே தவிர இவனுடைய எல்லா குணங்களையும் அடக்கிட்டுதான் வேலை பார்க்கமுடியும், எல்லாத்தையும விட்டுக்கொடுக்கணும்,, ஒருத்தனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கறதுங்கறது கூண்டுக்குள்ள அடைக்கற மாதிரி,,அதிகாரங்கற கூண்டுக்குள்ள இருந்துதான் அவனால எல்லாம் செய்யமுடியும்,, விருப்பம்போல இயங்கமுடியாது,, நினைச்சபடிக்கு செய்ய முடியாது,, கண்ணுக்குத் தெரியாத கயிறால உடம்பு முழுக்கக் கட்டிப்போட்ட மாதிரியான நிலைமை,, அவன் அதுக்குள்ளே கெடந்து உழல வேண்டியதுதான்,, அதைத்தாண்டி வரமுடியாது,, ஆனா நீ அப்படியில்ல,, இன்னும் உழைக்கலாம்,, இன்னும் நேர்மையா இருக்கலாம்,, தகுதிப்படுத்திக்கலாம்,, அதுக்கான மரியாதை கோயில்ல தெய்வத்துக்குக் கிடைக்கற மரியாதை மாதிரி,, அது அதிகாரங்களையெல்லாம் தாண்டிய நிலை,, எல்லாத்தையும் உள்வாங்கிட்ட நிலை,, என்னடா ஐடிஐ படிச்சவன் இத்தனை பேசறான் எழுதறான்னேன்னு நினைக்காத,, எல்லாம் இந்த்த் துபாயில பத்தாண்டுகள் பட்டதுலே கிடைச்சசு,, கண்ணுக்குக் கண்ணா  பார்த்து த் தெரிஞ்சுக்கட்டது,,

                         ஒரு நதியைப் போல ஓடிக்கிட்டேயிரு,,, கரையுடைக்காம ஓடுற நதி எப்பவும் அழகு. அதுதான் ஒழுக்கம். நேர்மை. எல்லாம். அதிகாரங்கறது மகிழ்ச்சியைத் தருகிற விஷயம் இல்லை. அது வலிகள் நிறைந்த சுமை. அதுக்காக அதிகாரமே வேணாம்னு சொல்லல ,பூ மலர்ந்து வர்ற மாதிரி அதிகாரம் கைக்குத் தானா வரணும். அப்ப அது காட்டுற அழகே தனி, அதிகாரம் பலபேர் விருப்பப்பட்டு மனசார ஒருத்தர்கிட்ட ஒப்படைக்கும்போது அதுதான் வலிமை. அதேபோல அதிகாரத்துல அமரும்போது பலபேருடைய விருப்பத்தின் அடையாளம் இதுன்னு உணர்ந்தா அதுதான் அதிகாரம் செலுத்துறவனுக்கும் மரியாதை,,உனக்குப் புரியுமனு நினைக்கிறேன் ராகவன், எப்பவும் எந்த நிலையிலும் மகிழ்ச்சிதான் நமக்குக் குறையாக இருக்கணும்,, நிம்மதியா மனநிறைவோட வேலை செய்யணும்,, இது நீடிச்சிருந்தா போதும் வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தம்,,

                        வாழ்க்கையிலே சிக்கல்கள் வரும். ஆனா வரவழைச்சுக்கக் கூடாது, பதவி உயர்வும் அப்படித்தான். ஒரு படி மேல போறோம்னா அது முன்னேற்றம்தான் அதேசமயம் நாம இருக்கிற இருப்பிலேர்ந்தும் ஒரு படி மேலேறியிருக்கோங்கறதும் ஒருஅர்த்தம். அதாவது முன்னமாதிரி சட்டுனு கீழே இறங்கமுடியாது, கீழே ஒரு படி கூடுதலானதுங்கற உணர்வு இல்லன்னா கீழே விழுந்துடுவோம்,,இது சாதாரணக் கணக்கு அப்படித்தான் அதிகாரமும் பதவி உயர்வும், என்னோட மேனேஜர் இங்க அடிக்கடி சொல்வாரு ஒருத்தருக்குள்ள தகுதியும் திறமையும் அதற்குரிய இலக்கை எப்படியும் அடைஞ்சிடும். சில சமயங்கள்ல சில காரணங்களால தாமதப்படுமே தவிர ஒருகாலும் தடைப்படாதுன்னு,, இதுதான் உனக்குநான் சொல்றது,, நம்பிக்கையோட வேலை பாரு,, ஆண்டவனை அடிக்கடி நினைச்சுக்கோ,, எல்லாம் சரியாயிடும். அம்மா...மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருக்கு என்னோட அன்புகள், இந்தியா வரும்போது சந்திப்போம்..உன் அன்பு நண்பன் விவேகன்,

                     

Thursday, April 4, 2013

தீராநதி கவிதை...


என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப்பட்டது
உணர்வுள்ள மனிதனாக
எப்போதும் வாழவேண்டும்
என்கிற எண்ணம்
நிறைவேறாமல் இன்றுவரை
சமரசம் செய்துகொள்வதிலேயே
குவியலாகக் கொட்டப்படும்
உணவைப் பாய்ந்து கவவும்
விலங்குகளைப் போல
பங்கிடப்பட்ட எனது வாழ்வென்று
ஒற்றைவரியில் எழுதப்படும்
உயிலை எப்படி எழுதமுடியும்
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இறந்துபோனவனின் பிணத்தின் முன்
உயிரிருந்தும் உயிரற்று...

             ( நன்றி,,,,,,,,, தீராநதி ஏப்ரல் 2013),

Monday, March 25, 2013

நிறைவான சந்திப்பு- எழுத்தாளர் பெருமாள்முருகனும் கூடும்...



                அண்ணாமலை அரசரின் அளப்பரிய கருணைத்திறத்தாலும் பெருங்கருணையாலும் விளைந்தது அணண்மலைப் பல்கலைக்கழகம்.

               அதில் படிப்பது என்பது பெரும்பேறு. அதில் பணிபுரிவது என்பது பெரும் பெரும்பேறு. கொடுப்பினை. அது எனக்கு வாய்த்திருக்கிறது.

               தொலைதுர்ரக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிவதால் ஒவ்வொரு சனி. ஞாயிறும் தொடர்பு வகுப்புக்களுக்காக வெளியூர் செல்வது எனப்துதான் பணி. அப்படித்தான் இம்முறை நாமக்கல் பயணம்.

                 நாமக்கல் என்றதும் வழக்கமாக ஆஞ்சநேயர்தான் என் நினைவுக்கு எப்போதும் வரும். நண்பர் கவிஞர் சேலம். அ.கார்த்திகேயனிடம் பேசியது நினைவுக்கு வந்தது. காரணம் பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளர். கார்த்தியிடம்தான் பெருமாள் முருகனை எப்படியும் சந்திக்கவேண்டும் என்கிற தீராத விருப்பத்தில் இருக்கிறேன் என்று சொல்லிவந்தேன். அது இயலாமல் தள்ளிப்போக சென்ற ஆண்டு என்னுடைய புத்தகங்கள் சிலவற்றைக் கார்த்தியிடம் தந்து பெருமாள் முருகனிடம் வழங்கிவிடுங்கள் என்று சொன்னேன். கார்த்தி உதவினார். ஆக நான் சந்திப்பதற்கு முன்னதாக என்னுடைய புத்தகங்கள் பெருமாள் முருகனை சென்றடைந்தன.

                இம்முறை 23,04,2012 சனிக்கிழமை காலையிலேயே முடிவு எடுத்துவிட்டேன் எப்படியும் பெருமாள்முருகனை சந்திப்பது. அவர் ஊரில் இருக்கவேண்டுமே என்கிற கவலையும் வந்தது. கூடவே அவருடன் கல்லுர்ரியில் பணியாற்றும் என்னுடைய நண்பர் குமார் என்னிடம் ஐயா... நான் அழைத்துப்போகிறேன். அவர் என்னுடைய ஆசிரியர் என்று சொன்னார். சரிஅவருடைய அலைபேசி எண்ணைத் தாருங்கள் முதலில் வருகிறேன் என்று சொல்லிவிடுகிறேன் என்றேன். தந்தார். தந்துவிட்டு கூடயே அவர் ஊரில் இருக்கவேண்டும் என்றும் சொன்னார். பெருமாள் முருகனின் மகள் மருத்துவம் பயில்வதால் மதுரைக்குச் சென்றிருக்கவும் வாய்ப்புண்டு என்றார். எனக்குள் சட்டென்று சோகம் கப்பிக்கொண்டது. இன்றும் முடியாதோ,,, என்று. இருப்பினும் தொலைபேசியிலாவது அவருடைய குரலைக் கேட்டுவிடலாம் என்று பேசினேன். உடனே எடுத்தவுடன் அறிமுகம் சொன்னேன்.

               சார்... வணக்கம் என்னைத் தெரிகிறதா உறரணி-  நாமக்கல் வந்திருக்கேன். உங்களைப் பார்க்கலாமா? என்று. உடனே அவர் உங்களைத் தெரியாமலா? வாஙக் ஐயா.. என்றார்.

                 அதற்குள் அண்ணாமலைப் பல்கலையில் பணிபுரியும் நாமக்கல்லைச்சேர்ந்த நண்பர் திரு நாகராஜன்.. ஐயா.. அவர் என்னோட வழிகாட்டி.. நான் அழைச்சிட்டுபோறேஙக்ய்யா என்றார்.. எனக்குள் உடனே தோன்றியது இதுதான்.. நல்லவர்களைச் சந்திக்கவேண்டும் என்று மனது நினைக்கிறபோது அதற்கான வழிகள் பல பக்கமிருந்தும் திறக்கும் என்பதுதான். பெரும்பான்மை வழிகாட்டி என்றால் கசப்பான அனுபவம்தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கும். ஆனால் பெருமாள் முருகனின் மாணவர்கள் எல்லோருமே என்னுடைய ஆசிரியர் நான் அழைச்சிட்டுப் போறேன் என்று சொனனபோதே அந்த பண்பாளரை உணர்ந்துகொள்ளமுடிந்தது.

                    மாலை வகுப்புகள் முடிந்தவுடன் 6 மணிக்கு மேல் லாட்ஜ்க்கு சென்று அறைபோட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு ஏழுமணிக்கு பெருமாள் முருகன் வீட்டுக்கு நானும் நாகராஜனும் சென்றோம். அப்போது அவர் தனது மகளுக்கு வாகனம் கற்றுத் தருவதற்காக வெளியில் சென்றிருப்பதாக அவரின் துணைவியார் சொன்னார்கள். அவரும் ஒரு தமிழ்ப் பேராசிரியைதான். பெருமாள் முருகன் வரும்வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். முதலில் தண்ணீர் தந்தார்கள். பின் கொஞ்சமாக டீ வைக்கிறேன் என்று சொல்லி அருமையான தேநீர் தந்தார்கள். பேசிக்கொண்டிருந்தோம்.

                    அவர் வீட்டு உறாலில் அழகான ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது. அது மனதைக் கவர்ந்துவிட்டது. ரொம்ப நாட்களாக அதுபோன்ற கட்டிலை மனத்தில் கற்பனை செய்து வைத்திருந்தேன். அழகாக பூ வேலைப்பாட்டுடன் அது பின்னப்பட்டிருந்தது. கேட்டேன். இது எங்கே கிடைக்கும் என்று? உடனே நண்பர் நாகராஜன் அதுபற்றி உடனே கேட்டு நர்ன் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார்.  மனசுககு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பெருமாள் முருகனின் துணைவியார் சொனன்ர்ர்கள். உங்களுக்குத்தான் தெரியுமே ஐயா,, இதுலதான் படுத்து உறங்குவதும் எழுதுவதும் பிடிக்கும். ஒருமுறை எழுத்தாளர் நஞ்சுண்டன் கூட சொன்னார் பெருமாள் முருகன் உங்கள் எழுத்தைபோலவே நீங்களும் இருக்கிறீர்கள் என்று,,நாகராஜன் அதை ஆர்வமாகக் கேட்டார்.

                  அப்போது வாசலில் வண்டி சப்தம் கேட்க அம்மா சொன்னார்கள் ஐயா.. வண்டிபோலக் கேட்கிறது என்று, உடனே நண்பர் நாகராஜன் இது ஐயா வண்டிதாம்மா,, உள்ளே வந்துட்டாங்க.. என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஆசிரியரின் வண்டியின் ஒலியை நுட்பமாக வைத்திருக்கிறான் ஒரு மாணவன் என்றாலே அந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள அன்பின் உறவைப் புரிந்துகொள்ள முடிந்தது. பெருமாள் முருகனின் மேல் இன்னும் அன்பு இறுகியது. பெயரைச் சொல்லியழைக்க அம்மா வாங்க என்றதும் கதவைத் திறந்துகொண்டு பெருமாள் முருகன் உள்ளே வந்தார்.. என்னைக் கண்டதும் வாங்க ஐயா.. வணக்கம். நல்லா இருக்கீங்களா? என்று உடனே மனைவி பக்கம் திரும்பி ஐயாவுக்கு டீ கொடுத்தாச்சா என்றார்.. ஆச்சு என்றார்கள் அம்மா. கொஞ்சநேரம் உறாலில் உட்கார்ந்து பேசினோம். நான் மறுபடியும் கயிற்றுக் கட்டில குறித்து எனது ஆசையை சொன்னேன். உடனே நாகராஜனிடம் விளக்கமாக அதுகுறித்துப் பேசினார்.

                   சற்று நேரம் பேசியிருந்துவிட்டு மாடிக்குப் போனேர்ம்.

                   மாடியில் நிறையப் பேசினோம்.

                  தன்னுடைய மாணவர்கள் குறித்துப் பெருமையாகப் பேசினார். அவருடைய மாணவர்கள் பலர் எனனுடைய நண்பர்கள். அவர்களும் அவர் குறித்து பெருமையாகப் பேசியது நினைவுக்கு வந்தது. ஒருவர் இல்லாத சூழலிலேயே ஒருவர் கருத்துத்தெரிவித்தவிதம் நிறைவாக இருந்தது. குரு சிஷ்யப் பரம்பரை மறுபடியும் துளிர்விட்டிருப்பதாகவே மனதுக்குத் தோணியது.

                  மின்சாரம் வரட்டும் என்று காத்திருந்தோம். ஆனால் பேச்சு தொடர்ந்து இருந்தது.

                  இந்த இடைவேளையில் பெருமாள் முருகனை நான் கண்டு அனுபவித்ததை சொல்லிவிடவேண்டும்.

                   என்னுடைய அனுபவத்தில் பல எழுத்தாளர்களுடன் பல மணிநேரங்கள் செலவிட்டிருக்கிறேன். பல இலக்கியக்கூட்டங்களுக்காக வந்தவர்கள். ஆனால் அவர்கள் எல்லாம் ஒரு சொல்லமுடியாத அல்லது விளக்கமுடியாத இறுக்கத்தை அணிந்தபடியே பேசியதும் உறவாடியதும் நினைவில் ஆடின. பெருமாள் முருகன் சாதாரணமாக இருந்தார். சகோதர வழி உறவைச் சந்திக்கச் சென்றதுபோல இருந்தது. ஒருவேளை இருவரும் தமிழ்ப் பேராசிரியர்கள் என்பதால் இந்த அன்னியோன்யம் கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரையில் இருவருமே ஒரே அணுகுமுறையில் இருக்கிறோம் என்பதைத்தான் எங்களின் பேச்சு உணர்த்தியது. எளிமையான பேச்சு. ஆனால் நெருக்கமாக ஒட்டுதலான பேச்சாக அது இருந்தது. கலந்து எல்லாம் பேசினோம். பேச்சில் பாசாங்கு இல்லை. அலட்டல் இல்லை. ஒரு கர்வம் இல்லை. ஏளனம் இல்லை. யாரையும் காயப்படுத்தும் சொற்கள் துளியும் கிடைக்கவில்லை. எல்லாம் பேசினார். முதல் சந்திப்பையே வெகுநாள் பழகிய சந்திப்பின் பேச்சாக மாற்றிய பெருமாள் முருகனை வியப்பு மாறாமல் அதைக் காட்டிக்கொள்ளாமல் ரசித்துக்கொண்டிருந்தேன்.

                      மின்சாரம் வந்ததும் அவருடைய கூடு இலக்கிய முறறம் நடக்கும் மாடிப்பகுதிக்குப் போனேர்ம். அருமையாக இருந்தது. எத்தனையோ இலக்கியவாதிகள்.. படைப்பாளிகள்.. படைப்பு ஆர்வலர்கள் ஆகியோர் வந்து இருந்து பறந்த கூடல்லவா?  இதுவரை 48 கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது என்று எண்ணியதும் வியப்பாக இருந்தது. எந்தவித அறிமுகமும் ஒப்பனையும் இல்லாமல் எந்தச் செலவுமில்லாமல் 48 கூட்டங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு புத்தமாக வரவேண்டிய பொக்கிஷத் தருணங்கள் அவை. 50 வது கூட்டத்திப் பெரிய அளவில் நடத்தவேண்டும் முடிவு எடுத்திருப்பதாகவும் அது சில காரணங்களுக்காக தள்ளிப்போனதையும் சொன்னார். இலக்கியக் கூட்டம் என்றாலே அது ஒரு குழு நிலைப்பட்டதாகவும்... படைப்பாளிகள் சிலர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் மேடையாகவும்.. தன்முனைப்பு அதிகம் உள்ளதாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாகவும்இருக்கும் நிலையில கூடு .....கூடாகவே இருந்தது. அற்புதமான பறவைகள் தங்கள் வாசங்களை விட்டுச் சென்ற தடங்கள் நிறைவாக இருந்தன பெருமாள் முருகன் அவற்றை விவரிக்கையில்.

                    சேலம் அ. கார்த்திகேயன் பேசியதை... ஜெயமோகன் வந்ததை...பிரபஞசன் பகிர்ந்துகொண்டதை...இப்படி யாரெல்லாம் நாமக்கல்லுக்கு வருகிறார்களோ அந்த நிகழ்வில் அவர்களை அழைத்து பேச வைப்பது என்று எவ்விதச் சிக்கலுமில்லாமல் 48 கூட்டங்களை வெகு எளிதாக நடத்தி முடித்திருக்கும் பெருமாள் முருகன் சார்.. உங்களுக்கு எனது அன்பான பெருமைமிகு வணக்கங்கள்.

                      ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டம் கூடும். ஆங்கரை பைரவி போன்று ஒருசிலர் ஒருகூட்டம் விடாதது தொடர்ந்து வருபவர்கள். கூட்டத்திற்கு வருபவர்கள் அனபின் மிகுதியால் இதுவரை 40 நர்ற்காலிக்ள் வாஙகித் தந்திருப்பதாகவும் இனி வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் பெருமாள் முருகன் குறிப்பிட்டதை எண்ணும்போது இலக்கியக்கூட்டம் என்பது நான் என்பதை ஒழித்து எல்லாவற்றையும் நேசிக்கும்  ஒரு மனிதநேயமிக்கப் படைப்பாளியின் மனதால் மட்டுமே இது சாத்தியம் என்பதை பெருமாள் முருகன் உறுதி செய்திருக்கிறார்.

                   50 வது கூட்டத்திற்கு அவசியம் வருவேன் பெருமாள் முருகன் சார்.. அது எனக்குப் பெருமையாக நினைக்கிறேன்.

                   அவருடைய நாவல்கள் ஆறு வெளியாகியிருக்கின்றன. நான் அவருடைய நாவல்களில் இரண்டை மட்டுமே வாசித்திருக்கிறேன். நான் வாசிக்காமல் வாங்கி வைத்திருக்கிற நாவல்கள் 200க்கு மேற்பட்டு உள்ளன. விரைவில் வெகு வேகமாக அவற்றை வாசிக்கப்போகிறேன். பெருமாள் முருகன்  ஏழாவது நாவலை எழுதிமுடிப்பதற்குள் அதை வாசித்துவிடுவேன் என்கிற தீவிரம் இருக்கிறது உள்ளுக்குள். அவரிடம் சொன்னேன் நல்ல எழுத்துக்களைப் பற்றி படிக்கிறபோது எழுதத் தோணமாட்டேங்குது. ஏனென்றால் தஞ்சாவூர்க் கவிராயர போன்றோர் உங்களைப் போன்றோர் எழுத்துக்களை வாசிக்கிற போது வாசித்தலே பெருங்கடமையாக மனம் எண்ணிவிடுகிறது.அவர்  சொன்னார் ஒருவருக்குள் படைப்புத்திறமை
இருக்கும்போது அதை வீணாக்காமல் எழுதவேண்டுமென்று.

               இயல்பாக இருக்கிறார். அவற்றோடு எல்லாவற்றையும் இயல்பாக செய்கிறார். எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஒரு சாதாரண மனிதனாக அன்பு கொண்ட மனிதனாக நேயமிக்க ஆசிரியனாக இருக்கிறார். பெருமாள் முருகனிடமும் நான் சில கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.

              அவருடைய permalmurugan.comககு சென்று இன்னும் பலவற்றை அனுபவியுங்கள்.

                         இது ஒரு நல்ல அனுபவம்.

                         எப்போது சென்றாலும் இறையனுபவத்தில் ஆஞ்சநேயரைத் தரிசிக்காமல் வநததிலலை. இம்முறை நாமக்கல் ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடியவில்லை.,

                         இறையனுபவத்தின் நிறைவைப் பெருமாள் முருகனைச் சந்தித்த நிகழ்வில் பெற்றிருக்கிறேன்.

                          அவருடைய மாணவர் நண்பர் நாகராஜனுக்கு நன்றிகள்.

                           கவிஞர் சேலம் அ. கார்த்திகேயனுக்கு நன்றிகள்.

                           அம்மா... உங்கள் புன்னகை நிறைந்த வரவேற்பிற்கும்...உரையாடலுக்கும்.. தேநீருக்கும் நன்றிகள்...

                             இன்னொரு பதிவில் சந்திப்போம்.



                 

         

Friday, March 1, 2013

முன்னவர்கள் முக்கியமானவர்கள்......2013




                     மூன்றெழுத்து மேன்மை.........

                                                 கு..வெ...பா...



                   வணக்கம். என்னுடைய வலைப்பதிவை முதன்முதலாகக் கணிப்பொறியில் ஆரம்பித்தபோது பல பதிவுகளை பல தலைப்புக்களில் பதிவிட ஆரம்பித்தேன். அதில் ஒன்றுதான் முன்னவர்கள் முக்கியமானவர்கள் என்னும் பகுதி. அதில் எனக்கு முன்னோடிகளாக வழிகாட்டிகளாக இருந்தவர்களை என்னை நிரம்பப் பாதித்தவர்களைப் பற்றி வெகு கவனமான பதிவாக அது அமைந்திருந்தது. அப்படி அமைத்துக்கொண்டேன். எனவே அதில் முதலில் என்னுடைய எழுத்துலகப் பிதா தஞ்சை ப்ரகாஷ் பற்றி எழுதினேன்.

                    இப்போது மீண்டும் அப்பகுதியில் இவ்வாண்டு எழுத  நினைத்து இப்போதுதான் அது சாத்தியப்பட்டிருக்கிறது.

                     இந்தப் பதிவில் கு,வெ,பா, என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற என்னுடைய பேராசிரியர் முனைவர் கு,வெ,பாலசுப்பிரமணியன் அவர்களைப் பற்றிய பதிவாகும். இது எனக்கு வாய்த்த கொடுப்பினை, பெருமை வாய்ந்த பதிவாக இதனைக் கருதிப் பதிவிடுகிறேன்.

                       நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த போது அதாவது 1983 ஆம் ஆண்டு அங்கு பேராசிரியராக இருந்தவர். இலக்கியத்துறையின் முக்கியமான ஆளுமையாக இருந்தார். என்னுடன் பணியாற்றிய நண்பர் திரு க. சீனிவாசன்தான் முதன்முதலில் பேராசிரியர் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு இச்சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                       இப்படியொரு மனிதர் இருக்கமுடியுமா இக்காலச்சூழலில் என்று எண்ணி வியக்கும் அளவுக்கு பண்பானவர் பேராசிரியர் அவர்கள்.

                      ஏராளமான வாசிப்பு...அத்தனையும் ஆழமான வாசிப்பு... அரிமா போன்ற பல அரிய சான்றோர்களுடன் பழகிய அனுபவம்...நுட்பமான சிந்தனைப் போக்கு,, அதனை வெளிப்படுத்தும் எழுத்தியல் பிரமிக்கத்தக்க அதிசயங்களைக் கொண்டது. இதில் அதிசயம் என்னவென்றால் அடிப்படையில் அறிவியல் பின்புலம் கொண்டவர், பின்னர் தமிழ் கற்றவர். தமிழிலும் ஆங்கிலத்தில் நிகரான புலமை மிக்கவர். எப்போதும் எழுதிக்கொண்டேயிருப்பவர். இடையில் குறுக்கிட்டாலும் கடுகளவும் முகம் மாறாது வாங்க...உக்காருங்க.. என்று புன்னகை விரித்தபடி பேசும் மனோ இயல்பு கொண்டவர்.. இவரிடம் கற்றுக்கொள்ள ஏராளம். கற்றுக்கொள்ளத்தான் தனித்திறன் வேண்டும்.  எளிமை...அன்பு... அடுத்தவர்க்கு உதவுதல்..நாம் அறியாமல் நம்மை உள்வாங்கி நம்மின் திறனுக்கேற்ப நம்மை எங்கேனும் அடையாளப்படுத்திவிட்டு அதுபற்றி அலட்டிக்கொள்ளாமை. இப்படி பல பண்புகள்.. வியக்கவைக்கும் மாமனிதர் கு.வெ.பா. என்னும் இந்த மூன்று எழுத்து மேன்மையாளர்.

                   இலக்கியத்துறையில் பேராசிரியராக இருந்தபோதிலும் சரி...பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியர்ற்றிய சூழலிலும் சரி..தொடர்ந்து அரசு சார்ந்த... மத்திய அரசு சார்ந்த... பல்கலைக்கழக மானியக்குழு சார்ந்த...பல்வேறு கல்லுர்ரிகள்... பல்கலைக்கழகங்களில் பல பொறுப்புக்கள் இவரைத் தேடி வந்து ஏற்றுக்கொண்டு பணிசெய்தபோது தன்னுடைய பண்பிலிருந்து மாறாதவர்.

                    இத்தனைக்கும் இடையில் இடைவிடாத எழுத்துப்பணி.

                    கல்விநிலை சார்ந்து  அறுபது புத்தகங்கள்.

                    படைப்புலகிலும் விட்டுவைக்கவில்லை.

                   வேலவன் எனும் புனைப்பெயரில் கவிதைத் தொகுப்புக்கள்..

                   பத்திற்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கள்.

                   ஐந்திற்கும் மேற்பட்ட காப்பியங்கள்.

                   இலக்கிய நாடகங்கள்.

                   மொழிபெயர்ப்புக்கள்.

                   கல்லுர்ரி. பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்ட.. பட்ட மேற்படிப்பு வகுப்புக்களுக்குப் பாடநுர்ல்கள்..

                    ஆங்கிலத்தில் பல்வேறு நுர்ல்கள்..

                    பதிப்பிட்ட நுர்ல்கள் பல.

                    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தப் பாடத்தை அயல் நாட்டு மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதி அயல் நாட்டு மாணவர்கள் வியந்து பார்த்த நிகழ்வு அது.

                       சைவ சித்தாந்தம் தமிழில் புரிந்துகொள்வதற்கே தனிப்பயிற்சியும் திறனும் வேண்டும்.

                         இந்நிலையில் அதனை ஆங்கிலத்தில் அயல் நாட்டு மாணவர்களுக்கு எழுதுவதென்றால் பேராசிரியரின் திறனை உணர்ந்து கொள்ளுங்கள்...

                        பல்வேறு பரிசுகள்.

                        எதனையும் காட்டிக்கொள்ளாத... அலட்டிக்கொள்ளாத மேன்மையே அவரை மனத்தில் இமயமலையாகக் கொள்ள வைத்திருக்கிறது.

                        இவரது ஆய்வு நுர்ல்கள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

                       இவரது சிறுகதைகள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

                        இவரது காப்பியங்கள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

                        இவரது நாடகங்கள் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

                        இவரது மொழிபெயர்ப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

                         இவரது நாவல்கள் தனித்தப் பொருண்மை கொண்டவை. பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தனித்த அடையாளத்துடன் விமர்சிக்கப்பட்டு பாராட்டப்பெற்றவை.

                         இது தவிர வானொலியில் தொடர்ந்து கேட்போர் சிந்தைக்கு உரிய கருத்துவளத்தைக் கொட்டிக் குவிக்கிறார்.

                             தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.

                           பல்வகை அரங்குகளிலும்... பல்வகை அமைப்புக்களிலும் உரையாற்றுகிறார்.

                           தொடர்ந்து ஓராண்டு திருக்குறளை வாரந்தோறும் முப்பதுக்கு மேற்பட்ட உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிட்டு அதிகாரம் அதிகாரமாய் உரையாற்றிய  மாண்பாளர்.

                            எல்லாவற்றையும் ஒரு பெரிய கடலைப் போல பணிகள் செய்துகொண்டிருக்கிறார். எதனையும் காட்டிக்கொள்வதில்லை.

                             தமிழ்மொழி இவரால் பல மாண்புகளைப் பெற்றிருக்கிறது.

                            இதற்கு இவரது நுர்ல்களம் எழுத்தும் பேச்சுமே சான்றுகள்.

                             ஒருமுறையேனும் இவரை வாசிக்கவேண்டும்.

                             ஒவ்வொரு முறை இவரை சந்திக்கும்போதும எனக்காக ஒதுக்கும் அரிய நேரத்தில் நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.

                             இன்னும எழுதிக்கொண்டேயிருக்கிறார்.

                             இன்னும் படித்துக்கொண்டேயிருக்கிறார்.

                             எளிமையும் அன்பும் உதவியும்  காட்டிக்கொண்டேயிருக்கிறார்.

                             அவரிடம் நான் அடிக்கடி சொல்வது அவர் தமிழுக்கு ஆற்றும் பணியில் 10 விழுககாடேனும் நான் என் வாழ்நாளில் செய்துவிடவேண்டும்.

                             லேசான புன்னகையுடன் வாழ்த்தி சொல்கிறார்... செய்யலாம் அன்பழகன்... செய்யுங்க... நிறைய படியுங்க... எழுதுங்க.. என்று ஊக்கம் காட்டிக்கொண்டேயிருக்கிறார்.

                             இவரைப் பற்றி எழுத ஒருநர்ள் பதிவு போதாது.

                             இருப்பினும் என்னுடைய நன்றிக்கடனாக இந்தப் பதிவை அவரின் மேன்மைமிகு தமிழாளுமைக்கு சமர்ப்பிக்கிறேன்.

                              நாளை இலக்கிய வரலாற்றில்...

                              தமிழ் இலக்கிய வரலாற்றில்...

                              கு.வெ.பா.. என்னும் ஆளுமை ஈடுகட்டமுடியாத ஒரு அழுத்தமான பதிவுத்திறன்...

                                  மறுபடியும் சந்திக்கிறேன்.


                           



                     













Thursday, February 21, 2013

பாராட்டுவோம்,,,,




                           ஒன்று ------காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர் பிரச்சினை, அதுகுறித்து பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும். தற்போது அதுகுறித்த ஒரு நிலைப்பாட்டை அரசிதழில் வெளியிட்டிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகப் பயிர்கள் காய்வதைக் கண்டு தற்கொலை செய்து இறந்துபோன விவசாயிகளின் ஆன்மாவிற்கும் சாந்தி தருவதாகும். அரசிதழில் கண்டபடி நடைமுறை அழுத்தமாக அமைதல் வேண்டும். அரசியலைத் தாண்டி எந்தக் கருத்துமின்றி தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டுக்குரியவர். காவிரி குறித்த நிலைப்பாட்டில் சிலவற்றைத் துணிவாக மேற்கொண்டவர் என்ற நிலையில். மேலும் இதுகுறித்து செயல்பட்ட மற்ற அரசியல் தலைவர்களுக்கும் இதே பாராட்டுக்கள் மனம் திறந்து.

                        இரண்டாவது----------- ஆசிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சூடாக தமிழர்களின் மனங்களைக் குளிர்விக்குமாறு மறுத்துவிட்ட தமிழக முதல்வர் அவர்களின் செயற்பாடும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மீண்டும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


                        மூன்றாவது மின்வெட்டு நிகழ்விலும் ஒரு மின்னல் வெட்டாய் ஒரு முடிவு கிடைத்துவிட்டால் போதும். நம்பிக்கை இருக்கிறது.


                                                 எந்த ஒன்றுக்கும்
                                                 தீர்வு இருக்கலாம்...
                                                  அது கிடைப்பதில்
                                                 தாமதம் நேரலாம்
                                                 ஆனாலும்
                                                 நம்பிக்கையாய்
                                                 ஒரு சொல்லுதிர்த்தல்
                                                 தீர்வின் கதவைத்
                                                 திறப்பதற்கான
                                                 திறவுகோல்தானே?


                         000000000000000000000000000000000000000000000000

கண்ணீரின் உப்பைத் தின்றவர்கள்



              இறைவன் உலகில் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வாழ்வையும் படைத்தே அதனை அனுபவிக்கவும் செய்திருபப்வன். அந்த வாழ்வின் நிகழ்வுகளையும் துன்பங்களையும் இன்பங்களையும் எப்படி வாழ்வது என்பது வாழ்கிற ஒவ்வொரு நொடியிலும் ஒரு புதிரைப்போலவே காட்டி அவிழ்த்து விடுவிப்பவன் அவனேதான்.

               யாரின் வாழ்வையும் யாரும் பறிப்பதற்கு உரிமையில்லை. யாரின் வாழ்க்கையிலும் யாரும் தலையிடுவதற்கும் அனுமதியில்லை. ஆனாலும் ஒரு கட்டுக்கோப்பான மக்களாட்சி சமுகத்தில் அதற்கெனவே ஒழுங்குபடுத்த சட்டங்களும் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. கடவுளின் நீதி என்பது மெதுவாகத்தான் நகரும் ஆனால் அதன் இலக்கை அடையும் என்பார்கள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் பணிந்து தீயனவற்றை நீக்கிய வாழ்க்கை வாழ்வதுதான் ஒரு மனிதனின் அடிப்படையான அவசியமான ஒன்றாக இருக்கும்.

                   இவற்றைக் கற்றுக்கொண்டு பின்பற்றிய சான்றோர்கள் தங்களின் மொழியில் இலக்கியங்களாகப் படைத்துப் பின்வரும் நல்ல சமூகத்திற்கென விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து நம்முடைய புறத்தோற்றத்தை ஒழுங்கு செய்துகொள்வதுபோல நமது அகத்தோற்றத்தை ஒழுங்கு செய்துகொள்ள இடமளிக்கும் கண்ணாடியாக இலக்கியங்கள் நிற்கின்றன. எனவேதான் அவற்றை காலத்தின் கண்ணாடி என்றார்கள் சான்றோர்கள். மக்களுக்காக மக்களால் மக்களின் சீலங்களுடன் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் மனிதனுடைய நற்பண்புகளை உருவாக்கும் ஒப்பற்ற கருவியாகவும் திகழ்ந்துகொண்டிருக்கின்றன. காலங்காலமாக. யுகம் யுகமாக.

                      இவற்றின் தொடர்ச்சியாகவே பண்பாடும் நாகரிகமும் உருவாயின. அவற்றை அழகியலோடு கற்பனை சேர்த்துப் படம்பிடித்துத் தந்தவை இலக்கியங்களே. அவற்றின் பொருண்மை நுட்பம் இன்றைக்கும் மாறாத ஓர் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றது.

                              தன்னுடைய தலைவனிடம் தலைவி ஒரு மரத்தைச் சுட்டி
                              இதனருகில் காதல்மொழிகள் செயற்பாடுகள் வேண்டா.
                              ஒருவகையில் இது எனக்கு தமக்கை (மூத்தவள்) முறை
                              மனம் ஒப்பவில்லை. மனம் கூசுகிறது.  மரத்தை தமக்கையாகப்
                              பார்த்து மரியாதை செய்த பண்பாடு உலக இலக்கியம் எங்கும்
                             இல்லையென்று துணிந்து கூறலாம்.

                               பற்றுக்கோடு இல்லாமல் இருந்தால் அழிந்துவிடுமென்று
                              தன்னுடைய தேரைப் பற்றுக்கோடாக்கி முல்லைக்கு ஈந்தவன்
                             பாரி எனும வள்ளல்.

                              குளிரில் வாடிய மயிலுக்காகப் பேகன் தன்னுடைய போர்வை
                              யைத் தந்து இரக்கம் காட்டியவன்.

                               எதுவுமற்றிருக்கும் தன்னிடம் வந்த புலவனிடம் என் தம்பி
                               மனம் குளிரட்டும் உன்து வாழ்வும் மலரட்டும் என் தலையைக்
                               கொய்து கொண்டு போ என்றான் ஒரு மன்னன்.

                               புறாவுக்காக ஒரு மன்னம் தன் தசையை அரிந்த கதை யாருக்
                               கும் தெரியும்.

                                நீதி யாவருக்கும் பொதுவானதென்று கன்றுக்காகத் தன்
                                மகனைத் தேர்க்காலில் இட்டவனும் ஒரு மன்னன்.

       உலகம் முழுக்க இனம் கடந்து . மொழி கடந்து. சாதி கடந்து பின்பற்றத்தக்க மிக உயரியப் பண்பாட்டைத் தந்தது தமிழ்மொழியும் தமிழினமும்.

                       இதற்கு ஈடுஇணையாக உலகின் எந்தப் பண்பாட்டையும் ஒப்பிட முடியாது.

                        இத்தனையும் சொன்னது யாருக்கும் தெரியாத ஒன்றல்ல.

                         இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பலவாறு பண்பாடு பேசியது தமிழ் மொழி.

                         ஆகவேதான் அகத்திணை என்றும் புறத்திணை என்றும் (திணை என்றால் ஒழுக்கம்) பொதுவில் கோட்பாட்டை உருவாக்கியது.

                        எல்லாவற்றிலும் எப்போதும் ஒழுக்கம் முக்கியம் என்பது இதன்
பொருளாகும்.

                         அற நெறி முதற்றே அரசின் கொற்றம் என்பது புறநானுர்று.

                          எழுதிக்கொண்டே போகலாம். மனது அடங்கவில்லை. மனசு ஆறவும் இல்லை.

                          எதிரியையும் தன்னைத் தாக்க வந்தவனையும் தவித்தவனையும் துன்புற்றவனையும் எதுவும் பாராமல் நேசித்து அன்பு பாராட்டும் தமிழினம் உலகின் எந்த மூலையிலும் ஒப்பிடமுடியாத ஒரு பண்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

                           தன் கணவன் கள்வன் என்று கொலை செய்த மதுரை மாநகரத்துக்குத் தீ  மூட்டும்போதுகூட கற்புக்கரசி கண்ணகி அறவோர். முதியோர். பிள்ளைகள். பெண்கள். நோயுற்றவர்கள் என விடுத்து தீப்பற்றுக என்று சொன்னாள். அத்தனை துக்கத்திலும் வாழ்விழந்த நிலையிலும் தனது பண்பாட்டை இழக்காத இனம் தமிழினம்.

                          மனசு கொதிக்கிறது. படித்த எல்லாமும் மனதில் வந்து இதெல்லாம் வீணாகிவிட்டதே என்று வேதனை வெடிக்கிறது.

                          ஒரு இனத்துக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவன்  பிரபாகரன்.

                         அவனுடைய பிள்ளை எந்த தவறும் செய்யாமல் கொலை செய்யப்பட்டிருக்கும் கொடுமை அதுவும் பச்சிளஙகுழந்தை பன்னிரண்டு வயது பாலகன் தமிழினத்துக்காக தமிழ் மொழிக்காக தமிழர் வாழ்விற்காகக் களப்பலி கொடுக்கப்பட்டிருக்கிறான்.

                            சிங்களவர்களுக்கு வாழ்க்கை இல்லையா. அதில் மனைவி. பிள்ளைகள் அம்மா அப்பா பேரன் பேத்திகள் என்று உறவு இல்லையா?

                            தன்னுடைய பிள்ளைக்கு இப்படியொரு கதி நேர்ந்திருந்தால் இரக்கமற்ற கொடூர மிருகம் ராஜபக்சே என்ன பதைபதைத்திருக்கும்?

                           இதை என்றைக்கும் உலகம் மறக்காது. ஒவ்வொரு தமிழ் உயிரும் மன்னிக்காது.

                            உலகின் நீதியின் கரங்களில் போர்க்குற்றவாளி ராஜபக்சே ஒப்படைக்கப்படவேண்டும். அதற்குரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

                           தமிழக முதல்வர் தொடங்கி எல்லோரும் இந்தக் கொடுமைக்கு தஙகள் கண்டனத்தைக் கண்ணீரோடு பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய தேசம் பண்பாட்டின் வேரில் நிலைத்திருப்பது. அது காக்கப்படவேண்டும். இனியாவது மௌனத்தைக் கலைத்து மத்திய அரசு இதற்கு சரியான நியாயக் குரலை உலகின் நீதியின் அரங்கில் உரத்து ஒலித்து பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் ஆன்மாவிற்கு உரிய நியாயத்தை வழங்கவேண்டும்.

                          தொலைக்காட்சியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிகும் அந்தக் கள்ளங்கபடமற்ற தமிழ்த்தேசத்தின் இளைய நிலா அடுத்த சில நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று அறியாத தோற்றமது. பாவிகளே எப்படி உங்களுக்கு மனது வந்தது?

                            இறைவனிடம் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.

                            தண்ணீரின் உப்பைத் தின்றவன் தண்ணீரைத் தேடியே ஆகவேண்டும். கண்ணீரின் உப்பைத் தின்றவன்,,,,,,,,,?

                            அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.

                             தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும் தருமம் வெல்லும்.

                            0000000000000000000000000000



                             தனது கல்வியின் மூலம் தன்னுடைய குடும்பத்தையும் அதை அரித்துக்கொண்டிருக்கும் வறுமைக் கரையான்களையும் ஒழிக்கவேண்டும் என்று எண்ணி உயர்ந்த அன்புச் சகோதரி விநோதினியின் எண்ண்ம் சிதைந்துவிட்டது.

                              துடிதுடிக்கிறது அந்தக் குடும்பம்.

                              அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட்.

                              அந்தக் குடும்பத்தின் ஆணிவேரிலும் அதே.

                               தவித்து தாமரை இலை தண்ணீர்போல நிற்கிறது.

                              ஆயிரமாயிரம் உதவிகளும் ஆறுதல்களும் என்ன செய்துவிடமுடியும்?

                               இன்னும் எத்தனை எத்தனை விநோதினிகள் எங்கு எங்கோ? யார் அறிவார்?

                                அந்தப் பிள்ளையின் ஆன்மாவிற்கு அஞ்சலிகள்.

                                 00000000000000000000000000000



                     ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கிறபோதெல்லாம் மனம் நொறுங்கிப்போகிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? நியாயம் என்ன?



                                                 அணுவைப் பிளக்கமுடியாது
                                                 என்று அன்றோர் அறிவியல் அறிஞன்
                                                 சொன்னான்...
                                                 பிளந்துவிட்டேன் பார் உள்ளே அற்புதமும்
                                                 பாரென்று காட்டினான் பின்னால்
                                                 இயங்கிய இன்னோர் அறிவியல் அறிஞன்
                                                 முடியாது என்பதும் முடியும் என்பதும்
                                                 ஒரு கருத்துருதான்
                                                 அணுஅணுவாய் எல்லாவற்றிலும்
                                                 அணுதான்...
                                                 அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக்
                                                 குறுகத் தரித்த குறள்  என்றாள் ஔவை
                                                  கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக்
                                                  குறுகத் தரித்த குறள் என்றவளும் ஔவைதான்
                                                  குறள் சிறியதுதான் ஆனால் அணுவைவிட
                                                  வலியது,,,
                                                  சிறிய எந்த ஒன்றையும் அழிக்கஅழிக்க
                                                  அது ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம்
                                                  அணுவாகத்தான் உருமாறும்.....

                  00000000000000000000000000000000000000000000000000000000000000000000

                    எதிர்வரும் பிப்ரவரி 27 எழுத்தாள் சுஜாதாவின் நினைவுநாள். புதிதாக எழுதவருகிறவர்கள் ஒருமுறையேனும் அவசியம் அவரை வாசிக்கவேண்டும். வாசிக்காதவர்கள் சாபம் பெற்றவர்கள். வாசித்தவர்கள் இன்னொரு முறை வாசிக்கலாம். மனதைப் புதுப்பித்ததுபோல.

                        சுஜாதாவும் படைப்புலகின் என்றும் அணையாத ஒரு சுடர்.

                          000000000000000000

                             
                            

Saturday, February 2, 2013

தாகம் வற்றாத கலைஞன்



           
                     பட்டப்படிப்பை முடித்திருந்த நேரம். அப்போதுதான் இலக்கியப் பரிச்சயமும் வாசிக்கிற ஆர்வமும் மேலும் முனைப்புக் காட்டிய காலக்கட்டம் அது.

                    தஞ்சையின் வடவாற்றங்கரையில் நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொணடிருந்தபோதுதான் கமலஹாசன் எனும் நடிகனை ஆழமாகப் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கு நண்பர்களால் உணர்த்தப்பட்டது.

                    பதினாறு வயதினிலே படம் தொடங்கி ஒவ்வொரு படத்திலும் கமலைப் பார்க்கிற தருணங்கள் ஒரு நடிகனாகப் பார்க்காமல் அந்தக் குறிப்பிட்ட பாத்திரத்தின் உயிராகவே மாறிக்கொண்டிருந்த கலைஞனைத் தரிசிக்கிற பெரும்பேறு வாய்த்தது.

                      படைப்புக்கலை என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இறைவனைப் பார்க்கவில்லை இதுவரை என்றாலும் அதன் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை மாறவேயில்லை. அது  பழமையான மரத்தின் ஆழமாகப் பதிந்துவிட்ட வேரைப்போல மனதில் இன்றுவரை நின்று வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கிறது. அவ்வகையில் கமலை நோக்குகிற தருணங்களில் நிச்சயம் கடவுளால் வரமளிக்கப்பட்ட கலைஞன்தான் என்கிற உறுதிப்பாடு மனதில் பதிந்துபோனது,

                  பதினாறு வயதினிலே,,,வாழ்வே மாயம்,,, மன்மத லீலை,,,மூன்று முடிச்சு... அபூர்வ ராகங்கள்...சிகப்புரோசாக்கள்...குணா... மகாநதி...ஹேராம்.. மைக்கேல் மதன காமராசன்...தேவர் மகன்..அன்பே சிவம்... இந்தியன்...அபூர்வ சகோதரர்கள்...விக்ரம்...சலங்கை ஒலி... மரோ சரித்ரா... கல்யாணராமன்... நாயகன்.... நினைத்தாலே இனிக்கும்...பஞ்ச தந்திரம்...

                     படங்களின் வரிசையும்  ஆண்டும் நினைவில் இல்லை என்றாலும்.. கமலின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். மேலே சொன்னவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல,, ஒவ்வொன்றிலும் ஒரு கலைஞன் செத்து மறுபிறவி எடுத்ததுபோல தன்னை அர்ப்பணித்து உருவாக்கிய படங்கள்... ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை பார்த்தாலும் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோன்ற ஒரு அனுபவத்தைத் தருகின்ற படங்கள்.. எத்தனை கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதற்கு இடமளிக்கிற படங்கள்.. கமல் என்கிற கலைஞன் தன்னை உருக்கி வார்த்த கலைபடைப்புக்கள்...

                      காலத்தால் அழியாக கலைப்படைப்புக்களைத் தந்துள்ள கமலின் ஒவ்வொரு உயிர்ப்பும் தேர்ந்த கதை...சிறந்த மொழி நடையில் அமைந்த உரையாடல்களின் வன்மை... காட்சி யமைப்பு... நடிப்பின் ஆழம்... பார்ப்போரை வலிமிக யோசிக்க வைக்கிற நுட்பம்.. இப்படி ஒவ்வொரு கூறையும் விரித்து சொல்லிவிட்டுப்போகலாம். சுருக்கமாக சொல்வதானர்ல் கமலை அனுபவிக்கவேண்டும்.

                     தமிழருவி மணியன் குறிப்பிட்டதுபோல ஏதோ நடித்து ஏதோ சேர்த்து செட்டிலாகிவிடுகிற சராசரி கலைஞனின் பிரதியல்ல கமல். தன்னை சோதனைக்குள்ளாக்கி... வலி பொறுத்து.. வலி சகித்து ஒவ்வொரு படைப்பிலும் வற்றாத தாகத்தை அனுபவித்து வெயிலிலே துடிக்கும் புழுவைப்போல கலைதாகத்திற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் கமல்.

                    எல்லோருக்கும் புரிகிற  கழுத்து வலிக்க உயர்ந்துப் பார்க்கிற அற்புதம் போல பிரமிப்புபோல.. நிற்கிற கலைஞன் கமல். எல்லாவற்றிலும்
தனக்குத் திருப்தி தேடித் தவித்து நின்று பின் உள்ளடக்கி உருவாக்கித் தரும்
கலைப்படைப்பின் பிரும்மா கமல்.

                    வயிற்றுப் பசிக்குத்  தவிக்கும் வறுமையைப்போலவே வலிமிகுந்த சோதனைக் கட்டத்தை ஒவ்வொரு படம் முடிவுறும்போதும் அனுபவிக்கிற கமலின் வலியை யாரும் ஏந்திக்கொள்ளவேண்டாம். குறைந்த பட்சம் அதனை விமர்சிக்காமல் மரியாதை செலுத்தும் பண்பை அளிப்பதன்மூலம் அந்தக் கலைஞனுக்கு நாம் நன்றி செலுத்தலாம்.

                       கமல் கலையுலகின் கற்பகவிருட்சம்.

                       கமல் கலை வானின் வெளிச்சம். விலாசம்.

                       கமல் வரம் வாங்கி வந்தவரல்ல. கலைத்தாயின் பிரதி.

                       பெரிய சாகரம் ஆர்ப்பரிக்கிறபோது அடங்கும்வரை அது பொங்கியே அடங்குகிறது.

                         விரிந்து பரந்த அமைதியான வானில்தான் இடி முழங்கி பேரிடியாகி பெருமழை கொட்டி பூமியை மூச்சுத் திணற வைக்கிறது.

                         முகம் வருடி இதழ் வருடி இழைகிற தென்றல்தான் பெருங் காற்றாகி பெருமுழக்கம் செய்கிறது.

                          கமல் இன்றைக்கல்ல பிறக்கும்போதே தாகம் வற்றாத கலைஞனாய் கலைத்தாய் பெற்றெடுத்துவிட்ட பிள்ளையாகத்தான்.

                           கமல் என்றைக்கும் விஸ்வரூபம்தான்.

                          காலம் இதனை உலகளவில் அங்கீகரிக்கும்.

                          0000000

Tuesday, January 1, 2013

புத்தாண்டு - 2013





                               நீரில் கரைந்த
                               உப்பாய்
                               துயரமும  களிப்புமெனக்
                               கடந்து வநதும் நிறைகின்றன
                               புத்தாண்டுகள்...

                                நமக்கான
                                வாழ்வில்
                                அன்பு செய்வோம்
                                அறம் காப்போம்
                                 பண்பு பேணுவோம்
                                 பரிவு காட்டுவோம்
                                நேசமும் பாசமும்
                                 நேர்மையும் நேர்மனமும்
                                 எனத் திரும்பத்திரும்ப
                                 எண்ணி நிற்போம்...


                                  வேறொன்றறியேன் பராபரமே
                                  என்று வேண்டிநிற்போம்
                                  இவையே வரஙக்ளாக எப்போதும்,,,


                                   மனம் கரையும் மனம் நிறையும்
                                   அன்பு ததும்பும்
                                   இனிய புத்தாண்டு,,,

                                    எல்லாம் தரட்டும்,
                                   எல்லாம் பெறுவோம்,,




                        22222222222          000000000000              11111       333333333333333
                        22222222222          000000000000              11111       333333333333333
                                      2222          000            000              11111       333             3333                              
                                      2222          000             000             11111                        3333
                        22222222222          000             000             11111              333333
                        222                          000             000             11111                       33333
                        222                          000000000000              11111                           3333
                        22222222222          0000000000000            11111        3333333333333



Sunday, December 23, 2012

மன வீக்கங்கள்,,, பகிர்வுகள்.....




                         தொடர்ந்த இடைவெளிகளுக்குப் பின் வந்திருக்கிறேன்.

                          அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்..

                          இப்போது குளிர்கால விடுப்பில் இருப்பதால் அவ்வப்போது ஏதேனும் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருககிறது.

                         பேருந்து நாவல் அச்சில் இருக்கிறது.

                          விரைவில் வெளியீடு. அனைவரையும் அழைப்பேன்.

                          000000000000000


                           நண்பர்களின் பதிவுகளில் ஏராளமான செய்திகள்... உணர்வுகள்... சுவையான நிகழ்வுகள் குறித்த பதிவுகள்... இந்த குளிர்கால விடுப்பில் அத்தனையையும் வாசித்துவிடுவது என்கிற உறுதி இருக்கிறது..


                             000000000000000


                             செய்தித்தாள்களை வாசிக்கும்போதெல்லாம் இப்போது மனம் நொந்து புண்ணாகி வீக்கமெடுத்திருக்கிறது.

                             பெண்பிள்ளைகள்... சிறுமிகள்... பச்சிளங்குருத்துகள்...பருவப் பெண்கள் எனப் பாலியல் வன்முறைக்குப் பலியாவது மனவெளியெங்கும் ரத்தம் கசிய வைக்கும் வலியை உணடாக்கி நிற்கிறது.

                            1, புதுதில்லியில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவிக்குப் பேருந்தில் ஏற்பட்ட பாலியல் கொடுமை....அதற்கென நடத்தப்படும் மாணவர்களின் சமுக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம் இவற்றையெல்லாம்  மத்திய அரசு புரிந்துகொண்டு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கவேண்டும் என்பதுதான் பணிவான வேண்டுகோள். மாணவர்களிடம் அவர்களின் உணர்வுகளோடு பேசுங்கள்.. தயவுசெய்து தடியடியும் கண்ணீர்ப் புகையும் வேண்டாம். பாதிக்கப்பட்ட  மாணவி விரைவில் நலமடைந்து எல்லாம் மறந்த மனோதிடத்துடன் படிப்பைத் தொடரவேண்டும். அதற்குரிய வல்லமையை இறைவன் அவருக்குத் தரவேண்டும்.

                              2, துர்த்துக்குடி பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட அவலச்சாவு எந்த விதத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். உரிய குற்றவாளிக்கு உரிய நேரத்தில்  உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும். மாணவியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு மன அமைதியை இறைவன் அளிக்கவேண்டும் என்பதுதான் பிரார்த்தனை,

                             தண்டனைகளோடு இவை முடிவுக்கு வருவதில்லை. நேற்று முன்தினம் ஒரு தொலைக்காட்சியில் பேசிய ஒரு சமுக ஆர்வம் கொண்ட பெண் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்குக் கடுமையாகத் தண்டனைகள் வழங்கப்படும் ஒரு தேசத்தில் இக்குற்றங்கள் அதிகரித்து உள்ளனவே தவிர குறையவில்லை என்று சான்னறுகாட்டி உரைத்த கருத்து கவனத்திற்குரியது. எப்படியாயினும் இதற்கு நல்லதொரு நடவடிக்கையை அதுகுறித்த கருத்துருவை எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் உருவாக்கவேண்டிய சூழலை அனைவரும் எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் மன எண்ணம்.

                             தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும்
                             தருமமே வெல்லும்,,,,,, பாரதி


                                000000000000


                                மாயன் காலண்டர்
                                என்றார்கள்..

                                திசம்பர் 21 இல் உலகம்
                               அழியுமென்றார்கள்...

                                ஆயிரமாயிரம் பேர்
                               ஆயிரமாயிரம் பேச்சுக்கள்

                                பேசிப்பேசி
                                இன்னும் முடியவில்லை
                                பேச்சு...

                                ஓவியம் வரைந்துகொண்டிருந்த
                                பிள்ளை சொன்னான்
                                உலகம் அழிந்தால் அழியட்டும்
                                விடுங்கள்...
                                வேறொன்ற வரைந்துகொள்ளலாம்,,,

                                எல்லாவற்றிற்கும்
                                தீர்வுகளும் எல்லாவற்றையும்
                                எளிதாக்கவும் குழந்தைகளால்
                                மட்டுமே எப்போதும்
                                சாத்தியம்....

                                0000000000000


                                திருமங்கையாழ்வார் அடிப்படையில் அரசன். அவர் அரசனாக இருந்தபோது குமுதவல்லி எனும் மங்கையைக் கேள்வியுற்று அவளை மணக்க முறைப்படி துர்து அனுப்பினார். மங்கை சில நிபந்தனைகளை விதித்தாள்.

                                  1, தினமும் நெற்றியில் திருமண் இடவேண்டும்.
                                  2, திருமால் பக்தராகப் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
                                  3, திருமந்திரம் உணர்ந்து உரைத்தல் வேண்டும்.
                                  4. நாளும் 1008 வைணவப் பக்தருக்கு ஓராண்டுக்கு திருவமுது
                                      படைத்திடவேண்டும்.

                            மங்கைவேந்தன் ஏற்றுக்கொண்டார். திருமணமும் முடிந்தது, சொனன்படி அப்படியே செய்து வந்ததால் வளம் குறைந்தது, சோழ மன்னனுக்குக் கட்டவேண்டிய கப்பம் செலுத்தமுடியாமல் போகவே சிறை செல்லவும் நேர்ந்தது, விடுவானா பெருமாள்,,, கனவில் போய் காஞசிக்கு வா மகனே,,, வேகவதி நதியில் பொற்குவியல் தருகிறேன் என்றார், அதன்படி சோழமன்னனும் மங்கை வேந்தனும் காஞ்சிக்கு சென்றனர். வேகவதி நதியில் சுட்டிய இடத்தில் பொற்குவிகை கிடைத்தது, சோழமன்னர் மங்கையாழ்வாரின் அருமை உணர்ந்து, அவரை வணங்கி சொன்னான்

                                      இனி கப்பம் வேண்டாம்,,,

   
                             திருமங்கையாழ்வார் உடனே அதற்குப் பதிலும் சொன்னார்

                                        தனக்கு இனி ஆட்சியே வேண்டாம்,,,


                             000000000000000000000000000000000000000000



                                      சந்திப்போம் இன்னொரு பதிவில்,,,,


   


Wednesday, October 31, 2012

மழைக்கும் புயலுக்கும் ஒதுங்கி........




                         வணக்கம்,

                        இடைவிடாத மழையும் இடைவெளிவிடாத பணியும்
                       தொடர்ந்திருக்கின்றன.

                       இன்று நீலம் புயலின் காரணமாக விடுமுறை விட்டிருக்கிறார்கள்.

                       மின்வெட்டும் இல்லை.

                       இதுதான் தருணமென்று ஒவ்வொரு வலைப்பூவாய் வலம்
                       வந்து மகிழ்ந்த தருணங்கள் நிகழ்ந்தன.

                       இன்னும் வலம் வரவேண்டும் இன்றைக்கு எவ்வளவு முடியுமோ
                        அவ்வளவு.

                       அடுத்தவர் பிரச்சினையில் எப்போதும் மூக்கை நுழைக்கும்
                      அமெரிக்க வெள்ளத்தால் ஒரு லட்சம் கோடி இழப்பு வருத்தத்தைத்
                      தரவில்லை.

                        சாலைகள் போடப்பட்ட தெருக்களும் சரி... போடப்படாத
                       தெருக்களும் சரி... குளங்களாகவும் குட்டைகளாகவும் பெருகி
                       பல்லிளிக்கின்றன... அதைவிட,,, அரசியல்...

                       கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதன் சத்தியத்தில்
                       இயங்கவேண்டும்.

                       000000000000000


                        மழை கொட்டுகிற தருணத்தில்
                       விழுகின்ற மழையேணியில் ஏறுகிறேன்..
                       கை வழுக்கவில்லை
                       மனம் வழுக்குகிறது...

                        அப்படியே சரிந்து
                        சில பூக்களின் வண்ண இதழ்களின் மீதும்
                        சில வண்டுகளின் இறக்கைகளின் மீதும்
                        அடர்ந்த இலைகளின் மீதும்
                        சில மிருகங்களின் முதுகின் மீதும்
                        கூரைகளின் மீதும்,,, குறு மலைகளின் மீதும்
                        கொஞ்சம் சாக்கடையிலும்
                        கொஞ்சம் சகதியின் பரப்பிலும்
                        விழுகிறேன்...
                        தவிக்கையில் தாங்கிப் பிடிக்கின்றன
                        சில குழந்தைகளின் காகித கப்பல்கள்
                       போகும்வரை போகட்டுமென்று
                       அதில் பயணிக்கிறேன்,,,

                        சுகமாய் இருக்கிறது மழையும்
                         மழையேணியும்,,,

                         முகமருகே உரசுகிறது வாசமாய்
                         ஒரு தேனீர் கோப்பை
                         அன்பாய் அவளின் சொற்கள்,,,,,
                         முதுகில் இறுகும் மகளின் கைகள்,,,,
                         மழையில் இன்னொரு உலகிற்கு
                         நான் பயணிக்க வெளியே கூச்சலிடுகின்றன
                        மழையேணியின் ஒவ்வொரு துளியும்,,,

                       000000000000



                          ஒரு துளி மழைக்குள்
                          அடங்குமா
                          மனதும் மகிழ்ச்சியும்?

                          ஒரு துளி மழைக்குள்
                         அடங்குமா
                         எந்தக் கவிதையும்?

                         ஒரு துளி மழைக்குள்
                         அடங்குமா
                         முதலும் முடிவும்?

                          ஒரு துளிமழைக்குள்
                          அடங்குமா
                          ஒரு வறுமையின் மரணம்?

                          ஒரு துளி மழைக்குள்
                          அடங்குமா
                          எதுவும்?

                          துளிதானே கடல்?
                          துளிதானே உலகம்?
                          துளிதானே இயக்கம்?
                          துளிதானே பிரும்மம்?
                          துளிதானே துயரம்?
                          துளிதானே இன்பம்?
                          துளிதானே,,,துளிதானே,,,,

                            0000000000000
                         


                       

Saturday, September 15, 2012

கடுகு தாளித்தல்






                   ஒரு             மணம்

                    ஒரு             சிரிப்பு

                    ஒரு           அழுகை

                     ஒரு           தவிப்பு

                     ஒரு           துடிப்பு

                     ஒரு            அழகு

                     ஒரு            அற்புதம்

                     ஒரு             சுகம்

                     ஒரு              பிரிவு

                      ஒரு            ஆரம்பம்

                      ஒரு              முடிவு


                                        இவையெலலாம்    உதறி
                                        விரைகின்றன          பொழுதுகள்
                                        விரைகின்றனர்       மனிதர்கள்
                                        ஒவ்வொரு     நாளும்....

                                         கடுகாய்,,,,,, நானும்,,, எனது  வாழ்வும்,,,,
                   

Wednesday, August 29, 2012

வேண்டுகோளும் பிரார்த்தனையும்



               அன்பு சகோதர, சகோதரிகளுக்கு.


                            உறரணி வணக்கமுடன்,

                            தனது அற்புதச் சொற்களைக் கோர்த்த கவிதைகளால் நெஞ்சம் கவர்ந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர்.

                            கவிஞர் நல்ல மனிதர். சக மனிதர்களிடம் நேயம் காட்டுபவர் தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்.

                            கவிஞரின் உடல் தற்போது நலமாக இல்லை. இதயக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயப்படும்படியாக இல்லை. சிறிதாக அடைப்பு அதுவும் ஆரம்ப நிலையில் உள்ளது. இருப்பினும் அதற்கு அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நாளை காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்க உள்ளது. இது கிட்டத்தட்ட முடிவதற்கு 5 மணிநேரங்கள் ஆகும்.

                             நமது அருமை சகோதரன் கவிஞர் சுந்தர்ஜி அவர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்.

                             அவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இவ்விவரங்களைத் தெரிவித்து நாம் அனைவரும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் கவிராயர் இருக்கப் பிரார்த்திக்கவேண்டுமாய் கூறியுள்ளார்.

                                  சுந்தர்ஜியுடன் நாமும் சேர்ந்து தஞ்சாவூர்க் கவிராயர்
நலமுடன் இருக்க எல்லர்ம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம்.

                           

              எனது வேண்டுகோள்...


                                    என்னை உமது எழுத்துக்களால்
                                    இதயத்தின் சிறைக்கு சிக்க வைத்த
                                    கவிராயரே...

                                    உமது இதயம் பலமானது பண்பானது
                                   எல்லோரையும் நேசிக்கும் இறைமையானது...

                                    வயதின் தளர்வும் வாழ்வின் விதிகளுமாக
                                    நோய்களும் சிகிச்சையும் இயல்பானது...

                                     உமது கவிதைகள் அந்த மருத்துவமனையின்
                                     அத்தனை சுவர்களுடனும் பேசத்தொடங்கியிருக்கும்..
                                     உமது கவிதையின் சொற்கள் அந்த மருத்துவர்களின்
                                     விரல்களில் மனிதத்தை இழையோடச் செய்து
                                     கொண்டிருக்கும்...

                                     கவிதைக்கு ஏது நோயும் சிகிச்சையும்
                                     நீரே கவிதைதான்

                                     உங்கள் மௌனக்  கவிதைகளை
                                     இயற்றிக்கொண்டிருங்கள்..

                                     சிகிச்சை முடிந்ததும் வாசிப்பேன்... நாம்
                                     விவாதிப்போம்..


                                      00000000000000000000