Sunday, July 7, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்... விமர்சனம்



              மதுமிதா எனும் பெயரில் எழுதும் பி.சந்தானகிருஷ்ணன்  என்
நண்பன்.
              பள்ளி முதல் கல்லுர்ரி வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
              எனக்கு முன்னால் எழுத்துலகில் தடம் பதித்தவன்.
              சின்ன சின்ன சொற்களால் வசீகரிப்பவன்.
              எழுதும்போது வேகமாக எழுதுவான். ஆனால் கதையிலோ காதல்
கொஞ்சும். நட்பு இளகும். பரிவு இழையும். பளிச்சென்று ஒளிரும் நடை.
               இருவரும் சேர்ந்து கரந்தை நுர்லகத்தில் படைப்புலகம் சார்ந்த
ஒரு புத்தகத்தைக்கூட விடாது வாசித்தவர்கள்.
               துர்ரத்திலிருந்தே இருவரும் அட்டையைக் கொண்டே அது எந்தப்
புத்தகம் என்று அடையாளப்படுத்திவிடுவோம்.
               கரந்தை சாந்தி டீக்கடையில் நின்று மணிக்கணக்கில் பல டீக்கள்
குடித்தும் இலக்கியமும் படைப்பும் பேசியிருக்கிறோம்.
                 நிறைய எழுதிக் குவித்திருக்கிறோம்.
                 இன்னும் அவன் எழுத்தின்மேல எனக்கு ஒரு காதல் இருந்துகொண்டே இருக்கிறது.
                 அபாரமான வாசிப்பிற்குரியவன். நன்றாக நினைவிலிருத்துபவன்.
                 இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது எங்கள் நட்பு நதி. வற்றாமல் வாடாமல் வளங்குன்றாமல்.
                  என் நண்பன் என்னுடைய நத்தையோட்டுத்தண்ணீருக்கு எழுதிய கடிதம் (விமர்சனம்....) இதோ.
                 
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அன்பு ஹரணி,
வாழ்த்துக்கள்.
எழுதி,எழுதி உனக்கென ஒரு நடையை
உருவாக்கிக் கொண்டுள்ளாய்.
புனைவு எழுதுவதைவிட அபுனைவு எழுத
கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவை.
அது உன்னிடம் நிறைய உள்ளது.
மிகத் தாமதமாகத்தான் உன்னுடைய
 நத்தையோட்டுத் தண்ணீர்
வாசித்தேன்.
தண்ணீருடன் நிறைய முத்துக்களும்.
புத்தியிலிருந்து கொஞ்சமும்,
மனசிலிருந்து கொஞ்சமும்
எழுதியுள்ளாய்.
எனக்குப் பிடித்தது மனசிலிருந்து
எழுதியத்தைத்தான்.
வடவாற்றங்கரையில்..
சில அர்ப்பணிப்புக்கள்..
நம்பிக்கையான அனுபவ வைத்தியம்
இன்ன பிற.
வடவாறு கோடையிலும்
நம் மனசுள் சுழித்து ஓடிக்கொண்டிருக்கும்.
உனக்குக் கொஞசம் கூடுதலாய்.
இது கரந்தை நமக்குக் கொடுத்தக் கொடை.
QUALITYயும், QUANTITYயும் இணையாது எனும்
பொது புத்தியை உடைத்தவன் நீ.
நிறையவும்,நிறைவாகவும் எழுதுகிறாய்.
உன்னை ஒருமையில் விளித்தது உரிமையில்.

மீண்டும் என் வாழ்த்துக்கள்.

P.சந்தானகிருஷ்ணன்.


 


                 
            


Saturday, July 6, 2013

நெஞ்சுவிடு துர்து கவிதைகள்...





                      நண்பர் அவர்
                      கோயிலில்தான் பழக்கம்
                      இறைவன் திருக்கல்யாணத்திற்கு
                      எப்போதும் நன்கொடை கேட்பவர்
                      என்னாலியன்றதைத் தருவது வழக்கம்
                      அன்றும் அப்படித்தான்
                     அவருக்குக் கொடுக்கத்தான்
                      சென்றபோது பசித்த வயிறடங்க
                     வடையும் தேநீரும் சாப்பிட்டுத் திரும்புகையில்
                      கைநீட்டி நின்றான் உடலெங்கும்
                      எண்ணெய் பிசுக்கும் அழுக்குமேறிய
                      உடலுடன்.. உற்றுப்பார்த்தேன்
                      அதிர்ந்துபோனேன்..
                     என்னோடு படித்தவன் என்னைவிட
                      நன்றாய் படித்தவன் என்னவாயிற்று
                      அவனுக்கு...இப்படி மாறியது மனநிலைப்
                      பிறழ்வாய்.. உற்றுப்பார்த்துக்கொண்டேயிருந்தான
                      நன்கொடை பணம்முழுக்க அவனிடத்தில்
                      தந்தேன்.. வாங்கிகொண்டுபோனான்
                      தண்ணீர் கிடைக்காதவன் விக்குவதைப்போல
                      விக்கலுடன்...

                      000000000000000


                       சாலையில் அடிபட்டுக்
                       கிடப்பவனின் பையில்
                       துருத்திக்கொண்டிருக்கும்
                       வெள்ளைத்தாள் முழுக்க ரத்தம்
                       அதில் அவன் முகவரி
                       இருக்குமோ?

                      000000000000000000

                       
                       நான் பார்க்கப் பிறந்து
                       வளர்ந்தவன் இபபோது
                       நகராட்சிக் கவுன்சிலர்.....

                       இவர் பிறந்தது தெரியுமென்று
                       தருகிறான் சான்றிதழ்
                       எனக்கு.....

                       0000000000000000000000

                        சிங்கமும் சரி
                        சிறுத்தைகளும் சரி
                        காண்டாமிருகங்களும் சரி
                        ஒருபோதும் சொன்னதில்லை
                        நாங்கள் ஒன்று இரண்டு
                        மூன்றென்று எண்களாக...

                       00000000000000000000000


                        அவன் முகவரி
                        தேடியலைகிறர்கள்...

                        முகவரி தேடியே
                        தொலைந்துபோனவன்
                        அவனென்று தெரியாமல்...


                    0000000000000000000000000

                             நம்பிக்கையைப்
                             பத்திரமாக என்னிடத்தில்
                             ஒப்படைத்தது
                             பல
                             அவநம்பிக்கைகள்தான்...

                    0000000000000000000000000000000000

                           



                         


                     
                     
                     

                 

                     


                     
   
                       

Thursday, July 4, 2013

பொக்கிஷமும் சில பொற்காசுகளும்




                         இன்று பொக்கிஷம் கிடைத்த நாள்.

                        நண்பன் சுந்தர்ஜியின் வலைப்பதிவிற்கு சென்று விவேகானந்தரின் துறவியின் பாடலைக் கேட்டு என்னை மறந்தேன்.

                        மனத்தில் உள்ளதையெல்லாம் சுந்தர்ஜியிடம் கொட்டினேன் துறவியின் பாடல் எற்படுத்திய உணர்வலைகளின் தாக்கத்தால்.

                       உடனே அவர் எனக்கு அந்தப் பாடலை இன்று அந்த வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுநாளில் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார். அவர் அனுப்பியதிலிருந்து ஐந்து முறை பாடலைக் கேட்டுவிட்டேன்.

                         பொக்கிஷம் ஈந்தவருக்கு நன்றிகள்.

                         இன்று வீரத்துறவியின் நினைவுநாள்

                     

                                         உங்களைப் பற்றி
                                         நானென்ன உரைப்பது
                                         உலகே உரைக்கும்போது...

                                        உங்கள் நினைவுநாளில்
                                        விழித்திருக்கப்பெற்றவன்
                                        பாக்கியவர்ன்...
                                        எழுபவன்
                                        எழுதப்படுவான் வரலாற்றேடுகளில்
                                        இயங்குபவன்
                                        என்றைகும்
                                        சாகா வரம் பெற்றவன்...


                                            புறத்தால் பணிவதல்ல
                                            உன்னை
                                            அகத்தால் பணிதல் வேண்டும்
                                            அதற்கே பயிற்சி
                                            என் வாழ்நாள் முயற்சி
                                            என்றொரு சொல்லுரைக்க
                                            ஞானமாகும் எந்த வாழவும்...

                                           000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


இரண்டு


                               திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கைப்பேசி வழியாக வந்த இனிய தகவல் திரு ஜிஎம்பி ஐயா அவர்கள் தான் பயணிக்கிற வழியில் என்னைச் சந்திக்கவிருப்பதாக.

                                 உள்ளம் துள்ளியது.

                                 முன்பொருமுறை எழுதியிருந்தார் கரந்தையைக் கடக்கும்போது இது ஹரணியின் வீடு என்று தன் மனைவியிடம் கூறியதாக.
அன்பு அளவிடற்கரியது.

                                  காலையுணவிற்கு என் வீட்டில் இருக்க ஐயாவைக் கேளுங்கள் ஜெயக்குமார் என்றேன்.  நீங்களும் என் வீட்டில்தான் காலையுணவு அருந்தவேண்டும் அன்பு வேண்டுகோள் வைத்தேன்.

                                  சரி என்றார்.

                                  அப்புறம் இல்லை சாப்பிடுவதைவிட சந்திப்பது அவசியமானது. அதற்கான நேரங்களே முக்கியம் என்றுரைதது காபி மட்டும் போதும் என்று ஜெயக்குமார் சொன்னார்.

                                  அதன்படி 7.50 க்கு வீட்டிற்கு வந்தார் ஜிஎம்பி ஐயா.

                                  ஐயா. அம்மா, அவர்களின் திருமகனார் மூவரும் வந்தார்கள்.

                                  இத்தனை வயதிலும் இப்படியொரு நேர்த்தியான அழகிருக்குமா என்பதுபோல பளிச்சென்ற தோற்றம் ஜிஎம்பி ஐயா. அதற்கேற்றாற்போல எளிமையின் அழகோடு அம்மாவும் அவர்கள் பிள்ளையும்.

                                 முதல் அறிமுகமாக அது இல்லை.

                                 நெருங்கிய உறவுகள் போலவும் நீண்ட நாள்கள் தங்கிப் பழகியதுபோன்றும் அவர்கள் இருந்தார்கள்.

                                    அழகான மர்ன் துள்ளலைப்போல இனிய உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேயிருந்தது. மாடியிலிருந்து என்னுடைய சிறு நுர்லகத்திற்கு அழைத்துச்சென்றேன். ஐயா பரவசப்பட்டார். நெகிழ்ந்துபோனார்.  சுந்தர்ஜி ரிஷபன் ஆர் ராமமூர்த்தி. வைகோ என்று வலைப்பதிவு நண்பர்களை வலைப்பக்கத்திலேயே பார்த்துவிட்டு நேரில் பார்க்கவேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை எங்களைப் பார்த்த நிகழ்வில் குறிப்பிட்டார். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இப்படியொரு தருணம் வாய்க்குமா?
அம்மா அவர்களின் சாந்தமான முகம் இன்னும் அன்புகாட்டும் சொற்களோடு காட்சியாகிக்கொண்டிருந்தது. அவசியம் பெங்களூர் வாருங்கள் என்று அன்பு காட்டிச் சொன்னார்.

                                   இது பரவசமான நாள். ஆம் வலைப்பக்கத்தில் கண்டவரை நேரில் சந்தித்து உரையாடியது எத்தனை மகிழ்ச்சியானது. அவர்கள் போன பிறகு திரு ஜெயக்குமார் அவர்களிடம் அந்த இனிய உரையாடல் தொடர்ந்து இருந்தது.

                                  ஒரு நல்ல பொழுதோடு விடிந்த நாள் இது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                            படைப்பாளி என்பவன் பன்முக ஆளுமை கொண்டவன்.

                            தோண்டத்தோண்ட ஊறும் கிணற்றைப்போல அவனைத் துர்ண்டத் துர்ண்ட உள்ளிருக்கும் படைப்பு பெருகி ஊற்றெடுக்கும் என்பது உண்மையானது.

                             அப்படித்தான் கவிஞர் ராகவ் மகேஷ்.

                             முதலில் கவிஞர். நகைச்சுவைக் கவிஞர்.

                             நல்ல நலமுரைக்கும் நகைச்சுவைப் பண்பு கொண்டவர்.
பின்பு தஞ்சையில் இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சியில் நகைச்சுவை
நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்துப் பல மனங்களைக் கொள்ளைக் கொண்டவர்.

                           நகைச்சுவை உணர்வென்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது கடவுளின் வரம்போலவே.

                            ராகவ் மகேஷ் அதில் திறனானவர்.

                            அப்புறம் பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் உலகறிய தன்னுடைய நகைச்சுவைத்திறனை பாடியும் பேசியும் நடித்தும்  காட்டிய்வர்.
இப்போதும் அவரது பணி தொடர்ந்திருக்கிறது.

                              அண்மையில் யமுனா எனும் திரைப்படத்தில் நடித்து ஒருபடி மேலேறியிருக்கிறார்கள். நீண்டுகிடக்கிறது ஏணி. ஏறிக்கொண்டேயிருப்பார்.

                               இதுபோன்ற கலைஞர்களைச் சொல்வதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தேன். தற்போது அவர் எனது நத்தையோட்டுத் தண்ணீர் புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தை அவரின் அறிமுகத்திற்குரியதாக்கிக்கொண்டேன்.

                               அவரின் விமர்சனக்கடிதம் - நத்தையோட்டுத் தண்ணீர்  நுர்லுக்கானது.

 
                          பேரன்பிற்குரிய அய்யா

                          வணக்கம். கடித மரபு தொலைந்துபோனது பற்றிய உங்கள் கட்டுரை என்னைக் கடிதம் எழுத வைத்தது. நத்தையோட்டுத் தண்ணீர் என்னுள் பல உணர்வுகளை ஏற்படுத்தியது. இன்றைய மனிதர்கள் தொலைத்த பல விஷயங்களையும் நான் ஆற்றவேண்டிய சில கடமைகளையும் எனக்கு உணர்த்தியது. பொதுவாக கதை. கவிதைகளைவிட கட்டுரைகளை சுவாரஸ்யப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு. முடியும் என்று எனக்கு பதில் சொல்லிவிட்டது இந்த நுர்ல். உங்கள் படைப்புக்களில் வெளிப்படும் யதார்த்தம். நேயம் போன்றவை தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது. மேலும் மேலும் படையுங்கள். படிக்கப் பெரும்படையே காத்திருக்கிறது.

                                                                                   அன்புடன்
                                                                                   ராகவ் மகேஷ்


       ஒரு படைப்பு ஏதேனும் சிறு கடுகளவேணும் பாதிப்பை விளைவை ஏற்படுத்தினால் அது அர்த்தமுடையதாகிறது. மேற்சுட்டிய கடிதத்தில் நுர்லைப் படித்ததும் கடிதம் எழுதுவேண்டும் என்ற உணர்வைத் துர்ண்டிக்
கடிதம் எழுதி அனுப்பவைத்தது என்று சொல்வதே வெற்றிதான். இதற்கப்புறம்தான் விருதுகள் எல்லாமும்.

(நன்றி திரு ராகவ் மகேஷ)



000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                       






                                     

                                     



Wednesday, July 3, 2013

கடைசி ஆசை



                  இம்மாதம் கணையாழியில்  வந்த என் கவிதை


                  கடைசி ஆசை
                  ////////////////////////////

                   இரவில்
                   எரிந்துகொண்டிருந்த
                   மெழுகுவர்த்தியிடம்
                   பரிதாபப்பட்டுக்
                   கேட்டேன்
                   உன் கடைசி ஆசை
                   என்னவென்று?

                   அமைதியாய்ச்
                   சொன்னது
                   என்னுடைய இந்த
                   சிறு வெளிச்சத்திலாவது
                   உன்னைப்
                   படித்துக்கொள்....

                  0000

                  (நன்றி. கணையாழி சூலை 2013)

நத்தையோட்டுத்தண்ணீர் ...... விமர்சனங்கள்



       நத்தையோட்டுத் தண்ணீர் என்ற என் புத்தகத்திற்கு இன்றைய 03.07.2013 தினமலரில் விமர்சனம் வந்துள்ளது.

               வாழ்க்கை அனுபவங்களை நிதானமாக அசைபோடுவது ஒருவித சுகம்.  இந்த நுர்லைப் படிப்பவர்கள், அந்த சுகத்தில் மூழ்கித் திளைக்கலாம். இந்தக் கட்டுரைத் தொகுப்பில். வாசித்தல். சுவாசித்தல். நட்பென்று வைக்கப்படும். வழிகாட்டிகள். சந்தர்ப்பவாதிகள். இளம்பருவமும் மனவெளி விளையாட்டுக்களும். எனது ஆசிரியர்கள் உட்பட 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமையான அனுபவங்களை மையமாக்கி கவித்துவமான நடையில் கட்டுரைகளை எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.

              நுர்லில் இருந்து சில இனிய துளிகள் : வாசிப்பதால்தான், பலவற்றை
மறந்து இன்னும் மிச்சம் இருக்கிற வாழ்வை வாழ நம்பிக்கை கொள்கிறோம்;
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு திருத்தம் பெறாத யோகா ஒளிந்து கிடக்கிறது; ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது, வழிகாட்டலுக்கு;
நீதிபோதனை வகுப்பு நீக்கப்பட்டதால், நீர்த்துப்போனது வாழக்கை.

                                                                                                              - பிரபா.

(நன்றி / தினமலர் / 03.07.2013)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நத்தையோட்டுத் தண்ணீருக்கு கரந்தை திரு ஜெயக்குமார் அவர்கள் எழுதிய விமர்சனம் பின்வருமாறு.


ஹரணியின்

நத்தையோட்டுத் தண்ணீர்

     இன்று (27.6.2013)  வியாழக் கிழமை காலை 11.30 மணியளவில், ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தேன். ஜெயக்குமார். குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே ஹரணிவாருங்கள் வாருங்கள், அமருங்கள் என மகிழ்வோடு வரவேற்றேன். ஒரு நிமிடம் வாருங்கள் என வெளியே அழைத்துச் சென்றார். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து, நூலொன்றினை எடுத்து வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.


படிப்பை அறிவியலில் தொடங்கி, ஆய்வுப் படிப்பைத் தமிழில முடித்தவர்.

     தமிழை நேசிப்பவர்கள் பலருண்டு. ஆனால் இவரோ தமிழை சுவாசிப்பவர்.
வாசிக்காத நாட்களெல்லாம், சுவாசிக்காத நாட்கள்
என்னும் உயரிய, உன்னத கொள்கையினை உடைவர்.

     ஹரணி அவர்களின் இல்லம் இருப்பதோ கரந்தையில். பணியாற்றுவதோ அண்ணாமலையில். நாள்தோறும் 200 கி.மீ பயணிப்பவர். பேரூந்தில் பயணித்த நாட்களை நெஞ்சில் நிறுத்தி பேரூந்து என்னும் புதினத்தைப் படைத்தவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிப்பவர். தொடர் வண்டிப் பயணத்தில், நாள்தோறும் குறைந்த்து 200 பக்கங்களையாவது படிப்பவர். இப்பழக்கத்தினை இன்று வரையில் தொடர்பவர். விரைவில் தொடர் வண்டி என்னும் புதினத்தைப் படைத்தாலும் படைப்பார்.

      படைப்பிலக்கியத் துறையில் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, ஆங்கிலக் கவிதைகள், பெண்ணியம்என்னும் நிலைகளில், தனது படைப்புத் திறனை வெளிப்படுத்திவரும், பன்முக ஆளுமை உடையவர்.

நத்தையோட்டுத் தண்ணீர்
ஹரணி அவர்களின் கைவண்ணத்தில ஓர் புதிய படைப்பு. புதுமைப் படைப்பு.

     நூலின் மூன்றாவது பக்கத்திலேயே, நம்மை முழுவதுமாய் நூலுக்குள் ஈர்த்து விடுகிறார்.

       சூழல்களாலும் ...
       இயலாமையாலும் ...
       மனம் புழுங்கும்
       சத்திய
       உள்ளங்களுக்கு....
       இச்சிறு நூல்

     14 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நம்மை பெருமூச்சு விட வைக்கும். ஆம் உண்மைதான்.

    நல்ல வாழ்க்கை வாழ்வது என்பது
    நல்ல புத்தகங்களை வாசிப்பது போல

    வாசிப்பு என்பது ஒரு கலை
    வாசிப்பு என்பது ஒரு தவம்
    வாசிப்பு என்பது ஒரு பரவசம்
    வாசிப்பு என்பது ஓர் உணர்வு
என தொடர்ந்து எழுதி, நம்மையும் அந்தச் சுழலுக்குள் இழுத்து விடுகிறார்.

நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது
என்ற ஒரு வரியே, இவர் அனுபவம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

     கடிதம் ஓர் வாழ்வின் உன்னத அடையாளம்
     கடிதம் எழுதுதல் ஒரு கலை
     நாம் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்றல்ல
     இதுதான் ஒன்று
சம்மட்டி கொண்டு நம்மைத் தாக்குகின்றன் இவரின் எழுத்துக்கள். வளர்ச்சி என்னும் பெயரில் நாம் இழந்தது அதிகம். எதை எதை இழந்தோம் என்பதையே அறியாமல், உணராமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     ஓடி பிடித்து விளையாடல்
     சடுகுடு
     திருடன் போலிஸ்
     கிச்சு கிச்சு தாம்பாளம்
     சில்லு செதுக்கல்
     கிட்டிப் புள் விளையாட்டு
     பளிங்கு உருட்டல்
இப்படி பல விளையாட்டுக்களை, இருள் சூழும் வரை, தெருவிலே நின்று விளையாடினோமே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று நம் பிள்ளைகளுக்கு, இவ்விளையாட்டுக்களின் பெயராவது தெரியுமா?

நாம் குழந்தைகளை ஏமாற்றுகிறோம்
நாம் குழந்தைகளுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை
தேவையில்லை என நாமாகவே தன்னிச்சையான முடிவு எடுக்கிறோம்
என நம்மைச் சாடுகிறார். உண்மை சுடுகிறது.

     கூட்டுக் குடும்பம் என்கிற அற்புதத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே. அது சுக்கு சுக்கலாகிவிட்டதே
என இவர் வருந்துவதைப் படிக்கும் பொழுது, நமது மனதில் வலி, மெல்ல மெல்ல கூடுகிறது.

     அவர்கள் எங்கே இருக்கிறார்கள்... எப்படியிருக்கிறார்கள்... இருக்கிறார்களா? புகழுடம்பு எய்திவிட்டார்களா? தெரியாது. ஆனாலும அவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு பார்த்த்து போலவே மனத்தில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அழியாப் பிம்பமாய், அதே ஆசிரியர்களாக. மிடுக்குடன்
என ஹரணி அவர்கள், தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூற, கூற, நாமும் நமது இளமைக் கால, பள்ளிக் கால நினைவலைகளில் மூழ்கி மூச்சுத் திணறுவதை உணர முடிகிறது.

நத்தையோட்டுத் தண்ணீர்
இந்த நத்தையோட்டில் தேங்கியிருப்பது வெறும் தண்ணீரல்ல. தெளிந்த அனுபவம். அந்த அனுபவம் புகட்டிய பாடம். அந்தப் பாடத்தால் விளைந்த உயர் ஞானம்.

     ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம்.
வாருங்கள். வாசித்துப் பாருங்கள்.

ஹரணி அவர்களின்
அலைபேசி 9442398953
மின்னஞ்சல் uthraperumal@gmail.com

நூல் வெளியீடு
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002






Monday, July 1, 2013

ஜால்ரா குறுந்தொடர் 6




                        தனலெட்சுமிக்கு யாரும் எழுப்பாமல் சற்று படுத்து உறங்கவேண்டும்போலிருந்தது,

                        மருமகனுக்கு ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு அழைத்து
வந்திருந்தார்கள்.

                        அது வாடகை வீடு,

                        தாராளமாக இல்லை. இருவருக்குப் போதுமானது. மூன்றுபேர் இருப்பதால் சிரமமிலலை.

                        தனலெட்சுமிக்கு சிரமமாக இருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டுத் திண்ணையில்தான் இருந்தாள். சாப்பிடும்போது மட்டும் உள்ளே போனாள். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும்.

                        சில சமயம் திண்ணைக்கே எடுத்துவரச்சொல்லி சாப்பிட்டாள்.

                       ஏம்மா?

                       இப்படியே வேடிக்கை பார்த்துட்டு சாப்பிட்டுப் பழக்கம். என் வூட்டுலே எதிரே வலம்புரி ஐயா முகத்த பாத்துட்டு சாப்பிடுவேன். அப்படி நினைச்சுக்கறேன்..

                        கூடவே பெருமூச்சு விட்டுக்கொள்வாள்.

                        மருமகன் உள்ளே படுத்திருந்தான். மகள் கடைத்தெருவிற்குப் போயிருந்தாள் காய்கறிகள் வாங்க.

                         திண்ணையில் அப்படியே சாய்ந்து படுத்தாள். துர்க்கம் வருமபோலிருந்தது. மனதிற்குள் வலம்புரி விநாயகர் துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பது போலிருந்து. என்ன தனம் அப்படியே வுட்டுட்டு வந்துட்டே என்று கேட்பதுபோல் உணர்ந்தாள்.

                         பூனை கண்ண மூடிக்கொண்டால் உலகம் இருண்டா போயிடும்.. ? தனம் இல்லாட்டி என்ன ஆயிரம் பேரு.. வாசல்ல நீர் தெளிச்சு பெருக்கி கோலம் போடுறது என்ன குதிரைக் கொம்பா?  யாரும் செய்யமுடியாத காரியமா என்ன?

                         மனசிற்குள் பல யோசனைகள்.

                         தன் வீட்டுத் திண்ணைபோலில்லை என்று ஒரு நினைப்பு தோணியது. தனலெட்சுமியின் கணவன் இருந்தபோது எப்போதும் அவன் வீட்டிற்குள் இருந்ததைவிட திண்ணையில்தான் அதிகம் இருப்பன். அவன் திண்ணையிலும் தனலெட்சுமி அவன் காலருகில் படியிலுமாக உட்கார்ந்துகொண்டு கதை பேசுவார்கள். பெருமபாலும் கணவன் பேசுவதைப் பெருமையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

                          போய்விட்டது.

                           முன்பு கணவன். இப்போது வீடு. இருக்கட்டும்.  மகள் வாழ்க்கைக்குத்தானே போனது. எப்படியே நல்லது நடந்தால் சரி.  என்ன வீடாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படியொரு விபத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தா?

                          என்னவோ வலம்புரி விநாயகரைப் பார்க்கவேண்டும் போலத் தோணியது.

                         அன்று மாலையே கிளம்பிக் கோயிலுக்கு வந்தாள்.

                         தாமோதரன் இருந்தார்.. என்ன கெழவி?  என்ன புதுசா வாசம் அடிக்குது கோயில்பக்கம்? என்று கிண்டலாகக் கேட்டார்.

                        அது வலம்புரி ஐயா வாசங்க... நம்பமேல ஏதுங்க வாசம்?  நாத்தம்தானே எப்பவும்?  அடிக்குது, இல்லே பூசிக்கிறோம்.. என்றாள்.

                        தாமோதரனுக்கு கோபம் வந்துவிட்டது.

                        குந்தக் குடிசையில்லே.. உனக்கெல்லாம் பேச்ச பாரு.. இப்படி இருக்கும்போதே உனக்கெல்லாம் வாய் கொறயலே,, எல்லாம் ஆண்டவன் அளந்துதான் வச்சிருக்கான்..

                        எதுக்குஙக்ய்யா என்கிட்டே வெட்டி வம்பு பேசறீங்க?  உங்க தகுதிக்கு நான் ஈடா?  என்றாள்

                         சுரீரென்றது தாமோதரனுக்கு.

                         பேசு..பேசு.. எல்லாம் யார் கொடுத்த தைரியம்னு தெரியும்.. சரி எங்க வந்தே? என்றார் மறுபடியும் குத்தலாக.

                          சாமி கும்பிட.. என்றாள் எதுவும் பேசாமல்.

                          சரி..போ.. சாமிய மட்டும் கும்பிட்டுப் போ.. கும்பாபிஷேகம் பண்ணற கோயிலு..

                          போய்விட்டார் தாமோதரன்.

                           தனலெட்சுமிக்குப் புரியவில்லை. சாமிய மட்டும் கும்பிடடுப் போன்னா என்ன அர்த்தம்?

                          உளளே போய் பிரகாரத்தில் நின்று வலம்புரி விநாயகரைப் பார்த்து  அழுதாள். அழுதபடியே பிரகாரத்தைச் சுற்றினாள்.

                          உள்ளே உட்கார்ந்துகொண்டு மறுபடியும் அழுதாள்.

                          தாமோதரன் பேசிய பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகப் பட்டது. இருக்கட்டும். அதற்கு என்னைப் பார்த்து ஏன் அப்படி சொல்லவேண்டும்? நான் என்ன செய்தேன்?

                           மனது குடைநத்து.

                           விவரம் தெரிஞ்ச நாளா உன் வாசலல நீர் தெளிச்சு வாசப் பெருக்கிக் கோலம்போட்டத தவிர என்ன செஞ்சேன்? என்ன கேட்டேன் வேணும்னு? கோயில் வாசல்விட்டு இறங்கி தெருவில் கால் வைக்க

                           அப்போது வேணுகோபால் வந்தார்.

                           வா,, தனம் என்றார்.

                           ஐயா.. என்றபடி அழுதாள்.

                           என்ன தனம்?

                            தாமோதரன் சொன்னதைச் சொன்னாள்.

                           உள்ள வா  என்றபடி கோயில் உள்அழைத்துப்போனார்.

                           இப்படி உட்கார் என்றார்.

                           உட்கார்ந்தார்கள்.

                            கோயில் வேலை ஆரம்பிச்சதுலேர்ந்து அவரோட பேச்சு சரியில்லை. கோயில்ல பல சின்ன சிலைங்க காணாமப்போயி பல வருஷமாச்சு.. உனக்குத் தெரியும் அதுங்க இருந்தது. யார் எடுத்து அத வித்தாங்கன்னு தெரியும்.. கோயில் சொத்து.. தெய்வம் பாத்துக்கும்னு விட்டுட்டோம். குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். அதை மறக்க
எல்லோரையும் ஏன் பாக்கறவங்களை எல்லாம் குத்தம் பேசறாரு.. அவர் செய்யலேன்னாலும் தபபு செஞ்சவங்க வாரிசுதானே அவரு.. உறுத்துது..
நீ கேட்டுக்காதே.. மனசோட வச்சுக்க.. எல்லோருக்கும் தெரியும்.. இந்த ஜால்ரா என்ன பொறும்?  உன்மேல பழியப் போடுறாரு,,, என்றதும் தனலெட்சுமி
பதறிப்போய் கேட்டாள்.

                     என்னது?

                     ஜால்ராவ நான் திருடிட்டேனா? இது அந்த சாமிக்கே அடுக்காதுஙக்ய்யா.. அதான் அப்படி ஜாடைப் பேச்சு பேசிட்டுப் போறாரா?
அடக்கடவுளே சாவற காலத்துல இப்படியொரு பழியா,,, நான் என்ன பாவம் செஞ்சே? கூட்டிப்பெருக்குனதுக்கு கிடைச்ச புண்ணியமாங்கய்யா இது,

                     சட்டென்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,

                     அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு தடுத்து ஆறுதல் சொன்னார்.

                     தனம் உன்ன பத்தி எல்லோருக்கும் தெரியும். விடு.. நெருப்புன்னா நாக்கு சுட்டுடாது,.

                      தனம் அழுதுகொண்டேயிருந்தாள்.

                      வேணுகோபால் போனபிறகும் நெடுநேரம் கோயில் பிரகாரத்தில உட்கார்ந்து வலம்புரி விநாயகர் முகத்தைப் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தாள்.

                      மாலை புறப்பட்டுப்போனாள்.

                      என்னம்மா ஆச்சு?

                       மகளிடம் சொலலிவிட்டு அழுதாள்?

                      நன்றி கெட்டவங்கம்மா... அந்த புள்ளயாருக்கே கண் தெரியலே போலருக்கு.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செஞ்சதுக்கு திருட்டுப் பட்டமா? எதுவும் இல்லாதவங்கன்னா எதுவேணாலும் சொன்னா கேட்டுக்குவாங்க.. எந்தப் பழியயும் போடலாம்னு நினைச்சிட்டாஙக்ளா?  நல்லாவே இருக்கமாட்டாங்க பாருங்க.. கும்பாபிஷேகத்துக்குப் போறப்ப  எல்லாரையும் வச்சிக் கேக்கறேன் பாரு.. என்றாள்.

                       மகளைத் தடுத்துப்பேசினாள் தனலெட்சுமி.

                      ஒண்ணுவேண்டாம். எல்லாம் அவருக்குத் தெரியும்.

                      தனிமையில் கிடந்து திண்ணையில் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தாள். அழுகையை நிறுத்தினாள்.


                                                                                                      (ஜால்ரா ஒலிக்கும்)

                       

                        

Friday, June 28, 2013

கொஞ்சம் ஹைக்கூ....அப்புறம் ஒரு சிறுகதை




               
         
             
                0000

                மீந்திருக்கட்டும்
                எலிப்பொறி வேண்டாம்
                சோறும் அதன் வாழ்க்கையும்...

                0000

                கலைகின்றன
                மேகங்களும் மோகங்களும்
                அடர் இரவு..

                0000

                 பழம் விற்கிறாள்
                 பல்லாண்டுகளாய்
                 கனியாதிருக்கிறது வாழ்க்கை...

                 0000

                 கவனிப்பற்ற நிராகரிப்பில்
                 எரிந்து அடங்குகிறது மெழுகுவர்த்தி
                 யேசு முன்பு,,

                 0000

                  பக்தி வெள்ளம்
                  கரையுடைக்கிறது
                  நதியும் விதியும்

                 0000

                                                                    கௌரி (சிறுகதை)

                                               
                                     மூலையில் இருந்தன மண்ணெண்ணெய் டின்னும் ஒரு தீப்பெட்டியும்.
                                      அதை உற்றுப் பார்த்தாள் கௌரி.

                                     அதுபோதும் தன்னை எரிப்பதற்கும் உயிர் போவதற்கும்,

                                     உடம்பு எரியும்போது வலிக்கும். தாங்க முடியாத வலியிருக்கும். அதைவிட மனத்தில் இருக்கிறது.

                                     எல்லாம் தெரிந்துதான் பெண் பார்க்க வந்தார்கள்.
பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள்.

                                     பிடிக்கவில்லை என்பதற்காக சாக முடிவெடுக்கவில்லை.

                                      அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசி அதைக் காரணம் சொல்லி பேசிவிட்டுப்போகிறார்கள்.

                                      அப்பர் என்கிற ஒரு மிருகம் இருந்தும் கெடுத்தது, அம்மாவை உதறிவிட்டுப் போயும் கெடுக்கிறது.

                                      எப்படி எதுவுமில்லாமல் இப்படி பெண்ணை வளர்த்திருக்கமுடியும்?

                                      இவளின்அம்மா சரியில்லை என்றுதானே கணவன் விட்டுவிட்டுப்போனான்.

                                     உண்மை அதுவல்ல.

                                     அவனுக்கிருந்த பல பெண்களின் உறவால்கூட அம்மா விலகவில்லை. ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு வாய் குடிக்கும் அம்மாவைப் போகச்சொன்னான் பதிலாக.

                                      அன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாகப்போகிறோம் நானும் என் பெண்ணும் என்று மிரட்ட ஓடிபபோனான். அதை சாக்காக வைத்துக்கொண்டு எண்ணெய் உடலோடு மகளோடு ஓடிவந்தாள் இந்த உலகில் வாழ.

                                        இதுதான் உண்மை.

                                        எதுவுமற்றவள் உண்மை எப்போதும் ஏற்றம் பெறுவதில்லை. அது நம்பப்படுவதுமில்லை.

                                        தன்னை உருக்கி எரியும் மெழுகுவர்த்திபோல அம்மா கௌரியை வளர்த்திருக்கிறாள்.

                                        ஆனால் விதி துரத்துகிறது.

                                        சொற்களால் துரத்துகிறது.

                                        அதில் நெருப்பைத் தடவியபடி துரத்துகிறது.

                                       என்ன செய்வாள் பாவம்.

                                        ஆகவேதான் கௌரி இந்த முடிவை எடுத்தாள்.

                                        நெடுநேரம் யோசித்தாள்.

                                        முன்புபோல் இல்லை. இப்போது வரிசை எண் கொடுத்து டோக்கன் கொடுத்திருக்கிறார்கள்.

                                         அந்த டோக்கன்படிதான் மண்ணெண்ணெய் தருகிறார்கள்.
                               
                                         காலையில் வெறும் வயிற்றில் பழையசோற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டுப்போய் மாலையில்தான் இந்த மண்ணெண்ணெய் வாங்கிவருகிறாள்.

                                      இதை வைத்துதான்  விறகடுப்பில் எல்லாம் முடியும.

                                      தான் ஊற்றிக்கொண்டு எரிந்துவிட்டால் அம்மா பட்டினிதான் கிடப்பாள்.

                                       செத்துப்போன என்னை நினைப்பாளா? தன்னை நினைப்பாளா? எதுவுமே தெரியாமல் துடிக்கும் தன் வயிற்றை நினைப்பாளா?

                                      யோசித்தாள்,

                                      சரி அம்மா இன்றைக்கு சமைக்கட்டும். வயிறு நிரம்பச் சாப்பிடட்டும். மண்ணெண்ணெய் மிச்சமிருந்தால் சாவது பற்றி யோசிக்கலாம்.

                                      அவமானம்தான்.

                                     அம்மா படாத அவமானமா?

                                     போதும். அவளின் துன்பம் தணியவேண்டும்.

                                     சரியென்று  யோசித்து நாளை சாகலாம் என்று முடிவெடுத்தாள் கௌரி.

                                     அரசு தன்னையறியாமல் ஏழை மக்களுக்கு செய்கிற உதவியிது.
               


                 
               
                

Sunday, June 23, 2013

ஜால்ரா குறுந்தொடர்,,,,,5






                             கோயில் பிரகாரத்தில் ஜமக்காளம் விரித்திருந்தார்கள்.

                             பெரும்பாலும் ஆண்கள். நாலைந்து பெண்கள் நடுத்தரவயதில் உட்கார்ந்திருந்தார்கள்.

                             வேணுகோபால்தான் பேச்சைத் தொடங்கி வைத்தார்.

                             கும்பாபிஷேகம் நடத்தணும். எதிர்பார்த்தபடி கலெக்ஷன் வரலே. ரொம்ப வருஷமாச்சு.. தெருவுலேயும் நாலைந்து இழவு விழுந்துடிச்சி. சீக்கிரம் நடத்திடறதுதான் நல்லது. என்ன பண்ணலாம் அவஙக் அவங்க யோசனையை சொல்லுங்க..

                              எங்க பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க தந்திடறோம்..

                              இது என்ன சொத்தா. பங்குபோட்டு பராமரிக்கிறது. இது கடவுள் காரியம். ஆளுக்கு ஒரு செலவை ஏத்துக்கிட்டா மெயின் செலவு சமாளிச்சுடலாம்.. கும்பாபிஷேகச் செலவுக்கு மத்த தெருவுக்கு வசூலுக்குப் போவலாம்..
                               அதையும் யாருக்கு எதுன்னு சொல்லிடுங்க.

                               ஏங்க இது என்னங்க நான் சொல்றது. அவங்க அவங்க வசதியைப் பொறுத்தது. அதுக்கேத்தபடி ஏத்துக்கங்க.

                               உள்ளே தளம் போட்டு டைல்ஸ் போடணும். வெளிச்சுவரு காரை பேந்துபோய் கெடக்கு.. அதை சீர்பண்ணி டைல்ஸ் ஒட்டணும்.. பெயிண்ட் செலவு இருக்கு. கோபுரத்துல போனவந்தத சீர்பண்ணனும்.. விளக்கு இருக்கு. எதஎதது யாருக்கு ஒத்துவருமோ செஞ்சுக்கலாம்.

                                 பூசை சாமான்கள்ல பலது குறையுது,,

                                 என்ன என்ன கொறையுது?

                                 துர்வாக்கால் இல்ல... சூடம் ஏத்துறது இல்லே... சின்ன சின்ன பித்தளை தட்டுங்க கெடந்துச்சு,, இப்படி பல கொறையுது,,

                                 சாமி சிலையே பல கொறையுது,, வேணுகோபால் பேசினார்.

                                 என்ன சாமி சிலைங்க இருந்துச்சி சொல்லுங்க... என்றார் தாமோதரன்.
                                 எனக்கு விவரம் தெரிஞ்சு இருந்த சின்ன சிலைங்க பல காணும். எங்க தாத்தாவுக்கு அப்பா வாங்கி வச்சது.. அதுல ஒண்ணே ஒண்ணு சம்பநத்ரோடது,, அதக் காப்பாத்தி வீட்டுல வச்சிட்டுப்போனாரு எங்கப்பாரு..

                                 அத ஏன் உங்க வீட்டுல வச்சிருக்கீங்க?
                                 கோயில்ல பாதுகாப்பு இல்லன்னுதான்.. ரெண்டு தடவை கோயில் கேட்ட ஒடச்சிருக்காங்க.. அதனால எங்கப்பா வீட்டுல கொண்டு வந்து வச்சிட்டாரு... முக்கிமான விஷேசமான  நாளுஙக்ல கோயிலுக்கு எடுத்திட்டு வருவாரு...

                                    நல்ல கேட் ஸ்ட்ராங்கா போட்டு நல்ல பூட்டுப் போட்டுடுவோம்..
                                    தாராளமா செய்யுங்க.. ஆனா அது ஐம்பொன் சிலை,,  அதான் தயக்கமா இருக்கு..
                                    எல்லா சிலையும் ஐம்பொன்னு சிலைதான்..
                                    அதுலதான் சந்தேகமாக இருக்கு.. அத சரிபார்க்கணும்..
                                    என்ன அர்த்தத்துலே பேசறிங்க?
                                    எந்த அர்த்தமும் இல்ல,, இங்க இருந்த பல சாமர்னுங்க..சின்ன சின்னதா ஐம்பொன்னு காலப்போக்குல போயிடிச்சி...
                                    எப்ப போச்சு?
                                    சன்னமாப் போயிடிச்சி..
                                    நாங்க அஞ்சு வருஷம் பாத்திருக்கோம்.. அப்ப என்ன இருந்துச்சோ அது அப்படியே இருக்கு,,, என்றார் தாமோதரன்.
                                    அததான் சரிபார்க்கணும்னு சொல்றேன்.
                                     என்ன சநதேகப்படறியா நீ? எப்பேர்ப்பட்ட குடும்பம் என்னோடது தெரியுமா? தாமோதரன் ஆத்திரப்பட்டார்.
                                     சந்தேகம் இல்ல. ஆனா உண்மை தெரியணும் எல்லோருக்கும்.
                                     என்ன வேணுகோபால் பொத்தாம் பொதுவுல இப்படி குற்றம் சொல்றீங்க?
                                   ஒண்ணு சொல்றேன் கேளுங்க.. இதுவரைக்கும் ஆளுங்க இங்கவந்துதான் இந்த சிலைங்களுக்கு பாலிஷ் போடறது நடந்திருக்கு. அது எங்கப்பா இருக்கறவரைக்கு. பாலிஷ் போடறப்ப தெருக்காரங்க நாலைஞ்சு பேரு சாட்சியிருப்பாங்க.. எங்க பொறுப்பு மாறினதும் சிலைங்க எல்லாம்  மூலவரத் தவிர மத்தது  பாலிஷ் போட வெளியே போச்சு.. திரும்பிவரும்போது அது எப்படி இருந்துச்சின்னு தெரியாதுல்ல..
                                     செருப்பால அடிப்பேன் நாயே.. திமிரா.. என்குடும்பம் திருட்டுக் குடும்பம்னு சொல்றியா.. நீங்க டிரஸ்ட் பார்த்த யோக்கியதைதான் ஊருக்கே தெரியுமே? அதனால எங்கப்பா சண்ட போட்டு டிரஸ்டிய மாத்தி தான் பார்த்தாரு..

                                    ஒழுங்கா பேசுடா நாயே,, நான் அடிச்சேபுடுவேன்,,

                                    வேணுகோபாலும் தாமோதரனும் நேருக்கு நேர் எழுந்து ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தார்கள்.
 
                                     என்னப்பா இது கோயிலா? என்ன? நாங்க எதுக்கு இங்க இருக்கோம்? பழச விடுங்கப்பா.. சாமி சொத்த யார் தின்னிருந்தாலும் அத சாமி பாத்துக்கும் ஆக வேண்டியத பாருங்க..
     
                                       இவ வீட்டுலே வசசிருக்கிற சிலை ஐம்பொன்னுன்னு எப்படி நம்பறது? தாமோதரன் கேட்டார்.

                                      அது எங்க முப்பாட்டன் செஞ்சது.. யார வேணாலும் அழைச்சிட்டு வந்து பரிசோதிச்சுக்கலாம்.. இருங்க வரேன்.. என்றபடி எழுந்துபோய் இரண்டுபேராய் அந்த ஞானசம்பந்தர் சிலையைக் கொண்டு வந்து கோயில் வைத்தார்.

                                 என் பாரம் கொறஞச்து.. இனி இந்த சிலை ஒங்க பொறுப்பு.. என்ன வேணாலும் பண்ணிக்கங்க.. சோதிச்சும் பாத்துக்கங்க...

                                  சிலை கையிலே இருந்துச்சே அந்த ஜால்ரா என்ன ஆச்சு? அதுவும் ஐம்பொன்னுதான்..

                                    அது காணாமப் போனதாலதான் எங்கப்பா சிலையும் போயிடும்னு பயந்து வீட்டுக்குத் துர்க்கிட்டு வந்துட்டாரு.

                                    எனக்குத் தெரிஞ்சு தினமும் கோயிலை கூட்டிப் பெருக்கறது அந்த தனம்தான்.. ஜால்ரா அப்பத்தர்ன் காணாமப்போனது..

                                     அடப்பாவி அந்த பொம்பள அப்பாவி.. அதுமேல பழிய போடாத,,,
                                     ஏன் அத ஏமாத்தி கொறச்ச விலைக்கு  வீட்டை வாங்கிட்டியே அதனால சப்ப கட்டுறியா?

                                     நான் ஏமாத்தி வாங்கல்லே.. இந்த வலம்புரி விநாயகருக்குத் தெரியும்.. அதுவா மருமவனுக்கு விபத்துன்னு.. வித்துட்டு வைத்தியம் பார்க்கப்போறேன்னிச்சு.. அதான் வாங்கி உதவினேன்.

                                      அய்யய்யோ விடுங்கப்பா.. உங்க பஞ்சாயத்துப் பெரிசா இருக்கு.. எது நடந்தாலும் விடுங்க.. இனி ஆகவேண்டியத்ப் பாருங்க.. ஆளுக்கு ஒரு பொறுப்ப எடுங்க.. இந்த முதக் கூட்டமே ஒண்ணுமில்லேன்னா ஒரு காரியமும் பார்க்கமுடியாது.

                                      நான் கடைசிவரைக்கும் ஆகிற சிமெண்ட் செலவு என்னோடது.
                                      நான் டைல்ஸ் வாங்கிக் கொடுத்துடறேன்.

                                      விளக்குங்க.. தண்ணி போர் செலவு என்னோடது..

                                      தட்டுமுட்டுப் பித்தளை சாமான் நான் வாங்கித் தநதுடறேன்.

                                      மத்த மத்த காரியத்துக்கு ஐயரே,, பட்டியல் போடுங்க.. தெருத்தெருவா வசூலுக்குப் போகலாம்.. தினமும் நாலு பேராச்சும் போவணும்..

                                      அதுக்கென்ன போகலாம்.

                                      சரி ஐயரே,, தீபாராதனைக் காமிங்க.. கூட்டத்த இத்தோட முடிச்சுக்கலாம்.. அடுத்தக் கூட்டத்தில பாத்துக்கலாம்..

                                   எல்லோரும் எழுந்தார்கள்.

                                   வேணுகோபால் தாமோதரனை முறைத்தபடியே எழுந்து நின்றார்.

                                   கோயிலுக்கு எதிரே தனலெட்சுமியின் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்தார். ஏனோ மனசுக்கு வருத்தமாய்  வந்தது.

                                                                                                        (ஜால்ரா ஒலிக்கும்)

                                       
                                             





Saturday, June 22, 2013

முறையும் மொக்கையனும்





              உயிர்விட்ட மறுகணத்தில்
              வாசலில் நிற்பார் மொக்கையன்
              என்ன வயதிருக்கும் என்று
              ஊகம் பண்ணமுடியாத தோற்றம்
              அப்பாவின் கையைப் பிடித்து
              நடந்தவேளையில் கொஞ்சியபோது
              பார்த்த உருவம் இன்று என்பிள்ளை
              என் கைவிரல்களைப் பற்றி
              நடக்கையில் கொஞ்சும்போது மாறாமல்
              இருக்கிறது.. மார்க்கண்டேய வடிவமா?

              உயிர்போனவரை பாடையில் ஏற்றும்வரை
              எல்லாக் காரியத்தையும் செய்வார்
              அதற்கிடையில் காட்டிற்கு வேண்டிய
              வராட்டி முதலிய சாமர்ன்கள் சரியாகப்
              போய்விட்டதா என்பதையும் சரிபார்த்துக்
              கொள்வார்...
              இடுப்பில் ஏறிய வேட்டி
              தோளில் துவண்டு பின் தலையில்
              முண்டாசாய் ஏறிய சிவப்பு ஈரலைத்துண்டு,,
              ஒவ்வொரு காரியத்திற்கும் ஒலியெழுப்பிக்
              கொண்டே செய்யச்சொல்வார்...

              ஒருவழியாய் பாடையேறிப் பயணம்
               பாதையில் முன்  சைக்கிளில் கையில்
               பானையுடன் ஏறிப்போவார்
               காட்டில் காரியம் பார்க்க,,,

               யார் வீட்டில் எழவென்றாலும் மொக்கையன்
              இல்லாமல் எதுவும் நடக்காது
              அவரின் ஆளுகைக்குட்பட்ட தெருக்களில்
              மொக்கையன்தான் முறைவைத்துக் காரியங்கள்
              நடக்கும் கட்டையிலே போனது கட்டையிலே
              வேகும்..
              கடைசிவரை இருந்து
              வாக்கரிசிக்குப்போட்ட
              காசுகள் முடிந்து..பின் கூலி வாங்கிப்போவார்
              மறுநாள் பால்தெளியலுக்கு வந்துவிடுங்கள்
              என்ற உத்திரவிட்டு,,,

              முறையேதும் தப்பாமல் மொக்கையன்
              முறைசெய்யும் முறை ஊரே பிரசித்தம்..

              காலையில் வந்த அறிவிப்பு சொன்னது
              மொக்கையன் இறந்துபோய்விட்டதாக,,,
              எழுபத்தைந்து தாண்டி எண்பதிருக்கலாம்..
              போய்ட்டான்யா மொக்கையன்.. போச்சு
              எல்லாம் என்றார்கள்...

              வராட்டிமேல் மொக்கையன் உடல்
             அடுக்கி அதன்மேல் விறகடுக்கி
              தீ வைக்கும்வரை எதுவுமே முறையாக
              நடக்கவில்லை... யாருக்கும் தெரியவில்லை..
             ஆளுக்கு ஆள் நாட்டாண்மை நடந்தது..
             அதனால்தான் மொக்கையன் கடைசிவரை
             பேசாமல் கோபத்தில் வெந்தாரோ...?
             சாவதுகூட முறையோடு சாகவேண்டும்
              என்று மொக்கையன் சொல்லாமல் சொன்னதை
              யார் இனி கேட்டு செய்வார் முறையாக....

             0000000


              குடியிருந்து
              வேறு வீடு பார்த்துப்போன
              வாடகை வீட்டின்
              திண்ணையில் கிடக்கிறது
              சம்மதம் என்று
              எழுதப்பட்ட
              அஞ்சலட்டை ஒன்று
              காற்றில் அசைந்தபடி
              எங்கும் போகலாம்
              என்கிற அலைப்புடன்...

              0000000000             

Thursday, June 20, 2013

சொல்லிக்கொள்ள....



0000

முருகேசன் அம்மா 
அவன் பிறந்தவுடன்
இறந்துபோனாளாம்...

தனலெட்சுமியின் 
அம்மா அம்மை வந்து
இறந்துபோனாளாம்...

மாரியின் அம்மா
வறுமையில் துர்க்குப்போட்டு
இறந்துபோனாளாம்..

விசாலாட்சியின் அம்மா
ஆடிப்பெருக்கில் ஆற்றோடு
போய் இறந்துபோனாளாம்...

கோவிந்து அம்மா
லாரியில் அடிபட்டு
இறந்துபோனாளாம்..

இது  எதுவுமேயில்லாமல்
என்னோட அம்மா
யாரோடோ ஓடிப்போனாளாம்
சொல்லிக்கொள்ள எதுவுமற்ற
என் வாழ்க்கையில் சொல்லிக்
கொள்ள இருக்கட்டுமென்று
போலிருக்கிறது....

0000