Sunday, October 4, 2015

பாவையர்மலர்  ......செப்டம்பர்  2015 இதழில் வந்த என் சிறுகதை...
///////////////////////////////////////////////////////////////////////

                                  உனக்காகக் காத்திருப்பேன்

..
                                       ஹரணி


          கிருபாகரன் அங்கு போனபோது தண்ணி எடுக்கப் போயிருந்தார்கள். கூட்டமிருந்த்து. உறுமிமேளம் கொட்டிக்கொண்டிருந்தவர்கள் உச்சத்தில் இருந்தார்கள். அழுகைசத்தமும் அதிகரித்துக்கிடந்தது. நல்ல வெயிலில் வேர்த்துக்கொட்டினாலும் பேருக்குப் போட்டதுபோலிருந்த பந்தலில் கிடந்த ஓட்டைகள் வழி இறங்கி அழுபவர்களின்மேல சல்லடையை வரைந்திருந்த்து வெயில். நாற்காலிகள் கொஞ்சம் காலியாக்க் கிடந்தன. உட்காருவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று அருகே போனான். கையிலிருந்து மாலையைப் போட்டான். மாலையைப் போடுவதற்கு முன் அதிலிருந்து சில ரோஜா இதழ்கள் உடம்பின்மேல் விழுந்தன. மாலையைப் போட்டுவிட்டு சிறிதுநேரம் அங்கே நின்றான். முகம் மாறாமல் இருந்தது. மருத்துவமனையில் உறங்கிக்கிடக்கும் நோயாளியைப்போலத்தான் உறங்கிக்கிடந்தாள். வழக்கம்போல நெற்றியில் சின்னதான கருப்புப்பொட்டு. அவளுக்குக் கருப்புப்பொட்டுதான் எப்பவும் பிடிக்கும். அதுவும் பயித்தம் பருப்புப்போல சின்னதாய்.
            இறந்துபோய்விட்டாள் ஈசுவரி என்பதை மனம் நம்ப மறுத்த்து. கடைசியாக அவளைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இருபது வருடங்களில் அவளைப் பற்றிய சிறு தூறல்கூட மனத்தில் விழவில்லை ஈரமாய். என்றாலும் ஓரிருமுறைகள் எதற்காகவோ அவளைப் பற்றிய நினைவு வந்த்து கிருபாகரனுக்கு. முதன்முதல வேலை கிடைத்து பிறந்த ஊரைவிட்டு வெளியூர் வந்து விடுதேடி அலைந்து கிடைத்த தெருவில்தான் ஈசுவரியும் பூர்விகமாக்க் குடியிருந்தாள்.
              வேலைக்குப் போகுமபோதெல்லாம் வாசல் படியில் உட்கார்ந்து எதையேனும் படித்துக்கொண்டிருப்பாள் ஈசுவரி. முதலில் எந்த விளைவும் நிகழ்ந்துவிடவில்லை. எதேச்சையாக ஒருமுறை அவள் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்கப்போனபோது அவள் வீட்டருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்த்தும் அவள் வீட்டில் இருநதுதான் பந்தலில் துக்கம் விசாரிக்க வந்த அனைவருக்கும காபி போட்டுக் கொடுத்தார்கள். ஈசுவரிதான் முதன்முதலில் கிருபாகரனுக்குக் காபி நீட்டினாள்.
               மன்னிக்கணும் நான் காபி சாப்பிடறதுல்லே. பழக்கமில்லை. டீதான்.
            சரி என்று போய்விட்டாள் ஈசுவரி. சற்றுநேரத்தில் டீ போட்டு எடுத்துவர, கிருபா கேட்டான்
             எதற்கு இத்தனை சிரம்ம் உங்களுக்கு?
             எங்களுக்கு என்ன சிரம்ம்? சாவு வீட்டுக்கு வந்திருக்கவங்களுக்கு ஏதாச்சும் கொடுக்கணும்னு சொல்லுவாங்க... சாவு வீடா இருந்தாலும் பிடிக்காத்த எப்படி ஏத்துக்கமுடியும்? அதான் காபி பிடிக்கலேன்னதும் டீ போட்டு எடுத்திட்டு வந்தேன்.
             இப்படித்தான் பழக்கமானது.
             இருவருக்கும் உள்ள படிப்புப் பழக்கம் கிளை நூலகத்திலும், புத்தக்க் கண்காட்சியிலும் நிகழ்ந்த சந்திப்புக்களும் ஒருவரையொருவர் காதலில் தள்ளியது.
            அதுவரை எதார்த்தமாக, இயல்பாக இருந்தவள் காதலுக்குப் பின்னர் பயம் கண்களில் தெரிந்தது. எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினையாயிடும். இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க.. ஆனாலும் மனசு உங்கள விடாம துரத்துது என்றாள்.


              சந்திப்புக்கள் குறைவாக நிகழ்ந்தாலும் மனம் தரையில் ஒட்டிய தாரைப் போல ஒட்டிக்கொண்டது.
              தவிக்கத்தொடங்கியது உள்ளம்.
             எல்லாத் தருணங்களிலும் ஈசுவரி என்னென்னவோ செய்தாள்.
             நாம கல்யாணமே பண்ணிக்கமுடியாதா? என்று கேட்டான் கிருபாகரன்.
             வாய்ப்பில்லை கிருபா.. எனக்கு அந்த துணிச்சலும் இல்லை. எங்க வீட்டுச் சனங்க இரக்கமில்லாதவங்க.. எதுவேணாலும் செஞ்சுடுவாங்க.. இப்படியே உங்கள பார்க்கறது இல்லாமப் போயிடும்.. அத என்னால தாங்கமுடியாது.. சொல்லிவிட்டு அழுதாள் ஈசுவரி.
                அவள் சொன்னதபோலவே ஆயிற்று.
                இரண்டாண்டுகள் உணர்வுப்பூர்வமாக கழிந்த ஆண்டுகள். அவளும் பட்டப்படிப்பை முடித்திருந்தாள்.
               கிருபாகரன் பதவி உயர்வுக்காக எழுதிய தேர்வில் வென்றுவிட பதவிஉயர்வும் மாறுதலும் வந்த்து. ஆனால் விருப்பத் தேர்வு என்று சலுகை அளித்திருந்தார்கள்.
               மாறுதல் வேண்டாமென்று எழுதிக்கொடுத்தான்.
               ஈசுவரிக்கு போன உயிர் திரும்பி வந்த்துபோல மகிழ்ந்தாள்.
               ஆனாலும் யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொண்டார்கள். கிருபாகரன் கேட்டான் எனக்குப் பயமில்லை. உனக்கு விருப்பம்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.
               என்னால முடியாது.. என்று மறுத்துவிட்டாள். பிடிச்சிருக்கு ஆனா கல்யாணம் எங்கவீட்டு சம்மத்த்தோட நடந்தா பரவாயில்லை. அப்படி நடக்க வாய்ப்பில்ல.. வேண்டாம்.. அவங்கள பகைச்சிட்டு எனக்கு கல்யாணம்வேண்டாம்..  தெளிவாக அதேசமயம் பயத்துடனும் பேசினாள் ஈசுவரி.
               இதற்கிடையில் தீவிரமாக கிருபாகரனுக்குப் பெண் பார்த்தார்கள். அதற்கு முன் ஈசுவரிக்குத் திருமணம் நடந்து முடிந்திருந்த்து.
              ஈசுவரிக்குத் திருமணம் நடந்து இரண்டாண்டுகள் கழித்து கிருபாகரனுக்கும் பெண் பார்த்து முடித்தார்கள்.
              யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கவில்லை. ஈசுவரி உட்பட.
              அவரவர்க்கான வாழ்வில் கரைந்து நின்றபோதுதான் ஒருநாள் ஈசுவரி போன் செய்தாள். நம்பர் மட்டும் வர கிருபாகரன் போனை எடுத்தான்.
                யாரு வேணும்? என்றான்,
                நான்தான் ஈசுவரி பேசறேன்.
                எந்த ஈசுவரி?
                ஈசுவரிங்க.. கிருபா தானே...
                ஆமாம்.. சொல்லுங்க.
                ஈசுவரி என்னைத் தெரியலியா?
                தெரியலியே.. எனக்கு இப்ப ஞாபக மறதியாயிடிச்சி.. எந்த ஈசுவரி?
                பல சம்பவங்களைச் சொன்னாள்.
                எதுவும் ஞாபகம் இல்லங்க.. ஈசுவரி.. நீங்க யாருன்னு தெரியலியே..
நினைவுக்கு வரமாட்டேங்குது.. அது போகட்டும் உங்களுக்கு என்னவேண்டும்?
                ஒண்ணும் வேண்டாங்க... என்னை தெரியலியா? என்றாள் மறுபடியும்.
                ஆமாம் தெரியல... நாலஞ்சு ஈசுவரிங்க பேரு என்னோட செல்லுல இருக்கு.. என்றான் வேண்டுமென்றே.
                அப்படியா.. சரி வச்சுடறேன் என்று வைத்துவிட்டாள்.
                வருத்தப்படுவாள் என்றாலும் முடிந்துபோன முன்கதையைக் கிளறக்கூடாது. அது தேவையில்லாத்து. வேண்டாம் என்று விலக்கியபின்னர் எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நமக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருக்கையில் அது கைநழுவிப்போகிறதென்றால் நிச்சயம் அது நமக்கில்லை என்பதுதான் உண்மை. எனவேதான் ஈசுவரியை பற்றிய நினைவையே அகற்றிக்கொள்ள விரும்பினான்.
                 நாலைந்து மாதங்களுக்கு பின்னர் ஈசுவரிக்கும் எனக்குமான பொதுவான நண்பர் அந்த செய்தியைச் சொன்னார். ஈசுவரிக்கு மார்புப் புற்றுநோய் என்று. ஆபரேசன் செய்திருப்பதாகவும் தகவல். வருத்தமாக இருந்த்து. ஒருவேளை அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்ளத்தான் போன் பேசியிருக்கவேண்டும். சரி இன்னொருமுறை பேசினால் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். நாமாகப் பேசினால் அது வேறுவிதமான பிரச்சனைகளைக் கிளப்பிவிடும் என்று.
           கடைசிவரை ஈசுவரி பேசவேயில்லை. ஆனாலும் அப்படியா என்று கைப்பேசியை அணைப்பதற்கு முன் பேசிய அந்தக் கடைசிச்சொல் நீங்காமல் மனத்தின் ஓரம் இறுகிக்கிடந்த்து.
              இனி அதுவும் இல்லை. முடிந்துவிட்டது. இனி ஈசுவரி எதுவும் பேசப்போவதில்லை. பேசியது போதும்... வாழ்ந்த்து போதும்.. என்று வாழ்வை முடித்துக் கொண்டாள் போலும்..
               மரணம் ஒன்றுதான் எல்லாவிதமான பிரச்சினைகளையும் சட்டென்று தீர்த்துவிடுகிறது.
              குளிப்பாட்டி எல்லாச் சடங்குகளையும் செய்து ஈசுவரியை பாடையில் ஏற்றினார்கள். ஊர்வலம் புறப்பட்டது. ஈசுவரியின் மகன் கொள்ளியைப் பிடித்திருந்தான். அவனுக்கருகில் ஈசுவரியின் கணவர் பழுப்பேறிய ஈர வேட்டியை இடுப்பில் கட்டியபடி போய்க்கொண்டிருந்தார்.
               ஊர்வலத்தில் பூக்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. தன்னிடத்தில் பேசிய சொற்களை ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டான் கிருபாகரன்.
               ஊர்வலத்தின் பின்னே அவளை நினைத்துக்கொண்டு நடந்தான்.
               சுடுகாட்டில் எல்லாச் சடங்குகளையும் முடித்தார்கள். திரும்பி நடந்தார்கள். கிருபாகரனும் பேருந்துநிலையம் நோக்கி நடக்கத் தொடஙகினான். சுடுகாட்டுப் பாதையை விடுத்து மெயின் ரோட்டுக்கு வந்தபோது யாரோ அழைக்கத் திரும்பிப் பார்த்தான்.
                  சார்.. நீங்க கிருபாகரன் தானே?
                  ஆமாம் சார்.
                  நான் ஈசுவரிக்கு நெருங்கிய உறவு சார்.. அவளுக்குப் பெரியப்பா பையன் நான்.. உங்கள பத்தி ஒரு தடவ சொல்லியிருக்கு.. நல்ல வாழ்க்கையை இழந்திட்டேன்னு புலம்பியிருக்கு. ஈசுவரிக்கு எதுவுமே சரியா அமையலே சார்..  அவளோட புருஷனுக்கு இன்னொரு தொடுப்பு இருக்கு சார்.. எப்பவாச்சும் வருவான் சார்.. பசிக்கு அலையற மிருகம் இரைய தேடுறமாதிரி.. கடைசியா இப்ப வந்திருக்கான்.. ஒரு புள்ளசார்.. அவன்தான் சார் ஆறுதல் அவளுக்கு.. பையன் கெட்டிக்காரன் சார்.. பொழச்சுக்குவான்.. இன்ஜியரிங் முடிச்சுட்டான்.. கஷ்டப்பட்டுப் படிக்க வச்சுட்டா ஈசுவரி... சரி இனி என்ன பேசி என்ன ஆவப்போவுது.. போய்ட்டா.. இந்தாங்க சார் இதை உங்க்கிட்ட கொடுக்கச் சொன்னா.. என்று பழுப்பேறிய ஒரு சிறு கவரைக் கொடுத்துவிட்டு.. நான் வரேன் சார் என்று போய்விட்டான்.
         போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ வைத்து தருகிற கவர் அது. ரொம்ப பழுப்பேறியிருந்தது. பிரித்து பார்த்தான் உள்ளே கசங்கிய ஒரு போட்டோ இருந்தது. அது கிருபாகரனுடைய பழைய போட்டோ.. கல்லூரியில் படித்தபோது எடுத்த போட்டோ. ஈசுவரி கேட்டுவாங்கியது நினைவுக்கு வந்தது. சுத்தமாக அந்தப் போட்டோவில் இருந்த முகத்திற்கும் இப்போது இருக்கும் கிருபாகரனின் முகத்திற்கம் நிறைய வேறுபாடுஇருந்த்து. அந்தப் போட்டோவைக் கொண்டு அது கிருபாகரன் என்று அடையாளம் காணமுடியாது. அந்தளவுக்கு முகம் மாறியிருந்தது.  
            உண்மைதான் முகம் மாறித்தான் இருக்கிறது உள்ளமும்கூட என்பதை நினைக்கக் கிருபாகரனுக்குள் ஓர் உறுத்தல் வந்த்து. ஒருமுறை பையிலிருந்து செல்போனை எடுத்துப் பார்த்துக்கொண்டு மறுபடியும் பையில் வைத்துக்கொண்டான்.


                   

Saturday, August 15, 2015

கொத்துச் சிரிப்போடு,,,



              இன்று கல்கியில் வெளிவந்துள்ள என் கவிதை


                                                      அம்மாவின்
                                                      கைப்பிடிகளை அகற்றி
                                                      மேலே விழுந்த
                                                      நீர்ப்போர்வையுடன்
                                                     வெற்றுடலோடும்
                                                      கொத்துச் சிரிப்போடும்

வீட்டின் மையத்தில் வந்து
நின்று உடலுலுக்கும்
தருணத்தில் மத்தாப்புகளாய்
சிதறிவிழும் நீர்த்துளிகளுடன்
ஆனந்தத் தாண்டவம்
நடத்தும் குழந்தை



உங்கள் வீட்டிலிருந்தால்
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதாய்ப் பொருள்...

(நன்றி. கல்கி. 23 ஆகஸ்ட் 2015)
         

Tuesday, July 28, 2015







பாரத தேசத்தின் பண்பாட்டு அடையாளம்
மாண்பமை மனிதாபிமானமிக்க மனிதர்
பிள்ளைகளின் மகிழ்ச்சியாய் விளங்கிய மேதை
எளிமையும்...இனிய புன்னகையும்..
இறுதிவரை தொண்டும் ஆற்றிய எம்மான்
காலத்தின் அழிக்கமுடியாத தடம்
விண்வெளி நாயகன்
வீறார்ந்த அறிவியல் விஞ்ஞானி
விருதுப் பறவைகள் பல தஞ்சமடைந்த வேடந்தாங்கல்
பல்கலைக்கழகங்கள் பல போட்டிப்போட்டுக்கொண்டு
முனைந்து முன்வந்து வழங்கிய முனைவர் பட்டங்கள்
எண்ணங்களை எழுச்சிமிகு பாரதத்தின் வல்லமையைப்
பெருக்க எழுதிய எண்ணற்ற புத்தகங்கள்
கடவுள் இந்தத் தேசத்திற்கு அனுப்பிய அறிவியல்
தூதுவன்...

உணர்வுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல்
உள்ளம் உடைந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது
நினைக்குந்தோறும் நெஞ்சம் வெடிக்கிறது
வேரிழந்த செடியாய் ஆனது பாரதம்
அறிவியலின்...அறவியலின்... தகப்பனை
பிள்ளைகள் நாம் இழந்துவிட்டோம்
எதனைக்கொண்டு ஈடுசெய்முடியாத பேரிழப்பாய்..
அய்யா... அப்துல் கலாம்...உங்களை இனி என்று
காண்போம்?....
000

வல்லமை மிக்க தேசம்
வலிமையான இளந்தலைமுறை
வளமான பலமான கனவுகள்
யாரும் எதனாலும் நெருங்கிவிடமுடியாத
அரணாகக் காக்கவேண்டும் பாரதத் தேசத்தை
என்றே
பல்வகையானும் காலம் முழுக்கச் சொல்லி
இப்போது
இறைவன் அழைக்க விடைபெற்றுக்கொண்டுவிட்டார்
அப்துல் கலாம்..
0000


அவரின் எண்ணங்களை
நாம் வரமென அவரவர் நெஞ்சில்
அணையாச் சுடராய் பொத்தி
அதன்படி பாரத தேசம் பயனுற
உழைக்கும் ஒவ்வொரு எழுச்சியிலும்
அப்துல் கலாம் என்கிற மாமனிதர்
உயிர்த்தெழுவார்... நிச்சயம்...சத்தியம்..
000


மரணம் எப்போதும் என்னை
அச்சுறுத்தியதில்லை
எல்லோருக்கும் வந்தால் போய்த்தானே
ஆகவேணடும் என்கிற மனஉறுதியுடன்
வாழ்ந்த மேதையே...
சாதலும் புதுவதன்று என்று கணியன்
பூங்குன்றன் உரைத்ததை உணர்வால்
உணர்த்தியவரே...
உங்களின் எண்ணங்களை நாங்கள்
போற்றிப் பாதுகாப்போம்..
000


விண்ணில் பகலில் சூரியனும்
இரவில் நிலவும் இந்தப் பூமியைக்
காப்பதுண்டு...
இந்த மானுட வானில் நீரே
சூரியனும் நிலவுமாய்
நின்றவரே... அப்துல் கலாம்
காலம் என்றைக்கும் கலைக்கமுடியாத
கனவே...காலமானாலும் பாரதத்தின்
காலமாய் ஆகி நின்றவரே...
போய்வாருங்க... மனமசைக்கிறோம்..
காலத்தை வென்ற கலாமே...
காலங்காலத்துக்கும் பாரத தேசம்
பனிக்க நினைத்திருக்கும் நெஞ்சங்களில்
நிறைய செதுக்கி வைத்திருக்கும்
உங்கள் கனவுகளில் இந்த தேசம்
இன்னொரு புதிய பிறப்பெடுக்கும்
நம்பிக்கையுடன்
மனமசைக்கிறோம்... சென்றுவாருங்கள்
ஐயா..
000

Monday, June 29, 2015

                                 நட்பில் தாய்மை...

            இடுக்கண் களைவதாம் நட்பு என்று வள்ளுவம் உரைக்கிறது. மிகச் சிறந்த நட்பை எல்லா இலக்கியங்களும் பேசியிருக்கின்றன.  இருப்பினும் அதியமானுக்கும் ஔவைக்கும் இருந்த நட்போடு எதனையும் ஒப்பிடமுடியாது என்றே தோனுகிறது.  இருவருக்கும் தொடங்கிய நட்பு முரண்பாட்டில்தான் தொடங்கியது பின் அதியமான் புரிந்துகொண்டதாலும் புலவர்களை மதிக்கும் மாண்பினாலும் நட்பாக மலர்ந்தது.
              ஔவையின் மீது கொண்ட  நட்பின் காரணமாக தன்னுடைய வாழ்நாளையே குறைத்துக்கொள்ள மனம் துணிந்த மாண்பை அவன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்தவன்.  ஔவையும் அவன் மீது கொண்ட  நட்பைப் பல பாடல்களில் உரைத்து மேன்மைப்படுத்துவதையும காணமுடிகிறது.
                                    ஆதல்  நின்னகத் தடக்கிச்
                                    சாதல் நீங்க எமக்கீந் தனையே
சாதல் (மரணம்) நீங்க எனக்குத் தந்த உன் மாண்பை என்னவென்று சொல்வேன் என்கிறார் ஔவை அதியமானின் உயர்ந்த பண்பை.
                        அவனுக்காகத் தூதுபோகிறார் தொண்டைமானிடம். அது வெகு சிறப்பான பாடல்.  இருவருக்குமான நட்பின் உச்சம் அதியமான் இறந்துபோக ஔவை பாடிய பின்வரும் பாடல்தான். உலகின் சிறந்த நட்பிற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.


                        சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
                        பெரியகட் பெறினே
                        யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
                        சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
                        பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
                        என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
                        அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே
                        நரந்தம் நாறும் தன்கையால்
                        புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
                        அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீ
                        இரப்போர் கையுளும் போகிப்
                        புரப்போர் புன்கண் பாவை சோர
                        அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
                        சென்றுவீழ்ந் தன்று அவன்
                        அருதிறத்து இயங்கிய வேலே
                        ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
                        இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
                        பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
                        சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
                        ஈயாது வீயும் உயிர்தவப் பலவே (புற.235)

            அதியமானுக்குக் கொஞ்சம் கள் கிடைத்தால் முதலில் எனக்கு அளித்துவிட்டுப் பின் எஞ்சியதைத் தான் உண்பான். நிறைய கள் கிடைத்தால் அப்பவும் அப்படியே செய்வான். அதுபோன்றே சிறிது சோறாக இருந்தாலும் பலருடன் சேர்ந்து உண்பான்.  சோறு அதிகமாக இருந்தாலும் அப்படியே பலருடன்தான் சேர்ந்து உண்பான்.  அது எல்லாம் போய்விட்டது.  எலும்புடன் நிறைய கறி சேர்ந்திருக்கும் கறியை (என்பொடு தடிபடு) எங்களுக்குத் தருவான். போர் என்றால் தான் மட்டும் சென்று துணிவாய் எதிர்கொள்வான். ஈயும் பண்புகொண்டவனாதலால் மட்டுமன்றி வருவோர்க்கு மலர் மாலையைச் சூட்டிசூட்டி அவன் கைகள் பூவாசத்துடன் இருக்கும். அந்தக் கையால் புலால் (கறி) நாற்றம் வீசும் என் தலையைத் தடவிக்கொடுப்பான். இப்போது எல்லாம் போய்விட்டது. அவன் இறந்துவிட்டான். அவன் மார்பில் தைத்த அம்பானது (அவனைக் கொண்ட மரணம்என்கிற அம்பு) முதலில் பாணரின்  மண்டை துளைத்தது, பின் அவனிடம் இரப்பவரின் கையைத் துளைத்தது,  கடைசியாக என்போன்ற புலவரின் நாக்கில் வந்து தைத்தது என அதியமான் இறந்துபோனதால் யார் யார் வாழ்வெலாம் அழிந்தது என்கிறார். எனவே இனிப் பாடுவோரும் இல்லை. பாடுவோர்க்கு வேண்டிய அருள்காட்டும் ஈகுநரும் (அதியமானும்) இல்லை.

                        இப்பாடலில் பூ வாசம் அடிக்கும் கையால் புலால் நாற்றம் அடிக்கும் தலையைத் தடவுதல் என்பதுதான் தாய்மைக்குரிய பண்பாகும். அதாவது அதியமான் தாயாகவும் ஔவை பிள்ளையாகவும் இருக்கின்ற நட்பின் மாண்பை இதைவிட யாரால் சொல்லமுடியும்?

                        இந்தப் பாடலில் இன்னொரு சிறப்புமிருக்கிறது. இதைத்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிட்டு இது இலக்கணம்  பிறழ்ந்த பாடல் அல்லது இலக்கண வரம்பை மீறிய பாடல் என்று குறிப்பிட்டு இவ்வாறு ஔவை பாடக்காரணம் ஔவைக்கு இலக்கணம் தெரியாதா என்பதல்ல பாடலுக்கு உணர்ச்சி முக்கியம் என்பதால் சீர்கள் மாறி மாறி வருகின்றன. எனவே புதுக்கவிதைக்கான வித்து சங்க இலக்கியக் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு பல்வகை சிறப்புடைய பாடல் இது.  அதியமானின் சிறந்த போர்த்திறன்,  மிகச்சிறந்த கொடைத்தன்மை,  ஔவையின் மாண்பு என இங்கு ஈவோரும் சரி பெறுவோரும் சரி சரியான தகுதியில் இருக்கும் பான்மையையும் இப்பாடல் சுட்டுகிறது. அனுபவியுங்கள்.

    




Friday, June 26, 2015




அடுத்தவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தொடங்குகிற 
அந்த தருணத்திலிருந்து நம்முடைய தவறுகளை
 மறைக்கத் தொடங்குகிறோம்.

000


ஆயிரம் அரசியல் இருக்கட்டும்
ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்
ஆனாலும் ஹெல்மெட் அணியுங்கள்
ஊனமுற்றாலும் உயிர்காக்கும்


0000


விடுமுறை நாளில்
மாடத்தில் முட்டையிட்டிருந்த
புறாவின் முட்டைகள் உடைந்துகிடந்தன
நான் அந்தப் பூனையைத் தேடுகிறேன்
கெட்டுப்போகாது என்று பிரிட்ஜில் வைத்த
கெட்டுப்போன பால்பாக்கெட்டை
எண்ணியபடியே
பாலும் கெட்டது முட்டையும் கெட்டது


000
Like · Comment · 

Wednesday, June 24, 2015

ஔவையின் நல்வழியிலிருந்து ஒரு பாடல்.



கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றுஎடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயின் சொல்.



பாடலின் பொருள்


படிக்காதவனாக இருந்தாலும் அவனிடத்தில் காசு இருந்தால் எல்லாரும் சென்று அவனை எதிர்கொள்வர். கொண்டாடுவர். காசில்லாதவன் என்னதான் படித்திருந்தாலும் அவனை மனைவியும் வெறுப்பாள், ஈன்ற தாயும் வேண்டாது மறுப்பாள் ஒருபோதும் செல்லாது அவன் வாய் சொல். செல்லாச் சொல்.


பாடலின் பொருளை எளிதில் புரிந்துகொள்ள சற்று விரிவாக்கி எழுதியிருக்கிறேன்.


என்றைக்குப் பாடிய பாடல் இது. இலக்கியம், மனிதநேயம், படைப்புக்கள், குழுக்கள், லட்சியம், சாதனை, நேர்மை...மனசாட்சி... ஒழுக்கம்.. போடுங்கள் குப்பையில் என்று சொல்லலாமா?
Like · 

Sunday, June 21, 2015

நிகழ்வுகள்....நிகழ்வுகள்...

நிகழ்வுகள்...
1, நேற்று நண்பர் கல்வெட்டியல் பேராசிரியர் சோ.கண்ணதாசன் அவர்கள் அலைபேசியில் அழைத்து செய்திசொன்னார். செய்தி இதுதான்.
அரசியல் காரணமாக தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்வழி பயிற்ற்ல் என்பது அருகிகொண்டிருக்கிறது. மொழிப்பாடமாக வேண்டுமானால் ஆங்கில்ம் மட்டுமல்ல எந்த மொழியும் இருக்கட்டும். அது பிரச்சனையில்லை. அடிப்ப்படையில் ம்ற்ற பாடங்களைக் கட்டாயம் தமிழ்மொழியில்தான் கற்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக கவலைகொண்ட தமிழறிஞர்கள் கூடிய நிகழ்வுதான் அது.
கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இந்நிகழ்விற்கு அடிப்ப்படை காரணம் கோவை பேரூர் ஆதினம். அவர்க்ள தொடங்கியுள்ள வளர்தமிழ மன்றத்தின் சார்பாக இயக்கம் போல இயங்கி தமிழகத்தின் ஒவ்வொரு மூலையில் தாய்மொழிக்காக அயராதுபாடுபட்டுவ்ரும் தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைந்து ஒன்றாகப் போராடி தமிழ்வழி பயிற்றலைக் கட்டாயமாக்க அரசினை வற்புறுததவேண்டும் என்பதுதான் நோக்கம். மூத்த ஆசிதினத்தில் அருளாசியுடன் இளையபட்டம் அருள்மிகு வேதாசலம் அடிகளார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி, கரூர், திருச்சி என்று தொடங்கி தஞ்சை வந்திருந்தார்கள். குறுகிய காலக் கூட்டம் என்றாலும் நோக்கம் மிக உயர்வானது பொறுப்பானது அவசியமானது என்கிற நிலையில் கிட்டத்தட்ட ஒரு வகுப்பறை முழுக்க தமிழார்வலர்கள் கூடியிருந்தார்கள்.
கூட்டத்தினை ஒருங்கிணைத்தவர் தமிழுக்காக கடைசி மூச்சுவரை செலவழித்து மறைந்த தமிழ்ப் புலமையாளர், பேரறிஞர் தெய்வத்திரு சொ.விருத்தாசலனார் அவர்களின் திருமகனார் திருமிகு பாரி அவர்கள்.
வரவேற்புரையை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் கணிதவியல் ஆசிரியர், வலைப்பூவில் தமிழுக்காகப் பல பதிவுகளை இட்டுவரும் கி.ஜெயக்குமார் அவர்கள்.
வளர்தமிழ மன்றத்தின் நோகக்ம் குறித்து திரு அப்பாவு அவர்கள் விளக்கிச்சொல்ல அதனைத் தொடர்ந்து இளையபட்டம் அவர்கள் விரிவாக வளர்தமிழ மன்றத்தின் அரிய இப்பணியை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திருமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை முன்மொழிய தொடர்ந்து அங்கு வந்திருந்தத ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்து இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதாக தங்கள் ஆலோசனைகளை முன் வைத்தார்கள். இறுதியில் பாரி அவர்கள் நன்றியுரைக்கக் கூட்டம் முடிந்தது.
வேண்டுகோள்
உலகின் எல்லா நாடுகளிலும் அடிப்படைக் கல்வி தொடங்கி விருப்பக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில்தான் பயின்று வருகிறார்கள். இச்சூழல் தமிழ்கத்தில் இல்லை. ஆயிரமாயிரம் குழுக்கள் இருந்தாலும் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல்போல பெருகிவருவது பெருஙகவலைக்குரியது. எனவே தமிழைக் கட்டாயமாகப் பயிற்றுமொழியாக்குவது என்பது காலத்தின் தேவையாகும். இருப்பினும் தமிழைப் போற்றுகிற பலரும் பல்வித அரசியலைக் கைக்கொண்டு அதனை பிழைப்புக்கருவியாகவே பயன்படுத்திவருகிறார்கள் என்பதும் கண்கூடு..
எனவே பேரூர் ஆதினம் எடுத்திருக்கும் இந்தமுயற்சி மிக முக்கியமானது. தமிழின் மீது அக்கறை கொண்ட யாரும் இதனை எவ்வாறு செய்ற்படுத்தினால் இது வெற்றிபெறும் என்பதறகான பயனான ஆலோசனைகளை முன்வைக்கலாம். அவற்றைப் பேரூர் ஆதினத்திற்கு எழுதியனுப்பலாம். தமிழைக் கற்கவேண்டும். தாய்மொழியில்தான் உலகறிவைப் பெறவேண்டும். உயரவேண்டும் என்கிற உணர்வுடன் நாம்எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
என்றாலும் இவற்றின் பின்னால் இருக்கக்கூடிய
பல சிக்கல்களும் இருக்கின்றன.
தமிழை உயிராக எண்ணிப் படித்தவனுக்குத் தமிழ்நாட்டில் மரியாதை இல்லை.
அவன் பிழைக்க எந்த ஒரு வேலையும் இல்லை.
தாய்மொழியில் படித்தால் நீ சாகமாட்டாய் உயிர்வாழ்வாய் என்கிற உத்திரவாததையடக்கிய நம்பிக்கை இல்லை.
தமிழ்ப் படித்தவர்கள் தமிழையே அறியாதவன் நடத்துகின்ற கல்விநிறுவன்த்தில் கைகட்டி சொற்ப சம்பளத்திற்கு வாழவேண்டிய அவலம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
அரசு பணியாளர் தேர்வு மையம் தவிர மற்றவற்றில் தாய்மொழியில் கலந்துகொண்டு தேர்வு எழுதமுடியாத இடர் நீண்டிருக்கிறது.
தமிழை மூச்சாக எண்ணுபவன் என்ன நினைப்பான். அவன் உள்ளம் எத்தயை இன்னல்களைத் தாங்கும்?
கடைத்தெரு பெயர்ப்பலகை தொடங்கி வெகுசன ஊடகம் வரை தாய்மொழி அக்கறை இல்லை. பிழைகள் மலிந்த செயற்பாடுகள் மனத்தை புண்படுத்துகின்றன.
இவையெல்லாம் நம்முன் இருக்கும் பிரச்சினைகள். தீர்க்க்ப்படவேண்டும் என்பதும் முக்கியமானது. அவசியமானது.
எனவே தாய்மொழியில் பயிற்றுவித்தல் என்பதை நாம் பலப்படுத்த பலப்படுத்த மேற்சொனன் பிரச்சினை சூரியன்கண்ட பனித்துளி போல விலகிவிடும்.
பேரூர் ஆதினத்தின் ஒப்பற்ற இந்த தமிழ்தொண்டிற்குக் கைகோர்க்க வாருங்கள்.
இதுகுறித்த் உங்கள் கருத்துக்களை பேராசிரியர் இளமுருகன், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருவருள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி, வெண்ணாற்றங்கரை அஞ்சல், தஞ்சாவூர் எனும் முகவரிக்கும் அனுப்பலாம். ஊர்கூடித்தான் தேரிழுக்கவேண்டும். தமிழ்த்தேர் இழுக்க வடம்பிடிக்க வாருங்கள் தமிழ்ச் சமூகமே.
இரண்டு
இன்று தந்தையர் தினம்.
என் அப்பாவை நினைக்கிறேன்.
சிறுவயது முதலே விளையாட்டாகக் கூட கைநீட்டாமல்... தம்பி என்றே கடைசிவரை அழைத்து.. எந்த ஒரு செயலையும் வளவளவென்று பேசாமல் ஒருமுறை சொல்லி.. இது நன்மையானது எடுத்துக்கொள் இது தீமையானது விட்டுவிடப் பழகு..என்று அறிவுறுத்தி... உணவுவேளை தவறாமல் உண்ணும் பழக்கத்தையும்.. எப்போது படுத்தாலும் அதிகாலை எழுந்துவிடு.. என்றும்.. எதனையும் தள்ளிப்போடாதே... நாலுபேர் பார்ப்பதற்காக ஒரு செயலைச் செய்யாதே.. மனசாட்சிப்படி உழை.. ஒழுக்கமும் நேர்மையும் உன் மரணம்வரை மாறாதிருக்கவேண்டும்.. கடுஞ்சொல் பேசாதே... யாராக இருந்தாலும் எடுத்தெறிந்துவிடவேண்டாம்.. எல்லோரையும் மதிக்கப் பேசு.. என்றெல்லாம் சொல்லிய பல்வேறு தருண்ங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
இவற்றிலெல்லாம் அப்பா வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.
மூன்று
சுகன்
சுந்தரசுகன்
சௌந்தர சுகன்..
எழுத்துப்போராளி... எழுத்தாய் வாழ்ந்தான்.. எழுத்தாய் மறைந்தான்..
இன்று அவனுக்கு நினைவேந்தல்... தஞ்சை பெசண்ட் அரங்கம்..மாலை 6 மணி
அவரவர் உள்ளத்திலிருந்ரு ஒரு துளி நீர் தாருங்கள் அவனின் ஆன்மாவிற்கு. போதும்.
நன்றி.

Friday, May 29, 2015

பத்தி வாசனை...


அந்தத் தெருவிலேயே
எங்கள் வீட்டில்தான் முதலில்
தொலைக்காட்சி பெட்டி வந்தது.

வெள்ளிக்கிழமைதோறும்
தெருவே ஒலிஒளியுமாக இருந்தது
ஓர் அரங்கத்தைப் போல
வருவோரை ஒழுங்குப்டுத்தி 
உட்காரவைத்து அப்பா மட்டும்
நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார்..

ஒரு பத்தியை ஏற்றி வைக்கச்
சொல்லுவார் பலரின் மூச்சுக்
காற்று ஒரே இடத்தில் என்று..
அம்மாகூட இதை அடக்கிய
பெருமையாகப் பேசித் திரிந்தாள்.

அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
தெருவில் இன்னும் மரியாதை கூடியது..

என் பிள்ளைகளும் அக்காவின்
பிள்ளைகளும் தெருப்பிள்ளைகளும்
என வீடே குழந்தைகளின்
தோட்டமாக இருக்க அப்பாவே 
எல்லாருக்குமான இசையாக இருந்தார்.

அப்பா இறந்துபோன பின்
ஒவ்வொன்றாய் காலையில் 
மாலையில் உதிரும் பூக்களாய்
உதிரத் தொடங்கிவிட்டன

இப்போது யாருமற்ற
வீட்டில் அம்மாவும் அவள்
தனிமையும்தான்..

எப்போதாவது யாரேனும் இருவர்
கூடினால்கூட அந்த வீட்டில்
ஏற்றாமல் வருகிறது
அப்பா ஏற்றிய பத்தி வாசனை.

0000

Thursday, May 28, 2015

உங்களுக்குண்டா?

உங்களுக்குண்டா?


                           1  சிலரை  நமக்குப் பிடிக்காது.  வேண்டாம்  என்று விலக்குவோம். ஆனால் முக்கியமான நேரத்தில் யாரை விலக்கினோமோ அவர்களிடத்துதான் உதவி கேட்டு நிற்கவேண்டிய சங்கடம் வரும்..

                                            உங்களுக்குண்டா?


                          2.   நமக்கு உற்ற உறவுகளில் யாரேனும் இறக்கும்போது திட்டமிட்டதுபோல அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல், வரமுடியாமல் போகிறது.

                                           உங்களுக்குண்டா?


                          3.    மனசு கேட்காமல் போய் அன்பு காட்டுவோம். உதவியும் செய்வோம்.  நம்முடைய பேச்சு அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கும்.  அலட்சியம் செய்வார்கள்.   அடுத்தமுறை என்ன ஆனாலும் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் மனசு கேட்காமல் மறுபடியும் அவமானத்திற்கு ஆளாவோம்.  அந்த துயரம் சொல்லமுடியாது.

                                              உங்களுக்குண்டா?


                            4.   பல முறை ஒன்றிற்காகப் போராடுவோம். கிடைக்காது. சரி இனி வேண்டாம் என்று விடும்போது அது எளிதாக மற்றவருக்குக் கிடைத்துவிடும். ஏன் இப்ப கேட்டிருந்தா கொடுத்திருப்போமே என்பார்கள். மனசு நொந்துபோகும்.

                                              உங்களுக்குண்டா?

                           



Saturday, May 16, 2015



                                         ஒரு கன்றுக்குட்டியின் வாழ்க்கை...


                      பிறந்தவுடன் தாயை இழந்துவிட்டது அந்த கன்றுக்குட்டி.

                     எனவே அது மிகுந்த துயரத்துடன் கடவுளை வேண்டி நின்றது.

               
   கடவுள் உடனே பிரசன்னமானார்.

                     என்ன வேண்டும் கன்றே? என்றார்.
             
                      ஏன் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள் என்றது.

                      நான் கொல்லவில்லை. அது உன்னோட தாயின் விதி.

                      சரி நான் எப்படி வாழ்வது? என்றது கன்றுக்குட்டி.

                     உடனே ஒரு புல்வெளியை உருவாக்கித் தந்தார்.  இது உன் வாழ்நாள் வரைக்கும் பசியைத் தீர்த்துவிடும் என்றார்.

                     தாகத்திற்கு என்றது கன்று.

                     உடனே ஒரு சிறிய சிற்றோடையை அழகாக ஓடச்செய்தார். பளிங்கு முகம் காட்டி அந்த சிற்றோடை ஓடியது. ஒருமுறை கன்று அதில் இறங்கி தன் முகம் பார்த்து திருப்தி கொண்டது.

                     வேறு ஏதேனும் ஆபத்து எனக்கு நேராதா? என்றது.

                     உடனே கடவுள் அந்த புல்வெளியைச் சுற்றி பலத்த வேலியை ஒன்று உருவாக்கினார்.
 
                    அந்த வேலிக்குள் மனம்போல சுற்றிசுற்றி மகிழ்ந்தது.

                    நான் போகலாமா என்றார் கடவுள்.

                   இடி, மழை வந்தால், வெயில் அடித்தால்  என்ன செய்வது என்றது கன்று.
                   உடனே அது ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகையை உருவாக்கினார். மூங்கிலால் அழகான கொட்டகை உருவானது.

                   உள்ளே ஒடிப்போய் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு வெளியே வந்தது கன்று.

                    இப்படி யோசித்து யோசித்து கன்று எல்லர்ம் கேட்கக் கடவுள் பொறுமையாகத் தந்துகொண்டேயிருந்தார்.
 
                      இரவாகிவிட்டது கடவுள் சென்று வரட்டுமா என்றார்.

                      சரி.. நான் கூப்பிடும்போது வரவேண்டும் என்றது கன்று.

                      அது முடியாது ஒருமுறைதான். இந்த முறைதான் எனவே இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டுவிடு என்றார் கடவுள்.

                          நெடுநேரம் யோசித்துவிட்டு கன்று சொன்னது... எனக்கு அம்மா இல்லை.. தனியா இருக்க பயமா இருக்கும்ல... எனக்கு விளையாட ஒரு பிரெண்ட்ட தா... என்றார்..

                           கடவுள் இன்னொரு கன்றைத் தந்தார்..

                            அந்தக் கன்று கடவுளிடம் இந்த கன்று கேட்டதையெல்லாம் கேட்கத்தொடங்கியது.

                                                                00000