Monday, July 13, 2020

குறுங்கதை 6

                        சார் மன்னிச்சிடுங்க..
                                                ஹரணி

            மதியம் 2 மணி தூக்கம் கண்களைத் தடவிக் கெஞ்சியது. பொதுவாகவே மதியத்தில் தூங்குதல் கெடுதல் என்று சொல்லியிருக்கிறார்கள்.  இருந்தாலும் இந்தக் கொரோனாக் காலத்தில் வேறு வழியில்லை. வேலையுமில்லை. நன்றாகச் சாப்பிடுவதும் டிவி பார்ப்பதும் தூங்குவதுமாகவே பழகிவிட்டது. இனி இதை மாற்றுவது கடினம்தான்.

              தினமும் ஆட்டோவில் அறிவிப்பு செய்துபோகிறார்கள் நகராட்சியினர் அன்புகூர்ந்து வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். குறிப்பாக காய்கறிக் கடைகள் கறிக்கடைகள் மீன்கடைகள் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் என்று. ருசி கண்ட நாக்கு ஞாயிற்றுக் கிழமை என்று வந்துவிட்டால் கறி சாப்பிடாவிட்டால் தலை வெடித்துவிடும். இப்போது ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அசைவம் சாப்பிடுவது என்று முடிவெடுத்தாயிற்று.

         யாரு கட்டுப்படுத்தினாலும் நாக்குக் கட்டுப்படமாட்டேங்குது.. வள்ளுவரும் சொல்லிப்பார்த்துவிட்டார்.. நாவை அடக்கு என்று.. என்ன பண்ணுவது கேட்கமாட்டேங்குது..

             இன்றைக்கு மட்டன் பிரியாணி.. சிக்கன் கிரேவி  முட்டை இத்யாதிகள்…

             ஒரு கட்டு கட்டியாச்சு. தூக்கம் கண்களைச் செருகியது. சரி என்று ஃபேனைப் போட்டு தலையணையை எடுத்து வைக்கும்போது வாசலில் பெண் குரல் கேட்டது.. சார்.. சார்.. யாரு வீட்டுல இருக்கீங்க?

                கோபம் வந்தது. எல்லோரும்தான் வீட்டில் இருக்கிறோம்.. கோபத்தையும் பதிலையும் அடக்கி வாசலுக்கு வந்தேன்.

               ஒரு இளம்பெண் சற்றே குண்டானவள்.

               என்ன சொல்லுங்க?

               வீட்டுல எத்தன பேருசார்?

               நாலு பேரு. பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

               ஆண் எத்தனை? பெண் எத்தனை சார்?

               ஆண் இரண்டு. பெண் இரண்டு

               சின்ன புள்ளங்க இருக்காங்களா சார்.

              இல்லை.

              யாராச்சும் சமீபத்தில் வெளியூர்லேர்ந்து வந்திருக்காங்களா சார்.

             இல்லை.

             அறுவது வயசுக்கு மேல யாராச்சும் இருக்காங்களா சார்.

             இல்லை.

             யாருக்காச்சும் தலைவலி, சளி, இருமல், சுரம் இருக்கா சார்.

             இல்லை.

             மூச்சுத் திணறல் இருக்கா சார்?

             இல்லை.

             யாராச்சும் சுகர் பேஷண்ட் இருக்காங்களா சார்.

             நான் மட்டும்தான். டேபிளட் எடுத்திக்கிட்டு இருக்கேன். கண்ட்ரோல்லத்தான் இருக்கு.

             உங்க போன் நம்பர் சொல்லுங்க சார்.

             சொன்னேன்.

             நன்றி சார்.. என்று சொல்லிக் கிளம்பினாள்.

             கொஞ்சம் நில்லும்மா என்றேன்.

             சொல்லுங்க சார்.. என்றாள்.

             உங்களுக்கு நேரம் காலம் கிடையாதா.. ஒரு நாளைக்கு காலையில வர்றீங்க.. இன்னொரு நாளைக்கு மதியத்துல வர்றீங்க.. நினைச்ச நேரத்துல வருவீங்களா.. தூக்கம் கெட்ட எரிச்சலில் கேட்டேன்.

             சார்.. அப்படியில்ல  நான் பால்வாடி டீச்சர் சார்.. சின்னக் குழந்தைகள கொண்டு வந்து விடுறாங்க.. அவங்கள வச்சிக்கிட்டு காலையில வந்து கணக்கெடுத்துட்டுத் திரும்பப்போனா.. நம்மால குழந்தைகளுக்கு வந்துடுமோன்னு ஒரு பயம் இருக்கு சார்.. அதான் மதியத்தோடு குழந்தைகள அனுப்பிட்டு வரேன் சார்.. எங்களுக்கு சொற்ப சம்பளம் சார்.. கணக்கெடுக்க வரும்போது பயத்தோடதான் வரேன்.. இத முடிச்சிட்டுப்போய் அப்புறமா நல்லா கை கழுவி, கால் கழுவி. முகம் கழுவி.. சாப்பிடுறோம்.. மன்னிச்சிடுங்க சார்.. முடிந்தவரை அடுத்தமுறை சீக்கிரம் வரேன்.. என்றபடி போனாள்.

                             

Sunday, July 12, 2020


குறுங்கதை 5

                              தீர்வு  
                                                            ஹரணி


          காலையில் போதை தெளிந்திருந்தான் தனபால். மனைவியைக் கூப்பிட்டான் யேய்  கனகா இங்க வாடி…

               என்ன என்றபடி அலட்சியமாக வந்தாள் உள்ளிருந்து.
               ஆமா.. நம்ப பொண்ணு காயத்ரி எங்கேடி?

               அவள அனுப்பிட்டேன்
.
               எங்கடி?

               உங்க அக்கா வீட்டுக்கு.

               எதுக்கு?

               இனிமே அவ அங்கதான் இருக்கப்போறா.. படிப்பு முடிஞ்சிதான் இனிமே இங்க வருவா.

               என்ன ஆயியும் மவளும் விளையாடுறீங்களா?

               இதுல என்ன விளையாட்டு வேண்டிக் கெடக்கு?

              எதுக்குடி அவ வீட்டுக்கு அனுப்பினே?

               அது ஒண்ணும் பொறத்தியார் வீடுல்ல அவளோட அத்த வீடு அவளுக்கு அங்க எல்லா உரிமையும் இருக்கு.

               அக்காள வேணாம்னு உறவறுத்துட்டேன் நானு.. ஆடு  பகை குட்டி ஒறவா?

                 நீரடிச்சு நீர் வெலகாது.. அக்காங்கற உறவு போயிடாது.  அவங்க ஒறவு அறுந்ததுக்கு நீங்கதானே காரணம்? நல்லா இருந்த மனுஷனுக்கு மச்சான் மச்சான்னு குடிக்கக் கத்துக்கொடுத்துப் பாதியிலே உங்கக்கா தாலியறுத்துட்டா.. மிச்சம் நாந்தான் இருக்கே… திக்கு திக்குன்னு..

                 குடிக்கிறவ எல்லாம் செத்துப்போயிடுவானா?

                 ஆமாம் செத்துத்தான் போவான்.. இல்லாட்டி எல்லாரையும் உசிரோட கொன்னுடுவான்..

                உங்களுக்கு என்னடி கொற வச்சே?

               வாய்க்கும் வயித்துக்கும் என்னாத்த பத்துது. வெந்தத தின்னு விதி வந்தா சாவலாம்னு வாழறோம்.. ஒரு நாளாச்சும் குடிக்காம வந்திருக்கியா? ரத்தக் காட்டேரி மாதிரி மூலைக்கு மூலைக்கு திறந்து வச்சிருக்கானுங்க.. பாவிங்க.. பொழுதன்னிக்குக் கொறயக்கொறய நொப்பிட்டு வரே.. அதுவும் இப்ப யாருக்கு வந்துடுமோன்னு பயந்து சாவறோம்.. வயசுக்கு வந்த  பொம்பளப்புள்ள.. அதுவும் நல்லாப் படிக்குது வுட்டுடாதீங்கன்னு வாத்தியாருங்க வீடு தேடி வந்து சொல்லிட்டுப்போறாங்க.. அதாச்சு நாலு படிப்பு படிச்சி குடிகாரனா இல்லாம நல்லவனக் கட்டிக்கிட்டு நல்ல பொழப்பு பொழக்கட்டும்னுதான்.. உன்னால அவளுக்குப் புடிச்சிடுச்சனா.. உசிரே போயிடும.. எனக்குப் புடிச்சாச் செத்துட்டுப்போறோம்.. உன்னோட வாழறதவிடச் சாவறது ரொம்ப மேலு.. நீ திருந்தப்போறதில்ல எங்களயும் நிம்மதியா வாழப்போறது இல்ல.

              அங்க ஒருத்தன் இருக்கான் எங்கக்கா மவன்.. வயசுக்கு வந்தப் பொண்ண அங்க அனுப்பிவச்சிருக்கே… நாளக்கி ஊரு சாதி சனம் என்ன சொல்லும்?

              அடேங்கப்பா அரிச்சந்திர மகாராஜா… குடிச்சிப்புட்டுக் குட்டிச்சுவரு… சாக்கடை.. சால்னா கடைன்னு விழுந்து கெடக்கறப்ப ஊருசனம் கண்ண மூடிக்குதா… நீ பெத்தப் பெண்ணுன்னா வலிக்குது.. எங்கப்பன் என்ன புழுதியிலாப் பெத்துப்போட்டு உனக்கு தார வாத்துட்டுப்போயிருக்கான்.. எனக்கெல்லாம் சூடு சொரணை வலி எல்லாம் கெடயாது..

              போய் மரியாதயா அழச்சிட்டு வந்துடு..

              உன்னோட கூடப்பொறந்தவ அப்படி இல்ல. அவ மவன அவன்  சிநேகிதன் வீட்டுக்கு அனுப்பிட்டா.. அந்தப் புள்ளயும் அது என்னப் பாத்தா கூச்சப்படும்னு போயிட்டா.. அவம் புள்ள. அவ மனுஷி.. அவ வாழ்க்கைய அழிச்சிட்டே நீ.. உன் வாழ்க்கய அவ காப்பாத்துறா..

               அப்படியே கதவிடுக்கில் நசுங்கிய பல்லியாய் பேசாதிருந்தான்.

                உடனே மகளுக்குப் போன் செய்தான்..

                நான் வரலப்பா என்றாள் காயத்ரி. நீ குடிய விட்டா வருவேன். இல்லாட்டி வரமாட்டேன்.. கொரனா எல்லாருக்கும் பரவுதாம்.. உனக்குப் பரவுனா பரவாயில்ல.. எனக்கு வரக்கூடாது.. நீதான் குடும்பத்த வுட்டுட்டே.. நான் காப்பத்தணும்லே.. அதான்.. போன வை. என்றாள்.

                                       0000


Saturday, July 11, 2020

குறுங்கதை… 4

                            கடமையாளன் 
                                                            ஹரணி 

                 இனி டாக்டர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது முதல் அட்டாக் என்றாலும் கடுமையான அட்டாக். சங்கரன் பிழைப்பது மிகச் சிரமம் என்று சொல்லிவிட்டார்கள். இன்னும் நினைவு திரும்பாமல் கிடக்கிறார்.

                 அருகில் மனைவியும் மகனும் மட்டுமே மாறி இருக்கிறார்கள். வேறு சொந்தங்கள் யாரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

                   ஏம்மா என்று கேட்டான் மகன்.

                   வேண்டாம்.. இது தொற்றுக் காலமாக இருக்கிறது. அதுவும் நாம இருக்கிறது மருத்துவமனையில். யாரும் வந்து பார்த்து ஏதாவது ஆயிடிச்சின்னா அவங்களுக்கும் துன்பம் நமக்கும் துன்பம். உங்களாலதான் வந்துடுச்சின்னு சட்டுன்னு சொல்லிடுவாங்கள். காலம் முழுக்கச் சொல்லுவாங்க வேண்டாம் நம்மோட நோய்க்கு நாமளே வழி பாத்துக்கலாம்.

                   அதற்கு மேல் மகன் பேசவில்லை.

                   சங்கரன் குடும்பம் அப்படித்தான். யாருக்கும் துன்பம் கொடுக்காத குடும்பம். முடிந்தவரை சங்கரனே எல்லாவற்றையும் பார்ப்பார். அலுவலகத்திலும் அப்படித்தான் இழுத்துப்போட்டு செய்வார்.

                   நல்லா காக்காப் புடிக்கிற ஆளு சங்கரன்.

                   காரியக்காரன் நல்ல பேரு எடுக்கறானாம்.

                  முன்னாடி பிரமோசன் கொடுத்துடுவாங்களாம்.

                   இது எல்லாம் ஒரு பொழப்பு.

                   அவவன் வேலய பாத்துட்டுப் போவ வேண்டியது தானே? இவனுங்க மாதிரி ஆளுங்களால அடுத்தவங்களுக்குத்தான் தொந்திரவு..சே..
                   வாயுள்ளவர்கள் எல்லாம் பேசிக் களித்தார்கள்.

                 பக்கத்துச்சீட்டு சாமி நாராயணன் கேட்டார். சங்கரா அவா என்னப் பேசறாங்கன்னு கேட்டியோல்லியோ.. என்றார்.

                 கேட்டுக்கிட்டுதான் இருக்கேன் சாமி.

                  உனக்கெல்லாம் கோவமே வராதாடா அம்பி..

                  சாமி.. கோபப்படறதுக்கு இதுல என்ன இருக்கு. எங்கப்பாவுக்கு இதே பேருதான். வலிய வலியப் போய் வேலை செய்வார். சொல்லுவாரு.. சங்கரா.. நமக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அத நடத்தறதுக்கு ஒரு வேல அமைஞ்சிருக்கும். வாழ்க்கையை எப்படி ரசித்து வாழறமோ அதுமாதிரி அதுக்குக் காரணமான வேலயயும் ரசித்து செய்யணும். நமக்குப் புடிச்சமான சாப்பாட்டை யார் சொன்னாலும் கேப்பமா? எப்படி அனுபவிச்சிச் சாப்பிடமாட்டோம். அதுமாதிரிதான்.. ஒவ்வொரு நாளும் வேலயப் பெண்டிங் வைக்காம முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பி வா எத்தனை நிம்மதியா தூக்கம் வரும். நாம ஒரு பைல் எழுதறோம்னா அதுல எத்தனை பேரு வாழ்க்கை இருக்கு.. அதப் பாதிச்சிடக்கூடாது சங்கரா.. மனுசங்களுக்காக எதையும் செய்யக்கூடாது நம்ப மனசாட்சிக்காகச் செய்யணும். அவரோட புள்ள சாமி நான்.. சொல்லிட்டுப் போகட்டும்.

      சங்கரனைப் பெருமையாகப் பார்த்தார் சாமி நாராயணன்.

              இப்போது எல்லாம் மறந்து அல்லது நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறாரா என்று தெரியவில்லை. தூங்குவதுபோலத்தான் இருந்தார்.
                 அன்று வெள்ளிக்கிழமை. அதிகாலை 3 மணிக்கு சங்கரன் உயிர் போய்விட்டது.

                 வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்.

                 சங்கரனின் மகன் உறவுகளுக்கு எல்லாம் தகவல் தெரிவிக்க ஆரம்பித்தான். அந்தத் தகவல் இதுதான்.

                அன்புள்ள…

                         என் தந்தையார் மு.சங்கரன் அவர்கள் இறந்து போய்விட்டார்கள். இன்று காரியங்கள் நடக்கவுள்ளன. அன்புகூர்ந்து யாரும் வரவேண்டாம். இது கொரோனாக் காலம். என் அப்பா உயிருடன் இருக்கும்போது யாரோ இறந்த மரணம் குறித்துப் பேசும்போது சொன்னவை இது. அவரவர்கள் வீட்டிலேயே இருங்கள். தொற்றுப் பரவ என் அப்பா மரணம் காரணமாக இருக்கக்கூடாது. கடைசிவரை யாருக்கும் தொந்தரவு தராமல் அப்பா இறந்தார் என்றுதான் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். என் அப்பாவின் மீதான் உங்கள் அன்பை நீங்கள் விடும் கண்ணீர்த்துளிகளில் தெரிவியுங்கள். கைப்பேசியில் ஆறுதலைக் கூறுங்கள். அக்கம் பக்கம் இருக்கும் ஒருசிலரைக் கொண்டு அப்பாவின் காரியங்களை முடிக்கிறோம்.  நன்றி வணக்கம். இப்படிக்கு மு.சங்கரனின் மகன்.

            கைப்பேசியில் தட்டச்சிட்டு அம்மாவிடம் காண்பித்தான். அவள் பெருமிதமாக மகனைப் பார்த்தபடி அனுப்பு என்று கண்களால் சம்மதம் சொன்னாள். சங்கரனின் மகன் அனுப்ப ஆரம்பித்தான்.

                                 00000                  


            

Friday, July 10, 2020

என்னமோ நடக்குது.. குறுந்தொடர் 8


குறுந்தொடர்  
              என்னமோ நடக்குது…
                                    அத்தியாயம் 8
 000

            துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டவுடனேயே திறந்த கேட்டைக் கூட மூடாமல் அப்படியே திரும்பி ஓடினார் ராகவன். சற்று தூரம் தாண்டி ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். நெஞ்சம் முழுக்கப் படபடப்பு குதிரையாய் ஓடியது. மாட்டிக்கொண்டு விட்டோம் என்பதுவே அவரை நிலைகுலைய வைத்தது. மிச்சமிருக்கும் வாழ்க்கை முழுக்க சிறையில் என்ற நினைவு வந்து அவரைத் தேளாய் கொட்டியது. மனைவி, மகன், உறவுகள் எல்லாம் தன்னைக் கேவலமாக எண்ணி ஒதுக்கும்.  யாருமற்ற அனாதையாய் காலம்போன கடைசியில் சாகப்போகிறோம் அதுவும் குற்றவாளியாய் சிறையில். அவர் தப்பான உறவுக்கு ஆசைப்பட்டதுதான் செய்த குற்றமே தவிர. காயத்ரியைக் கொன்றது அவருக்குத் தெரியாது. அதுவும் விளையாட்டாய் தட்டப்போக உயிர்போகும் என்று நினைக்கவேயில்லை. காயத்ரியின் குடும்பம் தன்னை என்ன நினைக்கும்? காயத்ரியைக் கொன்றவர்கள் மிரட்டுகிறார்கள். அவர்கள் உண்மையைச் சொல்லிவிட்டால் தண்டனை நிச்சயமாகிவிடும். நடக்க முடியவில்லை. மெயின் ரோட்டிற்கு வந்தபோது தலைசுற்றியது. ஏற்கெனவே பிரசர் இருக்கு. கண்கள் லேசாய் இருண்டன. பக்கத்தில் பார்த்தார் ஒரு டீக்கடை தெரிந்தது. வேகமாய் நடந்து அப்படியே டீக்கடையில் போடப்பட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்து பையில் இருந்த பிரசர் மாத்திரையை அவச7ரமாக எடுத்து டீக்கடைக்காரனிடம்.. தம்பி சீக்கிரம் தண்ணி கொடு என்று வாங்கி மாத்திரையை விழுங்கினார். கண்களைச் சுற்றிச்சூழ்ந்த மேகங்கள் விலகின. ஆனால் படபடப்பு நீங்கவில்லை.
             என்ன சார் ? உடம்பு சரியில்லியா டீ போடவா
             கொடுப்பா.. சர்க்கரை வேண்டாம்.
             டீயைக் குடித்தார். சற்று அமைதியாக இருந்தது. டீக்குக் காசைக் கொடுத்துவிட்டு நடந்தார். நாளை அவள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் செய்தித்தாளில் வரும்போது தன்வீடு என்னவாகும்?
            முதன்முதலாக தன் இலட்சியமாகக் கட்டிய வீடு அவருக்கு அந்நியமாகிப்போனதோடு அதுவே சிறைச்சாலையாக உணர ஆரம்பித்தார். உப்புத் தின்றவர் தண்ணீர் குடிக்கவேண்டும். ஆனால் ராகவன் உப்புக்கடலை அல்லவா குடித்திருக்கிறார்.

            ஆம் தவறான காம உறவு உப்புக்கடல்தான்.

000

            அந்தப் பங்களாவில் துப்பாக்கி வெடிப்பதற்குச் சற்றுமுன் நிகழ்ந்த உரையாடல்கள்.

             எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அதுக்காகத்தான் நாள் முழுக்க நேரங்காலம் பார்க்காமல் உழைச்சேன். இன்னிக்கு கோடிக்கணக்கில் செல்வம் இருக்கும். ஆனா வாழ்க்கை இல்ல. அன்னிக்கு வறுமையால என் வாழ்க்கை தள்ளாடுனிச்சி. இன்னிக்கு உன்னால தூர்ந்துபோவப்போவுது..  நம்பிக்கைதானடி வாழ்க்கை. ஆம்பள வீட்டவிட்டு வெளியே போறான்னா வீட்டுலே உள்ள பொம்பள நமக்காக இருக்கா.. அவளோட துக்கம் மகிழ்ச்சி எல்லாமும் நம்மோடதான்.. அவ பாத்துக்குவா.. புள்ளங்களப் பாத்துக்குவா குடும்பத்த பாத்துக்குவான்னு நம்பித்தானே போறோம்.. நாள் முழுக்க உழைச்சி ராத்திரி வந்து பொம்பள முகத்துல முழிக்கும்போது எத்தனை நிம்மதியா இருக்கு.. நாள் முழுக்க உழைக்கறதுக்கு அர்த்தம் இருக்கும். கேவலம் உடம்புக்காக இப்படியொரு காரியத்த பண்ணிட்டியே அடங்காத எதுவும் நிலைக்காது. அழிஞ்சிடும். அது மத்தவங்களயும் அழிச்சிடும்.. நான் என்னடி குறை வச்சேன்?  நமக்குப் பிறந்த புள்ளங்கள நினைக்கலியே… என்ன குறைச்சல் உனக்கு? பணம், பங்களா.. எல்லாம் சம்பாதிச்சு வச்சிருக்கேன்.. இன்னும் நாலு தலைமுறைக்குக் குறையாக சேத்திருக்கேன்.. நான் செத்துப்போயிட்டாக்கூட நீ கையேந்தாம மகராணி மாதிரி இருக்கலாமே.. அப்படியொரு ஆசை உனக்கு இருக்குன்னா நான் செத்தப்பிறவு எப்படியோ போயிருக்கலாம்.. நான் உயிரோட இருக்கும்போதே.. அந்தக் காயத்ரி சொன்னப்பா செத்துப்போயிட்டேண்டி.. உனக்கு தண்டனை கெடச்சாகணும்.. விடமாட்டேன் உனக்குத் தண்டனை கொடுக்கமா விடமாட்டேன்…

          ஓடிப்போய் அவன் கால்களில் விழுந்து கதறினாள்.. மன்னிச்சிடுங்க.. மன்னிச்சிடுங்க.. என்று கெஞ்சினாள்.

            அவன் கேட்கவில்லை.

           உன்ன மன்னிக்க முடியாது.. நல்லா கேட்டுக்க உனக்குத் தண்டனை கொடுத்துடடுத்தான் போவேன்..  ஆனா உன்ன துப்பாக்கியால சுடமாட்டேன் உன்ன கொல்லமாட்டேன்.. உன்ன தவிர யாரையும் நான் பாக்கலே பொண்டாட்டியா.. அப்படி உன்னை நேசிச்சேன்.. அதுல மண்ண அள்ளிப்போட்டுட்டே.. இனி உன்னோட நான் வாழமாட்டேன்.. உன்னக் கொல்லமாட்டேன்.. நான் சாகப்போறேன்.. காலம் முழுக்க ஒரு நல்லவன சாகடிச்சிட்டோம்னு உனக்கு நினப்பு வரும.. இன்னொருத்தன் நினைப்புல இருக்கிறவளுக்கு எப்படி வரும்னு நினைக்கலாம்.. நாளக்கி நான் செத்தபிறகு பிள்ளைகள் வருவாங்க.. உன்னைக் கேள்வி கேப்பாங்க.. பதில் சொல்லும்போது நினைப்பு வரும்.. அதான் உனக்குத் தண்டனை… அடிப்பாவி உன்னோட எப்படிஎல்லாம் வாழணும்னு புள்ளங்களுக்கு எப்படி எல்லாம் வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு நினைச்சேன்.. அத்தனையையும் நெருப்பு வச்சி கொளுத்திட்டியேடி.. நான் என்னடி தப்பு பண்ணேன்.. என்று அழுதபடி அறைக்குள் ஓடித் தாழிட்டுக்கொண்டான்.

                சற்று நேரத்தில் துப்பாக்கி வெடித்தது.

                அய்யோ.. அய்யோ.. இப்படி பண்ணிட்டேனே… என்று தாழிட்ட கதவிற்கு முன் அமர்ந்து கதறினாள். அப்படியே தெருவுக்கு ஓடி தெருவில் கத்தினாள்.

                 சற்று நேரத்தில் தெரு கூடிவிட்டது.

                 யாரோ போலிசுக்குப் போன் செய்தார்கள்.

                 போலிஸ் வந்து கதவை உடைத்தார்கள். வாய்க்குள் வைத்து சுட்டுக்கொண்டு முகம் சிதைந்து இறந்துபோயிருந்தான். எல்லா காரியங்களும் நடந்து உடல் போஸ்ட் மார்ட்டம் போனது. அவளை விசாரணை செய்தார்கள். அவன் சுட்டுக்கொண்ட அறையில் ஒரு கடிதம் கிடைத்தது.

                  என் வாழ்க்கையில் நடக்கக்கூடாத தவறு நேர்ந்துவிட்டது. அதற்கு நானே பொறுப்பு. இதனை அறிந்துகொண்ட என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் காயத்ரியை நான்தான் ஆள் ஏற்பாடு செய்து கொன்றேன். என் குடும்பக் கௌரவம் மானம் போய்விடக்கூடாதே என்று. என் மனைவியைப் பிரிவதில் வேதனை அடைகிறேன். இப்படிக்கு என்று எழுதிக் கையொப்பமிட்டிருந்தான்.

             மனைவிமேல் கொண்ட அன்பினால் அவளைக் கொலைக் குற்றத்திலிருந்தும் அவன் காப்பாற்றியிருந்தான்.

                 மறுநாள் செய்தித்தாளில் செய்தி நிறைய படங்களுடன் வெளிவந்திருந்தது. பிரபல தொழிலதிபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை. காயத்ரி எனும் இளம்பெண்ணை கொன்ற வழக்கில் திருப்பம். மனைவி கதறல். போலிஸ் விசாரணை நடைபெறுகிறது.

                0000

            ராகவன் தலை குனிந்து அமர்ந்திருந்தவர் நிமிர்ந்தார். என்ன இது? அவளின் கணவன் பழியைத் தன்மீது போட்டுக்கொண்டு போயிருக்கிறான். அப்போ அவள் நிரபராதி. கடவுளே தன்னையும் பாதிக்காது. நிம்மதியடைந்தார்.

             பார்த்தியா.. இதுதான் நாளைக்கு உனக்கும் கதி.. என்று கோபி கத்தினான்.

               ஒழுங்கா வேலய பாத்துக்கிட்டுப் போடா…

               இவர் அவள் வீட்டுக்குப் போனதைப் பார்த்த சாட்சி இல்லை. அவளுக்கும் இவருக்குமான உறவுகுறித்து நிருபிப்பார் யாருமில்லை. கடவுள் மட்டுமே சாட்சி.

              அவளை விசாரணை முடித்து அனுப்பிவிட்டார்கள். சற்றே நிம்மதி அடைந்தாலும் பிள்ளைகளுக்கு செய்தி அனுப்ப அவர்கள் உடன் விமானத்தில் வந்து சேர்ந்தார்கள். வயதுக்கு வந்த மகன் மற்றும் மகள். எல்லாக் காரியங்களையும் முடித்தார்கள். உடன் எங்களுக்கு வேலையிருக்கிறது என்று மறுபடியும் விமானத்தில் பறந்துபோனார்கள்.

             அவரின் விதி முடிந்துவிட்டது. நாங்கள் வாழவேண்டுமே என்கிற அயல் நாட்டின் தத்துவார்த்தங்களுடன்  பின்னிப் பிணைந்தவர்கள்.

              இப்போது இவள் தனிமரமாக நின்றாள். கிட்டத்தட்ட எல்லாம் இருந்தும் அநாதைதான்.

              யாரோ செய்த வினைக்கு யாரோ பலி ஆகிவிட்டார்கள்.

              கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?

              உண்மையாய் மனைவியை நேசிப்பவன் வாழக்கூடாதா இவ்வுலகில்?

               கணவனுக்குத் துரோகம் செய்பவர்கள் உள்ளம்தான் முக்கியம் காமம் அல்ல என்று ஏன் உணர மறுக்கிறார்கள்?

            விதி எனும் கயிற்றில் வித்தியாச நிறங்கொண்ட மனிதர்களை ஏன் கடவுள் ஒன்றாகக் கோர்த்து மாலையாக்கி விளையாடுகிறார்? அதை ஏன் நல்லவர்கள் மேல் சூடிப்பார்க்கிறார்?
கடவுள் அப்படிப்பட்டவரா? நல்ல மனிதர்களுக்குத் தீங்கிழைப்பவரா கடவுள்? 
                                                     
                                                          (இன்னும் நடக்கும்)
              
        

Thursday, July 9, 2020



                                மாண்புடை மாதரசி பெருங்கோப்பெண்டு
                    (இலக்கிய நாடகம்)

முன் குறிப்பு
           ஒல்லையூர் வென்று மீட்டுத்  தந்த பூதப்பாண்டியன் எனும் அரசனின் மனைவி பெருங்கோப்பெண்டு. போரில் அரசன் இறந்தபின்பு பெருங்கோப்பெண்டும் உயிர்துறக்கிறாள். இதுதான் நாடகத்தின் மையச் சுருக்கம். இலக்கியச் சுவைக்காக சில கற்பனை பாத்திரங்களும் காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. புறநானூற்றில் உள்ள முக்கியப் பாடல்களுள் இப் பாடலும் ஒன்று.

                        காட்சி ஒன்று

            இடம் – பேராலவாயர் எனும் புலவனின் இல்லம்.

            மாந்தர்கள் – பேராலவாயர், அவரின் மனைவி மற்றும் சிலர்

    பேராலவாயர் தன் இல்லத்தின் முன்றிலில் போடப்பட்டுள்ள அழகான வடிவமைக்கப்பட்ட உயரமான ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். வலது காலைக் குத்துக்காலிட்டும் இடது காலைத் தொங்கவிட்டும் குத்துக்காலிட்ட காலின் முழங்கால் பகுதியில் வலது கையை முட்டுக்கொடுத்து நெற்றியை நாகம் படமெடுத்ததுபோல ஐந்துவிரல்களையும் மடக்கி அதன் மேல் வைத்துப் பெருங்கவலை தோய்ந்த முகத்துடன் தலை குனிந்தமர்ந்திருக்கிறார்.

           அப்போது அவரின் இல்லாள் வருகிறாள். கையில் வெள்ளிக் குவளையில் பால் எடுத்து வருகிறார் . பேராலவாயர் அருந்துவதற்காக. அவளுக்கு முன்னால் அந்தப் பாலின் மணம் கமழ்ந்து மிதந்து பேராலவாயர் நாசிகளில் படர்ந்து படபடக்கிறது. நிமிர்கிறார்.

இல்லாள் – மதுரை பேராலவாயர் என்றால் மாநகரே கைகூப்பி 
             வணங்கும் புலவர் பெருமான. வானம் விழுந்துவிடுமோ 
              வையகம் தாழ்ந்து அழியுமோ என்பதுபோல 
             இத்தனை விசனத்தை வரைவதேன் ஐயா..

பேராலவாயர் -   என்னருமை  இல்லக் கிழத்தியே.. விசனம்தான்.. 
          கூடவே பெருங்கவலையும் பூத்துக் கிடக்கிறேன். பாகனுக்குக் 
          கட்டுப்படாத வேழம் போல மனம் அலைகிறது.. 
          அடக்க முடியாமல்  தவிக்கிறேன்..

இல்லான் -    நீங்கள் இத்தனை துயர்பூத்த முகத்தைக் கொண்டிருப்பது
               என்னைக் கலக்கமுற வைக்கிறது. இந்தாருங்கள் இந்தப்
               பாலை அருந்துங்கள்.. படபடக்கும் மனத்தைச் சற்றே
               ஆறுதல் படுத்துங்கள்..

பேராலவாயர் – வேண்டாம். பாலின் சுவை அறிந்து அருந்து நிலையை
               நான் மறந்திருக்கிறேன். மனம் எதனையும் அருந்தவோ
               அணியவோ மறுக்கிறது. பெருங்கவலை என்னைக்
               கொன்றுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்..

இல்லாள் – (பதட்டமுடன் பால் குவளையை அருகில் தரையில் 
        வைத்து)  என்ன இது அமங்கலச் சொல்லை அஞ்சாமல் 
         கொட்டுகிறீர் சற்றே இதழ்களை மூடுங்கள்.. சொல்லுங்கள்.. 
         ஏன் இப்படி ஒருநாளுமில்லாத திருநாளாய் அவலச்சொற்கள் 
          உங்கள் உள்ளம் உடைந்து அணிவகுகின்றன..

பேராலவாயர் – (இல்லாளை ஒருமுறைக் கூர்ந்து பார்க்கிறார்)
               என் ஐயன்.. தலைவன்.. பாண்டிய நாட்டின் இறைவன்..
               பூதப்பாண்டியன் மறைந்துபோனான்.. அந்த வேதனையே
            நாடெங்கும் ஒவ்வொரு உயிரின் உள்ளும் அணைக்கமுடியா
               அனலாய்ப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அது இன்னும்
            அணைய வில்லை.. அதற்குள் மாதரசி.. பெருங்கோப்பெண்டு
               உயிர்துறக்க உறுதிபூண்டுவிட்டாள்.. அய்யோ நான் என்
               செய்வேன்.. அரசியே அன்னையே என்று விளித்தால்
               அமுதுண்டீரா என்று அன்பொழுகப் கேட்பார்.. அவரின்
               முடிவு என்னைக் கொல்லாமல் கொன்று சிதைக்க
              முயல்கிறது.. அந்த விசனம்தான்..

        அப்போது வீதியில் பெரிய களிறுகள் உலர் விறகுகளைச் சுமந்து போகின்றன.. அந்தக் காட்சியைக் கண்டதும் பேராலவாயர் வாய்விட்டுக் கதறுகிறார்.. கண்ணீர் கண்களை நிறைத்துத் தளும்பி கன்னங்களில் நதியாகிறது.
         
       பேராலவாயர் – அய்யோ.. இதோ மதக் களிறுகள் உலர்
                     விறகெடுத்துப் போகின்றனவே.. உறுதியாகிவிட்டதே..
                      ‘அன்னையே இனி உங்களை என்று காண்பேன்..?

       இல்லாள் சற்றே ஓடிப்போய் பார்க்கிறாள். அரசியார் பெருங்கோப்பெண்டு தீப்பாய்வதற்கான மூட்டப்படுவதற்கான எரிவிறகுகள் அவை. யானைகள்தாம் எடுத்துச்செல்லும். இல்லாள் மனம் குலைவுடன் விரைந்து திரும்பி வருகையில் பேராலவாயர் கண்ணீர் பெருகும் கண்களுடன் பாடத் தொடங்குகிறார்.

         யானை தந்த முளிமர விறகின்
         கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
         மடமான் பெருநிரை வைகுதுயிர் எடுப்பி
         மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
         பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
         தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
         முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
         சிறுநனி தமியள் ஆயினும்
         இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

பாடலில் நடுக்கம் தெரிகிறது. சொற்கள் ஒவ்வொன்றும் துயரக் கங்குகளைச் சிந்துகிறது. இல்லாள் பாடும் பேராலவாயரைக் கண்டு அவளும் கண்ணீர் விடுகிறாள். பக்கத்தில் உள்ள பால்குவளையில் ஆடை படிந்து அதில் சிறுபூச்சிகள் விழுந்து துடித்துக்கொண்டிருக்கின்றன.

                                    000000                 ( துயர் பரவும்)