Monday, June 30, 2014

பொடி முட்டை... (நாடகம்)




                                          பொடி முட்டை,,,
                                                                                (நாடகம்)



                       (       ஒரு வீட்டின் உறால் அது. தாராளமான இடவசதிகொண்டது)


                 
                        வயதானவர்..:

                                                 அம்மா.. மருமகளே இன்னிக்கு முட்டை
சாப்பிடணும்போல இருக்கு. ஒண்ணு அவிச்சிகொடேன்..

                        மருமகள்   :

                                          முட்டை என்ன விலை விக்குது தெரியுமில்லே..
4.50..

                         வயதானவர்  :

                                              நான் வாங்கிட்டு வந்திருக்கேம்மா.. இந்தா
எல்லாருக்கும்

                                (கொடுக்கிறார்)

                               (மருமகள் வாங்கிகொண்டு முணுமுணுக்கிறாள்)

                              (பென்ஷன் வாங்கற கொழுப்பு... இந்த முட்டைக் காசு
இருந்தா வேற சாப்பிடலாம் வாங்கி)

                     வயதானவர்  :  என்ன சொல்றேம்மா?

                     மருமகள்    :       அவிச்சி தரேன்.
                     
                     ஆளுக்கொன்றாக நாலு முட்டைகளை அவித்து வைக்கிறாள்.

                                     
                                                            காட்சி 2

                                  (ஹர்லில் வயதானவர் ஒரு சிறுவன் அவன் அப்பா
                                               மருமகள்)

                     சிறுவன்       :         தாத்தா சாப்பிட வாங்க.. அம்மா கூப்பிடுது..

                               (வயதானவர் சாப்பிட அமர்கிறார்)

                      மகன்      :              முட்டை அவிச்சியா.. போடு.,.போடு..
                                               அவிச்ச முட்டை சாப்பிட்டு நாளாச்சு..

                      வயதானவர்  :   (தன் முட்டையை உடைத்து வெள்ளைக்
                                  கருவை மட்டும் வைத்துக்கொண்டு மஞ்சள் கருவை
                                  எடுத்து மகன் தட்டில் போடுகிறார். அவனுக்குப் பிடிக்கும்)

                                      சாப்பிடுப்பா..

                                     (மகன் சாப்பிடுகிறான்) (பக்கத்தில் சிறுவன்)

                   மருமகள்  : இது என்ன இது ரெண்டு மஞ்சள் கரு ஏது?
                         
                   மகன்      :      அப்பாவுக்கு ஒத்துக்காதுல்ல.. அதான் கொடுத்தாரு.

                  மருமகள்   :  உங்களுக்கு என்ன சின்ன வயசா? உங்களுக்கு மட்டும்
                                          ஒத்து வருமா அதுவும் ராத்திரியிலே ரெண்டு மஞ்சக்கரு
                                          கொண்டாங்க.. ஒண்ணு போதும்

                                     (ஒரு மஞ்சள்கருவை எடுத்து பிள்ளை தட்டில்
                                           போடுகிறாள்)

                     சிறுவன்   :   போ... எனக்கு முட்டை வேணாம். போ..

                     மருமகள்  :   ஏண்டா வேண்டாம்?

                     சிறுவன் :     எனக்கு பொடி முட்டைதான் வேணும்..இது வேண்டாம்.

                     மருமகள்   : நாளைக்கு செஞ்சு தரேன்.. இப்ப இத சாப்பிடு.

                     சிறுவன்  :   முடியாது... எனக்குப் பொடி முட்டைதான் வேணும்.

                     மகன்      :      அவனுக்கு என்ன பிடிக்குமோ அப்படி செய்ய வேண்டி
                                             யதுதானே?

                     மருமகள்   :  உங்கப்பாவுக்கு அவிச்சா புடிக்கும். இவனுக்கு பொடி
                                              முட்டை புடிக்கும். உங்களுக்கு ஆம்லெட் புடிக்கும்
                                              ஆளுக்கொண்ணு செய்யமுடியுமா?

                      மகன்    :        நான் ஆம்லெட் கேட்டனா?  புள்ளக்கிப் புடிச்சத
                                              செய்யவேண்டியதுதானே?

                     வயதானவர்     குட்டிப்பயலே சாப்பிடு.. நாளைக்குத் தாத்தா
                                                    முட்டை வாங்கிட்டு வரேன்.. பொடி முட்டை
                                                    அம்மாவ செய்யச்சொல்லி சாப்பிடலாம்..

                      சிறுவன்    :     போ தாத்தா.. எனக்கு பொடி முட்டைதான்
                                                வேணும்.. (தட்டிலிருந்து முட்டையை எடுத்து
                                                தரையில் வைக்கிறான்)

                       மருமகள்  :    இந்த வயசிலேயே  எவ்வளவு அழுத்தம். சாப்பிடுடா..
                                                 (அடிக்கிறாள்... அழுகிறான்)


                                                  காட்சி 3


                         வயதானவர் :   அவன அடிக்காதம்மா..

                         மருமகள்    :       உங்க வேலைய பாருங்க... உங்களுக்கு முட்டை
                                                        வச்சாச்சுல்ல சாப்பிடுங்க..

                         மகன்      :            எதுக்கு நீ இப்படி பேசறே?  அப்பா என்ன பண்ணாரு?

                         மருமகள்    :      இப்ப யாரு முட்டை வேணும்னு கேட்டா?

                         வயதானவர் :    என்னமோ நாக்குருசி கேட்டுட்டேன...முட்டை
                                                       சாப்பிடணும்னு தோணிச்சி.. கடைத்தெருவுலே
                                                       அவிச்ச முட்டை இருக்கு.. எல்லாரும்சேந்து
                                                        சாப்பிடலாம்னு வாங்கிட்டு வந்தேன்..

                         சிறுவன்     :         எனக்கு பொடி முட்டைதான் வேணும்.

                         மருமகள்      :      இப்ப அடி வாங்கி சாவப்போற பாரு..

                         மகன்         :            இதே எழவா போச்சு.. புள்ள வந்து பொறந்திருக்கு
                                                          பாரு..

                                               (என்றபடி பாதியில் எழுந்துபோனான் கைகழுவ)

                                              (மருமகள் அடுப்படி உள்ளே போனாள் முனகியபடி)

                          வயதானவர்  (வெள்ளைக்கருவை பொடிப்பொடியா நசுக்கி
                                                            இந்தா பொடி முட்டை )

                           சிறுவன்    :       என்னை ஏமாத்தறியா தாத்தா? இது பொடி முட்டை
        இல்லே. (என்றபடி எழுந்து வந்து வயதானவர் தட்டில் இருந்த அந்த
        முட்டைத் துகள்களை அப்படியே அள்ளி தெருப்பக்கம் போய்
         வீசினான்)

                                                                       (நிறைந்தது)
       

                         

Sunday, June 29, 2014

மாறாதய்யா மாறாது... தொடர்ச்சி



மாறாதய்யா மாறாது....

                        
                           இரவு எட்டுமணிக்கு டாக்டர் வந்தார். எப்படி இருக்கப்பா
ராகவன்? என்றார்.

                           நல்லாயிருக்கேன் டாக்டர்.

                           காரம் அதிகம் சாப்பிடுவியா?

                           இல்ல டாக்டர்.

                           மசாலா அயிட்டங்கள் அதிகம் சேத்துக்குவியா?

                           இல்ல டாக்டர்.

                           என்வி அயிட்டங்கள் வெளியில் நிறைய சாப்பிடுவியா?

                           இல்ல டாக்டர்.

                           அப்புறம் ஏன் அல்சர் ஆச்சு? அதனாலதான் டைஜஸ்ட் ஆகாம
வாந்தியாகி புட் பாய்சனாகியிடுச்சி..

                           நாங்க சாப்பிடறதே ஒருவேளைதான் டாக்டர்.. ராகவனின்
அக்கா சொன்னாள்.

                           ராகவன் பேசாமல் அவளைப் பார்த்தான்.

                           என்னம்மா சொல்றே?

                           ஆமாம் டாக்டர். நாங்க அஞ்சுபேரு. அப்பா இல்ல. இவனுக்கும் வேலை கிடைக்கல்ல. அம்மா வீட்டு வேலை பாக்கறா.. அதுல மூணுவேளை சாப்பிடமுடியாது டாக்டர்.. படபடவென்று பழகிய உறவிடம் பகிர்வதுபோல பேசினாள்.

                            அக்கா பேசாம இரு என்றான் ராகவன்.

                            ராகவனைப் பார்த்து கேட்டார் என்ன படிச்சிருக்கே?

                            பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி சார்.. பர்ஸ்ட் கிளாஸ்..

                            சரி உடம்பப் பாத்துக்க. இன்னிக்கு டிஸ்சர்ர்ஜ் போட்டுடறேன். நாளைக்கு என்னை கிளினிக்ல வந்து பாரு. தெற்கு வீதியிலே டிடிடிசி கூரியருக்கு எதிரில் இருக்கு..

                             சரிங்க டாக்டர்.

                             வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ரெர்ம்பவும் சோர்ந்து
போயிருந்தான்.

                             ராகவன் அம்மா கேட்டாள் எப்படிப்பா இருக்கு?

                             பரவாயில்லம்மா. குடிக்க சூடா வரகாப்பி கொடேன்.

                             காபி வேண்டாம்பா. டீ தரேன். பால் இல்லாத டிகாசனைப் பனங்கல்கண்டு போட்டு ஆற்றி அதில் எலுமிச்சம்பழத்தை நாலைந்து சொட்டுகள் பிழிந்து கொடுத்தாள். 

                             குடித்தான்.

                             ஏண்டா கவலைப்படறே ராகவா. நடக்கறதுதான் நடக்கும்.
எங்களுக்கு என்னிக்கு நடக்குமோ அன்னிக்கு நடக்கும். நீ உடம்பக் கெடுத்துக்காத.. நமக்கு சொத்துன்னு ஆண்டவன் கொடுத்திருக்கறதே இந்த உடம்பும் நம்பிக்கையும்தான்.. 

                              சரிக்கா என்றான் ராகவன்.

                              நாம ஜெயிப்போம்டா ராகவா.. என்றாள் இன்னொரு அக்கா.

                              ஆமாங்க்கா.. கண்டிப்பா..

                              நாளைக்கு மறக்காம டாக்டரைக் கிளினிக்ல பாத்துடு. 
பெரிய அக்கா சொன்னாள்.

                               ஏன் என்னாச்சு? எதுக்கு பாக்கச் சொன்னாரு. மகமாயி எம் புள்ளய காப்பாத்து..அம்மா உணர்ச்சியில் சொற்களைக் கொட்டினாள்.

                              அம்மா... தம்பிய பாத்த டாக்டர் ரொம்ப நல்லவரும்மா. இவன் படிப்ப பத்தி கேட்டாரு.. ஏதாவது வேலை விஷயமா இருக்கும். அதான் வரச்சொல்லியிருக்காரு.

                              போயிட்டு வாப்பா.. அப்படி ஏதாச்சும் வேலைன்னு சொன்னா.. நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்னு சொல்லு.. உடம்பு முக்கியம்.

                              ஏம்மா அவரே டாக்டரு.. கிளினிக்லகூட வேலை போட்டுத்
தரலாம். அவரு பாத்துக்க மாட்டாரா?

                               சரி சரி சாப்பிட்டுப் படுங்க.. அவன் கொஞ்சம் துர்ங்கட்டும்.

                              மறுநாள் சனிக்கிழமை.

                              வடக்குவீதி மூல அனுமார் கோயிலில் பதினெட்டு சுத்துசுத்திவிட்டு டாக்டர் கிளினிக்கிற்குப் போனான்.

                               கிளினிக் பெரிய கிளினிக்காக இருந்தது. வாசலிலே
அவரின் போர்டு இருந்தது.

                               வரவேற்பில் கேட்டுவிட்டு அவரின் அறைக்குப்
போனான். டாக்டர் இருந்தார்.

                               வாப்பா ராகவா என்று மறக்காமல் பேருடன் கூப்பிட்டு சிரித்தார்.

                               நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்.

                                வணக்கம் டாக்டர் என்றான்.

                               இங்க கிளினிக்ல ஆபிசுல வேலைபாரு. இது இரக்கப்பட்டு இல்லே. உன்னோட நிலைமைக்கு உதவணும்னு தோணிச்சி.அவ்வளவுதான். படிச்சவனா இருக்கறதாலதான். மாதம் நாலாயிரம் சம்பளம். உன்னோட சர்டிபிகேட் செராக்ஸ் மட்டும் ஆபிசுல கொடுத்துடு. வேலைய ஒழுங்கா பார்க்கணும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. வேற அரசுப் பணிக்கு தேர்வு எழுது. கிடைச்சா போயிடலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். வேற எந்த சலுகையும் கிடையாது உனக்கு. சரியா.திங்கட்கிழமையிலேர்ந்து வந்துடு.

                               சரிங்க டாக்டர்.

                               சரி போய்ட்டு வா..

                               வீட்டிற்குத் திரும்பி செய்தியைச் சொன்னான். 

                               ரொம்ப சந்தோஷம்பா.. டாக்டர் வழியா உனக்கு
ஒரு விமோசனம் பொறக்கட்டும்.. மகமாயி இருக்கா. கண் திறந்து
வைப்பா.. நம்பள.. அம்மா வேண்டிக்கொண்டு வாழ்த்தினாள்.

                                சரிம்மா என்னோட ஆஸ்பத்திரி செலவுக்காக யார்
யார்கிட்டே எவ்வளவு கடன் வாங்கினே சொல்லு.. அத முத மாச
சம்பளத்துல கொடுத்திடணும்..

                                 அன்று இரவு துர்க்கம் வரவில்லை.இந்த வேலை திருப்திதான். ஆனால் இது நிரந்தரம் அல்ல. இளைப்பாறல். சற்று தளர்வாக மூச்சுவிட இது ஒரு நிம்மதி. ராகவன் அடுத்தக்கட்ட தன்னுடைய இலக்கைப பற்றி யோசித்தபடி இருந்தான். 

                                  இரவில் அருகே படுத்திருந்த அம்மா மெதுவாகத்
தலையைத் திருப்பி ராகவா என்றாள் மெதுவாக.

                                  அம்மா ஏதோ ரகசியம் சொல்லப்போகிறாள் என்ற
ஆவலோடு என்னம்மா? என்றான் இவனும் மெல்லிய குரலில்.

                                  இனிமே பழைய ரசமும் கரப்பான் பூச்சி விழுந்த
சோறும் நமக்கு வேண்டாம்பா.. நம்ப குலதெய்வம் கருப்பையாவை
வேண்டிக்கப்பா..

                                                    (நிறைந்தது)

Saturday, June 28, 2014

மாறாதய்யா மாறாது.......தொடர்ச்சி



              மாறாதய்யா மாறாது


                             ராகவன் அதிர்ந்துபோனான். சின்ன கரப்புகள். மூடப்பட்ட தட்டின் வழியே உள்ள இடைவெளியில் உள்ளே போயிருக்கின்றன.

                              வயிற்று மைதானத்தில் பசிக்குதிரை வேகமாக ஓட ஆரம்பித்து
இருந்தது. அதன் குளம்படி சத்தங்கள் கேட்டன.

                              திரும்பி அம்மாவைப் பார்த்தான். நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். இது தெரிந்தால் கொட்டிவிட்டு சட்டென்று வேறு உலை வைத்துவிடுவாள். தவறில்லைதான் ஆனால் நாளைக்கு சாப்பாடு ஒருவேளை குறைந்துவிடும்.

                               மெல்லக் கரண்டியால் கரப்புகளைச் சோற்றோடு அள்ளி
வெளியில் போட்டான். திரும்பவும் கொஞசம் சாதத்தை மேலாக எடுத்து வழித்ததுபோல போட்டான்.

                                 விறுவிறுவென்று சாதத்தைத் தட்டில் போட்டு ரசத்தை ஊற்றி அவசரமாய் வாயில் ஒரு உருண்டை வைத்து கொத்தர (கொத்தவரங்காய்) வத்தலை எடுத்துக் கடித்ததும் தேவாமிர்தமாக இருந்தது.

                                   எல்லாச் சோறும் காலியானபிற்பாடுதான் பசியடங்கயிது. குளம்படி சத்தங்கள் ஓய்ந்துபோயிருந்தன.

                                   அப்படியே எழுந்து வந்து கைகழுவிவிட்டு அம்மாவின் அருகில் படுத்தான். அக்காக்கள் குறட்டை வேகமாக ஒலியெழுப்பியடி
இருந்தது.

                                   எப்படியாயினும் இவர்களுக்கான வாழ்கையைத் தேடிவிட்டுத்தான் ஓய்வேன் அப்பா.. என்று மானசிகமாக அப்பாவிடம் பேசிக்
கொண்டான்.

                                  கௌளி அடித்தது. அப்பாதான் சரியென்கிறார்.

                                  அம்மாவின் அருகில் படுத்தான்.

                                  அதிகாலை 4 மணிக்கு அடிவயிற்றில் எழுந்தது ஒரு வலி. குறைந்துவிடும் என்று எண்ணி எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்தான். படுக்கமுடியவில்லை. வலி அதிகமானது. விடவேயில்லை. தாங்க முடியாமல் போனபோது அம்மா என்று அலறினான்.

                                   அலறியடித்து எழுந்தது அம்மாவோடு வீடும்.

                                   என்னப்பா என்னாச்சு?

                                   வயித்து வலி தாங்க முடியலம்மா. நெஞ்ச வேற அடைக்குது. உடம்பெல்லாம் நடுக்குதும்மா.

                                     அய்யோ மகமாயி என்புள்ளக்கி என்னாச்சு தெரியலியே
அம்மா ஒப்பாரி வைத்ததில் அக்கம் பக்கமிருந்து சிலர் ஓடிவந்தார்கள்.

                                     நாலைந்துவீடுகள் தள்ளியிருந்த ராமு ஓடிவந்தான். அவன் ஆட்டோ ஓட்டுபவன். வரும்போது ஆட்டோவோடு வந்தான்.

                                      ஏற்றிக்கொண்டு ஓடினார்கள் அரசு மருத்துவமனைக்கு.

                                      ராகவன் துடித்துக்கொண்டிருந்தான்.

                                      மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில்  நாலைந்து டாக்டர்கள் அரைதுர்க்கத்தில் இருந்தார்கள். நைட் டூட்டி  பார்த்திருப்பார்கள்.

                                      ஆனாலும் ராகவனை அவசரமாகப் பரிசோதித்தார்கள்.

                                       உடனே சேர்க்கவேண்டும் அட்மிஷ்ன் போட்டார்கள்.
சிகிச்சையும் ஆரம்பமானது.

                                        ராகவன் அதற்குள் நாலைந்துமுறை வாந்தியெடுத்தான். இருமுறை வயிற்றுப்போக்கும் அப்படியே போனான்.

                                          ஏதோ சாப்பிட்டது விஷமாயிடிச்சி. கவலைப்பட வேண்டாம். சரியான நேரத்துக்குக் கொண்டு வந்திட்டீங்க.. என்றார்.

                                            ட்ரிப் போட்டார்கள்.

                                            ட்ரிப்பிலேயே நாலைந்து ஊசிகளை உடைத்துப் போட்டார்கள்.
                                            ராகவன் மயக்கமாகியிருந்தான்.

                                            பக்கத்தில் உட்கார்ந்து ராகவன் அம்மா அழுதுகொண்டிருநதாள்.

                                            அதற்குள் ராகவனின் அக்காக்கள் அக்கம்பக்கம் ஏதோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிகொண்டு மருத்துமனைக்கு வந்திருந்தார்கள்.

                                             நீங்க பாத்துக்கங்க.. நான் வீட்டுக்குப் போயி தம்பிக்கு சட்டை கைலி எடுத்துட்டு பாத்திரம் டம்ளர் எல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்.

                                             என்னம்மா சொன்னாங்க?

                                             சாப்பிட்ட சாப்பாடு விஷமாயிடிச்சாம்..

                                             ரசம்தானே சாப்பிட்டான். நடுராத்திரி சாப்பிட்டிருப்பாம்மா. ரசம் கெட்டுபோயிருக்குமோ.

                                             இருக்கும். அது நேத்து ரசம். அப்படியும் சுடவச்சிதானே வச்சேன்.

                                             மகமாயி என் புள்ளய காப்பாத்து.. இவன வுட்டா எனக்கு வேற கதி கிடையாதும்மா. என்றபடி மறுபடியும் அழுதாள் ராகவனின் அம்மா.

                                               அம்மா.. அழாதம்மா. தம்பிக்கு ஒண்ணும் ஆகாது.

                                               என்ன இது ஒப்பாரி வக்கறிங்க?  அவருக்கு ஒண்ணும் இல்லே. புட் பாய்சன். சரியாயிடும். வயிறு வேற புண்ணாயிருக்கு. கண்டதயும் சாப்புடுவாரா? நர்சு கேட்டாள்.

                                               நர்சை ராகவன் அம்மாவும் அக்காவும் வேதனையோடு
பார்த்தார்கள்.  கண்டதையும் சாப்புடுவானா? அதுக்கு ஏதும்மா எங்களுக்கு வழி? என்று நர்சிடம் சொல்லவேண்டும் என்று துடித்தது.

                                             ராகவன் அம்மா கிளம்பிப் போனாள் வீட்டிற்கு.

                                             அவள் போனதும் ராகவனின் அக்காக்கள் ராகவன்
கிடப்பதைப் பார்த்துக் கண் கலங்கினார்கள்.

                                              அவரவர் சாமியை வேண்டினார்கள்.

                                               கருப்பையா.. எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து எங்க த்ம்பிதான்.. அவன்தான் எங்களுக்கு எல்லாமும். சோதிக்காதய்யா.. காப்பாத்து..

                                               குலதெய்வம் கருப்பையாவைக் கூப்பிட்டதும் சொல்லி
வைத்ததுபோல ராகவன் லேசாகக் கண்விழித்தான்.

                                               தம்பி என்றார்கள். ராகவன் உடனே அம்மா எங்கே?
என்றான்.

                                                                                                                     (தொடரும்)


பி.குறிப்பு

                          அன்புள்ள நட்பு உள்ளங்களுக்கு

                          கதையை இன்றுடன் முடிக்க முடியவில்லை. கதை நீள்கிறது.
எனவே பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்.

                                                 

Friday, June 27, 2014

சிறுகதை



மாறாதய்யா மாறாது,,,,,,



                       நிறைய உடல் வெப்பத்தை இழந்திருந்ததால் சூரியன் மேற்கில் களைத்துபோய் தள்ளாடிக்கொண்டிருந்தான்.

                        தாய்ப்பசுவிடம் பால் குடித்ததும் பசி தீர்ந்த கன்றுக்குட்டியின் துள்ளல்போல் இரவு மெல்ல தன் வலையை வீசியிருந்தது.

                        அந்த வலையினுர்டாக நாலைந்து பறவைகள் கூடு திரும்பிக்
கொண்டிருப்பது வானப்போர்வையில் வரையப்பட்ட ஓவியங்கள் அசைவது
போலிருந்தது.

                         தெரு முழுக்க வாசல் தெளித்துக் கோலமிட்டிருந்தார்கள்.

                         இன்றைக்கும் ஐந்து மணிக்குப் பொழுதுசாயத் தொட்ங்கியவுடனே பெண்கள் செய்யக்கூடிய மறக்காத வேலைகளுள் ஒன்றாக இருந்தது.

                          பெரும்பான்மை பெண்கள் ஆறு மணிக்கு மேல் எந்த வேலையும் செய்வதாக இல்லை என்பதை சங்கம் வைக்காமல் தீர்மானமாய் உறுதி எடுத்திருந்தார்கள்.

                          நள்ளிரவில் ஆந்தைகள் அலறி இரைதேடப் புறப்படுவதுபோல மாலை ஆறுமணிக்குமேல் அத்தனை வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வாய்க்கூட்டை திறந்து தொடர் ஆந்தைகளை அலறவிட்டுவிடும்.

                           தெருவில் போடப்பட்டிருந்த நான்கு சோடிய வேப்பர் விளக்குகளில் இரண்டு எரியவில்லை. எனவே பாதி வெளிச்சமும் பாதி இருளுமாகத் தெருவிருந்தாலும் நடந்துபோகிறவர்கள் எதிரில் வருகிறவர்கள் தென்படுகிற சூழல் இருந்தது.

                              இப்படியான தெரு ஒன்றில்தான் உடல்சோர்வும் மனச்சோர்வும் ஒன்றிணைந்து வாட்ட ராகவன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.

                              படிக்கிறபோது கொஞ்சம் கனவுகள்

                              படித்து முடித்ததும் கொஞ்சம் கனவுகள்

                              வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கொஞ்சம்
கனவுகள்.

                              அதன்பின் மனதுக்குப் பிடித்தவளை மனைவியாக்கும் தருண நிகழ்வுகளைப் பெண் பார்க்கத் தொடங்கி மணவறையில் தாலி கட்டுவதுவரை எனக் கொஞ்சம் கனவுகள்.

                               பார்க்காமல் விட்ட பொருள்களைக் கரையான் அரித்ததுபோல
படித்து முடித்ததுமே அத்தனை கனவுகளும் அரிக்கப்பட்டுவிட்டன பயனற்று.

                               தொடக்கத்தில நம்பிக்கையோடு இருந்தான்.

                                அப்புறம் போராடவேண்டும் என்பதை உணர்ந்தான்.

                                போராடினான்.

                                 முடியவில்லை.  ஐநதாண்டுகள் கடந்துவிட்டன பட்டப்படிப்பு
என்று ஒன்றைக் கையில்வாங்கி ஆனால் வேலை அமையவில்லை.

                                  ஆயிரம் ரூபாய்க்கு அமெரிக்கா ஒப்பந்தம் போலப் பேசினார்கள்.

                                   கஷ்டக் காலத்திற்குப் பொருள்களை அடகு வைக்கலாம்.

                                   தவறில்லை.

                                    ஆனால் படித்த சான்றிதழ்களை அடகு வைக்கமுடியாது.

                                    சொற்ப சம்பளத்திற்கு மூலச் சான்றிதழ்களைக் கேட்டார்கள். உண்மையில் நல்ல வேலை கிடைக்கும்போது அவர்களிடம் வாங்க முடியாது. சட்டம் பேசுவார்கள். அவர்கள் பேசுகிற சட்டத்திற்கு முன்னால் தான் செல்லாக்காசுதான் என்று ராகவன் நினைத்து மறுகினான்.

                                     இடித்துப்போட்ட கட்டிட சிதைவுகளுக்குள் நடப்பதற்குத் தடுமாறுவதுபோல உடைந்த  தன் கனவுகளில் தடுமாறினான்.

                                      எல்லா வீட்டு வாசல்களிலும் வாசல் விளக்குகள் எரிந்துகொணடிருந்தன. உள்ளே தொடர் புதைமணலில் புதைந்துகொண்டிருந்தார்கள்.

                                       ராகவன் இவ்வளவு எளிதாக வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்பவே முடியாமல் ஏதோவொன்று
நெஞ்சடைத்துக் கிடந்தது.

                                      அப்பாவை நினைத்துப் பார்த்தான்.

                                      அடிக்கடி தன்னுடைய கதையைச் சொல்வார் அப்பா.. 67 சம்பளத்துக்கு வேலைக்குப்போனேன். அஞ்சு பிள்ளைங்க  என்ன பாடு பட்டிருப்பேன். ஒரு சொந்தக்காரன் சல்லிக்காசு உதவலே.. கழைக்கூத்தாடி
வாழ்க்கை வாழ்ந்தேன்.

                                          வுடுப்பா சதா புராணம் பாடறே... என்று விட்டு விலகி
ஓடுவோம்.

                                          இல்லடா தம்பி.. குடும்பக் கஷ்டம் உணர்ந்து நடக்கற புள்ளங்கதான் உருப்பட்டு கரையேறும்பார் பொறுமையாக.

                                          எதற்கும் கோபப்பட்டோ கை நீட்டி அடித்தோ அப்பாவைப் பார்த்ததில்லை.

                                          வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் அனுபவிக்கிற போது   தான் அப்பா அதற்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பதை.

                                           இருக்கும் வரை அப்பா புரியவில்லை. இறந்தபிறகு வாழ்க்கை தெரியவில்லை.

                                          ஒவ்வொன்றுக்கும் குட்டிக்கரணம் போடாத குறைதான். அப்போதுதான் அப்பா எத்தனை பாடுபட்டிருப்பார். ஆனால் எதையும் காட்டிக்
கொள்ளமாட்டார். கேட்டது கொடுக்கும் கற்பகவிருட்சமாகத்தான் இருந்தார்.

                                           மின்சாரம் வசதியில்லாத சிம்ளி விளக்கு ஏற்றப்படும்
வீட்டைப்போல ஆகிவிட்டது வாழ்க்கை.

                                           ராகவன் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே
நடந்தான்.

                                          யாருக்கு இல்லை பிரச்சினை. போராடிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். தலைக்குமேல் போனபிறகு சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன என்பதுபோல எல்லாவற்றையும் உதறிவிட்டு ஆறு மணிக்கு மேல் டிவி முன்பு நடுகல்லாகிவிடுகிறார்கள். கண்களில் மட்டும் உயிர் வைத்துக்கொண்டு.

                                         வாழ்க்கையின் எதார்த்தத்தைக் கொன்று  புதைக்கும்  ஒரு மெல்லக் கொலலும் விஷமாகத் தொடர்கள் இருப்பதையுணராத வாழ்க்கையில் அவர்கள் மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.

                                           உறவறுக்கும் மாயச்சுழலாக தொலைக்காட்சிப்
பெட்டி மாறிக்கொண்டிருந்தது.

                                          வாசல் கதவு திறந்து கிடந்தது. உள்ளே போனான்.
வீடு நிசப்தமாக இருந்தது. அம்மா படுத்துவிட்டிருப்பாள். அவளுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிக்
கொண்டிருந்தாள்.வாயைத் திறந்து கேட்கவில்லை. கேட்க முடியவில்லை. அவள் உரிமையாகக் கேட்டுப்பெறுபவர்களில் அப்பா இப்போது இல்லை.
ராகவன் மட்டுமே இருக்கிறான். ஆனாலும் அவனால் ஒரு தொலைக்காட்சி
பெட்டி விலைக்குக்கூட ஒரு வேலை கிடைக்கவில்லை.

                                         இந்த ஐந்தாண்டுகளில் அவன் பல வேலைகள் பார்த்துத்தான் இருந்தான். அதிலெல்லாம் அவனுக்கு மிஞ்சியது அவமானங்கள்தான். காயங்கள்தான். அவற்றில் இன்னும் சில ஆறாமல் பயன்படாமல் நாறிக்கொண்டிருக்கும் நீர்க்குட்டைகள் போல உறுத்திக்
கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் வாங்குகிற சம்பளத்தில் இரண்டு வேளை உணவு மட்டுமே உறுதியாக இருந்தது.

                                         இவனுடைய நண்பர்கள் எல்லாரும் ஏதேதோ வேலை தேடி சென்னை. திருப்பூர் மும்பாய் திருநெல்வேலி என்று சிதறியிருந்தார்கள்.
இவனால் அப்படிப் போகமுடியாது. தனக்கு மேலே வளர்ந்து கிடக்கிற பெண் பிள்ளைகளைக் கரைசேர்க்கவேண்டும்.

                                         அப்பா இறந்துபோகும்போது நான்கு பெண்களுக்கும் சேர்த்து ஐந்து பவுன்தான் சேர்த்து வைத்துவிட்டுப்போயிருந்தார்.கூடவே ஒரு
சின்ன ஓட்டுவீடு. அறைகளேயில்லாத திருமண மண்டபத்தைப் போல.

                                         ஐந்து பவுனை வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையின் நுழைவுக் கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாது.

                                         இவன் உள்ளே வாசனை உணர்ந்து ராகவன் அம்மா
விளக்கைப் போட்டாள்.
                                          வெக்கையா இருக்கு. குளிச்சிட்டு ரசம்தான் வச்சிருக்கேன்.கொத்தரவத்தல் வறுத்திருக்கேன். சாப்பிடு. இன்னிக்கு காய் வாங்க முடியலேப்பா..

                                         குளித்ததும் உடல் முழுக்க ஒரு களைப்பு அழுத்தியது.

                                         கண்கள் செருகின. அப்படியே படுத்துவிட்டான்.

                                         ராகவன் அமமா பதறிப்போனாள்.

                                         என்னப்பா ஆச்சு?  சாப்பிடலே... நான் போட்டுக் கொண்டு வரவா?
                                         வேண்டாம்மா. அலைஞ்சது காலெல்லாம் வலிக்குதும்மா. துர்ங்கறேன் பசித்தா அப்போ எழுந்து சாப்பிட்டுக்கறேன். என்றபடி அப்படியே தரையில் சரிந்து படுததுறங்கிப்போனான்.

               நள்ளிரவில் விழிப்பு வந்தது. பசி. மெல்ல எழுந்து வந்து  அடுப்புக் கருகில் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு  ரசக் கிண்ணத்தையும் அருகில் எடுத்துவைத்துக்கொண்டான். சாதம் இருந்த அலுமினியப்  பாத்திரத்தைத் திறந்தான். உள்ளே நாலைந்து கரப்பான் பூச்சிகள் நுழைந்து  இறந்து
கிடந்தன.

                                                                                                                 (நாளை முடியும்)

Thursday, June 26, 2014

அன்பு காட்டுவேன்.... (சிறுவர் பாடல்)





                                                  வாங்க வாங்க சிட்டுக்குருவி
                                                  எங்கே வந்தீங்க?

                                                  பறந்து பறந்து களைச்சுபோச்சு
                                                  சும்மா இருங்க..

                                                  வேப்பமரத்துக்  குடைக்குக் கீழ
                                                   என்ன பண்றீங்க?

                                                  பறந்த களைப்பு போககத்தான்
                                                  இளைப்பாற வந்தேங்க..


வாங்க வாங்க தவிட்டுக்குருவி
            எப்போ வ்ந்தீங்க?

சிட்டுக்குருவி தம்பி பாத்து                                   ரொம்ப நாளாச்சுங்க..அவன்கூட
சிநேகம் பண்ண இப்ப வந்தேங்க..

 
                                             

                                                   என்ன வேணும் என்ன வேணும்
                                                   இப்போ கேளுங்க.-?

                                                   கொத்தி சீய்ச்சு திங்க அரிசி
                                                   கொஞ்சம் இருக்கா இப்ப சொல்லுங்க..

                                                   தாராளமா தாராளமா அரிசி தரேங்க
                                                   சந்தோஷமா சந்தோஷமா நீங்க தின்னுங்க..

                                                    அடடா தேன்சிட்டு தேன்சிட்டு
                                                    எப்போ வந்தீங்க?

                                                    நான் வந்து நேரமாச்சு நீங்க
                                                    பாக்கல...

                                                    உங்களுக்கும் என்ன வேணும்
                                                    உடனே கேளுங்க..தேன்சிட்டு
                                                    உடனே கேளுங்க.....

                                                    இந்த அன்பு துன்பமில்லா
                                                    எப்பவும் வேணுங்க..எங்களுக்கு
                                                    எப்பவும் வேணுங்க..


    நிச்சயமா நிச்சயமா அன்பு
    காட்டுவேன்...

    ஆசை தீர ஆசைதீர
    அன்பு காட்டுவேன்..

 




                                                     எல்லா உயிர்க்கும் அத
                                                     சேத்துக் காட்டுவேன்...
                                                     சேத்துக் காட்டுவேன்..



     பாடல்...2


                                                   காக்கா பாரு காக்கா பாரு தம்பி
                                                   உன் காரியத்தில் கண் வையுடா தம்பி..

                                                   கிளிய பாரு கிளிய பாரு தம்பி
                                                   கிடுகிடுன்னு துள்ளியாடு தம்பி...

                                                   குயில பாரு குயில பாரு தம்பி
                                                   தாய்த் தமிழைப் பேசிப்பாரு தம்பி..

                                                   முயல பாரு முயல பாரு தம்பி
                                                   முன்னேற வழிய பாரு தம்பி...

                                                   எல்லாம் பாரு எல்லாம் பாரு தம்பி
                                                    ஏமாந்து போகாதே தம்பி...


                                           0000000000





                                                   

                                                  

Wednesday, June 25, 2014

காவிரிக்கரையில்.....பொட்டல நினைவுகள்...



                             திருவையாற்றுக்கு அருகில் திரண்டோடுகிறது காவிரி. எனக்கு
விவரம் தெரிந்த நாள் முதலாக காவிரி எனக்குப் பழக்கம்.

                             அம்மாவின் பிறந்த ஊர் காவிரிக்கருகில். சிறு வயதிலிருந்து அம்மா அவள் பிறந்த ஊரில் நடக்கும் கோயில் திருவிழாவிற்கு அழைத்துக்கொண்டு போய்விடுவாள்.

                               காப்பு கட்டிய மறுநாளிலிருந்து நாங்கள் அங்கிருப்போம். அம்மாவின் தம்பிகள் மாமாக்கள் அவர்களின் குடும்பங்கள் என அந்த கிராமத்தையே அல்லோகப்படுத்திவிடுவோம். காலையில் சாப்பிட்டு கிளம்பினால் வயல் வரப்புகளில் ஒடுவோம். நண்டுகள் பிடிப்போம். ஈச்ச பழங்கள். இலந்தைப்பழங்கள் எனப் பறித்து தின்போம். இலந்தைப் பழங்கள் நாவில் புண்ணாக்கி எரிச்சல் வரும்போது அருகேயுள்ள வாய்க்கால் நீரை அள்ளிஅள்ளிக் குடிப்போம். அப்புறம் குளத்தில் நீச்சல். தாமரை பறிப்போம். அதைன் தன்னை மடக்கி ஒடித்து மடக்கி மாலையாக்கி திரௌபதையம்மனுக்குப் போட்டுவிட்டு மதியச் சாப்பாட்டிற்கு 4 மணிக்கு வீட்டிற்குள் நுழைவோம்.

                             அறுவடை செய்த வயலில் வாணவேடிக்கை. தீமிதிக்காகப் போடப்பட்டுள்ள படுகளம்.. பாரதக்கதையின் இறுதிக்கதை என ஒவ்வொரு நாளும் போதாமல் ஏக்கமுறச்செய்யும்.

                               காவிரிக்கரையோரமாக அம்மாவின் ஊருக்கு நடந்தே போவோம். ஊரு தொடங்கும் முக்கில் முனியாண்டவர் கோயில் உண்டு. அங்கு அம்மா கண்டிப்பாகச் சாமி கும்பிடவைத்து திருநீறு பூசிக்கொள்ளவேண்டும். அப்புறம் அருகிருக்கும் டீக்கடையில் சூடாகப் பொட்டலங்கள்  காராச்சேவு. மணி காராபூந்தி. பக்கோடா. ஓலைப் பக்கோடா எனப் பொட்டலங்கள் வகைவகையாக இருக்கும். தின்று முடிப்பதற்குள் நடையும் முடிந்துவிடும். ஊரும் வந்துவிடும்.

                                எனவே ஒவ்வொருமுறை போகும்போது காவிரி பற்றி பல கதைகளை அம்மா சொல்லிக்கொண்டேவருவாள். கடைசியாக காவிரியைக் கடந்துதான் அம்மாவின் கிராமத்திற்குப் போகவேண்டும். எனவே ரோட்டை விட்டுக் காவிரிக்கு இறங்கும் ஒற்றையடி மண்பாதையைப் பார்த்துவிட்டால் பறந்துகொண்டு ஓடுவோம். ஓடி வரும் எங்களை குளிர்காற்றால் வரவேற்பாள் காவேரி. அங்கங்கே திட்டு திட்டாக தண்ணீர் கிடக்கும். அதில் அப்படியே பொத்தென்று விழுந்து உடல்முழுக்கக் குளித்து பின் காய்ந்து பின் குளித்து எனப் போவோம்.

                                  காவிரிக்கரையேறும்போது கரையோரம் பெரும்பான்மை பல தோட்டங்கள் கிடக்கும். அம்மாவின் சின்னம்மாக்கள் பயிரிட்டிருப்பார்கள். அவரை. கீரை. புடலை. பாகல். முள்ளங்கி. எனவிருக்கும். எங்களைப் பார்த்ததும் அம்மாச்சிக்கள் படபடவென்று முள்ளங்கிகளைப் பிடுங்கி காவிரித் தண்ணீரில் அலசிவிட்டு ஆற்றில் கிடக்கும் உருக்காங்கல்லில் வைத்து அந்த முள்ளங்கியை முழுசாக நசுக்கி பின் இடுப்பில் வைத்திருக்கும் சிவப்பு மிளகாய் உப்பு சேர்த்து பொடித்த பொடியைத் துர்வி அந்தப் பச்சை முழு முள்ளங்கியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அதன் சுவையை எழுத ஒரு நாவல் ஆகும். பின் அப்படியே காவிரி தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்துவிட்டு அம்மாவின் பிறந்த வீடு நோக்கி ஓடுவோம்.

                                  அம்மாவின் சித்தப்பா அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி சின்ன அக்காவைத் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்துகொண்டு போனார். நகரத்தில் வளர்ந்த அக்காவிற்கு கிராமம் ஒத்துவரவில்லை. பல பிரச்சினைகள். அக்கா நிமமதியாகவே இல்லை. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமாகப் பழகிக்கொண்டது. அப்போது எல்லாம் தஞ்சையில் இருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு அக்காவைப் பார்க்கப் போவது வழக்கம்.

                                 போவதற்கு அடிப்படையான காரணங்கள்.

                                 1. அக்காவின் பாசம்.
                                 2, அக்காவின் வாசனையான சமையல்.
                                 3. சமைப்பதற்கு ஆகும் நேர இடைவெளியில் கிராமத்து
டீக்கடையில் வாங்கிகொடுக்கும் பொட்டலம். பெரும்பாலும் காராசேவுதான்.
அப்புறம் இனிப்புப் போண்டா.
                                 4. வரும்போது குறைந்த பட்சம் 1ரூபாய் கைச்செலவுக்குத்
தருவார்கள். அது பெரிய தொகை.

                               எப்படியும் வாராவாரம் அக்காவீட்டிற்குச் சென்றுவிடுவோம்.
அக்கா வீட்டில் தங்கியிருக்கும் நாட்கள் சுகமானவை. எங்களைவிட அக்கா
ரொம்ப நிம்மதியாக இருக்கும். எப்பவாவது திருவையாறு ஜெயம் தியேட்டரில் சினிமா பார்க்கக் காவிரியாற்றைக் கடந்துபோவது உண்டு. தியேட்டரில் நாற்காலிகள் கிடையாது. மணல் பரப்பியிருபபார்கள். ஆனால் அக்கா கிளம்பும்போதே போட்டு உக்கார துண்டும் படம் முடியும்வரை தின்பதற்கு இனிப்புப் போண்டாவும் காராச்சேவும் வாங்கி மஞ்சள் பையில் கொண்டு வந்துவிடும்.

                               காலையில் சாப்பிட்டுவிட்டு துணிகளை எடுத்துக்கொண்டு அக்கா காவிரிக்குக் குளிக்கப்போகும். துணைக்குப் போவேன். அக்கா துணிகளைத் துவைத்துக் கொடுத்தபின் வாங்கி வாளியில் வைத்துவிட்டு. பின் அக்கா நீச்சலடித்துக் குளிக்கும். ஆசையாக இருக்கும். அப்புறம் நீச்சல் பழகியபின் காவிரியை அக்கா வீட்டிற்கருகில் இறங்கி நீந்தி எதிர்க்கறையில்
தியாகராசர் உற்சவம் நடக்கும் படித்துறையில் போய் ஏறி பின் அதேபோன்று ஆட்கொண்டார் கோயிலுக்கருகில் இறங்கி அக்காவின் கிராமத்திற்குப் போகும் பாதையில் கரையேறுவோம்.

                           எனவே அதற்குப் பின் அடிக்கடி கிராமங்களில் நடக்கும் துக்க காரியங்கள் என்றால் முன்னால் நிற்பேன் போவதற்கு. காரணம் பிணம் எடுக்கும் வரை எங்கும் சாப்பிடமுடியாது. ஆனால் அக்கா கிராமத்து டீக்கடையில் வாங்கிக்கொடுக்கும் பொட்டலங்கள் தின்பதற்குக் கிடைக்கும்.
பின்னாளில் வளர்ந்து ஆளான பிற்பாடும் ஒவ்வொரு அம்மாச்சியாக உயிர் பிரிந்துகொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் ஆசையுட்ன் போவேன். முதலில் பொட்டலம் காராசேவு தின்றுவிட்டுதான் சாவு வீட்டிற்கே போவேன்.

                          கட்லை மாவு அதிகம் இருக்கும் காராச்சேவுவில். அரிசி மாவும் கலந்து இருக்கும். ஆனாலும் அப்போதெல்லாம் 1 ரூபாய் பொட்டலம் நிறைய இருக்கும். கலர் வெந்நீரைப் போல டீ இருக்கும். ஆனாலும் அந்தப் பொட்டலத்தின் ருசியும் டீயின் ருசியும் வேறு எங்கும் கிடைக்காதது. அந்தப்
பொட்டலத்தின் அளவு  அந்தக் கிராமத்தின் பெருந்தன்மையை சூடிக் கொண்டு
இருக்கும்.

                           வயது வித்தியாசமின்றி எல்லோரும் பொட்டலங்கள் சாப்பிடுவார்கள். பல் முளைத்த குழந்தைக்குக்கூட அந்தப் பொட்டலங்களைத் தின்னக் கொடுப்பார்கள்.

                             அக்காவிற்கு ஒரு நோய் வந்து முடக்கிப்போட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையிலேயே இருந்தாள். ஏதோ நரம்புப் பிரச்சினை என்றார்கள். நாளுக்கு நாள் அக்காவின் உடல் சுருங்கிக்கொண்டே வந்தது அளவில். பார்க்காத வைத்தியங்கள் இல்லை. மருத்துவம் நடந்து
கொண்டேயிருந்தது. மாத்திரைகளும் லேகியங்களும் எனத் தின்றுகொண்டே
இருந்தாள் அக்கா.

                               ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய இளம் வயதில் அக்கா இறந்துபோனாள். வாழவேண்டிய வயதில் துர்ர்ந்துபோனாள். காவிரிக் கரையில்தான் தகனம் செய்தோம்.  மறுநாள் பால் தெளியலுக்குப் போனோம்.
ஆனால் அக்காவின் உடம்பில் கடுகளவுகூட எலும்பு கிடைக்கவில்லை. மைதா மாவைப்போல உடம்பு முழுக்க பவுடராகவே இருந்தது. அவள் பதினேழு ஆண்டுகள் சாப்பிட்ட மாத்திரை மருந்துகளின் மோசமான விளைவுகளால் உடம்புமுழுக்கத் தீபட்டதும் வெண் சாம்பலாக இருந்தது.
எனவே பால் தெளியலுக்கு ஒரு கொட்டாங்குச்சியில் அந்தளவுக்கு சாம்பலை
எடுத்து எல்லாக் காரியமும் நடந்த்து. அந்தக் கொட்டாங்குச்சி அளவு என்பது
ஒரு காராச்சேவு பொட்டலத்தின் அளவுதான்.

                              இன்றுவரை பொட்டலம் சாப்பிடுவது பிடிக்காமல் போய்விட்டது. அக்காவே பொட்டலம்போல ஆகிவிட்டாள். இன்றைக்குக் காவிரி வறண்டுப்போய்விட்டது. அக்கா வாழ்ந்த காலங்களில் நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடிய காவிரி அக்காவின் துர்ர்ந்த வாழ்வைப்போலவே அவளுக்காகவே வறண்டுப்போய்விட்டது போலும் அழுது அழுது.

                               ஏதேனும் நிகழ்வு குறித்து திருவையாறு தாண்டிச் செல்லும்போதெல்லாம் காவிரியைப் பர்க்கிறேன். வறண்டுக் கிடக்கிறது.
அக்காவின் நினைவில் வறண்டுபோகிறது மனதும்.
                               

Tuesday, June 24, 2014

கண்ணனின் புல்லாங்குழல்



                                     கண்ணனின்
                                     புல்லாங்குழல்

                                     கவிதையின்
                                     முகம்

                                     வாழ்வின்
                                     எளிமை

                                     வாழ்வதன்
                                     சுவை

                                     சொல்லால்
                                     வருடியவன்

                                     இதயத்தில்
                                     துடித்தவன்
                                                                                                                       
                                                                                                                  இன்றைக்கு

                                     மட்டுமல்ல
                                     என்றைக்கும்
                                     நினைக்குந்தோறும்
                                     சுகந்திருப்பவன்

                                     பிற்ந்துவிட்டாய்

                                     என்றைக்கும்
                                     இறக்காதவன்

                                 
                                     கவிதை
                                     மரணமடைந்த

                                     கதையுண்டா?

                                   







Monday, June 23, 2014

மொய்மொய்னு பேசாதீங்க



                            மொய்மொய்னு பேசாதீங்க....



                     மொய் எனும் சொல்லுக்கு இரண்டு பொருள்களைக் கொள்ளலாம் ஒன்று வினைச்சொல் இன்னொன்று பெயர்ச்சொல் என இரண்டின் அடிப்படையில பொருள் கொள்ளலாம்,

                   1. வினையாக வரும்பொழுது அது கூட்டமாகச் சேர்தல். குழுமுதல் அல்லது சேர்ந்து ஒன்றில் பொருந்துதல் (அதாவது இனிப்புப் பணடத்தில் ஈக்கள் மொய்த்தன- பூக்களில வண்டுகள் மொய்த்துக்கிடந்தன- போர்க்களத்தில் வீரர்கள் போரிடுவதற்கு மொய்த்தனர்) என்று பொருள்
கூறலாம்.  எனவே மொய் என்றால் கூடு. கூட்டமாக சேர்ந்து நில் என்பது
பொருளாகக் கொள்ளலாம்.

                   2. மொய் எனும் இரண்டாவது பெயர்ச்சொல்லாக வரும்பொழுது ஒரு  நிகழ்வில் உறவினர்கள் அன்பளிப்பாகத் தரும் பணம் எனறு பொருள் கொள்ளலாம். அது இன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி துன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி. இவ்விரு நிகழ்வுகளிலும் கூட்டமாக உறவினர்கள் வந்து பணம் செய்வதால் கூட்டமாக வந்து செய்ததால் சேர்ந்த பணம் எனும் நிலையில் பொருள் விரிவாக்கத்தில் மொய் (கூட்டமாய்) யாய் வந்த பணம் என்று பொருள் வந்திருக்கவேண்டும்.

                           மொய் விருந்து என்பது உறவுகளில் தடுமாறி சாகிற நிலைக்கு ஆளாகிற ஓர் உறவினைத் துர்க்கி (பொருளாதார ரீதியாக) நிலைநிறுத்த நடத்தப்படுவது உண்டு. வன்முறை வரைக்கும் சென்ற மொய் நிகழ்வுகளும்
உண்டு.

                       எனவேதான் கூட்டங்கூட்டமாய் பேசும்போது வயதில் பெரியவர்கள் ஏம்பா மொய்மொய்னு பேசாதீஙக் ஒரு முடிவுக்கு வாஙக் இப்ப என்ன தாலி கட்டச் சொல்றதா? வேண்டாமா? என்பார்கள், அல்லது பொணத்த எடுக்கறதா? வேண்டாமா? என்பார்கள்.

                         மொய் என்பதற்கு அகராதிகள மேலும் நெருக்குதல். இறுகுதல். பெருமை. போர்க்களம். அன்பளிப்புப் பணம் எனும் கூடுதல் பொருள்களைத்
தருவதைக்   காணலாம்.

                          சரி எதற்கு இத்தனை இப்போது விளக்கம் என்று யோசிக்கலாம்.
என்னுடைய அனுபவம் மொய்யோடு நெருஙகிய தொடர்புடையது அதற்காகவே இந்த பீடிகை.

              நீங்கள் ஒரு திருமண நிகழ்விற்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம் அங்கு நீங்கள் கடைபிடிக்கவேண்டிய சில விதிகள் உண்டு.

                                   1. எக்காரணம் முன்னிட்டும் மொய் எழுத ஒப்புக்
கொள்ளக்கூடாது. முடிந்தவரை தப்பித்துவிடுவது  நல்லது. மாட்டிக் கொண்டால் அது பெரிய ஆபத்தில்  சிக்கிக்கொண்டது போலத்தான்.

                                   2. மொய் எழுதும் தைரியம் உங்களுக்கு இருந்தால்
 பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

                                   அ, உங்கள் கையெழுத்து கிறுக்கலாக இருக்கக்கூடாது.

          ஆ. கையெழுத்து அழகாக இருக்கவேண்டியதில்லை. ஆனால்  குண்டு குண்டாக இருக்கவேண்டும். ஒரு எழுத்திற்கும் இன்னொரு எழுத்திற்கும் இடைவெளி   தாராளமாக விடப் பழகியிருக்கவேண்டும்.

          இ.  எக்காரணம் முன்னிட்டும் கோபப்படக்கூடாது.
                               
           ஈ.  உங்களுக்குக் காதுகள நன்றாகக் கேட்கவேண்டும்.

           உ. உங்களுக்குப் பக்கத்தில் உக்காருபவர் சரியாகவும் விரைவாகவும் பணத்தை வாங்கி பையில் போடுபவ ராக இருக்கவேண்டும.

          ஊ. மொய் எழுதுவற்கு முன்பு அந்த வீட்டில் குறைந்தபட்சம் காலை டிபனாவது சாப்பிட்டுவிடவேண்டும். மொய் எழுத உட்கார்ந்தால் கண்டிப்பாகக் கடைசிப்பந்தி குறைந்த பட்சம் சாப்பாடும் ரசம் அல்லது மோர் மட்டுமே பசி மரத்துபோனவுடன் கிடைக்கும், அதற்குத் தயாராக இருக்கவேண்டும்,

          அப்புறம் மொய் எழுதும்போது ஏற்படும இடையூறுகள் பின்னால் கடைசி யில் கணக்கு ஒப்படைக்கும்போது பணம் குறையும்போது தெரியும். எனவே ஆரம்பத்திலேயே இடையூறுகளை முடிந்தவரை குறைத்து தவிர்க்க  வேண்டும். முற்றிலும் தவிர்க்கமுடியாது.

                                     இடையூறுகள்.

  1, மொய் நோட்டில்  முதல் பக்கம் விழா பற்றிய விவரம். எழுதாமல்   விடுவது.

  2. அதற்கப்புறம் எத்தனைப் பக்கங்கள் விடுவது என்று   மொய் எழுதச் சொன்னவரிடம் கேட்டுக்கொள்ள  வேண்டும்.

  மோதிரம் போடும் தாய்மாமாக்கள், சம்பந்திப் பணம்   போடு பவர்கள். பட்டம் கட்டும் முறையுள்ளவர்கள்  (எவ்வளவு கிராம்? மாங்காய் வடிவக் காசா.வட்டக் காசா..காது உள்ளதா இவ்வளவு விவரம்  எழுத    வேண்டும்) பெரிய தொகையாக மொய் எழுதும்  முக்கிய நெருங்கிய உறவுகள். இவர்களுக்கான  வரிசைமுறைகளை மொய் நோட்டில் எழுதப்படவேண்டும்.
இல்லையெனில் பெரிய சண்டையாகிக் கடைசியில எல்லாத்துக்கும்
மொய் எழுதுனவன்தான் காரணம்னு முடிந்துவிடும்..

  3.   சில்லறை  கொடு என்று ஆயிரம் ஐந்நுர்று நீட்டுபவர்கள்.

   4.  இரண்டு பேருக்கு மொய் எழுதிவிட்டு பாக்கிகொடு என்று வங்கிக் கவுண்டர் முன் நிற்பவர்கள் போல்   கேட்பவர்கள்.

    5. சில்லறை கொடுத்துவிட்டு சட்டென்று நினைவுக்கு வரும் சில்லறை கொடுத்தோமே அதற்குரிய நேர்ட்டை வாங்கினோமா? என்று.

   6. இவ்வளவு களேபரத்திற்கிடையில் ஒருவர் ஊர். தாத்தா.அப்பா வகையறா சொல்லி மொய் எழுதச் குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்.

  7. வயதானவர்கள் சிலர் இதற்கிடையில் ஏம்பா சீவல்  இல்லே? என்பார்கள். சுண்ணாம்பு காஞ்சிப்போச்சி தண்ணி ஊத்தச்சொல்லுப்பா என்பார்கள்.

  8. ஏண்ணே அவங்களக்கு மீதி ஐம்பது ருபா கொடுங்க. இருநுர்று கொடுத்தாரு நுர்த்தம்பதுதான் மொய்..

 9.  சரி நாலாயிரம் கொடு மைக் செட்டுக்காரனுக்கு செட்டில் பண்ணணும். ஒரு ஓரமா எழுதிக்கோ என்று மொய் எழுதச் சொனன்வர் கை நீட்டிக் கேட்பார்.

 கிட்டத்தட்ட நான் ஒரு ஐம்பது திருமண நிகழ்விலாவது மொய் எழுதி யிருப்பேன் (வற்புறுத்தி மாட்டி வைப்பார்கள்- முகத் தாட்சண்யத்திற்காக
மாட்டிக்கெர்ள்வது மறுக்கமுடியாமல்). அதன் அனுபவம்தான்மேலே கண்டது.

                           நான் கடைசியாக மொய் எழுதும் போரை முடித்து ஞானம் கொண்டதை சொல்கிறேன்.

            அது கள்ளர் வீட்டுக் கல்யாணம். என்னுடைய நண்பன் கல்யாணம்.  மொய் எழுதச் சொன்னார்கள். எழுதுடா உன் எழுத்து நல்லா இருக்கும் (எந்த எழுத்து கையெழுததா? தலையெழுத்தா?) நண்பர்கள் உசுப்பல் அப்புறம் உனக்குத்தாண்டா பொறுமை அதிகம். உசுப்பி விடுவார்கள்.

           மொய் நோட்டைப் பிரித்து வைத்து முதல் போணி பண்ணக் காத்திருந் தேன். ஒரு வயதானவர் வந்தால். இடுப்பில் வேட்டி  மேல் சட்டையில்லை. ஆனால் ஒரு வெள்ளைத்துண்டு. இடுப்பில் வெத்திலை சீவல் வைக்கும் பெரிய முடிச்சு இருந்தது.

                               என் அருகே வந்து என்னை ஏறஇறங்கப் பார்த்தார். அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு

                                   சொல்லுங்க தாத்தா என்றேன்.
                                   நான் தாத்தாவா உனக்கு? என்றார்.
                                   சரி சொல்லுங்க என்றேன்.
                                   யாரு மொய் புடிக்கிறது என்றார்.
                                    நான்தான் எழுதுறேன் என்றேன்.
                                    என்ன படிச்சிருக்கே? (மொய்க்குன்னு படிப்புண்டா?)
                                    டிகிரி படிச்சிக்கிட்டிருக்கேன்.
                                    சரி ஒழுங்கா எழுதுவியா?
                                    எழுதுவேன்,
                                    பேனாவக் காட்டு என்றார்.
                                    (கோபத்தை அடக்கிக்கொண்டேயிருந்தேன்.)
                                     நல்லா எழுதும் பேனா இது. (அப்போ அந்த ரீபில் 1
ரூபாய் பத்திரம் என்று சொல்லி நண்பனின் அப்பா தந்துவிட்டுப்போனார்.)
                                     சரி எழுது என்றார்.
                                     சொல்லுங்க என்றேன்.
                                     அதுவரை பணம் எடுக்கவில்லை.
                                      சொன்னார்.
                                        நாஞ்சிக்கோட்டை..
                                        நாஞ்சிக்கோட்டை
                                        விளார்  ரோடு
                                        விளார் ரோடு
                                        வல்லுண்டாம் பட்டு கிராமம்
                                        வல்லுண்டாம் பட்டு கிராமம்
                                        ஆவன்னா கோவன்னா ராமசாமி தஞ்சிராயர்
                                        ஆவன்னா கோவன்னா ராமசாமி தஞ்சிராயர்
                                        மகன் ஆர் பாலய்யா தஞ்சிராயர்
                                        பாலய்யா தஞ்சிராயர்
                                        எழுதிட்டியா
                                         எழுதிட்டேன்
                                         குனிந்து மொய் நோட்டைப் பார்த்தார்..
                                         என்ன இது கோழி சீச்சமாதிரி எழுதியிருக்கே
                                         அவர் சொன்னதைப் படித்துக் காண்பித்தேன்
                                         ஓரளவுக்கு திருப்தியானார்.
 பின் மெல்ல தன் இடுப்புப் பகுதியிலிருந்த வெத்திலைப் பொட்டலத்தை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு பின் வேட்டி மடிப்பில் இருந்து சுருண்ட அந்த ரூபாய் நோட்டை எடுதது மொய்நோட்டுமேல போட்டு ரெண்டு ரூபாய் எழுதிக்கோ என்றார்..
                                           அப்போது இருந்த ரெண்டு ரூபாய் நோட்டு
                                           எழுதிக்கொண்டேன்.
(குறிப்பு  - அப்போது எல்லாம் 2 ரூபாயில் ஆரம்பித்து 5. 10. 15.. 20. 21. 25. 31. 40. 50. 51. 100.101.200. 201 இப்படித்தான் மொய் வரிசை எழுதுவார்கள் இது அவர்களின் பழக்க வழக்கங்களைப் பொறுத்து மொய் அதிகத் தொகையில் எழுதுவார்கள். 10 க்கு மேல் எழுதினால் அது அதிகம்)
                                          இப்படியாக அந்த மொய் எழுதி முடித்தேன்.
         அன்று மாலை 4 மணியளவில் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வந்து விட்டேன்.
                                           மறுநாள் சனிக்கிழமை.

      அதற்கடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி இருக்கும். அந்த திருமணமான நண்பன் வீடு தேடி வந்தான்.
                                                 என்னடா இது காலையிலேயே என்றேன்.
                                                  அவன் முகம் சிரிப்பாக இல்லை.
                                                 என்னடா என்ன பிரச்சினை? என்றேன்,
 அவன் ஒரு நோட்டை நீட்டினான். அது நான் எழுதிய மொய் நோட்டு.
                                                 எதுக்குடா இது என்றேன்,
                                                 அவன் சொன்னான்.
                                                 உன் எழுத்து புரியலியாம். அதனால எல்லாத்தையும் நிறுத்தி அழகாக எழுதிக்கொடுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க எங்க அப்பா.
                                                  என்ன இது இந்த எழுத்து புரியலியா?
                                                 ஆமாம் எழுதிக்கொடு.
 சரி கொண்டா எழுதி வைக்கறேன். சாயங்காலம் வாங்கிக்க.
இந்தா என்று அந்த 2 ரூபாயைக் கொடுத்தான். முதல் போணி பண்ணன நோட்டு அது.
      இது கிழிஞ்சிருக்கு செல்லாதாம். பாத்து வாங்க மாட்டானான்னு உன்ன எங்கப்பா திட்டறாருடா.. இத வச்சிக்கிட்டு வேற நோட்டுக் கொடு.

     சரி கொண்டா என்று உள்ளே போய் எங்கப்பாவிடம் இருந்து ஒரு ரூபாய் நாணயம் இரண்டு வாங்கிட்டு வந்து அவனிடம் கொடுத்தேன். சாயங்காலம் வரேன மொய் நோட்டு வாங்க என்று சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
                 உனக்கு இதெல்லாம் தேவையா என்றபடி அந்த செல்லாத நோட்டை அப்பா வாங்கிப் பையில் வைத்துக்கொண்டார்.

                 பளளியில் ஒரு பாடத்தைப் படிக்கவில்லை என்றால் வாத்தியார் தண்டனையாக அந்தப் பாடத்தை 5 முறை எழுது என்று இம்போசிசன் கொடுப்பார்கள்.

               உலகத்திலேயே மொய் நோட்டை இம்போசிசன் எழுதியவன் என்ற பெருமை எனக்கே உண்டு.

               இன்றைக்கும் நானும் அந்த நண்பனும் நட்பில் இருக்கிறோம். நட்பைவிட உயர்ந்தது ஒன்று உண்டோ.

             வெட்டப்படும் ஆட்டிற்குத் தண்ணீர் ஊற்றும்போது ஒரு சிலிர்ப்பு சிலிர்க்குமே அதுபோல யாராவது மொய் என்று உச்சரித்தாலே போதும் இன்றைக்கும் எனக்கு சிலிர்க்கும்.

                                                              00000000000000