Monday, May 7, 2012

தமிழவேள் உமாமகேசுவரமபிள்ளை

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் பிறந்தநாள் இன்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். அவரின் தமிழ்ப்பணிகள் என்றைக்கும் தமிழ்கூறு நல்லுலகின் அழியாத பதிவுகள். புதையல்கள். சாகா வரம்போல அவை. இவர் குறித்து கரந்தைஜெயக்குமார் தனது வலைப்பக்கம் சில அரிய செய்திகளை அள்ளி தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் சான்றாக உங்களுக்குத் தருகிறேன். நன்றி திரு ஜெயக்குமார்.


     
     நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

       வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடிய முதல் அமைப்பும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இவையெல்லாம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் உமாமகேசுவரனார் அமர்ந்து ஆற்றிய பணிகளுள் ஒரு சிலவேயாகும்.

        7.5.2012 ஆகிய இந்நாள், மூச்செல்லாம் தமிழ் மூச்சு, பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சு, பெற்றதெல்லாம் தமிழ்த் தாயின் வெற்றி என வாழ்ந்து காட்டிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் அவர்களின் 130 வது பிறந்த நாள் ஆகும்.

இந்நன் நாளில்
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். தமிழவேளின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.


செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
60 வது நினைவு நாள்
(9.5.2012)

      
             தாயாகி உண்பித்தான், தந்தையாய்
             அறிவளித்தான், சான்றோ  னாகி
             ஆயாத  நூல்பலவும் ஆய்வித்தான்
             அவ்வப்போ  தயர்ந்த  காலை
             ஓயாமல்  நலமுரைத்து  ஊக்குவித்தான்
             இனியாரை  உறுவோம்  அந்தோ
             தேயாத  புகழான்தன்  செயல்  நினைந்து
             உளம்  தேய்ந்து  சிதைகின்றே  மால்
-          ஔவை துரைசாமி பிள்ளை

--------------------


                                   பெற்றோர்
             இழந்தான்  இல்லத்
             துணையாள் இழந்தான்  உடன்
             பிறந்த தமையன்
             சங்கம் நிறுவிய துங்கன்தனை
             இழந்தான்  அருமை
             மகன் பஞ்சாபகேசன்தனை
             இழந்தான்.


             துன்பங்கள்
             தொடர்ந்து வரினும்
             துயரங்களைச்
             சுமந்து வரினும்  உள்ளம்
             தளராதிருந்தான்  என்றும்
             தமிழ் நினைவோடிருந்தான்
             எங்கள்
             முண்டாசு முனிவன்
             உமாமகேசன்.


For read full details : karanthaijayakumar.blogspot.com

சுகன்...300... வெள்ளிவிழா நிகழ்வுகள்...


         சௌந்தர சுகன் இலக்கியச் சிற்றிதழ் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சுகன் 300 வது இதழ் மற்றும் வெள்ளிவிழா நிகழ்வுகள் தஞ்சையில் 05,06.05.2012 ஆகிய இருநாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன.

          இதற்கான அழைப்பிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்குமே தவிர அதைத்தவிர வேறு எந்த அழகியலையும் சுகனிடத்தில் பார்க்கமுடியாது. அதை அவர் விரும்புவதில்லை. அது மட்டுமன்றி ஓரிருவர் இருந்தாலும்கூட போதும் திட்டமிட்டபடி குறித்தநேரத்தில் விழாவைத் தொடங்கிவிடுவார். அவரின் பண்பு இது. திட்டமிடலும் சரியான நேரத்திற்குத் தொடங்குவதுமான அவரின் பண்பு நல்ல பத்திரிக்கையாளனின் அடையாளம் என்றே குறிப்பிட்டுச் சொல்லலாம்.

           விழாவை நான்கு  பகுதிகளாகப் பிரித்துக்கொள்வது வசதி என நினைக்கிறேன்.  ஒன்று தமிழ்த்தாய் இலக்கியப் பேரவையின் படைப்பரங்கம். இரண்டாவது கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் கவிதைப்புத்தக வெளியீடு மூன்றாவது  சுகனின் சிற்றிதழ்கள் குறித்த ஆவணப்படம் நான்காவது இதழ்குறித்த பன்முகப் பேச்சுக்கள்.


                   முதல்பகுதியான படைப்பரங்கம் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் இலக்கயப்பேரவை குறித்து நீண்டதொரு விளக்கத்தினை சுகன் அளித்தபின் தொட்டங்கியது. சிலர் கவிதை வாசித்தார்கள். அவரவர் அனுபவ வெளிப்பாடாக இக்கவிதைகள் அமைந்திருந்தன.

                     இரண்டாவது கவிதைப்புத்தகம் வெளியீடு. கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகள் குறித்த பன்முகப் பரிமாணங்களை எடுத்துப்பேசினார்கள். அமிர்தம் சூர்யாவின் பேச்சில் சில அனுபவத் தெறிப்புக்கள் இருந்தன. இவை கவிதை எழுதுவோர்க்குத் தேவையானவை.

                     தனது அனுபவங்களின் வலிகளைப் பதிவு செய்வது கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகளின் ஒட்டுமொத்தப் பொருண்மையாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கவிஞரின் பெண் எழுத்துக்கள் என்ற நிலையில் இதனை எடுத்துக்கொண்டால் கிருஷ்ணப்பிரியா பயணிக்கவேண்டிய துர்ரம் இன்னுமிருக்கிறது என்று சொல்லவேண்டும். எனினும் இத்தொகுப்பு ஒரு சோடை போகாத தொகுப்பு என்று சொல்லலாம். முதல் தொகுப்பிலேயே சமுகத்தின் மீதான அக்கறையும் குறிப்பாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்பெறுகின்ற வன்முறைகளுக்கான  எதிர்ப்புக்களின் தீவிரமான ஒரு களமாக கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சில கவிதைகள் மனதில் எந்தவித உணர்வுகளையும் ஏற்படுத்தாது வெறுமனே நிற்கின்றன. இவற்றைத்தாண்டிய சில கவிதைகள் உயர்ந்த உச்சத்தின் தேவையையும் எட்டிப்பிடிப்பதையும் நாம் மறுக்கமுடியாது. பெரும்பாலான கவிதைகளில் கவிதைக்கான ஓசை உணர்வு என்பதைத்தாண்டி ஓர் உரைநடைக்கான சாயலையும் காணமுடிகிறது. எனவே கவிதையின் பொருண்மை என்பது இங்கு அறிவிப்பாகவே நடந்து முடிந்துவிடுகிறது. சிலவற்றில் தன்னிலைவிள்க்கம் என்பது கவிதையினைப் படிக்கத் தடையாக நின்றுவிடுகின்றன. எப்படியெனில் கவிதைக்கென வரையப்பட்டிருக்கும் படங்களைப்போல. கவிதைகளும் படங்களும் தனித்தனியாக இயங்கவேண்டியவை. இந்நுரலில் படங்கள் பொருத்தமற்றே இருக்கின்றன.  இது என்னுடைய பார்வையில் பட்டது.

                  மிக வலுவான பொருண்மையின் இறுக்கத்தில் அதனை இறக்கிவைக்கிறபோது சட்டென்று வைத்ததுபோல ஒரு உணர்வு சில கவிதைகளில் அறியமுடிகிறது. இவரது எழுத்தின் வன்மை இன்னும் ஆழமாக உணர்த்தப்படவேண்டியிருக்கிறது என்பதையே இத்தொகுப்பின்மூலம் அவருக்கு வைக்கும் வேண்டுகோளாக இருக்கும்.  தொகுப்பின் மனதை ஈர்த்ததோடு மட்டுமல்ல மிகமிக வலிமையான கவிதைகளாக சிலவற்றைச் சுட்டலாம்.

                          ஆசை.....அபிஷேகம்... (அசல்) சுற்றுலா... (இங்கு அசல் என்பது தேவையில்லை என்று படுகிறது),,, எதிர்பார்ப்பு... கடவுளின் பயணம்.. கசிவின் பயம்...கறைகள்...நானும் நீயும்...அவளும் அம்மாவும்..

                         சில கவிதைகளில் சொற்கள் முகத்தில் அறைந்து இதயம் துளைத்து ஸ்தம்பிக்க வைக்கின்றன. இவையெல்லாம் எதிர்காலத்தில் தனக்கான ஓர் இடத்தை ஒளியுட்ன் தக்க வைக்கப்போகும் கிருஷ்ணப்பிரியாவிற்கான நம்பிக்கைகள்.. வாழ்த்துக்கள் பிரியா.

                        மூன்றாவது சுகனின் சிற்றிதழ்கள் எனும் ஆவணப்படம்.  இதில் சுகனின் உழைப்பையும் சேகரிப்பையும் பாராட்டலாம் என்றாலும் இது முழுமையான ஆவணப்படம் அல்ல என்பதுதான் என்னுடைய ஆதங்கம். ஒரு முறையான சிற்றிதழ் வரலாற்றை இது எடுத்துவைக்கவில்லை. முன்னோடி இதழ்கள் குறித்து ஒரு பத்தியாவது சுகன் பேசியிருக்கலாம். அதாவது கலாமோகினி...சூறாவளி...ஜெகன்மோகினி...நவசக்தி....கசடதபற...இப்படி நிறைய இதழகள் விடுபட்டிருக்கின்றன. காட்டிய இதழியல் வரலாறு குறித்து குட்டபபட்ட நுர்ல்களில் தமிழ் இதழ்கள் (சோமலே)...முதல் நாளிதழ்கள் மூன்று ...மா.ரா. இளங்கோவன்.. இதழ்களின் பொருண்மை அடிப்படையில் அவற்றின் வகைகள்...தொடங்கப்பட்ட சூழல்.. பட்ட வலிகள்...ஏதேனும் ஒரு கட்டத்தில் சாதித்தவைகள்...நின்றுபோனதற்கான காரணங்கள் என அமைத்துக் கொண்டிருக்கலாம். நிறைய  வரலாற்று விடுபாடுகளுடன் அமைந்துள்ள ஆவணப்படம் என்றாலும் சுகனின் உழைப்பு என்பதும் சிறப்புக்குரிய கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

                                        
                        நான்காம் நிகழ்வில் சுகன் இதழ் குறித்து தங்களின் தொடர்பு. உறவு. பிணைப்பு போன்றவற்றை ஒவ்வொருவரும் தனக்கேயுரித்தான நிலைப் பாட்டில் எடுத்துவைத்தார்கள். 300 இதழ்களின் எத்தனையே சோதனைகள்...அவமானங்கள்...வலிகள் இவற்றின் ஊடாக எதிர்கொண்டு நடத்திவிட்டு இனி நடத்தமுடியுமா... நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு மணிநேரத்தில் மேலாக சுகன் பட்டியலிட்டபோது அவை அத்தனைபேரின் மனங்களையும் கசிய வைத்துவிட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தரம் ஒன்றையே மனத்தில் இருத்தி எதற்கும் எதனோடும் சமரசம் செய்துகொள்ளாமல் ஒரு இதழை 25 ஆண்டுகள் நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. இந்த சமூகத்தின் இருப்பிற்காக தனது பங்களிப்பாக 300 துர்ண்களை நிறுவியிருக்கிறார் சுகன்...300 படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறார் சுகன்...300   மைல்கற்களைப் புதைத்திருக்கிறார் சுகன்... என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே சுகன் இதழை எப்படிக் கொண்டுவருவது என்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்கவேண்டும். இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் உண்மை.

                       படைப்பாளியால் முடிந்தது வாசிப்பது... காசு கொடுத்து வாங்கி வாசிப்பது...சந்தா கட்டுவது.. அடுத்தவருக்கு அறிமுகப்படுத்துவது. என்பதுதான் இதனை சுகன் இதழ் படைப்பாளிகள் அத்தனைபேரும்  செய்வார்கள். இதில் எவ்வித ஐயமும் இல்லை.
                 
                       விழாவிற்கு கவிஞர் மேத்தா...நா.விச்வநாதன்...கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்...கவிஞர் நாகராசன் (தத்தன் இதழ் ஆசிரியர்). வலம்புரி லேனா (ஆலம்பொழில் கடித இதழ் ஆசிரியர்),,அம்பல் மாதவி ,,கவிஞர் செழியன்... கவிஞர் செல்லதுரை (நந்தி சேனல்) வெளியூர்களிலிருந்து சக்தி அருளானந்தம்...சொ.பிரபாகரன்..அமிர்தம் சூர்யா (கல்கி உதவி ஆசிரியர்) கவிஞர் நிலா மகள்.. நெய்வேலி பாரதிக்குமார்..மீனாசுந்தர்...சேலம் இளங்கோ... சிறகு இரவிச்சந்திரன் (சிறகு இதழின் ஆசிரியர்) இவர்களுடன் உறரணியும்.  வந்திருந்தோர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


லை.

                         

                     
 
         

Thursday, May 3, 2012

நான்காம் அத்தியாயம் ...கடவுள் கணககு ,,, (பேருந்து நாவல்)



         





கடவுளின் கணக்கு என்று அடிக்கடி எல்லோருமே சொல்வார்கள்.  சாதாரண கணக்கே பலருக்கு வேப்பங்காயாக இருக்கும்போது கடவுளின் கணக்கு எப்படி பிடிக்கும். இருந்தாலும் அதுபற்றிய ஒரு பயம் அல்லது எதிர்பார்ப்பு எல்லோரிடத்தும் இருக்கத்தான் செய்கிறது.எப்போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்று யாரும் அறியமுடிவதில்லை. அலுவலகத்தில் நுழைந்தபோதே கனகலிங்கம் கண்ணில் பட்டான். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக அவனைப் பார்க்கமுடியவில்லை. விடுப்பில் இருந்திருக்கவேண்டும். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னான். நானும் பதிலுக்கு சொல்லிவிட்டு

          என்ன கனகலிங்கம் ஆள் ரொம்ப டல்லா இருக்கே? ரொம்ப நாள்
வீவு போலருக்கு என்றேன்.
   
         ஆமா சார்... என்றான் அதற்குமேல் பேச்சைத் தொடர விரும்பாதவன் போல...

           என்னாச்சு கனகலிங்கம்? என்று அழுத்திக் கேட்டவுடன் ஒரு முறை என் முகத்தைப் பார்த்துவிட்டு கடகடவென அழுதான்.. எனக்குச் சங்கடமாகிவிட்டது.

            எதுக்கு கனகலிங்கம் அழறே? என்றேன்.
            என் பையன் செத்துப்போயிட்டான் சார் என்றான்.
           என்ன சொல்றே கனகலிங்கம்? என்றேன் பதறியபடி.
           ஆமா சார் போனவாரம் ஞாயிற்றுக்கிழமை. ஒரே பையன் சார். அதுக்கு மேல எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க சார்.. ஒரு பையன்தான் இருந்தான் சார்.. அவனும் செத்துப்போயிட்டான். எங்க வீட்டுலே இன்னும் சாப்பிடலே சார்.. அழுதுகிட்டேயிருக்காங்க.. ஏற்கெனவே நான் லாஸ் ஆப் பே சார்.. அதான் வேலைக்கு வந்துட்டேன். சார்  என்றான்.

            என்ன ஆச்சு?
            ரோடு ஆக்ஸிடெண்ட் சார்....
             எங்கே?
            வைத்தீஸ்வரன் கோயில்ல.. சன்னதி வாசல்லேயே சார்... பஸ்ஸைவிட்டு இறங்கி ரோட்டை கிராஸ் பண்ணலாம்னு இருந்தோம் சார்.. சட்டுனு நான் போறேன் முன்னாலன்னு கைய உருவிட்டு ஓடுனா சார்.. சிதம்பரத்துலேர்ந்து வர்ற பஸ்.. வெள்ளைக்கலரு... கவனிக்கலே...அப்படியே உடம்பு மேல வண்டி ஏறிடிச்சி.. எங்க கண்முன்னாடியே புள்ள துடிச்சு செத்துப்போயிட்டான் சார்...என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதான்.

           என்ன வயது கனகலிங்கம்?
          ஆறாவது படிக்கிறான் சார்,
           என்னால் எதுவும் பேசமுடியல்லே.. ஒருமுறை கனகலிங்கத்தைப் பார்த்தேன்.. ஒரே பிள்ளை அவனுக்கும் இந்தக்கதி... கனகலிங்கம் பேசினான்.

              நீஙக் டெய்லி வருவீங்களே சார்.. அந்த வெள்ளை வண்டிதான்.

              மனசு அதிர்ந்தது. ஒருவேளை நான் போயிருந்தால்.. கனகலிங்கத்தின் மேல் ஏறிய பேருந்தின் கணத்தில் என்னுடைய எடையும் அல்லவா சேர்ந்திருக்கும். இருந்தும் உறுத்தியது.
             அன்றைக்கு பாண்டியன் வருவார். கண்டக்டர் மட்டும் மாறும். ஜெயக்குமார் திங்கட்கிழமை டூயுட்டி..
               கனகலிங்கம் போய்விட்டான். தொணதொணவென்று பேசுவான். எதிர் வாதம் புரிவான். சொன்ன வேலைகளைச் செய்வான். ஒரு மணிக்குச் சொனன்ல் எதுவும் கேட்கமாட்டான். நான் சாப்பிடப்போறேன் சார்.. இது லஞ்ச் டைம் சார்... வந்து செய்யறேன் என்று நம்முடைய பதிலைக்கூட எதிர் பாராமல் போய்விடுவான்.
               அலுவலக உதவியாளன்தான் கனகலிங்கம். அவனுடைய வேலைகள் அதிகம். சம்பளம் சொற்ப சம்பளம்தான். ஒரு பிள்ளை அது ஏன் நிற்கவில்லை அந்தக் குடும்பத்திற்கு. இதற்கு நதி மூலம் என்ன? ரிஷிமூலம்தான் என்ன? இனி எத்தனை காலம் அவர்களுக்கு ஆயுள் போட்டிருக்கிறதோ அதுவதை பேசிப்பேசி அழியவேண்டுமா? இது என்ன கடவுளின் கணக்கு?
           
                   மதியம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மணி இரண்டரை. வழக்கத்தைவிட்க் குறைவாக இருந்தது கூட்டம். கத்தரி வெயில் நறுக்கிக் கொண்டிருந்தது, கடலுர்ர் வண்டி காத்துக்கிடந்தது.

                     நாராயணன் இருந்தான். என்னைப் பார்த்ததும்... சார்.. வணக்கும் நீங்க எப்படியும் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். சீட்டுப் போட்டுட்டேன் சார். உக்காருங்க். ரெண்டு நாப்பத்திரண்டு நம்ப டைம். இன்னும் வேற வண்டி வர்லே அதான் போயிடலாம்.
                      சரியாக 2.42க்கு வண்டியை எடுத்தார்கள். டிரைவர் சேகர் வணக்கம் சொன்னார்.
                      வண்டிக்குள் நாலைந்து பேர்கள்தான் உட்கார்ந்து இருந்தார்கள்.
                    என்ன நாராயணன் கூட்டமே இல்லை.
                    இன்னிக்கு அப்படித்தான் சார்... முகூர்த்த நாள் கிடையாது. நாலை
ஞசு மெட்ராஸ் வண்டி வரும். நாலு மணிக்குத்தான் கூட்டம் வரும். காலேஜ் விடுற நேரம் அதுதானே?
                     சிதம்பரம் பேருந்துநிலையம் விட்டு வெளியே வந்தது. ராஜிவ் காந்தி சிலையருகில் ஒரு கணவன் மனைவி வண்டியை நிறுத்தி ஏறினார்கள். வண்டி திரும்பி பச்சையப்பா ஸ்கூல் வளைவில் திரும்பி வேகமெடுத்தது. சேகர் வேகமாகவும் அதேசமய்ம நிதானமாகவும் ஓட்டக்கூடியவர். நாராயணன் டிக்கட் போட ஆரம்பித்திருந்தான்.

                       டிக்கட் போட்டுமுடித்துவிட்டு தோளிலிருந்து பணப்பையைச் சரித்து மடியில் வைத்துக்கொண்டு அருகில் உட்கார்ந்தான்.
                        சார் வெயில் படுத்தற பாடு தாங்க முடியல்லே சார்..
                       ஆமாம்...நாராயணன்... சீக்கிரம் சோர்வு ஆயிடுது.
                        உங்களுக்கு ஒரு நாளைக்கு இப்படியிருக்கு சார்.. எங்களப் பாருங்க ஒருநாள்விட்டு ஒருநாள்.. நரக வாழ்க்கை இதுசார்...
                         இக்கரைக்கு அக்கரை பச்சைதான் நாராயணன். அவங்கஅவங்க தொழில்ல ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது, எங்ககிட்ட ஒரு பையன் இருக்கான். அலுவலக உதவியாளர். அவனுக்கு ஒரே பிள்ளை.. இனி பிள்ளையும் பெத்துக்கமுடியாதாம்.. போனவாரம் வைத்தீஸ்வரன் கோயில் வாசல்லேயே மாட்டிக்கிட்டானாம்.. நம்ப பாண்டியன்தான் டிரைவர்..
                        ஓ.. அதானா.. இன்னிக்கு கோர்ட்டுனு பாண்டியன் போனான். பாவம் சார் பாண்டியன் நிதானமாக ஓட்டுவான் சார்... சின்ன ஆடு குறுக்கே வந்துட்டாக்கூட நிறுத்தி ஓட்டுவான். இதான் சார் கடவுள் கணக்கு.. பாண்டியனோட பொண்ணுக்கு அமமை போட்டிருக்கு ச்ர்ர்....இதுலே இன்கிரிமெண்ட் வேற கட்டு.. பழசு கேசு வேற ரெண்டு மூணு சார்..வட்டிக்குக் கடன் வாங்கித்தான் மத்த குடும்பச் செலவுகளைப் பார்க்கணும். சர்ர‘
                           பாண்டியன் எப்போதும் இறுக்கமாக இருப்பதற்கு காரணம் ஊகிக்க முடிந்தது. சாலைவிதிகளை மக்களும் அனுசரிக்கவேண்டும். ஓட்டுநர்களும் அனுசரிக்கவேண்டும். அப்படி சரியாகப் பேணுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எதிர்பாராமல் நடக்கும் விபத்திற்கு எதிர்பார்ப்புடன் இருக்கும் டிரைவர்கள் குடும்பங்களைப் பழி வாங்கிவிடக்கூடாது அல்லவா?

                        சீர்காழி புதிய பேருந்துநிலையத்திற்குள் நுழைந்தது பஸ்.  சேகரு அண்ணே ஒரு அஞ்சு நிமிஷம் போடலாம்.. ஏதும்கூட்டம் வரும்.. முன்னால பவனி போயிட்டிருக்கான்... என்றான் நாராயணன். வண்டி நின்றது. சிலர் மட்டும் ஏறி உட்கார்ந்தார்கள்.
                           சார் தண்ணீ வேணுமா? என்றான்.
                           சமயம் பார்த்து மனசறிந்து கேட்டதுபோல இருந்தது.
                           தா... நாராயணன்...
                           இருங்க அங்க ஒரு கடையிலே பானை தண்ணீ இருக்கும். அதப் புடிச்சுட்டு வர்றேன்...
                           தண்ணி வாங்கிக் குடித்ததும் அத்தனை இதமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை.  தாகத்திற்கு முன்பிருந்த நிலையும்.. தாகம் தணிந்தபின் இருக்கும் நிலையையும் எண்ணிப்பார்க்கையில் கடவுள் கணக்கு என்பது நினைவிற்கு மறுபடியும் வந்தது.

                           அப்போதுதான் அந்த போஸ்ட் மாஸ்ட்டரைக் கவனித்தேன். அவருக்கு என் சீட்டைக் கொடுத்துவிடவேண்டும். சார்.. இங்க வாங்க உக்காரலாம்  என்றேன். பரவாயில்ல சார் என்றார் அவர். நான் பிடிவாதமாக வாங்க சார்.. உக்காருங்க நல்லா காத்து வரும்.. எழுந்து வந்து உட்கார்ந்துகொண்டார். ரொம்ப தேங்ஸ் சார் என்றார்.. கொஞ்சநேரத்தில் சீர்காழியைவிட்டு வெளியேறியது பேருந்து. போஸ்ட் மாஸ்ட்டர் வெற்றிலை மடிக்க ஆரம்பித்தார். அவர் மடிப்பது அழகாக இருந்தது. மடித்து முடித்ததும் இந்தாங்க சார்... என்று நீட்டினார். எனக்குப் பழக்கமில்லை சார் என்றேன்.
                           ஒருநாளைக்குப் போடுங்க சார்.. மனசுக்கு நிம்மதியாக இருக்கம் என்றார்.
                           நான் மனநிம்மதி இழக்கவில்லையே என்று அவரிடம் சொல்லத் தோணியது ஆனால் சொல்லவில்லை. அவர் பீடா போல மடித்துக் கொடுத்த வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தேன். ஏனோ அன்றைக்கு அது அத்தனை சுகமாக இருந்தது.  அவரிடம் நன்றி சார் என்றேன். வெற்றிலைச் சிவப்பேறிய பற்களைக் காட்டி சிரித்தார்.
                          வைத்தீஸ்வரன் கோயில் சன்னதி வந்தபோது கனகலிங்கத்தின் முகம் தெரியாத மகன் நினைவுக்குள் நிழலாக வந்துபோனான். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.
                           சோழசக்கர நல்லுர்ர் திருப்பத்தில் நாலைந்து போக்குவரத்து ஊழியர்கள் டியுட்டிக்கு செல்வதற்காகப் பேருந்தை நிறுத்தி ஏறினார்கள்.
                          நாராயணா எப்படியிருக்கே? என்றார்கள்.
                          நல்லாயிருக்கேன்.. என்றான்.
                          எங்க உன் தோஸ்த்து குரஙகு நாகராஜன் என்றார்கள்.
                         என்னண்ணே தெரியாதா உங்களுக்கு என்றான் நாராயணன்.
                         என்னாச்சு?
                         போனவாரம் திருவையாறு போகும்போது நல்லா போதை நம்ப மொபசல் வண்டிதான்.. பிரண்ட வீல்ல மாட்டிட்டான். ஸ்பாட்டுலேயே உயிர் போயிடிச்சு.. இத்தனைக்கு அவனுக்கு டிரைவிங் கத்துக்கொடுத்து வேலை வாங்கிக்கொடுத்த ராமுதான் அந்த பஸ்சுக்கு டிரைவர். என்ன கொடுமை பாருங்க..

                       அடக்கடவுளே.. சின்னவயசுப்பா.
‘                     சின்ன வயசுதான். ஆனா அவன் செய்யாத அக்கிரமா?
பொழுதன்னிக்கும் பான் பராக். வண்டியவிட்டு இறங்கினா மொடாக்குடி.
கடவுள் கணக்கு சரியாம்தா இருக்கு என்றார் ஒரு ஓட்டுநர்.
                       சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தேன்.
                       பேருந்து ஓடிக்கொண்டிருந்தது நாராயணன் அந்தக் கூட்டத்தோடு உட்கார்ந்து வேறு கதை போக்குவரத்து நிலவரங்கள் குறிதது நடந்துகொண்டிருநத்து.
                        வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.  மேகம் மறைத்த வெயில் தணிவாக இருந்தது.
                         துர்க்கம் வருவதுபோலிருந்தது லேசாக கண்களை மூடிக்கொண்டேன்.

                         மறுபடியும் இதென்ன கடவுள் கணக்கு என்றபோது பெரியகோயில் மேம்பாலத்தில் பேருந்தில் அடிபட்டு இறந்துபோன தங்கவேல் மாமா நினைவில் வந்துபோனார். அம்மாவின் கடைக்குட்டி சின்னம்மா பையன் அவர்.
               
                                                                                                (பேருந்து ஓடும்)
                                                                                           
             











Tuesday, May 1, 2012

மனச்சித்திரம்



       1.  அலெக்ஸ் பால் மேனன் ஒரு பொறுப்பான உயர்பதவியில்
            இருப்பவர் என்பதைவிட அடிப்படையில் ஒரு மனிதர்.
            அவரின் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது. மாவோயிஸ்டுகள்
             யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உடனடியாக
            அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்படவேண்டும் என்பதுதான்
            மிக முக்கியமானது. பேச்சு வார்த்தை நடத்துகிறோம்..பேசிக்
            கொண்டிருக்கிறோம்.. வழக்கம்போல குழு அமைத்திருக்கிறோம்.
            இவையெல்லாம் ஒரு உயிருக்கு முன்னர் அர்த்தமற்றது.
            உடல்நலமில்லாத ஆஸ்மா  தாக்குதலுக்குள்ளவரை.. உடனடி
            யாகக் காப்பாற்றுதல்தான் பொறுப்பான அதிகாரியாக இருந்து
            இந்த தேசத்திற்காகக் கடமைதவறாது பணியாற்றும் அவருக்கு
            நாம் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும். மனசு தவிக்கிறது.
            அலெக்ஸ் பால்மேனன் விரைவில் வாருங்கள் நலமுடன்.



       2.  யாருமே யாராகவும் இல்லை. யாருமே நேராகவும் இல்லை.
           தேரோடும் வீதியில் வசிப்பவனுக்கு தேரின் அருமை தெரிய
           வில்லை. கடுகு சிறியது காரமானது என்பது ஊரறிந்தது. எனவே
           தான் சிறியவரிடத்து பதவி வழங்கப்படும்போது அது அதி-காரமாக
           உள்ளது. வலிய போய் செய்கின்ற உதவிகள் உதவாக்கரைகளைப்
           போல பலனற்றுப்போகின்றன. தகுதியற்றவனுக்கு உரிய எந்த
           ஒன்றையும் அவன் போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது.
            வாழையிலை அழகாக உள்ளது. எச்சில் இலையாக வெளியே
           எறியப்படும்போது அதன் வாழ்வியல் குறித்து யாரும் கவலை
            கொள்வதில்லை. தகைமையற்றவர்கள் உலகமெங்கும் நிரம்பி
           வழிகிறார்கள் கொசுக்களைப்போல. வயதானவர்கள் வாழ்வது
           வீணென்று அவர்களிடமே முகத்தில் அறைந்துசொல்கிற தலை
           முறை சரியாக இலக்கு இல்லாமல் இழப்பை ஈடுகட்டமுடியாத
            அழிவைநோக்கி நகர்ந்துபோகிறார்கள் யாரும்  காப்பாற்றமுடியாமல்.
            யாரேனும் ஒரு அழகான அர்த்தமுள்ள அற்புதக் கவிதையை
            எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்தபடியே
            அது யாரின் பிரசுரத்திற்கும் ஆளாவதில்லை.

                         இப்போதுள்ள குழந்தைகளுக்கு மண் வாசனை இல்லை.
             தொலைக்காட்சியெனும் தொற்றுநோய் அவர்களின் கண்களைக்
              கெடுக்கிறது. சோம்பலை அள்ளிப் பூசுகிறது. கவனமின்மையை
             உருவாக்குகிறது. கல்லைப்போல இருந்த இடத்திலேயே கட்டிப்
             போடுகிறது மிருகங்களைப் பழக்குவதுபோல குழந்தைகள்
             பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

                                                                                                   (வரைவேன்)

              இம்மாதம் உண்மை பத்திரிக்கையில் வெளிவந்த கவிதைகள்

                யாரேனும்
                கிள்ளினால்தான்
                வலிக்கும்
                இப்போது கிளறினாலே
                வலிக்கிறது
                தொட்டால்தான் சுடும்
                இப்போது
                சொன்னாலே சுடுகிறது
                அறைந்தால்தான்
                கண்ணீர் வரும்
                இப்போது
                பார்த்தாலே கண்ணீர்
                வருகிறது.
                வாழ்தலே வாழ்க்கை
                இப்போது
                வாழாதிருத்தலே வாழ்க்கை...

                000000

                 எல்லாவற்றையும்
                 செய்வதற்கு
                 நேரம் ஒதுக்குகிறோம்
                 எதையுமே செய்யாமல்தான்
                 எல்லா நேரமும்
                  ஒதுங்கிவிடுகிறது
                  கசடுகளைபபோல

                 000000

                  தொடர்ந்து
                  ஒலித்துக்கொண்டிருக்கும்
                  தொலைபேசியை
                   யாரும்
                   உடனே
                   எடுத்துவிடாதீர்கள்
                   எடுக்காமலும்
                   இருந்துவிடாதீர்கள்...

                  00000

                  வாழ்வின் எல்லாக்
                  கேள்விகளையும்
                  கேட்டுவிடுகின்றன
                   நொறுங்கநொறுங்க
                  சருகுகளின் மீது
                  நடக்கும்போது...

                   000000

                            (நன்றி / உண்மை மாதமிருமுறை இதழ் / மே.2012)
                                                               
        

Wednesday, April 25, 2012

பகிர்வுகள்



               வணக்கம்.

               தொடரும் பணிகள். இடையே கிடைத்த வாய்ப்பில் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

               1. மனதிற்கினிய எழுத்தாளர். சாவியில் அவரது எழுத்தைப்
                   பார்த்து படித்திருக்கிறேன். வசீகரமான ஆழமான மாறுபட்ட
                   எழுத்திற்கு சொந்தக்காரர். ஆர்வத்தைத் தக்க வைக்கும்
                   எழுத்து அவருடையது. சமீபத்தில் திடீரென எலிக்காய்ச்சல்
                  அவரையும் அவரின் அற்புத எழுத்தையும் பறித்துக்கொண்டு
                   விட்டது. ஒருமுறைகூட நேரில் அவரைப் பார்த்ததில்லை.
                  இறந்தபின் பாக்யாவில் அஞ்சலிக்காக அவருடைய படத்தைப்
                   பார்க்க நேர்ந்த அவலம். மனதை வருத்துகிறது.

                                        கிருஷ்ணா டாவின்சி...

                  உங்களுடைய ஆத்மா அமைதி பெறட்டும். அவரைப் பிரிந்து
                  தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தலைவணங்கி என்னுடைய
                  வருத்தமும் வேதனையும் ஆறுதலும். வேறென்ன,,,,

          2.    புத்தக நாள் அன்று என்னால் பதிவிடமுடியவில்லை.
                 எனவே அதற்கென ஒரு கவிதை.

                                             வாசிப்பது என்பது வாழ்தல்
                                             வாசிப்பவன்தான் மானுடன்..

                                             சிலர் நுனிப்புல் வாசிக்கிறார்கள்
                                             உலகே தெரியுமென வதைக்கிறார்கள்...

                                             சிலர் வாசிக்காமல் வாசிக்கிறார்கள்
                                             வாசிப்போரிடம் கொட்டிக்கொட்டி பொய்களை
...
                                             நன்றாக வாசிப்பவன் எப்போதுமே
                                             எதையும் கூறுவதில்லை ஆழ்ந்துபோகிறான்
                                             தான் வாசித்தலின் பொருண்மையைப்போல...

                                             வாசிக்கும் கட்டாயத்தில் வாசிப்பவர்கள்
                                             வரிவரியாகக் குறைபேசுகிறார்கள் புரியாமல்..

                                             வாசிப்பவனும் வாசிப்பவனும்
                                             வாழ்ந்து பேசுகிறார்கள்...வாழ்கிறார்கள்..

                                              அங்கொன்றும் இங்கொன்றும் வாசிப்பவர்கள்
                                              அலைகிறார்கள் வாசிப்பிற்குள் இருப்பதை
                                              வாசிப்பிற்கு வெளியே...

                                              எதையேனும் வாசியுங்கள்..
                                              உயிர்த்தலின் அவசியம்போல வாசியுங்கள்.
                                              வாசித்தபொழுதுகளில் உயிர்த்திருங்கள்
                                              வாசிப்பவர்களைக் கண்டுணர்ந்தால்
                                              வாழ்கிறேன் அர்த்தமுடன் என்றுணர
                                              ஒரு புன்னகை சிந்துங்கள் போதும்...

                                               கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்..

                                               புத்தகம் இல்லா ஊரில் வாழ வேண்டாம்
                                               புத்தகம் வாசிக்கா மனிதரிடம் உறவுவேண்டாம்
                                             
                                               புத்தகத்தோடு பிறக்காவிட்டாலும்
                                               புத்தகத்தோடு இறந்துபோங்கள்..
                                               அது அத்தனை புண்ணியம் மறுபிறப்பினும்...

                           
                                             .
                                             

Friday, April 13, 2012

அன்புள்ள

      வணக்கம். என் வலைப்பூவிற்கு வந்துள்ள எல்லா அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள் .
 ஹரணி. 

Saturday, March 24, 2012

பழசு,.,,,,,



                             இருவரும் ஒரே இடத்தில்
                             நிற்கிறோம் வெவ்வேறு
                             நேரத்தில் புறப்பட்டு....

                             இருவருக்கும் ஒரேபிரச்சினை
                             ஆனால் அளவு வேறுவேறு
                             குழந்தைகள் விளையாட்டில்
                             சிதறிக்கிடக்கும் பொம்மைகளைப்போல,,,

                              ஞாயிற்றுக்கிழமைகளில்
                              இதுதான் ஒரே சாத்தியம்....

                              என்னுடையது சட்டைப் பைக்குள்
                              அடக்கமாய்,,,
                             அவளுடையது சாக்குப்பைக்குள்
                              அடங்கமாட்டாமல்,,,,

                               யாருமில்லையெனில் கொஞ்சம் கூடுதலாய்
                               கேட்கலாம் என்று நினைத்து நான் வந்ததுபோல்
                                அவளும் வந்திருக்கவேண்டும்,,,

                                எனக்குப் படபடப்பில்லை
                                வியர்வை வழியும் முகத்தைப்
                                 படபடப்பில் துடைக்கிறாள்....

                                நான் எல்லாம் மறைத்து
                                அவளுக்கு வழிவிடுதல் என்பதைவிட
                                சுய கௌரவத்துடன் செட்டியாரிடம்
                                அவள் காதுகளுக்கு மட்டும் கேட்டால்
                                போதுமென்று கத்துகிறேன்,,,

                                 பழைய மோதிரம் ஏதும் அரைபவுனில்
                                 இருக்கா செட்டியாரே?.... பாலிஷ் போட்டுக்கலாம்,,,

                                 செட்டியார் சொல்லும் இல்லையெனும்
                                 பதிலைக் கம்பீரமாய் ஏந்தி வெளியேறுகிறேன்,,,
                                 பையில் வைத்த அடகுபொருள் கணக்க,,,
                               
                               
                                 
                                  

Monday, March 12, 2012


        எஜமானியின் வசவில் எழும்
        கண்ணீர்த் துளிகளை
        துலக்கும் பாத்திரங்களின்
        அழுக்கோடு நீக்குகிறாள்
        கண்களிலிருந்து
        தன் வீட்டின்
        முகப்பில் விளையாடும்
        பிள்ளைகளை எண்ணியபடி

       -----------------------------------------------------

       நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில்தான்
      வாழ்க்கையோடுகிறது என்றாலும்
      அவற்றின் அறியா வண்ணம்
      வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும்
      உயிர்ப்பாக்குகிறது
      வாழ்தலின் பிடிப்பும்
      நம்பிக்கையும்
      தேடலின் உழைப்பும்
      மனிதனாக்கும்
      வாழும் வரைக்கும்.....
      உணர்ந்து மீறலில்
      சிதைந்துபோகிறது எல்லாமும்
      சபிக்கப்பட்ட புலம்பல்களினுர்டாக

      0000000000000000000000000000000

      புத்தனின் சிரிப்பை
      பேசிய பூமியில்
      புத்தனின் மௌனத்தை
      கல்லறைகளில்
      மொழிபெயர்க்கிறது
      ஒரு கூட்டம்...

       ••••••••••••••••••••••••••••••••••••••

       (நன்றி -----  குறி... இலக்கிய மாத இதழ்....திண்டுக்கல்...
            மார்ச்-ஏப்ரல் 2012)

Tuesday, March 6, 2012

ஹைக்கூ...


      சேற்று நீர்
      குருவி முகம் பார்க்கும்
      நாய் தாகம் தணிக்கும்.

   00000

    சுடுகாட்டு வாடை
    புறம்போக்குக் குடிசைகள்
    குழம்பு வாடை,,

00000

மிதந்த பல்லி
நொந்த பழையது
வாலாட்டும் நாய்...

00000

விரதச் சோறு
அணிலை விரட்டுங்கள்
முதலில் காக்கை

00000

ஓடாத கடிகாரம்
வீட்டுக்கு ஆகாது
ஓடுகிறது நேரம்,,

0000

பேருந்திலிருந்து விழும்
காசுகள்
கோபமாய் கருப்பண்ணசாமி

0000

குடிகார தந்தை
வருஷப் படையல்
பீரும் கறியும்

00000

நல்லா சாப்பிடுங்கப்பா
பிணம் எடுக்க
நாலு மணியாகும்,,,

00000

என்ன பிரச்சினை
வெளிநடப்பும் கலைப்பும்
மேகங்களே?

00000000000000000000000000000000000

ஒரு குழந்தையின்
சிரிப்புதான்
ஒரு துயரத்தினை
துயரில்லாமல்
வாசிக்க வைக்கிறது,,,

000000000


ஒரு கத்தரிக்காய்
ஒரு முருங்கைக்காய்
ஒரு பச்சை மிளகாய்
ஒரு வெங்காயம்
ஒரு கருவேப்பிலை
சில துளிகள் எண்ணெய்
சிக்கனமாய் கடுகு
சில்லறை காசாய் புளி
வறுமையை புரிந்தவை
இவை
வதவதவென்று வாழ்வதில்
இல்லை வாழ்க்கை
வறுமையிருந்தாலும்

00000000000000000

(நன்றி .... புதிய பார்வை.... மார்ச் 2012)

Tuesday, February 21, 2012



                 என் அன்பிற்கினிய பதிவர்களுக்கு...

                                பேருந்து நாவலின் நான்காவது அத்தியாயத்தை நியாயப்படி 14.2.2012 அன்று பதிவிட்டிருக்கவேண்டும். தொடர்ந்து வகுப்புகள் எடுக்கும் பணிச்சூழலில் பயணங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன ஓய்வெடுக்க முடியாமல். எனவே இரு வாரங்கள் கடந்துவிட்டன. மார்ச் முதல் வாரத்தில் மட்டுமே இனி பதிவிடும் சூழல். எனவே நாவலை வாசித்து கருத்துரைக்கும் அன்புள்ளங்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். மார்ச் முதல் வாரத்தில் இதனை ஈடுகட்டிவிடுவேன் என நம்புகிறேன். நன்றிகள்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                                           என்ன நியாயம் இது சந்திரா?
                                                                                    (நியாயம் கேட்கும் குட்டிக்கதை)


                     மனசுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான் சந்திரசேகர். மறுபடியும் மறுபடியும் அனலில் வாட்டப்படும் திடப்பொருளாய் மனசு நொந்துபோயிருந்தான்.

                         உலகத்தில் நியாயம் என்பது நல்லவர்களுக்கு எப்போது எட்டாக்கனியா? அதை எதிர்பார்ப்பது தவறா? என்பதுபோன்ற பல கேள்விகள் அவன் நிம்மதியையும்...மனதையும்,,,மகிழ்ச்சியையும் அரித்துக்கொண்டிருந்தன கரையான்களைப்போல...
     
                        எதிர்பார்க்கவில்லை சியாமளா இப்படி செய்வாள் என்று.

                        ஒரு ஆண்டு இல்லை  கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்து.. பல்வேறு எதிர்ப்புக்களிடையே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

                       நான் சாதிக்கப் பிறந்தவன் சாகமாட்டேன் என்று சத்தியம் செய்து உழைத்துக்கொண்டிருந்தான் இரவுப்பகலாய்...

                       அதுதான் தவறாயிற்று..

                        எதிர்வீட்டிற்கு குடிவந்தான் வெங்கடேசன் அவன் மனைவியுடன். அவன் மனைவி அழகில் குறைந்தவள் இல்லை. இவனும்  அழகில் குறைந்தவன் இல்லை.

                        எதிர்வீடு என்பதால் அறிமுகம் செய்துகொண்டது தவறாயிற்று.

                         சியாமளா நம்பிக்கைத் துரோகம் செய்தாள்.

                        அவளுக்கு சந்திரசேகர் இல்லாத இரவுகளில் வெங்கடேசன் ஆக்கிரமித்துக்கொள்ள இடம்கொடுத்தாள்.

                          விஷயம் தெரிந்ததும் துடித்து துவண்டுபோனான் சந்திரசேகர். அதைப்பற்றி கவலைப்படவில்லை சியாமளா. நாள் முழுக்க சொற்போர் நடந்தது எந்த முடிவும் ஏற்படாமல்.

                           வெங்கடேசனின் மனைவியும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான். பெண்தான் சரியாக இருக்கவேண்டும் என்று ஒரு தத்துவம் பேசிவிட்டு இயல்பாகிப் போனாள்.

                           பன்னிரண்டு வருட குறிஞ்சிப்பூ அன்பை உதறமுடியவில்லை. வெளியில் காட்டிக்கொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு விபரீத முடிவு எடுத்தான். அதன்படி மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய வம்சம் இனி இல்லாது போகட்டும் என்று குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டு வந்துவிட்டான்.

                          இதென்ன பைத்தியக்காரத்தனம் என்றார்கள். இதென்ன நியாயம் சந்திரா? என்று பலர் கேட்டார்கள்.

                            மனதாரக் காதலித்தேன். அந்த அன்பைக் கொன்றுவிட்டாள். அவளோடுதான் நான் வாழவேண்டும் எல்லாவற்றையும் உதறினேன். அவளுடைய இந்த செயலால் இனி அவளுக்கு என்னால் ஒரு வாரிசு உருவாகக்கூடாது..சரியான அன்பை உணராமல் வாழ்ந்துவிட்ட செயலுக்காக நான் என் வம்சத்தையே அழித்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்..

                            கண்ணீரால் உதிர்த்து சொன்னான்.

                            என்ன நியாயம் சந்திரா? என்று நானும் கேட்க நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போது அவன் முகத்திற்கு நேராய் கேட்க முடியாமல் போகிறேன்.


                     


                         

Monday, February 20, 2012

கதம்பக் கூடை.....



                          1980 களில் தீவிரமாக நவீன இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு...டாக்டர் செல்லப்பா படிக்கக் கிடைத்தன. அவர் முகமறியாமல் வரலாறு அறியாமல் படித்த நாவல்கள் அவை. அன்றைக்கு அவையும் என்னைப் புதிய தளத்திற்கு இட்டுச் சென்ற நாவல்களில் கலந்து கிடைத்தன வாசிப்பிற்கு. அவர் இன்றைக்கு மறைந்துவிட்டதாக இன்றைய குங்குமத்தில் படித்தபோது இப்போதுதான் அவரின் முகத்தைப் பார்க்கிறேன். இருப்பினும் அவரின் பங்களிப்பு தமிழ் நாவல்உலகில் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகிறது என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அம்மா அவர்களின் ஆன்மாவிற்கு எனது இதயபூர்வமான அஞ்சலிகளை உங்களோடு சேர்ந்து செலுத்துகிறேன்.



 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



  ஒவ்வொரு நாளும்
 கூறு போடப்படுகிறது...

  முகூர்த்த நாள் என்கிறார்கள்
  ஒரு முகூர்த்தமகிழ்ச்சியை
  அனுபவிப்பதற்குள்
  ஒரு மரண அறிவிப்பை அந்த
  முகூர்த்த நாள் வழங்கிவிடுகிறது...

  மேடுபள்ளம்போல் மகிழ்வும் துன்பமும்
  ஒன்றெனத் தத்துவமாய் உணர்ந்தாலும
   அதனை ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை...

   ஏதேனும் ஒன்றால் கண்ணுக்குப் படாத
    கத்தியாய் காலம் நின்று ஒவ்வொரு
    நாளையும் அதன் விருப்பமாய் வெட்டித்
   தள்ளுகிறது... அள்ளிக்கொள் எனும் வற்புறுத்தலோடு...

   காலையில் ஒன்றுமாய்
   மாலையில் ஒன்றுமாய்
   இடைப்பட்ட பொழுதுகளில்
   சிலதுமாய்  நாளின் கூறுகள்...

    ஒரு முதிர்ந்த பாட்டியின் சிரிப்பு
    ஒரு மொட்டின் எதுவுமறியா சிரிப்பு
    அன்றைய சேமிப்பாய் வாழ்க்கைக் கணக்கில்

    வாழ்தல் என்பது விதிக்கப்பட்டாலும்
    அது யாரின் விருப்பமுமாய் இல்லையெனும்
    கசப்பே மறுபடியும் நினைவூட்டலாய்
    திகட்டத் திகட்ட...

     அலுப்பாய் ஓய்ந்து இரவின் மடியில்
     படரும்போது ஏதேனும் ஒரு கவிதைதான்
     உனக்கு வாழ்வதற்குக் கூடுதலாய்
     தந்திருக்கிற வரம் நானென்று
     உணர்த்தி மலர்கிறது
     நாளைக்கான எதிர்கொள்ளலை
     நம்பிக்கையோடு....

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


       நேற்றுடன் அம்மாவுடனான
       சண்டை முடிவுக்கு வந்துவிட்டது...

       நேற்றுடன் அப்பாவுடனான
       ஒரே தலையணை உறக்கம்
       முடிவுக்கு வந்துவிட்டது...

       நேற்றுடன் தம்பியுடனான விளையாட்டு
       அழுகை மோதல் முடிவுக்கு வந்துவிட்டது...

        நேற்றுடன் மொட்டை மாடி... சந்தனமுல்லைக்கொடி
        காதல் பறவைகள்...ஜோவென்றதும் வாலாட்டும்
        பப்பிகுட்டி...எல்லாமும் முடிவுக்கு வந்துவிட்டன...

        பருவத்தின் முதிர்வில் ஒரு மஞ்சள் கயிறு
       எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது
       இருபத்தைந்தாண்டுகளைப் புறந்தள்ளிப்போட்டுவிட்டு...

       அம்மாபோல...அப்பா போல....
       தம்பி போல... எல்லாரும் இருக்கிறார்கள்
       உன்வீட்டில் உன் உறவுகளாய்
       அத்தனை பேரையும் அப்படியே நேசிக்கவும்
       நான் ஆவலாய்க் காத்திருக்கிறேன்...
       நீயெப்படியிருப்பாய்...?

       ஒரு சின்னப் புன்னகை... ஒரு செல்ல நிமிட்டல்...
       ஒரு மெல்லிய கைப்பற்றல்...ஒரு மயிலிறகாய் தலைகோதல்..
       ஏதேனும் ஒன்றுபோதும்..சொல் வேண்டாம்...
       சொல்லவேண்டாம்...

       தள்ளிய அறைக்குள்
       காத்திருக்கிறோம் நானும்
        என் மனமும்....

     

Thursday, February 16, 2012

உன்னோடு வாழ்தல் அரிதல்ல விதி....



                                     உருவமற்றிருக்கிறாய்..
                                     எந்த உருவத்தையும்
                                     உருவற்றாக்குகிறாய்...

                                     உன்விருப்பமாய் உன்னாட்சி
                                     தன்னாட்சி கட்டுப்பாடற்று...

                                     தவிக்கவிடுகிறாய்...
                                     சங்கடப்படுத்துகிறாய்...
                                     கோபமூட்டுகிறாய்...
                                     கொந்தளிக்க வைக்கிறாய்..
                                     கொள்ளி வைத்ததுபோல
                                     அதிர வைக்கிறாய் ஏனென்று
                                     தொட்டுக்கேட்டால்...

                                      என்ன செய்துவிடமுடியும் என்னை
                                      என்று கேட்பதில்லை..
                                      ஆனால் எல்லாமும் செய்கிறாய்..
                                      எல்லாமும் அசைவற்றுப்போகிறது...

                                       முணுமுணுக்கிறாய்...
                                       முட்டி மோதுகிறாய்..
                                       நெருப்பு வீசவும் செய்கிறாய்.
                                       நெஞ்சுபொறுக்காது வெடிக்கிறாய்..
                                       வேதனைப்படுத்தியோடுகிறாய்...

                                        உன்னை என்னதான்
                                        செய்துவிட முடியும்?
                                        அந்த துணிவுதான் உனக்கு.....
                                        நீயின்றி எதுவுமில்லை...
                                        கர்வத்தில் கரைந்திருக்கிறாய்
                                     
                                        வாழ்வது அவரவர் விருப்பமென்றாலும்
                                        வாழ்தலில் நீதான் முக்கியம்
                                        நம்பித்தான் வாழ்கிறோம்...
                                        நம்பாது வாழ்ந்தாலும் அஞ்சாதிருக்கிறாய்..

                                         உன்னோடு வாழ்தல் அரிது
                                         அரிதாயினும் வாழ்தல் விதிதான்...
                                                                          
                                         
                                          மின்சாரமே...மின்சாரமே....

                                          

Monday, February 13, 2012

அஞ்சலி


    எங்கள் வீட்டில் லவ்பேர்ட்ஸ் வளர்ப்பது என்னுடைய மகள். அதில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து வளர்த்து நிறைய பறவைகள் உள்ளன. இவ்வாறு இரு குஞ்சுகளை ஈன்ற தாய்ப்பறவை ஒன்று வயிற்றில் முட்டையுடன் இறந்துவிட்டது. இன்று. இறந்துபோன தாய்ப்பறவையைச் சுற்றி இரண்டு குஞ்சுகளும் வாயருகே வாய் வைத்து குரலெழுப்புவது மனச்சங்கடமாக உள்ளது. எனவே இன்றைய பதிவாக இறந்துபோன அத்தாய்ப்பறவைக்கு ஒதுக்கப்படுகிறது.



               
                                         பறவையாயினும்
                                         தாய்மை உயர்வானது..

                                         கண்திறவா குஞ்சுகளின்
                                         முன்னே கண்திறந்தபடி
                                          அந்த தாய்ப்பறவையின் மரணம்..
                                          உயிர்விடைபெற்ற வழியைத்
                                          துரத்தும் திறந்த கண்கள்...

                                          குஞ்சுகளின் தவிப்பு என்ன
                                          யாரின் தவிப்பையும் மரணம்
                                          லட்சியம் செய்வதில்லை...

                                          பறவையாக இருந்தாலும்
                                          பாசமாக இருந்தாலும்
                                          வாழ்வின் முடிவை வளைக்கமுடியாது...

                                           உன் குஞ்சுகள் வாழும்
                                           அமைதிகொள் தாயே...


                                         
                                       

Friday, February 10, 2012

அன்பின் தொடர் பகிர்வு



அன்பின் விருது




         
              அன்புள்ள...

                                        உறரணியின் பணிவான வணக்கங்கள்.

                                        லீப்ஸ்டர் பிளர்க்

                                        இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும்.  இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

                                       பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

                                       நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

                                  1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

                                 2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

                                 நன்றிகள்.


                               எனக்குப் பிடித்தவை ஏழு.

                               1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
                                   அப்பா.

                                2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

                               3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
                                   எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
                                   என் மகன்.

                               4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
                                    நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
                                    தனிமை
.
                               5. கடவுள் வழிபாடு,

                               6.. குழந்தைகள்.

                               7.  தமிழ்மொழியின் இலக்கியங்கள்.


                    பகிர்தல் நேரம்


                      1,  எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
                           இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
                           என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
                           எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
                                                                          நண்பன் மதுமிதா - க்கு..



                       2.  இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
                            துவள்கிற  தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
                            பன்முகத் திறனால்  பளிச்சென்று,,,உறவுகளை
                            மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..                          
                            என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...
                             
                       3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
                            மனதிற்குப்  பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
                            களைப்   பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
                           அவர்களுக்கு...

                       4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
                           தேர்வும்,,  மனதிற்கு இதமும்....ஆழமும் என
                            இயங்கிக் கொண்டிருக்கும்  சைக்கிள் மிருணாவிற்கு...

                       5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
                           வகையான  சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
                           வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
                          அவர்களுக்கு...

 
                          அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

                          இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.