Tuesday, June 24, 2014
Monday, June 23, 2014
மொய்மொய்னு பேசாதீங்க
மொய்மொய்னு பேசாதீங்க....
மொய் எனும் சொல்லுக்கு இரண்டு பொருள்களைக் கொள்ளலாம் ஒன்று வினைச்சொல் இன்னொன்று பெயர்ச்சொல் என இரண்டின் அடிப்படையில பொருள் கொள்ளலாம்,
1. வினையாக வரும்பொழுது அது கூட்டமாகச் சேர்தல். குழுமுதல் அல்லது சேர்ந்து ஒன்றில் பொருந்துதல் (அதாவது இனிப்புப் பணடத்தில் ஈக்கள் மொய்த்தன- பூக்களில வண்டுகள் மொய்த்துக்கிடந்தன- போர்க்களத்தில் வீரர்கள் போரிடுவதற்கு மொய்த்தனர்) என்று பொருள்
கூறலாம். எனவே மொய் என்றால் கூடு. கூட்டமாக சேர்ந்து நில் என்பது
பொருளாகக் கொள்ளலாம்.
2. மொய் எனும் இரண்டாவது பெயர்ச்சொல்லாக வரும்பொழுது ஒரு நிகழ்வில் உறவினர்கள் அன்பளிப்பாகத் தரும் பணம் எனறு பொருள் கொள்ளலாம். அது இன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி துன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி. இவ்விரு நிகழ்வுகளிலும் கூட்டமாக உறவினர்கள் வந்து பணம் செய்வதால் கூட்டமாக வந்து செய்ததால் சேர்ந்த பணம் எனும் நிலையில் பொருள் விரிவாக்கத்தில் மொய் (கூட்டமாய்) யாய் வந்த பணம் என்று பொருள் வந்திருக்கவேண்டும்.
மொய் விருந்து என்பது உறவுகளில் தடுமாறி சாகிற நிலைக்கு ஆளாகிற ஓர் உறவினைத் துர்க்கி (பொருளாதார ரீதியாக) நிலைநிறுத்த நடத்தப்படுவது உண்டு. வன்முறை வரைக்கும் சென்ற மொய் நிகழ்வுகளும்
உண்டு.
எனவேதான் கூட்டங்கூட்டமாய் பேசும்போது வயதில் பெரியவர்கள் ஏம்பா மொய்மொய்னு பேசாதீஙக் ஒரு முடிவுக்கு வாஙக் இப்ப என்ன தாலி கட்டச் சொல்றதா? வேண்டாமா? என்பார்கள், அல்லது பொணத்த எடுக்கறதா? வேண்டாமா? என்பார்கள்.
மொய் என்பதற்கு அகராதிகள மேலும் நெருக்குதல். இறுகுதல். பெருமை. போர்க்களம். அன்பளிப்புப் பணம் எனும் கூடுதல் பொருள்களைத்
தருவதைக் காணலாம்.
சரி எதற்கு இத்தனை இப்போது விளக்கம் என்று யோசிக்கலாம்.
என்னுடைய அனுபவம் மொய்யோடு நெருஙகிய தொடர்புடையது அதற்காகவே இந்த பீடிகை.
நீங்கள் ஒரு திருமண நிகழ்விற்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம் அங்கு நீங்கள் கடைபிடிக்கவேண்டிய சில விதிகள் உண்டு.
1. எக்காரணம் முன்னிட்டும் மொய் எழுத ஒப்புக்
கொள்ளக்கூடாது. முடிந்தவரை தப்பித்துவிடுவது நல்லது. மாட்டிக் கொண்டால் அது பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டது போலத்தான்.
2. மொய் எழுதும் தைரியம் உங்களுக்கு இருந்தால்
பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அ, உங்கள் கையெழுத்து கிறுக்கலாக இருக்கக்கூடாது.
ஆ. கையெழுத்து அழகாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் குண்டு குண்டாக இருக்கவேண்டும். ஒரு எழுத்திற்கும் இன்னொரு எழுத்திற்கும் இடைவெளி தாராளமாக விடப் பழகியிருக்கவேண்டும்.
இ. எக்காரணம் முன்னிட்டும் கோபப்படக்கூடாது.
ஈ. உங்களுக்குக் காதுகள நன்றாகக் கேட்கவேண்டும்.
உ. உங்களுக்குப் பக்கத்தில் உக்காருபவர் சரியாகவும் விரைவாகவும் பணத்தை வாங்கி பையில் போடுபவ ராக இருக்கவேண்டும.
ஊ. மொய் எழுதுவற்கு முன்பு அந்த வீட்டில் குறைந்தபட்சம் காலை டிபனாவது சாப்பிட்டுவிடவேண்டும். மொய் எழுத உட்கார்ந்தால் கண்டிப்பாகக் கடைசிப்பந்தி குறைந்த பட்சம் சாப்பாடும் ரசம் அல்லது மோர் மட்டுமே பசி மரத்துபோனவுடன் கிடைக்கும், அதற்குத் தயாராக இருக்கவேண்டும்,
அப்புறம் மொய் எழுதும்போது ஏற்படும இடையூறுகள் பின்னால் கடைசி யில் கணக்கு ஒப்படைக்கும்போது பணம் குறையும்போது தெரியும். எனவே ஆரம்பத்திலேயே இடையூறுகளை முடிந்தவரை குறைத்து தவிர்க்க வேண்டும். முற்றிலும் தவிர்க்கமுடியாது.
இடையூறுகள்.
1, மொய் நோட்டில் முதல் பக்கம் விழா பற்றிய விவரம். எழுதாமல் விடுவது.
2. அதற்கப்புறம் எத்தனைப் பக்கங்கள் விடுவது என்று மொய் எழுதச் சொன்னவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
மோதிரம் போடும் தாய்மாமாக்கள், சம்பந்திப் பணம் போடு பவர்கள். பட்டம் கட்டும் முறையுள்ளவர்கள் (எவ்வளவு கிராம்? மாங்காய் வடிவக் காசா.வட்டக் காசா..காது உள்ளதா இவ்வளவு விவரம் எழுத வேண்டும்) பெரிய தொகையாக மொய் எழுதும் முக்கிய நெருங்கிய உறவுகள். இவர்களுக்கான வரிசைமுறைகளை மொய் நோட்டில் எழுதப்படவேண்டும்.
இல்லையெனில் பெரிய சண்டையாகிக் கடைசியில எல்லாத்துக்கும்
மொய் எழுதுனவன்தான் காரணம்னு முடிந்துவிடும்..
3. சில்லறை கொடு என்று ஆயிரம் ஐந்நுர்று நீட்டுபவர்கள்.
4. இரண்டு பேருக்கு மொய் எழுதிவிட்டு பாக்கிகொடு என்று வங்கிக் கவுண்டர் முன் நிற்பவர்கள் போல் கேட்பவர்கள்.
5. சில்லறை கொடுத்துவிட்டு சட்டென்று நினைவுக்கு வரும் சில்லறை கொடுத்தோமே அதற்குரிய நேர்ட்டை வாங்கினோமா? என்று.
6. இவ்வளவு களேபரத்திற்கிடையில் ஒருவர் ஊர். தாத்தா.அப்பா வகையறா சொல்லி மொய் எழுதச் குரல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்.
7. வயதானவர்கள் சிலர் இதற்கிடையில் ஏம்பா சீவல் இல்லே? என்பார்கள். சுண்ணாம்பு காஞ்சிப்போச்சி தண்ணி ஊத்தச்சொல்லுப்பா என்பார்கள்.
8. ஏண்ணே அவங்களக்கு மீதி ஐம்பது ருபா கொடுங்க. இருநுர்று கொடுத்தாரு நுர்த்தம்பதுதான் மொய்..
9. சரி நாலாயிரம் கொடு மைக் செட்டுக்காரனுக்கு செட்டில் பண்ணணும். ஒரு ஓரமா எழுதிக்கோ என்று மொய் எழுதச் சொனன்வர் கை நீட்டிக் கேட்பார்.
கிட்டத்தட்ட நான் ஒரு ஐம்பது திருமண நிகழ்விலாவது மொய் எழுதி யிருப்பேன் (வற்புறுத்தி மாட்டி வைப்பார்கள்- முகத் தாட்சண்யத்திற்காக
மாட்டிக்கெர்ள்வது மறுக்கமுடியாமல்). அதன் அனுபவம்தான்மேலே கண்டது.
நான் கடைசியாக மொய் எழுதும் போரை முடித்து ஞானம் கொண்டதை சொல்கிறேன்.
அது கள்ளர் வீட்டுக் கல்யாணம். என்னுடைய நண்பன் கல்யாணம். மொய் எழுதச் சொன்னார்கள். எழுதுடா உன் எழுத்து நல்லா இருக்கும் (எந்த எழுத்து கையெழுததா? தலையெழுத்தா?) நண்பர்கள் உசுப்பல் அப்புறம் உனக்குத்தாண்டா பொறுமை அதிகம். உசுப்பி விடுவார்கள்.
மொய் நோட்டைப் பிரித்து வைத்து முதல் போணி பண்ணக் காத்திருந் தேன். ஒரு வயதானவர் வந்தால். இடுப்பில் வேட்டி மேல் சட்டையில்லை. ஆனால் ஒரு வெள்ளைத்துண்டு. இடுப்பில் வெத்திலை சீவல் வைக்கும் பெரிய முடிச்சு இருந்தது.
என் அருகே வந்து என்னை ஏறஇறங்கப் பார்த்தார். அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு
சொல்லுங்க தாத்தா என்றேன்.
நான் தாத்தாவா உனக்கு? என்றார்.
சரி சொல்லுங்க என்றேன்.
யாரு மொய் புடிக்கிறது என்றார்.
நான்தான் எழுதுறேன் என்றேன்.
என்ன படிச்சிருக்கே? (மொய்க்குன்னு படிப்புண்டா?)
டிகிரி படிச்சிக்கிட்டிருக்கேன்.
சரி ஒழுங்கா எழுதுவியா?
எழுதுவேன்,
பேனாவக் காட்டு என்றார்.
(கோபத்தை அடக்கிக்கொண்டேயிருந்தேன்.)
நல்லா எழுதும் பேனா இது. (அப்போ அந்த ரீபில் 1
ரூபாய் பத்திரம் என்று சொல்லி நண்பனின் அப்பா தந்துவிட்டுப்போனார்.)
சரி எழுது என்றார்.
சொல்லுங்க என்றேன்.
அதுவரை பணம் எடுக்கவில்லை.
சொன்னார்.
நாஞ்சிக்கோட்டை..
நாஞ்சிக்கோட்டை
விளார் ரோடு
விளார் ரோடு
வல்லுண்டாம் பட்டு கிராமம்
வல்லுண்டாம் பட்டு கிராமம்
ஆவன்னா கோவன்னா ராமசாமி தஞ்சிராயர்
ஆவன்னா கோவன்னா ராமசாமி தஞ்சிராயர்
மகன் ஆர் பாலய்யா தஞ்சிராயர்
பாலய்யா தஞ்சிராயர்
எழுதிட்டியா
எழுதிட்டேன்
குனிந்து மொய் நோட்டைப் பார்த்தார்..
என்ன இது கோழி சீச்சமாதிரி எழுதியிருக்கே
அவர் சொன்னதைப் படித்துக் காண்பித்தேன்
ஓரளவுக்கு திருப்தியானார்.
பின் மெல்ல தன் இடுப்புப் பகுதியிலிருந்த வெத்திலைப் பொட்டலத்தை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு பின் வேட்டி மடிப்பில் இருந்து சுருண்ட அந்த ரூபாய் நோட்டை எடுதது மொய்நோட்டுமேல போட்டு ரெண்டு ரூபாய் எழுதிக்கோ என்றார்..
அப்போது இருந்த ரெண்டு ரூபாய் நோட்டு
எழுதிக்கொண்டேன்.
(குறிப்பு - அப்போது எல்லாம் 2 ரூபாயில் ஆரம்பித்து 5. 10. 15.. 20. 21. 25. 31. 40. 50. 51. 100.101.200. 201 இப்படித்தான் மொய் வரிசை எழுதுவார்கள் இது அவர்களின் பழக்க வழக்கங்களைப் பொறுத்து மொய் அதிகத் தொகையில் எழுதுவார்கள். 10 க்கு மேல் எழுதினால் அது அதிகம்)
இப்படியாக அந்த மொய் எழுதி முடித்தேன்.
அன்று மாலை 4 மணியளவில் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வந்து விட்டேன்.
மறுநாள் சனிக்கிழமை.
அதற்கடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி இருக்கும். அந்த திருமணமான நண்பன் வீடு தேடி வந்தான்.
என்னடா இது காலையிலேயே என்றேன்.
அவன் முகம் சிரிப்பாக இல்லை.
என்னடா என்ன பிரச்சினை? என்றேன்,
அவன் ஒரு நோட்டை நீட்டினான். அது நான் எழுதிய மொய் நோட்டு.
எதுக்குடா இது என்றேன்,
அவன் சொன்னான்.
உன் எழுத்து புரியலியாம். அதனால எல்லாத்தையும் நிறுத்தி அழகாக எழுதிக்கொடுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க எங்க அப்பா.
என்ன இது இந்த எழுத்து புரியலியா?
ஆமாம் எழுதிக்கொடு.
சரி கொண்டா எழுதி வைக்கறேன். சாயங்காலம் வாங்கிக்க.
இந்தா என்று அந்த 2 ரூபாயைக் கொடுத்தான். முதல் போணி பண்ணன நோட்டு அது.
இது கிழிஞ்சிருக்கு செல்லாதாம். பாத்து வாங்க மாட்டானான்னு உன்ன எங்கப்பா திட்டறாருடா.. இத வச்சிக்கிட்டு வேற நோட்டுக் கொடு.
சரி கொண்டா என்று உள்ளே போய் எங்கப்பாவிடம் இருந்து ஒரு ரூபாய் நாணயம் இரண்டு வாங்கிட்டு வந்து அவனிடம் கொடுத்தேன். சாயங்காலம் வரேன மொய் நோட்டு வாங்க என்று சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
உனக்கு இதெல்லாம் தேவையா என்றபடி அந்த செல்லாத நோட்டை அப்பா வாங்கிப் பையில் வைத்துக்கொண்டார்.
பளளியில் ஒரு பாடத்தைப் படிக்கவில்லை என்றால் வாத்தியார் தண்டனையாக அந்தப் பாடத்தை 5 முறை எழுது என்று இம்போசிசன் கொடுப்பார்கள்.
உலகத்திலேயே மொய் நோட்டை இம்போசிசன் எழுதியவன் என்ற பெருமை எனக்கே உண்டு.
இன்றைக்கும் நானும் அந்த நண்பனும் நட்பில் இருக்கிறோம். நட்பைவிட உயர்ந்தது ஒன்று உண்டோ.
வெட்டப்படும் ஆட்டிற்குத் தண்ணீர் ஊற்றும்போது ஒரு சிலிர்ப்பு சிலிர்க்குமே அதுபோல யாராவது மொய் என்று உச்சரித்தாலே போதும் இன்றைக்கும் எனக்கு சிலிர்க்கும்.
00000000000000
Saturday, June 21, 2014
நிலம்...வயல்...உறவுகள்...
நிலம்....வயல்....உறவுகள்...
அப்பா அரசாங்க வேலையிலிருந்தார். அவரின் அப்பாவும் அப்படித்தான் அரசாங்க வேலையிலிருந்தார் ஆனால் நிறைய நிலங்கள்
இருந்தன.
அதில் பாதி நிலங்கள் அப்பா தன்னுடைய சம்பாத்தியத்தில் தாத்தா வாங்கியது.
உன் பெயரில் எழுதி வைக்கிறேன் என்கிற வாய்வார்த்தையோடு கடைசிவரை தன்பெயரில் இருந்த நிலங்களை தன் ஒரே மகள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு தாத்தா செய்த துரோகத்திற்கு கடைசிக்காலத்தில் கண் தெரியாமல் அந்த ஒரே மகள் வீட்டிலேயே இருந்து இறந்துபோனார்.
அப்பா தன் சம்பாத்தியத்தில் தனக்கென்று வாங்கிய சொற்பநிலமும் அத்தையின் அத்தை கணவரின் சாமர்த்தியத்தால் அப்பா விற்றுவிடும்படி நேர்ந்துவிட்டது.
ஒரு பைசா உன் சொத்தில் வேண்டாம் என்று பத்திரப் பதிவு
அலுவலகத்தில் ஒரு கையெழுத்தைப்போட்டுவிட்டு வந்துவிட்டார்
அப்பா.
இப்போது அப்பா இல்லை, அத்தையும் இல்லை, அத்தனை நிலங்களும் இல்லை.
ஆனால் அப்பாவின் பென்ஷன் அம்மாவிற்கு வருகிறது.
00000000000000000000
நன்றாகப் படித்தவன் அவன், சிரமப்பட்டுத்தான் படித்தான்,
ஆனால் புத்தி சரியில்லாதவன், குறுக்குப்புத்தி, தவறான புத்தி, பிளாட்
போட்டு விற்கிறேன் என்றான், மாதத் தவணைத் திட்டம், பண்ம் கட்டினார்கள்
ஏராளமானோர், நல்ல வசூல்.
இவனுக்கு ஒருத்தன் பார்ட்னர்,
கடைசியில ஏமாந்துபோனது பார்ட்னர். அவனை மாட்டிவிட்டு இவன் தப்பிவிட்டான், நிறைய பணம் சேர்ந்துவிட்டது.
பணத்தைக்கொடுத்து ஒரு வேலையையும் வாங்கிவிட்டான்.
நிறைய பணம் சேர்ந்ததும் மாமனார் வீட்டையே விலைக்குக்
கேட்டான். அடிமாட்டு விலைக்குப் பேசி வாங்கினான்.உடந்தை தந்தையின்
வீட்டை மகளே உதவினாள். கணவனே கண்கண்ட தெய்வமாம்.
பத்திரப் பதிவு அன்றைக்கு மாமனாரைக் காலி செய்யச்
சொன்னான். குடும்பம் வருத்தத்தோடு வெளியேறியது.
இப்போது அந்த வீட்டை நல்ல வாடகைக்கு விட்டுவிட்டான்.
சொந்த வீட்டை விற்றுவிட்ட அவனது மாமனாரோ வாடகை
வீட்டில்.
நன்றாகத்தான் இருக்கிறான் இன்றுவரை அவன்.
0000000000000000
மேலே சொன்னவனிடம் சிரமப்பட்டு பணம் கட்டி ஒரு
பிளாட்டைப் பதிவுசெய்தான் ஒருவன்.
சொற்பச் சம்பளக்காரன்.
எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது இருக்கும்
பணக் கஷ்டத்தில் வாங்கி பிளாட்டை விற்கலாம் என்றால் அந்த பிளாட்டின்
மேல் மின்சார வாரியத்தின் அதிக சக்திவாய்ந்த வயர் கம்பிகள் போகின்றன.
யாரும் வாங்க மறுக்கிறார்கள்.
இருந்தும் இல்லை. விருந்தும் மருந்தானது.
00000000000000000
ஒரு பெண் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவனை மட்டும்
அவளுடைய எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டாள்.
இறப்பதற்கு முன்னதாக தன்னுடைய ஒரே சொத்தான
கணவன் சம்பாதித்து வைத்த வீட்டை அவள் பெயருக்கு இருந்ததால்
எல்லாப் பிள்ளைகளையும ஒதுக்கிவிட்டு தன்னுடைய ஒரு மகளுக்கு
மட்டும் எழுதி வைத்துவிட்டாள்.
இது துரோகமா? தாய்ப்பாசமா? நம்பிக்கை மோசமா?
0000000000000
இவை கதைகளல்ல... ஆனால் கனவுகளாயும் பின்னர் கதைகளாயும் மாறிப்போனவை.
Friday, June 20, 2014
வேடிக்கைகள் தொடர்கின்றன,,,
கதையெழுதும் அனுபவம்.....
அப்பா ஐந்தாவது வகுப்பிலேயே தொடங்கி வைத்த வாசிப்புப பழக்கம் பள்ளிப் புத்தகங்கள் இல்லாமல் மற்ற புத்தகங்களை என்று
தொடங்கியது,
நானும் நண்பன் சுவாமிநாதனும் சேர்ந்து பார்வை என்ற
கையெழுதது இதழை ஆசிரியர் நாகன் எனும் பெயரோடு தொடங்கியதில்
எழுதிய கதையே தொடர்கதைகள், இரு தொடர்கள் எழுதினேன், ஒன்று மறைந்த மோதிரம் இன்னொன்று பாய்ந்து வந்த கத்தி என்பது, நன்றாக
நினைவிலிருக்கிறது,
இப்படி கதையெழுதத் தொடங்கிய சூழலில் பத்திரிக்கைகளில் ஒன்று இரண்டு கதைகள் வந்தபோது படித்துவிட்டு நண்பர்கள் கேட்டார்கள்,
உங்க வாழ்க்கையில் நடந்ததா? என்று,
உங்க வாழ்க்கையில இது போன்றவை நடக்கவில்லையா?
என்று திருப்பிக் கேட்டேன,
ஒரு கதையில் எழுதிய பெண் பற்றிய விவரத்தைப் படித்துவிட்டு
இந்தப் பெண் எங்கிருக்கிறாள்? உங்களுக்கு மிகவும் வேண்டியவரா?
என்றார்கள்,
ஒரு காவல்துறை அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட இளைஞனைப் பற்றி எழுதியபோது,, ஓ நீங்கதானா அது? எந்த போலிஸ்
ஸ்டேஷன் என்றார்கள்,
ஒரு இளைஞன் பொறுப்பில்லாமல் ஊதாரியாய் திரிவதைப்
பற்றி எழுதியபோது துர்ரத்து உறவினர் ஒருவர் இன்னொரு உறவினரிடம்
சொல்லி உங்க பையனைப் பத்திதான் எழுதியிருக்கான் என்று சொல்லி
ஒரு சாவு வீட்டில் பிரச்சினையானது,
பெரும்பாலும் என்னுடைய கதைகளின் களம் குடும்பமாக
இருந்தாலும் நான் அவற்றிலிருந்து செய்திகளை எடுப்பதில்லை, எஙகேனும் செய்தித்தாள்களில் படிக்கிற போது,, எங்கேனும் பார்க்கிற போது அதில் மனம்
ஈடுபட்டு நாமாக இருந்தால் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு சொல்வேன் என்று எண்ணுகிறபோது கதையாகிவிடும்,
டீக்கடைகளில் யாரேனும் சிலர் ஏதேனும் ஒரு அலுவலகத்தைப் பற்றிப் பேசுவார்கள், எனவே அதனை உள்வாங்கி நாமாக
ஒன்றைப் புனைந்து எழுதினால்,
நீங்க வேலை பாத்தீங்களா? அப்புறம் ஏன் விட்டீங்க?
கதை எழுதியதால அனுப்பிட்டாங்களா,,,
ஒரு கதையில் ஒருவன் கர்ப்பிணி மனைவியிடம் சண்டை
போடடுவிட்டு அலுவலகம் போவான், அலுவலகத்தில் செய்யாத தவறுக்குப்
பொறுப்பேற்பான்,அப்புறம் அது அவன் மேல் தவறில்லை என்று நிருபிக்கப்படும், உடனே மனைவியை நினைத்துக்கொள்வான்,
மாலையில் திரும்பும்போது திராட்சை வாங்கிகொண்டு போவதாக கதையை முடித்திருந்தேன்,
பொதுவாக தஞ்சாவூர் சாலைகளில் தள்ளுவண்டிகளில் அதிகம் காணக்கிடைப்பது பன்னீர் திராட்சைதான், எனவே அது மனத்தில் பதிவாகி
கதையில் வெளியானது,
உறவுக்காரப் பெண் ஒருவர் என்னிடத்தில் கேட்டார் உங்க மனைவிக்கு பன்னீர் திராட்சைதான் பிடிக்குமா?
எதை எழுதினாலும் படிக்கிறவர்கள் உடனே அதனை படைப்பாளியோடு இணைத்து பேசுவது தொடர்ந்துகொண்டிருக்கும் வேடிக்கைதான்,
அன்றுதொட்டு இன்றுவரை நேர்ந்து கொண்டேயிருக்கிறது,
வாழ்க்கையை மீறியதான ஒன்றைப் படைப்பாகத் தந்துவிட
முடியாது, எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான், அது படைப்பாக
உருவாகும்போது சறறு கற்பனை கலந்து வேறுஒரு முடிவாக வெளிபப்டு
கிறது,
பாத்திரங்களுக்குப் பெயர வைக்கிறபோது அதன் பண்பிற்கேற்ப
பெயர்களை வைப்பேன், சமயங்களில் சில பெயர்கள் வந்துவிடும், உடனே
உறவுக்காரர்கள் இது என்ன அவ பெயரை வச்சிருக்கே? அவ்ங்க வீட்டுல ஏதும் பிரச்சினையாயிடும்,, அவங்க கதையெல்லாம் எழுதாதே என்பார்கள், பெயரைத்தவிர எல்லாமும் வேறு கதையாக இருந்தாலும இப்படிப்
பிரச்சினை இருந்தது,
கவிதை எழுதினால்... இது அவருதானே? அவருக்கு இது தெரியுமா? அவர் இதைப் படிச்சாரா? என்ன சொன்னாரு,, உன் மேல
கோவிச்சுக்கலே,,, அபரிமிதமான கற்பனைக்குப் போய்விடுவார்கள்,
ஒருவரின் வாழ்க்கை இன்னொருவரின் கதையாகும், இன்னொருவரின் வாழக்கை வேறொருவரின் வாழ்க்கையாகும்,
சின்ன வயதில் படித்த கதை ஒன்று
ஒரு மருத்துவரிடம் ஒருவன் உதவியாளனாகச் சேர்ந்தான்,
அவனும் மருத்துவம் படித்தவன்தான்,
நான் செய்வதைக் கவனமாகப் பார்த்துக் கற்றுக்கொள்
என்றார் மருத்துவர்,
ஒருமுறை ஒரு நோயாளியைப் பார்க்க இருவரும்
போனார்கள், கட்டிலில் படுத்திருந்தவருக்கு வயிற்றுப்போக்கு,
மருத்துவர் கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தார் நிறைய வாழைப்பழத்
தோல்கள் கிடந்தன,
வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டீர்களா?
என்றார்,
ஆமாம் என்று நோயாளரி பதில் சொன்னார், மருந்துகள்
எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்,
அடுத்தமுறை சீடர் மட்டுமே செல்லவேண்டி
இருந்தது, இதுவும் வயிற்றுப்போக்குதான், இவரும் மருத்துவர்
குனிந்து பார்த்ததுபோல நோயாளியின் கட்டிலின் கீழே பாரத்தார், புலித்தோல்
கிடந்தது,
புலியைச் சாப்பிட்டீர்களா?
நிறைய அனுபவங்கள் உள்ளன, வாய்ப்பமைவில்
பகிர்ந்துகொள்கிறேன்,
Thursday, June 19, 2014
வாழ்க்கையின் சுவை....
வாழ்க்கையின் சுவை....
அலுவலக வேலை நிமித்தமாக நேற்றிரவு செம்மொழியில்
கோவை சென்று இன்று திரும்பிவந்தேன். திரும்பி வருகையில் பேருந்துப் பயணம். அதில் சில சுவைகள்.
நிகழ்வு 1
எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது. விதிக்கப்பட்ட வாழ்க்கையின் இன்பமும் துன்பமும்கூட அவரவரக்கானது.
இதை ஒவ்வொரு பயணத்தின்போதும் உணர்கிறேன். கூட்டங்கூட்டமாய்
பயணித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
பரபரப்பாக ஓடி வருவது.
ஒரு கையில் துர்க்கமுடியாத நிலையில் நாலைந்து பைகள்.
இன்னொரு கையில் குழந்தை.
ஏங்க இது.. சிங்காநல்லுர்ர் போவுமா?
கண்டக்டர் பதில்சொல்வது அவரின் மனநிலையை (மூட்)
பொறுத்தது. எப்படியாயினும் ம்... என்பதை ஒலிக்குறைவாகவேணும்
சொல்லிவிடுவார்.
இந்தாங்க நான் அடுத்த மார்க்கட் ஸ்டாப்பிங் இறங்கணும்.. பர்க்கி
சில்லறை கொடுங்க.. அப்புறம் ஒரு ஐந்நுர்றுக்கு சில்லறை கொடுங்க..
இதற்கு எதிர்விளைவு காட்டும் கண்டக்டரைப் பற்றித் துளியும்
கவலைப்படுவதில்லை.
என்னங்க சில்லறை இருக்கா ? இல்லியா?
பேருந்து போய்க்கொண்டிருக்கையில்
எல்லாருமா ஆயிரம் ஐந்நுர்றா கொடுத்தா என்ன பண்றது?
கண்டக்ருக்குன்னு தேடி எடுத்துட்டு வருவீங்க போலருக்கு..நான் என்ன
பேங்க் ஆபிசரா.. அப்படியொரு பொழப்பு போட்டிருந்தாக்கூட அங்கயும்
சில்லறைதான் கொடுப்பேன் போலிருக்கு..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நிகழ்வு 2
ஐம்பது வயதைத்தாண்டியவர் அவர். சிங்கா நல்லுர்ரைவிட்டு
பேருந்து புறப்பட்டு பல்லடம் வந்து டிக்காக நிறுத்தியபோது நிறுத்தியிருந்த
பேருந்தில் ஏறி நிற்காமல் ஆடிகொண்டிருந்தார்.
நன்றாகக் குடித்திருந்தார்.
எங்க போறய்யா நீ? பல்லில் சிக்கிக்கொண்ட போண்டாவின்
துகள்களை சிறுகுச்சியால் குத்திக்கொண்டே கண்டக்டர்,
காங்கயம் ஒண்ணு கொடுங்க ஐயா.. அத்தனை குடியிலும்
மரியாதையாகப் பேசினார்.
இடமிருக்கே உக்காரேன்..
வேண்டாம். துர்ரமா பயணம்போறவங்க உக்காரட்டும்..
பொண்டு புள்ளவ வரும்.. ஆடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆட்டததிற்கும்
கல்யாண வீட்டில் வாசனை திரவியம் அடிப்பதுபோல போதை நெடி..
எல்லார் மூக்கின் முற்றத்திலும் நடனமாடியது,, யார் மீதாவது வாந்தி
எடுத்துடுவாரோ என்கிற பயம் வேறு எல்லார்க்கும் இருந்தது,
கண்டக்டர் டிக்கட் போட்டுவிட்டு வந்தார். அவரை
நிறுத்திவிட்டு ஆடிக்கொண்டிருப்பவர் கேட்டார்.
ஐயா.. உங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ்?
ஏன் அதக் கேட்டு என்ன பண்ணப்போறே? எனக்கு பிரமோஷன்கீது கொடுக்கப்போறியா?
சொலலுங்கய்யா..
பதினைந்து வருஷமாச்சு.. என்றார் கண்டக்ட்ர்.
எனக்கு முப்பத்தியேழு வருஷம் சர்வீஸ். குடிச்சுக்கிட்டே
யிருக்கேன். ஆனா ஒரு தடவகூட யார் மேலயும் வாந்தி எடுத்தது இல்ல,
அப்படித்தான் நான்.. அதானய்யா உங்களுக்கு டவுட்டு,, நானும் கிராம
சிப்பந்தியா இருந்தவதான் தாசில்தாரு ஆபிசுலே.. ஆனா வேலையில
கரக்ட் இருப்பேன். வேல முடிஞ்சவுடனே கடைதான்,, குடிதான்,,
டிரைவர் உட்பட எல்லோரும் சிரித்துவிட்டோம்.
காங்கேயம் வரும் வரை ஆடிக்கொண்டிருந்தார். ஆடியபடியே இறங்கிப்போனார். ஆனால் வாந்தி எடுக்கவில்லை.
நிகழ்வு 3
பேருந்தில் வரும்போது கரூர் தாண்டி சாலையோரம் ஆக்ரமிப்பு செய்திருந்தமையால் இடதுபக்கமிருந்த வீடுகள் ஒவ்வொன்றின் முகப்பும் இடிக்கப்பட்டிருந்தன. அவற்றின் சுவர்களில் ஒரே விளம்பரம். கிருஷ்ணா
அரிசிக்கடை. அவற்றை எழுதிய ஓவியரின் ரசனையாக இருக்கவேண்டும்
என்று நினைக்கிறேன். கிருஷ்ணா என்ற சொல்லில் உள்ள கி என்ற எழுத்தின்
தலையில் இரண்டு மயில் இறகுகளை வரைந்திருந்தார். கிருஷ்ணா என்ற சொல்லிற்கு அடிக்கோடிட்டதுபோல ஒரு புல்லாங்குழலையும் வரைந்திருந்தார்.
நிகழ்வு 3
நாட்டாமை போல மீசை வைத்திருந்தார். தலையில் கறுப்பு மை பூசியிருந்தார். மீசை முழுக்க வெள்ளை. இடது கையில் ஒரு தாளை பொட்டலம் போல சுருட்டியிருந்தார். வலது கையில் ஒரு சில்வர் துர்க்கு.
சூடான பட்டாணி சுண்டல்.. சூடா இருக்கு பட்டாணி சுண்டல்.. தரட்டுமா சார்.. தரட்டுமா ஐயா.. தரட்டுமா அம்மா சூடான பட்டாணி சுண்டல்.. என்றபடி
கத்திக்கொண்டே போக. வாசனை துர்க்கைத் தாண்டி பேருந்தில் தவழ்ந்தது.
நாலைந்துபேர்கள் வாங்கினார்கள். திறந்து பொட்டலமாக மடித்துக்கொடுக்க பட்டாணி சுண்டல் வாசனை வாங்கித் தின்னவேண்டும் என்று துர்ண்டியது.
துர்ண்டலில் சிலர் வாங்கினார்கள்.
அப்போது பேருந்து சிங்காநல்லுர்ரைவிட்டுப் புறப்படவில்லை.
சற்றுநேரத்தில் அந்த சுண்டல்காரர் இறங்கி எதிரில் இருந்து ஆவின் பால் கடைக்குப் போய் சுண்டல் துர்க்கை வைத்துவிட்டு நெற்றியின் வியர்வையைத் துடைத்தார் (இதுபற்றி சற்று விளக்கமாக கீழே தருகிறேன்)
பின் கடையில் இருந்த சம்சாக்களில் இரண்டை எடுத்து,,
டீ சூடா போடுப்பா,, என்னா பசி என்றபடி சம்சாக்களைத்
தின்ன ஆரம்பித்தார்.
தின்று முடித்ததும் கடையிலிருந்த துண்டு பேப்பரை எடுத்து
கையை. வாயைத்துடைத்துக்கொண்டார்.
டீயை சாப்பிட்டு முடித்தார்.
எல்லாம் முடிந்ததும் தன் இடது கைப்பக்கம் வைத்திருந்த அந்த
(அவரின் சுண்டல் மடிக்கும் தாள் அது) தாளை எடுத்துப் பொட்டலம் போல
மடித்துக்கொண்டு
பசிக்கு சூடான பட்டாணி சுண்டல்,,, என்று குரலெழுப்பியபடியே
அடுத்த பேருந்திற்குள் ஏறினார்.
அவரவர்க்கான தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும தீர்வுகளுக்கும் எனப் பயணம் மேற்கொண்டாலும் சற்று
அதிலிருந்து விலகி சூழலைக் கவனித்தால் வாழ்க்கை சுவையானதுதான்,
0000000000000000000
சுண்டல்காரர் நெற்றி வியர்வையைத் துடைத்தார் என்று எழுதினேன் அல்லவா?
ஒரு படைபபாளியாக இருப்பதால் அதை கதையில் சொன்னால் எப்படி கற்பனை செய்து எழுதுவேன் என்று யோசித்தேன்,
உங்களுக்கும் அந்தக் கற்பனை பகிர்வு,
கற்பனை 1
ஒரு கேள்விக்குறியை படுக்க வைத்ததுபோல் வலதுகையின்
நான்குவிரல்களை மடக்கி நெற்றியின் வியர்வையை விரல்களால்
விழுங்கி பின் அப்படியே தரையில் துப்பினார் அந்த சுண்டல்காரர்.
கற்பனை 2
மழைக்காலத்தில் இயங்கும் வைப்பரைப்போல விரல்களை
வைப்பர்களாக்கி நெற்றிவியர்வையைத் துடைத்து உதறினார். கலலடிபட்ட
மரத்திலிருந்து பயந்து பறக்கும் பறவைகளைப்போல அந்த வியர்வைத்
துளிகள் நாலாபக்கமும் சிதறின சுண்டல்காரரின் விரல்களிலிருந்து விடுபட்டு,
கற்பனை 3
தலையில எழுதிய எழுத்தின் மையொழுகுவதைப்போல
சுண்டலகாரரின் நெற்றியில் வியர்வை ஒழுகியது. வலதுகையால் துடைத்து
எரிச்சலோடு எறிந்துவிட்டு டீயை போடுப்பா என்றபடி அதே கையால
சம்சாவை எடுத்து வாயில் வைத்து பசியின் வேகத்தைக் காண்பிக்க ஆரம்
பித்தார்,
சந்திப்போம்.
Tuesday, June 17, 2014
போதிமரக் கதைகளும் உபரியாய் ஒரு கவிதையும்.
போதிமரக் கதைகளும் உபரியாய் ஒரு கவிதையும்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
( 1 )
சோத்துல உப்புப் போட்டுத்தான திஙகற... பணம் வாங்கி
எத்தனை நாளாச்சு?
பேசாமல் நின்றான் ரவி. அவன் எதைப்பற்றியும் கவலைப்
படுவதில்லை. அவன் குடும்பமே அப்படிததான். ஊரெங்கும் கடன். தெருவில்
நின்று கடன்கொடுத்தவர்கள் கத்திவிட்டுப்போவார்கள். மானம். அவமானம்
இவற்றுக்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் இல்லை.
பேசப்பேச பேசாமல் கல்லைப்போல நின்றான்.
எப்பத்தாண்டா தருவே?
தந்துடறேன் அண்ணே..
எனக்கு சோர்வானது. கிளம்பிவிட்டேன்.
என்னா பணம் கொடுத்தானா?
,,,,,,,,,,,,,,,,,,,,,,
உங்களதாங்க கேக்கறேன்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அழுத்தம். அத்தனை அழுத்தம். ஆனா கொடுத்த கடனை
வாங்க துப்பில்லே.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். பேசினால்
விபரிதமாகும். அந்தப் பயலுக்குக் கடன்கொடுத்துவிட்டு டாக்டருக்குப்
போய் வட்டிக் கட்டமுடியாது.
0000000000000000000000000000
மேய்தலும் கடித்தலும்
காலையிலேயே வீட்டு வாசலில் நின்று கத்தினாள்
பரிமளா. ஆண்பிள்ளை குணம்கொண்ட பெண் அவள்.
ஏங்க.. உங்க நாயால என்னோட ஆடு செத்துப்போச்சு.
என்ன சொல்றே?
உஙக நாய் கடிச்சு என்னோட ஆடு அதுவும் குட்டி
செத்துப்போச்சு..
அதுககு இப்ப என்ன பண்ணணுங்க்றே,,, ஊரு ஊராப்
போய் செடி வாங்கி வச்சா.. எங்க முளைக்கவுட்டுச்சு உன்னோட ஆடுங்க..
மேஞ்சு எல்லாம் போயிடிச்சி,, அப்ப என்ன சொன்னே?
என் ஆட்டுக்கு வழி சொல்லுங்க..
நான் எதுவும் செய்யமுடியாது.
உன் நாய அடிச்சுக் கொல்றேன் பாரு. மரியாதை இறங்கியது.
தாராளமா செய்..
சொன்னதுபோலவே செய்துவிட்டாள். பத்துவருடங்களாக
இருந்த நாய்.. திடீரென தலையில் ரத்தக் காயத்துடன் இறந்துகிடந்தது.
கவலையாக இருந்தது.
வீட்டுக் கொல்லைப்புறமே புதைத்தாயிற்று.
நாலைந்து நாட்கள் கழித்து பரிமளத்தை ஆட்டோவில்
வைத்துக் கொண்டுபோனார்கள் மயங்கிய நிலையில்.
என்ன ஆச்சுன்னு தெரியலே.. ஏதோ கையில கடிச்சிருக்கு..
அலட்சியமா வுட்டுட்டா அது வலிப்பு மாதிரி வந்துடுச்சி.. மயக்கமாயிட்டா..
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது நாய்க்குப்
பொருந்தாது.
0000000000000
வேலை...
உனக்கு இந்த வேலையும் கெடக்காது போலருக்கே
எனக்குத் தெரியும்.
அப்புறம் ஏண்டா இண்டர்வியுக்குப் போனே?
இதுமாதிரி இண்டர்வியுகூட வந்து நாலு வருஷமாச்சுடா..
000000000
மூன்று மீன்கள் சந்தித்துக்கொண்டன ஒரு கூடைக்குள்
ஒன்று ஆற்றுமீன்.
இரண்டாவது குளத்துமீன்.
மூன்றாவது கடல் மீன்.
மூன்றும் உயிர்பிழைத்திருப்பது வாழ்வதற்கு. ஆனால்
அது யார் வாழ்வதற்கு என்பதுதான் சிக்கல்.
மீன்களா? அல்லது அதை பிடித்தவனா?
அல்லது அதை தின்று செரிப்பவனா?
மீன்கள் முடிவுசெய்யமுடியாது அவற்றின் வாழ்க்கையை,
விற்பவனும் முடிவு செய்யமுடியாது,
தின்று முடிப்பவன் தின்னாமல் இருந்தால் எதனையும்
யோசிக்கலாம்.
நீளமான அகலமான ஆற்றில் வாழ்ந்ததுவே பெரிய
கொடுப்பினைதான். அந்த நினைவோடு என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன். ஆற்றுமீன்.
நீ வாழும ஆறுகளைப்போல எத்தனை ஆறுகள் வந்து
சேரும் கடல் அல்லவா நானிருநதது. என்னுடைய நினைவு பெரியது.
என்றது கடல் மீன்.
கூடையை ஒருமுறை குளத்துநீரில் மூழ்கி எடுத்தான்
பிடிததவன். அந்தக் குறைந்த நீரைப் பயன்படுத்திக் குளத்தில் துள்ளிக்
குதித்த குளத்துமீன் சொன்னது.
நமக்கான வாழ்க்கையை கடவுள் நமக்களித்திருக்கிறான். அதை யார் வாழமுடியும் நம்மைத்தவிர.
0000000000000000000
உண்மையான தொண்டு
எதையும்றியாது
உண்மையான அக்கறை
எதையும் உளறாது
உண்மையான உழைப்பு
எதையும் எதிர்பாராது
உண்மையான அர்ப்பணிப்பு
எப்போதும் விலகாது,,
விலகல் என்பது விலக்கலின்
பயத்தில் உதிப்பதுதான்,
0000
Wednesday, June 4, 2014
சூரியனின் வயது 91
என் தந்தையார் பெரியார். அண்ணா. கலைஞர் கருணாநிதி எனப் பற்றுக் கொண்டவர். என் சிறுவயதில் இவர்களைப் பற்றிச் சுவையாக கதையாக சொல்லி திராவிடப்பற்றை வளர்த்தவர்.. அபபுறம் என்னை எம்ஜிஆர் ரசிகனாக (இன்றுவரை) மாற்றி அவரின் ஒவ்வொரு படத்தையும் குறைந்த பட்சம் 5 முறைக்குக் குறையாமல் பார்க்க அழைத்துப்போனவர். இன்றைக்கும் எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் என்றால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் ஆர்வம் குறையாம்ல் இருக்கிறது. அதேசமயம் இன்றுவரை எந்தக் கட்சியின் உறுப்பினரும் இல்லையென்றாலும் கலைஞரின் இலக்கிய ஆற்றலின்மேல் உள்ள பற்று ஒருசிறிதும் குறையாமல் உள்ளது. 91 சகாப்தங்களை உருவாக்கிய ஆளுமை நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. அவரின் தமிழுக்குத் தலைவணங்கத்தான் வேண்டும். இன்றைக்கும் அவரின் வசனங்கள் எழுதிய பழைய திரைப்படங்களைப் பார்க்க அதில் விளையாடும் தமிழ் மீன்களை அள்ளிக் கொஞ்சவே மனது எண்ணுகிறது.
சூரியனின் வயது 91
பெயரிலே திருவடக்கிய திருஆரூரின்
திருக்குவளை தன்னிலே இருபத்து நான்கினிலே
இனிய தமிழின் மூலவித்தாய் முகிழ்த்திட்ட முதல்தமிழே..
இயற்பெயராய் குருவின் பெயரைக்கொண்டவரே
இன்றைக்கு எல்லார்க்கும் குருவாய் நின்றவரே...
தமிழ்க்கடலில் கிடைப்பரிய பொன் அமிழ்தே
தமிழினத்தின் வாழ்விற்கு வாய்த்திட்ட கருணைநிதியே...
பதின்மூன்று வயதினிலே சமுகத்தின் பழுதுநீக்க
படித்திடப் பள்ளியிலே உன் போராட்டம் பாடமாச்சு..
பயின்றிட்ட மாணவப் பருவமதில் மாணவநேசன்
என்னும் ஓர் இதழைத் தொடங்கிட்ட பூந்தளிரே
மாணவ மன்றம் அமைத்து பாரெங்கும் பரந்திட்ட
குடிசைகளின் துயர்நீக்கத் துடித்திட்ட போராளியே,,
துண்டுதுண்டாய் ஒலித்த உன் முரசொலிதான்
தொண்டுதொண்டு எனத் தேசமெங்கும் தமிழ்த்
தேசமெங்கும் அதிர்வூட்டி அறியாமை தனைவிரட்டி
நின்றிட்ட காட்சியெல்லாம் நீண்டுகிடக்கும் வரலாறாகும்..
என்மொழி தமிழ் என்னினம் தமிழினம் இதிலொன்றும்
மாற்றமில்லை எப்போதும் தமிழுக்கு ஏற்றமென்றும்
கொள்கை நெஞ்சிலேற்றி கொண்டாடிய வேளையில்
இந்தி இந்தியென ஆடிய ஆட்டத்தில் அதை
விரும்பாத உணவாய் திணித்திட்டவேளையில்
நாவினிக்க நற்றமிழ் சோறுண்ணும் வாயால் இந்தி
உண்ணேன் என்று அன்று நீ கண்ட சிறை
.அகிலத்தின் உச்சியில் அன்னைத் தமிழின் நெஞ்சில்
ஏற்றிவைத்த சுடர் அது.. துர்ய தமிழ் சுடரது,,,
அப்புறம்தான் இந்த அன்னைத்தமிழின் அணையாச்
சுடரை அருகிருந்து காப்பதற்கு ஏற்றவழி அரசியலென்று
உள்ளே வந்தாய் உள்ளேன் ஐயா என்றாய் போ
அண்ணன் உனக்குத் துணையென்று அனுப்பிவைத்தார்
பேரறிஞன் பெருந்தகையாளன் உலகமெங்கும் தன்
அறிவாலே உதித்திட்ட சூரியன் அண்ணாவென்னும்
அன்புப்பிடிக்குள் பிள்ளையானாய்.. தழுவிடத்
தம்பியானாய்... தமிழன் என்று சுவாசிக்குமிடமெல்லாம்
தலைவனாய்..
தமிழுக்குத் தொண்டாற்ற முதலானாய் தமிழன்னை
தமிழருக்கு முதல்வனாயிருந்திடு என்று வரமளித்தாள்
அப்புறமென்ன வெற்றிமேல் வெற்றிகண்டாய்..
ஆனாலும்.. இந்தத் தமிழினம் இன்பமுற் இரவுபகல்
துன்பமற்று சுகமாய் வாழ்ந்திட பட்டவைதான் எத்தனை
எத்தனை?
சதிகாரக் கூட்டங்கள்... புதைகுழிகள்...துரோகத்தின்
வீசல்கள்...காட்டாறுகள்.. கைப்பற்ற ஒன்றுமற்ற
நெருப்பு பொஙகிப் பரவும் காட்டாறுகள்..துவளவில்லை நீ
கற்பாறைகள் நிறைந்திட்ட பள்ளங்கள் மறைந்திட்ட
பாதாள வழிகள்... சிந்திய ரத்தத்துளிகள்.. செய்திட்ட்
தியாகச் செயல்கள்...ஒன்றையும் விடவில்லை நீ..
தமிழின் மேன்மைக்கு தளராது,, தண்ணீர் அருந்தாது
தவித்த தாகமொடு பட்ட துன்பங்கள் பலகோடி வரலாறு
ஒவ்வொன்றும் உன் பெயர் சொல்லும்,,
எதனைப் போட்டாலும் எத்தனை மூடி மறைத்தாலும்
எரித்து மேலெழும்பும் நெருப்பென பிரகாசம் காட்டி
புயலெனப் பாயுமிடத்துப் புயலெனப் பாய்ந்து
தென்றலாய் வீசுமிடத்துத் தென்றலாய் வீசி
மழையாய் பொழியுமிடத்து மழையாய் பொழிந்து
மாண்புறச் செய்தாய் மங்காத தமிழை உலகெஙகும்
செமமொழி எம்மொழி என்றைக்கோ என்று முரசொலித்து
நின்ற களத்தில் முதல்வீரன் நீதான்.. வெற்றிக்கனி பறித்திட்டு
தானுண்ணாத் தமிழினத்தாருக்குப் பங்கிட்டுப் பார்த்து
பரவசப்பட்டவனும் நீதான்..
உன் பணிகள் பற்றி நான் பாட என்னாயுள்
போதா எந்தப்பணியென்று தனித்து நான் சொல்வேன்
எல்லாப் பணியெடுத்தும் நீ தொடுத்த அம்பு மல்ர்களை
எப்படி சேர்ப்பேன்? மலைப்பாய் இருக்கிறது மாமலையாய்
உயர்ந்து நிற்கும் உன் மகத்துவம் பாடவெனக்கு..
பேசும்போது ஒரு தமிழ் கவிபாடும்போது இன்னொருதமிழ்
வசனமாய் வார்க்கும்போது வாசமிகு தமிழ் உரைநடையில்
உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் இன்னொருதமிழ்
நாடகமேடையில் நவரசம் துள்ளும் தமிழ் நற்றமிழ்
இலக்கியத்தை எழுதுகையில் இளமைத்தமிழ் இலக்கணத்தைப்
பிழிந்தெடுத்து ஊட்டுகையில் உவகைத்தமிழ் ஊருக்கெல்லாம்
நீதி தவறாமல் உழைத்த நீ உனக்குள்ளே நெஞ்சுக்கு நீதி
உரைக்கும்போது அறத்தமிழ் அற்புதத்தமிழ் மறத்தமிழ்
மாண்புறும் மானிடர்க்கு மகத்தான தமிழ் என்று வகை
வகையாய் தமிழுக்குச் சுவை வகைகாட்டியவன் நீ..
உன்தமிழை உலகம் பாடியது தமிழின் உலகம் நீயென்று
உண்ர்ந்து பாடியது.. இன்னும் உழைத்திடவேண்டுமென்று
நீயெண்ணும் நிலையைக் கடவுள்தான் பாடவேண்டும்..
அகல்விளக்காய் எரியத்தொடங்கி இன்றைக்கு
தமிழின் தேசமெங்கும் சூரியனாய் தகிக்கின்றாய்
தரணியெங்கும் தமிழின் மேன்மைக்குத் தகுதியாய்
மணிகள் கோர்க்கிறாய் சகாப்தங்கள் 91 ஆனபோதும்...
உன் தமிழுக்கு வணக்கம்.
உதயசூரியனே தமிழின் 91 வது பருவமே
வணக்கம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Wednesday, May 14, 2014
மனம் திறந்து,,,
அன்புள்ள.
ஹரணி வணக்கமுடன்.
படைப்புலகில் இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு எந்த ஒன்றையும் தள்ளிப் போட்டதில்லை. எதைத் தொடங்கினாலும் அதனைக் குறித்த காலத்தில் முடித்தே பழக்கம். இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக இது சாத்தியமற்றிருக்கிறது. ஒரு போராட்டம் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
இதை எழுதுவதற்குக் காரணம் நிறைய பதிவிடவேண்டும் தரமாகப் பதிவிடவேண்டும் புதுமையாகப் பதிவிடவேண்டும் என்று முடிவு செய்து அதற்கெனக் குறிப்புக்களை எழுதி வைத்தும் தொடர்ந்து வெளியிட
முடியாமல் போகிறது.
கடந்த ஒரு மாதமாக கணிப்பொறியின் பழுது,
அதற்கு நேரம் ஒதுக்கமுடியாமை.
மேலும் தற்போது மே. சூன் ஆகிய இருமாதங்கள் கோடை விடுமுறை என்றாலும் அதற்குள் நிரம்பி வழியும் பணிகளின் இறுக்கம்.
ஐந்து புத்தங்களை எழுதித்தர கட்டாயம், அலுவலகச் சூழல்.
சில முக்கியமான கல்விசார் கூட்டங்கள்.
இந்த இரு மாதங்களில்தான் எல்லா இதழ்களுக்கும் கட்டுரை. கவிதை. சிறுகதைகளை நிரப்பும் தேவையும் உள்ளது.
இருப்பினும் இதையும் மீறி வலைப்பக்கத்தில் எழுதவேண்டும என்பது நெருப்பாக இருக்கிறது.
இதன் மூலம் நான் வேண்டுவது, எப்படியும் விட்டுவிட்டாவது பதிவுகளை இடுவது என்பது உறுதியானது. எனவே என் வலைப்பக்கம் வந்து கருத்துரை வழங்கும் சகோதர சகோதரிகள் எப்போதும் போல இதனைப் பொறுத்து வந்து பார்வையிடவேண்டும் என்பதுதான், படைப்பின் மகிழ்வையும் அதற்கிணையாக உங்களின் கருத்துரையும் என்னை மேலும் தொடர்ந்து இயங்க வைக்கும்.
நன்றிகள் பல.
அன்புடன் ஹரணி.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இம்மாத இரு மகிழ்ச்சியான செய்திகள்.
1. என் நத்தையோட்டுத் தண்ணீர் கட்டுரைத் தொகுப்பிற்கு முதல்பரிசு
சேலம் அருணாச்சலம் அறக்கட்டளை வழங்குகிறது. பரிசு
ரூ. 10000 - விழா இம்மாதம் மூன்றாம் வாரத்தில்.
2, என்னுடைய சிறுகதை புத்தகம் செல்லாத நோட்டு - கரூர் சிகரம்
இதழின் சார்பில் முதல்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 11.5.2014
அன்று சான்றிதழ். கேடயம். பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்பட்டது,
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஒரு சிறுகவிதை
காலத்தின் கட்டாயத்தில்
தானுதிர்க்கும் சருகுகளிடம்
வழியனுப்பலின் அழுகையை
மரம் மௌனமாய் சொல்ல
அதை சங்கீதமாக்குகிறது
காற்று
அடுத்தவரின் துயரில்
ஆறுதலைச் சங்கீதமாக்கும்
காற்று அருவமற்றிருக்கிறது
என்பதை உலகிற்குச் சொல்ல
சருகுகள் அதை
ஆமோதிக்கின்றன
00000000000000
சந்திக்கலாம். ஹரணி.
Saturday, April 5, 2014
யார் - ஒன்று
முதலில் அவன் ராணுவத்தில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தான். படிப்பறிவு இல்லாதவன். உடல் வலிமையின் அடிப்படையில் அவனுக்கு அந்தப் பணி கிடைத்திருந்தது.
பணியை சிறப்பாக முடித்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்று தன்னுடைய சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான்.
அவனுடைய கிராமம் பண்பாடு மிகுந்த கிராமம். மக்கள் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு வாழ்ந்திருந்த கிராமம்.
அந்தக் கிராமத்தைச் சுற்றி காடு இருந்தது,
அந்தக் காட்டில் சில விலங்குகள் இருந்தன.
அவற்றால் சில தொந்திரவுகளும் இருந்தன.
எனவே காட்டு விலங்குகளிடமிருந்து மக்களையும் வீட்டு விலங்குகளையும் காக்கின்ற பொறுப்பில் அவன் இருந்தான். எந்தப் பிரச்சினை என்றாலும் ஓடிப்போய் உதவுவான்.
அவன் கையில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் சுற்றித் திரிவான். அவனுக்கு விலங்குகள் குறித்த எந்தப் பயமும் இல்லை.
மனத்துணிவும் உடல் வலிமையையும் அவன் குறையாது பார்த்துக்கொண்டான்.
அடிக்கடி ஊர்க்கூட்டம் நடக்கும். எல்லோரும் கலந்துகொள்வார்கள். அவனும் கலந்துகொள்வான்.
அப்படியொரு சமயம் நடந்த கூட்டத்தில் முக்கியமான பிரச்சினை குறித்து தீவிரமாக எல்லோரும் கலந்து பேசிக்கொண்டிருக்க இவன் எழுந்து தன்னுடைய கருத்தைச் சொன்னான்.
அப்போது இவனைத் தடுத்து
யேய்.. என்ன இது நீ கருத்து சொல்றே? நீ படிக்காதவன். உனக்குக் கருத்துச் சொல்ல எந்த உரிமையும் இல்லை. தவிரவும் உன்னுடைய கருத்தையும் யாரும் ஏற்பதாக இல்லை, நீ உடல்வலிமை மிக்கவன். எனவே அந்தளவில் மட்டும் உன் பணிகளை இந்தக் கிராமத்திற்குச் செய்தால் போதும் என்று உட்கார வைத்துவிட்டார்கள்.
மனது வருத்தமாகிப்போனது இவனுக்கு.
படிக்காமல் போய்விட்டோமோ என்கிற வருத்தம் மேலோங்கியது. எனவே முடிவுசெய்து அந்தக் கிராமத்தில் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஓர் ஆசிரியரிடத்துப்போய் அவரை வணங்கி.
ஐயா.. என்னை எல்லாரும் படிக்காதவன்னு சொல்றாங்க. உன் கருத்தைக் கேட்கமுடியாதுங்கறாங்க. எனவே நீங்க எனக்கு படிப்புச் சொல்லிக் கொடுங்க.. நான் படிக்கிறேன் என்றான்.
ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
எருமை மாட்டுப் பயலே... படிக்கப் போறியா? இது சின்னப் பசங்க படிக்கிற இடம்.. உன்னைமாதிரி தடிமாடடு ஆளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது. இந்த வயசுல உனக்குப் படிப்பும் வராது.. போ..மாடு மேய்.. மக்களைக் காப்பாத்து.. வந்துட்டான் படிக்க.. என்றபடிசிரிக்க எல்லோரும் சிரித்தடங்கினார்கள்.
மனம் வருத்தப்பட திரும்பி வந்தான்.
சில நாட்கள் கழிந்தபின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர் பணியை முடித்துவிட்டு காட்டுவழியே தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அவனைக் கவனித்தார்.
தெரிந்தவன்தான் என்று எண்ணியபடி நட்ந்தர்ர்.
சட்டென்று அவரின் எதிரே வழிமறித்து நின்றான். அவன் கையில் கத்தி இருந்தது.
நடுங்கிவிட்டார் ஆசிரியர்.
பாடம் சொல்லிக் கொடுக்கமுடியாது என்றதும் நம்மைக் கொல்ல வந்திருக்கிறான் போலும் என்றெண்ணிய ஆசிரியரின் உடல் நடுங்கியது பயத்தால்.
என்னைக் கொன்னுடாதப்பா என்றார் பயத்தில்.
அவன் சொன்னான்.
எனக்குப் பாட்ம் சொல்லிக் கொடுக்கமுடியாதுன்னு சொல்லீட்டிங்க... எனக்கும் படிக்க ஆசைஇருந்தும் படிக்கமுடியல,, யாரும் என்னோட கருத்தை மதிக்கறதா இல்ல.. இனி நான பேசி என்ன பலன்? அதனாலதான் ஆசிரியர் உங்க முன்னாடி இந்தக் கத்தியால என்னோட நர்க்கை அறுத்துக்கப் போறேன் என்றான்.
ஆசிரியர் அதிர்ந்துபோனார்.. இரக்கம் வந்தது. அவனின்
படிப்பு ஆர்வம் புரிந்தது, சரி.. வேண்டாம் இந்த விபரீதச் செயல். உனக்குப் பாடம சொல்லிக் கொடுக்கறேன் என்றார்.
மகிழ்ச்சியானான்.
அதற்குப் பின் அவன் அந்த ஆசிரியரிடத்து ஒன்பது ஆண்டுகள் தீவிரமாகக் கல்வி கற்றான்.
சிறந்த அறிவாளியும் ஆனான்.
அவன்தான்
நன்னுர்ல் எனும் இலகக்ண நுர்லுக்கும் திருக்குறளுக்கும் மிகச் சிறந்த உரை எழுதிய
இராமானுசக் கவிராயர் அவர்கள்.
அடுத்த யாரில் சந்திக்கலாம்.
தொடரும்.
Wednesday, April 2, 2014
யார்?
யார் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.
வெள்ளிக்கிழமைவரை பொறுத்திடுங்கள்.
இலக்கியம் சார்ந்த சுவையான பதிவுகள் அவை.
ஒரு முன்னோட்டம்
அந்த அட்ர்ந்த காட்டின் வழியாக அந்த ஆசிரியர் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் அவனைப் பார்த்தார்.
நன்கு தெரிந்தவன்தான்.
அவரை வழிமறித்து நின்று கையில் கத்தியைப் பிடித்திருந்தான்.
ஆசிரியருக்கு முகம் வேர்த்தது. குத்திக் கொன்றுவிடுவானோ
என்று.
ஆனால் நடந்தது வேறு.
வெள்ளிக்கிழமை சந்திக்கலாம் (வேலைப்பளு காரணமாக,,,
பொறுக்கவும்)
Sunday, March 30, 2014
சில சந்திப்புக்கள்.
சிலசமயம் சில சந்திப்புக்கள் எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுவது
உண்டு.
சில சந்திப்புக்கள்.
காலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில்
காத்திருந்தபோது சக்கர நாற்காலியில் ஒருவரை அழைத்துவந்தார்கள். ஒருகணம் தடுமாறி அட மனுஷ்யப்புத்திரன் என்று உடனே எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்து வணக்கம் சார்... நான் ஹரணி என்றவுடன் முகம் மலர்ந்து நல்லா இருக்கீங்களா? என்றார். எங்க சார் இங்க என்றேன். ஒரு நிகழ்வு என்றார். அத்துடன் பேச்சு முடிந்து அழைத்துக்கொண்டுபோனார்கள். என் மனதிற்குத் தோணியது பார்த்து அழைச்சுட்டுப் போங்கப்பா.. இந்த இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமை என்று சொல்ல. அழைத்துக் கொண்டு வநத்வர்களுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் நமக்குப் பிடித்துப்போனவர்களைப் பார்க்கும்போது தோணுவதை என்ன செய்யமுடியும்?
உயிர்மை இதழும் மனுஷ்யப்புத்திரன் கவிதைகளும் எப்போது நினைத்தாலும் மனத்தை நிறைவாய் மழையாய் நினைத்து ஈரப்படுத்து
கின்றன.
கடந்த வியாழக்கிழமை இரவு இதே மயிலாடுதுறை சந்திப்பில் வழக்கமான ரயிலைத் தவறவிட்டுக் காத்திருந்தபோது நீண்டநாள் இலககிய நண்பர் திரு இரா.இளங்கோவை சந்தித்துப் பேசிக்கொண்டு பயணித்தோம். இல்க்கியப் புதுப்பித்தல் அது. இளங்கோ அற்புதமான எழுத்தாளன். எழுதுங்கள் என்றேன்.
ஒரு நிகழ்விற்காகத் திருச்சி சென்றிருந்தபோது மிகநெருங்கிய நண்பர்கள் இருவர். ஒருவர் முனைவர் அலிபாவா. இன்றும் மாறாத அதே அன்புடன் அதே இளமையுடன் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்த முதல் சந்திப்புபோலவே. கூடவே அவருடன் அவருடைய நண்பர் முஜ்பூர் ரஹ்மர்ன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி உயிர்க்குடிலை நினைவுப்படுத்தி மறக்க முடியாதது என்றார்.
இந்த சந்திப்பில் என்ன சுவாரஸ்யம் என்று கேட்கலாம்.
ஆனாலும் ஏதோ ஒரு மனநிறைவு ஏறப்பட்டது சந்தித்த வேளையில். சிந்திக்கவேயில்லை. பகிர்ந்துவிட்டேன்.
Subscribe to:
Posts (Atom)








