Monday, June 11, 2012

இளமையைத் துரத்துகிறேன்...



             ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகவே விடிகிறது, ஏதாவது வேலைகள் இருக்கும், பரபரவென்று பார்த்து முடித்தால் அப்புறம் என்ன வேலை என்று யோசித்துக்கிடப்பதில் நேரம் நகரும், சில சமயம் இருக்கிற வேலைகளை முடிக்காமல் நாள் கழியும். நிறைய வேலைகள் இருக்கும், இன்றைக்கு எதுவும் செய்யக்கூடாது என்று பேசாமல் சாப்பிட்டு சாப்பிட்டு துர்ங்கவும் விழித்திருக்கும் நேரம் தொலைக்காட்சியைத் திறந்து எதையாவது சாப்பிடுவதுமாக பொழுதைக் கழிக்கத் தோணும், அப்படித்தான் எனக்கு சில நாட்கள் வெறுமையாகக் கழியும், அப்போதெல்லாம் நான் இளமையில் நடந்த சில நினைவுகளை நினைத்துப்பார்ப்பேன், அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இளமையைத் துரத்துகிறேன்,


        1,   நான் அக்கா மூன்றுபேர்கள் தம்பி அம்மா அப்பா அப்புறம் பெரியப்பா
              பையன் (எங்கள் வீட்டில் தங்கிப் படித்தார்) சில ஆயாக்கள் எனக் கூட்டம்
              இருக்கும், அம்மா 100 பால் வாங்கி இந்திரஜாலம் போல காபி போடுவாள்,
             கிட்டத்தட்ட கலர் வெந்நீர் அது, பாகைக் கரைத்ததுபோல அது இருக்கும்,
             சூடான பானகம் அது, இருந்தாலும் அந்த காபி ஒவ்வொரு காலைப்
             பொழுதிலும் குடிக்க நாக்கு ஏங்கிக் கிடக்கும், பெரும்பாலும் அரை டம்ளர்
             காபிதான் கிடைக்கும், தம்பிக்கு அது போதாது என்று எப்போதும் அந்த
            அரை டம்ளர் காபியில் பச்சை தண்ணீரை ஊற்றி டம்ளர் வழியவழியக்
            குடிப்பான், ஒருமுறை தர்த்தாவின் திதி, அம்மா மெனக்கெட்டு பசு மாட்டுக்
            கோமியம் வாங்கி வைத்திருந்தாள், வழக்கம்போலவே தம்பி வந்து
            டம்ளர் நிறைய இருப்பதைப் பார்த்தவுடன் கடகடவென்று எடுத்துக்
            குடித்துவிட்டான்,  அம்மாவிடம் அவன் கேட்ட கேள்வி இதுதான் என்னது
             காபி இன்னிக்கு உப்பு கரிக்குது?
             இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்,

       2,  நகராட்சிப் பள்ளியில் படித்த நேரம் அது, ஐந்தாம் வகுப்பு படித்துக்
     கொண்டிருந்தேன், எங்கள் தெருவில் இருந்த ஒரு பையன் அவன் நண்பன்
     பள்ளியிறுதித் தேர்வு படித்துக்கொண்டிருந்தார்கள், அவர்கள் வகுப்பில்
    இருந்த ஒரு ஐயர் வீட்டுப்பெண் அழகாக இருப்பாள், பள்ளிக்கூடத்திற்கருகில அவள் வீடு, ஒரு தடவை பள்ளி விட்டதும் என்னிடம்
அந்த இரண்டுபேரும் ஒரு கடிதத்தைக் கொடுத்து அவள் வீட்டுத் திண்ணையில் போட்டுவிடு என்றார்கள், எனக்கு விவரம் தெரியாததாலும் போடாவிட்டால் அடிப்பதாகவும் பயமுறுத்தியதால் கடிதத்தை வாங்கிக்கொண்டு போடச் சென்றேன், அந்த வீட்டுத் திண்ணையில் அப்போது ஒரு டைலர் கடை வைத்திருந்தார், நான் திண்ணையில் கடிதத்தைப் போடச் சென்றபோது என்னடா அது? என்றார் அதட்டலாக, நான் பயந்துபோய் இந்தப் பேப்பரை இந்த வீட்டுத் திண்ணையில் அந்த அண்ணணுங்க போடச்சொன்னாங்க என்றேன்,  சரிஎன்கிட்ட கொடு என்றார், கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்,  மறுநாள் காலையில் வத்சலா டீச்சர் (நல்ல குண்டு உருவம், அகலக் கண்ணாடி, எப்போதும் கடுகடுன்னு,, அடிக்கடி பிரம்பால அடிப்பார்கள்) வந்து டேய் எழுந்திருடா என்று என் காதைப் பிடித்து திருகியபடியே இழுத்துக்கொண்டு தலையாசிரியை அறைக்கு அழைத்துப்போனார்கள், அங்கே போய் பார்த்தால் ஐயர்,,, டைலர்,,, அந்த இரண்டுபேரும்,, என்னடா பண்ணே? என்றார் தலையாசிரியை,  இவங்கதான் போடச்சொன்னாங்க, போட்டேன் என்றேன், சரி போ என்று முதுகில் ஒரு அடி கொடுத்து விரட்டிவிட்டார்கள், அன்றைக்கு அந்தப் பள்ளியை விட்டு பயந்து வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன்,

         3,  இரவு ஏழு மணிக்கெல்லாம் படுக்கைப் போடப்பட்டு எல்லோரும் படுத்துவிடுவார்கள், இருந்தாலும் நானும் தம்பியும் கண்ணை மூடிக்கொண்டு துர்ங்குவதுபோல் படுத்திருப்போம். ஏனென்றால் என்னுடைய அப்பா சாப்பிடும் நேரத்திற்காகக் காத்திருப்போம். அப்பா வந்து சாப்பிட உட்கார்ந்து சாதத்தில் சாம்பாரை ஊற்றி நன்றாகப் பிசைந்தவுடன் அம்மாவிடம் கேட்பார் பசங்க துர்ஙகிட்டாங்களா என்று, அதற்கெனக் காத்திருந்ததுபோல எழுந்துபோய் அப்பாவிடம் நின்றுவிடுவோம், அப்பா தன் உள்ளங்கையில் பெரிதாக சாதத்தை உருட்டி உருண்டையாக வைத்து அதன் தலைமேல் கிரிடம் வைத்ததுபோல உருளைக்கிழங்கை வைத்து தருவார், ஆளுக்கொரு உருண்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு படுப்போம், இது தினமும் நடக்கும், முதலில் அப்பா என் கையில் வைப்பார் நான் தின்றுவிடக்கூடாது, அடுத்த உருண்டையை உருட்டி தம்பி கையில் வைக்கும்வரை காத்திருககவேண்டும், இரண்டுபேர் கையிலும் வைத்தபின்தான் ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்,
அப்பா இறந்துபோய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன, இன்று என் பிள்ளைக்கும் பெண்ணுக்கு உருண்டை உருட்டும்போது அப்பாவின் உருண்டைகள்தான் கண்முன் உருள்கின்றன கண்ணீரைப்போல.

           4. நான் படித்த நகராட்சிப்பள்ளிக்கு எதிரில்தான் என் அப்பா வேலை பார்த்த மருத்துவமனை இருந்தது, அடிக்கடி அப்பா ஹோட்டலுக்கு அழைத்துப்போய் ரவா தோசை வாங்கித்தருவார், எனக்கு பிடித்தமான உணவு அது, எனவே அந்த வயதில் பள்ளிக்கூடத்தை விட்டு ரோட்டைக் கடந்து மருத்துவமனை கேட் வரை வந்து உள்ளே போக வழிதெரியாமல் அந்த பெரிய கேட்டைப் பிடித்துக்கொண்டு அப்பா எப்படியும் வருவார் தோசை வாங்கித் தருவார் என்ற நினைப்பில் நின்று அப்படியே துர்ங்கியும் போய்விட்டேன், யாரோ போய் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொல்ல அப்பா பதறிப்போய்ஓடிவந்து என்னைத் துர்க்கிக்கொண்டு வீட்டுக்குப்போனார். மறக்காமல் ரவா தோசையையும் வாங்கிகொடுத்து, ஆனால் அம்மாவிடம் அன்றைக்கு தின்ற ரவாதோசைகள் அதிகம், அடி பின்னியெடுததுவிட்டார்கள்,
அப்பா இறக்கும் எங்கள் ஐந்துபேரையும் விளையாட்டுக்குக்கூட கைநீட்டி அடித்ததில்லைஎன்பதுதான் ரவாதோசை சாப்பிடும் தருணங்களில் எல்லாம் நினைவுக்குவருகிறது, என்னுடைய பையன் பெண்ணின் பேவரைடடும் இப்போது தோசைதான்,

            5,  நான் கல்லுர்ரியில் சேர்ந்த நேரம் அது, பியுசி படித்துக்கொண்டிருந்தேன், திருச்சிபொன்மலையில் என்னுடைய பெரியப்பா வீடு, விடுமுறைக்கு அங்குப் போயிருந்தோம், நானும் என்னுடைய சின்ன அண்ணனும் ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கக் கிளம்பினோம், காட்டூரிலிருந்து அரியமங்கலம் ரோட்டில் சைக்கிளில் வேகமாக அண்ணன் மிதிக்க நான் பின்கேரியரில் உட்கார்ந்துபோனோம், அப்போது ரோட்டை பாதி வெட்டி  வேலை பார்த்துக் கொண்டிருந்தது தெரியாது, எனவே பெரிய பள்ளம், அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதன் ஓரத்தில் சதுரமான பெரிய கருங்கற்களை சின்ன கைப்பிடிசுவர் போல அடுக்கியிருந்தார்கள், இது இருட்டில் தெரியவில்லை. வேகமாக போய் அந்த சுவற்றில் அடித்து சைக்கிள் ஒருபுறமும் நாங்கள் ஒருபுறமும் விழுந்தோம், சைக்கிள் முன் சக்கரம் கண்ணகி சிலம்புபோல வளைந்துவிட்டது, நாங்கள் எழுந்து நின்றிருந்தோம், லேசான சிராய்ப்பு, அப்போது ஒருவன் டூவீலரில் நிறைய பால்கேன்களுடன் நாங்கள் விழுந்த திசையிலேயே வந்தான்,  எங்களுக்கு அவனுக்கு எச்சரிக்கை ச்யவேண்டும் என்று தெரியவில்லை, அவனும் வந்து மோதி விழட்டும் என்று காத்திருந்தோம், அந்தவயதில் அது நகைச்சுவையாகவே பட்டதே தவிர விபரீதம் புரியவில்லை,  நினைத்ததுபோல அவனும் விழுந்து பால்கேன்கள் சிதறின, எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, அவன் எழுந்துஎங்களைப் பார்த்து விட்ட கெட்ட வார்த்தைகளை இன்றைக்கும் மறக்கமுடியாது, அந்த உடைந்த சைக்கிளை அங்கேயே ஒரு கடையில் போட்டுவிட்டு தொடர்ந்து சினிமா பார்க்கப்போனோம், அந்தப் படம்  பாலைவனச் சிங்கம் என்றழைக்கப்படும் ஓமர் முக்தார்,

                       சந்திக்கலாம் இன்னொரு பகிர்வில் இளமையைத் துரத்தி,

           

Sunday, June 10, 2012

சொற்காத்தல்



                     பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான். பேசிய வார்த்தை நமக்கு எஜமான்  என்று பழமொழி உண்டு.

                      வள்ளுவர் இதைத்தான் ,,,, நா காக்க என்றார்,

                     என்ன பேசுகிறோம் என்பதில் தெளிவில்லாமல் சமயங்களில் நினைவிழந்து வார்த்தைகளைக் கொட்டி இறைக்கிறோம். நெல்லை கொட்டினால் அள்ளமுடியும் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பார்கள்,

                     இனிய சொல் பேசுகிற நாவையும் மனத்தையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று நீதிநுர்ல்கள் வலியுறுத்துகின்றன,

                     புரிதலை உருவாக்கிக்கொள்ளப் பேசத்தொடங்கி கடைசிவரை புரிதல் இல்லாமல் அவஸ்தைப்படுகிறோம். அவமானப்படுகிறோம். அல்லல் படுகிறோம்.

                     இன்றைக்கு நிகழ்ந்த நிகழ்வு மனதில் உறுத்திக்கொண்டேயிருக்க இந்தப் பதிவை எழுதுகிறேன்.

                     என்னுடைய அம்மா வீட்டுத்தெருவில் இருக்கிறது அந்த உறவினர் வீடு. துர்ரத்து உறவில் அவர் எனக்கு சித்திமுறை. அவருக்கு ஒரு பையன். பொறியியலில் முதுகலை முடித்துவிட்டு ஒரு கல்லுர்ரியில்  விரிவுரையாளராகப் பணிபுரிகிறான். அவனுக்குத் திருமணமாகி நாலைந்து வருடங்கள் ஆகின்றன. ஒரேயொரு குழந்தை. பள்ளிக்கு செல்லும் பருவம்.

                    சித்தப்பா அளவுகடந்த பொறுமை. சித்தியும் அப்படித்தான்,. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.  அவருடைய மருமகள் இன்று காலை பத்து மணிக்கு முன்னதாக வரை நன்றாக இருந்திருக்கிறாள். அதற்குப் பின்னர் குறுகிய நிமிடங்கள் பிள்ளையோடு  மாடியில் துர்க்கில் தொங்கிவிட்டாள். உயிரும் போய்விட்டது. குழந்தை தப்பித்திருக்கிறது.  அந்தப் பெண்ணின் சித்தப்பா (வளர்ப்புத்தந்தை) காவல்துறையில் பணிபுரிய விவகாரம் பெரிதாகி பெண் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யவும்,,, சித்தப்பா சித்தி,,,அவர்களின் பையன் ஆகியோரை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டார்கள். வீட்டைக் காவல்துறை பூட்டிவிட்டார்கள்.

                 அதற்குள் செய்தியறிந்து பெண் வீட்டார் வந்து சித்தி. சித்தப்பா மற்றும் அவரது மகனைத் தாக்கியிருக்கிறார்கள்.  உடனே அவர்களைக் காப்பாற்றி பக்கத்துவீட்டில் அடைக்கலம் வைத்து பின் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்  சென்றிருக்கிறார்கள்.

                சித்தி. சித்த்ப்பா இருவரும் பணிஓய்வு பெற்ற நாள் வரை தெருவில் யாருடனும் பிரச்சினை இல்லை. சுமுகமான பழக்கம்தான். இருக்கிற இடமே தெரியாது. அதற்கான நேரமும் அவர்களுக்கு இல்லை. காலையில் வேலைக்குக் கிளம்பினால் மாலைதான் அந்த வீட்டிற்குள் வருவார்கள். நான்குபேரும் நான்கு திசைகளில்.

              என்ன நடந்திருக்கும்? எல்லாமே ஊகங்களாவே பேச்சுக்கள் இருக்கின்றன,

              சொற்களின் வலிமை நிமிடத்திற்குள் யோசிக்கவிடாமல உயிர் மடிக்க வைக்கிறது,

                   பேசி தீர்த்துக்கொள்ளவேண்டியதை பேசி உயிர் தீர்ப்பதா?

                    யாரை குறைசொல்லமுடியும்?

                    கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று இரவு முழுக்க காவல் நிலையத்தில் இருப்பார்கள். விசாரணை முடியும்வரை அவர்கள் இருக்கவேண்டும். நிம்மதியாக உறங்கும் இரவில் இன்றைய இரவு அவர்களுக்கு சபிக்கப்பட்டுவிட்டது. மனம் கலங்குகிறது.

                  ஆனாலும் யார் தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனை என்பது வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

                     ஏனெனில் வாழவேண்டிய ஒரு குருத்து சிதைந்துபோய்விட்டது.

                     அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இனி என்ன ஆதரவு?

                      பரஸ்பரம் யோசித்துப் பார்த்தால் பேசாதிருந்திருக்கலாம் என்று தோணியிருக்கும். நிமிடத்தில் எடுக்கிற முடிவு உயிர் இழப்பாகிவிட்டது. .

                      இதைத் தடுத்திருக்கலாம் அல்லவா?

                      சொற்காத்தல் என்பது எத்தனை முக்கியமானது?

                      சொற்கள் உதிர்வதற்கும் விளைவுகள் ஏற்படுவதற்கும் அதன் பின்னர் இன்னல் அனுபவிப்பதற்கும் எல்லாம் சொற்பநிமிடங்கள்தான். சொற்ப வார்த்தைகள்தான்.

                            யோசிக்கவேண்டும் சொற்காத்தல் பேண.

Saturday, June 9, 2012

,இரவின் மடியில்



            எதற்கெடுத்தாலும் ஏன் தலையை
            உயர்த்திக் குரைக்கிறாய்...அடிக்கடி செய்தால்
            தலை செயலிழந்துவிடும்...
            எப்படியோ இந்தத் தெருவில் அத்தனை வீட்டிலும்
            உணவு கிடைக்கிறது...எனவே இத்தெருவைக் காப்பது
            நமது உரிமையாகும்,, சின்ன அசைவுக்கும் ஒரு குரைப்பைச்
            செலவு செய்வதால் எதுவும் கெட்டுவிடாது,,,நீ உறங்கு
            உனக்கும் சேர்ந்து குரைக்கிறேன்,,, சிரமமில்லை..
            (ஓர் ஆண் நாயும் பெண் நாயும்)





           நாம் உறங்கவே  தாமதமாகிவிடுகிறது இந்த
           ஆந்தையால்... பகல் முழுக்கப் பறந்துபறந்து அலைந்த
           இந்த வாழ்வில் இரவில் உறங்க முடியவில்லை,,,
           ஆந்தை ஓய்ந்துவிட்டது என்றால் காற்று ஓய்வதில்லை
           இந்த மரமும் ஓய்வதில்லை,,,
            எனவேதான் உட்கார்ந்திருக்க முடியவில்லை
            சற்று எழும்பி வானத்தில் படபடத்துவிட்டு
            வருகிறேன்,,,

             (வேப்பமரத்தின் சில பறவைகள்)


              காற்றுக் காலத்தில் திறந்து வைப்பார்கள் என்றால்
              எல்லா சன்னல்களும் அடைக்கப்பட்டுவிடுகின்றன..
              முன்பெல்லாம் சன்னல்களும் திறந்திருக்கும் பால் பாத்திரங்களும்
               திறந்திருக்கும்.. கொஞ்சமாவது குடிக்கலாம்,,
             இப்போது வாடையடிக்கிறது கரப்பானுக்கு அடித்திருக்கும்
             மருந்துவாடை,,,
             மியாவ் மியாவ் என்று பசியில் வாய் திறந்தால்
              குச்சி வீசுகிறார்கள்,, கல்லால் அடிக்கிறார்கள்,,
               முட்செடிகளுக்குள் ஓடி ஒளிவதே வேலையாகிறது,,
               எப்போதாவது கிடைக்கும் எலிகளும் கிடைப்பதில்லை
               இரையாக,,,பூனைகளும் காவல் காக்கின்றன என்கிற
               பேராவது கிடைக்குமா என்ன இந்த மியாவ் கத்தலுக்கு,,,

                (சில பூனைகள்)

















               
                 என் வாழ்க்கை இருளில்தான் என்று உணவு தேடியலைந்தால்
                 என்ன சனியன் கத்துகிறது,,, கெட்ட சகுனம் என்கிறார்கள்,
                 நான் பிறந்தது நான் வாழவா,,, அல்லது உங்களின் கெட்ட
                 சகுனத்திற்கு அடையாளமா?... பறவைகள் நாங்கள் சகுனமா?
                 யாருக்கு யார் சகுனம்?

                 (மின்கம்பியில் உட்கார்ந்திருக்கும் ஓர் ஆந்தை)


                  பகலெல்லாம் வெயிலில் காய்ந்து சாகவேண்டியிருக்கிறது,
                 இரவெல்லாம் எரிந்து தொலைய வேண்டியிருக்கிறது,
                  இவர்களுக்குத்தான் எல்லாமுமா?  நாங்கள் ஜடமா?
                  யார் சொன்னது? ஒருநாளாவது இவர்கள் எங்களுடைய மனத்
                  தை கண்டறிந்திருக்கிறார்களா?

                  (தெருவில் நிற்கும் தெருவிளக்கு)


                   உயரத்தில் இருந்தாலும் அலையற பொழப்பாயிடிச்சி,,,
                   கையும் இல்லாம காலும் இல்லாம எங்கேயும் பிடிமானம்
                   இல்லே,,, ஆடுமாடுகளை விரட்டற மாதிரி இந்த காத்து
                   விரட்டிட்டு வருது,,,சும்மா உருண்டுகிட்டு இருக்கு இந்த
                   நிலாவை விரட்டமுடியல்லே,, காத்தால,,, எல்லாம்
                   ஓடறதக் கண்டாதான் துரத்தறதுக்குக் கொண்டாட்டம்,,,

                   (ஓடும் மேகங்கள் தங்களுக்குள்ளாக)


                              மொட்டை மாடியில் விழித்திருக்கும் இரவில் இப்படி
                     யெல்லாம் யோசிக்கத் தோணுது,, ரொம்ப யோசிச்சிட்டா
                      தப்பாயிடுமேன்னு நிறுத்திக்கிறேங்க,,,

                         

Thursday, June 7, 2012

பேருந்து (நாவல்)

பேருந்து - ஆறாவது அத்தியாயம் - கதம்ப மாலை


     அன்று பிரதோஷம். மாலையில் வந்து கோயிலுக்குச் செல்லவேண்டும். அல்வது வாய்ப்புக்கிடைத்தால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய்வரலாம். மழைவருவதுபோன்ற சூழல் இருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் வானத்தில் இல்லை. ஆனால் மறைந்த சூரியன் பொழுதாய் இருந்தது. அந்தி வெளிச்சமும் குளிருமாக இருந்த அந்த காலைப்பொழுது பிடித்திருந்தது.மணி இன்றும் 6 ஆகவில்லை. வழக்கத்தைவிட சீக்கிரமாக கடைத்தெருவிற்கு வந்து ஒரு டீயையும் குடித்துவிட்டு கூடுதலாய் சூடாக ஒரு மெதுவடையும். இதமாக இருந்தது. இன்றைக்கு வெள்ளைக்குதிரைதான் வரும். ஜெயக்குமார் வருவார். என் எதிர்பார்ப்பு சரியானது. வண்டி இன்றைக்கு தாமதமாக வந்தது. 6.25க்கு வந்தது. என்னைப் பார்த்ததும் ஜெயக்குமார் சிரித்தார். வாங்க சார்.. 10 நிமிஷம் லேட்டாயிடிச்சி என்றார். கிளம்பும்போது கியர் விழலே..ஏதோ கியர் பாக்ஸ்லே கோளாறு. சரிப்பண்ண நேரமாயிடிச்சி.

       ஏறிப்போய் நடத்துநர் இருக்கையில் அமர்ந்ததும் சாலையைப் பார்த்தபடி ஸ்டியரிங் பிடித்திருந்த பாண்டியன் வணக்கம் சார்... என்றார். வணக்கம் பாண்டியன் என்றேன். ஜெயக்குமார் டிக்கட் போட்டுவிட்டு கூடவே சாக்லெட் கொடுத்தார். என்ன ஜெயக்குமார் விசேஷம் என்றேன். என்னோட பையனுக்குப் பிறந்த நாள் சார்.. என்றார். என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்க. என்ன வயசாவுது என்றேன். நாலு முடிஞ்சி அஞ்சாவுது சார்.. என்றார். நான் சாக்லெட்டை பேக்கினுள் போட்டுக்கொண்டேன். என்னுடைய மகளுக்குப் அது பிடிக்கும்.

        பாண்டியன் ஒரே சீராக ஸ்டியரிங் பிடித்திருந்தார். இன்றைக்கு சாலையே அழகாக தோன்றியது. நீரால் கழுவிவிட்டதுபோல் கருகருவென அழகாகவும் நடுவில் இருந்த வெள்ளைக் கோடுகள் பேருந்திற்கு முன்னால் ஓடுவது என்னை முடிந்தால் முந்துங்கள் என்று சொல்லுவதுபோலவும் ஓடிக்கொண்டிருந்தன. ஒருசில பறவைகள் இடதுபுறமிருந்து வலதுபுறமாகவும் வலதுபுறமிருந்து இடதுபுறமாகவும் இடம் மாறி கடந்துபோயின. பள்ளியக்ரஉறாரம் தாண்டியதும் இருமருங்கிலும் இருந்த வயல்கள் இப்போதுன் களையெடுத்து நட்டிருந்ததார்கள். பச்சைக் குழந்தைகள், எங்கும் தரையில் பச்சை ஜமக்காளம் விரித்ததுபோல் இருந்தது. அவற்றினிடையே முத்துக்கள் அசைவதுபோல கொக்குகள் வயல்களில் தவழ்ந்துகொண்டிருந்தன.


 அதிகாலை என்பதால் எல்லா வீடுகளிலும் பெண்கள் எழுந்து தண்ணீர் தெளிப்பதும்.. சிலர் பெருக்குவதும்.. சிலர் குத்துக்காலிட்டு கோலங்கள் போடுவதும்.,, சிலபெண்கள் கோலம் போட்டு முடித்துவிட்டு பக்கத்து வீட்டுப் பெண்களிடம் சிரித்து பேசியபடியும்,,, ஒரு சில வீடுகளில் வாசலில் கோலம்போடும் அம்மாக்களைப் பார்த்தபடி அவர்களின் பிள்ளைகள் அமர்ந்தபடியும் இருந்தார்கள், சில பிள்ளைகளின் கைகளில் காபி டம்ளர் இருந்தது, சில பிள்ளைகள் பால் பாட்டிலைப் பிடித்திருந்தார்கள். சில வீட்டு வாசலில் ஆண்கள்  வாசலில் இருந்த முருங்கை மரத்தில் இருந்து காய்பறித்தபடியும் கீரைபறித்தபடியும் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்டிப்பாய் முருங்கை மரமும் செம்பருத்திச்செடிகளும் குபேர செடிகளும் இருக்கும் காட்சி அந்த காலைப்பொழுதை அனுபவிக்க வைத்தது.  தெருநாய்கள் சில எழுந்து நீட்டி குறுக்கி உடலை சோம்பல் முறித்தபின் ஒரு குரைப்பு குரைத்து ரிகர்சல் பார்த்தன.

         எப்போதும் பேருந்து பயணத்தில் நடத்துனர் இருக்கையில் அமர்ந்து சாலையை அனுபவிக்கும் சுகம் அலாதியானதுதான். ஆனால் அதேசமயம் ஆபத்தானதும்கூடத்தான். பெரும்பாலும் ஏதேனும் இடர் வந்தால் டிரைவர்கள் சட்டென்று இடதுபக்கத்தைத்தான் மரத்தில் கொடுத்துவிடுவார்களாம். கேட்கவே பயமாக இருந்தது. பாண்டியனிடம் கேட்டேன். அவர் சொன்னார். வேற வழியில்ல சார்.. முடிஞ்சவரைக்குப் பாப்போம்.. வேற வழியில்லன்னா அப்படித்தான் என்றார் சாதாரணமாக. இருந்தாலும் சில நாட்கள் அந்தப் பயம் இருந்தது. அப்புறம் மறந்துபோனது. அப்புறம்  இடைவெளியிட்டு அந்தப் பயம் வரும். இருந்தாலும் அந்த இருக்கைதான் பிடித்திருந்தது என்பதுதான் உண்மை.

        பேருந்து சுவாமிமலையை நெருங்கி நின்றது. ஆண்களும் பெண்களும் நெற்றி நிறைய திருநீறும் குங்குமமும் பூசியபடியும் சிரித்த முகத்துடனும் ஏறி உள்ளே வரும்போது அந்தக் காலைப்பொழுது மனம் நிறைவாக இருக்கும். அதுவும் பெண்கள் பெரும்பாலும் தலையை பின்னாது ஈரமுடன் அதில் வைத்த மல்லிகையின் அல்லது முல்லையின் மணத்தோடு பேருந்தில் நிறையும்போது மனம் சுவாமிநாதா,,, எனப் பிரார்த்திக்கும். கைகள் தானாகவே கன்னத்தில் தட்டும்.

           சுந்தரப்பெருமாள் கோயில் தாண்டுகையில் குஞ்சுகளோடு இருந்த ஒரு கோழி சாலையைக் கடக்கமுயன்றபோது பாண்டியன் வேகமெடுத்திருந்தார். எனவே சட்டென்று திகைத்துபோன அந்த தாய்க்கோழி கக்கக்கக்கக்க....கக்கோ என்று கூவியபடி சிறிய சிறகுகளை பரத்தி அப்படியே சாலையைப் பறந்தபடி கடகடந்த காட்சி அற்புதமாய் இருந்தது. கையில் கேமரா இல்லையே என்கிற பதைப்பும் இருந்தது, கூடவே அந்தக் கோழிக்குஞ்சுகள் என்னவாயிற்று என்கிற பதைப்பும் இருந்தது, பாண்டியன் நிதானமாக சொன்னார் மனதைப் படித்ததுபோல.. ஒண்ணும் ஆகாது சார்.. அந்த குஞ்சுகள் அப்படியே ஒடுங்கி நிற்கும் தாய்க்கோழி போயிடும் பாருங்க,, என்றார்.. நான் எழுந்து நின்று பேருந்து வழியாகத் திரும்பிப் பார்த்தேன். அது மறுபடியும் வேகமாக சாலையைக் கடந்து தன்குஞ்சுகளை அடைந்திருந்தது. மனம் நிம்மதியாக இருந்தது.

             கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் மாயவரம் போகும் கட்டையில் வண்டியை நிறுத்திவிட்டு வாங்க சார்  டீ சாப்பிடலாம் என்று ஜெயக்குமார் எழுந்தார். இறங்கிப்போனோம். பாண்டியன் இறங்கி கட்டையால் நான்கு டயர்களையும் தட்டிவிட்டு சரிபார்த்துவிட்டு கட்டையை உள்ளே போட்டுவிட்டு எங்களுடன் டீ குடிக்க வந்தார்.

                வெங்காயம் நிறைய போட்டு மெதுவடை சூடாக வெந்துகொண்டிருந்தது,

                சார் வடை சூடாக இருக்கு சாப்பிடலாம்,

                சொல்லுங்க என்றேன்,

                வடை கொடுப்பா என்றபடி ஜெயக்குமார் தன் கண்டக்டர் பையைத் திறந்து காசை எடுத்தார்,

                   இருங்க ஜெயக்குமார் நான் தரேன் என்றேன்,

                   இருக்கட்டும் சார்,,, தினமும் நீங்கதான் கொடுக்கறீங்க,, இன்னிக்கு தம்பிக்குப் பொறந்த நாள் நான் தரேன்,,,

                    ஜெயக்குமார் எனக்கு டீ வேண்டாம் ஆப் காபி சொல்லு வரேன்,, என்றபடி கட்டணக் கழிவறை நோக்கிப்போனார் பாண்டியன்,

                    நன்றாக உப்பியபடி சிறுவெங்காயம் அதிகம் போட்ட அந்த மெதுவடை வெகு சுவையாக இருந்தது,

                     கும்பகோணத்த விட்டா வேற எங்கயும் இவ்வளவு வெங்காயத்துடன் மெதுவடை போடறதிலல சார்,, என்றார் ஜெயக்குமார்,

                      மறுபடியும் வண்டியில் ஏறி கும்பகோணம் பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்து நால்ரோடைத் தாண்டி பேருந்து போக ஆரம்பித்தது,

                       அப்பாவின் ஞாபகம் வந்தது, அப்பாவிற்கு இந்த மெதுவடை ரொம்பப் பிடிக்கும்,

                       இறந்துபோனவர்களுக்கு சாமி கும்பிடுவார்கள். அதை தழுவை போடுவது என்பார்கள். முதல்நாளே வீடெல்லாம் நீர்விட்டலசி அம்மா சுத்தம் செய்வாள். மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்து  மாக்கோலமிட்டு சாமி அறையை அலங்காரம் செய்திருப்பாள். ஒவ்வொரு சாமி போட்டோவிலும் சந்தனமும் குங்குமமும் இணைந்து பொட்டு வைத்திருப்பாள். சுவற்றில் மஞ்சளை வட்டமாகத் தடவி அதில் வட்டமாக குங்குமப்பொட் வைத்திருப்பாள். அதில் இருபுறமும் சிறு ஆணி அடிக்கப்பட்டிருக்கும். அதில்தான் வடைகளை மாலையாகக் கோர்த்து இரு ஆணியிலும் தொய்வாகத் தொங்கவிடுவாள். அம்மா எல்லாவற்றையும் செய்துவிடுவாள். நுனி இலை போட்டு சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் வடை காய்கறிகள் அப்புறம் ஒரு செங்கல்லை வைத்து அதற்கும் பொட்டிட்டு அதன்மேல் ஒரு புடவையும் வேட்டியும் பிழிவதுபோல செய்து வைத்திருப்பாள். எல்லாவற்றையும் அம்மா செய்தபிறகு அப்பாதான் சாம்பிராணி போட்டு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபடுவார். எல்லோருக்கும் தீபாராதனை காட்ட வழிபாடு நடக்கும். அப்புறம் சாப்பாடு நடக்கும்.

                  இதுபோன்ற சமயங்களில்தான் அப்பா இரண்டு மூன்று வடைகள் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுவார். அப்புறம் மிச்சமிருக்கும் வடைகளை அம்மா சாம்பாரில் போட்டுவிடுவாள். அது மறுநாள் காலைவரை ஊறிக் கிடக்கும். அப்பாவிற்கு அது கொள்ளைப் பிரியம். நாலைந்து வடைகள் இட்லியோடு சேர்த்து சாப்பிடுவார். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சாமியறையில் மாட்டிய வடைமாலை மட்டும் சாமி கும்பிட்ட அடுத்த அரைமணியில் காணாமல் போய்விடும். காரணம் தம்பி. யாரும் அறியாமல் கழட்டிக்கொண்டு வெளியே ஒடிவிடுவான். அவனுடைய நண்பர்களோடு தின்றுவிட்டு மாலையில்தான் வீட்டுக்கு வருவான். அம்மாவின் பூசை அப்புறம் நடக்கும் அதையும் ஏற்றுக்கொள்வான்.

             அப்பா ஒரு வடை வைத்தாலும் அதனை சிறுசிறு துண்டுகளாக பிய்துதுப்போட்டு அதன்மேல் சாம்பார் ஊற்றி சாப்பிடுவார்,, அல்லது பாயசம் இருந்தால் ஒவ்வொரு துண்டையும் பாயாசத்தில் ஊறவைத்து சாப்பிடுவார்... அல்லது சிவப்புமிளகாய் போட்டு அரைத்த சட்டினி என்றால் வடையை ருசித்து சாப்பிடுவார்... எவ்வளவு ருசியான உணவாக இருந்தாலும் எல்லை மீறித சாப்பாடு அப்பாவுடையது. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் சர்க்கரை நோய் இருந்தும் ஒரே மாத்திரையில் அது கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் பராமரித்து வாழ்ந்தவர்.

             போனவாரம் பேருந்தில் பயணிக்கிறபோது அக்கா போன் செய்தாள். செய்தி இதுதான். அப்பா காலையில் எழுப்பும்போது பேச்சு மூசசில்லாமல் இருந்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்.

             பேருந்து மாயவரத்திலிருந்து கிளம்பி சிதம்பரம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதுதான் அந்தப் போன் செய்தி. உடனடியாக கிளம்பவேண்டும். இவன் வந்த பேருந்து இன்னும் அரைமணிநேரம் கழித்துத்தான் கிளம்பும். இருந்தாலும அது விரைவாக செல்லும் வண்டி.
எனவே ஜெயக்குமாரிடம் சொல்லிவிட்டு வேகமாக அலுவலகம் சென்று வருகைப் பதிவேட்டில் கையெர்ப்பமிட்டுவிட்டு துறைத்தலைவரிடம் சொல்லிவிட்டு உடனே ஒரு நண்பரைக் கொண்டு வந்து விடச்சொல்லி பேருந்து நிலையம் வந்தான். ஜெயக்குமாரும் பாண்டியனும் காத்திருந்தார்கள்.

              இவன் வந்தவுடன் வண்டி கிளம்பியது.

              தஞ்சை வரும்போது மணி இரண்டாகிவிட்டது. அது ஒரு தனியார் மருத்துவமனை. அங்குதான் இவனுடைய நண்பர் இருந்தார். அவரிடம் ஏற்கெனவே போன் செய்து சொல்லியிருந்தான். அதனால் சிக்கல் இல்லாமல் போனது. உடனடியாக ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை தொடங்கியிருந்தார்கள். டாக்டர் சொன்னார் சர்க்கரைக்குரிய மாத்திரைகளை ஓழுங்காகச் சாப்பிடாமல் விட்டதால் சுகர் ஏறிவிட்டது என்று. அப்பாவிற்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அம்மாவுடன் எப்போதும் ஒரு முரண் இருக்கிறது அப்பாவிற்கு. இவனிடமும சிலசமயம் காரணம் தெரிவிக்காமல் பேச்சை நிறுத்திக்கொள்வதும் உண்டு.

                நாங்க பயந்து போயிட்டோம்.. அத்தனை உலுக்கியும் அப்பா எழுந்திரிக்கவேயில்லை. சரி முடிஞ்சிடுச்சின்னே  நினைச்சோம்... என்றாள் அக்கா அழுதபடி. அம்மா அழுகையை நிறுத்தவேயில்லை.,

                அப்பாவை அனுமதித்து இரண்டாம்நாளே சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து அப்பா கண்விழித்தார். அனைவருக்கும் போன உயிர் திரும்பிவந்தது.

                 நம்ப உடம்ப நாமதான் கவனிச்சுக்கணும். நீங்க மருத்துவமனையிலே வேலை பார்த்தவங்க.. உங்களுக்குத் தெரியாததா? என்றார் டாக்டர்.

                    அப்பா எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார்.

                   எதுவும் சொல்லாது. அத்தனை அழுத்தம். கல்லு நெஞ்சு.. என்றபடி அம்மா அழுதாள்.

                    இவன் எதுவும் கேட்கவில்லை.

                     நான்காம் நாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். எல்லா செலவையும் இவன்தான் செய்தான். தேவையான மாத்திரை மருந்துகளையும் இவனே டாக்டர் எழுதிகொடுத்த அளவு மாறாமல் வாங்கி வந்தான்.

                      இவனை அப்பா அமைதியாகப் பார்த்தார். இவனுக்குள் ஒரு கலவரம் தோன்றியது., அப்பாவின் இறுதிப் பயணத்துக்கான ஒத்திகையோ இது என்று மனதிற்குப் பட்டது. அதுவே அவனை மேலும் கலவரப்படுத்தியது.

                      காட்டிக்கொள்ளவில்லை.

                      நினைவு கலைந்தான் பேருந்து மாயவரம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து நின்றிருந்தது.

                         என்ன சார் நல்ல துர்க்கமா? என்றான் பாண்டியன்.

                         வடை சூப்பர் வடைல்ல,,,  என்றான் ஜெயக்குமார்.

                         மறுபடியும் டீ சாப்பிட இறங்கினார்கள்.

                         பேருந்து கிளம்புகையில் அந்தப் பெண் வந்து அவசரஅவசரமாக வந்து வண்டியில் ஏறினாள். முகம் முழுக்க வியர்வையும் பதட்டமும் பொங்கி வழிந்தது.

                      வெளியே அவளை வழியனுப்ப வந்திருந்த ஒரு வயதான பெண்...கவலைப்படாம போ தாயி... மகமாயி இருக்கா.. அவ பாத்துக்குவா...
என்றபடி கண்களை துடைத்துக்கொண்டாள்.

                         டிரைவருக்கு பின் இருக்கையில் மூன்று பேர் கொண்டதில் உட்கார்ந்துகொண்டாள்.

                         பேருந்து போய்க்கொண்டிருக்கையில் மறுபடியும் அவளைப் பார்க்க அழுதுகொண்டிருந்தாள்.

                         டிக்கட் போட்டுவிட்டு ஜெயக்குமார் வந்து பேனட்டில் உட்கார்ந்தார். அவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஏம்மா அழறே?
என்றாள்.
                        அந்தப் பெண் மறுபடியும் விசும்பி விசும்பி அழுதாள்.

                        வற்புறுத்திக் கேட்டதில் சொன்னாள் புதுசா வேலைக்குப் போறேன்.
                        எங்கே?
                        ஒரு அரசாங்க அலுவலகத்தின் பெயரைச் சொன்னாள்.

                          எல்லாருக்கும் முதல்ல அப்படித்தான் பயமா இருக்கும், ஆனா போகப்போகப் பழகிடும். எல்லாரும் உதவி செய்வாங்க என்றான்.

                           அவள் அழுகையை விடவில்லை,

                           சொன்னாள்,

                            எங்க வீட்டுக்காரர்தான் வேலை பார்த்தாரு. ஆறு மாசத்துக்கு முன்னால ஆக்ஸிடெண்ட்ல செத்துப்போயிட்டாரு. அவரு வேலையத்தான் கொடுத்திருக்காங்க...எல்லார் கிட்டயும் சண்டை போடுவாரு. வெட்டி வம்பு இழுப்பாரு.. யாருக்கும் இவரைப் பிடிக்காது.. அதான் பயமாயிருக்கு என்றாள்.

                         எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிகபட்சம் 22 வயதிருக்கும். இத்தனை இளம் வயதில் விதவை பட்டம். அதிலும் ஒரு முரடன் கணவன். அவன் மரணத்தின் விளைவாய் இந்த வேலை. அவனுடைய நடத்தை இவளைப் பாதிக்குமோ என்கிற கவலை. பெண்ணுக்கு வரும் பிரச்சினைகள்தான் பல்வகையாக இருக்கின்றன, ஒரு குழந்தையை வேறு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான். மனிதர்கள் பிரச்சினை. அப்புறம் இவள் பார்க்கப்போகும் வேலை பழகும்வரை பிரச்சினை. அப்புறம் குடும்பப் பிரச்சினை.

                     பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

                     விடும்மா.. எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கு. அதெல்லாம பயந்தா வேலை பார்க்கமுடியாது. எங்க கண்டக்டர் டிரைவர் வேலையைவிட ஒரு சாபக்கேடான வேலை உலகத்துலே இல்லம்மா. தைரியமா இரு. தினமும் என் பஸ்ல வா...சார் இருக்காரு... யோசனை சொல்ல நாங்க இருக்கோம்.. உன் கூடப்பிறந்தவங்களா நினைச்சுக்கோ..

                      அவள் மிரட்சி அவளை விட்டு நீங்கவில்லை.

                      சீர்காழியில் அந்த மனிதர் (தானே பேசிக்கொண்டு வருபவர் ஏறினார்)ஏறி உள்ளே வந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் எப்போதும் உட்கார்ந்து வரும் சன்னலோர சீட் அவருக்கு காத்திருந்தது. போய் உட்கார்ந்துகொண்டார். கண்டக்டரை அழைத்து சீட் வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரத்தில் தானே பேசத் தொடங்கிவிட்டார்..

                     நான் ஜெயக்குமாரிடம் அவரைக் காட்டிக் கேட்டேன்.

                      இது தெரியாதா சார்.. அது ஒரு கொடுமை சார்.. உங்க ஆபிசுலே இருக்கிற பாங்க்குலதான் கேசியரா வேலை பாக்கறாரு சார்.. ரொம்பக் கெட்டிக்காரர் சார்.. அவரோட மனைவியும் வேலை பாத்த்தாங்களாம்.. ஒருநாள் லீவுலே  வீட்டுல சமைக்கும்போது தீப்பிடிச்சிடிச்சாம்... இவரு பக்கத்துலே இருந்தும் காப்பாத்த முடியல்லே.. இவர கண்முன்னாடியே அந்தம்மா கருகி செத்துப்போயிட்டாங்களாம் சார்.. அதை பார்த்த அதிர்ச்சி சார்.. நான்தான் கொன்னேன்னு புலம்பிக்கிட்டிருந்தாரு.. இப்ப இருந்து காப்பாத்தமுடியாமப் போச்சேன்னு புலம்புவாரு சார்... ஆனா இப்பவும் பாங்குக்குப் போயிட்டா வேலை அபாரமா பாப்பாரு சார்..

                    நான் அவரை பார்த்தேன். அவர் என்னைக் கவனிக்காமல் தானே பேசிக்கொண்டிருந்தார்.

                     பேருந்து போய்க்கொண்டிருந்தது.

                      அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவள் கண்கள் கலங்கயபடியே சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தது.

                       புத்துர்ரில் ஒரு இந்தியக் குடிமகன் ஏறினான். கலைந்தவேட்டியுடன்.

                       பாத்து ஏறுய்யா விழுந்துடப் போறே...

                       உற்ய்... நாங்க எத்தனை பஸ்சு ஏறியிருக்கோம்.. நாங்க ஊரு உலகத்துக்கே வழி சொல்லுவோம்.. இந்தா வல்லம் படுகை ஒரு டிக்கட் கொடுத்துட்டு விசிலை ஊது... என்றான்.

                       இது வல்லம் படுகை நிக்காது... பாய்ண்ட்  பாய்ண்ட்,,

                       எல்லாம் பிரேக்ல கால வச்சு அழுத்துனா நிக்கும்.. என்ன ஆகாயத்துல பிளேனா ஓட்டுறே.,,

                        வம்பு பண்ணாதே இறங்குய்யா...

                         வல்லம் படுகையிலே எறக்கிவுடு இறங்கறேன்,,

                          மேலே பிடித்த கையுடன் கலைந்த வேட்டியுடன் ஆடினான் காற்றில் அசையும் கொடிபோல,,,

                          வந்து சேருது பாரு நமக்குன்னு சேட்டையும் செவ்வாய்க்கிழமையும்,,,

                           இன்னிக்கு செவ்வாய்க்கிழமை இல்லே,,, விசாலக் கிழமை,, இதுகூட தெரியாம வண்டி ஓட்டறே,, என்றபடி அவன் சிரித்தான்,

                           வண்டியில் பலரும் சிரித்தார்கள்,

                           ஜெயக்குமாரும் சிரித்தபடி இந்தா டிக்கட் புடிச்சி தொலை,, நல்லா கம்பிய புடி,,, வல்லம் படுகையிலே இறக்கிவுடுறேன்,,, என்றார்,

                           அப்படி சொல்லுடா என் தங்கம் என்றான் அவன்,

                           பாண்டியன் லேசான சிரிப்புடன் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தார்,
             
                           எங்கிருந்தோ காற்றில் ஒரு பாட்டு மிதந்து வந்தது

                           வாழ நினைத்தால் வாழலாம்,,, வழியா இல்லை பூமியில்,,,


                                                                                             (பேருந்து ஓடும்)
   

   








                         

                   






அன்புள்ள சுந்தர்ஜி,,,

இந்த வாரம் நாவல் அத்தியாயம் படித்து மெய் மறந்தேன். இந்த வார அத்தியாத்திற்காக இந்த தங்க விருது உங்களுக்கு. எனக்கு தொழில்நுட்பம் தெரியாததால் இதனைத் தாங்கள் பிரதியெடுத்து தங்கள் பதிவில் இடவும். வாழ்த்துக்கள்.




Tuesday, June 5, 2012

ஒரு நாள் கழிந்தது...

எதிர்பாராதவர்களிடமிருந்து வரும்
எதிர்பாராதக் கடிதங்களால்...

சிறுசிறு சண்டைகளால்
கொஞ்சம் கொஞ்சல்களால்


சாப்பிடவும் துர்ங்கவும் எனவும்
பேப்பர் வாங்கவும் டீ குடிக்கவும்
ஒதுக்கும் தருணங்களால்...


ஏதேனும் ஒரு மரணத்தால்


என ஈக்கள் மொய்த்ததுபோல்
எல்லாப் பக்கங்களிலும்
மொய்த்துக் கரைகிறது
ஒரு நாளின்
எல்லாப் பக்கங்களும்


ஆனாலும்


அன்னிய நாய் கண்டு குரைக்கும்
வளர்ப்பு நாயின் குரைப்பன்பிலும்


வாசல் குழாயடியில் தேங்கிய நீரில்
குளிக்கும் அந்தப் பறவையின் சிலிர்ப்பாலும்


ஏதோவொரு குழந்தையின் சிரிப்பிலும்



ஒரு நாளின் ஆன்மா
அமைதி கொள்கிறது...

Sunday, June 3, 2012

குட்டி....சுட்டி.....பெட்டிக் கதைகள்


     
                ஒன்று

                      பெரிய வேப்ப மரம் அது. பருத்த அடிப்பகுதி அதன் வயதையும் முதுமையையும் காட்டிக்கொண்டிருந்தது. அந்த மரத்தில் எப்போதும் சில காகங்கள்...சில பச்சைக்கிளிகள்...இரண்டு ஆந்தைகள்...நாலைந்து தவிட்டுக் குருவிகள்.. எப்போதாவது குயில்கள் அமர்ந்து கதைகள் பேசும் அதனதன் மொழியில்.

                     இந்த மரத்தோடு எனக்குத்தான் அதிக உறவு இதன் நிறமும் எனது நிறமும் ஒன்று என்று பச்சைக்கிளியொன்று கூறியது.

                     நீங்கள் வருவதற்கு முன் இதனோடு எனக்குத்தான் அறிமுகம். இரண்டுமுறை கூடுகட்டி எனது பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறேன் என்றது காகம் பதிலுக்கு.

                      நல்ல காற்றும் நல்ல இளைப்பாறலும் இங்குக் கிடைக்கிறது, அனுபவிக்கவேண்டும் என்றன தவிட்டுக்குருவிகள்.

                      அமைதியாய் இருந்துவிட்ட குயில் சொன்னது... உங்களால் இந்த மரத்திற்கு என்ன பயன்?  நான் இங்கு அமரும்போதெல்லாம் இசைக்கிறேன். அதனை காற்று ஆமோதிக்கிறது. இந்த மரம் தலையசைக்கிறது.


                      தன் பிள்ளைகளின் பேச்சை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தது அந்த வேப்பமரம்.

                           ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


                  இரண்டு


                   எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

                     ஏய்.. என்னது இன்னமும் விளையாடிக்கிட்டேயிருக்கே,, எடுத்துவை ..
                     முடியாது,,,போ,,,

                     எதிர்த்தா பேசறே நீ?

                     அப்பாக்கிட்டே நீ  பேசறே,,,

                      அப்பா சொன்னார்...

                      அம்முக்குட்டி,, அப்படியெல்லாம் எதிர்த்துப் பேசக்கூடாது,,

                      தாத்தாக் கிட்டே நீ பேசறே?

                      அமைதியானது வீடு,,,

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

               மூன்று

                                 
                                    மூன்று அக்காக்கள் இரண்டு அண்ணன்கள் சேர்ந்து சொன்னார்கள்.. இந்த சொத்தில் எதுவும் எங்களுக்கு வேண்டாம். நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். எல்லாத்தையும் தம்பிக்கிட்ட கொடுத்துடலாம், எழுதி கையெழுத்துப் போட்டுடறோம்..

                                    ஒரே தம்பி வேலையில்லாதவன்.  நிரந்தர வருமானம் இல்லாதவன். அவனுக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்தார்கள்.

                                    தம்பி சொன்னான்..

                                    உங்க அன்பிற்கு நான் கொடுத்து வைத்தவன், எல்லோரும் எடுத்த முடிவு எனக்கு உறுத்துது,  நான் ஒருத்தன்தான் கையாலாகாதவன்னு உணர்த்துது, வேண்டாம், எனக்குரிய பங்கை மட்டும் கொடுங்க, அதை வச்சி நான் முன்னேறிக்கிறேன், என்னால முடியும், நம்பிக்கை வந்திருக்கு,


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

             நான்கு

                               எனக்கு இன்னும் வாழ்க்கையில் பிடிப்பு வரவில்லை குருவே என்றான் ஒருவன்,

                             உனக்கு என்ன வயதாகிறது? என்றார் குரு,

                             என் கேள்விக்கும் வயதிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
என்றான்,

                             உனக்கு கடைசிவரை பிடிப்பே வராது என்றார் குரு?

                             எதை வச்சு சொல்றீங்க குருவே என்றான் அதிர்வுடன்,

                             குரு அமைதியாக சொன்னார்,

                             உனக்கு சாதாரண கேள்விகளையே கேட்கத் தெரியவில்லை,


))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


           ஐந்து


                                   ரயிலில் சரியான கூட்டம்,

                                   ஓடி வந்து உட்கார்ந்துவிட்ட ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணிடம் இன்னொரு குழந்தையுடன் இருந்த பெண் சண்டையிட்டாள்,

                                   அறிவு கெட்டவளே,,, நான்தான் முதல்ல சீட்டு போட்டேன், கைக்குழந்தை வச்சிருக்கறது உன் அவிஞ்ச கண்ணுக்குத் தெரியலியா?

                                   மரியாதையா பேசு நாயே,,, என் கையில இருக்கறது என்ன இரும்பா? இது குழந்தையா உன் பொட்டைக் கண்ணுக்கு தெரியலே
என்றாள்,,

                                    சண்டை தொடர்ந்துகொண்டிருந்தது,

                                   இருவரிடமும் இருந்த குழந்தைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு பரஸ்பரமான ஒரு சிரிப்பைப் பரிமாறத் தொடங்கியிருந்தன,



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++







               




                 


           

Friday, June 1, 2012

சொல்லி மாய்தல்,,,


        அவசர நிகழ்வு. எனவே சென்னைப் பயணம் வாடகைக் கார் எடுத்து.  போன காரியத்தை முடித்துவிட்டு 30.05.2012 மதியத்திற்குமேல் சென்னையிலிருந்து கிளம்பி வருகையில் பாதி வழி வந்ததும் ஒரு விபத்து. கூல் ட்ரிங்ஸ் நிரப்பப்பட்ட பாட்டில்கள் ஏற்றப்பட்ட வண்டி வேறொரு வண்டியுடன் முகப்பில் மோதிக்கொள்ள நிலைதடுமாறி கவிழ்ந்துகிடக்க பாட்டில்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை. அந்தந்த வண்டிகளின் ஓட்டுநர்கள் அங்கேயிருந்தார்கள். எங்கோ போய்விட்டு வந்து ஆம்புலன்ஸ் வண்டியொன்று விபத்து நடந்த இடத்திற்கு சற்று தள்ளி நிறுத்தி அதிலிருந்து இறங்கி வந்தவர்கள் கைக்கு நான்கு பாட்டில்களாக இரண்டு கைகளிலும்,...அதேபோன்று ரோந்து போகும் ஜீப்பில் இருந்தவர்களுக்கு சில பாட்டில்கள் அள்ளிக்கொண்டு போனார்கள். இதிலென்ன இருக்கிறது என்று கேட்கலாம். நான் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்களும் அவர்களின் முதலாளிகளிடம் சொல்லப்போகும் இயலாமைப் பதில்களையும் அவற்றின் விளைவுகளையும் எண்ணிப் பார்க்கிறேன். எனவே ஒன்று மட்டுமே தோன்றியது. எரிவதில் பிடுங்கியமட்டும் ஆதாயம் என்றிருக்கிற சமுகத்தில் வாழத்தானே வேண்டியிருக்கிறது வந்து பிறந்துவிட்டபின் எதுவும் செய்யத் திராணியற்று.

       அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு செல்லப்படும் சாலையோர ஓட்டல்களின் உணவுப் பண்டங்களையும் அவற்றின் கொள்ளை விலைகளையும் மறுபடியும் மறுபடியும் கவனிக்கவேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. இதனை அரசு கவனித்து ஆவனச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். பயணிக்கும் அத்தனைபேரும் மகிழ்ச்சியான நிகழ்விற்கெனப் பயணிப்பதில்லை. எனவே கையில் இருக்கும் பணத்தின் சூழலும் அப்படியே. அவர்கள் சென்று திரும்புவதற்குள் பசிக்கிற வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு பரிதவிக்கும் நிலையை அன்புகூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். இப்படியே அவர்கள் நடத்தும் கழிப்பறைக்கென வாங்கும் கட்டணத்தொகையையும் குறிப்பில் கொண்டுவரவேண்டும் நடவடிக்கைக்கு.

      ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

     தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதைகள் மூன்று ...


        மரத்தில் உள்ள பழங்களை
        அணில்களுக்கு விட்டுவிடு,,,







        செடியில் உள்ள பூக்களை
        பட்டாம்பூச்சிகளுக்கு
        விட்டுவிடு,,,











        கிளையில் உள்ள இலைகளை
        புழுக்களுக்கு விட்டுவிடு,,,











        இப்படி விட்டுவிட்டதால்
        கிடைக்கும் ஆனந்தத்தை
        நீ சாப்பிடு,,,

        (2)
 
        பழைய டிரங்குப் பெட்டியை
        எதற்கோ குடைந்தபோது
        தட்டுப்பட்டது அந்த
        சின்னஞ்சிறு பொட்டலம்,,,

        உள்ளே காய்ந்து சுருண்ட
        ரப்பர் குழாய் போல
       ஏதோ ஒன்று
       காரணமில்லாமல் வயிற்றைக்
        கலக்கியது,,,

         அப்பாவிடம் கேட்டேன்
        சிரித்தபடி சொன்னார் நீ பிறந்தபோது
        பிரசவம் பார்த்த
        மருத்துவச்சி
        கொடுத்த உன் தொப்பூழ்க் கொடிடா,,,

         இடிபோன்ற சொற்களை
         எளிதாக உச்சரித்துவிட்டார்
         செத்துப்போன அம்மாவின்
         சிறிய மிச்சம்...

         கண்ணில் நீர்மல்க
         எடுத்தேன் பார்த்தேன்
         தொட்டேன் துவண்டேன்
         மெல்ல நீவி
         யாருக்கும் தெரியாமல்
         அம்மா என்றேன்,,,

         (3)

          கல்லில் கவியெழுத
          தவித்த சிற்பிக்குக்
          கிடைத்த கருதான் யாளி,,,

          ,,,,,,,,,,,,,,

           பிளந்த வாய்க்குள்
           திணித்துவிட்டான்
           பிரபஞ்ச ரகசியத்தை
     
           ,,,,,,,,,,,,,,,

           காவல் மிருகமா
           கடவுளின் நண்பனா?
           பார் என் படைப்பை என
           சிற்பியே பிரமனுக்கு
           விடுத்த சவாலா?

           ஒவ்வொரு கடவுளும்
           சிற்பியின் கற்பனை
           எனில்
           ஒவ்வொரு யாளியும்
            சிற்பியின் கர்ஜனை,,,


                                             
            ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


              பயணத்தில் நினைத்த கவிதை....


             முடிந்தவரை
              வேண்டி வைப்போம்...

              ஒவ்வொரு இரவும்
              உறங்கப்போவதற்குமுன்
              நாம் நிம்மதியாய்
              உறங்கும் இரவில்...

              சாலைகளில் பல்வகை
              வாகனங்களில் பயணிக்கும்
              அவர்களின் துர்க்கமும்
              நிம்மதியாய் கலையாதிருக்கட்டும்..

               முடிந்தவரை
               வேண்டி வைப்போம்...

               ஒரு நாளேனும் விபத்தச்சில்லா
               வெள்ளைத்தாளாய் செய்தித்தாள்
                மலரட்டும்....

                                                                            சொல்வது ஓயாது....





Sunday, May 27, 2012

பகிர்வுகள்...



ஆதங்கப் பகிர்வு


               1981 ஆம் ஆண்டு உலகளாவிய நிலையில் எங்கும் நடந்திராத நிகழ்வாக உருவாக்கபெற்றது இது. தனிப்பட்ட மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம். தஞ்சை பெற்றவரம் தமிழ்ப் பல்கலைக்கழகம். இதனை மாண்பமை முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயரிய தொலைநோக்குடன் சிந்தித்ததன் விளைவாக தஞ்சை மண் புண்ணியம் பெற்றது. தமிழுக்கென்று ஒரு சீரீய பெருமை மிகு பல்கலைக்கழகம். இதன் நோக்கம் தமிழ் பண்பாடு தமிழ் நாகரிகம்.. தமிழர் மாண்பு...தொன்மை இவற்றினைக் காக்க எழுந்து ஓர் உயராய்வு மையமாக. அதன்படியே திட்டங்களும் வகுக்கப்பட்டு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பின்னர்தான் தெலுங்குப் பல்கலைக்கழகம் திராவிடப் பல்கலைக்கழகம் போன்றவை தொடங்கப்பட்டன என்பது கண்கூடு.

             பழம் பெருமைமிக்க தமிழ்மொழியின் தொன்மையையும் பழம் சிறப்பையும் பெருமையையும் உலகறிய செய்வதர்களைப் போற்றுதலும் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க படைப்பாக்கங்களை வெளிக்கொணருவதும் அவர்களைப் போன்று இன்னும் பல அறிஞர்களையும் உலக தரத்திற்கு உருவாக்கி உலகமெங்கும் தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பதன் நோக்கமாகவே தமிழ்ப் பல்கலைக்கழகம் செயற்படவேண்டும் என்கிற உறுதிப்பாட்டில்தான் அது இயங்கிவந்தது.

              முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கவனிப்பாரற்று சவலைப் பிள்ளையாயிற்று என்பதுதான் உண்மை. அதன் அரசியல் காரணங்கள் நிறைய. ஒரு மொழிக்காக உருவாக்கப்பெற்ற பல்கலைக்கழகத்தில் திட்டங்களைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள்... பேரறிஞர்கள் எழுதிய அரிய பொக்கிஷங்களான ஆய்வுப்படிகளை நுர்ல்களாகக் கொணடுவருவதில் இடர்கள்..இப்படி நிதிநிலைமையர்ல் தமிழ்ப்பல்கலைக்கழகம் பல இன்னல்களைச் சந்தித்தது. பல துணைவேந்தர்கள் வந்தார்கள் போனார்கள். ஆனாலும் அவர்களால் தமிழறிஞர் வ.அய்.சு.வின் இடத்தை நிரப்பவே முடியாமல்போனதுதான் வருத்தம்.

              இருப்பினும் இவற்றினைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். அது நமது நோக்கமல்ல.

               நமது நோக்கம் ஒரு மொழிக்கென்று அதுவும் நம் தாய்மொழிக்கென்று உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் மேன்மேலும் உயரத்திற்கு எடுத்துச்செல்லப்படவேண்டும் என்பதுதான். அதன்செயல்திட்டங்களும் பணிகளும் மீண்டும் செம்மையாக்கப்பட்டு அதன் உயரிய நோக்கமான உயராய்வு மையம் என்பது நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதுதான்.

               ஒரு பல்கலைக்கழகம் என்பது புறத்தளவிலும் அகத்தளவிலும் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக் கொண்டது. இது எந்த நிலையிலும் சிதைக்கப்படகூடாது என்பதுதான் மொழிக்கும் அதற்காக உருவாகியிருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் கொடுக்கப்படும் கௌரவம்.


                ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிலப் பரப்பில் ஒரு பகுதியைத் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு கொடுத்தாகிவிட்டது. தற்போது இன்னொரு பகுதியை வழங்கி அதில்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைக் கொண்டுவரலாம் என்பதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

                மாண்பமை முதல்வர் அம்மா அவர்களுக்குப் பணிவான வேண்டுகோள வைப்பது இதுதான்.


                 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது ஒரு குறிப்பிட்ட அலுவலகக் கட்டமைப்புக் கொண்டது. அதற்கென்று ஒரு ஒழுங்கும் மரியாதையும் இருக்கிறது.

                 பல்கலைக்கழகத்திற்கென்று ஒரு ஒழுங்கும் மரியாதையும் இருக்கிறது. அதது அதனதன் இடத்தின் இருந்தால்தான் கொண்டாடப்படும் மாண்பு நிலைப்படும்.

                எனவே இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவுவது வேறுவேறு பணிச்சூழலில் இரண்டையும் அகௌரப்படுத்தும் செயலாகவே அமையும்.

                முதல்வர் அம்மா அவர்கள் அருள்கூர்ந்து இதனைப் பரிசீலித்து உரிய திட்டமிடலை ஆணையாக வழங்கவேண்டும். மேலும் உங்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அதன் பழைய மாண்பை பெற்று உலகெங்கும் தேமதுரத தமிழோசை பரவும்வகை செய்யவேண்டும் என்பதுதான் இதன் ஆதங்கப் பகிர்வாக அமைகிறது.



    மகிழ்ச்சிப் பகிர்வு


                     தஞ்சை பெசண்ட் அரங்கில் அனன்யா பதிப்பகத்தின் சார்பில் தஞ்சாவர்க்கவிராயரின் கவிதைநுர்ல் வளையல் வம்சம் வெளியீட்டுவிழா 26.05.2012 அன்று மாலை வெகு சீர்மையோடும் சிறப்போடும் நடந்தேறியது.

                    விழாவில் கலந்துகொண்டவர்கள் பலரும் மிகச் சிறந்த படைப்பாளிகள்..ரசனை மிக்கவர்கள்.. பல்துறைசார்ந்த அறிஞர்கள்..வாசிப்பாளர்கள்.. என அவரவர் கருத்துக்களை நுர்ல் குறித்து பகிர்ந்துகொண்டார்கள்.

                       ஓவியர் வீரசந்தானம் அவர்கள் வளையல் வம்சக் கவிதைகள் குறித்து ஒரு ஓவியக்கண்காட்சியை ரசிப்பதுபோல காற்றில் தனது சொற்களால் வரைந்து காட்டினார்.

                      காதம்பரி வெங்கட்ராமன் வழக்கம்போல தனது ஆழமான உணர்வுகளை வளையல்வம்சத்தின் மேன்மையுணர வெளிப்படுத்தினார்.

                        நா.விச்வநாதன் அவருக்கேயுரித்தான கம்பீரத்தில் வளையல் வம்சத்தை நனைத்து எல்லோரையும் உணர்வில் ஈரப்படுத்தினார்.

                        ஒரு மனித நேயமிக்க மருத்துவராக விளங்கும் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் நான் மருத்துவராக வரவில்லை நோயாளியாக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அற்புதமான சுருக்கமான அதேசமய்ம் செறிவான ஒரு கவிதையை வழங்கிவிட்டது பிரமிப்பானது. சுந்தர்ஜி சொன்னது போல் டாக்டர் கவிஞராகிவிட்டார். ஆனால் நாங்கள் மருத்துவராக முடியுமா? என்று, உண்மைதான்,

                          வளையல் வம்சம் குறித்த தனது கருத்துக்களைக் குறிப்பிடுவதற்கு முன்னர் கவிதையை விமர்சிக்க வரவில்லை. நான் அனுபவிப்பவன். ஆகவே நான் அனுபவித்ததை கட்டுரையாக வாசித்துவிடுகிறேன் என்று உறரணி நீண்டதொரு கட்டுரை வாசித்தளித்தார்.

                           கவிதை என்பது வாசிக்கப்படவேண்டும் இசை என்பது  கேட்கப்படவேண்டும் நட்சத்திரம் தேவையெனில் வானத்தின் உச்சியில் சென்று தேடுவதைப்போலவும் கடலுக்குள் இருக்கும் கூழாங்கல் தேவையெனில் கடலுக்குள் இறங்கி அதன் ஆழம் வரை செல்வதுபோல நான் கவிராயருக்குள் இறங்குகிறேன், அவருக்கும் எனக்குமான உறவில் உருவானவை இக்கவிதைகள் என அற்புதமான ஒரு கருத்தை சுந்தர்ஜி மொழிந்துவிட்டுபோனது காதில் இசையாக ஊடுருவியது.

                           அனன்யா அருள் கவிராயர் கவிதைகள் குறித்த  தனது கருத்துக்களைக் கட்டுரையாக வாசித்தளித்தார்.

                            முத்தமிழ் விரும்பியின் கவிராயர் குறித்த கருத்துக்கள் எளிமையாகயும் சுவையாகவும் அதேசமயம் தெளிவாகவும் முத்தமிழின் சுவையைக் கூட்டுவதாக அமைந்தது.

                            தேவரசிகன் தனக்கேயுரித்தான பாணியில் மிக நுட்பமான கவிராயரின் கவிதைகளை எடுத்துப்பேசினார்.

                              கடைசியாக வந்தாலும் கச்சிதமாகப் பேசுவேன் என உறுதிசெய்வதுபோல ஒரு கதையைச் சொல்லி மனத்தை தைக்கவிட்டு போனார் கவிஜீவன்.

                             நீண்ட நாட்களுக்குப் பின் ஓர் அற்புதமான கவிதை நிகழ்வில் மனம் சுகந்து கிடந்த நிறைவு கிடைத்தது. வாய்ப்பளித்த அனன்யா பதிப்பகத்தாருக்கும் கவிஞர் அருளுக்கும் நன்றிகள். கவிதை நுர்ல் குறித்து நாளைய பதிவில் பகிர்ந்துகொள்வேன்.


           வேண்டுகோள் பகிர்வு


                           மேனிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஒவ்வெரு மாணவியும் மாணவரும் அவரவர் திறனுக்கேற்பச் சூழலுக்கேற்ப மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். எல்லோரையும் எல்லாக் கடவுளர்களும் காக்கட்டும்.

                    1. நன்றாகப் படிக்கிற மதிப்பெண்களைத் தரப்படுத்தியிருக்கிற அத்தனை ஏழைப் பிள்ளைகளையும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் விரும்பும் மேல்படிப்பிற்குச் செல்ல அரசு துணைபுரியவேண்டும்.

                   2. நம்முடைய விருப்பங்களுக்குப் பலிகொடுக்காமல் அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பிய படிப்பை வழங்கவேண்டுமாய் பெற்றோர்கள் நடந்துகொள்ளவேண்டும்.

                   3. பணமுடைய மனமுடையவர்கள் முடியாத பிள்ளைகளுக்கு உதவுங்கள்.


                                    ஒரு கவிதை,,,,,,,, அல்ல வாழ்க்கைத்துளி

                                     அம்மாவின் பழைய
                                      புகைப்படத்தைத்
                                      துடைத்துத்துடைத்துப்
                                      பார்த்தேன்
                                      பளிச்சென்றே தெரியவில்லை
                                      அப்புறம் புரிந்தது
                                      ஐயோ,,
                                      அது அழுக்கல்ல
                                       காலம்...
                                                             தஞ்சாவூர்க் கவிராயர்
                                               நன்றி. வளையல் வம்சம்..


               நுர்ல் பகிர்வு


                          கவிராயர் அறிமுகப்படுத்தி வைத்தார். யாழி என்றொரு இளைய கவிஞன். வயதில்தான் இளையவன். கவிதையில் வானத்தை உரசுபவன்.
என் கைரேகை படிந்த கல் என்பது இவன் கவிதை நுர்லின் பெயர்.
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழச்சொல்கிற கவிதைகள்.

                    திணிப்பை
                    எதிர்க்கும்பொருட்டுக்
                    கடித்துவிடுகிறது
                    செருப்புகூட
                    தன்னை உணர்த்தி
                    சில நேரங்களில்...

                    வாசிப்பதுதான் கவிதைக்குப் பெருமை.

                    யாழி,,,யுடன் பேச....9976350636.

‘                   கவிராயர் யாழியை அறிமுகம் செய்கிறபோது சொன்னார். எனது கவிதை குறித்து இவனைப் பேசச் சொல்லியிருக்கக்கூடாது ஏனென்று சொன்னால் இவன் குயில், குயில் பாடத்தானே செய்யும். பேசுமா என்ன என்று,
அது தொகுப்பு முழுக்கத் தெரிகிறது.

                     வாழி யாழி....

                        
                                                                              நாளையும் பகிர்வேன்...