Sunday, July 15, 2012

மக்களின் இறைவன்...



 என்ன சொல்லி நினைப்பது  
அல்லது அழுவது.............
அழுகையில் தெரிவது ஆனந்தமா
அளவிடற்கரிய அல்லலா?

                                  நினைத்துக்கொண்டேயிருக்கிறோம்
                                 பேசிகொண்டேயிருக்கிறோம்
                                  வருத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்                              அழுதுகொண்டேயிருக்கிறோம் ஆனந்தப்பட்டுத் 
தொலைக்கிறோம்...


                                  இந்த தேசத்திற்கு கிடைத்த வரம் நீ
                                  அமுதசுரபி...கிளைத்தெழுந்த அமிழ்தம்...நீ
                                  எல்லா மனங்களிலும் தலைமையாக            
                                  தகுதியாய் இருந்தாய்.. தலைவனாய்
                                  இருந்தபோதும்
                                  தாயாயும் தகப்பனாயும் இருந்தாய்..
                                  இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்..
                                  உன் பெயர் உச்சரித்தும்  உன்பெயர்
                                  திருடியும்,,
                                  உன் புகழ் சுமந்தும் .. உன்னைக்
                                  கொண்டாடிக் கொடியேற்றிக்
                                  களிப்புற்றிருக்கிறது இன்றைய அரசியல்...

                                  எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்கள்
                                  உனது நிழலில் இளைப்பாறிக்கொண்டார்கள்
                                  யாரும் உன்வழியில் இல்லை பின்பற்ற...

 நீ வாழ்ந்து செழித்து வழங்கிய கருணைதேசத்தில்
 நாங்களும வாழ்கிறோம்
 என்பதுதான் ஆறுதல்..

 நீ உயிர்ப்புடன் இருப்பதால்தான் நாங்கள்  பிணங்களை அடையாளப்படுத்தமுடிகிறது...








                                                எங்கள் வாழ்வின் ஏற்றும் சுடரில்
                                                                      என்றும் இரு...

ஏனென்றால் 
இறைவன சோதிப்பதும் வரங்கொடுப்பதும் 
வாழ்விப்பதும் என்பதெல்லாம்  நாங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும்தான் படித்ததுண்டு,

இவற்றையெல்லாம் நேரில்  செய்த நீதான் 
மக்களின் இறைவன்


Sunday, July 8, 2012

பேருந்து நாவல்

பேருந்து (நாவல்) - ஏழாம் அத்தியாயம்.. ,,, கவலை வலைகள்



                    அதிகாலையில் பேருந்தில் பயணிக்கும்போது மனம் அமைதியாக இருக்கும். பேருந்து ஓட்டுபவர்களும் விரைவாகவும் அதேசமயம் சீராகவும் பேருந்தை இயக்குவார்கள். பேருந்து முழுக்க பயணிகள் நிறைந்து இருப்பார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்வுக்காக பயணத்தை மேற்கொண்டிருப்பார்கள். கோயிலுக்கு... திருமணம் நடக்கவேண்டும் என்கிற வேண்டுதலுக்காக கோயிலுக்குச் செல்பவர்கள்...நாடி சோதிடம் பார்க்க.. வைத்தியம் பார்க்க...குடும்பப் பிரச்சினைகள்... வேலைக்குச் செல்பவர்கள்..விற்பனைக்கு செல்பவர்கள்..காய்கறி மூட்டைகள் ஏற்றிக்கொண்டவர்கள்...நேர்முகத் தேர்விற்கு செல்பவர்கள்..பள்ளிக்கூடம்.. கல்லுர்ரிக்கு செல்பவர்கள்..இப்படி பலர பல நிகழ்வுகளுக்காகப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் அத்தனைபேரின் முகங்களும் மலர்ந்த பூவைப் போலஇருக்கும். சிரித்தபடி இருக்கும். இது அதிகாலைநேரத்தில் பயணிக்கிற தருணங்களில் மட்டுமே  சாத்தியம். மணி ஏழாகிவிட்டது என்றால் அத்தனை முகங்களும் அவரவர் தருணங்களுக்கு மாறிவிடும். தொடர்ந்து பயணிக்கும் ஒருசிலர் மட்டும் உறங்குவதும் விழிப்பதும் டீ குடிப்பதும் பின் உறங்குவதுமாகப் பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள். இன்னும் இது என்ன ஊரு? என்பார்கள் கரகரத்த குரலில் அரைகுறையாக கலைந்த துர்க்கமுடன். சிதம்பரம் என்றால் உடனே நடராஜா,,,என்று வேண்டியபடி கண்டக்டரிடம் சார் டீ சாப்பிடலாமா சார் பஸ்சு நிக்குமா சார்,,,, என்பார்கள்.

                நிக்கும் நிக்கும். அஞ்சு நிமிசம் நிக்கும் அதுக்குள்ள சாப்பிட்டுட்டு வந்துடுங்க.. நேரா பாருங்க பாத்ரூம் இருக்கு.. சீக்கிரம் போய்ட்டு வந்துடுங்க. என்பார்கள் ஒருசில கண்டக்டர்கள். ஏனென்றால் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் இதுபோன்று தொடர்ந்து பயணிப்பவர்கள் சட்டென்று தடுமாறுவது இந்த கட்டணக் கழிப்பறைகள் எங்கே இருக்கிறது என்றுதான்.பெரும்பாலும் அவை அமைந்துள்ள இடங்களை மறைப்பதுபோலத்தான் பேருந்துகளை நிறுத்துவார்கள். எனவே பயணிகள் அதிலும் குறிப்பாக வயதான பெண்மணிகள் மெல்ல இருக்கையைவிட்டு கையூன்றி எழுந்து பேருந்தைவிட்டு இறங்குவதற்குள் ஐந்து நிமிடம் கடந்துவிடும். வாம்மா... சீக்கிரம் யானை நட நடக்குறே,,, பாத்ரூம் அங்க இருக்கு பாரு என்று அரைபர்லாங் துர்ரம் கையை காட்டி நடத்தி அழைத்து செல்வார்கள். என்னம்மா பஸ்ச் நிறுத்தி எவ்வளவு நேரமாவுது இன்னுமா போறீங்க...  பெரிய எழவா போச்சி.. சீக்கிரம் போயிட்டு வாங்க... என்பார்கள் சலிப்புடன்.

             பேருந்தில் பயணிப்பதில் இது ஒரு மிகப்பெரும் சிரமம். சிறுநீர் கழிப்பதில். இந்த அவஸ்தையைப் புரிந்துகொண்ட கண்டக்டரும் டிரைவரும் மிகமிகக் குறைவு. இரக்கமில்லாமல் பேசுவார்கள். ஏக வசனமாய் சொற்கள் வந்து விழும். சமயங்களில் வயதானவர்கள் பஸ்ச எடுத்துட்டாங்க.. ஓடி வாங்க சீக்கிரம் என்று படுத்தும்போது அவர்கள் வேகமாக நடக்கவும் முடியாமல் ஓடவும்முடியாமல் படுகிற அவஸ்தை வேதனைப்படுத்தும். சமயங்களில் சிலர் அப்படியே விழுந்து முகத்தில் அடிபடுவதும் உண்டு.  அதேபோல சாப்பிட என்று நிறுத்தும் உணவகங்களும் அப்படித்தான். கிட்டத்தட்ட உணவு என்கிற பெயரில் கொள்ளையர் கூடங்கள் அவை. இதையெல்லாம் யாரோ முறையிட்டிருக்க அப்புறம் உணவகம் நில்லாப் பேருந்துகள் வந்தன. அவைகள் படுத்தும்பாடு இன்னொரு தனிக்கதை,

                  வெயில் உறைத்துக் கிடந்தது. நாக்கு வறண்டு போய்விட்டது. தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கலாம் என்றால் அது சூடேறிப்போய்க் கிடந்தது. உடம்பெங்கும் கசகசத்துக் கிடந்தது. மணி 2.35க்குத்தான் கடலுர்ர் வண்டி வரும். இன்றைக்கு சேகரும் நாராயணனும் ப்ணியில் இருப்பார்கள். அது கொஞ்சம் ஆறுதல்.

                  சரியாக 2.35க்கு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நுழைந்தது. சேகர்தான். கையைக் காட்டினார். அதற்குள் வணக்கம் சார்.. முன்னாடியே வந்துட்டீங்களா? என்றபடி உக்காருங்க சார்... டைம் வாங்கிட்டு வந்துடறேன். எப்போதும் 2.48 டைம் என்றாலும் ஒவ்வொருமுறையும் அதனை உறுதிசெய்துதான் வண்டியை எடுக்கவேண்டும்.

                    நான் வண்டியில் ஏறி டிரைவருக்கு எதிராகக் கண்டக்டர் இருக்கையில் அமர்ந்தேன்.

                     என்ன சார் இன்னிக்கு சீக்கிரம் வந்தாச்சு?

                     அரை நாள் லீவு போட்டுட்டேன். கொஞ்சம் வேலையிருக்கு சார் என்றேன்.

                    அதற்குள் நாராயணன் டைம் வாங்கிக்கொண்டு வந்தான்.

                     சார்.. இப்பத்தான் சாப்பிட்டோம்.. மாயவரம் போய் டீ சாப்பிடலாம் என்றபடி என் எதிரே உட்கார்ந்தான். தோளிலிருந்து கண்டக்டர்  பேக்கை கழற்றி டிரைவர் பேனட்டில் போட்டுவிட்டு...என்ன சார் விசேஷம்? என்றான்.

                        ஒண்ணுமில்லை நாராயணன் நீங்கதான் சொல்லவேண்டும் என்றேன்? சிரித்தபடி.
                         என்னத்த சொல்றது சார்... எப்ப பாத்தாலும் பிரச்சினைதான் சார்...
                         என்ன பிரச்சினை? என்றேன்.
                         வீட்டுலேயும் பிரச்சினை ஆபிசுலேயும் பிரச்சினை சார்...வாங்கற சம்பளம் பத்தலே சார்.. மூணு பொண்ணுங்க சார்..  ஒரு பையன்
                           என்னது மூணு பொண்ணா... உங்களுக்கு என்னா வயசாவுது நாராயணன் சார்? என்றேன் ஆச்சர்யமாய்.
                            வயது  முப்பத்தெட்டுதான் சார்... எங்கப்பா செத்துபோனதால அம்மா சின்ன வயதுலேயே எனக்கு கல்யாணம்  பண்ணியாச்சு சார்.. இருபது வயசுலே கல்யாணம் சார்.. முதல்ல ரெட்டைப்புள்ளங்க,, ரெண்டும் காலேஜ் படிக்குது சார்.. அடுத்த பொண்ணு..பத்தாவது படிக்குது. பையன் எட்டாவது படிக்கிறான் சார்.. எல்லாம் பக்கத்துலேதான் படிக்குது... அதுங்க டிரஸ் செலவே ஆயிடுது சார்.. படிக்காசுல குடும்பத்த நவுத்திக்கிட்டிருக்கேன்.. வாரத்துல ஒருநாள் ரெஸ்ட்ல ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு ரியல் எஸ்டேட் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்.. ஒரு பிளாட்டை முடிச்சி கமிஷன் வாங்கறதுகுள்ளே உயிர் போயிடுது சார்.. உங்களுக்கு எதும் பிளாட் வேணுமுன்னா சொல்லுங்க சார்.. குறைச்சு முடிச்சு தரேன் சார்...

                        என்ன நாராயண புறப்படலாமா? என்றார் சேகர்.
                        மணி 2.45 ஆகியிருந்தது.
                        சேகர் இருங்க.. இன்னும் மூணு நிமிஷம் இருக்கு.. புறப்பட்லாம். அந்த டைம் கீப்பர் நாய் மாதிரி கத்துவான்...
                         அப்போது ஒரு நடுத்தர வயது ஆள் முகத்தில் வளர்ந்த தாடியுடன் வந்து ஒரு மஞ்சள் சீட்டை நாராயணன் கையில் கொடுக்க நாராயணன் அதை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தான். இது முனிசிபாலிட்டி வரி.. ஒவ்வொரு பஸ்ஸ்டர்ண்ட்டுக்கும்  இது உண்டு..
                           சேகர் வண்டியை எடுங்க
                           சேகர் வண்டியை எடுத்தார்.
                            நான் டிக்கட் போட்டுட்டு வரேன் சார்.. இந்தாங்க உங்க டிக்கட்,,
                            டிக்கட்டை வாங்கிக்கொண்டு  பணத்தை கொடுத்தேன்.
                            காந்தி சிலை திருப்பத்தில் வண்டியை நிறுத்தி இரண்டு காவலர்களும் இரண்டு கைதிகளும் கையில் விலங்குடன் ஏறினார்கள்.

                            டிரைவருக்கு பின் சீட்டில் உட்கார்ந்தார்கள். ஒரு காவல்காரர் அந்த சீட்டுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டார். கைதிகளில் ஒருவன் அழுதுகொண்டேயிருந்தான். தப்பு பண்ணிட்டேன் சார்.. தப்பு பண்ணிட்டேன் சார்..
                          சும்மா இருடா.,, செய்யும்போது தெரியலே,,, இப்போ அழுவுறே..
                          நாராயணன் டிக்கட் போட்டுவிட்டு திரும்பி வந்தான். அவனிடம் வாரண்ட் காட்டினார்கள். நாராயணன் அதைப் பார்த்துவிட்டு டிக்கட் போட்டான். பேருந்து அதற்குள் அம்மாபேட்டை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. 
                            அழுகிற கைதியை அவனும் பார்த்தான்.
                            டிரைவர் பானட்டில் உட்கார்ந்தான் நாராயணன். நான் அந்தக் கைதியைப் பார்த்தேன். இளம் வயதுதான். செய்த தவறை நினைத்து அழுகிறான் போலும். ஒருநிமிட உணர்ச்சிதான் வாழ்க்கையையே திசைமாற்றிப்போட்டுவிடுகிறது. 

                              என்ன சார் இன்னிக்கு இந்த வண்டிக்கே வந்துட்டீங்க? என்றான் நாராயணன்.
                               அரைநாள் லீவு நாராயணன். கொஞ்சம் வேலையிருக்கு வீட்டுலே. 
                               கொள்ளிடத்தில் இரண்டுபேர் இறங்கி நாலைந்து பேர் ஏறினார்கள். 
                                நாராயணன் டிக்கட் போட எழுந்துபோனான்.
                                பழையபடி நாராயணன் டிக்கட் போட்டுவிட்டு என்னருகில் வந்து உட்கார்ந்தான். பெரும்பாலும் மதிய வண்டிகளில் அதிகம் கூட்டமிருக்காது. மக்கள் வெயிலுக்குப் பயந்து வரமாட்டார்கள். வழியற்ற பயணிகள் பயணிப்பார்கள். நாராயணன்  தன்னுடைய கதையைத் தொடர்ந்தான்.

                          ரொம்பக் கஷ்டமா இருக்கு சார். ஒவ்வொருமுறை ஆட்சி மாறும்போதும் ரொம்ப துன்பம் எங்களுக்குத்தான் சார். நான் எந்தக் கட்சியும் இல்ல சார். ஆனா யூனியன்ல இருக்கேன். அது எதாவது ஒரு கட்சியை புடிச்சிக்கிட்டிருக்கு..எந்த ஆட்சி வருதோ அதுக்கு எதிரான கட்சியில உள்ளவங்களுக்கு கண்டபடி டிரான்ஸ்பர் வரும் சார். செத்து சுண்ணாம்பா ஆயிடுவாங்க.. சரி இவ்வளவு துன்பப்பட்டாச்சேன்னு திருந்தவும் மாட்டாங்க சார்.. அவங்க கட்சி ஆட்சிக்கு வரும்போது சக ஊழியர்னு பாக்காம போட்டுக்கொடுத்து அவங்கள பழி வாங்குவாஙக் சார்.. நாங்களும் இந்த கொடுமையை அனுபவிப்போம்.. என்னோட துர்ரத்து சொந்தம் இங்க பிஎம்மா இருக்காரு. நானும் காட்டிக்க மாட்டேன். அவரும் காட்டிக்க மாட்டாரு. அதனால துர்ரத்துல போடறமாதிரி எனக்குப் பிடிச்ச ரூட்ட வாஙகிக்குவேன். இதனால நைட் எங்காச்சும் தங்கினா செலவுதான் சார்.. சமாளிக்க முடியல்லே..என்னோட மனைவி புரிஞ்சுக்கறதில்ல சார்.. பிரச்சினையாயிடுது.. இதுல புள்ளங்க செலவு வேற.. தவிர்க்கமுடியல்லே சார்.. உள்ளூரிலேயே என்னோட அக்கா பையன் இருக்கான். மெக்கானிக் டிப்ளமோ முடிச்சிட்டு அரசு வேலையில இருக்கான். பொண்ண குடுன்னு அக்கா புடுங்கறாங்க.. போடறத போடுங்கறாங்க.. எனக்கும் புடிச்சிருக்கு.. சொந்தம்னா.. கொஞ்சம் பாரம் குறையும்னு பார்க்கிறேன் சார். அடுத்தவருஷம் பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்.. சொசைட்டி லோன் போட்டுக்கலாம்.. அப்புறம் தெரிஞச்வஙக்கிட்டே வட்டிக்காவது வாங்கி முடிச்சிட்டா பிரச்சினையில்ல...போனவாரம் திருவிழான்னு நல்ல கலெக்சன்... படிக்காசு தேறினுச்சி.. என்னோட பையன் பிடிவாதமா லவ் பேர்ட்ஸ் வாங்கிக்கொடுன்னு படாத பாடு.. வேற வழியில்லாம கூண்டோட எல்லா பணமும் செலவாயிடிச்சி.. இப்போ அதுக்கு தீனி அதுஇதுன்னு செலவு.. ஒரே புள்ள ஆம்பள புள்ள செல்லம்...என்னதான் பண்ணறதுன்னு தெரியல்ல சார்..

                     சீர்காழி கொள்ளிடம் முட்டு இறங்குதா... என்று பேச்சை நிறுத்தி ஒரு சப்தமிட்டுவிட்டு.. போலாம் சேகர்.. என்றபடி தொடர் விசில் கொடுத்துவிட்டு மறுபடியும் என்னுடன் பேச்சைத் தொடர்ந்தான். 

                   கொள்ளிடம் முட்டு தாண்டி சிறு பாலம் தாண்டியதும் ஒரு கறுத்த மனிதர் பெரிய அலுமினியா தவாவுடன் (இசுலாமியர்கள் பிரியாணி கொட்டுவதற்கான வாயகன்ற பாத்திரம்) வண்டியை நிறுத்தி ஏறினார். அவரைப் பார்த்ததும் சேகர் தானாகவே வண்டியை நிறுத்தினார். வண்டியில் ஏறியவர் தன்னுடைய அலுமினியப் பாத்திரங்களை என்னுடைய காலடியில் கொண்டு வந்து வைத்தார்..

                  வாங்க ஐயா.. என்ன ரொம்ப நாளா காணோம்,, என்றார் ஸ்டியரிங்கை சீர்காழி புதியபேருந்துநிலையம் போகும் வளைவில் திருப்பியபடி...

                     பெரிய மவனுக்கு உடம்பு சரியில்ல.. இங்கதான் சீர்காழியிலே கடை பாக்க ஆளு இல்லே... பாத்திரம் எடுத்துக்கிட்டு போன விசாழக்கிழமை வந்தேன்..மருமவ ஒண்டியாளு கடைபாக்க தடுமாறும்.. அதான்.. என்றபடி பாத்திரத்தின் உள்ளே இருந்து ஒரு பெரிய காகிதப் பொட்டலத்தை எடுத்து நாராயணனிடம் கொடுத்து இப்பத்தான் வறுத்து எடுத்திட்டு வரேன் சாப்பிடுங்க.. என்றார்.

                      சார்.. இவரும் தஞ்சாவூருதான்.. பூக்காரத்தெரு.. இந்த அலுமினிய பாத்திரம் விக்க வருவாரு. நம்ப வண்டியிலதான் வருவாரு நம்ப வண்டியிலே திரும்புவாரு.. பாலத்துக்கிட்ட ஒரு பட்டாணிக்கடை இருக்குல்லே அது இவரோட மவனோடது.. மவன் பொண்ணு எடுத்தது சீர்காழி.. மருமக அருமையான பொண்ணு சார்.. இவர் இல்லாட்டியும் நம்ப வண்டிய வழி மறிச்சி அண்ணாச்சி இந்தாங்க கடலைன்னு பொட்டலம் கொடுத்துடும்..அந்த பாத்திரம் விற்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு பொட்டலத்தைப் பிரித்தான்.. கடலை வாசனை முகத்தைத் துளைத்தது கூடவே மிளகு வாசனையும்.. நமக்காக ஸ்பெஷலா வறுக்கறது சார்.. நமக்குமட்டும் மிளகு துர்ள் துர்வி எடுத்திட்டு வருவாரு.. கிட்டத்தட்ட கால் கிலோ இருக்கும். நாராயணன் தன்னுடைய கையால் ஒருபிடி அள்ளி என்னிடம் கொடுத்தான்.  கை சூடு தாங்கமுடியவில்லை.. சட்டென்று அப்படியே திரும்ப நாராயணன் வைத்திருந்த பேப்பரிலேயே கொட்டிவிட்டேன்..

                  என்ன சார் ரொம்ப சூடா இருக்கா?

                  ஆமா நாராயணன் சூடு தாங்க முடியல்லே..  என்றதும் சேகர் தன்னுடைய பானட்டிலிருந்து ஒரு பழைய செய்தித்தாளை எடுத்துக் கொடுத்தார். அதைக் கிழித்து அதில் பழையபடி கைப்பிடியளவு கடலையைப் போட்டு என்னிடம்  நாராயணன் தந்தான். இன்னொரு பெரிய பேப்பரில் அதேயளவு வைத்து சேகரிடம் கொடுக்க சேகர் அமைவாங்கி தன்னுடைய வலதுகை ப்க்கம் வைத்துக்கொண்டார். பேருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் வட்டமடித்து நின்றதும் சேகர் கொஞ்சம் கடலையை எடுத்துச் சாப்பிடஆரம்பித்தார். 

                   கடலை பெரியதாக முந்திரிபருப்பில் பாதியளவு இருந்தது. சாப்பிட நல்ல ருசி. 

                   அய்யா எங்க இருக்கீங்க? என்று அந்தப் பாத்திரக்காரர் என்னிடம் கேட்டார்.

                    நான் கரந்தையிலே இருக்கேன் என்றேன். 

                    அவருடைய முகம் ஏனோ எனக்குப் பிடித்துப்போயிற்று. அவருடைய முகம் என்னுடைய பட்டாணி தாத்தாவை எனக்கு நினைவு படுத்தியது.

                      சுப்பையா தாத்தாவின் இன்னொரு பெயர்தான் பட்டாணி தாத்தா. அம்மாவின் இரண்டாவது சின்னம்மாவின் வீட்டுக்காரர் அவர். என்னுடைய இரண்டாவது அக்காவை அம்மாவிடம் வற்புறுத்திக்கேட்டு தன்னுடைய இரண்டாவது மகனுக்குத் திருமணம் செய்துகொண்டவர். அதில் அவருக்கு சாகும்வரை பெருமையாக இருந்தது. இன்றைக்கு அக்காவும் இல்லை. மாமாவும் இல்லை என்பது பெரிய வருத்தம். வாழவேண்டிய வயதில் ஒருவர்பின் ஒருவராக இறந்துபோய்விட்டார்கள். அவர் அப்படித்தான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும் கையில் ஒரு பொட்டலம் இருக்கும். அது பட்டாணி பொட்டலம். இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. அம்மாவின் உறவுவகையில் அத்தனை தாத்தாக்களும் எங்கள் வீட்டிற்கு வந்தால் பட்டாணி...கடலை.. உப்புக்கடலை... கூடவே மல்லிகைப் பூப் பொட்டலம்.. இல்லாவிடில் கிராமத்து டீக்கடையில் போடப்படும்  காராச்சேவு பொட்டலம் (கிராமத்து காராச்சேவு மற்றும் மணிகாராபூந்தி குறித்து இன்னொரு பெரிய அத்தியாயமே எழுதலாம்) வாங்கிவருவார். அந்தப் பட்டாணி பற்களில் அரைபடும்போது நாக்கு நீர் படாமல் மாவாக நுணுங்கி நாக்கின் ஓரத்தில் படியும் பின் நாக்கின் ஈரத்தில் அது தரும் சுவை சுகமானது. காராச்சேவு பெரும்பாலும் நன்றாகச் சிவந்து இருக்கும் வற்றிப்போன உடல்போல. அதன்சுவை தனி. அதேபோல மணிகாராபூந்தியுடன் கிடக்கும் கருவேப்பிலைக்கும் பூண்டுதோலுக்கும் அடிதடி தடக்கும். 

                  கடலை  சாப்பிட ஆரம்பித்தோம். கடலை வாசனை பேருந்து எங்கும் பரவியது.

                   சீர்காழியையை விட்டு வைத்தீஸ்வரன் கோயில் தாண்டி காவல்நிலையம் அருகில் நின்றதும் அந்த காவலர்களும் கைதிகளும் இறங்கினார்கள். பேருந்து புறப்படும் ஒருவன் ஓடிவந்து ஏறினான். ஏறியவன் அப்படியே படியிலேயே நின்று ஆடத்தொடங்கினான். நன்றாக குடித்திருந்தான்.

                  நாராயணன் முகம் சிவந்துபோனது. 

                 யோவ் எங்கய்யா போறே? என்றான்.
                 நீ எங்க போறே என்றான் அவன் பதிலுக்கு.
                 என்ன திமிறா? எங்கய்யா போறே?
                 மாய்யூரம்.. என்றான்.
                 சரி உள்ள வா... படியவிட்டு மேல வாய்யா... என்றான் நாராயணன்.
                இங்க நின்னா பஸ்சு ஓடாதா?
                சட்டென்று கோபமாகி. சேகரு... வண்டிய நிறுத்து.. என்றான் நாராயணன். வண்டி நின்றது. நாராயணன் வேகமாக அவன் தோளில் கைவைத்து இறங்குய்யா.. முதல்ல..

                 அவன் நாராயணன் கையை விலக்கி.. எதுக்கு கைய வைக்கிறே...இறங்க முடியாது.. என்று முரண்டு பிடித்தான்.

                    என் தாலிய அறுக்கன்னு வருவீங்களா.. மரியாத உனக்கு அவவ்ளவுதான்..இறங்குடா.. கீழே... என்றான் நாராயணன்.

                    யோவ் என்ன வாடாங்கறே.. மரியாதயா பேசு.. பிச்சப்புடுவேன்..

                    இறங்குய்யா முதல்லே..என்றபடி அவனை வலுக்கட்டாயமாக இறக்கி வண்டிய எடுக்க அவன் நின்றுகொண்டிருந்தவன் அப்படியே பின்பக்கமாக படியில் மறுபடியும் ஏறிக்கொண்டான்.

                        சேகர் மறுபடியும் வண்டியை நிறுத்தினார்.

                         யோவ் படியேறி உள்ள வாய்யா... பயணிகள் சிலர் கத்தினார்.

                         எவண்டா அது என்ன பேசறது.. உங்க வேலைய பாருங்கடா... எனக்குத் தெரியும் என்றான்.

                       நாராயணன் பேக்கை என்னிடம் தந்துவிட்டு இதப் புடிங்க சார்.. இதோ வரேன் என்றபடி  அவனை வலுக்கட்டாயமாக இறக்கி தரதரவென்று இழுத்துப்போய் எதிரே நின்றிருந்த ஒருபுளிய மரத்தின் அருகே அப்படியே அவன் நெஞ்சில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ளினான்..அப்படியே மல்லாக்க சரிந்தான். ஓடிவந்து நாராயணன் விசில் கொடுக்க வண்டி புறப்பட்டது. அவன் பின்னால சிறிதுதுர்ரம் ஓடிவருவது தெரிந்தது.

                        மறுபடியும் பேக்கை என்னிடம் வாங்கிகொண்டு நாய் பொழப்புசார்.. இதுமாதிரி கேசு எல்லாம் நம்ப உயிர வாங்குது... குடிகார கம்னாட்டிங்க.. வீட்டுல வச்சு குடிக்கவேண்டியதுதானே... சே... கருமம்...இந்த நாய்ங்க விழுந்து செத்தா நம்ப பொழப்பும் சம்பளமும் அறுபடுது...

                        பேருந்து மயிலாடுதுறை பேருந்துநிலையத்திற்குள் நுழையும்போது மணி நாலாகிவிட்டிருந்தது. கும்பகோணம் போகும் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தும்போது அங்கு வேறு வண்டிகள் இல்லை.

                         டைம்கீப்பர் ஓடிவந்து சேகரிடம் உன்னோட டைம் மாத்தியிருக்கு.. ஏதோ ஊர்வலம் போவுதாம் காவேரிப்பாலம் தாண்டி போன பஸ்ஸெல்லாம் மெதுவாத்தான் போவுது.. வேற வண்டியில்ல.. நாலு நாப்பதுக்கு எடுக்கலாம்.

                      சார் வாங்க நாலு நாப்பதுதான் டைம். ஏதோ ஊர்வலமாம்..

                     டீக்கடையில் சூடாக வாழைக்காய் பஜ்ஜியும் உருளைக்கிழங்கு பஜ்ஜியும் போட்டுக்கொண்டிருந்தார்கள். கொத்தமல்லி சட்னியும் சாம்பாரும் மணத்தது.

                     நான் சேகர் நாராயணன் அந்த பாத்திரக்காரர்.. 

                     நாலு செட்டு பஜ்ஜி கொடுங்க என்று பணத்தை எடுத்தேன்.ஓடி வந்தார் அந்த பாத்திரக்காரர்.. அய்யா பணத்தை உள்ள வையுங்க இன்னிக்கு நான்தான் கொடுப்பேன் என்றபடி இடுப்பு வேட்டிமேல் கட்டியிருந்த பச்சை பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து டீக்கடைக்காரரிடம் கொடுத்தார்.

                     சேகர் சொன்னார்.. இவர் வந்தா இப்படித்தான் சார்.. யாரையும் கொடுக்க விடறதில்லே.. என்றார் பஜ்ஜியை சாம்பாரில் தொட்டபடி...

                         பஜ்ஜி அருமையாக இருந்தது கொத்தமல்லி சட்னியுடன் சேர்ந்து சாப்பிடும்போது..

                        யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். செம்பனார் கோயில் ரவுடி அவன்.. குடிச்சிப்புட்டு ரோட்டுல வம்பிழுத்துட்டிருந்தான்.. மதுரை வண்டி தட்டிடிச்சு.. செத்துப்போயிட்டான் ஆசுபத்திரிக்கு துர்க்கிட்டுப்போகும்போது. அதுக்கு அவன் சாதிக்காரன் எல்லாம் நியாயம் கேட்டு ஊர்வலம் போறானுங்க.. ரவுடிக்கெல்லாம் நியாயம்..

                     எனக்கு மனசுக்குள் கனகலிங்கம் நினைவுக்கு வந்தான். அவனுடைய மகன் இறந்ததுக்கு கவனக்குறைவர்ல் உங்கள் மகனைப் பாதுகாக்கத் தவறியது உங்கள் குற்றம்தான் என்று இதற்கு பணம் தரமுடியாது என்று கோர்ட் தீர்ப்பாகிவிட்டது என்று இன்றுதான் சொன்னான். போயிட்டுபோவுது சார்.. யாருக்கு சேக்கப்போறோம். ஒரே புள்ள அவனும் போயிட்டான். என்றபடி கனகலிங்கம அதை எளிதாக எடுத்துக்கொண்டுவிட்டான். இங்கே ரவுடிக்கு ஒரு சாதியிருக்கிறது நியாயம் கேட்க. ரவுடிக்குத்தான் இது உலகம் .

                   சாப்பிட்டுவிட்டு திரும்பவும் பேருந்திற்குள் வந்தோம்.

                    சேகர் கேட்டார்  ஏதும் புத்தகம் வச்சிருக்கீங்களா சார்? என்றார்.

                    உயிர் எழுத்துப் பத்திரிகையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு இது புதுசா இருக்கு சார்.. அப்பல்லர்ம் கணையாழி..தீபம்  தாமரை செம்மலர்னு தொடர்ந்து வாங்கிப் படிப்பேன் சார்.. இப்படி படிக்கமுடியறதில்லே.. வருத்தமா இருக்கு. ஆனாலும் ரெஸ்ட்ல ஏதாச்சும் ஒரு பத்திரிக்கையாவது படிச்சிடறேன்

                       எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறுபத்திரிக்கை அதுவும் இலக்கியப் பத்திரிக்கை வாசிப்பது ஆரோக்கியமானது. எல்லோரும்  படிக்கிற காலம் வரும்போது இந்த உலகம் ஞானம் பெற்ற உலகமாகிவிடும்..

                       நானும் உயிர்மை எடுத்துப் படிக்கஆரம்பித்தேன். 

                       நாராயணன் கீழே  டைம் கீப்பருடன் பேசிக்கொண்டிருந்தான். பாத்திரக்காரர் பாத்ரூம் போயிருந்தார்.

                       சேகர் சொன்னார்.. சார்.. எங்க குடும்பத்துலே எல்லாரும் படிச்சவங்க ரெண்டு அண்ணன்.. ரெண்டு அக்கா நான்தான் கடைசி.. பெரியவர் எல்ஐசியிலே வொர்க் பண்ணி ரிட்டயர்டு ஆயிட்டாரு. அவர் அந்தக் காலத்துலேயே பிகாம் படிச்சவரு. வேலையத் தவிர அவருக்கு எதுவும் தெரியாது. ரெண்டாவது அண்ணன் லாயருக்கு படிச்சவர். அவர்தான் எனக்கு வாசிக்கறது இன்னொரு இலக்கிய உலகம் இருக்குன்னு அறிமுகம் செஞ்சு வச்சாரு. அப்பவே அவரு ரஷ்யப் புத்தகங்கள் நிறைய வச்சிருந்தாரு. அங்கிருந்துதான் படிக்க ஆரம்பிச்சேன். இன்னி வரைக்கும்விட முடியல்லே. ஆனா போனவருஷம் அவரு கார் ஆக்சிடெண்ட்ல இறந்துபோயிட்டாரு. அண்ணி எல்லாப் புத்தகத்தையும் எடைக்குப் போட்டுட்டாங்க.. அவங்களுக்கு என்ன கண்டா பிடிக்காது. இப்படி எந்தப் புத்தகம் படிச்சாலும் அவரு ஞாபகம் வந்துடுது, எனக்கு ரெண்டு பொண்ணுஙக் சார்.. ஒண்ணுக்கு இதுலே டேஸ்ட் கிடையாது. எப்பவாச்சும் இப்படி புக் வாங்கி வீட்டுலே சண்டை வந்துடுது. தண்ட செலவுன்னு.. இருந்தாலும் எப்படியே படிச்சுடறேன்.  ஆனா எங்க பொழப்பு எப்படா வண்டிய விட்டு இறங்குவோம் போய் துர்க்கத்துலே விழுவோம்னு இருக்கு சார்.. உடம்பெல்லாம் கம்பிபோட்டுக் கட்டி அவுத்துவிட்ட மாதிரி வலிக்கும் சார்.. சம்பளம் பத்த மாட்டேங்குது.. சமயத்துலே யாராச்சும் ரோட்டுலே மாட்டிக்கிட்டா இன்கிரிமெண்ட் கட்டாயிடுது.. கோர்ட்டுக்கு வேற சொந்த லீவுலே காசுலே அலைய வேண்டியிருக்கு.. அதை மீறி வாழவேண்டியிருக்கு.. இந்தப் புத்தகங்கள் படிக்கிற ஆர்வம் குறையாம இருக்கு.. அதையே பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சிருந்தா தலையெழுத்தே மாறிப்போயிருக்கும்..

                நாராயணன் வந்து சேகர் வண்டிய எடுங்க என்றான்.
                மணி நான்கு நாற்பது ஆகிவிட்டிருந்தது.
                புத்தகத்தை என்னிடம் திரும்பித் தந்துவிட்டு வண்டியை எடுத்தார்.
பேருந்து நிறைந்திருந்தது.

                 மனசு கணத்திருந்தது.

                 குத்தாலம் ஆடுதுறை மட்டும் ஏறுங்க இடையில வண்டி நிக்காது என்று சப்தம் கொடுத்தபடியே டிக்கட் போட ஆரம்பித்தான் நாராயணன்.

                   உயிர்மையை விரித்த பக்கத்தில் மனுஷ்யப் புத்திரனின் கவிதை இருந்தது.

                         நிம்மதியாக உறங்குகிறாய்
                         என்றேன்
                         நிம்மதிக்காகத்தான்
                         உறங்குகிறேன் என்றாள்..


                        காவிரிப்பாலத்தில் வண்டியேறும்போது தொலைதுர்ரமாய் வானத்தில் சிவப்பும் மஞ்சளும் பூசிய  பரப்பில் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தான். பாலத்தின் கீழே மயிலாடுதுறை சந்திப்பில் திருநெல்வேலி பாசஞ்சர் வண்டி வந்து நின்று கொடுத்த குரல் காதுக்குள் வந்து கூ..கூ.. என்றது.


                                                                                                    (பேருந்து ஓடும்)
                               
                                
                            
                        
                        



                       



Thursday, July 5, 2012

ஒரு கவிதை,,,,,,,,,,ஒரு செய்தி........



          தமிழில் இப்போது வாசிப்பதற்கு என்று தரமான இலக்கிய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தங்களுக்கெனக் குழு மனப்பான்மை கொண்டு இயங்கினாலும் அவற்றின் சில செய்திகள் வெகு தரமானவை. ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி அவற்றை வாசிக்க வாசிக்க சுவை கூடுகிறது. மனம் செழிப்பாகிறது. சில இதழ்களை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்புகிறேன்.

                      1.  உயிர் எழுத்து
                      2. உயிர்மை
                      3. கணையாழி
                      4. புதிய காற்று
                      5. சௌந்தரசுகன்
                      6. காக்கைச் சிறகினிலே
                      7. கனவு
                   
இது முதல் சுற்று நினைவில் வந்தவை. இவற்றில் நீண்ட காலமாக வரும் இதழ்கள் உண்டு. எனவே நான் சீனியாரிட்டிபடி குறிப்பிடவில்லை. மனம் போன போக்கில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                    கவிதை எழுதுதல் என்பது இறைவன் கொடுத்த வரம். அதிலும் வெகு எளிமையாக எழுதுவது அதேசமயம் அழுத்தமாகவும் ஆழமாகவும் வாசிக்க செழிப்பாகவும் எழுதுவது நிரம்பிய சிந்தனையை ஏற்படுத்தும் அனுபவப் பின்னணியைக் கொண்டது.  மனுஷ்யப்புத்திரன் கவிதைகள் அப்படித்தான். சொற்களில் மனம் கசிகிறது. லயிக்கிறது. அனுபவிக்கிறது. ஆனந்தம் கொள்கிறது. துன்பமில்லாது மனதில் இறங்கிக்கொள்கிறது. எனவே இந்த மாதம் உயிர்மையில் மறைந்த எழுத்தாளர் திரு கிருஷ்ணா டாவின்சிக்கு சமர்ப்பித்துள்ள கவிதை உங்களின் வாசிப்பிற்கு. இன்னும் மனதில் அசைந்துகொண்டிருக்கிறது இக்கவிதை.

                    இரங்கல் கூட்டம்

                    இரங்கல் கூட்டததில்
                     விளக்குகள்
                     மிகவும் பிரகாசமாக இருந்தன..

                    சொல்வதற்கு
                    ஏராளம் இருந்தன உண்மைகள்
                     ஏராளம் இருந்தன பொய்கள்
                    இரண்டுக்கும் இடையிலும்
                    கொஞ்சம் இருந்தன.

                    இறந்தவனை
                    எப்படித் தொட்டுப் பார்ப்பது என்று
                    ஒருவருக்குமே தெரியவில்லை
                    ஒவ்வொருவராக முன்வந்தார்கள்
                     ஒருவர் அவனை தண்ணீராக மாற்றிக் காட்டினார்
                     இன்னொருவர் அவனை ஒரு புகையாக மாற்றினார்
                     வேறொருவர் ஒரு காலித் தொப்பியிலிருந்து
                     அவனை ஒருபுறாவாக பறக்கச் செய்தார்
                     யாரோ ஒருவர் சிகரெட் லைட்டரில் எரியும்
                     கணநேர ஜவாலையாக மாற்றினார்...

                     அவனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வந்தார்
                     மரணம் ஒரு மலரை காகித மலராக்கி அமரத்துவம்
                      அடைய செய்துவிட்டது என்றார்..
                     யாரோ ஒருத்தி அவன் மீதான காதலை அப்போதுதான்
                     முதன்முதலாக வெளிப்படுத்தினாள்
                      ஒரு ஒவீயர் அவனை ஒரு ஓவியமாக்கியிருந்தார்
                      ஒரு புகைப்படக்காரர் அவனை புகைப்படமாக்கியிருந்தார்
                       ஒரு ஒளிப்பதிவார் அவனைக் காட்சிப்படுத்தியிருந்தார்
                       ஒரு கவிஞர் அவனை ஒரு கவிதையாக்கினார்

                       நான் சொன்னேன்
                       எனக்கு அவனை அவ்வளவாகத் தெரியாது இந்த மரணம்
                       அவனைத் தெரிந்துகொள்ள
                       ஒரு சிறந்த வாயப்பாக இருந்தது என்று


                        இறந்தவன் ஒன்றும் சொல்லவில்லை
                        அவன்போக்கில் முகத்தைத் திருப்பிக்கொண்டு
                        உட்கார்ந்திருந்தான்.


                        இறந்தவனின் சின்ன மகளுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது
                        அவள் இருக்கைகளுக்கு இடையே நடக்கத் தொடங்கினாள்
                         ஒவ்வொருவராக சிரிப்பு மூட்டத் தொடங்கினாள்
                         எல்லோருமே சிரிக்க விரும்பினார்கள்
                         ஆனால் எச்சரிக்கையுட்ன்
                         சிரிப்பைத் தவிர்த்தார்கள் அவள்
                          உயிரோடு இருக்கும் யாரோ ஒருவரின்
                         சின்ன மகளுடன் சேர்ந்துகொண்டாள்


                          அவர்கள் எல்லா இடத்திலும் ஒடிக்கொண்டே இருந்தார்கள்
                          தயாரிக்கப்பட்ட பேச்சுக்களின் பக்கங்கள் காற்றில்
                          பறக்கத் தொடங்கின
                          இறந்தவனுக்காக கண்ணீர் சிந்த விரும்பியவர்கள்
                          இறந்தவனின் குழந்தைக்காக கண்ணீர் சிந்த விரும்பியவர்கள்
                          இதை கவனிக்காமல் இருக்க முயற்சித்தார்கள்


                          வெளிவாசல் கதவை எட்டிப் பார்த்த இறந்தவனின் குழந்தை
                          உயிரோடிருப்பவனின் குழந்தையிடம்
                          ரொம்ப இருட்டாயிடுச்சு எப்ப வீட்டுக்கு போகலாம்
                          என்று கேட்டாள்


                          இருளோடு
                          இருளாய் நின்றுகொண்டிருந்த
                          இறந்தவன்
                          தன் சில்லிட்ட கைகளர்ல்
                          அந்தக் குழந்தைகளின்
                          தலையை வருடுகிறான்..
                                                                                    (கிருஷ்ணா டாவின்சிக்கு)


                   மிக நீண்ட கவிதை நான் மடக்கியதை எல்லாம் நீட்டியிருக்கிறேன்.
ஆனாலும் இது அற்புதமான கவிதை.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


செய்தி


                     கணையாழி கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்து நாற்பது ஆண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பிருந்து வருகிற இதழ். இந்த சூலை இதழில் கணையாழியைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பாக தன் மனப் போராட்டத்தை எழுத்தாளர் கவிஞர் ம,இரா அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். தொட்ர்ந்து அதில் எழுதி வருபவன் என்பதால் என்னுடைய பதிவை வாசிக்கும் நண்பர்களுக்கு ஒருவேண்டுகோள்.

                தரமான பத்திரிக்கை நின்றுவிடக்கூடாது. அதற்கு உதவவேண்டும். அவரவர் மன. பண எல்லைக்குள் கணையாழிக்கு உதவலர்ம். மாதமாதம் நான் ஒரு இதழ் வாங்கிக்கொள்கிறேன் என்று உறுதியளிக்கலாம். ஓராண்டு சந்தா தருகிறேன் என்று கூறலாம். நண்பர்களுக்கு ஒரு கணையாழியை வாங்கித் தந்து அறிமுகம் செய்யலாம். நண்பர்களையும் வாங்க வைக்கலாம். படைப்புக்களை அனுப்பலாம். அவரவர் வலைப்பதிவுகளில் இதனைக் குறிப்பிட்டு தாக்கத்தை ஏற்படுத்தலாம். என்ன முடியுமோ அதை செய்யலாம்.

                  நம்மால் முடிந்ததை செய்ய அழைக்கிறேன்.

                  கணையாழி முகவரியும் தொடர்பு எண்ணும்.


                  தனி இதழ் விலை ரூ.20 ரூபாய்.
                  ஓராண்டு = 220   ஈராண்டு = 440  மூன்றாண்டு = 650
                  ஐந்தாண்டு = 1000 வாழ்நாள் = 5000

                   முகவரி/  எச்56/எப்.4 மருதம். திருவள்ளுவர் நகர். திருவான்மியூர்.
                                       சென்னை 600 041.

                    தொலைபேசி =  914424514244

========================================================================
                     
                         

                  

Friday, June 29, 2012

நெஞ்சம் மறப்பதில்லை



                      இந்த கதை கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு படித்தது. எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. காரணம் இந்தக் கதை இன்னும் மனசை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியும் கதை எழுத முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் பகிர்தலுக்கு.


                   அந்தப் பெண் இளம் வயது. ஆனால் கரையான் புற்றுப்போல அவள் உடல் முழுக்க வறுமை புற்று வைத்திருந்தது. பிச்சை எடுத்து பிழைப்பவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று பால்குடிக்கும் குழந்தை. இன்னொன்று அதைவிட 1 வயது பெரியது. ரயிலில் பிரயாணம் செய்து பிச்சை எடுப்பவள்.

                 ஒரு நாள் இரவுநேரம் அமாவாசை நேரம் என்று வைத்துக்கொள்ளலாம். தனது இருகுழந்தைகளுடன் பயணம் செய்கிறர்ள். பசித்த வயிறு. பால் குடிக்கும் குழந்தை பசிக்கு அழுகிறது. பேசாதிருக்கிறாள். காரணம் பசிக்கிற குழந்தைக்குப் பால் கொடுக்கமுடியாத அளவிற்கு வறுமையான தேகமும் வற்றிய மார்புகளையும் உடையவள். எனவே பசிக்கு அழும் குழந்தை அழுதுஅழுது ஒரு கட்டத்தில் இறந்துபோய்விடுகிறது. இன்னொரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. இறந்த குழந்தையைக் கிடத்தி சிறிதுநேரம் அழுகிறாள். பின்  ரயில் ஒரு ஆற்றைக் கடக்கையில் இறந்துபோன குழந்தையை ஆற்றில் எறிந்துவிடுகிறாள். ஏன் என்றால் இறந்த குழந்தையைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இயலாத நிலை.

              ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நெடுநேரத்திற்குப்பின் ஒரு ஸ்டேஷனில் நிற்கிறது. இவள் இறங்கவேண்டும் என்று நினைத்து முடிவெடுத்து எழுகிறாள். உறங்கிகொண்டிருக்கும் குழந்தையைத் துர்க்கிக் கொண்டு இறங்கலாம் என்று அதனைத் தொடும்போது அது இறந்துபோயிருக்கிறது.

                 பதட்டத்தில் எதை எறிகிறோம் என்று தெரியாமல் இரவு நேரத்தில்  அவள் ஆற்றில் எறிந்தது உயிருள்ள குழந்தையை.


                   இன்றைக்கும் மறக்கமுடியவில்லை இந்தக் கதையை.

                 

Wednesday, June 27, 2012

மகாத்மா,,

                         
                                                          மகாத்மா...(சிறுகதை)



               மனது மகிழ்ச்சியால் துள்ளியது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டன சொந்த ஊருக்கு சென்று. தலைநகர் தில்லி மனதுக்கு பொருந்திவிட்டது, ஆரம்பத்தில் ஒட்டாமல் பின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை எண்ணியும் பல முன்னேற்றங்களை எண்ணியும் தலைநகரில் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் திலலி மனதுக்குள் தங்கிக்கொண்டது வாழ்வின் பிடிப்பாக. இப்போது திடீரென ஒருமாதம் விடுமுறை. விடுமுறையில் எந்தப் பணிகளும் இல்லாமல் இருந்தது மனதை யோசிக்க வைத்தது, சொந்த ஊருக்குச் சென்றால் என்ன? கூடவே பிள்ளைகளும் மனைவியும் என்ன சொல்வார்கள் என்கிற தயகக்மும் இருந்தது,

                மல்லிகாவே தொடங்கிவைத்தாள் அந்தப் பேச்சை பேசாம ஊருக்குப் போயிட்டு வரலாம்,  ரொம்ப நாளாச்சு உறவுகளைப் பார்த்து., செல்லுல பேசிப்பேசி அலுப்பாயிடிச்சி, முகம் பார்க்கணும், ஆத்துல குளிக்கணும், சமைச்சிச் சாப்பிடணும் ஊர்ச்சாப்பாட்டை. பிள்ளைகளுக்கு ஊர நினைவுப்படுத்தி புதுப்பிக்கணும். நிறைய பத்திரிக்கைகள் நம்மள மதிச்சு அனுப்பியிருக்காங்க. எல்லாமே கூரியர்லேயும் பதிவு தபால்லேயும் வந்திருக்கு. அதெல்லாம் எடுத்து வச்சிக்கலாம். அவசியம் அங்கல்லாம் ஒரு எட்டு போயிட்டு வந்துடலாங்க என்று படபடவென்று திட்டங்களை பொழிந்தாள் வெயில் காலத்தில் பெய்யும் மழையைப்போல,

                   மனம் துள்ளியாட ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடிப் பார்த்தேன் மனம் ஒருமுறை பிறந்து வளர்ந்து படித்து வாழ்ந்த ஊரை ஒரு வலம் போய் திரும்பியது புயலாய்.

                 போகும்போது விமான டிக்கட்டும் வரும்போது ரயில் பயணமுமாக முடிவானது, கம்பெனியில் ஏற்கெனவே ஒதுக்கியிருந்த விமானப்பயண முன்பணம் கிடைத்தது, நாலைந்து ஏடிஎம் கார்டுகளை எடுத்து வைத்தாயிற்று.

                    பிள்ளைகள் கேட்டார்கள்,  அப்பா அங்க என்னன்ன இருக்கும்? யாரையெல்லாம் பார்க்கப்போறோம்?

                    மல்லிகாவின் அப்பா மட்டும் கிராமத்தில் மல்லிகாவின் அண்ணன் வீட்டில் இருந்தார். அது அவரின் சொந்த வீடு. மகனுக்கு திருமணம் செய்து தன் வீட்டோடு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் மாடிப்பகுதியை தன்வசம் வைத்துக்கொண்டார்.

                   என்னுடைய அம்மா மட்டும் இருக்கிறாள். பக்கத்தில் என்னுடைய இரு அக்காக்களும் நான்கு தம்பிகளும் இருக்கிறார்கள்.

                   நாகப்பட்டினத்திலிருந்து ஆறு மைல் உள்ளே இருந்தது அந்தக் கிராமம்.


                   ஊருக்கு வந்ததும் தெய்வத்தைக் கண்டதுபோல உபசரித்தார்கள. பிள்ளைகள் முதலில் தயங்கினாலும் வயதானவர்கள் கொஞ்சிய கொஞ்சல்கள் அவர்களுக்குப் பிடித்துப்போயிற்று. 


                    மல்லிகாவின் திட்டப்படி எல்லாம் நடந்தது. அனுபவித்தோம்.


                   இன்னும் பத்து நாட்கள் இருந்தன. திடீரென ஏனோ தெரியவில்லை. சங்கரன் வாத்தியார் நினைவுக்கு வந்தார். கல்லுர்ரி ஆசிரியர். என்னை ஏனோ மகனைப் போல நேசித்தவர். அவரின் அறிவுரைகள் என்னை பலநிலைகளைத் தாண்டி உயரத்திற்கு கொண்டு வந்தது. பக்கத்தில்தான் கல்லுர்ரி. இப்போது அவர் முதல்வர் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவசியம் போய் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.


                   மல்லிகாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.


                   ஒரு டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.


                   கல்லுர்ரி அப்படியே இருந்தது. எனக்குள் நான் படித்த காலங்கள் வந்து துள்ளித் திரிந்தன. உள்ளே பெரிய நாகலிங்க மரம். அதன் கீழ் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனேன். நாலைந்து கட்டிடங்கள் வண்ணம் பூசிக்கிடந்தன.


                  முதல்வர் அறை மாறவேயில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே.


                     வெளியே முனைவர் சங்கரன் முதல்வர் என்று பெயர்ப்பலகை இருந்தது.


                        என்னைக் கண்டதும் மகிழ்ச்சியாகிவிட்டார் சங்கரன.


                        வா..வா...வசுபாலா.. அடேங்கப்பா எவ்வளவு வருஷமாச்சு-.. என்னையெல்லாம் மறந்துட்டியா? ஒரு போன்கூட இல்ல,,,


                        அப்படி இல்ல. சார்,, என்னோட ஒவ்வொரு உயர்வுக்கும் உங்கள நினைச்சுக்குவேன் சார்,, எனக்கு என்னிக்கும் நீங்க கடவுள் சார்.,, அடிக்கடி கடவுளை நினைச்சுக்கலாம்,, பேசலாமா சார் என்றேன்,


                          அப்படியே கண்கலங்கிவிட்டார், தன் இருக்கையைவிட்டு எழுந்து வந்து என்னை அணைத்துக்கொண்டார், 


                           இது மாதிரி வார்த்தைக்குத்தாம்பா உயிரைக் கையில புடிச்சிட்டு வாழ்ந்திட்டிருக்கேன்,, எனக்கு கோடிகோடியா கொட்டித் தரவேண்டாம்பா,, என்னோட பிள்ளைகள் இப்படி நல்ல நிலையில இருந்து என்னை பாக்க வந்திருக்கே பாரு,, நாலு வார்த்தை என்னைப் புரிஞ்சிக்கிட்டு பேசறே பாரு,, இதுபோதும்பா,, ஆசிரியரா நான் இருக்கறதுக்கு,,,


                         முதல்வரா ஆகியிருக்கீங்க சார்,,, என்னோட வாழ்த்துக்கள் சார்,, இத நீங்க வாங்கிக்கணும் என்று ஒரு அன்பளிப்பையும் பழங்களையும் நீட்டினேன்.. பிடிவாதமாக எல்லாவற்றையும் மறுத்துவிட்டு ஒரேயொரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டார்.


                        சிறுகுழந்தைபோல துள்ளினார். எனக்குள் ஆச்சர்யமாக இருந்தது. சங்கரன் சார் மாறவேயில்லை. அப்படியே இருக்கிறார். 


                        உடனே அசோகாவிற்கும் மெது வடைக்கும் காபிக்கும் மணியடித்து உதவியாளரிடம் சொல்லிவிட்டு முதல்வர் அறையைவிட்டு வெளியே வந்தார். 


                       நானும் வந்தேன்.


                       என்னோட பீரியட்ல கட்டின கட்டடம்பா,, வநது பாரு.. என்று அழைத்துப்போனார்.  இளங்கலை... முதுகலை... ஆய்வுப்படிப்பு... டாக்டர் பட்ட அறை என்று கிட்டததட்ட ஒருகோடி ரூபாய் தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு வாங்கி உருவாக்கியிருப்பதைக் கண்டதும் பிரமித்துப்போனேன்.


                     எல்லாம் ஏழைப்பசங்கப்பா,,,எங்க போவாங்க,,, சுத்துப்பட்டு எத்தனை கிராமம் இருக்கு? இந்த ஒரு கல்லுர்ரிதான் குறைந்த கட்டணம். எல்லா வசதியும செஞ்சுப்புடணும்.. செய்திருக்கேன். எல்லாம் உன்னை மாதிரி இங்க படிச்ச மாணவர்கள்தான் உபயம்.. என்னோட குருவின் மாணவர்கள் உபயம்.. பைசா சுத்தமாக செலவழிச்சிருக்கேன்.. இங்க வந்துட்டா டாக்டர் பட்டம் வாங்கிட்டு வெளியே போயிடலாம்..ஒவ்வொரு கட்டடத்தையும் பொறுமையாகத் திறந்து காண்பித்துவிட்டு அதேபோல மூடிவிட்டு வந்தார். 


                 இன்னும் செய்ய ஆசைப்பா.. இந்த சூனோட ஓய்வு . வர்றவங்க செய்யணும்.. ஆனா இவ்வளவு செஞ்சும் மனதுக்கு நிம்மதியில்லே.. இங்க உள்ளவங்க படுத்தற பாடு.. ஆனாலும் மனசு இதையெல்லாம் சாதிச்சுட்டோம்னு திருப்தி இருக்கு வசுபாலா... என்றார்.


                    நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. இவருக்கு முன் முதல்வர்களாக இருந்தவர்கள் பணத்திலும் அரசியலிலும் செல்வாக்கு மிக்கவர்கள். ஆனால் யாரும் இப்படி செய்யவில்லை. மேலும் மாணவர்களின் கல்வித்தொகையையும் அரசு ஒதுக்கும் நிதியையும் களவு செய்து பணிநீக்கம் பெற்றுப் பின் சரிசெய்தவர்கள். சங்கரன் வாத்தியார் எந்த செல்வாக்கும் இல்லாதவர். ஆனால் அவரின் மனது உண்மையான சேவை யை நினைத்திருக்கிறது. இதெல்லாம் நடந்திருக்கிறது.


                        வசுபாலா.. இந்தக் கல்லுர்ரியை ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகமா மாத்தணும்பா,,, என்றார்.


                         உங்க மனசுபோல நடக்கும் சார் என்றேன்.


                        திரும்பவும் அறைக்கு வந்தேர்ம். உதவியாளர் எல்லாம் வாங்கி வந்திருந்தார். சங்கரன் எடுத்துப் பரிமாறினார். இருங்க சார் என்றேன்.


                        இருப்பா ஒரு நல்ல பிள்ளை வந்திருக்கே.. இனி எப்ப வருவியோ,,, நானே கொடுக்கிறேன் சாப்பிடு.. இது திருப்தியா இருக்கு.


                          நான் விடைபெற்று கிளம்பி வந்தேன். கல்லுர்ரி வாசல் வரை வந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பது அவர் முகத்தில் பிரதிபலித்தது.
என்னுடைய கைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு அவருடைய கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டேன்.


                         இந்த முறை சங்கரன் சாரை பர்ர்த்தது இந்தப் பயணத்தை நிறைவாக எண்ண வைத்தது. 


                         தில்லி திரும்பி ஓராண்டுகள் கழித்து ஒருநாள் சங்கரன் சார் நினைவுக்கு வந்து போன் செய்தேன். போனை எடுத்தார்.


                           சார் எப்படியிருக்கீங்க? என்றேன்.


                           நல்லாயிருக்கேம்பா.. பழைய கல்லுர்ரியிலிருந்து ஓய்வு கொடுத்திட்டாங்க. ஆனா பென்சன் வரலே.. நான் பில்டிங் கட்டியதில சொத்து சேர்த்திட்டேனாம்.. யாரோ மொட்டைப் பெட்டிஷன் போட்டிருக்காங்க.. நிர்வாகம் விசாரணை செய்துதான் பென்சன் தருமாம். நானும் விளக்கம் கொடுத்திருக்கேன். இப்போ வேறொரு கல்லுர்ரியில இருக்கேன். இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காங்க.. பிள்ளைங்க குறைவாக இருக்காங்க.. ஒரு பில்டிங்தான் இருக்கு..என்னோட பிரெண்ட் ஒருத்தன் துபாயிலேர்ந்து வந்திருக்கான். வரச் சொன்னான் பார்க்கறதுக்காக. அவன்கிட்டே ஏதாவது டொனேஷன் வாங்கி இன்னொரு பில்டிங் கட்டிட்டா இன்னும் கொஞ்சம் பிள்ளைங்க சேருவாங்க...அவன பார்க்க வந்திருக்கேன். இங்க வெயில் கடுமையா இருக்கு. அங்க எப்படியிருக்கு? வந்தா வாப்பா.. என்றார்.


                          எனக்குள் வருத்தம் வந்தது. ஆனாலும் மகாத்மாக்கள் இப்படித்தான்
                       
                 

                   
அன்புள்ள நண்பர்களுக்கு..

       எனது முந்தைய பதிவு ஏதோ தொழில்நுட்பச் சிக்கல்களின் காரணமாக அழிந்துபோய்விட்டது. திருச்சியில் கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பற்றிய பதிவு அது. அதுகுறித்து கருத்துரைத்த 5 நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

Saturday, June 23, 2012



                          உறங்குகிற இரவில் பாதியைத்தான்
                          உறக்கத்திற்குப் பயன்படுத்துகிறேன்...

                          மீதியைப் பகலின் செலவுகளுக்கான
                          நியாயங்களுக்குப் பதிலீடு செய்துவிடுகிறேன்..

                          அப்போது கசடுகளைப்போல
                          சில தேங்கிவிடுகின்றன...

                          ஒரு நாளினைச் சான்று காட்டலாம்...

                          இன்றைக்கு
                          கோயிலுக்குள் வேண்டுதலைப்போல பதினெட்டு
                          விளக்குகளை அந்தப் பெண் ஏற்றத் தொடங்கினாள்..
                          சுற்றுப்பிரகாரத்தின் ஒருபக்கம் மட்டும் திறந்திருந்த
                          மேற்கூரையின் வழியாக குதித்தோடும் காற்று
                          அந்த விளக்குகளை ஏற்ற அனுமதிக்கவில்லை..
                          தடுமாறுகிறாளே என்று அருகில் போனால்
                          வேண்டாம் போங்க.. இது வேண்டுதல்.. என்றாள்..
                          ஒரு நிமிடமாவது அந்த பதினெட்டு விளக்குகளும்
                         அணையாதிருந்து அவள் அமைதியாக வேண்டுகோளை
                          நிறைவேற்றியிருப்பாளா?

                          நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த மாடு
                          முட்டிவிடுமோ என்று சாக்கடையோரம் ஒதுங்கிய
                          பெரியவரின் கைத்தடி சாக்கடையில் ஊன்றிவிட
                          விழுந்துவிட்டார் சற்று அதிகமான முனகலுடன்...
                          ஓடிப்போய் துர்க்கிவிட்டாலும்.. தடுமாறிய வலி
                          அவர் வாயின் காதில் கேட்காத முனகல் சொற்களாய்
                          விழுந்துகொண்டேயிருந்தது...

                          இன்றைக்கு ஆறுமுறை 108 ன் ஒலிகள்
                          மனது அதிர்ந்துபோனது...ஒவ்வொரு முறையும் 108
                          கடக்கும்போதும் இறைவா அந்த உயிரைக் காப்பாற்று என்று..
                          காப்பாற்றுகிறவன்தான்.. 108 ஐயும் இயக்குகிறான் என்று
                          தெரிந்திருந்தும்...

                          முதல்நாள் தலையில் சூடியிருந்து சடையிலிருந்து
                           உதிர்த்து சிதறிக்கிடக்கும் மல்லிகைப் பூக்களைப்போல
                           வானத்தில் நட்சத்திரங்கள்.. இரவு வானம் இளமையானது...

                           டீக்கடையில் நான்குமுறை.... பேப்பர் கடையில் 5 நிமிடங்கள்
                           பெட்ரோல் பங்கில் 20 நிமிடங்கள்...மகளைக் கொடுமைப்படுத்தும்
                           மருமகன் குறித்து பூக்கடை மாதவன் புகாருக்குக் காதும் மனதும்
                           கொடுத்தது 42 நிமிடங்கள்...மளிகைக்கடை குமாரிடம் கொஞ்சம்..
                           கூரியர் செராக்ஸ் கடையில் ரசீது எழுதும் நேரங்கள்...

                           தொ(ல்) லைப்பேசியில்... அப்புறம் கைப்பேசியில்...
                         
                            பரபரப்பில்லாமல் சில நேரங்கள் பரபரப்பில் பல நேரங்கள்...

                           எல்லாம் முடித்து உடம்பு அசந்து கசகசத்து.. ஒரு குளியலும்
                           தளர்வான் இரவுணவும் முடித்தபின் என்னைக் கிடத்து என்று
                            கெஞ்சும் உடலை சமாதானப்படுத்தி...

                           உறக்கம் கண்களை அழுத்துவதற்கு முன்னர் ஒரு கேள்வி
                           பாம்பு படமெடுத்து நிற்கிறது... என்ன நடந்தது இன்றைய நாளில்..

                           அமைதியாக இந்தக் கவிதை முட்டையை உடைத்துவிட்டு
                           கண்களை மூடிக்கொள்கிறேன் இன்றைக்குக் கெட்ட கனவு
                           வருமா.. நல்ல கனவு வருமா... யார் வருவார் காப்பாற்ற?
                           எப்படித் தப்பிப்போம்...

                            வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கிடையில் எப்போதும்
                            போல தவமிருக்கும் ஒளிர்ந்த நிலவு...

                         
                         

                         

Monday, June 18, 2012

கதம்பக் கூடை


                    (1)

                     நாம் எல்லோரும் அறிந்த செய்திதான். இருப்பினும் இதனை இன்னொருமுறை எண்ணிப்பார்ப்பது நலம். கல்கியில் வெளிவந்த கட்டுரையில் சில தகவல்கள் மடடும் (24.06.2012 தேதியிட்ட கல்கி)

         முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான திருமிகு என். சந்தோஷ் எஹக்டே, இவர் சென்னை ஒரு நிகழ்விற்காக வந்த கட்டுரை அது,

               அ,. தாங்கள் யாருக்காகத் தேர்ந்தெடுககப்பட்டிருக்கிறோம் எதற்காகத்
                      தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத நிலையில்
                       நாடாளு மன்ற உறுப்பினர்கள் இருப்பது சீரழிவுக்கு சரியான
                      எடுததுக்காட்டு.

               ஆ, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வெறும் வாக்காளர் என்ற
                      தகுதியை மட்டும் நிர்ணயிக்கக்கூடாது, அவர்கள் அழுத்தமாகப்
                      பணிபுரிய அனுபவம் அறிவும் தேவைய்ர்க இருக்கிறது, எனவே
                      தேர்தலில்போட்டியிட கூடுதல் தகுதியாக எதையாவது வைக்க
                      வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் கூறினார். அவரது
                      நோக்கம் குறைந்த பட்சக் கல்வித் தகுதி நிர்ணயிக்கவேண்டும்
                      என்று அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

                 இ. அதேபோல அமைச்சர்களாக வருபவர்கள் நேர்மை, நாணயம்,
                       மட்டுமல்லாது ஒழுக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்
                       என்றும் கருத்து சொல்லப்பட்டது. ஆனால் அந்தக் கருத்து ஏற்கப்
                       படவில்லை.

                 ஈ, ஒரு நாள் நாடாளுமன்றம் நடக்கும் செலவு ஒருகோடியே 23
                      இலட்சம்,  ஒருநிமிடத்துக்குக் கிட்டத்தட்ட 23000 ஆயிரம்
                       செலவாகிறது,

                உ, இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 150 பேர் குற்றப்
                       பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது மொத்தமாக 412 வழக்குகள்
                       உள்ளன.

               ஊ, ஒரு கூலித்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி முதல்வர்
                       ஆன மதுகோடா 4000 கோடி ரூபாய் வர்த்தகத்தில் புரட்டினார்.......

                                                       நன்றி கல்கி .


                       அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க வெயிலில் எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் வரிசையில நிற்கிறார்கள். கொடுக்கிற வெள்ளை மாத்திரைகளும் ஊற்றுகிற சிரப்களும் எல்லா நோயையைம் தீர்க்கவல்லது என்கிற நம்பிக்கையில் காலகாலமாய்......ஏதேனும் வறுமையின் பிடியில் ஏழைகள் சண்டையிட்டால் அவர்களை ஏதோ தேசக் குற்றம் செய்ததுபோல காவல்நிலையத்தில் வைத்து பெரிய ஒன்றைக் கண்டுபிடித்ததுபோல விசாரிப்பது...நன்றாக மதிப்பெண்கள் எடுதத மாணவர்கள் படிப்பைத் தொடரமுடியாமல் படுகிற அவஸ்தைகள்...நாற்பது வயதாகியும் திருமணம் ஆகாமல் தறகொலை செய்து சாகிற கணக்கிலும் செய்தியிலும் வராத பெண்கள்....கடைசிவரை குடிசைவாசிகளாக இருந்து உழல்பவர்கள்...

                        சரி விடுங்கள்.. சாகப்பிறந்த இவர்களைப் பற்றி என்னப் பேச?

                        இவர்கள் கோடியில் நின்றால் என்ன நாம் கோடி சம்பாதிப்போம்.
என்றவர்கள் எந்நாளும் நோய் நொடியின்றி வளர்கள் நுர்றாண்டு காலம் வாழ்க...

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

          விஜய் டிவியில் திருமிகு கோபிநாத் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். நீயா நானா?,,, இப்போதுதான் அதற்கு எனக்கு அர்த்தம் புரிந்தது அதாவது காம்ப்யர் புரிகிற நானா... விவாதத்தில் பங்கெடுக்கிற நீயா?
பார்த்துவிடுவோம்...

                எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. சில ஆரோக்கியமானவை. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுபவர்களிலும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் ஏதோ வந்ததற்கு கருத்துரைப்பார்கள்.

                சமீபமாக ஆண்கள் பெண்கள் குறித்த பல தலைப்புக்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. காண சகிக்கவில்லை.

                நேற்று நடந்த நிகழ்வில் கோபிநாத் ஒரு பெண்ணிடம் கேட்கிறார் எதிரில் உள்ள ஆண்களில் பிடித்தவர் யார்? ஏன்,,, உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? அலுவலகத்தில் யாரைப் பிடிக்காது? எதனால் பிடிக்காது...

              ஒரு அலுவலகத்தில் வாழ்க்கையின் நிலைப்பாட்டிற்காக வேலைக்குப் போய் தனக்குப் பிடிக்காத நபர் இவர் என்று அலுவலகத்தில் தன்னோடு பணிபுரிபவரை சொன்னால் மறுநாள் எப்படி அந்தப் பெண் அலுவலகத்தில் அதனை எதிர்கொள்வாள். அல்லது அந்த நிறுவனத்தில் பணிபுரியும்வரை எப்படி நடந்துகொள்ளமுடியும்.. காம்ப்யர் என்றால் எதைவேண்டுமானாலும் கேட்கலாம் என்று திரு கோபிநாத் நினைத்துக்கொண்டிருக்கிறார் ...
பலபேர் ஏன் உலகெங்கும் பார்க்கிற ஒரு நிகழ்வில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனோபாவம்..தான் நினைத்த முடிவிற்கு அந்த நிகழ்வின் பொருண்மையைக் கொண்டுவருவது...சிலசமயம் கேள்விகள் கூசுகின்றன அவர் கேட்பதைப் பார்க்கும்போது... நிகழ்வுக்கு வந்தவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ,,,இதுபோன்ற பல நிகழ்வுகள் நீயா நானா என்பதில்.. யார் அதிகம் மொக்கை போடுவார்கள்... யார் கடலை போடுவார்கள்... இதுபோன்ற கேள்விகளில் இந்த சமுகம் பெறப்போகும் பயன் என்ன? தமிழ்ப் பண்பாட்டின் மீறலாக இவை ஏற்படுத்தும் கரும்புள்ளிகள்...

           சில நிகழ்வுகளின் பொருண்மைகளுக்கு அவர் முடிவு கூறி முடிக்கையில் வார்த்தை ஜாலம் தெரிகிறதே தவிர...அதற்கான தீர்வு என்பது வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. நன்றாகக் கூர்ந்துபார்த்தால் அவர் கருத்துரைப்பதில் திரும்பத்திரும்ப வரும் சொற்களும்..முரண்களும் தெரியவரும்..

                உலகமெங்கும் காட்சிக்குள்ளாகிற தொலைக்காட்சியில் வெளிப்படுவது பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                     பிற்ந்தது பின்தங்கிய வகுப்பில். செய்த குற்றம் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது. அதைவிட மன்னிக்கமுடியாதது படித்த பையனின் தகப்பனாரின் வறுமைக்கோட்டைத் தாண்டிய சம்பளம்...

                  சரி... எந்தப் பயனும் இல்லை. எதுவும் கேட்கப்போவதில்லை. கேட்கவும் முடியாது.  நான் கிரிமிலேயர்.. என்று தந்தால் போதும். அதாவது இந்தப் பையன் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். இவனுடைய தகப்பனார் அரசு வேலையில் இருக்கிறார். அவரின் சம்பளம் நிர்ணயித்த இலக்கைவிட அதிகம். எனவே அதிக சம்பளம் உடைய இவர் பின்தங்கிய வகுப்பில் பிறந்தாலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களைச் சாராதவர் எனவே இவர் மறற் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவர் எனச் சான்றளிக்கப்படுகிறது.

                இதில என்ன லாபம்?

                சரி இப்படி சான்றிதழ் வழங்குவதில் என்ன இடையூறு.. ஒன்று மிலலை. என்ன கஷ்டம் ஒன்றுமில்லை.

                   பிசி என்பது ஓபிசி எனத் தரவேண்டும். பிறந்த மாநிலத்தில் பயன்படுததினால் பிசி அயல் மாநிலங்களுக்கு செல்வதற்கு ஓபிசி.

                   இதனை வாங்குவதற்குள் படுகிற பாடு...ஏற்படுகிற மன உளைச்சல்...இதற்காக அச்சிட்டு வழங்குகிற படிவத்தில் முற்றிலும் சம்பந்தமில்லாத விவரங்கள்... அதிலும் கையொப்பமிடவேண்டும். மேலும் ஓபிசி என்றால் வேலைக்குச் செல்ல என்று மட்டுமே அச்சிடப்பட்ட படிவம். வேலைக்குச் செல்வதற்கு/ மேல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு என்று அச்சிட்டால் என்ன?

                   சமீபத்தில் ஓபிசி என் மகனுக்கு வாங்க பட்ட பாட்டை ஒரு சிறுகதையாகவே எழுதலாம்.

                      நன்றாக படித்தவிவரம் தெரிந்த நமககே இப்படியென்றால்... மற்ற படிக்காத பெற்றோர்களையும் அப்பாவி மக்களையும் எண்ணிப்பாருங்கள்.

                     இதனைத் தனியாக எளிமைப்படுத்தினால் என்ன?

                     விரும்பினால் நானே எளிமைப்படுத்தித் தருவேன்.

                     பின்னால் வருபவர்கள் சிரமப்படாமல் இருக்கலாம் அல்லவா?
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000