Monday, July 20, 2020


குறுங்கதை 12
                  வாழ்தல்தானே வாழ்க்கை
                                                   ஹரணி

            அரசுப் பணியிலிருந்து பரசுராமன் ஓய்வுபெற்று இரண்டாண்டு முடிந்து மூன்றாமாண்டு தொடங்கும் தருணம். பணி ஓய்வு பெற்ற காலத்திலிருந்து அவர் இன்றுவரை வழக்கம்போலவே பணி செய்துகொண்டேயிருக்கிறார். யார் போனில் பேசினாலும் வேலையாயிருக்கேன்.. நான் அப்புறம் கூப்புடறேன்னு சொல்றார்..

           எல்லோருக்கும் ஆச்சர்யம் ஒரு மனுஷன் ரிட்டயரிடு ஆனப் பிற்பாடு என்ன வேலை செய்வாரு? அதுவும் பொழுது முழுக்க.. ஒவ்வொரு நாள் மாலையிலும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடிவிடுவார்கள் பணி ஓய்வு பெற்றவர்கள் எல்லாம்.

          பரசுராமா உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன்.. என்றார் ராகவன்.

          என்னடா ராகவா விஷயம்? என்றார் பரசுராமன்.

          முதல்ல வா வந்து இங்க உக்காரு.. உங்கிட்ட நிறைய பேசவேண்டியிருக்கு.

           சொல்லுடா என்றபடியே ராகவன் அருகில் உட்கார்ந்தார்.

           என்னது எப்பப் பார்த்தாலும் பிசியா இருக்கேன்னே சொல்றீயே அப்படி என்னதான் வேலை செய்யறே?

           ஒருமுறை ராகவனைப் பார்த்தார். ராகவன் பரசுராமனைப் பார்த்த பார்வையில் நிறைய கேள்விகள் கிடந்தன.

           எனக்குப் பொழுதே போகமாட்டேங்குது பரசுராமா.. எம்புள்ள ஒரு வேலயும் செய்யவேண்டாம்.. பேசாம இருங்க.. வீட்டுல டிவி பார்த்துக்கங்க.. பேரக்குழந்தைகளோட விளையாடுங்க.. நீங்களும் அம்மாவும் ஜாலியா எங்காச்சும் போயிட்டு வாங்க.. உங்களுக்கு வீடு மாடி முழுக்க.. அதனால சாப்பிடறது டிவி பார்க்கறது தூங்கறது இதத் தவிர வேறு என்டர்டெயின்மெண்டே இல்லடா… போரடிக்குது.. இப்படியே இருந்தா சீக்கிரம் செத்துப்போயிடுவேன்னு பயமா வேற இருக்குடா…

          அதற்குள் நாலைந்து பேர் வந்து இந்த உரையாடலில் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கும் விடை தெரியவேண்டும் என்று காத்திருந்தார்கள்.

        பரசுராமன் சொன்னார்.

        என் வாழ்க்கையை டைம் மிஷினில மாத்துன மாதிரி மாத்திட்டேன். சொல்றேன் கேளுங்க.. காலையில 5 மணிக்கு எழுந்து அரைமணிநேரம் பயிற்சி அரைமணிநேரம் வாக்கிங்.. 6 மணிக்கு காப்பி. அப்புறம் நீயுஸ் பேப்பர்.. அதுக்கப்புறம் என் பேரக்குழந்தைகளோட டிரஸ் அயன் பண்றது.. என் பையனோட பேண்ட் சர்ட் அயன் பண்ணறது.. அவங்களோட செருப்புகளைத் துடைச்சி பாலிசு போடறது.. என்று சற்றே நிறுத்தினார்.

            ஏண்டா பேரப்புள்ளங்களுக்குச் செய்யறது ஒரு மகிழ்ச்சி. கடமை. மாடுமாதிரி வளந்த புள்ளயோட செருப்பு துடைக்கிறது ரொம்ப ஓவர்டா.. உனக்குப் பென்ஷன் வருதுல்ல.. அப்புறம் நீ என்ன அடிமையா? என்று கேட்டார் மாதவன்.

            மாதவா அப்படியில்ல. எனக்குப் பென்ஷன் வருது.. அடிமை இல்ல.. நாம சின்ன வயசுல நம்பளோட புள்ளங்க ஸ்கூலுக்குப் போறப்ப செஞ்ச வேலதானடா.. இப்பவும் அவங்க நம்ப புள்ளங்கதானே.. நானு ரிட்டயர்டு ஆயிட்டேன்.. எனக்கு நேரம் நிறைய  கெடக்கு.. எம் புள்ள அப்படியில்ல ஒரு ஆபிசுல வேலை .. அதுக்கான நேரம் இருக்கு… அந்த நேரத்துல அவன் ஆபிசுக்குப் போவணும்.. அதுவும் டென்ஷன் இல்லாமப் போவணும்.. அப்பத்தான் வேலையில கவனம் இருக்கும்.. அவனுக்கான நேரத்தை டென்ஷனாக்கறது இந்த செருப்புக்குப் பாலிசு போடற வேலை.. பேண்ட் சர்ட்ட அயன் பண்ணற வேலை.. எந்தப் பேண்ட்க்கு எந்த சர்ட் மேட்சுன்னு பார்க்கற வேல.. என்ன டிபன்னு யோசிக்கற வேலை.. இதெல்லாந்தான்.. அந்தப் பாரத்துல சிலத நான் குறைச்சு வைக்கறேன். அவன் பிரியாயிடுவான்.. அத்தோட எம் மருமககிட்ட முதல் நாள் இரவே கேட்டுக்குவேன்.. மறுநாள் எம்புள்ளக்கி என்ன பேண்ட் சர்ட்டுன்னு .. அவள சமையல் வேலை மட்டும் பார்த்துக்கன்னு சொல்லிடுவேன்.. ஒரு பிரச்சினையும் இல்ல..
           அப்புறம் என்றனர் ஆவலுடன்.

           பரசுராமன் பெருமையோடு சொல்ல ஆரம்பித்தார்.

           ஒரு நாளைக்கு ஒரு போர்ஷன் எடுத்துக்கிட்டு ஒட்டடை அடிப்பேன். தெரு இரும்புக் கேட்டுல் இருக்கிற தூசு தும்புகளை எல்லாம் சின்னதா பிரஸ் வச்சி மெதுவா செஞ்சா.. நேரம் ஓடிடும்…

            சொல்லு சொல்லு பரசுராமா.. செமயா இருக்கு என்றார் கோபிநாத்.

             அப்புறம் டிபன் சாப்பிட்டுக் கடைத்தெருவுக்குப் போய் அன்னிக்கு சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்கிட்டு வருவேன். கொடுத்திட்டு பத்து மணிக்கு சிவன் கோயிலுக்குப் போவேன். கையில நாலைஞ்சு நீயூஸ் பேப்பர் எடுத்திட்டுப்போவேன்.

           அதான் காலையிலேயே படிச்சிடறியே..

           அது இல்ல முதநாள் படிச்ச பேப்பர்கள எல்லாம் எடுத்திட்டுப்போய் கோயில் பிரகாரத்துல உட்கார்ந்து சின்ன சின்ன துண்டுகளாக் கிழிச்சி வரப்போறவங்ககிட்ட கொடுப்பேன் திருநீறு குங்குமம் மடிச்சிக்க.. அங்கங்கே தூண், கட்டைகள், கொட்டி வீணாக்காம இருக்க..

           திரும்பி வந்து கொஞ்சம் டீவி பார்ப்பேன். அதுல முக்கியமான செய்திகளைக் குறிப்பு எடுத்து வச்சிக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு எம் பேரப்புள்ளங்களுக்குப் பொது அறிவுக் கதையாச் சொல்லுவேன். அப்புறம் சின்னதா ஒரு தூக்கம். நாலு மணிக்கு எழுந்து மருமக இல்லாட்டி மனைவி கொடுக்கிற காப்பிய குடிச்சிட்டு அப்படியே உட்கார்ந்து நானு மருமகள் மனைவி கொஞ்சம் அரட்டை அடிப்போம். மகன் பிள்ளைகள் வந்துட்டா அவங்களோட கொஞ்சம்..

            சற்று நிறுத்தினார்.

            டேய் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு ஆனா இத பாலோ பண்ணமுடியுமான்னு தெரியல…

            செய்யலாம்.. சொல்றேன் கேளுங்க.. இடையிடையே ஈபி பில் கட்டறது.. பேங்குக்குப் போய் பாஸ் புத்தகங்களை என்ட்ரி போடறது.. மாசத்துக்கொருமுறை உடம்பபோய் நார்மல் செக்கப் பண்ணிக்கறது.. அப்புறம் தினமும் மாலையில எப்படியாச்சும் ஒருமணிநேரம் உங்களோட இங்க வந்துடறது.. இப்படி..

            அடேங்கப்பா.. ரொம்ப சூப்பரான கதை மாதிரி இருக்கு.

            கதை இல்லடா.. இன்னும் நிறைய இருக்கு நாலு வண்டிங்க இருக்கு.. கார்இருக்கு.. அதுங்கள மாசத்துக்கு ஒருமுறை வாட்டர் சர்வீஸ் பண்ணிக்கறது.. ரெண்டு நாளைக்கு ஒரு முறை துடைக்கறது.. இரவுல அதுங்களுக்குப் புராப்பரா கவர் போட்டு மூடி வைக்கறது.. என் மனைவி கொஞ்சம் செடி வளர்க்குறா.. அதுங்களுக்குத் தண்ணீ ஊத்தறது.. செடியிலேர்ந்து பூ பறிச்சு கொடுக்கறது..

             அப்பா சாமி போதும்டா என்று எல்லோரும் மூச்சு வாங்கினார்கள். அதை சொன்னார்கள் மூச்சு வாங்குதடா..பரசுராமா..

             டேய்.. நாம பார்த்து ரிட்டயர்டு ஆனது ஒரு வேலை. மூச்சு இருக்கறவரைக்கும் எந்தச் சிக்கலும் இல்லாம இருக்கணும். இது நாமளா விரும்பி செஞ்சுக்கணும்.. இது நம்மோட ரிட்டயர்டுமெண்ட் இல்லாத வேலைன்னு நினைச்சுக்கணும்.. இப்படி செஞ்சிக்கிட்டே இருந்து படுத்தோமா சட்டுன்னு போயிடணும்.. தூக்கத்துலேயே.. வாழ்த்தானடா வந்தோம்.. நாம் வாழறதுதாண்டா வாழ்க்கை. எப்பவும் நாம உயிர்ப்போட இருந்தாதான் நாம வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமாகும்.
                      00000
            

Sunday, July 19, 2020


குறுங்கதை… 11
                        கதை டீச்சர்
                                                 ஹரணி 

            வங்கி ஏடிஎம் இருக்கிற தெரு அது. தெருவின் கடைசியில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு முன்னதாக சிறிய ஆஞ்சநேயர் கோயில் அதற்கு முன்னதாக அந்த வங்கி ஏடிஎம். பணம் எடுப்பதற்கு விநாயகன் அந்த தெரு வழியாகத்தான் செல்வது வழக்கம்.

             தெருவின் முனையில் திரௌபதையம்மன் கோயில். அந்தக் கோயில் படிகளைக் காப்பதுபோல இருபுறமும் சின்ன முக்கால் அடி சுவர். திண்ணைபோல அமர்ந்துகொள்ளலாம்.

             கட்டிட விரிசலில் முளைத்துத் துருத்திக்கொண்டிருக்கும் செடியைப்போல அந்த வயதானவள் கோயிலின் ஒட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டேயிருப்பாள். விநாயகன் போகும்போது மட்டும் அவனைப் பார்த்து சிரித்து ஏதோ சொல்ல நினைப்பாள். ஆனால் அவன் அதைக் கவனிக்காமல் கடந்துபோய்விடுவான்.

           விநாயகனின் மகளைச் சிறுவயதில் பள்ளிக்கு அழைத்துப்போன ஆயா அவள். வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளித்தான் அந்த ஆங்கிலத் தொடக்கப்பள்ளி இருந்தது. அங்குதான் சேர்த்திருந்தான். மிகவும் சரியாக இருப்பாள். ஆனால் அப்போதிருந்தே எதையாவது பேசிக்கொண்டேதான் அழைத்துப்போவாள். தன்னுடைய குடும்பம் பற்றி, நியாய அநியாயங்கள் பற்றி காற்றில் சொல்லிக்கொண்டுபோவாள் ஆனால் அது அந்தப் பிள்ளைகளிடம் சொல்வதுபோல இருக்கும்.

           இப்போது விநாயகனின் மகள் திருமணமாகியே போய்விட்டாள். இந்தப் பாட்டி இருக்கிறாள். எப்படியும் எண்பதைக் கடந்திருப்பாள்.

              அன்று போகும்போது மகளின் பெயரைச் சொல்லி தென்றல் அப்பா நில்லுங்க.. என்று கூப்பிட்டாள்.

              உடனே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு விநாயகன் அருகில் போய் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து அவளிடம் நீட்டினான். இதற்குத்தான் கூப்பிட்டிருப்பாள். அடிக்கடிக் கொடுத்திருக்கான்.

             வேண்டாம்பா பணம் என்றாள்

             ஏன் பாட்டி எதாச்சும் வாங்கிச் சாப்பிடேன் என்று மறுபடியும் நீட்டினான். மறுபடியும் அவள் மறுத்தாள்.

             எதுவுமே சாப்பிட முடியலப்பா.. அவ்வளவுதான் எல்லாத்தையும் தள்ளிடிச்சி.. மிச்சம் நான்தான்.. என்னத்தான் இன்னும் ஆண்டவன் தள்ளாம தள்ளாட வைக்கிறான்..

            சொல்லுங்க பாட்டி என்ன வேணும்? எதுக்குக் கூப்பிட்டிங்க..

            தென்றல் நல்லாயிருக்கா.. கல்யாணம் ஆயிடிச்சி.. மாப்பிள்ளை தம்பி நல்லா வச்சிருக்காரா.. நம்ப புள்ள ரொம்ப சாதுவாச்சே என்று பேசிக்கொண்டேபோனாள். விநாயகனுக்கு சற்று எரிச்சல் ஊட்டியது. நேரத்தை வீணாக்குகிறாளே கிழவி என்று.

            எல்லாரும் நல்லா இருக்கோம்.. என்ன செய்தின்னு சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு வேலையிருக்கு பாட்டி என்றபடி அவள் மறுத்துவிட்ட பத்துரூபாயை பையில் வைத்தபடி கேட்டான்.

             ஒண்ணுமில்லப்பா.. என்னோட சாவுக்குத் தென்றல அழச்சிட்டு வாப்பா என்றாள் திடீரென்று.

             என்னது உன்னோட சாவுக்கா.. என்னாச்சு கிழவிக்கு.. கிறுக்குப் புடிச்சிருச்சா.. ஏம்பாட்டி என்னாச்சு இப்படி பேசறே அதுவும் கோயில்ல உக்காந்துக்கிட்டு..

             உள்ளே திரௌபதையைக் காட்டி.. அவதான் வழி காட்ட மாட்டேங்குறாளே… எம்பொண்ணு.. போனமாசம் செத்துப்போயிட்டா.. அவளோட புள்ளங்க.. நாலு பேத்தி இருக்குங்க.. அதது அதது குடும்பம் புருஷன் புள்ளன்னு போயிடிச்சி.. மருமவப்புள்ள யாரேயோ சேத்துக்கிட்டான் இந்த வயசுல… எல்லாம் இருந்தும் எப்படியும் அநாதைப் பொணந்தான்.. நான்.. இப்ப வேற என்னமோ பரவுதுன்னு கூட்டம் வரக்கூடாதுன்னு சொல்றாங்க..

            அதுக்கென்ன பாட்டி.. இருக்கறவரைக்கும் கவலையில்ல.. எல்லாருக்கும் சாவு வரத்தான்போவுது.. அது வர்றப்ப வரட்டும்.. என்றான் விநாயகன்.

            இல்லப்பா.. சாவு சொல்லிக்கிட்டு வராது.. ஆனா வந்துடும்.. தென்றல் மாதிரி நான் பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் வுட்ட புள்ளங்களோட அப்பாங்கக்கிட்ட சொல்லியிருக்கேன்.. அதுங்களும் எனக்குப் பேத்தி மாதிரிதான்.. நான் செத்தா வந்து எனக்கு நெய்ப்பந்தம் புடிக்கணும்.. அதுக்குத்தான் முன்கூட்டியே சொல்லி வச்சேன்.. செத்துப்போயிட்டா சொல்லமுடியாதுல்ல என்று சொல்லி சிரித்தாள் பாட்டி.

          இதெல்லாம் நடக்கிற காரியமா என்று  மனதுக்குள் நினைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சரி பாட்டி என்று அவள் ஆறுதலுக்காகச் சொல்லிவிட்டுத் திரும்பினான்.

           அன்றிரவு மகள் பேசினாள் போனில். செய்திகளுக்கிடையில் விநாயகன் பாட்டி குறித்துச் சொன்னான்.

             உடனே மகள் உற்சாகமாய்.. அப்பா.. அந்தக் கோயில் பாட்டிதானே நல்லாருக்கா.. இத்தனைவயசுக்குக் கண் அதுக்கு நல்லாத் தெரியும்பா.. அந்தப் பக்கம் போனா என்னைக் கூப்பிட்டுப் பேசும்பா.. பள்ளிக்கூடத்துக்குப்போவுமபோது அத்தனை கதை சொல்லும்பா.. செத்துக்கித்துப் போயிட்டா ஒரு வார்த்தை எனக்குச் சொல்லிடுப்பா அவசியம் வரணும்பா.. அது எனக்குக் கதை டீச்சர்பா என்றாள் மகள்.


                  00000
           

          
            

Saturday, July 18, 2020


குறுங்கதை  10
                           நினைப்பதெல்லாம்…
                                                               ஹரணி

           விமானநிலையத்தில் வெறுத்துப்போய் உட்கார்ந்திருந்தான் செழியன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. கொரோனா பரிசோதனைகள் செய்ததில் உறுதியாகிவிட்டது.

                ஐந்தாண்டுகள் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு வருவதற்குப் படாதபாடுபட்டு அனுமதி தந்தார்கள். சென்னை விமானநிலையத்தில் பரிசோதித்ததில் பாசிடிவ் என்றாகிவிட்டது. எங்கே சிகிச்சைக்கு வைப்பது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. சென்னையிலா அல்லது சொந்த ஊரின் உள்ள கல்லூரி, அல்லது வேறு இடத்திலா என்று.

              சொந்த ஊருக்குப் போனால் போதும் என்றநிலையில் நொந்துபோய் உட்கார்ந்திருந்தான்.

               ஒருவழியாகச் சொந்தஊருக்கும் அந்த ஊரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வைப்பது என்றும் முடிவாயிற்று.

               மறுபடியும் மிகவும் பாதுகாக்கப்பட்ட வேனில் இவனோடு இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

                மனைவியிடம் பிள்ளைகளிடம் பேசினான். மனைவி ஒரளவு திருப்தியானாள்.

                எனக்குப் பயமாயிருக்குப்பா ? என்றான் மனைவியிடம்.

                ஏங்க பயப்படறீங்க.. இங்கே பக்குவமாச் சிகிச்சை அளிக்கிறாங்க.. பயப்படவேண்டாம்.. நிறைய பேர் குணமாகி வீட்டுக்கு வர்றாங்க..

                 இல்லப்பா.. உங்களப் பார்கக முடியாமப் போவுதுன்னு வருத்தமா இருக்கு.

              அட ஏங்க.. இதுக்குப் போய் வருததப்படறீங்க.. அஞ்சு வருஷமாப் பாக்காமத்தானே இருக்கோம்.. இன்னும் கொஞ்சநாள்.. சமாளிச்சுக்கிறோம்.. நம்ப பாப்பா பிளஸ்டுவுலே நல்ல மார்க் எடுத்திருக்கா.. நீட்டுலயும் நல்ல மார்க் எடுப்பேன்னு சொல்லியிருக்கா..நிச்சயம் டாக்டர் சீட்டு கிடைக்கும்.. அத நினைச்சுக்கிடே இருங்க.. தினமும் போன்ல பேசுங்க.. சரியாயிடும்.

             சொந்த ஊருலக் குவாரன்டைன் பண்ணியாயிற்று.

             தினமும் போனில் பேசினான். இங்கே டாக்டர்களும் நர்சுகளும் மற்ற ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்டு பிரமித்துப்போனான்.

            ஒரு நர்சு சொன்னார்… ஏங்க.. எங்களுக்கும் குடும்பம் இருக்குங்க.. நான் என் வீட்டுக்குப் போயி ஒரு மாசம் ஆவப்போவுது.. சிப்ட் முறையில வேலை பார்க்கிறோம்.. என்னோட வேலை பாத்தவங்க வீட்டுக்குப் போயிட்டு வர்ற நாள் இது.. திடீர்னு அவங்களோட கணவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு.. அந்தக் காரியங்களப் பாத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டாங்க..அதான் நான் வீட்டுக்குப் போறதில லேட்டு என்றார்.

            அவர்களின் சேவையைக் கண்டு உண்மையில் நம்பிக்கை கொண்டான். ஆறுதலும் அடைந்தான். அதிக மதிப்பெண் எடுத்த மகளிடம் பேசினான்.

             ஒருவாரம் போனது. திடீரென்று செழியனின் அம்மா இறந்துபோனாள்.

             சிறிய வயதிலேயே அப்பாவை இழந்து நான்கு பெண்கள் செழியன் கடைசி. ஐந்துபேரைக் கரையேற்ற அம்மா பட்ட பாடுகள் அவனுள் பெரிய போராட்டத்தை நடத்தின.

             கண்டிப்பா நீங்க போகமுடியாது.. அனுமதி கிடையாது. நீங்கப் போனால் பலபேரு இங்க வரநேரும். அவங்க குடும்பம் முழுக்கப் பாதிக்கும்.. கண்டிப்பாக அனுமதி மறுத்துவிட்டார்கள்.

                செழியனின் மனைவி  பேசினாள். என்னங்க பண்ணறது? நடக்கறது நடக்கட்டும். நான் போய் அத்தையோடக் காரியங்களப் பார்க்கறேன்..

                சரி.. யாரும் எந்த செலவு செய்யவேண்டாம். எல்லாம் பொம்பளப் புள்ளங்க.. அதனால நீயே எல்லாச் செலவையும் செஞ்சுடு.. என்றான். அம்மாவுக்கு நல்ல துளசிமாலை போடு.. அதுக்குத் துளசிப் புடிக்கும்..

             காரியங்களைச் செழியன் மனைவியே நின்று நடத்தினாள். எல்லாச் செலவையும் அவள் செய்கிறாள் என்றவுடனேயே வாயைப் பொத்திக்கொண்டார்கள்.

                  கொள்ளி யார் வைப்பது என்கிற பிரச்சினை வந்தது. ஒரே ஆம்பளப்புள்ள அவனும் மருத்துவமனையில் இருக்கிறான்.

           சொந்தத்தில் மகன் முறையுள்ளவர்கள் யாரும் வரவில்லை. செழியனின் அம்மா இருந்தது பூர்வீக வீடான ஓட்டு வீட்டில். அதுவும் கொஞ்சமாய் பாழடைந்துபோய்க்கொண்டிருக்கிறது-. இல்லாதவளுக்கு யார் கொள்ளியிடுவார்? கொள்ளியிட்டால் ஏதேனும் கிடைக்கவேண்டுமல்லவா?

                கடைசியில் செழியனின் மனைவி சொன்னாள்.. யாரும் வைக்கவேண்டாம். அத்தைக்கு எங்க வீட்டுக்காரர ரொம்பப் புடிக்கும். அவரு கொள்ளி வைக்கமுடியாத சூழல். அதனால அவர் சார்பில நான் வைக்கிறேன். யாரும் எதுவும் பேசவேண்டாம் என்று கொள்ளிச் சட்டியை எடுத்துக்கொண்டு முன்னே போனாள் பின்னே ஊர்வலம் கிளம்பியது.            

          
            

Friday, July 17, 2020



                         அன்புள்ள

                                     வணக்கம். என்னமோ நடக்குது குறுந்தொடரைப் பொறுமைகாத்து வாசித்து உடனுக்குடன் கருத்துரை வழங்கிய அன்புள்ளங்களைப் பணிகிறேன் நெஞ்சம் குவித்து நன்றியுடன்.

                            மதிப்புமிகு திண்டுக்கல் தனபாலன்
                            மதிப்புமிகு வெங்கட் நாகராஜ்
                            மதிப்புமிகு ஜிஎம்பி ஐயா அவர்கள்
                            மதிப்புமிகு இராய செல்லப்பா ஐயா
                            மதிப்புமிகு கரந்தை ஜெயக்குமார்

                        மீண்டும் இன்னுமொரு மாறுபட்ட பதிவில் சந்திப்போம்.

                                             தஞ்சாவூர் ஹரணி  17.07.2020

Thursday, July 16, 2020


குறுங்கதை 9
                        மொய்
                                                       ஹரணி

         வேதமூர்த்திக்கு மிக வருத்தம். பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்துக் கல்யாண நாளையும் குறிச்சி மண்டபம், சமையல், மேளம், எல்லாம் அட்வான்ஸ் தந்து பத்திரிக்கையும் அடிச்சு வீட்டுக்கு வந்த ஒருவாரத்தில கொரோனா லாக்டவுன்.

         நகரத்தில் பெரிய இரும்புக்கடை பிசினஸ் வேதமூர்த்திக்கு. நிறைய தொழிலதிபர்கள் பழக்கம். வியாபாரிகள் சங்கத்திற்கு வேறு தலைவர். மிகப் பிரமாண்டமாக நடத்துவது சைவத்துக்கு ஒரு மண்டபம் அசைவத்துக்கு ஒரு மண்டபம் என்று பிடித்ததெல்லாம் வீணாகப் போயிற்று,

             இப்ப என்னங்க பண்ணறது?  என்று புலம்பினார் அவர் மனைவி ஈசுவரி.

            எனக்கும் அதான் புரியலே… முப்பது பேருக்குமேல கூடாது… மண்டபத்துல கல்யாணம் வைக்கக்கூடாது.. ரேடியோ வைக்கக்கூடாது.. வாண வேடிக்கைக் கூடாது.. சே.. பரதேசி கல்யாணம் மாதிரி என் வீட்டுக் கல்யாணம் நடக்கக்கூடாது..

             என்னங்க பண்ணப்போறே? என்றாள் அவரின் மனைவி ஈசுவரி.

             அவர் மனசுக்குள் வரவேண்டிய மொய் போய்விட்டதே என்று வருத்தம். உள்ளுக்குள் வைத்திருந்தார். காட்டிக்கொள்ளக்கூடாது. ஆனால் எப்படியும் வசூலித்துவிடவேண்டும். சொந்தக்காரனும் நண்பர்களும் பலே கில்லாடிகள் அப்படியே கொரோனா அழுகை அழுதிட்டு நடிச்சிட்டுப் போயிடுவானுங்க..

                யோசித்தார். சமையல் காரர்களைக் கூப்பிட்டார்.

              என்னண்ணோ சொல்லுங்க?

              தனித்தனியாக சமையல்காரர்களைப் பிரித்து சொன்னார்.

              நீங்க வழக்கம்போல 200 பேருக்கு சைவம் 100 பேருக்கு சைவம் தயார் செய்யணும். ஆனா ஒரே நாள்ல இல்ல. அசைவம் நீங்க நாலு நாளைக்குச் செய்யுங்க.. சைவம் மூணு நாளைக்குச் செய்யுங்க.. நான் ஐட்டம் சொல்லிடறேன்.. என்று அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் குழப்பமுடன் போனார்கள். ஆனால் ஒத்துக்கொண்டார்கள்.

        என்னங்க சொல்றீங்க ஏழு நாளைக்கு விருந்தா?

           ஆமாம். ஏழு நாளைக்கு ஏழு தேதில பத்திரிக்கை அடிக்கணும். ஒரு நாள் விட்டு ஒருநாள் விருந்து. ஏன்னு கேளு.. என்னோட பார்ட்னர்ஸ் மத்தவங்க எல்லாருக்கும் அவங்க வீட்டுத் தேவைல ஐயாயிரம் பத்தாயிரம் பவுனுன்னு செஞ்சு வச்சிருக்கேன். அவங்க எல்லாரூம் வரணும். அதுல லிஸ்ட் எடுத்தா 200 பேரு தேருவாங்க. அவங்க மொய் செஞ்சா போதும்.. மேக்சிமம் வந்துடும். அவங்க எல்லாரும் அசைவந்தான் சாப்பிடுவாங்க.. அதனால ஐம்பது ஐம்பது பத்திரிக்கையாப் பிரிச்சுக் கொடுத்திட்டா ஒரு நாளைக்கு ஐம்பது பேரு பிரச்சினையில்லாமப் போயிடும்.. நம்ப வீட்டு மாடியிலே டைனிங் டேபிள் சேர் வாடகைக்கு எடுத்து ஒருவாரம் கழிச்சு கொடுத்திடலாம்.. அதேபோல சைவம் 30 பேருன்னு வச்சிக்கிட்டா மூணு நாளைக்குப் போட்டுடலாம்.. அங்கயும் ஐந்நூறுக்குக் கொறையாம செஞ்சு வச்சிருக்கேன்.. மத்தவங்கள விட்டுடலாம். அவங்களையும் கூப்பிட்டமாதிரியும் இருக்கும் நம்ப கல்யாணமும் கிராண்ட்டா நடக்கும். அந்தக் காலத்துக் கல்யாணம் மாதிரி எழுநாள் கல்யாணம்னு சிறப்பாப் பேசிக்குவாங்க.. நாம்பளும் அப்படியே சொல்லிப்புடணும்.. கொரோனா வாழ்கன்னு சொல்லுடி.. என்றார்.

                   0000
              
           


குறுந்தொடர்   என்னமோ நடக்குது 
                          அத்தியாயம் 9

         அழகான வண்ண ஓவியங்களால் நிரப்பப்பெற்ற குளிரூட்டப்பட்ட அறை அது.

            அகலமான வெல்வெட் சோபா தங்கக் கலரில் மின்னியது. அறை முழுக்க வெள்ளை விளக்குகள் ஒளியை இறைத்துக் கிடந்தன, தடிமனான உடம்பைப் பொருத்துவதற்கென்றே செய்தது போன்ற சோபாவில் அமர்ந்திருந்தார் பகவன்தாஸ் சேட். தமிழ் சினிமா உலகின் பிதாமகன். பைனான்சியர். தயாரிப்பாளர். பல வெற்றிப்படங்களைத் தயாரித்து கோடிக்கணக்கில் ஈட்டி அவற்றின் எண்ணிக்கையை மறந்து இருப்பவர்.

            கழுத்தில் விரல்கள் அளவுக்கு தங்க செயின் மின்னியது. அதில் வைரத்தில் ஸ்வஸ்திக் பளபளத்தது.

             எதிரே உட்கார்ந்திருந்த சோபாவே வெட்கப்படும்படியாகக் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான் இளம் இயக்குநர் பரதன்.

             சொல்லுங்க பரதன்ஜி என்றார் சேட்.

             பகவான்ஜி… அதான் இந்த எட்டுக்காட்சிகள்தான் நாம எடுக்கப்போற படம். ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் டெவலப் பண்ணினா 16 ரீல் படம் வரும். இடையிடையே சில காமெடி டிராக்.. அப்புறம் கொஞ்சம் சண்டைக் காட்சிங்க.. டைட்டில் சாங்க் அப்புறம் நாலஞ்சு சாங்க் போட்டுடலாம்.. ஒவ்வொரு காட்சி இணைப்பும் திரிலிங்கா செஞ்சுடலாம்.

              பரதன்ஜி எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. இதை ரொம்ப மர்மமா இணைச்சு திரைக்கதை எழுதிடுங்க.. அப்புறம் இதுல சில விடுபாடுங்க இருக்கு அத எப்படி இணைக்கணும் பாருங்கஜி…

              ஐயா அந்த வளவன் துப்பறிவாளன் கேரக்டர்… வேறமாதிரி போய் அவனே ஒரு கொலைகேசுல மாட்டிக்கறமாதிரி வச்சு கிளைமாக்ஸ் முன்னால அவனக் காப்பாத்தறோம். அதக் காப்பாத்தபோறது காமெடியன்ஜி., அப்புறம் நான் இளம் இயக்குநர் கதிர்ங்கற பேர்ல வரேன். போலிஸ் ஸ்டேஷனில் கொலைக்குற்றவாளியா போற நான்.. அங்க புதுசா வர்ற ஏஎஸ்பி என்னோட கிளாஸ்மேடன்னு வச்சி.. அங்கிருந்து வேறொரு திருப்பம் வச்சிருக்கேன். அப்புறம் ராகவனுக்குத் தண்டனை, அந்தப் பணக்காரிக்குத் தண்டனை எல்லாம் இயற்கையா நடக்கறமாதிரி பிளான் இருக்கு சேட்ஜி…

             ஓகே… திருப்தி பரதன்ஜி. ரெண்டு படம் நம்பளுக்கு ஜெயிச்சுக் கொடுத்துருக்கு.. இது மூணாவது படம்.. என்னமோ நடக்குது நல்லாயிருக்கு தலைப்பு..

             ஆமாம் சேட்ஜி.. தலைப்பிலேயே டைட்டில் சாங்ககூட நான் எழுதியிருக்கேன்..

              ஓ.. வெரிகுட் பரதன்ஜி… இந்தாங்க அட்வான்ஸ் என்றபடி சிறிய சூட்கேஸ் ஒன்றைத் தூக்கு பரதன் கையில் கொடுத்தார். பரதன் வாங்கிக்கொண்டான்.

               பரதன்ஜி அந்த டைட்டில் சாங்க சொல்லுங்க  என்றார் சேட்.

              சொல்றது என்ன ஜி பாட்டாவே ட்யூன் போட்டிருக்கேன். கேளுங்க என்றபடி தன் செல்லை அமுக்கி அந்தப் பாட்டைப் போட்டான் பரதன். பாடல் ஒலிக்க ஆரம்பித்தது

.
                என்னமோ என்னமோ நடக்குது
                எங்கெங்கோ எங்கெங்கோ நடக்குது
                எதுவும் தெரியல எதுவும் புரியல
                இதயத்தில் வெடிக்குது வெடிக்குது…
                                                      (என்னமோ) 

                கண் பார்க்கத் தெரியல..தெரியல..
                கண் பார்க்கத் பார்க்கத் துடிக்குது
                பயத்துல ரத்தம் ரத்தம் கொதிக்குது
                பக்கத்தில் போனா துப்பாக்கி வெடிக்குது..

                                                      (என்னமோ)

                நல்லவன் எல்லாம் சாவறான் சாவறான்
                கெட்டவன் எல்லாம் சுகமாத் திரியறான்
                கடவுள் வேடிக்கைப் பார்ப்பானா இல்ல
                கணக்க முடிச்சி சீக்கிரம் வைப்பானா

                                                     (என்னமோ)


           பகவான் தாஸ் அப்படியே கண்களை மூடிக்கொண்டார். பரதன்ஜி அவரை ஆர்வமாய் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

                               (முடிந்தது)


               

               
                
               

Wednesday, July 15, 2020


குறுங்கதை 8
                      பிழைக்கவேண்டுமே….
                                                     ஹரணி

           கொரோனா தொற்றியிருந்தால்கூடப் பரவாயில்லை என்று நினைத்தான் வெங்கடேசன். ஆம் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன வேலைக்குப் போய். பெயிண்டர் வேலை. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளலாம் என்று அரசு அனுமதித்தும் ஒருசில கட்டிடங்கள்தான் வேலை நடக்கின்றன. ஆனால் ஒராயிரம் பேர் இருக்கிறார்கள் கொத்தனார்கள், சித்தாள்கள், உதவியாளர்கள், பெயிண்டர்கள், சென்ட்ரிங் அடிப்பவர்கள் என்று.. தினமும் காத்திருக்கவேண்டும் யாருக்கு யோகம் அடிக்கிறதோ அவர்களுக்கு அது கிடைக்கும்.

             அப்படி வெங்கடேசனுக்கு அதிர்ஷ்டம் அடித்து முடித்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன.

               இனிமேல் முடியாது. ஐந்து பேர் சாப்பிடவேண்டும். அரை வயிறாவது சாப்பிடவேண்டும். மூன்று வேளை இல்லை சாப்பிட ரேசன் அரிசி இருக்கிது. தினமும் கஞ்சியே குடிப்பது சிரமம்தான். மளிகைப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. மண்ணெண்ணெய் தீர்ந்து ஸ்டவ் வறண்டுக் கிடக்கிறது. குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் அக்கா பரவாயில்லை. தன் வீட்டில் சோறு வடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். கூடவே மோர் மிளகாயும் நிறைய வறுத்துக்கொடுத்துவிடுகிறார்கள். இஞ்சி ஊறுகாயும் தருகிறார்கள். இதுவே அதிகம்தான். கௌரவமும் காப்பாற்றப்படவேண்டும் வயிறும் நிரம்பவேண்டும். நிறைய கஷ்டந்தான். ஆனாலும் போராடத்தான் வேண்டும்.

               அடுத்த வேலை வரும் வரை வேறு வழியில்லை. யாரிடமும் கடன் வாங்கமுடியாது. எல்லோரும் தன்னைப் போன்றவர்களே.

               யோசித்தான். நாளும் ஒரு வேலை செய்யவேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி என்று.

              யோசித்தான். அவன் குடியிருக்கும் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளித்தான் ஆறு ஓடுகிறது. அதன் கரையில் ‘மீன்கடைகள் இருக்கின்றன. இன்றைக்குப் பிழைப்பு அதுதான் என்று முடிவெடுத்தான்.

               வீட்டில் மனைவி ஈசுவரியை அழைத்தான். உன் தோட்டைக் கழட்டிக்கொடு நாளை மீட்டுக்கொடுக்கிறேன் என்றான்.

               மறுபேச்சு பேசாமல் கொடுத்தாள்.

               வாங்கிக்கொண்டு போய் கனகு அடகுக்கடைக்குப் போனான். வைத்தான். ஆயிரம் ரூபாய்க்கு வைத்தான். சீட்டுக்காசு போக எண்ணூற்றுச் சொச்சம் கிடைத்தது. சொச்சத்தை தனியாக வைத்துக்கொண்டான்.

                நேரே ஆற்றங்கரை மீன்கடைக்குப் போனான் பெரிய பையுடன் சைக்கிளில்…

                எல்லாரும் தெரிந்தவர்கள்தான். ஆனாலும் அதில் நியாயமானவன் வேலாயுதம். அவனிடம் போனான்.

                வா வெங்கடேசா..

                வேலாயுதம் ஒரு வேலையும் இல்ல பத்து பதினைஞ்சு நாளா.. பொண்டாட்டி தோட அடகு வச்சிப் பணம் எடுத்திட்டு வந்திருக்கேன். எனக்குக் கொஞ்சம் மீன்கொடு.. தெருவுக்குள்ள வியாபாரம் பாத்துக்கறேன்..

              சரி என்றான். இன்னிக்கு பொடிக் குரவைதான் விலை குறைச்சல்  இருநூத்தி ஐம்பது போவுது.. எரநூறுன்னு எடுத்துக்க என்றான் வேலாயுதம்.

             சரி மூணு கிலோ கொடுன்னு வாங்கிக்கொண்டான். அதை அரைஅரை கிலோவா பிரிச்சு கவர்களில் போட்டு வாங்கிக்கொண்டான். அப்படியே சைக்கிள் ஹேண்டில் பாரில் வலது கை பக்கம் மூணும் இடது கைப்பக்கம்  மூணும் என மாட்டிக்கொண்டு நேரே ஆற்றுப்பாலம் தாண்டி ஒரு கிலோ மீட்டர் உள்ளிருந்த நகருக்குள் போனான்.

                 சொல்லி வைத்தாற்போல எல்லாரும் பொடிக் குரவை மீனுக்கு ஆசைப்பட்டதுபோல விறுவிறுவென்று விற்றுப்போக வாங்கிக் கொண்டார்கள்.

              மூணு கிலோவுக்கும் 150 ரூபாய் நின்றது.

              நேரே வீட்டுக்குப் போய் மனைவியிடம் கொடுத்தான். இந்தா நூத்தம்பது ரூபாய் இருக்கு.. பாத்து சூதனமா செலவு பண்ணிக்க.. இந்தா இந்தப் பணம் நகைய மீட்டுக்க வச்சிக்கலாம்.. நாளைக்குப் புடிச்ச சீட்டுக்காசு தேத்தி மீட்டுத்தரேன்..

            மனைவி சொன்னாள்.. வேண்டாம் உனக்கு வேலைக்குப் போகும்போது மீட்டுக்கலாம். இந்தா இந்த மிச்சத்த வச்சி நாளைக்கும் மீன வாங்கி வியாபாரம் பாரு.. என்றாள். இல்ல நாளைக்கு வேறு வேலை இந்தப் பணத்த வச்சி அது என்னவென்று யோசிக்க ஆரம்பித்தான்.

             அவள் கையிலிருந்த நூற்று ஐம்பதுரூபாயில் அந்த வீடே வெளிச்சமாய் இருந்தது.

                                              000000
             

                              
               

Tuesday, July 14, 2020


குறுங்கதை 7
                         அம்மா..அம்மா…
                                                    ஹரணி

         அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தார்கள் பாலாவும் சீனுவும். பாலா மூத்தவன் பிகாம் இரண்டாமாண்டு படிக்கிறான். சீனு பிசிஏ முதலாமாண்டு படிக்கிறான்.

           படிப்பில் கெட்டிக்காரர்கள் இல்லை. ஆனால் மோசமில்லை. படித்து சீக்கிரம் வேலைக்குப் போகவேண்டும் என்று படிப்பவர்கள்.

            இப்போது கொரோனாக் காலம் என்பதால் வீட்டிலேயே இருக்கிறார்கள். அரசு விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். எதிலும் ஒழுங்கானவர்கள். இருவரும் எதை செய்தாலும் சொல்லி வைத்தே செய்வார்கள்.

             இந்த வளர்ப்பிற்குக் காரணம் அவர்களது அப்பாவும் அம்மாவும் காரணம்.

             அப்பா தனபாலனின் கெட்டக் குணங்கள்.

             அம்மா லட்சுமியின் நல்ல குணங்கள்.

             நடுத்தரக் குடும்பம். அதற்கேற்ற செயல்பாடுகள். வாழவேண்டும் என்கிற ஆசையில் வாழ்க்கையை வாழத்துடிப்பவர்கள் நடுத்தரக் குடும்பம்தான்.

            தனபாலன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துப் போய்விட்டான்.

           லட்சுமி திகைத்துப்போய்விடவில்லை. தவிக்கவும் இல்லை. இதை எதிர்பார்த்ததுதான். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனியே வந்துவிட்டாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவேண்டும் என்று தீர்மானமாய் உறுதிஎடுத்தாள். பிள்ளைகளும் அம்மா சொன்னதை சத்திய வாக்காக எடுத்துக்கொண்டன. ஒரு பெயிண்ட் கம்பெனியில் சூபர்வைசர் வேலை லட்சுமிக்கு. பத்தாவது படித்த அவளுக்கு இந்த வேலை அதிகம்தான். ஆனால் சம்பளம் கொஞ்சம் அதிகம். அதற்கு லட்சுமியின் உழைப்புக் காரணம்.

             நன்றாகப் போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் பெரிய இடி விழுந்தது.

               லட்சுமியின் மனத்தை ஒருவன் கலைத்தான். பெயிண்ட் கம்பெனியில் மேனேஜர் வேலை பார்த்தவன். பணம், ஆடம்பரம், வசதியான வாழ்க்கை, உன் பிள்ளைகள் சீக்கிரம் மேலே கொண்டு வரலாம் என்று தூண்டில் போட்டான்.

                பிள்ளைகள் தெரியாமல் உடன்படலாம் என்று தூண்டிலை நோக்கிப் போனாள் லட்சுமி. தூண்டிலில் சிக்கியவள் திரும்பவேயில்லை. எல்லாம் மறந்தாள்.

              பிள்ளைகளால் மறக்கமுடியவில்லை.

              அதன் விளைவால் இன்று அதிகாலையில் எழுந்துவிட்டார்கள். வீட்டின் குறுக்கே போன விட்டத்தில ஆளுக்கொரு கயிற்றை இறுகக் கட்டினார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள்

               அண்ணே நான் ரொம்ப ஆசைப்பட்டு நிறைய கனவெல்லாம் கண்டேன்.. என்றான் சீனு.

              ஆமாண்டா நானுந்தான்.. அம்மா ஏண்டா இப்படி பண்ணாங்க?

               அப்பா செஞ்ச தப்பையே அம்மாவும் செஞ்சுடடாங்கண்ணே.. அதான் தாங்க முடியல..

              இருவரின் கழுத்திலும் சுருக்கை மாட்டிக்கொண்டார்கள். காலின் கீழேயுள்ள பெஞ்சிலிருந்து சட்டென்று காலை மடக்கித் தொங்கினார்கள். கழுத்து இறுகத்தொடங்கியது உடல்கள் துடிக்கத் தொடங்கின.

00000


இன்னொரு முடிவு


            தம்பி பேசாம நாம செத்துப்போயிடலாண்டா.. நம்பியிருந்த அம்மா இப்படிப் பண்ணிட்டாங்களே.. தாங்க முடியலடா.. நாளக்கி எல்லாருக்கும் தெரிஞ்சா அசிங்கமாப் பேசுவாங்க.. அவமானப்படுத்துவாங்க.. நாம வாழமுடியாதுடா..

            ஆமாண்ணே.. நீ சொல்றதுதான் சரி.. இப்பயே உங்கப்பா எங்கடான்னு கிண்டல் பேசறாங்க.. வேண்டாண்ணே.. நீங்க சொல்ற மாதிரி செத்துப்போயிடலாம்..

             மேற்கூரை விட்டத்தின் குறுக்கேபோன மரத்தில் கயிற்றைக் கட்டினார்கள். சுருக்குகள் தயாராக இருந்தன.

             கழுத்தில் மாட்டிக்கொண்டார்கள்.

             காலுக்குக் கீழே உள்ள பெஞ்சிலிருந்து இருவரும் காலை மடக்க முயன்றபோது கதவு உடைந்து உள்ளே ஓடிவந்தாள் லட்சுமி…

              அய்யோ..  எம்புள்ளஙகளா.. பாதகத்தி.. புத்தி கெட்டவ தெரியாம தப்புப் பண்ணிட்டேன்… இப்ப வந்துட்டேன்.. இனிமே தப்பு பண்ணமாட்டேன்.. உங்கள விட்டுப்போகமாட்டேன்.. இனிமே தப்பு செஞ்சா நான் தொங்கிடுவேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. உங்க ரெண்டுபேரு மேலயும் சத்தியம் என்றாள்.

               அம்மா என்று ஆனந்தமாய் கத்திக்கொண்டே கயிற்றிலிருந்து கழுத்தை விடுவித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள் பெஞ்சிலிருந்து.
                           0000