Wednesday, January 18, 2012

இருவர்




                                அம்புலிமாமா, முத்து காமிக்ஸ், எனத் தொடங்கிய எழுத்துலகில் தஞ்சை ப்ரகாஷின் தரிசனம் கிடைத்தபின் நவீன இலக்கியப்பக்கம் - தரமான இலக்கியப் பக்கம் - உண்மையான இலக்கியப் பக்கம் என்னுடைய பயணம் திசைமாறியது. அப்போது அவர் வாசிக்கச் சொன்ன பட்டியல் மிக நீண்டது. இருப்பினும் நானும் நண்பன் மதுமிதாவும் தேடித்தேடி வாசித்தோம். மணிக்கணக்கில் பேசி களிப்புற்றும் அவை தீராத பக்கங்கள்..

                                 இன்றைக்கு ஓரளவு எனக்கிருக்கும் அடையாளத்திற்கு நான் வாசித்த முன்னவர்கள்தான் முழுமுதல் காரணம்.


                                அவர்களுள் இருப்பவர்கள்தான்

                                   மதிப்புமிகு கல்யாண்ஜி என்றழைக்கப்படும் வண்ணதாசனும்..
                                  மதிப்புமிகு வண்ண நிலவனும்..

                               இருவருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் படைப்புலகம் பெருமைகொள்ளத்தக்க நிகழ்வு மட்டுமல்ல. படைப்புலகம் விமோசனம் பெற்றதுபோலவும் எனவும் சொல்லலாம்.

                                 இன்றைக்கும் அவர்களின் எழுத்து மனக்கண்ணில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிறது..

                                 கல்யாண்ஜியின் கவிதைகளையும்... வண்ணதாசனின் சிறுகதைகளையும் மனசு புதையல்போல சேமித்து வைத்திருக்கிறது..

                                 கடல்புரத்தில் தொடங்கி...ரெயினிஸ் ஐயர் தெருவில் வளர்ந்து போய்க்கொண்டிருந்த வண்ணநிலவன் இன்றைக்கும் ஒரு பிரமிப்பின் பிரமிப்புதான் எனக்கு.

                                   அவர்களுக்கான விருது தாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும்.. இப்போதாவது தரமறிந்த பான்மைக்குப் பாராட்டுக்கள்.

                                    எப்போதும் இந்த படைப்பாளிகள் விருதுகளைத் துரத்தியதில்லை.  படைப்புக்களில் ஒருபோதும் துர்ர்ந்துபோவதுமில்லை...

                                    இவர்களுக்காக இந்தத் தனிப்பதிவு..

                                    ஓரளவுக்கு நான் எழுதியிருக்கிற எனது படைப்புக்களை இவர்களுக்கு சமர்ப்பித்து தலை வணங்குகிறேன்...

                                      வண்ணதாசன்

                                      வண்ணநிலவன்


                                      தமிழ்ப் படைப்புலகின் வண்ணப்பக்கங்கள். வசீகரப் பக்கங்கள். வளமான பக்கங்கள். மதிப்புறு பக்கங்கள். மாண்புறு பக்கங்கள்.

                                      வாசியுங்கள் அவசியம் இவர்களை.



                                  0000000000000000000


                                  ஆளுமை என்பது
                                  ஆள்வது அல்ல
                                  ஆளப்படுவது...

                                   கடல் ஒருபோதும்
                                   தன்னைக் கடலென்று
                                  அறிவித்தது இல்லை..

                                   வான் ஒருபோதும்
                                  தன்னை வானென்று
                                   அறிவித்தது இல்லை...

                                   ஆளுமைகளும்
                                   இப்படித்தான்....

                                   000000


                                   ஒரு சிறுசுள்ளியை
                                   நாம் அலட்சியப்படுத்துகிறோம்
                                   உதறி எறிகிறோம்..
                                   ஒரு பறவைதான்
                                   அதில் ஒரு கூட்டை
                                   வடிவமைக்கிறது...


                                   நாம் உதறுகிறோம்
                                   அவர்கள் கூடமைக்கிறார்கள்...

                                   00000

Tuesday, January 17, 2012

வாசிக்கலாம்...



                      நீதிச்சார அனுபவத் திரட்டு என்று ஒரு புத்தகம். சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த இது புத்தக வடிவில் அச்சாகியிருக்கிறது.

                     தமிழகத்தின் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நுர்லகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடாக வந்துள்ளது. பதிப்பித்த ஆண்டு. 2002.

                        கி.பி.1788 இல் நாகை சத்தியஞானி என்ற புலவரால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நீதிப்பனுவர் இது. மானிடர் இயல்பு நீதி இயல்பு எனும் இரு பிரிவுகளாகப் பாடப்பட்டுள்ளது.

                       எளிமையான சொற்கள். எளிமையாக செய்தியைச் சொல்லுகிறது. ஒருமுறை படிக்கலாம்.

                      சான்றாக ஒரு பாடல்

                               - உடன்தனில் பிணியணுகா வகைநீக்கி
                                      மந்தமா முண்டுயுமே நீக்கி
                                  படிறுசினந் துயிநீக்கிப் பருதிவரு
                                      முனமைந்து நாழிகையி லெழுந்து
                                  முடிவுநிறை கல்வியருண் நிறையாசான்
                                       தனையணுகி முற்றமுயல் வோர்க்குக்
                                   கடல்போலுங் கல்வி வருங் கருத்தில்லா
                                       தவர்களுநற் கருத்தினரா லாரே...

                     பாடலின் பொருள்

                                     கடல்போலக் கல்வி பெருக ஆசிரியர் தரும் உத்திகளே இப் பாடலின் பொருளாகும்.

                               அவை

                                    1,    நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
                                    2,    பெருந்தீனியை நிறுத்துங்கள்.
                                    3.    பொய் பேசாதீர்கள்.
                                    4.    கோபத்தை ஒழியுங்கள்.
                                    5.   சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகை முன்பே எழுந்துவிடுங்கள்.
                                    6.   நன்கு கற்ற ஆசிரியரை அணுகிக் கற்றுக் கொள்ளுங்கள்.

                  எவ்வளவு எளிமையான உத்திகள் பாருங்கள்.

                   எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு?   ஆச்சர்யமாக இல்லை?

                    அனுபவிக்கலாம்..   மேல் விளக்கம் புரிதலுக்காக.


                      நல்ல உடல்திறம் இருந்தால்தான் கற்க முடியும்.
                      பொய் கூறும் நெஞ்சத்தில் உண்மைக்கல்வி ஏறாது. ஏறினாலும்
                      அதனால் பயன் இல்லை.
                      வயிறு நிறையத் தீனி தின்பவன் மந்தமாவான். சிந்தை மந்தமானால்
                      கல்வி ஏறாது.


                        படிறு - பொய்... நாழிகை 24 நிமிட நேரம்.
                     
                        இன்னொரு வாசிப்பில் சந்திக்கலாம்.
                     
            

Monday, January 16, 2012

ரௌத்தரம் பழகு...

               
                      மணி பன்னிரண்டைக் கடந்திருந்த இரவில் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட  எல்லா வீடுகளும் நல்ல உறக்கத்திலிருந்தன. ஒருசில வீடுகளில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரவு பணியை முடித்துவிட்டு வருபவர்கள் சாப்பிடும் சாப்பாட்டு வேளையது. பேச்சும் சாப்பாடுமாக சப்தம் தெருவில் மிதந்து கிடந்தது. இது எதுவும் இல்லாமல் தேவகியின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாசல்கதவும் அடைக்கப்பட்டிருந்தது. அவளும் அவளின் 7 வயது பிள்ளையும் விழித்துக்கிடந்தார்கள்.

                              அப்பா எப்போ வருவாங்கம்மா?
                              வருவாங்க.. ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.
                              ஏம்மா தினமும் இப்படி வர்றாங்க..
                              உங்கப்பா கிட்டயே கேளு..
                              என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்குறாங்கம்மா..போடா உங்கப்பா ரவுடி..பொறுக்கி..குடிக்கிறாரு உன்னோட சேரக்கூடாதுன்னு.. விரட்டியடிக்கிறாங்கம்மா..
                                ஆமாம் அப்படித்தான் செய்வாங்க..
                               ஏம்மா?
                                ஆமா உங்கப்பாதான் வெட்டிச் சண்டைக்குப் போறாரே...
                                அப்பாகிட்ட நீ சண்டை போடும்மா,,
                               உங்கப்பா பொறுக்கி கேக்கமாட்டான்...
                               நான் கேக்கறம்மா..
                               நல்லா கேளு...

                              அவன் சிறிய பிள்ளை அவன் மனதைக் கொட்டிவிட்டான். பெற்றவள் அதற்குப் பதில் சொல்ல இருக்கிறாள். தேவகி யாரிடம் கொட்டமுடியும். ராமலிங்கம் திருந்துவதாக இல்லை.
                             தெருவிலுள்ள எல்லா வீடுகளிலும் கடன் வாங்கியாயிற்று. நாடார் வெளிப்படையாகத் திட்டுகிறான். பழைய பாக்கிய கொடுத்துட்டு சாமான் வாங்குன்னு.. பால்காரன் ஒருமாதிரியா சிரிச்சுட்டு பால் கொடுததிட்டுப்போறர்ன்.. வீட்டுக்காரம்மா தெளிவாக சொல்லிவிட்டாள்..சீக்கிரம் வீட்டைக் காலிப்பண்ணிடுங்க... உன் புருஷன் எல்லாத்தையும் அடிச்சு வம்புக்கிழுக்கற மாதிரி என்கிட்ட செயய முடியாது.. நான் போலிசுக்குப் போயிடுவேன்...எங்க வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் மானம் இருக்கு.. காசுக்காக பொறுக்கிய குடிவச்சியர்ன்னு போறவங்க வர்றவங்க எல்லாம் கேக்கறாங்க.. நல்ல பொம்பளக்கி ஒரு சூடு ஒரு சொல்...காலி பண்ணிடு...ஒவ்வொருத்தனுக்கும் நாளைக்கி நான் பதில்சொல்ல முடியாது..

                           எல்லா அவமானங்களையும் தினமும் சந்திக்கிறாள். யாரிடமும் சொல்ல முடியவில்லை. அழுதுஅழுது கண்ணீரும் இல்லை கண்களில். வறண்டு விட்டது. வயிறு கேட்கவில்லை. பிள்ளைக்காவது சாப்பிட எதாவது வேணுமே...பார்த்து பார்த்து யாரிடம் கடன்வாங்கவில்லை என்று அலசி கடன் வாங்குகிறாள்..அதற்க ஆயிரம் கெஞ்சுகெஞ்சுகிறாள்.. பிச்சைதான் கேட்கவில்லை..

                            வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது.
                           எழுந்துபோய் திறந்தாள்.
                           ராமலிங்கத்தைத் துர்க்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். வெளியே ஆட்டோ ஓடிக்கொண்டிருந்தது.
                           வராதேன்னா கேக்கமாட்டேங்குறான்.. எங்க மானம் போவுது.. நாங்களும் குடிக்கிறோம்.. ஆனா அளவா..எங்ககிட்ட இருக்கற காசுக்கு கௌரவமா குடிக்கிறோம்.. உம்புருஷன் மானம் ரோஷமே கிடையாது.. குடிக்கறதுன்னா எதுவும் செய்வான்போலிருக்கு.. பழகுன தோஷத்துக்குக் கொண்டு வந்திருக்கோம்... சாக்கடையிலே விழுந்து கிடந்தான்.. பாத்துக்க.
                           இன்னும் சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டிவிட்டுபோனார்கள்.
                           உடலெங்கும் சாக்கடைத் தண்ணீர்.. நாற்றம் குடலைப் புடுங்கியது. மெல்ல அவன் உடைகளைக் கழற்றினாள். பிள்ளையிடம் கொடுத்தான். அவன் முகம் சுளித்தபடி எடுத்துக்கொண்டுபோய் பாத்ரூமில் போட்டான். சட்டை கழற்றும்போது முனகினான். பையில் கையைவிட்டுப் பார்த்தாள். வெறுமையாக இருந்தது. நாலைந்து பீடிகள்..ஒரு கசங்கிய பத்து ரூபாய்த்தாள்..அப்புறம் சின்ன தீப்பெட்டி...
                           அப்பா...அப்பா.. என்று எழுப்பினான் பிள்ளை.
                           உங்கப்பன் எழுந்திரிக்கமாட்டான். போய் படு..காலையிலே பேசலாம்.
                          காலையிலே பேசுவாராம்மா...
                          மகனின் முகத்தைப் பார்த்தாள்..போய்ப் படுத்து துர்ங்கு..
                          காலையில் எட்டுமணிக்குமேல் ராமலிங்கம் எழுந்தான்.
                           எழுந்து ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். ஏய்  டீ கொடு..
                           பையன் வந்தான்.
                            என்னடா?
                           அப்பா...என்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்குறாங்க..சங்கரு அவன் அப்பாவோட போய் கரும்புக்கட்டு வாங்கிட்டு வராம்பா..அவங்க காசு கொடுத்து வாங்கறானாம்..நீ சண்டை போட்டு காசு கொடுக்கமா வாங்கிட்டு வருவியாம்.. நீ  ரவுடியாம்.. எல்லாரும் பொறுக்கிப்புள்ளன்னு விரட்டறாங்கப்பா...நீ வந்து காசு கொடுத்து கரும்பு வாஙகிட்டு வரலாம்பா..வர்றியா..
                              வரேன்..போலாம்.. தேவகி கொண்டு வந்து டீயைக் கொடுத்தாள்.
                               இதெல்லாம் உன் வேலையாடி? என்றான்.
                              எனக்கு வேறு வேலையில்ல பாரு...உன் யோக்கியதை அப்படி.. வீட்டுக்காரம்மா காலிபண்ணலேன்னா போலிசுக்கு போவேங்கறாங்க..எல்லார்கிட்டயும் கடன் வாங்கியாச்சு....நாளும் கெழமையும்   அசிங்கப்பட்றேன்... உனக்கு குடிச்சா போதும்..நல்ல குடும்பத்துலே பொறந்திட்டோம்னு பொறுமையா இருக்கேன்.. புள்ள வேற இருக்கான். அவனுக்கா எல்லாம் பொறுத்துபோறேன்.. வேற யாரும் உன்கிட்ட குடும்பம் நடத்தமாட்டா...
                                ஏன் நடத்தறே? உங்கப்பன் வீட்டுக்குபோயேண்டி.. யார் குறுக்கே நீட்டி தடுத்தா?
                               எதுக்கு?  எனக்கும்  என் பிள்ளைக்கும்  ஒரு வழிய காட்டு.. இல்லேன்னா இப்படியே இருக்கமாட்டேன்...
                              என்னடி செய்வே?
                              எதுவும் செய்வேன்.
                              என்னடி இன்னிக்கு பேச்சு ஒரு மாதிரியா போவுது..
                              இனிமே பொறுக்கமுடியாதுன்னுதான்..
                              பொறுக்கமுடியாதா,,,என் குணம் தெரியுமில்லே..,
                              என் குணம் உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.. என்றாள் தேவகி அழுத்தமாக.
                              என்னடி செய்வே? என்றான் மறுபடியும்.
                             எதுக்கும் எல்லை இருக்கு. உன்ன மாத்திக்கணும்.. இப்படியே செஞ்சா..ஒரு பிடிசோறுபோதும் உன் கதைய முடிக்க...சத்தம்போடாம கலந்து வச்சி கதையை முடிச்சிடுவேன்.. நாலு வீட்டுலே பத்து பாத்திரம் தேச்சு நானும் என் பிள்ளையும் நிம்மதியா இருப்போம்.
                                உடம்பு ஒருமுறை ராமலிங்கத்திற்கு துர்க்கிப்போட்டது. அவள் கொடுத்து குடித்த காலி டீ தம்ளரை ஒருமுறை பார்த்துக்கொண்டு..தொண்டையைத் தடவினான் அவசரமாய்..திரும்பி பிள்ளையைப் பார்த்தான் பயமுடன். ...அதே பயத்துடன் தேவகியையும் பார்த்தான்.
                                முகத்தில் சலனமின்றி தெளிவாய் இருந்தாள் தேவகி.
       

Sunday, January 15, 2012

மனமே எல்லை.. (சிறுகதை)




                    இன்றோடு பதினைந்து நாட்களாகிவிட்டன. சங்கரன் தவறாது வருகிறார். நாளை வாருங்கள் என சொல்லி நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறேன்.

                    பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் ஒரு சிவன் ஆலயம். கிட்டத்தட்ட 5000 ஆண்டு பழமையானது. பக்கத்தில் பெரிய குளம். அதில் கம்பளம் விரித்ததுபோல அல்லிகள் மலர்ந்து கிடக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறோம். இறங்கி அல்லி பறித்தும் வந்திருக்கிறோம். படிக்கட்டுகளில் அல்லிகளை விலக்கி துணி வெளுப்பவர்கள் துணிகள் துவைக்கும் சப்தமும் அதற்கேற்ப அவர்கள் வாயிலிலிருந்து வரும் ஒலியும் கேட்க இனிமையாக இருக்கும். கரைகளில் இரு நடப்பட்ட குச்சிகளில் கட்டப்பட்ட கயிறுகளில் தோய்த்து நீலம் போடப்பட்ட வேட்டிகள் பளீரென்று சூரிய ஒளியில் மின்னியபடி காயும்.

               இப்போது ஒருசிலரின் முயற்சியால் அந்த ஆலயம் புதுப்பிக்கப்படுகிறது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற சிலர் தங்களது பென்ஷன் தொகையையும் பலரிடம் வசூலித்தும் இத் திருப்பணியை மேற்கொள்கிறார்கள். இதற்கான தொடக்கத்தை முனைப்பாக்கியவர்தான் சங்கரன். என்னிடம் இதுபற்றி பேசி ஏதாவது ஒரு செலவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். நானும் குறைந்த தொகையாக சொல்லி செய்கிறேன் என்றேன். உடனே அவர்கள் கோயிலுக்கென்று பெரிய மணி நாச்சியார்கோயிலில் ஆர்டர் கொடுத்திருக்கிறோம். நான்குபேர் பங்கில் உன்னுடையது ஒன்று என்றார் சங்கரன். சரியென்றேன்.

                  ஆனால் இயல்பில் சங்கரன் கொஞ்சம் கை சுத்தம் இல்லாதவர். ஓயாமல் பேசுவார். தேவையில்லாத கதைகள் சொல்லுவார். கைசுத்தமும் வாய் சுத்தமும் இல்லாதவர். சிவனின் பெயரைச் சொல்லிக் கேட்பதால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

                    என் மனைவி சொன்னாள.. இது இறைவன் காரியம் கொடுத்துவிடுங்கள். அவர் தவறு செய்தால் சிவன் பார்த்துக்கொள்வார். என்று அது எனக்கு சரியாகப் பட்டது.

                       சங்கரன் அன்று காலை வந்தார்.  உடன் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.
                        அவராகச் சொன்னார்.

                        முருகன்..இதற்கு ரசீது எல்லாம் கிடையாது. கொடுக்க முடியாது. அறநிலையத்துறை ஒத்துக்கொள்ளாது. உண்டியல் வைக்கவும்கூடாது. எனவேதான் நோட்டில் மட்டும் குறித்து வைப்போம். வாங்கிக் கட்டும் மணியிலும் பெயர் இருக்காது.

                         பரவாயில்லை என்றேன். வாங்கிக்கொண்டு போனார். போகும்போது சொன்னார். ஒரு முறை கோயிலுக்கு வா முருகா...

                        அன்று சனிக்கிழமை.

                        சங்கரன் சொன்ன கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்துப் போனேன். வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தொலைவுதான்.

                         கோயிலில் எலக்ட்ரிசியன்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சங்கரனும் இன்னும் இருவரும் இருந்தார்கள்.  நான் போனேன். வா..வா..முருகா.. நீ வந்தது ரொம்ப மகிழ்ச்சி என்றார். நான் கோயிலைச் சுற்றி வணங்கிவிட்டு உள்ளே உட்கார்ந்தேன். அப்போது ஒரு வயதான பெண் சுமார் 65 வயதிருக்கலாம். முகமெங்கும் வேர்வைத்துளிகள். எண்ணெய் வழியும் முகம். நரையோடிய தலை. மெலிந்த கைகளில் நரம்புகள் புடைத்து கிடந்தன. கையில் ஒரு சிறிய சொம்பு இருந்தது. வந்து சங்கரனிடம்.. ஐயா இந்தாங்க என்று பால்சொம்பை நீட்டினாள்.  சங்கரன் வாங்கிக்கொண்டு சொன்னார்... முருகா இவங்க எதிரில புறம்போக்குல குடிசை போட்டு இங்க 30 வருஷமா இருக்காங்க..ரெண்டு மாடு வச்சி கறந்து பால்வியாபாரம். . நான் இந்த கோயில் வேலை ஆரம்பிச்சதும்.. தினமும் 200 பால் அபிஷேகத்துக்குன்னு கொடுத்துடுவாங்க... என்றார்.

                     அந்தப் பெண்மணி தரையில் என் எதிரே உட்கார்ந்தாள். ஒரு மஞ்சள் பை வைத்திருந்தாள். அதை சங்கரனிடம் நீட்டினாள்.  ஐயா.. இதுல கொஞ்சம் பணம் இருக்கு.. எண்ணிக்கொடுங்க என்றாள். சங்கரன் அதை தரையில் கொட்ட அதில் ஐந்து ரூபாய்கள்..பத்து ரூபாய்கள்..ஐம்பது ரூபாய்கள்.. நுர்று ரூபாய்கள்.. சில்லறை காசுகள்....ஒரு ரூபாய்..இரண்டு ருபாய்..ஐந்து ரூபாய்... என.. சஙகரன் அதை எண்ணியபடியே முருகா..நீயும் எண்ணு என்றார். நானும் எண்ண ஆரம்பித்தேன்..

                    மொத்தம் 5675 ரூபாய் இருந்தது. எண்ணி சஙக்ரன் அவளிடம் கொடுக்கப்போகையில்...அவள் அவர் கையைத் தடுத்து.. ஐயா.. என்னால முடிஞ்சது..கோயிலுக்கு வச்சுக்கங்க என்றாள். என் மனதுக்குள் அதிர்வு வந்தது.
சங்கரன் கேட்டார் இவ்வளவு பணம்... என்று தயங்கினார்..
                   அவள் சொன்னாள்.

                    பால் விக்கற காசுல தினமும் ஐந்து ரூவா எடுத்து வச்சிட்டு வந்தேன். ஒரு அய்யாயிரம் கொடுத்திடலாம்னு நினைச்சேன்.. முடியல்ல. மூவாயிரம் தான் சேந்துச்சி.. போனவாரம் கன்னுக்குட்டி செத்துப்போச்சின்னு நினைச்சேன்.. ஐயா..ஒரு டாக்டர அனுப்பிச்சிங்க..அது பிழைச்சிக்கிடிச்சி.. எல்லாம் அவனோட சொத்துன்னு அந்த கன்னுக்குட்டிய வித்துட்டேன்..ரெண்டாயிரம் கிடச்சிடிச்சி...செத்துபோயிருந்தா நஷ்டம்தானே,,,
பொழச்சது அவன் செயல்தானே..அதானல அந்தக் காசயும் போட்டேன்.. அய்யாயிரம் தாண்டிடிச்சு இப்பத்தான் மனசு நிம்மதியா இருக்கு...  என்றபடி வரேன் ஐயா.. மாட்டுக்கு தீனி வைக்கணும்..

                      எழுந்து  மீண்டும் கருப்பக்கிரகம் பார்த்து கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறிப்போனாள்..

                        நம்பிக்கைத்தான் எதற்கும் அடிப்படை என்பதை அவள் உணர்த்திவிட்டுப்போனாள். மனசுக்குள் அந்த அதிர்வு அதிர்ந்துகொண்டேயிருந்தது. எழுந்து சங்கரனிடம் சொல்லிவிட்டு  மனத்தெளிவோடு சிவனை வணங்கிவிட்டு வெளியே வந்தேன்.

Saturday, January 14, 2012

குறும்(பு) கவிதைகள்....





                            நீயும் அழகு
                            நானும் அழகு...

                            நீ மலர்ந்த பூ
                            நான் வளர்ந்த பூ.....

                            நீயும் நானும்
                            மதிப்பிற்குரியவர்கள்
                            மிதிப்பிற்குரியவர்களல்ல...
.
                            அஞ்சாதே

                            நீயும் மேன்மை
                            நானும் மேன்மை....

             

                                               அணு உடைந்தாலும்
                                               ஆனந்தமில்லை...

                                               அணை உடைத்தாலும்
                                               ஆனந்தமில்லை...

                                               அன்பு உடைந்தால்தான்
                                               ஆனந்தம்
                                               பேரானந்தம்...

         

                                           யாருடைய
                                           வினை?

                                           யாருடைய
                                           குற்றம்?

                                           யாருடைய
                                           சாபம்?

                                           பாதை சரியானால்
                                           பயணம் சரியாகும்.....



                                           தலை வணங்கி
                                           தமிழை நேசி...
  
                                           தன்மானம்
                                           காத்து நில்....        

                                           ஆனந்த வாழ்க்கை
                                           அன்பின் வரம்...


இன்னொன்று...

                                             ஐயோ....

                                             எல்லாரும் வந்து
                                             நம்பள
                                             பார்க்கிறாங்கடா.....

                                             பொங்கல் வாழ்த்துக்கள்
                                              போய் கரும்பு தின்னுங்க....
                                             


                                                                       


                                               
                            

Friday, January 13, 2012

தமிழின்பம்...



                         தமிழின் இலக்கியங்களில பல கனிச்சுவைகள நிறைந்து கிடக்கின்றன. இவற்றின் ஈடற்ற சுவைக்குக் காரணம். சொல்வளம்.
ஒரு மொழியின் நிலைபேற்றிற்கும் இறவாத் தன்மைக்கும் அழியாப்
புகழிற்கும் அம்மொழியின் நிரம்பிய சொல்வளமே காரணம். எனவே அவற்றின்
சொல்வளச் சுவையை பருகிமகிழலாம்.

                         சில சொற்களை அடையாளப்படுத்தலாம். இவற்றை நீங்கள் படித்து சுவைக்கலாம். மறந்தும்போகலாம். ஆனாலும் இதன் சுவை என்றைக்காவது நினைக்கும்போது சுவைக்கும். தமிழ்ச்சுவை என்றைக்கும் சுவைக்கும்.

                     இவற்றில் பல வகைகள் உண்டு. அவற்றில் அன்றைக்குப் புழங்கிய சில சொற்களுக்கான பொருள்களை மட்டும் முதல் வகையாக சுவைக்கலாம்.

                           ஏரின் வாழ்நர்=உழவர் (ஏரைத் தொழிலாகக் கொண்டு
                                                                                        பிழைப்பவர்)

                           கவைமுட்கருவி=அங்குசம்
                                                                 ( கவை போன்று வளைந்தும்
                                                                    நுனியில் முள்ளை உடையதும்
                                                                    ஆன கருவி)

                            வெண்கல் = உப்பு

                            அவிழ்பதம்= சோறு

                             கழிகலமகளிர்=விதவை (அணிகலன்களை நீக்கிய
                                                                                                               மகளிர்)

                             அறுகாற்பறவை/=வண்டு (ஆறு கால்களையுடையது)

                             
                              நேர்வாய்க்கட்டளை= சன்னல்

                               உரிமை மைந்தர் = கணவர்

                               மனை முதலோள்= மனைவி (வீட்டிற்கு முதல்வள்)

                               குளிர்= நண்டு

                               அணங்கு=பேய் (பெண் என்பது இன்றைய பொருள்)                                                                                                 

                               சுவையும் வகையும் தொடரும்.
                           
                           
                         
                             

Thursday, January 12, 2012


\ஒரு கனவு கொல்கிறது
ஒரு கனவு காயப்படுத்துகிறது
ஒரு கனவு ஆனந்தப்படுத்துகிறது
ஒரு கனவு நம்பிக்கையூட்டுகிறது
ஒரு கனவு எதிர்பார்க்க வைக்கிறது
ஒரு கனவு திறக்கிறது
ஒரு கனவு மூடிவைக்கிறது
ஒரு கனவு நிராசையாகிறது
ஒரு கனவு பேராசையாகிறது
ஒரு கனவு அலைக்கழிக்கிறது
ஒரு கனவு நிம்மதியாக்குகிறது
ஒரு கனவு கனவாகவே இருக்கிறது
ஒரு கனவு பயமூட்டுகிறது
ஒரு கனவு பதட்டப்படவைக்கிறது
ஒரு கனவு தைரியப்படுத்துகிறது
ஒரு கனவு குழந்தையைப்போல
ஒரு கனவு அப்பாவைப்போல
ஒரு கனவு அம்மாவைப்போல
ஒரு கனவு அக்காவைப்போல
ஒரு கனவு நட்பைப்போல
ஒரு கனவு காதலைப்போல
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
கனவு ஒவ்வொருவிதமாய்
ஒரே மனதுதான் ஒரே மனதுதான்
ஒரே கனவுதான் என்று உணர்த்தினாலும்
ஒரு கனவுதான் உறுதிசெய்யவேண்டும்...\\

Wednesday, January 11, 2012

முயல்குட்டி கவிதைகள்....



                           பூமியின்மேல் விழுந்த

                          சூரிய சூட்டைத் தணிக்கிறது
                          ஒரு குழந்தையின் நிழல்....

                          00000

                          வளையல் அணியும்  சிறுமி
                          வளைகிறதா
                          வளைக்கப்படுகிறதா?

                           0000

                           ஒரு குழந்தையை
                           மொழிபெயர்த்தேன்
                            வாழாத  வாழ்க்கை
                           கிடைத்தது...

                           ஒரு கடலை
                           மொழிபெயர்த்தேன்
                           ஆழத்தின் அறிவு
                            கிடைத்தது...

                            ஆகாயத்தை
                             மொழிபெயர்த்தேன்
                            மௌனத்தின் வரம்
                            கிடைத்தது...

                             பூமியை
                             மொழிபெயர்த்தேன்.
                             அழியாத நம்பிக்கை
                             கிடைத்தது...

                             ஒரு மனிதனை
                             மொழிபெயர்த்தேன்
                              என்னைத் தேடும்
                              தகவல் கிடைத்தது...

                              00000





                             
                           
                         

                                                

Tuesday, January 10, 2012

பயணம்


                     
                         அண்ணாமலை அரசரின் கருணைத் திறத்தால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அஞ்சல் வழியில் வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பில் அந்தந்த ஊரிலுள்ள சிறுசிறு கோயில்களைத் தரிசிப்பது கரும்புத் தின்ன கூலிபோல கிடைத்த வாய்ப்பாகும்.

                          இம்முறை தேனீ செல்லும் வாய்ப்பில் சனிக்கிழமை மாலையில் தேனியிலிருந்து அரைமணிநேரப் பேருந்து பயணத்தில் (அல்லது ஆட்டோ எனில் 100 ரூபாய்) குச்சனுர்ர் எனும் இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தமான கோயிலாகும். தானே  சுயம்புவாய் தோன்றிய கோயில் என்று அர்ச்சனை செய்யும் வயதான அர்ச்சகர் அதன் வரலாற்றைக் குறிப்பிட்டு சொன்னார். கிட்டத்தட்ட 10000 ஆண்டுகள் பழமையானது என்றும் சுவடிச் சான்று மூலம் 17 ஆம் நுர்ற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார். பல முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டின் தலைவர்கள் இக்கோயிலுக்கு வந்துசென்ற நிகழ்வையும் சொன்னார்.

                      பொதுவாக சனிஸ்வரர் கோயிலுக்கு செல்பவர்கள் அர்ச்சனை செய்ததும் எதனையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இக் கோயிலில் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம் எந்தக் கெடுதலும் இல்லை என்றும் சொன்னார். இக்கோயிலுக்கு இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் என பிற மதத்தவர்களும் வந்து வணங்கிச்செல்வதும் சிறப்பானது. இஸ்லாமியர்கள் இந்த சனீஸ்வரனை அப்துல்காதர் என்று பெயரிட்டு அழைப்பதாகவும் சொன்னார்.

                      கோயிலில் அர்ச்சனை தட்டோடு பொறி, உப்பு, மண் உருவிலான காகம், கருப்புத்துணி, அப்புறம் வழக்கமான தேங்காய் பூ பழம் போன்றவை.  பொறியைப் பிரித்து மனக்குறையை நீக்கு என்று அதற்குரிய இடத்தில் கொட்டச் சொல்கிறார்கள். உப்பு பரிகாரத் தீர்வாக அதற்குரிய தொட்டியில் கொட்டச் சொல்கிறார்கள். காக்காய் உருவத்தை தலையை ஒன்பது முறை சுற்றி காக்கைபோல குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் வாக்கில் நல்ல சொல் வரவேண்டும் என்றும் வேண்டி காக்கா மண்டபத்தில் அதனைப் போட்டுவிடவேண்டும்  அதன் பின்னர் அர்ச்சனை நடக்கிறது.

                கோயிலுக்குப் பக்கத்திலேயே அழகான வாய்க்கால் ஓடுகிறது குளித்துவிட்டு வழிபடவும் அல்லது கை. கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வழிபடவும் என.

               சிறிய கோயில் என்றாலும் சிறப்பாக இருக்கிறது.மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் என்றும் குறிப்பு உள்ளது.  இக்கோயில் பற்றி கோயிலில் இருந்த குறைவான நேரத்தில் சேகரித்த செய்திகள் இன்னும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்

                         ஒருமுறை போய்வரலாம்.

                          திருச்சி திண்டுக்கல் தேனி என்று பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்.

                         தேனியில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள்.

                        1, தேனியிலிருந்து குமுளி வழியாக 61 கி.மீட்டரில் தேக்கடி.

                        2, தேனியிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் குச்சனுர்ர் சனீஸ்வரர்
                             கோயில். -  அருகிலேயே  உள்ள  குருகோயில்.

                        3. தேனியிலிருந்து 25 கி.மீட்டரில் சின்னமனுர்ர்  என்ற இடத்தில்
                            இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் சென்று தெற்கு காளஉறஸ்தி
                            எனப்படும் (சின்ன திருப்பதி) தலத்தையும் சிறப்பாக வழிபடலாம்.

                        4. குச்சனுர்ர் அருகில் சிவகாமியம்மன் கோயில் உள்ளது.

                        5. தேனியிலிருந்து  30 கி.மீட்டர் தொலைவில் வீரபாண்டி எனும்
                             இடத்தில் ஆற்றின் கரையில் கௌமாரியம்மன் கோயில்
                             அமைந்துள்ளது.

                           தேனியிலிருந்து இரு வழிகள் வழியாக குச்சனுர்ர் செல்லலாம். ஒன்று சின்னமனுர்ர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லாம். இன்னொன்று தேனியிலிருந்து நேரடியாக குச்சனுர்ர் கோயில் அருகில் இறங்கிக்கொள்ளலாம். பேருந்து வசதி உள்ளது. குமுளி. கம்பம் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம்.

                           இரண்டாவது பயணம்

                           தேனீ . கோயம்புத்துர்ர் சென்று அங்கிருந்து சேலம் வழியாக சின்ன சேலம் வந்து தலைவாசல் எனும் ஊரில் இறங்கி கூகையூர் எனும் ஊருக்கும் செல்லும் வழியில் பல கிராமங்கள் உள்ளன. இவற்றில் அருகருகே சில கிலோமீட்டர் தொலைவுகளில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளன. இவையும் குறிப்பாக வழிபாடு செய்யவேண்டிய வரலாற்றுத்தலங்கள். இவை ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக எழுதுகிறேன். 



                         கடந்த சில தினங்களாக
                         இடுகையில் ஏற்பட்ட
                         பல்வேறு தொழில்நுட்பச்
                         சிக்கல்கள் காரணமாகப்
                         பலருக்கும் ஏற்பட்ட
                         இன்னல்களுக்குப் பொறுப்பேற்று
                         மன்னிக்க வேண்டுகிறேன்...


                          எனக்காக இடுகையைச சரியான
                          மொழியில் மீண்டும் பதிவிட்டுக் காட்டிய
                          கீதா அவர்களுக்கு
                           நான் என்றென்றும் நன்றி கடப்பாடுடையேன்..
                           மிகுந்த நன்றிகள் கீதா...


                          

Monday, January 9, 2012


நிறைய அதிர்ச்சிகள்
கிடைக்கின்றன...
சாதிசந்தையில் ஒரு கவிஞன்
தன் கவிதைகளை எதையெடுத்தாலும்
என்று கூவி விற்கிறான்...
இலக்கியக்கூட்டங்களில் சாதிய நரிகளின்
ஊளைகள் காற்றைக் கிழிக்கின்றன...
விளைமாதர்களைவிடக் கேவலமாய்
சாதியைப் புணர்கிறார்கள்...
எல்லாப் போராட்டங்களிலும்
வென்றெடுப்போம் என்கிறார்கள்
பன்றிகளின் தொங்கும் வயிறுகளைப்போல
வயிற்றை நிரப்பியபடி கூடுவோமென்று
புணர்ச்சிக்களையும் நாய்களைப்போல
எச்சில்வழியும் நாக்குகளைப் புரட்டியபடி...    
  
                  

Sunday, January 8, 2012

யாரிடமேனும்....




யாரிடமேனும்
எதையேனும்
எப்படியேனும்
பேசிவிடத் துடிக்குது
மனசு
யாரும்
எதையேனும்
எப்படியேனும்
வெறுப்புக் காட்டும்
தருணத்திலும்..

Saturday, January 7, 2012

தொலைக்க சில பொம்மைகள்...


ஒரு குழந்தையின் பொம்மை 
தொலைந்துவிட்டது
என்ன பொம்மையென்று
சொல்லத்தெரியவில்லை.
ஆனால் அழுகிறது தொலைந்த 
பொம்மைதான் வேண்டுமென்று 
பிடிவாதத்துடன் 
தொலைந்த பொம்மையைத் தேடுவதிலும் 
குழந்தையை சமாதனப்படுத்துவது எளிதென்று 
ஒரு யோசனை சொல்லப்படுகிறது 
அது சரியாகாது பிடிவாதத்திடம்
என்று சொன்னால் உங்களைபோல்தான்
பிள்ளையும் பிறந்திருக்கிறது என்கிறார்கள்.
எதை தொலைப்பது ? எதை தேடுவது ?
இந்த தொலைந்தும் தேடும் வாழ்க்கையில்
    
    

நிர்பந்தம்

இம்சையாகவே இருக்கிறது 
இயலாமையிலும் சங்கடத்திலும் 
சகித்துக்கொள்ளமுடியாமலும் 
அவமானத்திலும் காயங்களிலும் 
சிலசமயம் சில மிருகங்களிடம் 
பொழுதுகளை தொலைக்கவேண்டியிருக்கிறது   
ஆனாலும் 
வாழ்வின் கடைசி இருப்புவரை அவை 
மிருகங்களாகவே வாழ்ந்து மிருகங்களாகவே சாகும் 
என்ற ஊழ்வினையின் நிறைவில் 
மிச்ச வாழ்வு மீந்தேரும் எப்பொழுதும்...   
   

Thursday, January 5, 2012

விருதும் விவகாரமும்

விருது என்பது ஒரு படைப்பினை வெகுவாசிப்பின் தளத்தில் கொண்டு நிறுத்த உதவும் ஒரு சிறுகூறு.அவ்வளவே. பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளுக்காகவும் தனித்த செயல்களுக்காகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன. படைப்பிலக்கியத்தில் இப்படியான பல விருதுகள் வழங்கப்பட்டு வருவது நடைமுறையிலுள்ளது. ஆனால் தொடர்ந்து முற்றுப்பெறாமல் தீர்க்க முடியாத நோயைப்போல இந்த சாகித்திய அகாதெமி விருது மட்டும் நீண்ட பிரச்சினைகளின் இருப்பாகவே இருக்கிறது என்பதை ஒவ்வோராண்டும் அதுகுறித்த பல்வகைப் படைப்பாளிகளின் பேச்சுக்கள். விவாதங்கள் எடுத்துக்காட்டிக்கெர்ண்டேயிருக்கின்றன. இது எப்படி நலம் பயக்கும் என்கிற கவலைதான் இந்தப் பதிவை எழுத வைத்த காரணம்.

திருமிகு சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் எனும் நாவலுக்கு இவ்வாண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. நாவல் வெளிவந்ததிலிருந்து அது ஆயிரம் பக்க அபத்தம், நாவலுக்கான தகுதி அதற்கு இல்லை.. தரமற்றது... வெறும் குப்பை எனப் பல கருத்துபேதங்கள் அதுகுறித்து வைக்கப்பட்டன. தற்போது அதையும்தாண்டி அதற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது சிந்தனைக்குரியதாகிறது.

சனவரி உயிர்மை இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இதுகுறித்து கடுமையான சொற்பிரயோகம் செய்திருக்கிறார்.

வருடாவருடம் சாகித்ய அகாதமி விருதை விமர்சித்து எழுதுவது என்பது ஏதோ செத்தவர்களுக்குத் திதி கொடுப்பதுபோல் ஆகிவிட்டது என்று கடுமையாகத் தொடங்குகிறது அந்த கருத்துகோர்வை. தமிழில் எந்த முக்கியத்துவமும் பெறாத ஓர் இளம் எழுத்தாளரின் புத்தகத்தைக கண்டுபிடித்து அவருக்கு விருது வழங்குவது இப்போது நான்காவதாக ஒரு வகைமாதிரியை அது உருவாக்கியிருக்கிறது.... என்று தொடர்ந்து உங்களுக்கு ஏதாவது அறிவு நாணயம் இருக்கிறதா? எப்போதாவது உங்கள் மனசாட்சியை நீங்கள் விழித்தெழ அனுமதிப்பீர்களா? சு. வெங்கடேசன் இந்த விருதைப் பெற்றுக்கெர்ள்வதன் வாயிலாக தனது முக்கியமான சக படைப்பாளிகளையும் மூத்த படைப்பாளிகளையும் இழிவுபடுத்தும் சாகித்ய அகாதமியின் செயலில் பங்கெடுத்திருக்கிறார்.

இத்தனை கடுமையான விமர்சனம் குறித்து தொடர்ந்து விவாதிக்க நான் அந்த நாவலை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு முன்பாக நானும் ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி ஒரு சராசரி வாசகனாக சில கேள்விகளை இந்தப் பதிவைப் படிக்கப் போகும் உங்களுக்கும் கவிஞர் மனுஷ்யப்புத்திரனுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. விருது என்பது ஒருவிதத்தில் படைப்பாளிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பதையும்
தாண்டி அது உள்ளுக்குள் படைப்பாளியைப் பலவீனப்படுத்துகிறது என்பது என்னுடைய
கருத்து.

2. சு.வெங்கடேசனுக்கு முன்னதாக மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பல
படைப்பாளிகள் மிகமிகத் தரமான படைப்பாளிகள் இருப்பது உண்மைதான். அவர்கள்
காட்டும் இந்த தீவிரம் இதுபோன்ற விருதுகளை முன்வைத்து துரத்துதல்தானா?

3. உண்மையான விருது என்பது பெரும்பான்மை மக்களின் வாசிப்பின் தீவிரம்தான்.
அவர்களின் அளவுகடந்த பேச்சுதான் விருதின் உச்சம். அப்படியிருக்க அதைவிட
சாகித்ய அகாதமிக்கான முனைப்பு ஏன்?

4. தமிழ்ப் படைப்புலகில் காலங்காலமாக குழுக்களாக அங்கங்கே செயல்பட்டுவரும
அவலம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. இப்படி இயங்கும் குழுக்களைச் சேர்ந்தவர்
கள் ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்வதும்.. அதுதான் பிழைப்பென்று தினமும்
இதழ்களில் சந்திசிரிக்கிற சண்டைகளை வாசித்ததுண்டு. அது மட்டுமல்லாமல்
ஒவ்வொரு குழுவின் படைப்பாளிகளுக்கும் தாங்கள்தான் தரமான இலக்கியத்தை
படைக்கிறோம்..அதற்கு இதுபோன்ற விருதுகள் அவசியம் தரப்படவேண்டும்
என்பதை ஒரு தொழிலாகவே செய்துவருகிற வேதனையையும் பகிர்ந்துகொள்ளத்
தான் வேண்டியிருக்கிறது. குழு மனப்பான்மையை விட்டு அகலமுடியாத இன்றைய
சூழலில் இவர்கள் விருதை மட்டும் நோக்கி போருக்குச் செல்வது இவர்களின்
எத்தகைய செயலை முதன்மைப்படுத்துகிறது.

5. அறிமுக எழுத்தாளன் அல்லது எழுதிய முதல் படைபபிலேயே ஒரு எழுத்தாளன்
அங்கிகரிக்கப்பட்டால் அது தேசக்குற்றமா? இது திரு சு.வெங்கடேசனை நியாயப்
படுத்துவதில்லை. பாரதியாரின் கவிதையே நிராகரிக்கப்பட்ட வரலாற்றைப்
படித்துதானிருக்கிறோம்.

6. எனவே இதுகுறித்த ஒருசார்பான கருத்து எதிர்ப்பை அல்லது முரணை மட்டும்
ஒரு முடிவுக்கு வந்தவிடமுடியாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

7. முற்றாக தவறென்று மனுஷ்யப்புத்திரன் கருத்தையும் உதறிவிடமுடியாது.
ஏனென்றால் சாகித்ய அகாதமி விருது வழங்குவதில் பல அரசியல் செயல்படுவதை
ஆண்டுக்காண்டு அல்லது விருது வழங்கப்பட்டபின் அறிய முடிகிறது.


எனவே இயலுமாயின் அந்தக் காவல்கோட்டம் நாவலைப் படியுங்கள். உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். காத்திருக்கிறேன். பத்துபேர் கருத்தாக இருந்தால்கூட அதுகுறித்த எந்த் விவாதத்தையும் சாகித்திய அகாதமி குழுவோடு அல்லது இதுகுறித்து முரண்படுகிற படைப்பாளிகளிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்பது என் ஆசை.

காத்திருக்கிறேன். உங்களின் வசதிக்காக காவல்கோட்டம் நாவல் குறித்த ஒரு விமர்சனத்தை உங்கள் பார்வைக்காக. இது நாவலைப் படிக்க வைக்கும் என்கிற நம்பிக்கையில்.

வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 பக்கங்கள்: 1048 விலை: ரூ. 590
எங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம் - ஆ.இரா. வேங்கடாசலபதி

இந்த ஆயிரம் பக்க நாவலைப் படித்து முடித்ததும் ஏற்படும் உணர்வு மலைப்பும் பிரமிப்பும்-மலைப்பூட்டுவது ஆசிரியருக்கு நோக்கமாக இல்லாத போதும். மலைப்பு நீங்காத நிலையிலேயே இம்மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கையோடு தொடர்கிறேன்.

பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய "நல்ல நாவலும் மகத்தான நாவலும்" என்ற மலையாளக் கட்டுரையை- நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பில்- படித்தது நினைவுக்குவருகிறது. "காவல் கோட்டம்" நல்ல நாவல் என்பதில் ஐயமில்லை. மகத்தான நாவலா என்பதை இனி பார்ப்போம்.

ஒருவகையில் "காவல் கோட்டம்" உண்மையான வரலாற்று நாவல். வரலாற்றைப் போலவே நாவலிலும் காலம் என்ற கூற்றின் ஊடாட்டமே கட்டுக்கோப்பைத் தருகிறது. "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" நாவலில் மூன்றாண்டுகள் தொழிற்படுகின்றன என்றால் "காவல் கோட்டத்தில் அறு நூறாண்டுகள் தொழிற்படுகின்றன. சுந்தர ராமசாமி கையில் நுண்ணோக்காடி. சு. வெங்கடேசனிடம் தொலை நோக்காடி.

விரிவும் நுட்பமும்- ஆசிரியர் இடையிடையே குறுக்கிட்டுப் பேசாமல் இருந்திருந்தால் இன்னும் - ஆழமும் கூடியிருக்கும் நாவல் இது. பதிநான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக் காபூரின் மதுரைப் படையெடுப்பின்போது கொல்லப்படும் காவல்காரன் கருப்பணனின் மனைவி சடைச்சி தாதனூரில்- இது மதுரைக்கு மேற்கே சில கல் தொலைவில், சமண மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாகக் குறிப்பு-தன் கால்வழியை நிறுவிக் கிளை பரப்பும் கள்ளரின் கதை இது. இதைத் தாதனூர் மான்மியம் என்றும் சொல்லலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரை நகரக் காவல் உரிமை பெற்று, வெள்ளையராட்சியிலும் அதனை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் தாதனூர்க் கள்ளர்கள், குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டு (பெருங்காம) நல்லூர் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது.

இந்த நாவலைப் பற்றிப் பேசும்போது விரிந்த கித்தானில் வரைந்த ஓவியம் என்ற உருவகம் பயன்படுத்தப்படுவதைக் கேட்டேன். சுவரோவியம் என்பதே அதைவிடப் பொருத்தமாகலாம். எங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம்.
தெலுங்குச் சாதிகள் தமிழகத்தில் காலூன்றியது, பாளையப்பட்டுகள் உருவான கதை, யூனியன் ஜாக் கொடி கட்டிப் பறந்தது, வைகை அணைக்கட்டுத் திட்டத்தின் செயலாக்கம் எனப் பல்வேறு செய்திகள் கதைப் போக்கோடு இணைகோடுகளாக வரையப்பட்டுள்ளன.

வெளவால் வகைகள், கள்ளி வகைகள், வேட்டையின் நுட்பங்கள் எனப் பல்வேறு நுட்பங்கள் நாவலில் விரவியுள்ளன. போர், போர்முறைகள், கோட்டை அமைப்பு, கொத்தளம், வளரி, வல்லயம், அலங்கம் ... எனப் போர்ச் செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. (ஆனால் தமிழகக் கோட்டைகளின் சிறப்புக் கூறான சரக்கூடு பற்றி எங்கும் குறிப்பில்லை!)
கள்ளர் சாதியைப் பற்றிய விரிவான இனவரைவியல் செய்திகள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. கள்ளர் சமூக அமைப்பு, குடும்ப உறவுகள், வகையறாக்களின் தோற்றம், சாமிகளின் பிறப்பு, வழிபாடு, கவரடைப்பு எனும் விருத்தசேதனம், காது வளர்த்தல் என - லூயி துமோந்தின் ஆய்வு நூலில் கூடக் காண முடியாத-செய்திகள் நாவலில் பொதிந்துள்ளன.
தாதனூரின் மாந்தர்கள் நிணமும் தசையுமாக நாவலில் உயிர் பெற்றுள்ளனர். இவ்வளவு உயிரோட்டமான கிழவிகளைத் தமிழ்ப் புனைவுலகு இதுவரை கண்டதில்லை.
நாவலில் விவரிக்கப்படும் களவுக் கலைநுட்பங்களைச் சொல்லி மாளாது. "காவல் கோட்டம்" என்பதற்குப் பதிலாக இந்நாவலுக்குக் "களவியல் காரிகை" என்றே பெயரிட்டிருக்கலாம்.
தமிழின் சொல் வளத்தையும் விரிவையும் காட்டக்கூடியதாக மொழி அமைந்துள்ளது. தமிழ் அகராதிகள் இன்னமும் எவ்வளவு குறைபாடுடையவை என்பதைக் "காவல் கோட்டம்" உரக்கப் பறைசாற்றுகிறது.

கவரடைப்பு செய்தபின் சிறுவர்கள் கிணற்றுக்குள் குதிக்கிறார்கள். குருதி "மெல்லக் கசிந்து நீருக்குள் செம்மண் புழுப்போல ஊர்ந்து போனது..." என்ற படிமம் "பொடி மணலில் சுருளும் கபம்" என்பதைப் போல் மறக்க முடியாததாக மனத்தில் நிற்கிறது.

இருளைப் பற்றி- இருட்டைப் பற்றியல்ல - எவ்வளவு விரிவான வருணனைகள்! இருளில் இத்தனை நிறங்களா, அடர்த்திகளா, தன்மைகளா, நீர்மைகளா என வியக்கும்வண்ணம் நாவலெங்கும் பரந்து விரிகின்றது இருள். இருளுக்குள் துலங்குகிறது "காவல் கோட்டம்".

"காவல் கோட்டம்" என்ற நல்ல நாவலை மகத்தான நாவல் என்று உடனே அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத அளவுக்குச் சில தடைகள் இல்லாமலில்லை.
நீளம். ஆயிரம் பக்கம் என்பதனாலல்ல இந்தக் குறை. குறளுக்கு ஒரு சீர்கூட மிகை. கம்பராமாயணத்திற்குப் பல நூறு மிகைப் பாடல்களும் சாலும். கறாரான கத்தரிக்கோலால் ஓர் இருநூறு பக்கம் குறைவான ஆனால் செறிவான நாவலாகக் "காவல் கோட்டம்" அமைந்திருக்க முடியும். சில இயல்களை அப்படியே நீக்கியுமிருக்கலாம்.

பல ஆண்டுகள் விரிவான படிப்பு, வரலாற்று ஆவணங்களிலும் நூல்களிலும் தோய்வு, நேரிடையான கள ஆய்விலும் வாழ்விலும் பெற்ற தரவுகள் எல்லாவற்றையும் - இனி தன்னிடம் வண்ணங்களே இல்லை எனும் அளவுக்கு - கொட்டித் தீர்த்திருக்கிறார் சு. வெங்கடேசன். இதன் விளைவாக நாவலை எங்கு முடிப்பது எனத் திண்டாடியிருப்பதும் தெரிகிறது. இதனால் தாதனூர் பற்றிய கதை (பெருங்காம) நல்லூரில் முடியும் பொருத்தமின்மை தலைதூக்குகிறது.

அபாரமான வருணனைகள் நிரம்பிய இந்த நாவலில் சில விவரிப்புகள் - முக்கியமாக வரலாற்றுப் பின்புலத்தைச் சுருக்கமாகத் தீட்டிக் காட்டும் இயல்களில்-மிகத் தட்டையாக அமைந்துள்ளன.

நாவலின் வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத பலவீனமான தலைப்பு "காவல் கோட்டம்". ஒரு நல்ல பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பாராட்டுக்குரிய நாவலுக்கு இத்தனை ஒற்றுப்பிழைகளும், ஒருமை பன்மை மயக்கங்களும் ஏற்புடையனவல்ல. மேலும் நகைச்சுவை என்பது மிக அருகியே காணப்படும் ஒரு நாவலாகவும் "காவல் கோட்டம்" அமைந்துவிட்டது.
இவை எல்லாவற்றுக்கும்கூட அமைதி கண்டுவிடலாம். இந்நூலின் அரசியல்தான் மிகவும் இடறுகின்றது. "காவல் கோட்டம்" முன்வைக்கும் சாதிப் பெருமை கடுமையான விமரிசனத்திற்குரியது.

சட்டக் கல்லூரியின் துண்டறிக்கையில் டாக்டர் அம்பேத்கரின் பெயர் நீக்கப்படும் காலம் இது. இன்றளவும் மேலக் கள்ளர் நாட்டில் "மதுரை வீரன்" திரையிடப்படுவதில்லையாம். போக்குவரத்து நிறுவனத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கப்போய் திருவள்ளுவர் முதல் அனைத்துப் பெரு மக்களின் பெயர்களும் இல்லாமல் போயின.
"காவல் கோட்டம்" களவின் நியாயங்களை மட்டும் முன்வைக்கவில்லை. அதனை மகத்துவப்படுத்துகிறது, காவியப்படுத்துகிறது.

"எல்லாச் சொத்தும் களவே" என்றார் சோசலிச முன்னோடி புரூதோன். "சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்" என்றார் பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ.பி. தாம்சன். ஆனால் களவுக்குப் பின்பும் வர்க்கம் உண்டு. தாதனூர்க்காரர்களின் எல்லாக் களவுகளையும் காவியப்படுத்தியுள்ளார் சு.வெங்கடேசன். தாது வருஷப் பஞ்சத்தின்போது தானிய வண்டிகளைப் பசித்த ஏழை மக்கள் வழிமறிக்கிறார்கள். பதுக்கல் வியாபாரிகளின் சார்பாகத் தாதனூர் காவல்காரர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள். குடியானவன் உழைப்பில் உருவான ஏழு மாதப் பயிரை இரவோடிரவாகக் கதிர் கசக்குகிறார்கள். காவல் கூலி தண்டுவது போதாதென்று துப்புக்கூலியும் வாங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியரின் சார்பு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. காவல்காரர்களின் அக்கிரமங்களைத் தாங்க முடியாமல் மூன்று மாவட்டங்களில் விவசாய வெகுமக்கள் "பண்டு" திரட்டிக் கிளர்ந்தெழுகிறார்கள். இந்த முற்போக்கு நாவல் இவ்வெழுச்சியைக் கொச்சைப்படுத்துகிறது.

1899-இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில் மேலநாட்டுக் கள்ளர்கள் முக்கியப் பங்காற்றினர் என்பது வரலாறு. மதுரைக்கு வெளியே அமைந்த வண்டிப் பேட்டைக்குத் தாதனூர்க்காரர்கள் காவல் காத்ததைச் சொல்லும் "காவல் கோட்டம்" சிவகாசிக் கொள்ளையைப் பற்றி மௌனம் சாதிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது.
தாதனூரின் ஒவ்வொரு நபரும், பெரியாம்பிளையும், கிழவிகளும்- புத்திக்கூர்மை குறைந்த மங்குணிவார - தனித்த அடையாளங்களோடு விளங்கும் இந்த நாவலில் சேவைச் சாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அடையாளமுள்ள மனிதர்களாக இல்லை - அதே வேளையில், வேல. ராமமூர்த்தியின் "கூட்டாஞ்சோறு" நாவலில் உள்ளதுபோல் சுயமற்றவர்களாகவும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். பிறரின் வன்முறை கொடூரமாகச் சித்தரிக்கப்படும் இந்நாவலில், கள்ளரின் வன்முறை இயல்பானதாகவும் கொண்டாட்டத்திற்குரியதாகவும் காட்டப்படுகிறது.
இந்த நாவலும் இதன் ஆசிரியரும் இக்கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்?

கான முயல் எய்துவதற்காக சு.வெங்கடேசன் அம்பேந்திச் செல்லவில்லை. ஆனால் அவர் கையில் வேலும் இல்லை. ஏனெனில் மகத்தான நாவல் என்ற யானையின் மத்தகத்தில் அது செருகியுள்ளது. யானை விழுமா விழாதா என்பது காலத்தின் கையில்.

(நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் - காவல் கோட்டம் (நாவல்), ஆசிரியர்: சு. வெங்கடேசன், பக்: 1048, விலை: ரூ. 590, முதற்பதிப்பு: டிசம்பர் 2008, வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14)

விமர்சனம் - நன்றி தமிழ்கூடல்.

Wednesday, January 4, 2012



துர்த்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது தவறான மன்னிக்க முடியாத செயல். ஓர் உயிர் காக்கும் மருத்துவரைக் கொல்லுதல் என்பது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது. வலிக்கவே செய்கிறது. இருப்பினும் ஒவ்வொரு துறையிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக ஒட்டுமொத்தத் துறையையும் தவறென்று சொல்லிவிடுதல் முறையாகாது. நன்றாக நினைவுடன் சென்ற என் தந்தை ஒரு நரம்பியல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்று கடைசிவரை நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். இன்றைக்கும் அவர் ராசியான மருத்துவர் என்று கூட்டம் அலைமோதுகிறது. என்ன செய்யமுடியும். இயலாமையில் கோபப்பட்டு மன உளைச்சல்தான் மிஞ்சியது. இன்னொன்றும் சொல்லத் தோணுகிறது. இதழ்களும் பத்திரிக்கைகளும் மருத்துவச் செய்திகள், மருத்துவச் சிறப்பிதழ் என்று பல்வகை மருத்துவ விளம்பரங்களோடுஏராளமான கட்டுரைகளை வெளியிட்டு மக்களை வெகுவாக அச்சுறுத்தியே கொல்கின்றன.இக்கட்டுரைகளில் ஒரு நோய் குறித்து வேறுவேறுவிதமான அறிகுறிகளையும் ஒரு மருத்துவர் சொல்வதை இன்னொருவர் மருத்துவர் மறுத்தும் எனவும் வெளியாகின்றன. எனவே சாதாரண வலியைக்கூட பெரிய நோய்க்கான அறிகுறியாக எண்ணி மனசிதைவுக்கு ஆளாகும் மக்கள் அதிகம். எனவெ நோய் வருவதும் அதற்கு சிகிச்சை மேற்கொண்டு பிழைப்பதும் அல்லது இறப்பதும் தவிர்க்கமுடியாதது. அது இயல்பானது. அததது அதனதன் இயல்பான போக்கில் இருக்கட்டுமே..

காசு, பணம் சிகிச்சை இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானமிக்க பல மருத்துவர்களால்தான் உயிர்கள் பிழைத்துக்கிடக்கின்றன. இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சிலர் மருத்துவர்களாக இருந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளிலும், வேறு சில தொழில்களிலும், ரசிகர் மன்றங்களில் தங்களை இணைத்துகொண்டு இருக்கிறார்கள். மருத்துவர் பணி என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே வேறு ஈடுபாடின்றி உயிர் காக்கும் ஒன்றில் மட்டும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால் போதும். பணத்தை ஈட்டுவது எளிது. மனிதர்களை ஈட்ட முடியாது. எந்த விளைவும் விதியின் பயனால் மருத்துவர்களுக்கும் நேரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தால் போதும். தொழில் செய்தால் போதும்.

000000

புத்தரின் புன்னகையும்
மோனாலிசாவின் புன்னகையும்
ஒன்றல்ல..
ஒன்றாயிருப்பதெல்லாம்
ஒன்றையே உணர்த்துவதிலலை
உணர்த்துத்ல் என்பது
அவற்றின் வேலையல்ல
ஆனால்
உணர்தல என்பது
பொறுப்பும் உயிருமாகிறது..
மகாவீரரின் புன்னகை தவமும்
சிலுவையிலறையப்பட்ட ஏசுவும்
வேறல்ல
வேறாகயிருப்பதெல்லாம்
வேறுபாட்டை உரைப்பதில்லை
உரைப்பது வேலையில்லை
கரைவதுதான்
பொறுப்பும் உயிருமாயிருக்கிறது..

காந்தியின் புன்னகையும்
தெரசாவின் புன்னகையும்
வழிமொழிதல்தான்
மேன்மைமிகு வழிமொழிதல்தான்..

வழிமொழிதல் என்பதும்
வாழ்வதிலான கூறுகளில் ஒன்றுதான்
கடைசிவரை ஒன்றுதான்...

00000

Tuesday, January 3, 2012

இன்றைய வாசிப்பு

இன்றைய வாசிப்பில் கிடைத்த புத்தகம் இது.

தலைப்பு கணித மேதை சீனிவாச இராமானுஜன். இதன் ஆசிரியர் திருமிகு கி.ஜெயக்குமார் அவர்கள்.

புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அதன் ஆசிரியர் பற்றி குறிப்பிடவேண்டும்.


பொதுவாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருசிலரைத் தவிரப் பெரும்பான்மையானவர்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிப்பதிலும் அல்லது வேறு பல உப தொழில்களிலும் கவனம் செலுத்தி வருமானம் பெறுவது என்பதைத்தான் கவனத்தில் கொண்டிருப்பார்கள். இதுதவிர அவர்களின் பணிச்சூழலில் வகுப்புகள் எடுப்பதும், வகுப்புத் தேர்வுகள் நடத்துவதும், விடைத்தாள் திருத்துவதும், இன்ன பிற பணிகள் என அமைந்திருப்பதால் விட்டால் போதும் என்றிருப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து மாறுபட்டு ஒரு கணித ஆசிரியராக இருந்து தனது பணிகளை செய்துகொண்டும் வருமானத்திற்கு வழிதேடாமல் புத்தகம் எழுதுகிறார் என்றால் அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தானே? சொந்தமாகப் புத்தகம் போடுவது என்பது தற்கொலைக்கான முயற்சி. அதிலும் ஏனோதானோவென்று போடாமல் உண்மையான உழைப்பில் தேர்ந்த நடையில் முழுத்தகவல்களுடன் கணிதமேதை குறித்த இந்த புத்தகம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

அதற்காக ஆசிரியர் ஜெயக்குமாரை பாராட்டலாம். தவிரவும் இதுதவிர இன்னும் 3 புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றுவது தஞ்சையின் கரந்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கத்தின் உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியில். பாரம்பரியப் பெருமைமிக்க சங்கத்தில் இருந்து வந்துள்ள திரு ஜெயக்குமார் அதன் பண்பாட்டைப் பேணும் தகைமையைக் கொண்டவராக இருப்பதும் மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும்.


இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்குகிறது இப்புத்தகம். அவரின் கல்விச்சூழல் எத்தகைய இடர்களையும் வறுமையையும் கொணடிருந்தது என்று தொடங்கி அந்தக் கல்விக்காக அவர் பட்ட இன்னல்களையும் விவரிக்கிறது. மூன்று உடன்பிறந்தவர்களை இழந்து கணிதம் தவிர மற்றபாடங்களில் தோல்வியுற்றதால் உதவிதொகைப் பெறமுடியாமல் படிப்பை நிறுத்திவிட்ட சூழலில் ஊரைவிட்டு ஓடி இப்படி பல மனஉளைச்சல்களைச் சந்தித்தவர் ராமானுஜன். இருப்பினும் பல்வேறு உதவும் மனம்கொண்ட பலரால் அவரின் கணித அறிவுக்கு இலண்டன் சென்றால்தான் வெளிச்சம் கிடைக்கும் என்பதை உறுதிச்செய்யப்பட்ட சூழலில் இலண்டன் செல்கிறார். இதற்கிடையில் நடந்த பல்வேறு கடிதப் பரிமாற்றங்களை இப்புத்தகம் எடுத்துக் காட்டுகிறது. அவற்றின் வழி கணிதமேதையின் அறிவை உலகம் அறிய என்ன பாடுபடவேண்டியிருந்தது என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

இல்ண்டனில் இராமானுஜனை நிலைக்க உறார்டியும் நெவிலும் மேற்கொண்ட செயல்கள் பெருமிதமானவை. இராமானுஜனின் கணித தேற்றங்களைக் கண்டு மலைத்துபோனவர் உறார்டி. ஏற்கெனவே கண்டறியப்ப்ட்டதும்... 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட தேற்றங்களும்.. இதுவரை கணித உலகம் கண்டறியாத தேற்றங்களும் என அவை குவிந்து கிடந்தன. ஏழாண்டுகளுக்கு மேல் இராமானுஜத்தின் கணித தேற்றங்களை ஆராய்ந்த உறார்டி குறிப்பிடுகிறார் இதுவரை இரண்டு அத்தியாயங்களை மட்டுமே ஆராய்ந்துள்ளேன் என்று. இது இராமானுஜத்தின் மிகப்பெரும் மேதையைமைப் பறைசாற்றும் சத்தியங்கள்.

பலவகைகளிலும் பாதிக்கப்பட்ட கணிதமேதை காசநோயால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவிக்கும் தாயாருக்கும் இருந்த முரண் அவரையும் பாதித்திருக்கவேண்டும். மன உளைச்சல் அவரைப் படுத்தியது. 1918 இல் அவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதும் அதனால் கைதானது பின்னர் விடுவிக்கப்பட்டதும் எல்லாம் படிப்போரை மனம் கசியவைக்கும் செய்திகள். பெலோ ஆல் ராயல் சொசைட்டியின் விருதையும் பெற்றார். மிகச் சிறிய வயதில் அதாவது 33 வயதில் கணித மேதை இறந்துபோனார்.

பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற மாமேதையின் மரணம் குறித்த செய்தி மிகவும் வேதனையைத் தருவதாகும். இப்புத்தகத்தில் ஆசிரியர் எழுதகிறார்..

தங்கள் சமுக நெறிகளை மீறி கடல் கடந்து சென்றதாலும் இந்தியா
திரும்பியபின் இராமேசுவரம் சென்று தன்னைப் புனிதப் படுத்திக்
கொள்ளாததாலும் இராமானுஜனது நெருங்கிய உறவினர்களில்
பெரும்பாலானவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை.


பாரதி இறந்தபோது அவன் உடலில் மொய்த்த ஈக்களைவிட அவன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் குறைவு என்று கேட்டதுண்டு. மாமேதைகளுக்குப் பாரத தேசம் தரும் கௌரவம் மரியாதை இதுதான் போலும்..

கணித மேதை இராமானுஜன் பற்றி அறிந்திருந்தாலும் நுர்லாசிரியர் இந்நுர்லைத் திறம்பட எழுதியுள்ளமை மறுபடியும் வாசிக்க வைக்கிறது. அவசியம் வாசிக்கலாம்.


புத்தக விவரம். கணித மேதை சீனிவாச இராமானுஜன். ஆசிரியர் கி.ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), உமாமகேசுவரனார் மேனிலைப்பள்ளி, கரந்தை, தஞசாவூர்/613 002.
புத்தகத்தின் விலை 60 ரூபாய்.

கி.ஜெயக்குமார் - Karanthaijayakumar.blogspot.com கைப்பேசி எண்.9443476716

Monday, January 2, 2012


இடறிவிழும்போது
எழுகின்ற வலி
வலிக்கவே செய்கிறது
யாரையேனும்
இடறச் செய்த வலியை
வலியுறுத்தி...

00000

புத்தாண்டில்
கடவுளுக்கும் எனக்குமான
விவாதம் நடந்தது
யார் யாருக்கு முதலில்
புத்தாண்டு வாழ்த்து
தெரிவிப்பது..
ஆச்சர்யமுடன் சொன்னேன்
இதென்ன கூத்து
எப்போதும் உலகின் முதல்வன் நீதானே
உன்னை வாழ்த்தி உன்பெயரால்
மற்றவர்களை வாழ்த்துதல்தானே
வழக்கம்..என்று..
கடவுள் சிரித்தபடி சொன்னார்
கோடானுக்கோடி யுகங்களாய்
உங்கள் வாழ்த்துக்கள்
குவிந்துவிட்டன..ஆனால் எதுவும்
வாழ்த்தாக இல்லை..
அதனால்தான்
ஒரேயொரு வாழ்த்தை
கோடானுககோடி உயிர்களுக்கு
சொல்கிறேன்..
முதலில் உங்களுக்கு
உண்மையாய் இருங்கள்...

00000



குட்டிக்கதைகள்..


புத்தாண்டில் கடவுள் பூமிக்கு வந்தார். விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் போய் உனக்கு ஒரு அற்புத வரம் தருகிறேன் கேள் என்றார். குழந்தை சட்டென்று திரும்பி ஓங்கிக் கடவுளை அறைந்துவிட்டு சொன்னது நான் சாமியோட விளையாடிக்கிட்டிருக்கேன்..போ.. என்று தன் விளையாட்டுப் பொருள்களுக்கிடையே கிடந்த கடவுள் பொம்மையைக் கைகாட்டிவிட்டு சிரித்தது. கடவுள் மறைந்துபோனார்.


0000


கொலு வைத்திருந்தார்கள். கடவுள் பொம்மைக்குப் பக்கத்தில் ஒரு நாய் பொம்மையை வைத்துவிட்டு பாப்பா சொன்னாள் சாமியை ஜிம்மி பாத்துக்கும்ல...

0000

ஒரு குடிகாரன் நிறைய குடித்திருந்தான். சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து பாதி சாப்பிடும்போதே மயங்கிவிழுந்துவிட.. வழக்கமாய் காத்திருக்கும் நாய் அந்த பொட்டலத்தைச் சாப்பிட்டு முடித்த்து. மறுநாள்..ஏம்பா இப்படி குடிச்சிப்புட்டு வயித்தைக் காயப்போடறே..பாதி சாப்பிடறே மிச்சத்தை நாயில்ல சாப்பிடுது...பரவாயில்ல சார்..எப்படியோ வீணாப் போவாம யாரோ சாப்பிட்டா சரி..

000



ஔவையார் அதியமான் இறந்தபோது ஒரு பாடல் எழுதினார். புறநானுர்ற்றுப் பாடல் அது. அது இலக்கணத்தை மீறிய பாடல். ஔவையாருக்கு மரபு தெரிந்திருந்தும் ஒரு இடத்தில் 4 சீரும் இன்னொரு இடத்தில் 5 சீரும் என இலக்கணம் மாறிக்கிடந்தது அப்பாடல். இதைப் பற்றி அப்துல் ரகுமான் குறிப்பிடும்போது கவிதைக்கு இலக்கணத்தைவிட உணர்ச்சி முக்கியம். அதியமானிடம் கொண்டிருந்த நட்புணர்ச்சி அப்படி. எனவேதான் அழுகை பெருகி வரும்போது அது ஆசிரியப்பாவுக்கு அடங்குவதில்லை. கண்ணீர் பெருக்கெடுக்கும்போது அது கட்டளைக் கலித்துறைக்குக் கட்டுப்படாது என்று எழுதினார். அற்புதமான ஆய்வுக்கருத்து இது. அனுபவிக்க அந்தப் பாடல் கீழே.

சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கட் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெறுஞ்சோற்றாலும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
நரந்தம் நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று அவன்
அருநிறுத்து இயங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

பாடலின் பொருள்

அதியமான் எனக்குத் தந்தை போன்றவன். அவனைக் கொன்ற மரணம் என்ற அம்பானது அவன் மார்பகத்தைத் தைத்தபின்..அவனை இரந்து வாழும் பாணர்களின் சோற்றுப்பானைகளை உடைத்தது..அவனின் சுற்றத்தினரின் கண்களைப் பறித்தது..அவனை நம்பி வாழ்ந்த என்போன்ற புலவர்களின் நாக்கையும் துளைத்தது..இனி பாடுவோரும் இல்லை.. பாடுவோர்க்குப் பொருள்தரும் அவனும் இல்லை..அப்படிப்பட்டவன் அதியமான். அவன் சிறிது கள் கிடைத்தால் எனக்கே கொடுத்துவிடுவான் அருந்த. நிறைய கிடைத்தால் எனக்கும் கொடுத்து அவனும் அருந்துவான். கொஞ்சம் சோறு கிடைத்தால் எனக்குத் தந்துவிடுவான். நிறைய சோறு கிடைத்தால் எனக்கும் கொடுத்து தானும் உண்ணுவான். பூவாசம் வீசம் கையால் கறிநாற்றம் வீசும் என் தலையைத் தடவி அன்போடு ஏராளமான பொருள்கள் தருவான். இப்போது எங்கே போனான்? நீர்த்துறையில் யாருக்கும் பயன்படாமல் அழியும் பகன்றை எனும் பூக்களைப்போல அதியமான் இல்லாமல் அழியப்போகிற உயிர்கள் இனி ஏராளம். ஐயகோ...

அனுபவிக்க தமிழ் ஆனந்தம் மட்டும் அல்ல. நட்பில் தந்தையையும் மகளையும் காட்சிப்படுத்தும் பாடல் இது.

0000

தமிழில் எல்லாம் இருக்கிறது என்றால் அது தவறு என்பார்கள். அறிவியலும் வானியலும் கணிப்பொறி அறிவியலும் பூகோளவியலும் மானிடவியலும் சுவையும் உளவியலும் எல்லாமும் ஒருங்கே பெற்றது தமிழ். அதனால்தான் பலமொழிகளைத் தேர்நது கற்ற பாரதி உரைத்தான் யாமறிந்த மொழிகளிலே....என்று.

000

ஜென் கவிதை ஒன்று..

மனிதன் சும்மா இருக்கிறான்
வசந்தம் வந்ததும்
மலர்கள் மலர்ந்துவிட்டன.

0000

Sunday, January 1, 2012

தமிழால் வாழ்வோம்...


தமிழ் வாழ்க... தமிழ் மாண்பு வாழ்க..தமிழின் மேன்மை வெல்க.

தழைய இழையும் அழகிய முயலாய்
தாவி செழிக்குது இவ்வாண்டு
தந்திரம் இல்லை மந்திரம் இல்லை
உண்மையும் நேர்மையும்
ஓய்ந்தொலிக்குது இவ்வாண்டு
நம்பிக்கை ஒளிருது
உழைப்பு சிரிக்குது
உண்மையில் இவ்வாண்டு...

தமிழும் இனமும்
தன்மான உணர்வும்
வளமாய் வாழ்வில் பெருகியே
வந்து நிலைக்குது இவ்வாண்டு...

தமிழ்தான் நமக்கு
தாயாய் அன்னமிடும்
தளிர் இலக்கியக் கரத்தால் அணைத்திடும்
தளராத வண்ண வாழ்வில்
தம்மோடு நம்மையும் இணைத்திடும்..

தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட
தமிழோடு இவ்வாண்டைக் கொண்டாடுவோம்
பதிவுலகில் தத்தமது இலக்கில்
தங்ககொடி நாட்டிடுவோம்...
தத்தகிரிட தத்தகிரிட தத்தகிரிட..


துன்பம் ஒழியுது தொல்லைகள் தொலையுது
நன்மைகள் சேருது நாலுதிசையும் நமக்குத்தான்..
அசையாத வேராய் நம்பிக்கை
அடிமனத்தில் கொள்வோம்...


வணக்கம் வணக்கம் புத்தாண்டு
வணக்கம் தமிழால்..சொல்வேன்...
உடலின் உயிர் நிலைக்கும்வரை...

Saturday, December 31, 2011

நம்பிக்கையும் வெற்றியும்




அன்புள்ளங்களுக்கு

வணக்கம்.

வழக்கம்போல இவ்வாண்டு முடிவுற்று இன்னும் சில மணிநேரங்களில் 2012 புத்தாண்டு மலரப்போகிறது.

எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு.
எல்லோருக்கும் திட்டமிடல்கள் உண்டு.
எதையாவது செய்யவேண்டும். கடந்த ஆண்டில் இயலாததை இவ்வாண்டிலாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பும் வேகமும் இருக்கும்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைத்துக்கொள்ளலாம்.
சில உண்மைகளைப் பேசத் துணியலாம்.
அச்சங்களைப் போக்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கலாம்.
பலரையும் நேசிக்க மனம் கனியலாம்.
வெறுத்தோரில் பலரும் நமது மனக் கனிவுக்கு கூடி வரலாம்.
எல்லாவற்றையும் கடந்து நாம் வாழத்தான் வந்திருக்கிறோம்.

இயற்கைக்குத் தப்பி...புயலுக்குத் தப்பி...மழைக்குத் தப்பி...பல பறவைகளுக்குத் தப்பி...பூவாகி..காயாகி..கனியாகி கைக்குக் கிடக்கிற பழங்களைப்போலவே நமது வாழ்க்கையும் வாய்த்திருக்கிறது நமக்கு வாழ.

இயல்பாய் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். ஏக்கமும் வேண்டாம். திட்டமிடல்கூட வேண்டாம்.

நேர்மை. நம்பிக்கை. உழைப்பு இது போதும்.



நம்பிக்கை அழுத்தமான வேரைப் போன்ற நம்பிக்கை எல்லாவற்றையும் நமக்கு ஈட்டித்தரும்.

வாழுகிற ஒவ்வொரு தருணத்தையும் அது எதுவாக இருப்பினும் அந்த உணர்வில் அதனை அனுபவித்து கடப்போம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோர் அதனை இறுகப் பற்றலாம்.

எல்லோருக்கும் எல்லாமும் குறைவற நிறைநதியாய் நிறைந்து பெருகட்டும். வளமான வாழ்வில் புத்தாண்டை எதிர்கொள்வோம்.

எல்லாமும் உடனடியாக கைக்குக் கிடைத்துவிடில் அதில் சுவையில்லை. அப்படியெதுவும் வாழ்வில் கிடைப்பதுமில்லை. இருப்பினும் பல்வேறு இடர்களுக்கிடையிலும்..சிறு துன்ப நிகழ்வுகளுக்கிடையிலும்.. சிக்கல்களுக்கிடையிலும்.. கிடைத்த வாழ்வைத்தான் பல சாதனையாளர்களும்..சரித்திர நாயகர்களும்...வாழ்வில் வெற்றிபெற்றவர்களும் பேசவும் எழுதவும் கண்டிருக்கிறோம்.

அதில்தான் வாழ்க்கையின் சுவை இருக்கிறது. அதில்தான் முழுநிறைவும் இருக்கிறது.

அடர்ந்த அனலுக்கிடையில் பதமாகும் சுவையாகும் உணவைப்போலவே அது அமைகிறது.

இப்படியே இந்த வாழ்வு இருந்தால் போதும்.

நம்முடைய நம்பிக்கையும் உழைப்பும் எல்லாவற்றையும் தரட்டும்.

என்னுடைய மனங்கவர்ந்த புத்தாண்டு மகிழ்ச்சியை பதிவுலக நண்பர்கள்..சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



தீதும் நன்றும் பிறர்தர வாரா.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அவரவர் எச்சத்தாற் காணப்படும்.

மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.

அன்பே சிவம்.

Monday, December 19, 2011

பகிரல்....

00000000
00000000

தமிழகத்தின் எல்லா இதழ்களும் வெகுஜன இதழ்களும் சரி...இலக்கிய இதழ்களும் சரி ஒருமித்த கருத்தை அதனதன் போக்கில் எடுத்துக்கூறியுள்ளன. கூடங்குளம் பிரச்சினையை. எப்படியாயினும் இது ஆபத்தை விளைவிப்பது என்பதுதான் அதன் சாராம்சமாக உள்ளது. எந்த ஒன்றும் மானிட இனத்தை மையப்படுத்திதான் அமையவேண்டும். அந்த மானிடர்க்குத் துன்பம் தரும் ஒன்றை மத்திய அரசு ஏன் விடாப்பிடியாய் கொண்டுவர நினைக்கிறது.

•••••••••
•••••••••

எல்லா அரசியல் முரண்களுக்கிடையிலும் விமர்சனங்களுக்கிடையிலும் தன் கொள்கையை விடாது முன்னேறுகிறது அரிமா அன்னா உறசாரே. வாழ்த்துக்கள்.

00000000
00000000

மதிப்பிற்குரிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு பொதுவான வேண்டுகோளை இன்றைய செய்தித்தாளில் தமிழக மக்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதே செய்தித்தாளில்தான் ஐயப்பத் தரிசனம் செல்லும் வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இரு மாநிலங்களிலும் இருதரப்பு மக்களும் பாதுகாக்கப்படவேண்டும்.

•••••••••
•••••••••

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் பெண்கள் இடம் பெறாமல் எந்த விளம்பரமும் இல்லை. இதுகுறித்த கருத்தாக்கங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு சில விளம்பரங்கள் மனதைக் காயப்படுத்துகின்றன. ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு வானிலிருந்து வாளோடு வானத்திலிருந்து ஒரு பெண் குதிப்பது போன்ற விளம்பரம். இன்னொன்றில் பள்ளத்தில் சிக்கிகொண்ட லாரியைக் கூந்தல் கட்டி இழுத்து வருவது. விளம்பரத்தில் குறைந்த பட்சம் நியாயமாவது இருக்கவேண்டும்.

•••••••••
•••••••••

இது அரசியல் அல்ல. பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் இன்று. 90 வயதை நிறைவு செய்திருக்கிறார். இதுவரை எந்த முரணிலும் சிக்காதவர். 90 வயது பெரிய வயது. ஆச்சர்யம்.

0000000000
0000000000

ஒரு சின்ன அனுபவம். நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நாமக்கல்லில் இருந்தேன். அலுவல்பணி. மாலையில் நாமக்கல் ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு தங்கத் தேரை இழுத்துவிட்டு எதிரில் இருக்கும் நரசிம்உறரையும் தரிசித்துவிட்டு கீழேயுள்ள மண்டபத்தின் இருளில் அமர்ந்திருந்தேன். தனிமையில். நண்பர்கள் மேலே தரிசனத்தில் இருந்தார்கள். அப்போது வளர்ந்த தாடியுடன் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் வந்து என்னருகே மண்டபத்தில் அமர்ந்து ஒரு 10 ரூ கொடேன் போஜனத்திற்கு என்றார். எதுவும் பேசாமல் எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் என்னைப் பார்த்துவிட்டு மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம்.

000000000
000000000

Monday, December 12, 2011

நினைவுபடுத்தல்


வணக்கம்.

இவருடைய இயற்பெயர் சுப்பையா. சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

தனது ஞானத்தால் 11 வயதில் பாரதி பட்டம் பெற்றவர். பின்னாளில் உலகம் போற்ற மகாகவி என்றழைககப்பட்டவர்.

சுதந்திர தாகத்தையும் நாட்டின் விடுதலையையும் மனதில் இருத்தி கடைசிவரை வறுமையில் இருந்து ஒரு யானை காரணமாக இறந்துபோனவர். சின்ன வயதில் இறந்துபோனவர்.

இவருடைய கவிதைகள் மிகச் சிறந்தவை என்று சொல்கிறார்கள். போற்றுகிறார்கள்.

இவர் பிறந்த தினம் நேற்றுதான். அதாவது திசம்பர் 11 வது நாள் 1882 ஆம் ஆண்டு. செப்டம்பர் 11 ஆம் நாள் 1921 இல் இறந்துபோனார்.

பலருடைய பிழைப்பு இவரது கவிதைகளால் நடக்கிறது.

இளைய பருவத்தில்தான் இறந்துபோனார். இளைஞர்கள் திசைகள் வேறுவேறாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. காலம்தான் இவர்களை மீட்டெடுக்கவேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி...