Wednesday, June 29, 2016

கதை 5

                குறி பிசகாத கொடியான்
                   
 
                அந்த இடத்தில் நாலைந்து செடிகள் மட்டுமே இருந்தன. அடங்காதி என்கிற ஆடு ஒன்று மேய்ந்துகொண்டே வந்தது. பச்சையாய் இருந்த செடிகளைக் கண்டதும் சின்ன வாலை  துறுதுறுவென்று ஆட்டியபடியே மேய ஆரம்பித்துவிட்டது. கடைசியாய் ஒரு செடிதான் இருந்தது. அதை மேய வாயை வைத்தபோது சின்னதாய் ஒரு குரல் கேட்டது.
                சட்டென்று வாயை எடுத்துவிட்டு யாரது? என்றது. உடனே தலையை உயர்த்தி சுற்றுமுற்றும் பார்த்தது. யாருமில்லை. அதற்கு லேசாகப் பயம் வந்தது. மறுபடியும் யாரது? என்றது.
                ஆடாரே… கீழே குனிந்து செடிக்கருகில் பாருங்கள் என்று மறுபடியும் அந்தக் குரல் கேட்கக் குனிந்து பார்த்தது.
                 அங்கே பச்சைநிறத்தில் ஒரு புழுவும் அதைச் சுற்றிச் சில குட்டிப் புழுக்களும் நெளிந்துகொண்டிருந்தன.
                என்ன என்றது அலட்சியமாய் அடங்காதி.
                இது கோடைக்காலம். சற்று நேரத்தில் இங்கே வெயில் வந்துவிடும். எங்களால் வெயிலைத் தாங்கமுடியாது. அப்போது இந்த செடிகளின் அடியில்தான் இளைப்பாறுவோம்.. நீங்கள் மேய்ந்துவிட்டால் வெயிலில் நானும் என் பிள்ளைகளும் இறந்துபோய்விடுவோம். ஆகவே இந்த ஒரு செடியை மேயாமல் விட்டுவிடுங்கள் ஆடாரோ.. என்றது.
                முடியாது.. எனக்கு இன்னும் பசி அடங்கவில்லை..மேய்ந்தே தீருவேன் என்றது.
                உங்களால் பசியை அடக்கமுடியும். ஆனால் எங்களால் உயிரை அடக்கமுடியாது. வெயில் எங்களைக் கொன்றுவிடும்.
                முடியவே முடியாது என்றது.
                வாயடக்கி என்கிற அந்தப் புழு தன் பிள்ளைப் புழுக்களைப் பார்த்து.. சீக்கிரம் வேகமாக வாருங்கள்.. வெயில் வருவதற்குள் அந்த காய்ந்த குச்சிகள் இருக்குமிடத்திற்குப் போய்விடலாம்.. என்றபடி வேகவேகமாக நெளிந்து நகர ஆரம்பித்துவிட்டன.
                அந்தச் செடியையும் சுத்தமாக மேய்ந்துவிட்டு நகர்ந்துபோன அடங்காதி.. தூரமாய் வந்த கொடியான் என்கிற புலியைக் கண்டதும் அதிர்ந்துபோய் நின்றுவிட்டது. ஓடவும் முடியாது. புலி அருகில் வந்ததும் அடங்காதி ஆழ ஆரம்பித்துவிட்டது.
                புலியாரே என்னை விட்டுவிடுங்கள்..
                முடியாது. என் பசி இன்னும் தீரவில்லை. உன்னைத் தின்றாலும் பசி அடங்காது. என்றாலும் கொஞ்சம் பசியாவது அடங்கவேண்டும் ஆகவே உன்னைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றபடி அடங்காதி மேல் பாய்ந்தது கொடியான் குறி பிசகாமல்.



நீதி..    பேசும் சொற்களிலேயே வாழ்வும் சாவும்.


Tuesday, June 28, 2016

கதை 4

           பட்டத்தை மறுத்த பட்டாம்பூச்சி…



           பறவைகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள்தான் அழகு என்கிற எண்ணம் இருந்தது. என்றாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
           துடிப்பி என்கிற சிட்டுக்குருவி ஒருநாள் பறவைகளிடம் இதுபற்றிய பேச்சை தொடங்கியது.
           கருப்புகூட அழகுதான் என்பதை குயில் கூவி சொன்னது.
           மேகமும் நானும் ஓர் வண்ணம் என்றது தவிட்டுக்குருவி.
           ஒவ்வொன்றும் அழகுக்கான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
           சரி யாரிடமாவது இதைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று அனைத்தும் ஒருமனதாக முடிவெடுத்தன.
           அந்தக் காட்டில் துள்ளிகுதிப்பான் என்கிற மான் இருந்தது.
           அதனை நடுவராக்கி தங்கள் விவாதங்களை முன் வைத்தன பறவைகள்.
           எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டது.
           சரி இதனை எங்கள் விலங்கு இனத்திடம் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுக்கு வரலாம் என்று துள்ளிக்குதிப்பான் கூற எல்லாமும் சம்மதித்தன.
           அப்படியே வாக்குப் பதிவு நடந்தது.
           கடைசியில் எல்லாமும் மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சிதான் அழகு என்று அதிகமாக வாக்களித்திருந்தன.
           அதை எல்லாமும் ஏற்றுக்கொண்டு அந்தப் பட்டாம்பூச்சிக்கு அழகுடையாள் என்கிற பட்டத்தை அளிக்க முடிவெடுத்து விழா ஏற்பாடு செய்தன.
          முறையான அழைப்பை விடுக்க அந்த மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சி அங்கே வந்து எனக்கு பட்டம் வேண்டாம் என்றதும் அனைத்துப் பறவைகளும் அதிர்ச்சியடைந்தன.
           ஏன் இது நல்ல விஷயந்தானே?


           இல்லை. இது நல்ல விஷயம் இல்லை. இன்றைக்கிருக்கிற பட்டாம்பூச்சியான என்னைப் பார்க்கிறீர்கள். எனது இளமைப் பருவம் அருவருப்பான புழுப்பருவம். அதனைப் பார்த்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்டீர்கள். தவிரவும் உழைப்புதான் நமக்கு எப்பவும் அழகு. இப்படிப் பட்டம் வாங்கிவிட்டால் அப்புறம் உழைப்பு மறந்துவிடும். இந்தப் பட்டத்திலேயே மயங்கிவிடுவோம். நல்ல உள்ளத்தைவிட அழகு எதுவுமில்லை. என்றபடி பட்டாம்பூச்சி பறந்துபோய்விட்டது.

           எல்லாவற்றையும் உள்ளும் புறமுமாய் கலைத்துவிட்டுப் பறவைகளும் பறந்துபோயின.

Monday, June 27, 2016

ஜங்கிள் புக்.. கதை. 3

                     யானையைக் கடித்த பூனை

           சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பூனையின் பெயர் அகங்காரன்.
           அது எப்பவும் ஒரு செயலை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டேயிருக்கும்.
           அதனுடைய வம்சம்தான் என்று புலிகள் என்று கேள்விப்பட்டதில் இருந்து. அதனால் அதற்கு அகந்தை தலைக்கேறிவிட்டது.
           புலிகள் என்னோட வம்சம்.. நான் சின்ன உருவம்னு என்கிட்ட வச்சிக்கிட்டிங்க.. அத்தனைபேரையும் கொன்னுடுவேன்னு.. மிரட்டவும் ஆரம்பித்துவிட்டது.
           எதற்கு வம்பு என்று சின்ன விலங்குகள்  விலகிப்போயின. பெரிய விலங்குகளோ அதை அலட்சியப்படுத்திவிட்டுப்போயின.
           ஆனால் அகங்காரனின் ஆணவம் குறையவேயில்லை.
           ஒரு முறை சாதுவன் என்கிற பெண்யானை இந்த பூனையின் முன் வந்தது. உடனே அகங்காரன் அதனிடம் என்னுடைய வம்சம் புலி என்று சொல்லிப் பெருமைப்பட்டது.
           அதனால் என்ன? என்றது சாதுவன்
           என்ன இப்படிக் கேட்டுவிட்டாய். உனக்கு என்னிடத்தில் பயமே யில்லையா என்றது?
           உடனே சாதுவன் சிரித்துவிட்டது.

           அகங்காரனுக்கு அளவுக்கடந்த கோபம் வந்துவிட்டது. உடனே –ஓடிப்போய் அந்த யானையின் காலைக் கடிக்க ஆரம்பித்தது. உடனே சாதுவன் என்கிற யானை வலிபொறுக்கமுடியாமல் அப்படியே கீழே விழுந்துவிட்டது. அகங்காரனுக்கு நிறைய மகிழ்ச்சி..
           பார்த்தீர்களா என் பலத்தை என்று அந்த யானையின் மேல் நின்று நடனம் ஆட ஆரம்பித்துவிட்டது. அப்படி ஆடும்போது சட்டென்று சறுக்கிவிட கீழே விழுந்தது.
           இப்போது கண் விழிப்பு வந்து இதுவரை கண்டது கனவென்று அதற்கு புரிந்தது. அப்போது பக்கத்தில் சாதுவன் யானை நின்றுகொண்டிருந்தது.
           என்ன அசந்த தூக்கமா? என்றது சாதுவன்.
           ஆமாம் என்றது.

           இனி இப்படித் தூங்காதே.. உன்னை இப்போது ஒரு புலி அடித்து உண்ண வந்தது.. நல்லவேளை நான் இருந்ததால் அதனால் முடியவில்லை. பாவம் அசந்து தூங்குகிறாய் என்று காவலுக்கு நான் இருந்தேன்.. போய் உன் இடத்தில்  தூங்கு என்றபடி சாதுவன் போய்விட்டது.
           அகங்காரன் தாங்கமுடியாத அவமானத்தில் தலைகுனிந்து நின்றது.
          
           நீதி.  அகந்தையின் முடிவு அவமானமே..
           

Sunday, June 26, 2016

ஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.

கதை 1

பேசும் செடி..


          அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது.
           ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும் மிரட்டி விரட்டியது.
           காட்டிலுள்ள மிருகங்கள் அந்த செடி இருந்தபக்கம் செல்ல அஞ்சி ஓடின.
           பேசும் செடி இரண்டு மரங்களுக்கு நடுவில் இருந்தது.
           ஒருநாள் சிறிய மான்குட்டி ஒன்று வழிதவறி பேசும் செடி இருந்த பக்கம் வந்துவிட்டது.
           பேசும் செடி பற்றி அதற்குத் தெரியாது.
           உடனே பேசும் செடி பேச ஆரம்பித்துவிட்டது. இல்லை மிரட்ட ஆரம்பித்துவிட்டது மான்குட்டியை.
           டேய்.. மான்குட்டி.. எங்கே இங்க வந்தே?
           யாரு பேசறது?
           ஹாஹா.. என்னைத் தெரியாதா.. நான்தான் பேசும் செடி.. உன்னை தின்னப்போறேன் என்றது..
           உடனே அய்யோ..அம்மா என்று மான்குட்டி அலறியபடி கீழே விழுந்து மயங்கிவிட்டது.
           கொஞ்ச நேரத்தில் குட்டிமானைத் தேடிக்கொண்டு தாய் மான் வந்தது. உடனே பேசும்செடி.. அந்த தாய் மானையும் மிரட்டியது.

           உன்னையும் தின்னப்போறோம் என்று.
           அதற்குள் மான்குட்டி மயக்கம் தெளிந்து எழுந்து தாய் மான் பின்னே ஒடுங்கிக்கொண்டது.
           அப்போது திடீரென.. எதிரில் உள்ள அரசமரம் பேச ஆரம்பித்துவிட்டது.
           நான்தான் அரச மரம் பேசுகிறேன்.. இப்போது நான் அந்த பேசும்செடியை அழிக்கப்போகிறேன்..


           உடனே தாய்மானும் குட்டிமானும் ஓடிப்போயின.
           அய்யய்யோ எங்களை விட்டுடு என்று பேசும் செடியின் பின்னாலிருந்து இரண்டு கரடிக்குட்டிகள் வெளியே வந்தன.
           ஓ நீங்கள்தான் பேசும் செடியா?
           ஆமா..ஆமா.. எங்களை மன்னிச்சிடு மரமே.. இனிமே இப்படி செய்யமாட்டோம்..
           சரி.. இனி யாரையும் ஏமாற்றக்கூடாது..
           சரி என்றன இரண்டும். அவ்வாறு சொல்லியதும் அரச மரத்தின் பின்னிருந்து கரடி வந்ததும் இரண்டும் அம்மா நீங்களா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டன.



           நீதி.. யாரையும் ஏமாற்றக்கூடாது


  
கதை.2

                  தாகம் தணித்த காகம்…


           நல்ல வெயில் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது பூமியை.
மண்ணும் கல்லும் எல்லாம் கொதித்துக் கிடந்தன.
           பறந்து களைத்த காகத்திற்குச் சரியான தாகம்.
           தண்ணீர் தேடி அலைந்தது.
           கடைசியாக ஒரு இடத்தில் சிறு ஜாடி கிடந்தது.
           அதில் கால் பங்கு நீர் கிடந்தது.
           நிச்சயம் காகம் தன் அலகால் நுழைத்தாலும் தண்ணீரைக் குடிக்கமுடியாது.
           தலையையும் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளே திணிக்க முடியவில்லை.
           காகத்திற்கோ தாகம் அதிகரித்துக்கொண்டேபோனது.
           பக்கத்தில் பார்த்தது எதாவது கிடைக்குமா என்று.
           சுற்றிலும் சிறு சிறு கூழாங்கற்கள் கிடந்தன.
           அந்தக் கற்களும் கொதித்துக் கிடந்தன.
           கற்களை நன்றாக உற்றுப் பார்த்தது காகம்.
           அந்தக் கற்களுக்கிடையில் சின்ன செடியொன்று முளைத்துக்
கிடந்தது. நாலைந்து இதழ்கள் துளிர் விட்டிருந்தன. ஆனால்  அச்செடி
வாடிக்கிடந்தது.
           காகம் பார்த்தது.
           மெல்ல தண்ணீர் உள்ள ஜாடியை நகர்த்திப்போய் அந்த செடியின் மேல் கவிழ்த்தது.


           ஜாடியின் உள்ளே இருந்த கால்பாகம் தண்ணீர் மெல்ல தரையில் பரவி அந்த செடியின் வேருக்குள் இறங்கியது.
           செடியின் வாடிய இலைகள் நிமிர்ந்தன.
           காகம் தண்ணீர் தேடி மீண்டும் சிறகை விரித்தது ஆகாயம் பார்த்து.

            நீதி.  நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.


Tuesday, April 12, 2016






                                        உங்களின் சொற்களை
                                        சேகரித்துக்கொள்ளுங்கள்
                                        அதிகம் செலவழிக்காதீர்கள்
                                        வழியில் எங்கும் தவறவிடாதீர்கள்
                                        முடிந்தால் எங்குவேண்டுமானாலும்
                                         எதில் வேண்டுமானாலும்
                                         பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்...
                                         எல்லாவற்றுக்கும் சொற்களைக்
                                         கேட்டுக் கொடுங்கள்
                                          யாரிடமும் சொற்களைக் கடன்
                                          வாங்காதீர்கள்
                                          உங்களின் சொற்களை யாரிடமும்
                                          காட்டவும் வேண்டாம்
                                          குப்பைகளை அள்ளிக்கொண்டு
                                          வருகிறார்கள்...
                                          

Sunday, April 10, 2016

யானையும் முள்ளங்கியும்...




                     திருவையாறு.

                     என் வாழ்வின் முக்கியமான இரு கூறுகளைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஊர் திருவையாறு.
                      காவிரி கரைபுரண்டோட செழித்துக் கிடந்த ஊர். தற்போது அந்த செழிப்பின் விளைவிலேயே தன்னுடைய இருப்பைத் தக்க வைத்திருக்கும் ஊரும் திருவையாறாகும்.
                        எத்தனையோ நாட்கள் காவிரியின் கரையில் கழித்த தருணங்கள் உண்டு. தியாகய்யர் இசைகேட்டு மெய்மறந்த காலங்களும் உண்டு.
                         இரு கூறுகளுள் முதல் கூறு. என்னை ஈன்று புறந்தந்த என் தாயின் பிறந்த ஊர் திருவையாறு.
                         என் நிழலாய் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் பிறந்த ஊரும் திருவையாறு.
                        கூடுதலாய் என் இரண்டாவது சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்த ஊரும் திருவையாறு.
                        அக்காவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காவிரியில் குளித்த அனுபவம் அற்புதமானது. காவிரியின் வடகரையில் அம்மாவின் கிராமம். மனைவியின் வீடு. தென்கரையில் அக்காவின் வீடு. அக்கா வீட்டிலிருந்து காவிரியில் குதித்து ஆற்றின் ஓட்டத்தோடே நீந்தி தியாகய்யர் சமாதியில் கரைஏறுவோம். பின் அங்கிருந்து திருவையாறு சாலையில் சிறிது நடந்து காருகுடி அருகே காவிரியில் குதித்து பின் அக்கா வீட்டுக் கரைக்கு வந்து சேருவோம். இன்றைக்கு நினைத்தாலும் அது அற்புதமான அனுபவம்.
               
        அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றுதான் அழைப்போம். அம்மாவின் அம்மா பெயர் அமிர்தத்தம்மாள். பார்ப்பதற்கு பிராமணப் பெண்ணைப்போலிருப்பார் என்று அத்தனை உறவுகளும் சொல்லுவார்கள். மெலிதாகவும் நல்ல சிகப்பாகவும் இருப்பார்கள். அந்த அம்மாயியோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். மூவரும் தென்கரையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
                            ஒவ்வொரு விடுமுறைக்கும் வடகரைக்கும் தென்கரைக்கும் எங்களின் பயணம் காவிரி ஆற்றைக் கடந்து நிகழும். தண்ணீர் நிறைந்து போகும்போது பரிசிலில் வருவோம். அதுபற்றி ஒரு சுவையான நாவலே எழுதலாம். தண்ணீர் இல்லாத சமயம் மணலில் நடந்து வருவோம்.
                                தென்கரையில் உள்ள அம்மாயிகள் ஒவ்வொருவரும் நல்ல வசதியானவர்கள். தோப்பும் துரவுமாக இருப்பவர்கள். தவிரவும் அனைவருக்கும் கொல்லைகள் உண்டு. அதில் கீரைகள். அவரை, மொச்சை, அகத்தி, கத்தரிக்காய், முள்ளங்கி, வாழைமரங்கள் என்று பலவும் பயிரிட்டு இருப்பார்கள்.
                                 காலையில் ஐந்து மணிக்கே அம்மாயி எங்களை அழைத்துக்கொண்டு முள்ளங்கி கொல்லைக்குப் போவார். பாத்தி பாத்தியாக ஒவ்வொன்றையும் பசுமையாகப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். கத்தரிக் கொல்லையில் ஒவ்வொரு செடியிலும் கொத்து கொத்தாக கத்தரிக்காய் தொங்கும் அழகு, முள்ளங்கி கொல்லையில் மண்ணுக்குள் புதைந்திருக்க மேலே அதன் இலைகள் அத்தனை வளமாக இருக்கும். பக்கத்தல் நீண்ட வாய்க்கால் காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கியோடும்.

                                கொல்லையெல்லாம் சுற்றிவிட்டு அம்மாயி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளைப் பறித்துகொண்டு வருவார். முள்ளங்கி கொல்லையில் நாலைந்து முள்ளங்கிகளை அப்படியே இலைகளோடு பிடுங்கியெடுப்பார். ட்யூப் லைட்டை மண்ணில் புதைத்து வெளியே எடுத்தது போன்று வெள்ளைவெளேரென்று இருக்கும். இலைகளோடு அதனைப் பிடித்து எடுத்துவருகையில் காதைப்பிடித்து வெள்ளை முயல்களைத் தூக்கி வருவதுபோலிருக்கும்.
                           எங்களை வாய்க்கால் கரையில் அம்மாயி உட்கார வைத்துவிட்டு. அந்த முள்ளங்கிகளை அப்படியே வாய்க்கால் நீரில் மண்போக அலசுவார்கள். பின் அந்த முள்ளங்கிகளை வாய்க்கால் கரையில் போடப்பட்டுள்ள உருக்காங்கல்லில் (அது துணி துவைப்பதற்கு.. வயல் வேலைக்குப் போய் வருபவர்கள் மண்வெட்டிகளை கழுவுவதற்கு இப்படி பல பயன்கள்) வைத்து இன்னொரு கல்லெடுத்து முள்ளங்கி உடம்பில் தலையிலிருந்து வால்வரை நசுக்குவார்கள். அப்படியே முள்ளங்கி புதுவீட்டின் சுவரில் விழுந்த வெடிப்பைப்போலப் பிளந்து நிற்கும். உடனே மடியிலிருந்து சுருக்குப் பையை அம்மாயி எடுப்பார்கள் அதில் பொட்டலம் ஒன்று இருக்கும். அதில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் வைத்து அரைத்த பொடி இருக்கும். அதனை எடுத்து ஒவ்வொரு முள்ளங்கியின் பிளந்த பிளவுகளில் வரிசையாக தூவுவார்கள். அப்படியே ஒவ்வொருவரிடம் கொடுப்பார்கள். அப்படியே கடித்து தின்னச் சொல்லுவார்கள். காரமாக இருந்தாலும் இளம் முள்ளங்கி பசுமையானது மிகச் சுவையாக இருக்கும். பொறையேறும். என்றாலும் தின்று முடித்ததும் அம்மாயி தன் இருகைகளால் வாய்க்கால் நீரை அள்ளிக் குடிக்கக் கொடுப்பார்கள். குடிப்போம். வயிறு நிரம்பியிருக்கும்.

                         உடம்புக்கு பச்ச முள்ளங்கி ரொம்ப நல்லது. ஒரு நோவு நொடி வராது என்பார்கள்.
                          அப்புறம் அம்மாயி முள்ளங்கி சாப்பிட்டதும் கிளம்பி மறுபடியும் கொல்லைக்குள் போவோம்.
                          வெண்டைக்காய் தின்ன... பிஞ்சு கத்தரிக்காய் தின்ன கற்றுக் கொடுத்தார்கள்.
                          இப்படி எல்லாவற்றையும் இயற்கையாகவே பச்சையாகவே தின்னக் கற்றுக்கொடுத்தார்கள். இன்றுவரை தொடர்கிறது.
                         அம்மாயிகள் எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு வெறுமையான கிராமத்தில் நுழையும்போது இன்னும் அவர்களின் பிள்ளைகள் கொல்லைகளைப் பராமரிக்கிறார்கள். அப்படியே வாய்க்கால் ஓடுகிறது. உருக்காங்கற்களும் கிடக்கின்றன.
                           ஆனாலும் அம்மாயி கொடுத்த முள்ளங்கியின் சுவை கிடைக்கவேயில்லை.
                            என்றாலும் இன்றைக்கும் சாம்பார் சாதத்தில் முள்ளங்கியைத் தேங்காய் துறுவலாக செய்து தூவி கலந்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.

                            இன்றைக்கு முள்ளங்கிக்கு பல மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் சொல்கிறது.

                              சரி முள்ளங்கிக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்?

                             அம்மாயிடம் அன்று கேட்டபோது சொன்னார்கள்.

                              பகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.
                              இரவில் ஒரு யானையையே கொடுத்தாலும்  முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது.
                                                    0000


                     

Saturday, April 9, 2016

அப்பாவைக் கொட்டிய தேள்...


அப்பாவைக் கொட்டிய தேள்..


                  நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தம்பி நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாள் இரவு இருவரும் அப்பாவின் அருகில்தான் படுத்துத் தூங்குவது வழக்கம். இரவு வானொலியில் விவிதபாரதியில் பாட்டு கேட்போம். அதன்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் நடத்தும் பாடங்களைக் கேட்கவேண்டும. அது தமிழ், வரலாறு, பொருளாதாரம். வணிகவியல் இப்படி பலவும் யாரேனும் ஒரு விரிவுரையாளர் பேசுவார். இதனைக் கேட்கவேண்டும. 
                    உலக வரலாறு குறித்த செய்திகள், இந்தியாவின் பொருளாதார நிலை, தேவைக் கோட்பாடு, தமிழ் இலக்கியங்களின் சிறப்பு  இப்படிப் பல பாடங்கள் இதெல்லாம் பெரிய படிப்புப் படிக்கிறபோது உதவும் என்று கேட்க வைப்பார். அப்பா படுக்கும்போது வலது கையை ரயில் கைகாட்டி போல தரையில் நீட்டி வைக்க அதில் முதலில் தம்பியும் அவனைத் தொடர்ந்து நானும் தலைவைத்துப் படுப்போம். அப்பாவின் வலதுகை அக்குளில் முகம் புதைத்துக்கொண்டுதான் தம்பி தூங்குவான். அதற்குப் போட்டி நடக்கும். ஒருசில நாட்கள் அப்பாவின் கை அக்குளில் முகம்புதைத்துத் தூங்கும் அற்புத வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அந்த வியர்வை மணத்துடன் விடியவிடிய அசந்து தூங்குவோம். அப்பா கைவலியைப் பொறுததுக்கொண்டு படுத்திருப்பார். 

                      எங்கள் வீடு ஓட்டு வீடு. பாயை விரித்ததுபோன்று அடுக்கிவைக்கப்பட்ட மூங்கில் கழிகளின்மேலே பரத்தப்பட்ட ஓடுகள். வெயில் காலத்தில் தேள்களும் பூரான்களும் மேலிருந்து விழுந்து வீட்டிற்குள் ஓடும். அம்மா பூரானை அடிப்பாள். அதுவும் ஆண்கள் அடிக்கக்கூடாது பூரானை என்று அதற்கொரு கதை சொல்வாள். தேளை மட்டும் அடிக்கமாட்டாள்.. கணேசா என்றபடி அதனைப் பிடித்து ஒரு தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொண்டுபோய் தூரமாய் செடிகளின் மீது கொட்டிவிட்டு வருவாள்.  தேள் பிள்ளையார் என்பது அம்மாவின் நம்பிக்கை.

                                 இப்படிப் படுத்து உறங்குகையில் ஒருநாள் நள்ளிரவில் கிட்டத்தட்ட 1 மணியிருக்கும். நானும் தம்பியும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில். கருந்தேள் அது. அப்பாவின் வலது கை விரலில் ஒரு கொட்டு கொட்ட.. அப்பா.. சட்டென்று விழித்துக்கொண்டு கையை உதறவில்லை. அப்பா நிதானம் அதிகம். அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால் எதற்கும் பதட்டப்படமாட்டார். கொட்டியது தேள் என்று தெரிந்ததும் உடன் என்னையும் தம்பியையும் கொட்டிவிடுமோ என்கிற அச்சத்தில்  கொட்டிய தேளின்மீது கையை வைத்து அழுத்திக்கொண்டு இடது கையால் உறங்கிக்கொண்டிருந்த என்னைத் தள்ளிவிடுகிறார்.. மறுபடியும் இரண்டாவது கொட்டு கொட்டுகிறது தேள். அடுத்துத் தம்பியைத் தள்ளுகிறார். மறுபடியும் மூன்றாவது கொட்டு கொட்டுகிறது. கடைசியில் இருவரையும் பாதுகாப்பாகத் தள்ளியபிறகு என் அம்மாவைக் கத்திக் கூப்பிட்டு மின் விளக்கைப் போடச் சொல்ல அம்மா உடன் எழுந்து மின்விளக்கைப் போடுகிறாள்.  அப்போதுதான் அப்பாவை அந்தத் தேள் தொடர்ந்து கொட்டிக்கொண்டேயிருக்கிறது- 

                               அப்பவும் கையை எடுக்காமல் அப்பா உடன் எங்கள் இருவரையும் பார்த்து திருப்தி கொள்கிறார். நாங்கள் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க. அப்பா அப்படியே அழுத்திய தேளை கையை எடுத்துவிட்டு அம்மா கொண்டு வந்த குரடால் தேளை நசுக்கிப் பிடிக்கிறார். 
                             அம்மா குரடுடன் தேளை வாங்கிக் கொண்டு வெளியே போகிறார்.
                                              அப்பாவுக்கு மயக்கம் வந்துவிட்டது.

                                              உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மூன்று நாட்கள் கருந்தேளின் விஷம் உடலெங்கும் பரவி படாதபாடு பட்டு தப்பித்து வந்தார்.

                                           இன்று நினைத்தாலும் அப்பாவின் அன்பு  மனசை அதிர வைக்கிறது.
                                              அப்பாவுக்கு மகனுக்குமான முரண்பாட்டில் பிரிந்த பல குடும்பங்களின் கதை தெரியும். அப்பாவைப் புரிந்துகொள்ளாத மகனால் தாக்கப்பட்ட அப்பாக்கள் உண்டு.  மகன் வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல் இயங்கும் சுயநல காமப்பண்புடைய அப்பாக்கள் உண்டு. இவற்றுக்கிடையில்  தன் பிள்ளைகளைத் தேள் கொட்டிவிடக்கூடாது என்பதற்காகக் கொட்டுக்கள் பல வாங்கி தப்பிப் பிழைத்து வந்து அப்பாவை நினைத்தால் இன்றைக்கும் அன்பும் மரியாதையும் பொங்கிவழிகிறது.

                                        அப்பா இறந்தபிறகு அப்பா உயிருடன் இருக்கும்வரை வந்துவிடும் என்று எண்ணி ஏமாந்த சம்பள நிலுவைப் பணத்தில் ஓட்டு வீட்டை மாற்றி ஒட்டு வீடாக அம்மா மாற்றினாள். ஓடுகளைப் பிரித்துப்போடும்போது  ஓடிய தேள்களும் பூரான்களும் தேள்குஞ்சுகளும்தான் கடைசியாக அந்த வீட்டில் பார்த்தது. அதற்குப்பின் தேள்கள் இல்லை.

                                                இப்போது அப்பாவும் இல்லை.

                                  தேள் கொட்டி அப்பா பிழைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாகவும் இறந்துபோயி பத்தாண்டுகளுக்கு மேலும் ஆகிவிட்டன.

                                     அப்பாவின் அன்பும் செயலும் இன்றும் மனத்தில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன அப்பா இல்லாத வலியைப் பெருக்கியபடியே.

                                             

                                                

Wednesday, April 6, 2016

தலைமையும் கூட்டணியும்

புத்தர்
யேசு
நபிகள்
விவேகானந்தர்
யாரும்
ஒருபோதும் கூட்டணி
அமைத்ததில்லை
ஆனால் அவர்கள்பின்தான்
என்றைக்கும் ஆயிரம்
கூட்டம் கூட்டம்.
மனித வாழ்வின்
ஒவ்வொருதருணத்திலும்
அவர்கள் தலையாய்
நின்றார்கள் தலைவராய்
அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
அமைவதை எப்படி உணரமுடியும்?


Friday, March 4, 2016

துக்க 
வீட்டில் 

இருக்கும்போது 
இறந்துபோனவரைப் 
பார்க்கும்போது 

தூங்குவதுபோல 
இருக்கிறார் என்று 
சொல்வது வழக்கம் 

ஆனால் 
உண்மை வேறானது 

சாகும்வரை நான்தான் 
எல்லாமும் என்று 
நினைத்தாடிய 
தருணத்தில் அதை 
இழந்துவிட்டவர்களைப் 

பார்க்கும்போது 

உணரமுடிகிறது.

000



Sunday, February 28, 2016



சருகு 
இறகு 

இரண்டும் 
உதிர்வுகள் 

ஒன்று மரத்தின் 
வரலாற்றை 

இன்னொன்று 
பறவையின் வரலாற்றை 

ஒன்றில் பூமி 
இன்னொன்றில் வானம் 

இரண்டும் 
வாழ்வின் உண்மையை 

வானமும் பூமியும் 
என்றும் நிலையானது 

மற்றவை யாவும் 
சருகு அல்லது 
இறகு 

000

Friday, February 26, 2016



என்னுடைய கைபேசிக்கு ஒரு தகவல் 
வந்தது.

அனுப்பியது என்னுடைய தோழர் இளவல் ஜான் சங்கீதராஜ் 
இவர் ஒரு ஆங்கிலப்  பேராசிரியர் 

தகவல் அனுப்பிய நேரம் இரவு 8 மணி.

அனுப்பிய தகவல் 


 மிகுந்த பசியோடு வீட்டிற்குச் சென்றேன் 
சாப்பிடும்போது ஆம்லெட்டில் 
அதிக உப்பு
மகிழ்ச்சி அடைந்தேன் 

 தகவல் இதுதான் 

இதல் என்ன இருக்கிறது?

மறுபடியும் அவரிடம் பேச முனைந்தேன் 

அவரிடமிருந்து மறுபடியும் 
ஒரு தகவல் 


என் தாயின் மறைவிற்குப் 
பிறகு தந்தை செய்து 
கொடுத்த முதல் 
ஆம்லெட் ..



மனது கசிந்தேன் 

000000


இன்று 
கரந்தை தமிழ்ச் சங்கத்தில் 
தமிழவேள் உமா மகேசுவரனார் 
அவர்களை பற்றி 
அரிய தகவல்கள்கள் பொதிந்த 
ஒரு அருமையான நூல் 
வெளியிடப்பட்டது .

உலகத்  தமிழ் மாநாடு நடததவேண்டும் 
தமிழ்த்தாய் வாழ்த்திற்குக் காரணமானவர் 
அண்ணாமலைப்  பல்கலைக் கழகம் 
தொடங்கக் காரணமானவர் 

இப்படிப் பல தகவல்கள்.

நூலினை அரும்பாடுப்பட்டு 
உருவாக்கியவர்கள் 

கரந்தை ஜெயக்குமார் 
தலைமையாசிரியர் சரவணன் 

இருவருக்கும் 
 நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் 

நீங்களும் வாழ்த்தலாம்.

9443476716 ஜெயக்குமார் 
 
000

தற்போது வெளிவந்துள்ள 
என் நூல் 

பக்தி அகராதி 

300 சொற்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து முழுமையான அகராதி 

வெளிவரும் 

3000 சொற்கள் அடங்கியது அது. 

000

மேலும் பல்வகைப் பொருண்மைகளில்  

5 நூல்கள்  எழுதி முடித்து அச்சில் உள்ளன 

இவ்வாண்டு கணிசமான பதிவுகள் பதிவிட உறுதி 
கொண்டுள்ளேன்.

வேண்டுவது 
உங்கள் அன்பும் வாழ்த்தும்.

நன்றிகள்.

0000





Friday, December 4, 2015

ஈழத்துப் பெண் கவிதையியல்



தமிழ்ப் பல்கலைக்கழக அயல் நாட்டுத் தமிழ்க்  கல்வித்துறை மற்றும் சென்னைத்  தமிழ்ச்  சங்கம் இணைந்து  ஈழத்துப் பெண் கவிதையியல் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக்  கருத்தரங்கு ஒன்றை 3.12.2015 மற்றும் 4.12.2015 ஆகிய இரு நாட்கள் சிறப்பாக நடத்தியது.

            ஐந்து அமர்வுகளில் முழுக்க இலங்கையின்   பல்வேறு  பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டும் கட்டுரைகளை  வாசித்தளித்தார்கள்.

               ஈழத்துப் பெண் கவிதைகளில்  தொடக்கக் காலப்  பெண் கவிகள்,  சங்கக் கால நீட்சி, போரும் வாழ்வும் , நாடார் இலக்கியக் கூறுகள். முஸ்லிம் பெண்  கவிதைகள், ஆண்களும் அதிகாரமும், அலைவும் உலைவும் , பால்நிலை அரசியல், உணர்த்து முறை உத்திகள், பாடு பொருள் வெளிப்பாடுகள் .மலையகப் பெண் கவிதைகள், மனிதம், மொழி, உடல்சார் அரசியல், தொன்மங்கள்  என மொத்தம் 15 தரமான உண்மையான ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன.

                வலியும் உணர்வும் பெருகிக் கிளைத்த கட்டுரைகள்.  பேசாப் பொருளைப் பேசியக் கட்டுரைகள். அவர்களின் இருப்புக் குறித்தும் வாழ்க்கையின் ஏக்கம் குறித்தும் போரை மறுதலித்தல் குறித்தும் உடல்சார் அரசியலின் தன்மைகள் குறித்தும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து  எழுந்த கட்டுரைகள்.

                  நீண்ட நாட்களுக்குப் பின் உண்மையான  கருத்தரங்கு கட்டுரைகளைக் கேட்ட மனநிறைவு. ஒவ்வொரு கட்டுரையும் மனதுள் நிறைய சிந்தனைகளை   ஏற்படுத்தின. ஒரு ஆய்வுக் கட்டுரை என்பது வெறும் பத்திகளை இணைத்தல் அல்ல என்பதை உணர்த்தி நிற்கும் கருத்தரங்கம் ஆக அமைந்திருந்தது.

                 எப்போதும் தன்னலமற்றுக்  கல்வி சிந்தனையோடு இயங்கும் பேராசிரியர்  சா. உதயசூரியன் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் அயல்நாட்டுக் கல்வித்துறையின் சாதனைக்  கருத்தரங்காகும்.  இக்கருத்தரங்கு எல்லா நிலைகளிலும் சிறப்புற அமையக் காரணம் மாண்பமை துணைவேந்தர்  பேராசிரியர்  க. பாஸ்கரன் அவர்கள்.

                 

             

                

Monday, November 30, 2015

யார் 2

யார்  2

         
                  ஒரு மன்னனின் சகோதரர்கள் அவர்கள்.  நான்கு பேர்கள்.  மன்னனின் மாற்றாந்தாய்க்குப்  பிறந்தவர்கள்.எனவே மன்னனால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள். விரட்டப்பட்ட அவர்கள் நால்வரும் ஆளுக்கொரு கலையைக் கற்றார்கள்.

                       ஒருவன் கற்றது மந்திர வித்தை 

                     ஒருவன் கற்றது தந்திர வித்தை 

                    ஒருவன் கற்றது வாட்போர் 

                   நான்காமவன் கற்றது  நன்றாக  செய்யுள் பாடும் திறன் மட்டும் இல்லாமல் அதில் அறம் வைத்து பாடும் ஆற்றல்.

               இவர்கள் நால்வரும் முயன்றும் போரிட்டும் அவர்களின் சகோதரனை வெல்ல முடியவில்லை. 
                 இதில் நான்காமவன்  ஒரு நூலை எழுதினான். பின்னர் அவன் உலகியலை உணர்ந்தான். வாழ்வின் நிலையாமையை யும் உணர்ந்தான்.
                 துறவு  மேற்கொண்டான். வீடு வீடாகப் பிச்சை எடுத்து காலம்  கழித்தான். அவ்வாறு பிச்சை எடுக்கும்போது ஒருநாள் ஒரு விலைமாது வீட்டின் முன் பிச்சை கேட்டுப பாடும்போது தான் எழுதிய நூலின் சில பாடல்களைப் பாட அதைக் கேட்டு அந்த விலைமாது அந்தப் பாட்டில் மயங்கி அதனை சுவைத்து அவரை மீண்டும் மீண்டும் பாடச்  சொல்லி எழுதிகொண்டாள். அடிக்கடி  அவரை வீட்டிற்கு வரசொல்லி வேண்டி நின்றாள் .அவரு அடிக்கை வந்து பாடிச் சென்றார்.

                  அந்தக விலைமாது ஒவ்வொரு நாள் இரவிலும் தன மாளிகையின் மேன் மாடத்தில் இப்பாடல்களை யாழ் மீட்டிப் பாடிவர அதனை ஒரு நாள் ஊர்க்காவலர் கேட்டு மயங்கி  சுவைத்தனர். அதில் வரும் ஒரு பாடலில் மன்னன் இறந்து போனாதாகப்  பாடுவதைக் கேட்டு அவர்கள்அதிர்ந்துபோய்  தங்கள் தலைவனிடம் அறிவிக்க அத்தலைவனும்வந்து அப்பாடலைக் கேட்டு அதிர்ந்துபோய்   கேட்டு அவன் அரசனிடம் அறிவிக்க. அரசன் அந்த விலைமாதுவை அழைத்துவந்து விளக்கம் கேட்க அவள் துறவி பற்றி  சொன்னாள் .

                  அரசன் உடனே அந்த துறவியை அழைத்துவர . ஆணையிட்டான். ஆனால் அந்த துறவி உடனே வரவில்லை. பின்னர் நெடுநாள் கழித்து  வந்தார். அரசன் அவரை வினவ துறவி தான் அரசனுடைய சகோதரன் என்பதை உணர்த்தினார். 
                    
                      அரசன் அந்த பாடலைப் பாடகச்  சொல்ல துறவி  மறுத்தார்.

                    அரசன் வற்புறுத்த துறவி சொன்னார் நான் பாடி முடித்ததும் நீ இறந்துவிடுவாய  என்று..

                  அரசன் கவலைப்படவில்லை. பாடுங்கள். உங்கள் பாடல் தமிழ்ப்  பாடல் சுவைக்காக  நான் உயிரைவிடச்  சம்மதம்  என்றான்.

                 அதன்படி பச்சை ஓலைகளால் 100 பந்தல்களை அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் அரசன் உட்கார்ந்து கேட்கவேண்டும் . ஒருபாடல் பாடி  முடிந்ததும் ஒரு பந்தல் எரிந்துவிடும். இப்படியாக 100 வது பாடல் பாடும்போது அரசன் பிணச் சடங்குகள் யாவும் செய்து பிணம் போல் படுத்துக்கொண்டு கேட்கவேண்டும் என்றார்.
அரசனும் அவ்வாறு உடன்பட்டான். 

                 துறவியும் 100 வது பாடலைப் பாடி முடித்ததும்  ஈம விறகுகள் எரிந்து அதன் மேல் படுத்துக் கேட்டிருந்த  அரசன் மேல் தீ பற்றி அவன் உயிர்  பிரிந்தது.(எரிந்தது).

                    தமிழுக்காக ...தமிழ் சுவைக்காக  சகோதரன் பாட அரசன் உயிரை விட்டான். 

                    யாரும் ஆற்றமுடியாத செயலை செய்து புகழ் பெற்றவன் அந்த அரசன்.,

                 அவன்தான் நந்திவர்மன்.

               அவனுக்காக ப் படப்பட்டதுதான் நந்திகலம்பகம்.

             

Wednesday, November 18, 2015

சின்னதாய்... ரொம்ப சின்னதாய்... ஒளிவிளக்கு...




                   மாண்பமை பேராசிரியர் அவர்.

                   நேர்மை, ஒழுக்கம், சத்தியம் இவற்றோடு எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர்.

                     70 நூல்களை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு வைரம்.  சிந்தனையும் புதுமையும் செழிப்பும் தரமும்  ஒன்றையொன்று விஞ்சும் எழுத்துக்கள்.

                      அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

                       அது காலைப்பொழுது.. சிற்றுண்டி நேரம்.  சென்றதும் அமரச் சொல்லிவிட்டுக் கேட்டார் சாப்பிட்டீர்களா?

                         சாப்பிட்டேன் ஐயா என்றேன்.

                          இருங்கள் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் நான் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று உள்ளே போனார். அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்துவிட்டார்.

                          சாப்பிட்டீர்களா ஐயா என்றேன்.

                          ஆமாம். இட்லி சூடாக இருந்தது. நான்கு இட்லிகள் சாப்பிட்டேன் என்றார்.

                          போதுமா ஐயா என்றேன்.

                          போதும். நான் அதிகம் சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுபவன் என்றார்.

                           24 மணிநேரமும் தின்பதற்கு இருந்தும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரின் தமிழ்த்தொண்டு அளப்பரியது. பணி ஓய்வும்.. நிறைய பணமும்.. நல்ல பிள்ளைகளும் இருந்தும் அவர் தன் தமிழ்த் தொண்டை நிறுத்தவில்லை.

                            என் தந்தை அடிக்கடி சொல்வார்.

                            பசிக்குத்தான் சாப்பிடவேண்டும்.  பசித்தவன்தான் விழித்திருப்பான். குறைவான உணவு உண்பவன்தான் நிறைய சாதிப்பான். உணவின் மீது அதிகக் கவனம் வைப்பவன் ஒருபோதும் சாதிப்பதில்லை.

                            எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் தாய் அவளுக்கு விதவிதமாக சாப்பாடு கட்டித்தருவதைப் பெருமையாகச் சொல்வாள்.

                             எப்போதும் வகைவகையாக உணவு உண்பதைத்தான் பேசுவாள். உணவு உண்ணும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்வாள்.

                              ஒருசிலர் சாப்பிடுகிற நேரத்தை வீணடிக்கும் வகையில் அடுத்தவர் சாப்பாட்டின் குறைகளைப் பட்டியலிட்டு ஆலோசனைகள் நல்குவார்கள்.

                             பசி என்பது வயிற்றை நிரப்புவது. இன்னொரு பசி என்பது முழுமையாக அறிவை நிரப்புவது.

                                 பசித்திரு... தனித்திரு.. விழித்திரு.. என விவேகானந்தர்
சொன்னார்..

                                 உணவு மட்டுமே வாழ்க்கையல்ல.. அறிவின் உணர்வு அதைவிடமுக்கியமானது.

                                  குப்பைக்கூடையாய் வயிற்றை உணவு கொண்டு நிரப்புவதைவிட.. அறிவின் கூடையில் முத்துக்களைச் சேகரிப்பது நன்று.

                                 பேராசிரியரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது அவர் நூலில் எழுதிய வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது.

                                   உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை இந்த உலகில் ஏற்ற வேண்டும்.

                            

Tuesday, November 17, 2015

மழையின் கோபம்...





                       மழையின் பெருஞ்சினத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

                      கட்டுக்கடங்காத கோபமாய் அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
       
                       அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறோம்.

                       அதன் நெற்றிக்கண் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறோம்.

                        தேள் கொட்டினால் கடுக்கிறது.

                       மழையும் கொட்டுகிறது..

                       யாரும் அடித்தால் வலிக்கிறது.

                       மழை(யும்) அடிக்கிறது.

                      எல்லோரையும் பாரபட்சமில்லாமல் நனைக்கிறது.

                      எங்கும் ஈரமாயிருக்கிறது. மனது தவிர.

                      உள்ளே மனது ஈரமாவதற்குத்தான் வெளியே பெய்யெனப் பெய்கிறது மழை. பெருகி வெள்ளமாகிறது.

                      அடித்துக்கொண்டுபோகிறது உயிர்களை.

                      மழையின் வாழிடத்தை அதன் கூடுகளை... குளங்களை... ஏரிகளை...நீர்த்தேக்கங்களை.. கிணறுகளை... குட்டைகளை.. என எல்லாவற்றையும் அடைத்து... தூர்த்து... மனைகள் போட்டுவிட்டோம். நாம் வாழ.

                      இயற்கையின் இடத்தைப் பிடுங்கி நாம் செயற்கையாய் கட்டிக்கொண்டோம்.

                      அல்லிகளும்.. தாமரைகளும்.. பறவைகளும் களித்து மகிழ்ந்த எத்தனையோ நீர்நிலைகளை அழித்துவிட்டோம்.. மனதில் ஈரமில்லாமல்.

                         வனவிலங்குகளின் காடுகளை அழிக்க அவை நகரங்களை நோக்கி வந்தன.
                         ஆபத்து என்று அலறினோம்.

                         அவற்றின் வாழிடத்தில் நாம் இருந்துகொண்டு அவற்றை விரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

                          ஆகவேதான் மழை தன் இருப்பிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடியது. கேட்கவில்லை. அழுது பார்த்தது.  கண்டுகொள்ளவில்லை.
                   
                           நனைத்து பார்த்தது. நனையவில்லை மனம்.

                          இனி போராட்டத்தின் உச்சமாய் கொட்டியும்..அடித்தும்.. வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளில் புகும்போது கதறுகிறோம்..

                           இது மழை தரும் பாடம் நமக்கு.

                           இது சிறுகோபம்தான்.

                           விழித்துக்கொள்ளவேண்டும்.

                           அவரவர் ஊரில் இருந்த குளங்களையும் ஏரிகளையும் நீர்த் தேக்கங்களையும் மழையின் வீடுகளாக அவற்றைத் திருப்பி அளிப்போம். இயற்கையோடு ஒத்துப்போவதுதான் இயல்பானது.

                          இயற்கைதான் மனிதனை வாழவைக்கிறது.

                         இயற்கையாய் வாழ்வதுதான் வாழ்க்கை.

                         அடுத்த மழைக்காலத்தில் மழையின் கோபத்திற்கு ஆளாகாமல் அவற்றின் வீடுகளை அவற்றிற்குத் திருப்பித் தருவோம்.

                          தமிழகமெங்கும் பச்சை வளம்பெறட்டும்.

                          பசுமை மலரட்டும். நம் வாழ்க்கையும் வளம் பெறட்டும்.

                         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

                         இளங்கோவடிகள் போற்றிய மாமழையை நாமும் போற்றி வாழும் வாழ்வை உருவாக்குவோம்..

Monday, November 16, 2015

சில நிகழ்வுகளும்... மன வருத்தங்களும்..

பாரிசில் வன்முறையால் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுதானா? அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் ஆண்மையற்றவர்களாக திறனற்றவர்களாக கோழைகளாகவே இருக்கிறார்கள். நெஞ்சுரம் என்பது இதுவல்ல. எதுவுமே தெரியாமல் இறந்துபோன உயிர்களுக்காக வருந்துகிறேன்.
< ஆ. மழை கொட்டித் தீர்க்கிறது. எங்கும் இயல்புநிலை பிறழ்ந்து கிடக்கிறது. அரசும் அலுவலர்களும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இன்னல்கள் தீர்க்க. எல்லா சேனல்களும் காட்சிப்படுத்துகின்றன. தவிக்கும் மக்களுக்கு வெள்ளத்தில் உயிருக்குப் போராடும் மக்களுக்கு அவரவர் முடிந்தளவு உதவி செய்வோம். விமர்சனத்தையும் குறைபேசுவதையும் விலக்கி வையுங்கள். உதவும் மனத்தைத் திறந்து வையுங்கள்.

Monday, November 9, 2015

                                                        காலக்கணக்குகள்...
                                                                         ஹரணி

         காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின் அடையாளமல்ல. ஆனாலும் பெரும்பாலான குடும்பங்கள் அப்படித்தான் இப்போது. எனவே தவறான ஒரு பாதைக்குச் சமுகம் திருப்பப்பட்டு அதைநோக்கிப் பயணப்படுகிறது என்பதை நினைக்கவே வருத்தமாகத்தான் இருக்கிறது.

            காலையிலேயே போய் தேங்காய் பறிச்சிட்டு வாங்கன்னு சொல்றேன்.. அசமஞ்சம் மாதிரி உக்காந்திருக்கீங்க.. ஞாயிற்றுக்கிழமைன்னா எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு எழுதியிருக்கா.. என்றாள்.

             இரு ஆள வரச்சொல்லியிருக்கேன்..பத்து மணிக்கு வரேன்னு சொல்லியிருக்கான்.. வந்த்தும் போறேன்.. என்றான் வேலு.

             அப்ப இட்லிக்கு பொடி வச்சு சாப்படுறீங்களா? தேங்காய் சட்னி இல்லாம ஐயாவுக்கு டிபன் இறங்காதே.. என்றாள் கேலியாக.

             அவளைப் பார்த்தான். இந்த வயதிலேயே இத்தனை கோபமும்.. பொறுமையின்மையும்.. பிடிவாதமும்.. மன இறுக்கமும் இருந்தால் வெகு சீக்கிரம் நோய்களுக்கு ஆட்பட்டுவிடுவாள்.. வாழ்நாள் அதிகமென்றால் நெடுங்காலம் படுக்கையில் கிடந்து மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை வந்துவிடும்.. அதை நினைத்து பயந்தான் வேலு.

             சங்கரி.. எதுக்கும் பதட்டப்படாதே.. படபடன்னு வார்த்தைகளைக் கொட்டாதே.. நடக்கறது நடக்கும். எதையும் நிதானமா பேசு.. செய்.. உடம்ப கெடுத்துக்காதே..

             எனக்கு எந்த கேடு வந்தாலும் அது உங்களாலதான்.. எனக்குன்னு தனியா எதுவும் வராது.. ஒவ்வொரு நாளும் உங்க்கிட்டே கத்திகத்தியே என் தொண்ட்டைத்ண்ணி வத்திப்போவுது..

               சரி விடு..

           வேலு குமரன் நகரில் குடியிருக்கிறான். ஏற்கெனவே பாரதி நகரில் ஒருவீடு இருக்கிறது. அதன் கொல்லைப்புறத்தில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. நன்றாக்க் காய்க்கின்றன. மாத்த்திற்கு ஒருமுறை போய் ஆளைவிட்டு மரத்தில் ஏறச்சொல்லி தேங்காய் பறித்துக்கொண்டு வருவான். இது வழக்கமாக நடைபெறுவது. அதைத்தான் தற்போது நினைவுப்படுத்திப் படுத்துகிறாள். சங்கரி சேமிக்கிறேன் என்கிற பெயரில் கருமித்தனம் மிக்கவள். இத்தனைக்கும் மருத்துவமனையில் வேறு வேலை பார்க்கிறாள் நர்சாக. ஆனால் அதற்குரிய பண்புகள், இரக்க்க்குணம் எதுவும் கிடையாது. நோயாளிகளிடம் கடுகடுவென்று பேசுவாள். ஊசி போடும்போது சரக்கென்று அழுத்தமாக்க் குத்துவாள். கேட்டால் வாய மூடிக்கிட்டு கிட.. நீ ஒரு பேஷ்ண்ட்தானா.. எத்தனை வந்து கெடக்கீங்க? என்பாள். சக நர்சுகள் கூட ஏம்பா இப்படி பேசறே அவங்களே நோயாளிங்க.. நம்ப கோபத்தை அவங்க்கிட்ட காமிக்காதே... அந்தப் பாவம் வேறயா நமக்கு என்பார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள்.

            பத்துமணிக்கு ஆள் வர வேலு தேங்காய் பறிப்பவனை தன்னுடைய டூவீலரில் ஏற்றிக்கொண்டு பாரதி நகர் போய் இறஙகினான்.

      இவன் கொல்லைக்குப் பக்கத்து பிளாட்டில் ஒரு குடிசை வீடு இருக்கிறது. அதில் யாரோ வாடகைக்கு இருக்கிறார்கள் அதில் குடியிருக்கும் பெண் வேலுவைப் பார்த்த்தும் அருகில் வந்தாள்.

          வேலு அண்ணே... உங்ககிட்ட வருஷக்கணக்கா சொல்றோம் கேட்க மாட்டேங்குறீங்க... தேங்காய் பறிக்கும்போதெல்லாம் காயும் மட்டையும் கூரைமேல விழுந்து பொத்து கிடக்கு.. மழை பெஞ்சா.. டிவி, தையல்மிஷின் எல்லாம் நனைஞ்சு வீணாப்போவுது.. உங்க மரத்து மட்டை உரசியே கீத்து எல்லாம் வீணாப் போயிடிச்சு.. சங்கரி அக்காக் கிட்டேயும் பலதடவை சொல்லிட்டேன் கேக்க மாட்டேங்குறீங்க.. கீத்தயாவது மாத்திக்கொடுங்கண்ணே.. இந்தப் பக்கம் வர்ற மட்டைகளை கழிச்சாவது விடுங்க..

            வேலு அவளை முறைத்துப் பார்த்துப் பேசினான்.. அதெல்லாம் முடியாது.. மரத்தை எதுவும் செய்யமுடியாது.. கீத்து மாத்தறதா எவ்வளவு செலவு ஆவும் தெரியுமா?

            எங்கப் பக்கம் வருதே மரம்? என்றாள்.

            உங்க வீட்டு ஓனர்கிட்டே சொல்லுங்க.. அப்பவே சொன்னோம்.. வீட்டைத் தள்ளிக் கட்டுங்கன்னு..கேக்கலே..

            இது என்னண்ணே நியாயம் பேசறீங்க? மனசாட்சி இல்லாம.. அவங்க அவங்க பிளாட்டுலே அவங்க இஷ்டப்படித்தான் வீடு கட்டுவாங்க.. உங்க மரத்தை அடுத்த பிளாட்டுலே இடைஞ்சல் பண்ணுதுன்னு சொன்ன கேக்கமாட்டேங்குறீங்க..

            உங்க கீத்து கொட்டகைக்காக மரத்த வெட்டமுடியுமா? நீ ஏறி பறிய்யா தேங்காயை... கயிறு கட்டி இறக்கு கொலையா இருந்தா.. என்றான்.

            அப்படியும் நாலைந்து தேங்காய்கள் கீற்றின் மேல் விழுந்தன. அந்தப் பெண் ஓடிவந்து சத்தம்போட்டாள்.

             மனுஷ ஜென்மமா நீங்க.. புள்ள குட்டியள வச்சிக்கிட்டிருக்கோம்.. இப்படி அநியாயம் பண்ணறீங்களே.. மாடிவீட்டுல இருக்கோம் எதுவும் ஆவாதுன்னு நினைக்கறிங்களா.. ஆண்டவன் பாத்துக்கிட்டிருக்கான். உங்க தலையில விழும்..

             மரியாதையா போயிடு.. என்று பதிலுக்கு கத்தினான் வேலு.

             அந்தப் பெண் போய்விட்டாள்.

             எத்தனை காய் இருக்கு? என்றாள் தேங்காய் பறித்தவனிடம்.

             நாப்பது காய் இருக்கும்மா...

             சரி.. அவருக்குக் பறிகூலிய கொடுத்து அனுப்புங்க.. என்றாள்.

             அவன் போனதும் உடனே பத்து தேங்காய்களை எடுத்து வைத்துக்கொண்டாள். இது போதும் வீட்டுக்கு. மற்றவைகளை மட்டையோடு தேங்காய் 12 ரூபாய் என்று சொல்லி கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துக்கொண்டுபோய் அக்கம்பக்கம் வீடுகளில் கொடுத்துவிட்டு கையோடு பணத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். 360 ரூபாய் லாபம் தேங்காயால் என்றாள் சங்கரி.

              அந்த பக்கத்து பிளாட் கண்டபடி பேசறா.. என்றான் வேலு.

              மரத்தை எல்லாம் வெட்டமுடியாது. அது செண்டிமெண்டா வச்சிருக்கோம். அப்பவேதான் சொன்னோம்ல தள்ளி கட்டிக்கங்க வீட்டைன்னு கேக்கலே...அதுக்கு நாம என்ன பண்ணமுடியும்? இது ஒரு பிரச்சினையா...? தேங்கா பறிக்கறப்ப பேசுவாங்க.. அப்ப வாயை மூடிக்கிட்டு வந்துடுங்க.. மறந்துடுவாங்க..

               அன்று மாலை கூட்டமாய் வந்தார்கள் தெருப்பசங்க. எல்லாரும் சங்கரியின் மகன் மகேசின் தோழர்கள்.

                மகேசைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

                அய்யய்யோ என்னடா ஆச்சு? என்று பதறியபடி வாசலுக்கு ஓடினாள். வேலுவும்.

                ஒண்ணுமில்லே.. ஆண்டி.. சைக்கிள் ஓட்டிக்கிட்டு திரும்பும்போது எதிரே ஒரு பைக்காரன் வந்துட்டான்.. இவனால பாலன்ஸ் பண்ணமுடியா வாய்க்கால்ல விழுந்துட்டான்.. முழங்கால் அடி.. வாயிலே அடி..

                  உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. முழங்காலில் பழைய இரும்பு ஒருரூபாய் நாணயம் அளவுக்கு சிராய்ப்பு இருந்தது சிவந்து.

                 நடக்க முடியாமல் கால்கள் மடக்கி வலிக்குதும்மா.. தாங்க முடியலே என்றான்.

                டாக்டர் கிளினிக்கு ஆட்டோபிடித்து கொண்டுபோனார்கள். உதடு கிழிந்திருந்ததை தையல் போட்டு ஊசி போட்டுவிட்டார். முழங்கால் சிராய்ப்புக்கு மருந்து போட்டார். மாத்திரைகள் எழுதித் தந்தார். வெந்நீர் ஒத்தடம் கொடுங்க..ரத்தக் கட்டு இருக்கு நாலைந்து நாளைக்கு படுக்கையிலதான் இருக்கணும்.. வேற ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லே.. மறுபடியும் ஆட்டோ பிடித்து வீட்டிற்குத் திருமபிவந்தார்கள்.

              உள்ளே கொண்டு வந்து அவனை படுக்க வைத்தார்கள். உடனே வேலுவிடம் கேட்டாள் எவ்வளவு செலவாச்சு?

               ஆயிரம் ரூபாய் ஆச்சு.. ப்ச்.. என்றான் வேலு உதட்டைப் பிதுக்கியபடி. ஆயிரம் ரூபாய் என்றதும் வருத்தம் வந்தது. முகம் இருண்டுபோனது. அப்போது அவளின் மகள் சொன்னாள்.. அம்மா... பயமா இருக்கும்மா?

                எதுக்கு பயம இருக்கு? என்றாள் சங்கரி.

                நாளைக்கு ப்ளஸ் டூ ரிசல்ட்ம்மா.. பயமா இருக்கும்மா..

                சங்கரிக்குள்ளும் அந்தப் பயம் பாம்பாய் மாறி படமெடுத்து ஆடத்தொடங்கியது.


//////////////////////////////////////////////////////////////////////////////////


    .