Thursday, June 9, 2011

சில சிந்தனைகள்.......



முடிந்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி நடக்கு மாதத்தின் இன்றுவரை சில மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வயதாகிப்போன என்னுடைய சித்தி. என்னுடைய படைப்பாள நண்பர்கள் இருவரின் அப்பாக்கள்.

வயது தளர்வு தவிர்க்கமுடியாதது என்றாலும் என்னுடைய சித்தப்பா இறந்துபோய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தன்னுடைய இரு பிள்ளைகள் வீட்டிலும் வேறு எந்த உறவு வீட்டிலும் வந்து தங்காமல் என்னுடைய வயிற்றுக்கு உழைத்துக்கொள்கிறேன் என்று சாகின்ற கடைசி நிமிடம் வரை தனியார் கடையில் வேலைபார்த்து அதில் சேமித்து தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்குத் தவறாது செய்து யார் அழைத்தும் அவர்கள் அழைப்பையும் மறுத்து கடைசிவரை தன்மானத்துடன் உழைத்து உயிர்விட்ட அவர்களின் மரணம் பத்தோடு பதினொன்றாக இல்லை எனக்கு.

இரு படைப்பாள நண்பர்களும் கவிஞர்கள். ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். இன்னொருவர் அச்சகமும் பதிப்பகமும் இலக்கியச் சிற்றிதழும் நடத்தி வருபவர். மரணம் என்பது தவிர்க்கமுடியாதது என்றாலும் படைப்பாளர்களின் அப்பாக்கள் இறக்கும்போது அது ஏற்படுத்தும் தயரம் சற்று கூடுதலானது. அது அனுபவித்துப் பார்த்தால் தெரியும். ஒரு சாதாரண மனிதனின் தந்தை இறக்கும்போது அது தனி துயரமாகிறது. ஒரு படைப்பாளனின் தந்தை இறக்கும்போது அது இலக்கியமாகிறது என்பது என்னுடைய அனுபவம். என்னுடைய அப்பா குறித்து ஒரு நாவலை முடிக்கும் நிலையில் இருக்கிறேன். அதுமட்டுமல்ல சாதாரண மனிதனைக் காட்டிலும் ஒரு படைப்பாளனை இலக்கிய ஆளுமையை உருவாக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஒரு தந்தையின் உயிரும் உடலும் அணுவும் அதில் பின்னிப்பிணைந்தேயிருக்கிறது. அப்பா திடீரென்று இறந்துபோன அந்த தருணத்திலிருந்து ஒடிந்துபோயிருக்கிறார்கள். அந்த தருணத்திலிருந்து அவர்களை மீட்டுவிடும் காலம் என்றாலும் அதுவரை நிரம்பியிருக்கும் வெறுமை எதனாலும் மீட்கமுடியாதது என்பதுதான். இருவரின் அப்பாக்கள் ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்.

இலவசம் என்கிற சொல்குறித்து நிறைய யோசிக்கிறேன். குருகுலக் கல்வியில் மனமுவந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வியை தலைமுறைகளுக்கு இலவசமாய் தந்திருக்கிறார். தங்களின் அனுபவங்களைப் பலர் ஏடுகளிலும், கல்வெட்டிலும், செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் இலவசமாக தந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அயல்நாட்டுப் பெண்களைச் சிறைப்பிடித்தும் கொள்ளையடித்தும் தாலியறுத்தும் சேகரித்த பொருள்களை இலவசமாகத் தன்னுடைய மக்களுக்காகவும் தன்னுடைய புகழுக்காகவும் இலவசமாக வாரியிறைத்த வேந்தர்களும் மன்னர்களும் உண்டு. வாசலில் பசித்து நின்றவனுக்குப் பசியாற இலவசமாய் உணவு தந்து குளிர்ந்தவர்கள் உண்டு. இதனையே கூட்டங்களுக்குப் போட்டு விளம்பரப்படுத்திய இலவசங்களும் உண்டு. இலவசம் என்பதில் பல முரண்பாடுகளைக் கண்டறியமுடிகிறது. வெள்ளம், புயல், இயற்கை சீற்றங்களினாலும் வர்க்க முரண்பாடுகளின் ஆதிக்கத்தாலும் ஏற்படும் பேரழிவுகளுக்குப் பின்னாலும் இருக்க இடம் உண்ண உணவு உடுத்த உடை என்று இலவசங்கள் பட்டியலிடப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்துகிறோம் என்று பல்வேறு மதவாதிகளும் தங்களுடைய கருத்துச் செல்வங்களை இலவசமாக மக்களுக்கு வாரியிறைப்பதிலும் ஒரு கலக்கம் இருக்கவே செய்கிறது. ஒரு இன்பத்தையும் ஒரு துன்பத்தையும் இலவசத் தராசில் சமூகம் நிறுக்கிறது. அரசியல் இலவசங்கள் இப்போது டிவி, கேஸ், அரிசி, இப்போது மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று விரிந்துகிடக்கிறது.

சிலவற்றைப் பின்வருமாறு இலவசமாக எண்ணிப்பார்க்கலாமா?

1. உலகின் ஒரு மனிதனுக்கு மிகஉயர்ந்த வாழ்க்கைப் பாடத்தை வறுமை கற்றுத்
தருவதுபோல எதுவும் கற்றுத்தந்துவிடமுடியாது. இந்த வறுமையையே வாழ்க்கை
யாகக் கொண்டு படித்து நல்ல தரத்தில் நிற்கும் மாணவர் மாணவிகளை அடையாளம்
கண்டு அவர்களின் படிப்பு முழுக்க இலவசம் என்றும் படிப்பு முடித்தவுடன் கண்டிப்பாக
நிரந்தரமாக ஒரு வேலை இலவசம் என்று அரசு முடிவெடுத்தால் அந்த இலவசம்
தரமானது.

2. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதில் ஒரு விழுக்காடு (?) மட்டுமே
உண்மை ஏழை விவசாயிக்கு சென்று சேர்கிறது. எனவே இதனை தயவு தாட்சண்யம்
இல்லாமல் ரத்து செய்து இந்த இலவசத்தை ஏழைப்பெண் திருமணத்திற்கும் அவளை
ஏற்கும் ஏழை கணவனுக்கு ஒரு நிரந்தர வேலை எனவும் மாற்றினால் அந்த இலவசம்
தரமானது.

3. வீட்டுக்கொரு இலவசம் என்பதை அந்தந்த வீட்டின் படித்த ஒரு பெண்ணுக்கோ அல்லது
ஆணுக்கோ அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ஒரு நிரந்தர வேலையைத் தந்தவிட்டால்
டிவி, எரிவாயு, மிக்சி, கிரைண்டர் அவர்களுக்கு தானாக வர்ங்கிக்கொள்ளும் திறன்
வந்துவிடும்.

4. முற்பட்ட இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக தகுதியும் திறமையும் நிரம்பப்
பெற்றவர்கள் இன்னும் வாழ்வின் அச்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். தகுதியும்
திறமையும் கொண்டவர்கள் அவர்களுக்குரிய வாய்ப்பைப் பெருக ஒதுக்கீடு என்பதை
சில நிலைகளில் கட்டுப்படுத்தி அவர்களையும் இந்தத் தகுதி திறமைக்குள் உட்படுத்த
லாம். மேலும் கல்வி உதவித்தொகை என்பது பெரும்பான்மையும் சரியாகப் பயன்
படுத்தப்படாமல் வேறு பயன்களுக்கு செலவு செய்வதை இன்னும் சற்று தீவிரமாகக்
கண்காணிதது ஒழுங்குபடுத்தினால் கல்வித்தொகை என்பதன் அர்த்தம் சரியாகும்.

5. வேலைக்குச் சேருவதில் ஒதுக்கீடு பின்பற்றுவது நடைமுறை. அதற்காக பதவி உயர்வு
போன்று ஓய்வுபெறும்வரை ஒதுக்கீடு பின்பற்றுவது தகுதியையும் தரத்தையும் பாழ்
படுத்தும்.

6. கடவுளும் பக்தியும் அவசியமானது. அதற்காக போக்குவரத்து நெரிசலான சாலைகளில்
ஆபத்தான மின்கம்பங்களில் ஒலிபெருக்கி கட்டுவது இவற்றைக் கட்டாயம் தடைசெய்தல்
பல உயிர்களுக்கு நிறைவு தரும் இலவசமாகும்.

7. கைபேசி பயன்பாட்டினை வரையறுப்பது அவசியம். குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு
பயன்படுத்துவதிலிருந்து கட்டாயத் தடை விதிக்கலாம்.

8. புழுதியும் நீரும் பல நோய்களுக்குக் காரணமாகின்றன. எனவே இவற்றை ஒழுங்குபடுதத
விரைவான சாலைகள் பராமரிப்பு, தரமான நீர் சேகரிப்பு இவற்றை ஏற்படுத்தித்தர
வேண்டும். அதாவது ரியல் எஸ்டேட்டிற்கு அங்கீகாரம் வழங்கும் வரைவில் கட்டாயம்
பூங்காவிற்கு இடம் ஒதுக்கவேண்டும் என்பதுபோல் கட்டாயம் தரமான நீர் ஆதாரத்திற்கு
ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என்று நிபந்தனையிட்டு அங்கீகாரம் வழங்கலாம்.

9. மருத்துவமனைகள் இன்னும் ஆரோக்கிய சூழலில் பராமரிக்கும் நிலையை உருவாக்க
லாம். குறிப்பாக படுக்கை வசதிகள், பராமரிப்பு என்பதில் கவனம் அதிகம் வேண்டும்.
டாஸ்மாக் போன்றவற்றின் ஒழிப்பிலும் இதற்கான தொகையை மாற்றிப் பயன்படுத்த
லாம்.

இவையாவும் மனுக்களின் கோரிக்கையல்ல. மனவெளியில் கிடப்பவை. சிந்தனைக்காக மட்டுமே.

Sunday, May 29, 2011

வாசிக்க (சு) வாசிக்க


சமீபத்தில் படித்த புத்தகம் இது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் இது.

நல்ல பேச்சாளராகவும் நல்ல வாசிப்பாளராகவும் அவர் இருக்கிறார்
என்பதற்கு இந்தப் புத்தகப் பரிந்துரை சாட்சி.

புத்தகத்தின் பெயர் சாணக்ய நீதி ஸமுச்சயம். தஞ்சை சரசுவதி மஉறால்
நுர்லக வெளியீடு. சமஸ்கிருதத்தில் அமைந்த காகிதச்சுவடி. இதிலுள்ள
சுலோகங்களைத் தமிழ் வரிவடிவத்தில் அமைத்து பொழிப்புரை எழுதப்
பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர் மேற்படி நுர்லகத்தில் சமஸ்கிருதப்
பண்டிட்டாகப் பணிபுரியும் புலமையாளர் முனைவர் ஆ.வீரராகவன் அவர்கள்.

ஸமுச்சயம் என்பதற்கு தொகுப்பு என்பது பொருளாகும். சாணக்கியரால்
கூறப்பெற்ற நீதிகள் இதில் சுலோகங்களாக உள்ளன. அத்தனையும் வாழ்ககை
நீதிகள். அத்தனையும் அற்புதப் பயன் விளைவிப்பவை. அரசனுடைய கடமை
தீயோர்களை ஒடுக்கி நல்லோர்களாகிய மக்களைக் காக்கவேண்டும். அதற்காக
இதற்கு ராஜநீதி என்றும் அழைப்பார்கள்.

இதன் விலை முப்பது ரூபாய். அவசியம் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய
புத்தகம்.

இதிலிருந்து சில நீதிகள் / நெல்லிக்கனி சுவைபோல...


ஃ பணிவற்ற வேலையாள்.கொடைத்திறனற்ற அரசன்.கெட்ட நண்பர்கள்.
பணிவில்லாத மனைவி. நாலவரின் செய்கையும் தலையைத்துளைக்கும்
கொடிய வியாதிகள்.

ஃ மதிப்பும்,வேலையும்,சுற்றமும்,கல்வியும் எங்கு கிடைப்பதில்லையோ
அங்கு ஒருக்காலும் வசிக்கக்கூடாது.

ஃ சிறந்த அறிஞர்களாக இருந்தாலும் ஒரு பாமரச்சிறுவனின் நற்கருத்துக்களை
ஏற்கலாம். அது வயதான அனுபவம் வாய்ந்தவரிடமும்கூட கிடைக்காது.

ஃ முறையாக இருந்தால் பகைவரிடமிருந்தும் நல்லொழுக்கத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

ஃ செல்வச்சிதைவு,மனவருத்தம்,மனையில் நிகழும் தகாச்செயல்கள்,
வெகுமானம், அவமானம் ஆகியவற்றை அறிவாளி வெளிப்படுத்தமாட்டான்.

ஃ உணவு செரிக்காதபோது தண்ணீர் அருமருந்து. செரித்தபின் அது உடலுக்கு
வலிமை. உண்ணும் வேளையில் அம்ருதமாகும தண்ணீர் உணவின் முடிவில்
விஷமருந்தியதற்கு ஒப்பாகிறது.

ஃ பிறர் பொருளைக் காணும்போது குருடானாகவும், பிற பெண்டிருடன் பழகும்
போது அலியாகவும், பிறர்மீது குற்றம் சுமத்துகையில் ஊமையாகவும்
இருப்பவன் துர்ய்மையானவன்.

ஃ மிக அதிகமான புண்ணியங்கள்- மிக அதிகமான பாவங்கள் எதற்கும் பலன்
இப்பிறவியிலேயே கிடைத்துவிடும். 3 நாட்கள் அல்லது 45 நாட்கள் அல்லது
3 மாதங்கள் அல்லது 3 வருடங்கள் அதற்கான காலம். எனவே எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

ஃ வண்டிக்கு ஐந்து கை தொலைவும், குதிரைக்குப் பத்துகை தொலைவும்,
யானைக்கு ஆயிரம்கை தொலைவும், தீயவனுக்கு வெகுதொலைவும் என
விலகிச்செல்லவேண்டும்.

ஃ திரும்பப் பயிற்சி புரியாமல் கல்வியும், செரிக்காத நிலையில் உண்ணும்
உணவும், வறியவன் பலருடன் சேர்ந்து பொழுதுபோக்கலும், வயது முதிர்ந்த
வனுக்கு பருவ மங்கையும் விஷத்திற்கொப்பாகும்.


இவை சில சான்றுகள். 79 பக்கங்கள். அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்துவிடலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் அதற்குரிய சுலோகங்களுடன் அனுபவித்துப் படிக்கலாம்.>

Monday, May 23, 2011

சேமிப்பு முத்துக்கள்...


1. இலக்கியங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் மூன்று வகைகள் உண்டு.
அ) கூந்தல் பனை ஆ)நாட்டுப்பனை இ)லோண்டர் பனை
இலக்கியங்கள் பெரும்பான்மையும் கூந்தல் பனையில் எழுதப்பட்டன.
இவற்றில் ஒரு ஓலையில் அதிகபட்சம் 25 வரிகள் எழுதலாம். 70 ஆண்டுகள்
ஆயுள் உண்டு. நாட்டுப்பனை சாதாரணமானது. கூந்தல் பனையும் நாட்டுப்
பனையும் கலந்தது லோண்டர் பனை. தடிமனானது இது.

2. ஓலைச்சுவடியைக் கட்டியபின் அதனைத் தடுக்கும் பகுதியில் (பிரிந்துவிடாமல்)
உள்ள சிறு ஓலைக்கு கிளிமூக்கு என்று பெயர். இவற்றை சிவப்புத் துணியால்
(பூச்சிகளைப் பயங்கொள்ள வைக்க நெருங்காது) அல்லது மஞ்சள் துணியால்
(கிருமி நாசினியாகப் பயன்பட) மூடி வைப்பார்கள்.

3. முக்கியமான சுவடிகளை கோபுரத்தின் இரண்டாம் நிலையிலும் கலசத்திலும்
வைத்துப் பராமரிப்பது வழக்கம். கோயிலில் அமைந்துள்ள நுர்லகத்திற்கு
திருக்கோட்டிகை என்பது பெயர்.

4. சுவடியை துணிபோட்டுப் பாதுகாப்பதைப்போலவே சுவடிபடித்த சான்றோர்களையும்
பாதுகாக்கவேண்டும் என்றுதான் சால்வை அணியும் வழக்கம் வந்ததாம். அதுவே
இப்போது பலவற்றுக்கும் மாறிவிட்டது.

5. காஞ்சிபுரத்தில் ஏராளமான குடைவரை கோயில்கள் உள்ளன. இருப்பினும் அவை
யாவும் முழுமையாக முடிக்கப்பெறாதது.

6. வழங்கப்பட்ட தானங்களில் பாரதம் படிப்பதற்கும் இராமாயணம் படிப்பதற்கும் பாரதப்
பங்கு இராமாயணப்பங்கு என அறிவுசார்தானம் வழங்கப்பட்டமையை ஒரு
செப்பேடு குறிக்கிறது.

வரலாற்றை மறுமுறையாக வாசிக்கும்போது சுவை கூடுகிறது. அதன்விளைவாகவே இந்த பதிவு. தொடர்ந்து வாய்ப்பமைவில் எழுதுவேன் இன்னும்.

Sunday, May 22, 2011

நிகழ்வுகள்....



ஃ சிலவற்றிற்கு காரணங்கள் விளங்குவதில்லை. என்னுடைய மகனின் பள்ளித்தோழன் கோவையில் பொறியியல் படித்துவந்தான். மூன்றாமாண்டு மாணவன். விளையாட்டு, படிப்பு, மற்றும் இதர நடவடிக்கைகளில் படு வித்தகன். நிறைய சான்றிதழ்கள். நிறைய பரிசுகள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் காண்பித்துவிட்டு வரலாம் என்று தஞ்சைக்குப் புறப்பட்டவன் ரயிலில் பயணம் செய்கையில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு வந்திருக்கிறான். அப்போது அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான். இளம் வயது. தவிரவும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே மகன். அவர்களின் துயரத்தை எதைக்கொண்டு அடைப்பது?

ஃ வதந்திகள் என்பது கேவலமான ஒரு செய்கை. மொட்டைக் கடிதம் போடுவது என்பது அதைவிட படு கேவலமான செயல். இதுபோன்ற செயல்களை படிக்காதவர்கள் செய்வதேயில்லை. படித்தவர்கள்தான் அதிலும் கற்பித்தலில் உள்ளவர்கள் நிறைய செய்கிறார்கள். இதனால் எதிர்முனையில் ஏற்படும் விளைவுகளையும் துயரங்களையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் (ஓய்வு பெற்றுவிட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே) மருமகன் மருமகளைக் கண்டவர். இதில் தேர்ந்தவர். வருத்தமாக உள்ளது. ரஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.

ஃ திருச்சி மலைக்கோட்டையில் உச்சியின் இடையில் ஒரு குடைவரை கோயில் உள்ளது. இதில் மகேந்திரவர்ம பல்லவனின் சரிதை கிரந்தத்தில் உள்ளது. இது 8 சுவையான கவிதைகளாக உள்ளது. இது கற்பந்தல் எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. கற்பந்தல் எனும் சொல்லாட்சி அக்காலத்திலேயே பயின்றுள்ளமை சிறப்பு. இக்கவிதைகளின் பொருண்மை சிறப்புப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.

ஃ சமஸ்கிருத நாடக வரலாற்றைப் பற்றி படிக்கிற வாய்ப்பும் அதைப் பற்றிய சொற்பொழிவைக் கேட்கிற வாய்ப்பும் சமீபத்தில் நேர்ந்தது. அவற்றின் நாடக விதிகளைப் பற்றிக் கேட்கும்போது வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழுமையாக அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தியிருக்கிறது. நான்கு வேதங்களின் அடிப்படையில் நாடக விதிகள், ஆங்கீகம். வாஜ்ஜியம். ஆகாமியம். சாத்வீகம் எனும் 4 வகை அபிநயம் ( அதாவது மன எழுச்சியால் ஏற்படும் உடல் அசைவு, வாக்கால் ஏற்படும் உடல் அசைவு, மனசால் நினைப்பதை வெளிப்படுத்துவது, மனக்கூற்றால் பொறுமையுடன் வெளிப்படுத்துவது) அதேபோன்று நாட்டிய தர்மி, லோக தர்மி எனும் இருவகை நாடகத் தர்மங்கள் எனப் படிக்கப்படிக்க சுவையாக இருக்கிறது. அதேபோன்று மனதைப் பாதிக்கும் எதனையும் சிறுதுளிகூட மேடையில் காண்பிக்கக்கூடாது எனும் சமஸ்கிருத நாடக விதியை இன்றைய நாடகங்களோடு பொருத்திப் பார்த்து வருத்தம் வந்தது. ரஸம், அலங்காரம், சந்திகள் என விரிந்துபோகிறது. முழுமையாகக் கற்றபின் விரிவாக எழுதகிறேன்.


ஃ ஒரு சின்ன கவிதை


எல்லாத் தருணங்களிலும்
எல்லாவற்றையும் மனது
நினைக்கிறது
எல்லாவற்றையும் மறந்தும்
போகிறது..
வெளிப்படுத்த விரும்புகையில்
மறுபடியும் யோசிக்கவைக்கிறது
வெளிப்படுகையில்
நினைத்ததும்
மறந்ததும்
விரும்பியதும்
என எவற்றின் சாயலும்
கடுகளவுமில்லாது
நிகழ்ந்துவிடுகிறது...

Wednesday, May 18, 2011

செம்மொழி விருது

செம்மொழிக்கான இளம் தமிழ் அறிஞர் விருதுகள் 06.05.2011 அன்று குடியரசு தலைவர் அவர்களால் புதுதில்லியில் வழங்கப்பட்டன. தொடர்பணிகளால் அது பற்றிய குறிப்புக்களை இன்றுதான் எழுத நேர்ந்தது. தமிழ்மொழியில் குறிப்பிடத்தக்க பணிகளைத் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு வழங்கப்படும் விருது. இவ்விருது பெற்றவர்கள்ல் பலர் எனது நண்பர்கள் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பதிவு. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. நண்பர் ய.மணிகண்டன். எனது நீண்ட நாள் நண்பர். தஞ்சாவூர் சரசுவதி மஉறாலில் பணிபுரிந்தவர்.அவருடன் பல கவியரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவருடைய தலைமையில் கவிதை வாசித்து இருக்கிறேன். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிகவும் தகுதியானவர். சுறுசுறுப்பானவர். சரசுவதி மஉறாலில் பணிபுரியும்போது பல குறிப்பிடத்க்கப் பணிகளை சுவடியியல் பதிப்பிலும், இலக்கண இலக்கியங்களிலும் மேற்கொண்டவர். குறிப்பாக யாப்பியலில் தேர்ந்தவர் மணிகண்டன். கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர். மிகவும் அன்பானவர் மனிதர்களை நேசிப்பதில். வாழ்த்துகிறோம் அவரை இவ்விருது பெற்றமைக்காக.

2. நண்பர் அறவேந்தன் என்கிற இரா.தாமோதரன் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அங்கு நான் பணியாற்றிய துறையில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது அறிமுகம். ஆய்வாளராக அறிமுகம் தொடங்கிய கால்த்திலிருந்து இன்று பேராசிரியராகப் பணியாற்றும் நிமிடம் வரையிலும் காலத்தின் அருமை கருதியவர். சொற்களை அளந்து பேசுபவர். நல்ல நண்பர். நல்ல ஆய்வாளர். நல்ல ஆசிரியர். சிங்கள இலக்கணத்தையும் வீரசோழியத்தையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக சிஙக்ளம் கற்று இலங்கைப் பயணம் மேற்கொண்டு ஆய்வை நிறைவு செய்தவர். தொடர்ந்து பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அவற்றை உடனுக்குடன் புத்தகவடிவில் வெளியிட்டு வருபவர். பல பரிசுகளைப் பெற்றவர். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பேராசியர். இவ்விருதுக்காக அவரை வாழ்த்துகிறோம்.

3. நண்பர் அரங்க.பாரி என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபாற்றுபவர். பல ஆய்வுப் புத்தகங்களை வழங்கியவர். பல கருத்தரங்குகளைத் திறம்பட நடத்தி அதன் தொடர்ச்சியாக ஆய்வுக்கோவைகளைத் தந்தவர். இனிமையாக பழகுபவர். எப்போதும் எளிமையாக இயங்குபவர். தொடர்ந்து இயங்கிவருபவர். சக தோழரை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம்.

4. நண்பர் மு.இளங்கோவன் அண்ணாமலை தொலைதுர்ரக் கல்வி இயக்கக வழி தொடர்பு வகுப்பில் அறிமுகம். அன்பிற்குரிய இளவல். இனிய புன்னகையுடன் உறவுகளைப் பேணுபவர். பல்வகைப்பட்ட பொருண்மைத் தளங்களில் பல புத்தகங்களைத் தந்தவர். தொடர்ந்து அவரது இணையத் தளத்தின் வழியாக செய்துவரும் தமிழ்த்தொடர்பான பணிகள் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியவை. வரலாறு, மானிடவியல், இலக்கணம், இலக்கியம், இணையம் என முனைப்புடன் இயங்குபவர். இளவலை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம். அவரது இணையத்தளத்தின் வழியாகப் பெற்ற புகைப்படத்திற்கு நன்றி.


சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்னுடைய நண்பர் அ.சிவபெருமானின் தந்தையார் மதிப்பிற்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் ஐயா அவர்கள் தொல்காப்பிய விருது பெற்றிருக்கிறார். அவரை வாழ்த்தும் தகுதியும் வயது இல்லையென்தால் அவரை வணங்குகிறேன் பணிந்து. அடிகளாசிரியர் தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் முதல்வராக இருந்தவர். அவருடைய தமிழ்ப் பணிகள் அளவிடற்கரியன. முற்றிலும் இவ்விருதிற்குத் தகுதியானவர். அவருடைய தகுதிக்கு இன்னொரு சான்று நண்பர் அ.சிவபெருமான். இவருடைய தமிழ்ப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

இவ்விருது பெற்ற மற்ற முகமறியாதவர்களையும் வாழ்த்துகிறோம்.

இளம் தமிழ் அறிஞர் விருதுபெற்றோரிடம் வேண்டுகோள்


மேன்மேலும் உங்களின் தமிழ்ப்பணிகள் செழிப்புறட்டும். தமிழின் மேன்மை உலகெங்கும் இன்னும் தனித்துவமிக்க தரமான இடத்தை அடைய உங்களின் பணிகளும் தனித்துவம் மிக்கதாக அமையவேண்டும். தொடருங்கள் என வேண்டுகிறோம்.



புதிய அரசு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
இதன் நன்மை தீமைகளை ஆராய்வதை விட்டு மாற்றம் என்பது தேவை என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு அது நடந்திருப்பதை வரவேற்கலாம்.
அதிமுக எதிர்பாரா மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதால் சில நன்மைகள் நடந்திருக்கின்றன.

1. பணபலத்தால் மட்டும் எதையும் சாதிக்கலாம் என்பது
சரிந்திருக்கிறது.

2. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆடும் ஆட்டம்
நிலையல்ல அது நிலைகுலையச் செய்துவிடும் இருக்கும்
இருப்பையும் இழக்கவைத்து.

3. சாதிவெறிபிடித்து சாதிகளால் கட்சி அமைத்துக்கொண்டு
சாதிக்கலாம் எனபதும் அடியோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்ந்து நிலைநிறுத்தப்படவேண்டும்.

வேண்டுகோள்கள்

1. புதிய அரசு போன அரசின் குறைகளையும் குற்றங்களையும்
பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள்
என்பதைக் கவனத்தில் கொண்டால் மக்கள் நன்மை பெறுவார்
கள்.

2. புதிய அரசின் முதல்வர் குறிப்பிட்டதுபோல் சட்டம் ஒழுங்கு,
மின்வெட்டு, கல்விச்சூழல் இவற்றோடு சாலைகளைப்
பராமரித்தல், வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்களை
கட்டுப்படுத்தல், கைபேசிகளை ஒழுங்குபடுத்துதல், அரசியல்
வாதிகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்தல்
இவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

3. குறிப்பாக பள்ளிக் கல்வி நிலை ஒழுங்குபடுத்தப்படல் மற்றும்
பணியமைப்புக்களில் தகுதியானவர்கள் அடையாளப்படுத்தப்
பட்டு அவர்களுக்குரிய பணிவாய்ப்பு பணம், சிபாரிசு, சாதிய
ஒதுக்கீடு இவற்றைத் தாண்டி வழங்கப்படல் அமைந்தால்
நல்லதொரு சமுக முன்னேற்றம் அமையும்.

4. நல்ல மருத்துவ வசதி ஏழைமக்களுக்குப் பாரபட்சமில்லாமல்
கிடைத்தல் அவசியம்.

5. மக்கள் நிறைய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மிகப்
பெரும் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தச்
சூழலிலும் ஏமாந்துவிடக்கூடாது.

Thursday, April 21, 2011

மகிழ்ச்சியும் வருத்தமும்

மகிழ்ச்சியும் வருத்தமும்


நிகழ்வு ஒன்று.

வினாயக் சென் வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அது நிபந்தனை ஜாமின் எனும்போது வருத்தமாக உள்ளது.

நிகழ்வு இரண்டு

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுளை உறுதிச்செய்திருக்கிறது நீதி. மகிழ்ச்சியானது. நாவரசுவின் குடும்பம் ஒவ்வொரு முறையும் நாவரசு குறித்த தகவல் வெளியாகும்போதும் கூடுதல் துயர் கொள்ளும் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

Saturday, April 9, 2011

ஆதரவு..



வணங்குகிறேன்.

ஆதரவுக்கரம் நீட்டுகிறேன்.

உங்களின் முயற்சி வெற்றிபெறும்.சத்தியம் தோற்றபதில்லை.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம். நேர்மையான அரசியல் அமைப்பும் உண்மையும் உழைப்பும் பெருகி பாரதம் செழிக்கட்டும்

அன்னா உறசாரே..

வணங்குகிறேன்.

மகிழ்ச்சி பரிமாறல்...



என்னுடைய மகன் க.அ.குகன் தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழ்கத்தில் பி.டெக். பயோடெக்னாலஜி மூன்றாமாண்டு படித்து வருகிறான். இயல்பிலேயே ஆராய்ச்சி மனம் கொண்டவன். அவனுடைய திட்டமாக ஒரு ஆராய்ச்சியை முடித்துள்ளான். இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவே அதுபற்றிய எச்சரிக்கையை கைபேசி வழியாகத் தெரிவித்து மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவேத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கெனக் கைபேசியின் ப்ளூடூத் வழியாகக் கண்டறியும் வகையில் ஒரு பயோசென்சாரை வடிவமைத்திருக்கிறான். இதுகுறித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகத்திலும் (ஐஐடி) அதனைத் தொடர்ந்து சில கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்துள்ளமைக்கு சிறந்த ஆய்வு என்பதற்கான பரிசு வழ்ங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து அவனுடைய நேர்காணல் 7.4.2011 நாளிட்ட எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அவனுடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில் கைபேசி தயாரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மனித குலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் அதுதான் வாழ்வ்தின் அடையாளம் என்று சொல்லி மேலும் புற்றுநோய் தடுப்பிற்கும் ஏதாவது சிந்தனை செய் என்று வேண்டுகோள் வைததிருக்கிறேன்.

மேலும் மரபு சார்ந்த இசையிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உள்ளவன். அதேபோன் நல்ல கவிதைகளை இனங்கண்டு மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வான். உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ம்கிழ்ச்சியுடன்.

Monday, March 21, 2011

அப்பா..



அப்பா உங்கள் நினைவு
அடிக்கடி வருகிறது...
ஒவ்வோர் இரவும்...

பேசியாவதிருப்பீர்கள்
வாய்பேசமுடியாதுபோகுமென்று
எதிர்பார்த்திருக்காவிட்டால்.
ஏதேனும் எழுதியாவது
தெரிவித்திருப்பீர்கள் வலதுகை
செயலிழந்துவிடும் என்பது
முன்கூட்டியே தெரிந்திருந்தால்...

உங்களின் பெருந்தன்மை இல்லை..
உங்களின் பொறுமை இல்லை..
உங்களின் பேச்சு இல்லை...
உங்களின் அணுகுமுறை இல்லை.
உங்களின் ஒழுங்கு இல்லை...
உங்களின் நிதானம் இல்லை..
உங்களின் முடிவெடுக்கும் திறன் இல்லை..
உங்களின் வாக்குறுதி சத்தியம் இல்லை..
உங்களின் அமைதி இல்லை..
உங்களின் பணியாற்றும் நேர்த்தி இல்லை...

உங்களைப் போலவே இருக்கிறேன்
என்கிறார்கள்...உங்களின் எதுவும் இல்லாத
என்னைப் பார்த்து...

சட்டென்று கோபப்படுகிறேன்..
எடுத்தெறிந்து பேசுகிறேன்...
முகம் முறிக்கிறேன்...
படபடவென்று அள்ளித் தெளிக்கிறேன்..
கால ஒழுங்கும் கருத்து ஒழுங்கும் இல்லை..
வளவளவென்று பேசி எரிச்சலுர்ட்டுகிறேன்..
எல்லாவற்றிலும் கருத்து சொல்கிறேன்..
புரியாமல் நடந்துகொள்கிறேன் சூழலில்...
சிலசமயம் ரொம்ப ஒட்டுதலாக இருக்கிறேன்..
சிலசமயம் ரொம்ப வெட்டுதலாக இருக்கிறேன்..
பெருந்தன்மையாக நடந்துகொள் என்கிறார்கள்..


என் மகன் தந்தையாகும் சூழலில்
அப்பா உங்களை அடிக்கடி நினைக்கிறேன்..
உங்களைப் போல இருக்கிறேன்
எனும் ஒற்றைச் சொல்லின் பின்னால்
நான் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

அம்மாவின் குணமும் என்னுடைய குணமும்
ஒன்று என்கிறார்கள்...
அம்மா இன்றுவரை அப்படியேதான்
இருக்கிறாள்..
அதனால்தானோ அப்பா நீங்கள்?

உதவி

உதவி வேண்டும்.

கைபேசி அவசியம்தான். இருப்பினும் எஸ்எம்எஸ் எனப்படும் வசதியால் ஒவ்வொரு கைபேசிக்கும் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.
இது பிரச்சினையில்லை. BT- என அடையாளமிட்டு வரும் தகவல்கள் நிரம்பவும் கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்துகின்றன.

பிடி எனப்படும் அயோக்கியர்களிடமிருந்தும் அவர்கள் அனுப்பும் கேடுகெட்ட செய்திகளிடமிருந்து (அதாவது அதனை கைபேசிக்கு வரமுடியாத அளவுக்கு)தப்பிக்க ஏதாவது வழி உண்டா.

பெண்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். சாட் செய்கிறீர்களா என்பதுபோல செய்தி வருகிறது. இது ஒரு சான்று கேடுகெட்ட தனத்திற்கு. இந்த கேடுகெட்ட மிருகங்களிடமிருந்து (பிடி) காப்பாற்றி உதவுங்கள் வழி ஏதேனும் இருந்தால். பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை நாகரிகம் கருதி.

நீண்ட நாட்கள் பொறுத்திருந்துதான் இந்த கோபமும் ஆங்காரமும்.

Sunday, March 6, 2011

புறக்கணித்தல்


”தேர்தலைப் புறக்கணிப்போம்-எங்கள் குரல் கேட்கப்படும் வரை-
நாங்கள் விரும்பும் மாறுதல் ஏற்படும் வரை-”


இது சுந்தர்ஜியின் வலைப்பக்கத்திலிருந்து எடுத்த உறுதிமொழி.
ஓட்டுப்போடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை.சுதந்திரம். இதுகுறித்து எதுவும் சொல்ல கூடாது என்றாலும் இது வேண்டுகோள்தான்.

நாம் எல்லோரும் யோசிக்கவேண்டும்.

நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள்.
எது சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எது செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எதுவேண்டுமானாலும் செய்யலாம் இவர்களால் என்ன செய்துவிடமுடியும்? என்று நினைக்கிறார்கள்.
அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் எதுவும் செய்யாமல்தான் போய்க்கொண்டிருக்கிறோம்.

பொதுக்கூட்டங்கள்..ஊர்வலங்கள்..மாநாடுகள்...பிறந்தநாள் விழாக்கள்..எனும் பெயரால் அரசின் சொத்து - நமது சொத்து சூறையாடப்படுகிறது.படிக்கிற பிள்ளைகளுக்கு மின்சார வசதி கிடைப்பதில்லை தேர்வு சமயங்களில் மின்சாரத்தடை. இவர்கள் அளவுக்கதிகமான மின்சாரத்தை வீணாக்குகிறார்கள்.

நேர்மையான அரசியல் வேண்டும். நேர்மையான தலைவர்கள் வேண்டும். சாதியின் பெயரால்...வாரிசுகளின் பெயரால் அரசியல் அமையக்கூடாது.

மக்களை நினைக்கின்ற மக்களை வாழ வைக்கின்ற மக்களின் கண்ணீர் துடைக்கப்படுகின்ற மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிற அரசு அமையவேண்டும்.

இலவசங்கள் எனும் பெயரால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான பண விரயத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை எனும் அடிப்படையில் செலவிட்டால் அது நிரந்தரத் தீர்வாக அமையும்.

எனவே தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். ஓட்டுப்போடாமல் அமைதியாக இருங்கள். இதுதான் நமது கடமை. அவர்களுக்கு காந்திய வழியில் அகிம்சை வழியில் நிருபிக்கவேண்டும்.

முறையான கல்வியைக் கற்றல்...நேர்மையாகப் பணியாற்றல்.. தகுதியோடு பணியுயர்வு...திறமைகள் மதிக்கப்படல்...பண விரயத்தைத் தடுத்தல்...மக்களின் பிரதிநிதிதான் தாங்கள் என்று உணர வைத்தல்...இவைதான் ஜனநாயக அரசின் அடையாளங்கள். அதை அடையும்வரை இவர்களுக்கு ஓட்டுப்போடுவது கூடாது.

படிப்பறிவு என்பது நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குத்தான். சிந்திப்போம். புறக்கணித்தல் என்பதும் புல்லர்களைச் சிந்திக்க வைப்பதுதான்.

Wednesday, March 2, 2011

அல்லது


ஒரு பயணம்
ஒரு துயரம்
ஒரு அலுப்பு
ஒரு ஆர்வம்
ஒரு முனைப்பு
ஒரு கோபம்
ஒரு இயலாமை
ஒரு ஆதங்கம்
ஒரு அபிலாஷை
ஒரு அதிகாரம்
ஒரு கனவு
ஒரு கலைப்பு
ஒரு திட்டமிடல்
ஒரு உறக்கம்
ஒரு முகந்தெரியாதவனின் இடர்
ஒரு பிச்சைக்காரியின் கவலை
ஒரு சக பயணியின் எரிச்சல்
ஒரு நண்பனின் மரணச் செய்தி
ஒரு காய்கறிகாரியின் அலைச்சல்
ஒரு காமம் கிடைக்காத அவள்
ஒரு உறவின் நீக்கம்
ஒரு டீத்தாத்தாவின் எப்எம் ரேடியோ


ஒரு இளஞ்சூடான சூரியனின் வருகைவெப்பம்
ஒரு ஏக்கமுடன் பிரியும் பனியுடன் இரவு
ஒரு பறவையின் காலை வணக்கக்குரல்
ஒரு கிராசிங்கில் ஓடிக்கரையும் ரயில்,


ஏதோவொரு சந்திப்பில்
கிடைக்கும் ஒரு குழந்தையின்
அசையும் புன்னகை

அல்லது

மகளின் தொலைபேசி
அழைப்பு...

எல்லாம் இணைக்கும்
எல்லாம் மறக்கும்
எல்லாம் மணக்கும்......

Thursday, January 20, 2011

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

.

இன்று தைப்பூசம் முருகப் பெருமானை நினைந்து வழிபடும் சிறப்புத் திருநாள் இது.இந்நாளில் முருகப்பெருமானைத் தனது குருவாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அருளாளர் வடலுர்ர் இராமலிங்க சுவாமிகள். அருளாளர் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.

தமிழ் மண்புலம் செய்த தவப்பயனால் சரியாக நுர்ற்றைம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கருகில் உள்ள மருதுர்ரில் கருணீக மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகனாக அவதரித்தவர். சகோதரர் சபாபதிப் பிள்ளையால் வளர்க்கப்பெற்றவர். செந்தமிழ்க் கடவுளாகிய முருகபெருமானது திருவருட்காட்சி இளமையிலேயே கிடைத்தது. எனவே முருகனைத் தனது குருவாகக் கொண்டார். உலகெங்கும் நீக்கமற எல்லாவற்றிலும் இறைவன் சுடர்விட்டு விளங்கும் ஜோதியாக இருக்கிறார் என்று உணர்த்தியவர்.

சாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டியவர் வள்ளலார். சமயத்தாலும் சாதியாலும் விளையும் தீங்குகளைக் களைய சீர்திருத்தம் கண்டவர்.

ஏழைகள் தொடங்கி எல்லா மக்களும் அடையும் இன்னல்களைப் போக்குதற்கென திருவுளங்கொண்டு உயர்ந்த நோக்குடன் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வகுத்தார். இந்நெறிக்கிணங்க இவற்றைப் பரப்ப வடலுர்ரில் சன்மார்க்க சங்கம். சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை எனும் மூன்று அருள் நிலையங்களை நிறுவி தொண்டுசெய்த பெரும் ஞானி.

தனது பரந்துபட்ட இறை உள்ளத்தால் அருளிச் செய்தவையே திருவருட்பா எனும் அரிய பொக்கிஷம். ஆறுதிருமுறைகளாக 5818 திருப்பாடல்களாக அருளிச் சென்றிருக்கிறார். பல்வேறு சமயங்களில் வள்ளலாரால் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் தனிப்பாடல்களாகவும் எழுதப்பெற்றவை இப் பாடல்கள்.

1979 ஆம் ஆண்டு தொடங்கி 1989 வரையில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதற்கு அருமையான உரையை எழுதியவர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சாகாக் கல்வியையும் வலியுறுத்திய அருளாளர் வள்ளலார். பசி, பிணி, பகை இவற்றை நீக்கவே பாடுபட்டார். அதனால்தான் வடலுர்ரில் வயிறு என்றழைக்கப்படும் சத்திய தருமச் சாலையையும் சிரசு என்றழைக்கப்படும் சத்திய ஞான சபையையும் நிறுவித் தொண்டாற்றினார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்று உயிரிரக்கம் காட்டியவர். இன்று வடலுர்ர் ஒளிவெள்ளம் கொண்டிருக்கும். ஒளிப்பிழம்பு அருளாளரை நினைந்து போற்றுவோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவரைப் பற்றிய சுவையான தகவல்களுடன் பகிர்வேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.

Monday, January 17, 2011

வழிகாட்டிகள்....



திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு இது பொருந்தும். கடவுள் நம்பாதவர்களுக்கு அவர்கள் உயர்வாக நினைக்கும் வயது முதிர்ந்தவர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள். ஏதேனும் ஓர் உயர்ந்த பண்போ அல்லது பல உயர்ந்த பண்புகளோ இருக்கும். அன்பு காட்டுவார்கள் பிரதிபலன் பாராமல். உதவி செய்வார்கள் எதிர்பார்ப்பு இல்லாமல். எப்போதும் நல்ல செயல்களை மேற்கொண்டு நல்ல செய்திகளையே பேசுவார்கள். அவர்கள் வழிகாட்டுதலால் பயன்பெற்றவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி கொள்வார்கள்.

புறாவுக்காக தசையை அரிந்து அஃறிணை உயிர்க்கு வழிகாட்டியவன் சிபி மன்னன்.
முல்லைக்கொடியை வாழ வைக்க தேரை ஈந்தவன் பாரி.
குளிரில் நடுங்கிய மயிலுக்காகப் போர்வை தந்தவன் பேகன்.
முரசுக் கட்டிலில் படுத்த புலவருக்காய் கவரி வீசினான் மன்னன் ஒருவன்.
தன்னிடம் வந்த புலவன் வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காகத் தலையைத் தர முன்வந்தவன் குமணன்.
இதெல்லாம் தெரியாத செய்திகள் இல்லை. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கு வழிகாட்டிகள்.
சிலர் செயலில் வழிகாட்டினார்கள்.
சிலர் அவ்வாறே வாழ்ந்து வழிகாட்டினார்கள்.
சிலர் பாடியும் எழுதியும் வழிகாட்டினார்கள்.
ஆனாலும் தன்னலம் எண்ணாது கைம்மாறு கருதாது வழிகாட்டினார்கள்.
தன்னைக் காட்டிக்கொடுத்தவனை மன்னித்து வழிகாட்டினார் யேசு பெருமான்.
நபிகள் மன்னிக்கச் சொன்னார்.
புத்தர் மன்னிக்கச் சொன்னார்.
காந்தியடிகள் மன்னிக்கச் சொன்னார்.
இவர்கள் மிக உயர்ந்தவர்கள் அடுத்தவருக்கு வழிகாட்டிகளாக இருந்து வழிகாட்டியமையால்.
வழிவழியாகத் தொடர்வது இது.
ஆகவேதான் தந்தையும் தாயும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிகாட்டுகிறார்கள்.
எடுத்துக்கொள்பவர்கள் ஏற்றம் பெறுகிறார்கள்.
தடுத்துக்கொள்பவர்கள் தடுமாறிப் பயணிக்கிறார்கள் கடைசிவரை.
வழிகாட்டல் என்பது தந்தையைப் போல நல்வழிக்குத் திருப்பி கெட்டதைத் தீண்டாதே என்று வலியுறுத்தி..அதற்காக இழக்கவேண்டுமானால் தன்னை இழந்து..வழிகாட்டுகிறார்கள்.
தாய் தன் அன்பாலும் தன் தியாகத்தாலும் வழிகாட்டுகிறாள்.
தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கணத்தைப் படைத்தார். அது மிகச் சிறந்த வழிகாட்டலாக இருந்தது. அதனைப் பின்பற்றி பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதினார்கள். இன்றுவரை அழியாது இருக்கிறது.
இலக்கியங்களைப் படைத்தார்கள்.
அவர்கள் வழிகாட்டிய பாதையில் ஏராளமான பல்வகைப் பொருண்மையிலான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இன்று வழிகாட்டல் என்பது கேலிக்குரியதாகிவிட்டது.
வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்கள் தவறான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். இது கல்வி சார்ந்த நிலையில் புற்றீசல் போல பெருகிவருகிறது.
எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.
தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவன் அப்பதவியில் ஏறிக்கொண்டு தவறான வழியில் வழிகாட்டிக்கொண்டிருக்கிறான்.
எதுவும் தெரியாதவர்கள் எல்லாம் தெரியும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்கள்.
தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டலாக இருக்கின்றன.
தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.
வயதும் ஆணவமும் ஏறியதைத் தவிர அவர்கள் வேறு பேறு பெறவில்லை.
எதையும் படிக்காமல் எல்லாவற்றையும் விமர்சித்து வழிகாட்டுகிறார்கள்.
எதையும் கேட்காமல் எல்லாவற்றையும் தவறென்று மறுத்து வழிகாட்டுகிறார்கள்.
ஒரு சிறந்த தலைமைக்கு அவனுடைய பணியாளர்கள் விழா எடுக்கிறார்கள். அவன் சிறந்த வழிகாட்டலாக இருந்திருக்கிறான் அனைவரின் வாழ்விலும் என்பதை இது காட்டுகிறது.
வழிகாட்டல் இல்லாத வாழ்க்கை வரம்புகள் இல்லாத நதியைப் போன்றது. வீணாகித்தான் போகும்.
புத்தகங்கள் நல்ல வழிகாட்டல்கள்.
வாசிக்கிற பழக்கத்தையே தொலைத்தவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கிற கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எழுதுகிற பழக்கத்தையே எண்ணிப் பார்க்காதவர்கள் ஏராளமான புத்தகங்களுக்கு ஆசிரியர்களாகவும் அதற்கான விருதுகளையும் பெற்று வழிகாட்டலையே கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிற பெற்றோர்கள் அருகிவிட்டார்கள்.
அவர்களுக்குத் தொலைக்காட்சிதான் வழிகாட்டல்.
நல்ல நண்பர்கள் அருகிவிட்டார்கள் வழிகாட்டல் இன்றி.
சகோத உறவுகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்பவும் என சிதைந்துவிட்டது வழிகாட்டல் இன்றி.
ஆசிரியர் மாணவர் உறவுகள் அடியோடு வேரறுந்துவிட்டது.
மதிக்கிற இடத்தில் மாணவர்களை நடத்தவில்லை ஆசிரியர்கள். வழிகாட்டவில்லை.
வணங்குகிற இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ளவில்லை. வழிகாட்டவில்லை.
எல்லாவற்றிலும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது வழிகாட்டலுக்கு.
வழிகாட்டலுக்கு ஏங்கத்தான் வேண்டியிருக்கு.
வளர்கின்ற உலகையெண்ணி வளர்கிறது பேரச்சம்.

Tuesday, January 4, 2011

எண்ணங்கள்


நான்காக மடிக்கப்பட்டு
சாலையின் ஓரமாய் கிடந்தது
அந்த வெள்ளைத்தாள்...

காற்று அதனை எழுப்பிக்
கொண்டிருந்தது..

எடுத்துப் பார்க்கையில்
எதுவும் எழுதப்படாமல்
இருந்தது..

நினைவில் பொங்கின
எண்ணங்கள்...

உனது அன்பை எழுதுவேன்
என்றாள்...

உனது பரிவை எழுதுவேன்...
என்றது குழந்தை...

உனது அவமானத்தை எழுதுவேன்
என்றது உறவு...

உனது பலவீனத்தை எழுதுவேன்
என்றன சுற்றம்...

உனது போராட்டத்தை எழுதுவேன்
என்றது காலம்...

உனது சகிப்புத்தன்மையை எழுதுவேன்
என்றது சந்தர்ப்பம்...

உனது பற்றுதலை எழுதுவேன்
என்றது நட்பு...

உனது வாழ்வியலை எழுதுவேன்
என்றது கவிதை...

எண்ணங்கள் இறைந்தோடின
காற்றுவெளியெங்கும்...

கடவுள் வந்தார்
நீயென்ன எழுதுவாய் என்றார்
மௌனத்தை எழுதுவேன் என்றபடி
தாளை அவரிடம் நீட்டிவிட்டு
இதிலென்ன நீங்கள் எழுதுவீர்கள்
என்றேன்...

கடவுள் சொன்னார்
நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்
அவரவர்க்கான எண்ணத்தை
என்றபடி மறைய,
இப்போது தாள் என்னிடமே....

Monday, January 3, 2011

அழல்...


வானம் இளமஞ்சளைத் தங்கத்தில் பூசிக்கொண்டு கிடந்தது. நாள்முழுக்க இயங்கிய களைப்பில் தனது கோடானுக்கோடி கதிர் கரங்களைச் சுருக்கிக்கொண்டு அவதாரத்தை நிறைவு செய்த கடவுளைப்போல சூரியன் வானத்தில் தங்கப் பாதையில் சறுக்கிக்கொண்டிருந்தது அதன்போக்கில். லேசான இருள் நத்தைபோல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. கூடு திரும்பிக்கொண்டிருந்த எல்லாப் பறவைகளும் நிறபேதமின்றி கருப்புப் பூசிக்கிடந்தன. அடர் கருப்பில் சிறகுகளை விரித்திருந்தன. அவற்றின் மனமெங்கும் அவற்றின் கூடுகளில் காத்திருக்கும் குஞ்சுகளின் நினைவைத் தேக்கியிருந்தன.

சந்தனமுல்லையின் மலர்ந்த மணம் காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தது. யார் வீட்டிலோ விளகேற்றி பத்தி ஏற்றும் வாசமும் காற்றில் மிதந்துகிடந்தது.

அன்று வெள்ளிக்கிழமை.

அயிகிரி நந்தினி..தெளிவாக ஒரு சின்ன பெண்குழந்தையின் குரலில் பக்கத்து வீட்டிலிருந்து கேட்டது. சிறிய வயதில் சிலருக்கு குரல் தெளிவு இறைவனின் பரிசன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதய்ய என்று வாணி ஜெயராம் யாரிடமோ கேட்டுக் கிறங்கிக்கொண்டிருந்தார்.

சௌம்யா மாலையில் ஒரு குளியல் முடித்து அலங்காரம் செய்திருந்தாள். வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அவள் இரண்டுமுறை குளிப்பது என்பதை தெய்வ ஆணையாகக் கொண்டிருந்தாள்.

பெரிய நெற்றி என்றாலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும் திருநீறும் குங்குமமும் சௌமியாவின் அழகைத் தாண்டி ஒரு கூடுதல் அழகைத் தந்திருந்தது. நண்டுகள் ஊர்ந்த கடல் மணற்பரப்பைப்போல அவளது கருங்கூந்தல் அழகேறியிருந்தது. துருதுருவெனப் பரபரக்கும் விழிகள்.

காபி சாப்படுறியா...சௌம்யா அம்மா கேட்டாள்.

இல்லைம்மா. சாமி கும்பிட்டுட்டு வந்துடறேன்.

ஆறிப்போயிடும் சூடா சாப்பிட்டாதான் காபி நல்லாயிருக்கும்.

அப்படியே சிம்ல வை. ஆறிட்ட நான வந்து சூடுபண்ணி குடிச்சுக்கறேன்.

சாமியறைக்குள் நுழைந்தாள்.

எதிரே சுவற்றில் ஆனந்த விநாயகர். அப்புறம் வள்ளி தெய்வானையுடன் முருகன். மேலே திருமலை வேங்கடவன்..மதுரை மீனாட்சி..புன்னைநல்லுர்ர் மாரியம்மன்..

எல்லாவற்றிற்கும் முல்லைப்பூக்களில் இரண்டிரண்டுபோட்டாள். விளக்கேற்றினாள். வெள்ளிவிளக்கில் நெய் ஊற்றி சுடரை சிறிதாக வைத்தாள். நெடுநேரம் நின்று எரியும். துர்வக்கர்லில் நெருப்பெடுத்து சாம்பிராணி போட்டு வீடுமுழுக்க வலம் வந்தாள். வீடுமுழுக்க சாம்பிராணி மணம் காற்றில் சுகந்த கவிதையெழுத ஆரம்பித்தது.

சூடமேற்றிக் காண்பித்துவிட்டு திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு வெளியே வந்தாள். வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

மனம் அமைதியாகக் கிடந்தது. மனமெங்கும் மகிழ்ச்சியொன்று துளிர்க்க ஆரம்பித்தது. இப்போது அவன் நினைவு வந்தது.

அவன் சங்கரன். பாலக்காட்டில் இருக்கிறான். இந்த நேரம் என்ன செய்துகொண்டிருப்பான். தன்னைப்போலவே அவனும் கடவுள் நம்பிக்கை உடையவன் என்று சொன்னார்கள். ஒரு கோயில் விடமாட்டான் என்றும் சொன்னார்கள். தன்னைப்போலவே அவனும் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ என்று நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவே இனித்தது.

காபி ஆறிடும்மா சௌமியா...போய் குடிம்மா என்றாள் அம்மா.

எழுந்துபோனாள். காபி லேசான சூட்டில் இருந்தது. இந்த இதம் போதும். மெல்ல உதட்டில் வைத்து அருந்தினாள். மறுபடியும் அவனே வந்து சிரித்துப்போனான்.

அவனை முதன்முதலாகச் சந்தித்த தருணங்களை நினைத்துப் பார்த்தாள்.

சார்..சார்.. என்று வாசலில் குரல் கேட்டது. ரங்கராஜன் எழுந்துபோய் பார்த்தார். நடுத்தர வயது தம்பதிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.

வாங்க..யார் வேணும்?
ரங்கராஜன்னு...
ஆமா..நான்தான் உள்ளே வாங்க.. உள்ளே போய் அமர்ந்தார்கள்.
என்ன செய்தி?
என்னோட பேரு தியாகராஜன். ரிசர்வ் பேங்க்ல வேலை பார்க்கிறேன். இது என்னோட மனைவி நர்மதா. ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. எனக்கு ஒரே பையன் பேரு சங்கரன். பாலக்காட்டில் எஞ்சினியரா இருக்கான். அவனுக்குக் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்போ உங்க பொண்ணு பத்தி சொன்னாங்க..அதான் பேசிட்டுப்போகலாம்னு வந்தோம்.
எந்தப் பீடிகையும் இல்லாமல் நேரடியாகப் பேசியது ரங்கராஜனுக்குப் பிடித்துப்போயிற்று..
சரி ஜாகத்தைக் கொடுங்க. பார்ப்போம். பொருத்தமிருந்தா பார்க்கலாம். சொன்னதும் சட்டென்று சங்கரனின் அப்பா ஜாகத்தை எடுத்துக்
கொடுத்தார். ரங்கராஜனும் சௌமியாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.
ஜாதகம் பார்த்திட்டு பேசறோம் என்றார்.
இருங்க காபி சாப்பிட்டுட்டு போகலாம்.
எனக்கு டீ கொடுங்க. இவள்தான் காபி பைத்தியம்.
சங்கரன் அம்மா கேட்டாள்... நான் பொண்ணப் பார்க்கலாமா?
தாராளமா என்றபடி ரங்கராஜன் சௌமியாவைக் கூப்பிட்டார்.
சௌமியா வந்தாள்.
வாம்மா உக்காரு. என்றார்கள். உட்கார்ந்தாள்.
அவளிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு உடன் எழுந்து கிளம்பினார்கள்.
இரண்டுபேரும் பார்த்ததில் ஜாதகம் பொருந்தியது.
மனம் நிம்மதியானது.
பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.
பெண் பார்க்கும் படலம் நடந்தது. அப்போதுதான் சங்கரன் வந்தான். வெகு இயல்பாக இருந்தான். ஒரு பெண் பார்க்க வந்தவன்போல் இல்லை. விருந்தாளி வந்திருப்பவன் போல பேசினான். கேட்ட கேள்விக்கெல்லாம் சாதாரணமாகப் பதில் சொன்னான்.
எல்லோருக்கும் பிடித்துபோயிற்று சங்கரனை சௌமியா உட்பட.
ஒருமுறை யாருமறியாமல் சங்கரனும் சௌமியாவும் பார்த்துக்கொண்டார்கள். அதில் ஆயிரம் நம்பிக்கைகள் மலர்ந்து மணந்தன.
சௌமியா ஒரு புன்னகை வீசினாள்.
சங்கரன் அதை ஏந்திக்கொண்டான்.
போகும்போது அவளையும் அழைத்து போயிட்டு வரேன் என்றான். அது சௌமியாவிற்குப் பிடித்திருந்தது.
அதற்குப்பின் இருவருக்கும் செலவு வேண்டாம். திருமணத்திற்கு முந்தின தினம் நிச்சயம் செய்துகொள்ளலாம் என்று மன உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
அதற்குப்பின் ஓரிரு முறை தொலைபேசியில் பேசினான். முதலில் சௌமியா அப்பாவிடம் பேசிவிட்டு சௌமியாவிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டுப் பேசினான். இதுவும் ரங்கராஜனுக்கு நிரம்பவும் பிடித்துப்போயிற்று.
சௌமியாவிடம் மனம்விட்டுப்பேசினான். முதலில் தனது பலவீனங்களைப் பேசினான். அப்புறம் தன்னுடைய பலத்தைப் பேசினான். சௌமியா ஆச்சர்யப்பட்டாள். ஒரு யதார்த்தமானவன் நல்லவன் தனக்குக் கணவன் என்றபோது அவளுக்கு உண்மையில் பெருமையாக இருந்தது. இதுதான் உண்மையில் புண்ணியம் என்று நினைத்துக்கொண்டாள். தான் கடவுளிடம் உண்மையாக நடந்துகொண்டதற்குக் கிடைத்த பரிசு என்றும் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.
அவனன்றி இனியொரு வாழ்வில்லை என்று நினைத்துக்கொண்டாள். திருமண தேதி குறித்தார்கள். இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தன. தினமும் ஒவ்வொரு விவரத்தையும் ரங்கராஜனும் தியாகராஜனும் கூடிகூடிப்பேசி முடிவெடுத்து செய்தார்கள்.
ஊரே சற்று பொறாமை கொண்டது. பரஸ்பரம் புரிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை கத்தி முனையிலிருந்தாலும் கரும்பு முனையிலிருந்தாலும் வாழ்தல் சுலபமானதுதான்.
நினைவு கலைந்தாள் சௌமியா.
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்..நல்ல நாளில்..கண்ணன் மணிதோளில் பூமாலை நான் சூடுவேன்..பாமாலை நான் பாடுவேன்.. என்று வாணிஜெயராம் பாடியது இவளுக்காகவே என்றாற்போலிருந்தது. மனமெங்கும் சந்தோஷத் தீ பற்றியெரிந்தது..
அப்போதுதான் வாசலில் இருளைப் பிரித்து ஒரு குரல் ஒலித்தது.
ரங்கராஜன் எழுந்துபோனார்.
கொஞ்சநேரம் பேச்சுக்குரல்கள் கேட்டன.
அய்யய்யோ என்று ரங்கராஜன் அலறிக்கொண்டே கீழே சாய்ந்தார். வாசலுக்கு சௌமியா ஓடினாள். அவள் அம்மாவும் ஓடினாள்.

அப்பா என்னாச்சுப்பா...சௌமியா பதறினாள்.
என்னங்க என்னாச்சு சௌமியா அம்மா பதறினாள்.
அதற்குள் தெரு கூடி நின்றது.
செய்திசொன்னவன் இருளோடு இருளாய் திரும்பிப்போனான்.
செய்தி இதுதான். சங்கரன் இறந்துபோய்விட்டான். பாலக் காட்டில் சாலை விபத்து. சங்கரன் அப்பாதான் செய்தியனுப்பிவிட்டு பாலக்காடு விரைந்திருக்கிறார்கள்.
சௌமியாவிற்கு கண்கள் இருட்டின. மனமெங்கும் சற்று முன் எரிந்த சந்தோஷத்தீ அடர்துக்கநெருப்பை இதயத்தின்மீது கொட்டியது. மூச்சு திணறினாள். அப்படியே சரிந்தாள். ஓடிப்போய் துர்க்கினார்கள்.

வீடே மயானமாகிப்போனது.
யார் வைத்த கொள்ளி இது?
வீடே பற்றி எரிகிறது. கடவுள் இத்தனை தண்டனை கொடுப்பவரா? இத்தனை நாள் வேண்டுதலும் வீணா? அது பொய்யா?
ஏன் இத்தனை கொடூரம் என் வாழ்க்கையின்மீது கடவுளுக்கு?

காத்த ஒழுக்கமும் நேசித்த கடவுளர்களும் கடைப்பிடித்த விரதங்களும் காற்றில் கற்பூரம் எரிந்து கரைவதைப்போல பயனற்றுப் போய்விட்டது.
அவனையன்றி இனியொரு வாழ்க்கை இல்லையென்று பெருமை கொண்டது இனி வாழ்கையே இல்லையென்றா பேரிடி விழுவது..
அவனன்றி இனி வாழ்தல் இயலாது.
அவனன்றி வேறு துணை மனம் விரும்பாது.
என்ன நினைத்திருப்பான் கடைசி நிமிடத்தில். இவளை நினைத்தோம் இறப்பைத் தழுவிவிட்டோமென்றா? இவளை விட்டுப் பிரிகிறோமென்று சில கண்ணீர்த்துளிகளாவது சிந்தியிருப்பானா? உயிர் பிரியும் யாருமில்லாமல் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன துடிதுடித்திருப்பான். அடக்கடவுளே இதுஎன்ன கொடுமை எல்லாமிருந்தும் யாருமற்ற அனாதைபோல நடுச்சாலையில் உயிர்விடுவது..இது எந்தப் பிறவியின் சாபம்? யார் விட்ட சாபம்?
பேச்சற்றுப்போனாள். மனம் புலம்பி துடித்துக்கொண்டிருந்தது.
ரங்கராஜன் சௌமியாவைக் கட்டிக்கொண்டு அழுதார். சௌமியாவும் அப்பாவின் நெஞ்சில் சொல்லாத துன்பங்களையெல்லாம் மௌனத்துடிப்பில் சொல்லி துடித்தாள். தன்னைத் தேற்றிக்கொண்டு பாலக்காடு கிளம்பினார்.
சௌமியா அம்மா துடித்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு சாமியறையில் அழுதாள்.

அட பாவி தெய்வங்களா..உங்க கண்ணு அவிஞ்சுப்போச்சா? இப்படிப் பண்ணிப்புட்டிங்களே..தெய்வங்கதானா நீங்க? உங்களுக்கு நல்ல கதியே வராது என்று கடவுளர்களுக்கு சாபங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பனி பெய்ய ஆரம்பித்திருந்தது. இரவும் அடர்த்தியாக இருந்தது. இனி தனது வாழ்க்கை முழுக்க அந்த இருள் ஆக்கிரமித்துக்கொண்டதுபோல உணர்ந்தாள். சங்கரன் முதன்முதலாகப் பார்த்த பார்வையில் இருந்த நம்பிக்கை அவளுள் மரமாகியிருந்தது. அவன் இல்லாமல் இன்னொரு வாழ்க்கையை அவள் விரும்பவேயில்லை. அவனோடு இத்தனைகாலம் வாழ்ந்ததே போதும் என்று நினைப்பு வந்தது. தெளிவான முடிவுக்கு வந்தாள். வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தாள். அம்மா அருகே வந்தாள். சௌமியாவைக் கட்டிக்கொண்டு அழுதாள். சௌமியாவிற்குக் கண்ணீர் வரவில்லை.
இரவு நெடுநேரம் விழித்திருந்தாள் சௌமியா.
மனம் முழுக்க அவனே நிறைத்துக் கிடந்தான். அடிக்கடி வந்து சிரித்துக்கொண்டேயிருந்தான். ஏண்டா இப்படி விட்டுவிட்டுப் போனாய் என்று கேட்டாள்..போடி என்று செல்லமாய் பேசி சிரித்துவிட்டுப்போனான்.
இன்னொரு வாழ்க்கையை யோசிக்கவே அருவருப்பாக இருந்தது. அதனை எப்படி வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு வாழ முடியும்? நிம்மதியும் மகிழ்ச்சியும் கனவுகளும் தொலைந்த மனதோடு அந்த வாழ்க்கை எப்படி வாழ்க்கையாக இருக்கும்?
எழுந்து கதவைத் திறந்துகொண்டு உறாலுக்குள் வந்தாள். அம்மாவின் உறக்கவொலி கேட்டது. இப்போதுதான் உறங்கத் தொடங்கியிருக்கவேண்டும். மெல்ல அடுப்படிக்குப் போனாள். அங்கே ஆயில் கேன் கிடந்தது எடுத்துக்கொண்டு தன்னறைக்குத் திரும்பினாள். உள்ளே வந்து அதை வைத்துவிட்டு பாத்ரூம் போய்விட்டு வந்தாள். கைகால் முகம் கழுவி ஒழுங்கு செய்துகொண்டாள். சாமியறைக்குள் போய் அந்தப் போட்டோக்களின் முன் நின்றாள். உங்களுக்குத் திருப்திதானா? என்று ஒருமுறை வாய்திறந்து கேட்டாள். யாரும் பேசவில்லை அவள் கேள்விக்கு மௌனமாக நின்றார்கள் குற்றவாளிகளைப்போல. திரும்பி தன் அறைக்கு வந்தாள். கதவை உட்புறம் தாழிட்டாள். சன்னல் கதவுகளையும் அடைத்து கொக்கிகளைப் போட்டாள்.
தரையில் ஆசனம்போட்டு உட்கார்ந்துகொண்டு அந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் கவிழ்த்து உடல்முழுக்க ஊற்றிக்கொண்டு நன்றாக நனைத்துக்கொண்டாள். மெல்ல தீக்குச்சி கிழித்து கால் பகுதியில் வைக்கக் காத்திருந்தது குபீரென்று தீ தாவியது அவள் உடலெங்கும். வாயை மூடி உறுதியாக இருந்தாள். அவளிடமிருந்து ஒரு சிறு கேவலும் வரவில்லை. போடி என்று சங்கரன் சிரித்துவிட்டுபோனான்.
ஒரு பாம்பு ஊர்வதைப்போல அந்த அறையெங்கும் ஒரு அழல் பரவியது.

Saturday, January 1, 2011

புத்தாண்டு பரிசுகள்..


புத்தாண்டு என்பதால் மட்டுமல்ல வழக்கம்போல புகைவண்டி பிடிக்க எழும் நேரமான 4 மணிக்கு எழுந்து குளித்து முடித்தாகிவிட்டது. கோயிலுக்குச் செல்லலாம் என்று நினைத்து மாடிக்கு சென்று படர்ந்து கிடந்த முல்லைக்கொடியில் (வீட்டில் மனைவி வைத்திருக்கும் சந்தன முல்லைக்கொடியில்) மலர்களைப் பறிக்கலாம் என்று கைவைத்தபோது ஒவ்வொரு முல்லையிலும் இரவின் பனித்துளி அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. மேலே கசிந்து வந்த சூரியஒளி பனித்துளியில்பட்டு தங்கம்போல் மின்னிக்கிடந்தது. இந்த அழகு நண்பன் மதுமிதாவிற்குப் புத்தாண்டு பரிசாக.



கோயிலுக்கு கிளம்பி கடைத்தெரு வருகையில் எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு டூவீலர் கிறிச்சென்று பிரேக் அடிக்க நானும் நிதானித்து நிறுத்தினேன். பளபளவென்று மின்னும் சில்வர் கவுன் போட்டு வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்த ஒரு பெண்குழந்தை குறுக்காக ஓடிவர பின்னாலே துரத்திக்கொண்டு வந்த அதன் தாய் பயந்து அலற வண்டி மோதாமல் நின்றுவிட்டது. அந்த வண்டியோட்டியவர் சொன்னார் அம்மா..இன்னிக்கு நியு இயர்னு திட்டாமப் போறேன்..இப்படிய குழந்தய ரோட்டுல விடுவீங்க.. என்றபடி நகர...அந்தக் குழந்தை இடுப்பில் கைவைத்து சிரிப்புடன் ஒரு சின்ன நடனம்இட.. எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது கோபமுற்ற அதன் தாய் உட்ப..அந்த பிஞ்சு மழலையின் சிரிப்பு நண்பன் சுந்தர்ஜிக்குப் புத்தாண்டு பரிசாக..

மீனாட்சியம்மன் கோயியிலில் வழிபட்டுவிட்டு தட்சிணாமூர்த்தியிடம் வேண்டிவிட்டு ஆஞ்சநேயரை நெய் தீபமிட்டு வணங்குகையில் கம்மென்று முகத்தில் மோதியது துளசியின் மணம். ஒரு வயதானவர் கையடங்கா துளசி மாலையுடன் வந்து அதனை சன்னதியைப் பூட்டியிருந்தகேட்டில் வைத்துவிட்டு ஆஞ்சநேயரை வணங்கிவிட்டுப்போனார். வீட்டுலே இவருக்காக வச்சிருக்கேன் நிறைய துளசி செடிங்க. அதுல பறிச்சது என்றார் என்னிடம். அப்போதுதான் பறித்து வந்ததால் அதன் மணம் கோயிலெங்கும் கமழ்ந்தது. அந்த துளசியின் மணம் நண்பன் ரிஷபனுக்குப் புத்தாண்டு பரிசாக.

வீட்டிற்கு வந்து வழக்கம்போல வாங்கிவந்த கொத்தமல்லி காம்புகளை கூண்டிற்குள் இருக்கும் மகள் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ்களுக்குக் கொடுக்க அந்தக் கூண்டு சிறுதுளைகள் வழியாக ஒவ்வொரு காம்பாகத் தர எப்போதும்போல பரபரவென்று கீச்கீச்சென்று அழகாக ஒலியெழுப்பி கொத்தமல்லி காம்பின் சாறு உறிஞ்சும் அழகும் அந்தப் பறவைகளின் வண்ணங்களும் சகோதரி பத்மாவிற்கு புத்தாண்டு பரிசாக.



வீட்டில்வைத்திருக்கும் குபேர மரத்தின் மஞ்சள் பூக்களில் தேன் அருந்த வரும் தேன்சிட்டுகள் இன்றைக்குக் கூடுதலாக வந்திருந்தன. பூபூவாகத் தாவிக்கொண்டே தேனருந்தி சிறகடித்த அந்த காட்சி சகோதரி நிலாமகளுக்குப் புத்தாண்டு பரிசாக.

என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா ஜிஎம்பி அவர்களுக்கும் ஐயா ஆர்.ஆர்.ஆர் அவர்களுக்கும் மனம் நெகிழ்வோடு.

நண்பர் சிவகுமாரன்...நண்பர் ஆர்விஎஸ்...சகோதரி ஆதிரா...என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு இழையும் தருணங்களுடன்...


கைகூப்புகிறேன்.

Friday, December 31, 2010

கடைசித்துளி...



ஆண்டின் இறுதியில்தான்
எதனையுமே தொடங்கவில்லையென்று
உணர்கிறோம்...
தொடங்கியதான எதனையும்
முடிக்கவில்லையென்று
உணர்கிறோம்...
முடிந்த எல்லாமும் பயனில்லையென்று
உணர்கிறோம்...
ஆனாலும் தொடங்கியதென்றும்
முடிந்ததென்றும்
பயன் விளைந்ததென்றும்
ஒரு நம்பிக்கையின்
பற்றுக்கோட்டில்
நாள்களைக் கடக்கிறோம்
ஒவ்வோராண்டும்...

இவற்றில் கிடைத்த மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும் இடர்களையும்
தடைகளையும் சங்கடங்களையும்
அசிங்கங்களையும் அவமானங்களையும்
இழப்புக்களையும் ஏமாற்றங்களையும்
வெற்றிகளையும்
புன்னகைகளில் கொஞ்சமாகவும்
அழுகைத்துளிகளில் கொஞ்சமாகவும்
கரைத்துக்கொள்கிறோம்...

வாழ்வு கடந்துபோகிறது
புத்தாண்டில் வாழ்த்துக்களைப்
பரிமாறிக்கொள்கிறோம்..
ஒருசிறிதும் களைப்புறாமலும்
கவலையுறாமலும்
அழுக்குப்போகத் துவைத்து சலவைசெய்த
ஒரு சட்டையை அணிந்துகொள்வதைப்போல..
வாழத்தொடங்கிவிடுகிறோம்...

Sunday, December 26, 2010

தளும்புதல்...



திசம்பர் 26 ஆண்டு 2004.

ஆண்டவன் அமைதியாக இல்லை.

ஆரவாரமாக இருந்த உலகை வேறு உலகிற்கு மாற்றினான்.

கடலாய் பெருகியோடியது கண்ணீர்.

கடலாய் பொங்கியது உயிர் குடித்தது.

ஆழிப்பேரலை.

என்ன தவறு யார் செய்தார்கள்?

ஆண்டவனுக்கு ஏன் இத்தனை உக்கிரம்?

இத்தனை ருத்ர தாண்டவம்?

மனசுக்குள் இன்றைக்கும் அதை நினைத்தால் வேதனை நெருப்பாகிறது.

அத்தனை ஆன்மாக்களுக்கும் என்னுடைய கண்ணீர்த்துளிகள் போதாது.

ஆனாலும் என் கண்ணீர்த்துளிகளோடு தளும்புகிறேன்.

அவர்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

அவர்களைப் பிரிந்தவர்கள் அமைதி கொள்ளட்டும்.

ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும்.

Friday, December 17, 2010

தமிழ் இன்பம் 2



தமிழ் மொழிபோல் உலகிற்கு அறம் உரைத்த மொழி இல்லை என்று கூறலாம். இதற்குச் சிறந்த சான்று உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகின்ற திருக்குறள். என்றைக்குமான அழியாச் சான்றாகக் குறளைக் குறிப்பிடலாம். ஔவையின் ஆத்திச்சூடி புதுமையானது. இதனைக் கொண்டு பாரதி புதிய ஆத்திசூடி பாடிய கதை உலகறியும். ஔவை அறம் உரைக்கும் போக்கு புதுமையானது.

ஒரு நீதியைச் சொல்வது என்பது படைப்பாளன் சமூகத்தின்மேல் கொண்டுள்ள அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டுவதாகும். இதையே ஔவையிடத்தும் காண முடிகிறது.

ஒற்றை வரியில் ஒரு முழக்கம்போல ஔவை அறத்தை உரத்துச் சொல்கிறார்.
சொல்கிற நீதிக்கெனப் பயன்படுத்துகிற சொற்களில் ஆழமான உணர்வையும் சிந்தனையையும் படிப்போர் மனத்தினுள் பதிய வைக்கிறார் ஆழமாக.

பின்வரும் சொற்களைப் பாருங்கள்..


கரவேல்...கைவிடேல்...இகழேல்...பேசேல்...சொல்லேல்..மறவேல்...
விரும்பேல்...திரியேல்...இடங்கொடேல்...புரியேல்...

என்றும்

விரும்பு...ஒழுகு...இணங்கு...பேண்...செய்..வாழ்..சேர்..கொள்..வாழ்...
அகல்...எழு..

என்றும் ஆத்திசூடியில் சொற்களைப் பயன்படுத்துகிறார்..


நன்று...அழகு..கெடும்..தகும்..இல்லை..அணிகலம்..
ஒழுகு..தொழு..கொள்..

போன்ற சொற்களைக் கொன்றைவேந்தனிலும் ஔவை அறமுரைக்கப்
பயன்படுத்துவதைக் காணலாம்.

இவற்றை ஆழ்ந்து பார்த்தால் ஔவை அறம் உரைத்தலில் பல சிறப்புக்களைப்
பட்டியலிட்டு சுவைக்கலாம்.

பன்முகச் சொற்களைப் பயன்படுத்துதல் புலவரின் புலமைத்திறத்தை வெளிக்காட்ட
என்று ஒருபக்கம் வைத்துக்கொண்டாலும் இன்னொருபக்கம் இவற்றைத் தாண்டி சமூகப்
பொறுப்புணர்வுடன் செயல்படும்நிலையில் மிகுந்துள்ள பண்பையும் மாண்பையும் நாம் பாராட்ட வேண்டும்.

பேசும்போது அளவுகடந்து பேசக்கூடாது. எல்லையில்லா பேச்சு இழப்புகளையே
தரும். எனவேதான் வள்ளுவர் நாகாக்க என்றார்.

இப்போது ஔவையின் சொற்களைப் பின்வருமாறு பாருங்கள்.

(அ) (ஆ)

இணங்கு X இணங்கேல்
ஒழி X ஒழியேல்
கேள் X கேளேல்
கொள் X தவிர்
செய் X செயேல்
சேர் X அகல்
திரி X திரியேல்
மற X மறவேல்
விரும்பு X விரும்பேல்

இந்தப்பட்டியலில் நேர்ச்சொற்களும் அதற்குண்டான் எதிர்ச்சொற்களும் இருக்கின்றன. இரண்டு வகையையும் ஔவை பயன்படுத்துகிறார். நன்மைக்கு நேர்ச்சொற்களையும் (அ) தீயனவற்றிற்கு
எதிர்ச்சொற்களையும் (ஆ) பயன்படுத்துகிறார். இது மிகவும் சிறப்பானது.சுவையானது.

தீயனவற்றை மறக்கவேண்டும். சிலவற்றை அகற்றவேண்டும். சிலவற்றைத் தொடரக்கூடாது. சிலவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும். சிலவற்றை ஒழுகுதல் வேண்டும். சிலவற்றிற்கு இடங்கொடுக்கக்கூடாது. சிலவற்றைக் கைவிடக்கூடாது எனப் பாகுபாடுகளை வைக்கிறார். இதேபோன்று செயல்களை செய்யும்போது அழகு தருவது எது, தகுதியானது எது,அணிபெற நிற்பது எது, எது கெட்டநிலைக்குத் தள்ளிக் கெடுப்பது என்பன போன்றும் பயன்படுத்துகிறார்.

எனவேதான் தீயனவற்றினைக் குறிப்பிடும்போது

விரும்பேல்
பேசேல்
சொல்லேல்
செயேல்
அகற்று
ஒழி
இடங்கொடேல்
கெடும்
போன்ற சொற்களையும்

நல்லது குறித்து உரைக்கும்போது

கேள்
செய்
கடைப்பிடி
ஒழுகு
பேண்
வாழ்
அழகு
தகும்

போன்ற சொற்களையும் பயன்படுத்துகிறார். இப்போது நினைத்துப் பாருங்கள் மேற்கண்ட சொற்களை வரிசைப்படுத்தினால் நல்லனவற்றை கேள் கேட்டுப் பின் செய் அதனையே கடைப்பிடித்து ஒழுகு. அதனைப் பேணி அதன்படி வாழ். வாழ்ந்தால் அதுதான் அழகு. உலகத்திற்கு அதுதான் தகும்.

இதேபோன்று சங்கிலித்தொடர் வாக்கியத்தினை தீயனவற்றிற்கும் இணைத்துப் பார்க்கலாம்.

தீயன குறித்துப் பேசும்போது வாழ்வில் கேடு உண்டாக்கும். அதை விரும்பக்கூடாது. அதனைப் பேசவும் (பேசேல்) யாரிடத்தும் சொல்லவும் (சொல்லேல்) கூடாது. அகற்றிவிடவேண்டும் (அகற்று).அவற்றிற்கு என்றைக்கும் வாழ்வில் இடங்கொடுக்கக்கூடாது (இடங்கொடேல்). இல்லையெனில் வாழ்வு முழுக்கக் கெட்டுவிடும் (கெடும்).

இப்போது ஔவையின் ஆத்திசூடியில் சில....


அறஞ் செய விரும்பு
பருவத்தே பயிர் செய்
நன்மை கடைப்பிடி
நேர்பட ஒழுகு
தந்தைத்தாய் பேண்

இயல்பலாதன செயேல்
கீழ்மை அகற்று
கெடுப்பது ஒழி
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்..


இன்னொரு தமிழ் இன்பத்தில் சந்திக்கலாம்.

Thursday, December 16, 2010

என்றும் தமிழ் இன்பம்

தமிழ் செம்மொழியாகியிருக்கிற தருணம் இது. அதுதோன்றிய காலத்திலேயே செம்மொழிக்கான தகுதியிருந்தும் காலமும் பல்வேறு அரசியல் பின்னணிகளாலும்தான் காலதாமதமாக செம்மொழிக்கான தகுதி கிடைத்திருக்கிறது. தமிழில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் அனைவராலும் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய அவசியத்திற்குரியவை. அதில் பேசப்படாதவை இல்லை. சிந்திக்கப்படாத புதுமைகள் இல்லை. எல்லாவற்றையும் யோசித்து அவற்றைப் பாடல்களாகப் பதிவு செய்து வைத்திருக்கும் அறிவு வியக்கத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க அற்புதம் என்னவென்றால் ஒவ்வொரு பாடலும் அறிவியல் பின்னணியோடு இருப்பதுதான். அறிவியல் பார்வையோடு உள்ள மொழிதான் உலகில் நிலைக்கும் என்பார்கள். ஒவ்வொரு பாடலைப் புனையும்போது தனக்குத் தெரிந்த வானியல் அறிவு, உயிரியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, புவியியல் அறிவு எனப் பரந்துபட்ட அறிவைப் பாடல்களில் அதன் இயல்பும் சுவையும் கெடாமல் இணைத்துப் பாடியிருப்பதான் அற்புதம்.

ஓர் அரண்மனையைக் கட்டுவதற்குரிய தொழில்நுட்பத்தை நக்கீரர் நெடுநல்வாடை எனும் இலக்கியத்தில் தெளிவாகப் பாடுகிறார். யானைக்கு நாற்பது வயது வந்துவிட்டால் மலர் மலர்ந்து தானே உதிர்வதுபோல யானையின் தந்தம் உதிர்ந்துவிடும் முதிர்ந்து என்கிற குறிப்பையும் இவ்விலக்கியத்தில் காணலாம்.

நகரவியல் அமைப்புப்பற்றிய செய்திகளை அகநானுர்று தெளிவுறுத்தும். இதில் இன்றைக்கு இருக்கும் ஊராட்சி அமைப்புமுறையைக் காணலாம். கணிதவியலில் பேசப்படும் அளவைகள் பற்றி தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார். கனஅளவு குறித்து ஔவையார் பாடலில் அறியமுடிகிறது. டெலஸ்கோப் தத்துவத்தைக் கபிலர் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அணுவைப் பிளக்கமுடியும் என்பதை அணுவைப் பிளப்பதற்கான கருத்து வருமுன்னே பாடிய தமிழ்ப்பாடலால் அறியலாம்.

இவையெல்லாம் கடுகு அளவு சான்றுகளேயாகும்.

இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

இத்தோடு இலக்கியச் சுவை என்றால் தமிழில் அலுக்கும்வரைக்கும் அள்ளிப் பருகலாம் தேனின் சுவையோடு.

பாரதியைப் பொறுத்தளவில் மஉறாகவி மட்டுமல்ல. என்போன்றோருக்குப் போதி மரமும் அவன்தான். படிக்கும் யாருக்கும் அவனே ஞானகுரு மற்றும் எல்லாமும்.....

அவன் இயற்றிய சிறுகாப்பியம் பாஞ்சாலி சபதம்

தமிழின் சுவையனைத்தைம் இக்காப்பியத்தில் அனுபவிக்கலாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவன் இயற்றிய காப்பியம் இது. பாரத தாயைப் பாஞ்சாலியாகவும் கௌரவர்களை ஆங்கிலேயர்களாகவும் பாண்டவர்களை மக்களாகவும் உருவகித்து இக்காப்பியத்தை அமைத்தவன். இது விடுதலைக்காலக் கட்டத்தில் ஓர் ஆயுதமாகத் திகழ்ந்தது எனலாம்.

இக்காப்பியத்தின் சிறப்பிற்குப் பல காரணங்கள் உண்டு.

மிகச் சிறந்த உவமைகள். எளிமையான சொற்கோர்வை. அத்தனையும் அழகியல் மட்டுமன்றி காப்பியப்பொருண்மைக்கேற்றவாறு அழுத்தமான விவரிப்பு.. சொல்லுகிற முறையில் பாரதியை விஞ்சுவதற்கு இன்னொருவன் பிறந்து வரவேண்டும். உவமைகளைச் சொல்லுகிற முறையில் இழிந்தனவற்றை இழிந்த உவமைகளாலும் உயர்ந்தனவற்றை உயர்ந்த உவமைகளாலும் பாடிய திறன் போற்றுதலுக்குரியது.

சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்துவிடுகிறான் தருமன்.
கடைசியாக விதி சகுனியின் வாயால் வலியுறுத்த பாஞ்சாலியை அடகு வைக்கிறான்.
உலகத்தில் யாருமே செய்திராத செயல் இது. மனைவியை சூதாட்டத்தில் பணயப்பொருளாக அடகு வைப்பது என்று. எனவே எல்லோரும் தருமனின் இந்தச் செயலுக்குக் கடிந்து பேசுகிறார்கள். எல்லோரும் திட்டியபிறகும் பாரதிக்கு இது பொறுக்கமுடியவில்லை. தன் பங்குக்கும் அவன் திட்டுகிறான். அந்த வரிகள் பின்வருமாறு

கோயிற் பூசை செய்வோர்
சிலையைக் கொண்டு விற்றல்போலும்
வாயில் காத்து நிற்போன்
வீட்டை வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான்
சீச்சீ சிறியர் செய்கை செய்தான்...

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சாதாரண மனிதன் செய்திருந்தால்கூட மன்னித்துவிடலாம். ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த தருமன் என்கிறார். மட்டுமல்ல ஒரேயொரு சொல் சீச்சி..சிறியர் செய்கை...என்கிறான். ஒற்றைச்சொல்லில் உயிரை விட்டுவிடலாம். அத்தனை வலுவானது. அதேபோல பாஞ்சாலியை இழுத்துவர ஆள் அனுப்புகிறான் துரியோதனன். ஒரு தேர்ப்பாகனை அனுப்புகிறான். அவனிடத்தில் பாஞ்சாலி ஒரு கேள்வி கேட்கிறாள். சூதாட்டத்தில் தன்னை இழந்தபின் என்னை அடகு வைக்கும் உரிமை அவர்க்கில்லை. என்ன சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்? எனப் பலவற்றைக் கேட்டுப் போய் கேட்டுக்கொண்டு வா என்கிறாள். தேர்ப்பாகனும் இவள் கேட்பது நியாயம்தான். அதற்குப் பதில் தெரியாமல் அவளிடத்தில் செல்லமாட்டேன் என்று மனஉறுதியுடன் செல்கிறான். தேர்ப்பாகன் துரியோதனனிடம் கேட்கிறான். துரியோதனம் பெருங்கோபம் கொள்கிறான். பாகனோ பயப்படாமல் சொல்கிறான்.

அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி சொல்லில்
அக்கணமே சென்று அழைக்கின்றேன்

அந்த மகாசபையில் சாதாரண ஒரு தேர்ப்பாகனுக்கு இத்தனை துணிச்சல் அதுவும் உயிர் போய்விடும் என்றாலும் துரியோதனனை எதிர்த்துப்பேசும் துணிச்சல் எப்படி வந்தது? வேறு ஒன்றுமில்லை. அந்தத் துணிச்சல் பாரதி கொடுத்ததுதான். இன்னும் சொல்லப்போனால் அந்தத் தேர்ப்பாகன் யாருமில்லை பாரதியேதான்.

இப்படி பல சுவைகளைப் பாஞ்சாலி சபதத்தில் அனுபவிக்கலாம்.

இன்னும் பல இலக்கியச் சுவைகளை வாய்ப்பு அமையும்போது சுவைக்கலாம்.

Wednesday, December 8, 2010

சாபம்



நாம் வாழ்க்கையில் வாங்கிவந்த சாபம்தான்.

ஒரு நீண்ட கட்டுரையின் பொருண்மையை முடிந்தவரை சுருக்கியிருக்கிறேன்.
பொருண்மை கெடாமலும் எச்சரிக்கைக்காகவும்..

1. 1830 களில் இந்தியாவை சுற்றிப் பார்த்த மெக்காலே குறிப்பிடும்போது இந்தியாவில் நான் மேற்கொண்ட மிக நீண்ட பயணத்தில் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இதுவரை சந்தித்ததில்லை. நற்பண்புகளும் தனித்தன்மையுள்ள மக்களால் இந்நாடு வளம் பெற்றுள்ளது. இத்தேசத்தின் முதுகெலும்பான கலாச்சார மேன்மையை உடைத்தெறியாமல் இம்மக்களை வெற்றி கொள்வது பற்றி என்னால் சிந்திக்கவே முடியவில்லை.

2. பன்முகத்தன்மை வாய்ந்த பல மருத்துவங்களின் அறிவுச்சொத்தை இன்றைய கருவிகளின் கற்பனை அடிப்படையிலான முடிவுகளின் வழியாக கேள்விக்குள்ளாக்குவது கேலிக் கூத்தானது.

3. காசநோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவில் வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்குக் காரணம் கிருமிகளைவிட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள்தான் முக்கியம்.

4. தடுப்பூசியால் டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்க விளைவுகள் வரும் என்பது உண்மை.இந்தப் போலியோ சொட்டுமருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.

5. பன்னாட்டுக்கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும் மற்றும் திட்டங்களையும் செயற்படுத்தச் செய்கிறது.

6. பெரும்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில்தான் உள்ளது.

7. இந்தப் பன்றிக் காய்ச்சலைப் பரப்பும் என்று நம்பப்படும் கிருமி, வைரஸ் வகை சார்ந்தது என்பதும் இது கிருமி வகைகளிலேயே மிகவும் நுண்ணியது என்பதும் எல்லா மருத்துவர்களுக்கும் தெரியும். சாதாரண துணியால் ஆன ஒரு முகமூடி இந்த நுண்ணிய வைரஸிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பது உண்மையானால் உலகிலுள்ள எல்லாக் கிருமிகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தி படைத்ததாக துணி மாறிவிடும். ஆனால் உண்மை மாறானது. சாதாரணத் துணியில் உள்ள நெய்யப்பட்ட நுர்லின் இடைவௌயில் நுர்ற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளே போய் வெளியே வரும் என்பது எல்லா நுண்ணுயிரியல் மாணவர்களுக்கும் தெரியும்.

8. பன்றிக்காய்ச்சல் பற்றிய உண்மைகளை உலக சுகாதார நிறுவனம் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியிடவில்லை என்று கூறுகிறது.

9. வணிக வெறி இவ்வளவு துர்ரம் பெருக மருத்துவம் பற்றிய அறியாமைதாயே காரணம்?

10.இயற்கையாக கிருமிகள் உடலில் நுழைய முயலும்போது உடல் எதிர்ப்பு வேலையை இயற்கையாகச் செய்யும். இதற்காக உடலிற்கு இப்படியான தடுப்பூசிப் பயிற்சிகள் அவசியமில்லை. அடிக்கடி கிருமிகளை எதிர்க்கும் செயற்கைப் பயிற்சிகளை நாம் உடலுக்கு வழங்கி அதன் சக்தியை வீணடித்தால்...இயற்கையான சூழலில் அதன் சக்திகுறைவால் எதிர்க்க இயலாமல்போய்விடும்.

11. பக்கவிளைவுகள் பக்க விளைவு மருந்துகள் கெடாமல் பாதுகாக்க என்று ஏகப்பட்ட இரசாயனங்கள் இத்தடுப்பு மருந்துகளில் கலக்கப்படுகின்றன. இவ்விளைவுகளும் பக்க விளைவுகளே.

12. தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் இந்தியாவில் ஏன் அடிக்கடி ஏற்படுவதில்லை?...இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முறையான உணவுப்பழக்கம் இயற்கை சார்ந்த வாழ்வியல் நடைமுறைகள் மாறத்தொடங்கி சில பத்து வருடங்கள்தான் ஆகின்றன.

பக்க விளைவால் ஏற்பட்ட மரணங்கள் 10,06,000 பேர்
மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் 9,98,000 பேர்
மருத்துவமனை படுக்கையில் ஏற்பட்ட புண்களால்
ஏற்பட்ட மரணங்கள் 10,15,000 பேர்
மருத்துவமனையில் ஒவ்வாமையால் ஏற்பட்ட
மரணங்கள் 8,80,000 பேர்
தவறான சிகிச்சையால் ஏற்பட்ட மரணங்கள் 3,71,360 பேர்
தவறான அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட
மரணங்கள் 3,20,000 பேர்
தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால்
ஏற்பட்ட மரணங்கள் 10,09,000 பேர்
வெளிநோயாளிகளில் பக்கவிளைவுகளால்
ஏற்பட்ட மரணங்கள் 10,99,000 பேர்

ஆக மொத்தம் 67 லட்சத்து 6 ஆயிரத்து 360 பேர்

இதுகுறித்த அறிக்கையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள வாசகம்

ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரினாலும் ஏற்பட்ட மரணங்களைவிட இந்த மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம்.

நன்றி . புதுவிசை- கலாச்சார இலக்கியக்காலாண்டிதழ்
திசம்பர் 2010.



எனவே
இயற்கைதான்
நம் உயிர்காக்கும்
இறைவன்.

Tuesday, December 7, 2010

நிசப்தம்....




நிசப்தம்

யாருமறியாத வேளையில்
யாருமறியாமல் இழந்த கனவுகளைச்
சேகரிக்கும்
இறைந்துகிடக்கும் தானியங்களைப்
பொறுக்கும் குருவிகளைப்போல....

என்றைக்கோ தவறவிட்ட யாருக்கோ
உதவ மறுத்த உதவியை
மீட்டெடுக்கும்
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
மகிழ்ச்சியைப்போல...

தவறிச் செய்துவிட்ட குற்றத்தின்
பரிகாரச் சந்தர்ப்பத்தைக்
காத்து வைத்திருக்கும்
பொரிந்த குஞ்சுகளை காக்கும்
தாய்க் கோழியைப்போல....

மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட
காதலின் தடங்களைத் துருவித்துருவி
காட்சிப்படுத்தும்
வயது தளர்வில் தவிர்க்கமுடியாத
நரையைப்போல....

கனிந்த பழத்தைப்போல
எல்லாப் பக்கமும் சுவைக்கும்
கனியவைத்துண்ணும்போது...

கவனமாகவும் கையாளவேண்டும்
கச்சிதக் கூராய் முனையிரண்டிருக்கும்
கத்தியைப் போலவும்...

நிசப்தம்.

வதமும் வரமும்



போதையோடு மீறிமீறி
முத்தமிட்ட வாயைக் கிழிக்க
ஒர் இணை கைகள்...

பெண் ஈன்றேன் என்பதற்காய்
இடுப்பிலுதைத்த கால்களை
முறுக்கிச் சிதைக்க ஒர் இணை கைகள்..

எப்பவும் காமம் செருகியிருக்கும்
கண்களைக் கவ்வியெறிய
ஒர் இணை கைகள்...

கழிவுகளையும் கொத்தும் காக்கையென
கண்டதையும் வாரிக்கொள்ளும்
கைகளைப் பற்றிக் கழித்துவிட
ஒர் இணை கைகள்...

விருப்பமற்ற வேளையிலும்
மிருகமெனப் புணர்ந்துதறும்
உணர்வின் உயிரறுக்க
ஒர் இணை கைகள்....

அநியாயப்படுகையில்
அசிங்கப்படுகையில்
அருவருப்படைகையில்
அடக்கப்படுகையில்
அவதாரமெடுக்காமல்
பொறுமையெனும் கடலிலிருந்து
மேலெழும்பி வரவேண்டும்
இப்படி...

தமிழைத் தாயாய் காப்பவனைத்
தழைய தழைய அணைப்பதற்கு
ஒர் இணை கைகள்...

எல்லையில் எல்லையிலாத் தீரமுடன்
எந்தன் தாய்நாடு காத்திறக்கும்
இளையரைத் தாங்கி இளைப்பாற்ற
ஓர் இணை கைகள்..

மனநிலை இழந்துவிட்ட இதயங்களை
இதமாய் தாங்கிநிற்கும் அந்தத்
தாயுமானவனை தழுவிப் பாராட்ட
ஓர் இணை கைகள்...

சோதரத் தமிழ்மக்கள் சுடுகாடாய்
சுருண்டதற்காய் தன்னுயிரை சுட்டிட்ட
அந்த முத்துச் சகோதரனின் ஆன்மாவை
ஏந்திச் சுமப்பதற்காய்
ஓர் இணை கைகள்...

என
வருவாள் பெண்
சபிக்கப்பட்ட வாழ்க்கையில்
வதம் செய்யவும்
வரம் கொடுக்கவும்....

Sunday, December 5, 2010

சுமை





காய்கறிகளைச் சாப்பிடும்
சுவையைவிட விலை
சுமை...

சுவைக்குள்ளும் பல
சூட்சுமங்கள் சுமை...

பெய்யாமல் கெடுத்ததுபோக
பெய்து கெடுக்கிறது மழை
செய்யும் எந்த வேலையும்
மழையில் சுமை...

நீண்ட சரக்கு ரயிலைப்போல
ஊழல் ரயில்
பெட்டிகள்தோறும் விதவிதமாய்
ஊழல் சரக்குகள்...

வண்ணவண்ண விளையாட்டுக்கள்
வானவில் ஜாலங்கள்

கொஞ்சம் எலும்புகள்
கொஞ்சம் சதைகள்
கொஞ்சம் ரத்தம்
இதுதான் மனிதன்
சாப்பிடவும் முடியாமல்
துர்ங்கவும் முடியாமல்
சுகப்படவும் முடியாமல்

நாளெல்லாம் பொழுதெல்லாம்
ஏறிகொண்டேயிருக்கிறது
சுமை...சுமை...
சுமைகளைத்தவிர
வேறொன்றுமில்லை..

வருத்தம்




வருத்தமாக இருக்கிறது
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.
நினைக்க நினைக்க
வருத்தம் பொங்கி வருகிறது.
பொங்கி பொங்கி வருகிறது வருத்தம்.
வருத்தம் கொள்ளும் தருணங்களில்
வருத்தப்படும் எல்லாமும்
வருத்தப்படுவதற்குரியதாய்
இல்லாமலிருப்பதோடு
கேலிக்கும் கேவலத்திற்கும்
ஆளாக்கிவிட்டு நிற்கும்நிலைமை
எண்ணியே
வருத்தமாக இருக்கிறது.

கவனிக்க..கவனிக்க..



திசம்பர் அம்ருதா இதழில் ஒரு கட்டுரை முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பு கிரந்தப் புயலில் சிக்கிய தமிழ் என்பதாகும். அதன் சுருக்கத்தை மட்டும் தருகிறேன்.

ஒருங்குகுறி சேர்த்தியம் தமிழ்மொழிக்கு வழங்கியுள்ள 128 இடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் 56 இடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26 ஐச் சேர்க்கும்படியும் தமிழுக்கே உரியதான எ,ஒ,ழ,ற,ன ஆகிய எழுத்தொலி வடிவங்களைக் கிரந்த அட்டவணையில் சேர்க்கும்படியும் காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சிறீஇரமணசர்மா ஒருங்குகுறி சேர்த்தியத்துக்கு அனுப்பிய முன்மொழிவில் தொடங்கி கலைஞர் கடிதம் வரைக்கும் சர்ச்சைகள் பற்றியது. அவசியம் எல்லோரும் வாசித்து இதுகுறித்து எழுதவேண்டிய கடப்பாடு உள்ளது. இதில் தமிழ்மொழிக்கான ஆபத்தையும் உணரவேண்டும்.

Sunday, September 26, 2010

பகிர்தல்.....


இரண்டு சங்கடமான செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

1. ஆனந்தவிகடனில் (27.10.2010 தேதியிட்டது) தன்னைப் பாதித்த சம்பவமாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் குறிப்பிட்டிருப்பது.வெளிநாட்டிற்கு சம்பாதிக்கப்போய் 40 வயதான பீபி லுமாடா என்னும் பெண் இந்தியா திரும்பும்வழியில் பாஸ்போர்ட் தொலைந்துவிட,,,,கனவுகளோடு வந்த அந்தப்பெண் மறுபடியும் திருப்பி மஸ்கட்டுக்கே அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு விமானநிலையத்திலேயே 5 நாள்கள்
மன உளைச்சலுடன் ஏற்பட்ட அழுத்தத்தால் உறார்ட்அட்டாக்கில் இறந்துவிட்டார். வீட்டுவேலைக்கு வந்த பெண் என்பதால் இந்திய துர்தரகஅதிகாரிகள் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். இதுதான் செய்தி. நினைத்துப் பாருங்கள் பொறுப்பான இடத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் இந்த அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலை. இதற்கு ஏதேனும் ஒரு தீர்வைக் கண்டறிந்து அந்த அதிகாரிகளுக்குத் தகுந்த தண்டனை அவர்கள்
மறக்கமுடியாத அளவிற்குத் தரவேண்டும். நிச்சயம் வேண்டுங்கள் கடவுள் அவர்களை நின்று கொல்லவேண்டும். பீபி லுமாடாவின் ஆன்மா அமைதி பெறவேண்டும். 5 நாட்கள் என்ன பாடுபட்டிருக்கும் அந்தப் பெண்ணின் மனம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் இதனைக் கண்கொண்டு பார்ப்பார்களா? இன்னொரு லுமாடாவிற்கு இப்படியொரு கதி ஏற்படக்கூடாது. இன்னும் சங்கடமாகவே இருக்கிறது. வாழ்க பாரத தேசம்.

2. இதுவும் ஆனந்தவிகடனில் வந்ததுதான். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டு மரணத்தை எதிர்கொண்டிருக்கும் இரண்டு சகோதரிகள் மாதேவியும் வல்லபியும். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கொடுமையான வாழ்க்கை. இருப்பினும் அச்சகோதரிகள் சமூகப்பணியில் தீவிரமாக. அவர்களை வணங்குவோம். அந்தக் கட்டுரையின் கடைசிவரிகள் இப்படி முடிகின்றன...


.....இன்னும் கொஞ்சம் நாட்களில் எங்களின் கண் இமைகள் இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். துர்ங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால்
இன்னும் 200 வருடங்கள் கழித்துப் பிறக்கும் ஒரு குழந்தைக்குக்கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில் அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்......

யார் என்ன செய்யமுடியும்? அரசு ஏதேனும் செய்யவேண்டும். நிச்சயம் செய்யும் என நம்புகிறேன். மனசுக்குள் வேதனை கசிகிறது. தொண்டை அடைக்கிறது. என் அன்பு சகோதரிகளே உங்களுக்கு இன்னும் ஆயுளுக்காக இறைவனை வேண்டுகிறேன்.

நட்பு பக்கம்




ஒரு வழக்கமான காலைப்பொழுதில் தானாகவே வந்து அறிமுகம் செய்து கொண்டார். அப்போது ஆரம்பித்தது அந்த இலக்கிய நட்பு. கருப்புநிறம் என்றாலும் கவர்ச்சியான முகம். பௌண்டன் பேனாவை வளைத்தது போன்ற மீசை. உருண்டை முகம். பளிச்சென்ற பல்வரிசை. அறிமுகம் தொடங்கிய நாள்முதல் கலகலவென்ற சிரிப்புதான். சுருள் சுருளான முடிக்கற்றை கருகருவென்று. உடல்பயிற்சி செய்த உடல் அமைப்பு. கைகுலுக்கும்போதே ஒரு அழுத்தம் உணரலாம். அதில் நானிருக்கிறேன் எதற்கும் என்றுணர்த்துவதுபோன்ற உணர்வு கிடைக்கும். அதிலிருந்து அடிக்கடி சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலும் கையில் புகையும் சிகரெட்டுடன் இடது கையிலேந்திய டீகிளாசுடன்தான் அழைப்பார். எதற்கும் கவலைப்படாதவர். எந்தப் பிரச்சினை என்றாலும் கடைசிவரை தான் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாது தீர்த்து வைப்பார். உதவி செய்வார். எதற்கும் அஞ்சாதவர். துணிச்சல் இயல்பிலேயே இரத்தத்தில் ஊறிப்போயிருந்தது. அரசு வேலை என்றாலும் சொற்ப சம்பளம். நிறைய பிரச்சினைகள். சமாளிப்பதில் வெகு சிரமப்பட்டிருந்தாலும் போராளி குணத்துடன்தான் இயங்கி சமாளிப்பார். மனைவியும் பிள்ளைகளும் கடுகளவும் கவலைகொள்ளாத ஒரு வாழ்வை அவர் அளிப்பதில் வெகு கவனமாக இருந்தார். எனவே எங்கும் பண நெருக்கடி இருந்தது. அதை அவர் அசட்டுச் சிரிப்புடன் சந்தித்துப் பதில் சொல்லும்போது மனசுக்கு சங்கடமாக இருக்கும். கேட்டால் வேறென்ன தலைவா செய்யறது... என்று சிரிப்பார். இதுதான் புத்தகன்.

கரந்தையில் மேட்டுத்தெரு, அப்புறம் குதிரைக்கட்டித்தெருவில் மலையாள டாக்டர் வீட்டுச் சந்தில் என வெகுகாலம் குடியிருந்தார். இரண்டு பிள்ளைகள். சசிதரன், நிலா. பெண் குழந்தைமேல் ரொம்ப பிரியம் வைத்திருந்தார். பிள்ளைகள் இரண்டும் தலையைக் கண்டால் போதும் அப்பா உறரணி மாமா வந்திருக்காங்க என்று வாய்நிறைய சிரிப்பு வழிய அழைத்து போவார்கள். அதில் அதிகப் பங்கு நிலாவிற்குண்டு.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் கரந்தை விட்டு வல்லம் பகுதிக்கு குடியேறினார். அலுவலகத்தில் பிரச்சினைகள். ஒரத்தநாட்டிலிருந்து துர்த்துக்குடிக்கு மாற்றினார்கள். சளைக்கவில்லை. போனார். மாறுதல் மாறுதல் என்று அலுவலகம் படுத்தி வைத்தது. இதையெல்லாம் தாண்டி மனிதநேயம், கவிதை, இலக்கியக்கூட்டம் என்று அயராது இயங்கினார். தொகுப்பு போடவேண்டும் என்கிற ஆர்வம் மனதிற்குள் ஆழமாய் வேர் ஊன்றிக் கிடந்தது. அதை அவ்வப்போது வெளிப்படுத்துவார் அதைப்பற்றி கேள்வி கேட்கும்போது மட்டும். கவிதை எழுதுவதற்கு என்று அதிக நேரங்கள் நாள்கள் கடத்தியதுண்டு. எழுதுகிற பேனா, தாள் என எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியான உயர்ந்த தேர்வு உண்டு. அழகான சாய்வான எழுத்துக்கள். செதுக்கி வைத்ததுபோல எழுதுவார். ஒரு கவிதை எழுதி முடித்துவிட்டால் அதைப் பற்றி மிக அருமையாகப் பேசுவார். நீண்ட நாள் குழந்தையில்லாமல் இருந்து ஒரு குழந்தை பெற்ற ஒரு தாயின் களிப்பை அவர் ஒரு கவிதை எழுதி முடித்ததும் வைத்திருப்பார். அத்தனை கவனம், பொறுப்பு, எச்சரிக்கையுணர்வு, கடமை, அக்கறை எனப் பலகூறுகளுடன் அக்கவிதையைப் படைப்பார்.

வெகு ஆழமான பொருண்மைதளத்தில், மனித மனத்தின் அந்நியத்தன்மையால் காயப்படும் மனவெளியை, சுய வலியை, அவமானத்தை சொற்கள் கம்பீரமாய் ஏந்தி அவரது கவிதைகள் வெளிப்படுத்தியிருக்கும். கணீரென்ற குரலில் அவர் அவரது கவிதையை வாசிக்கும்போது கவிதை எனும் இலக்கியப் பிரிவின்மீது ஒரு உயர்ந்த மரியாதை வரும் கேட்கிற மனங்களுக்கு. நல்ல சிறுகதை, நல்ல கவிதை, நல்ல நாடகம், நல்ல திரைப்படம், நல்ல நுர்ல் இப்படி எது அவரது மனதுக்குப் பட்டாலும் உடன் அதனைப் படைத்த படைப்பாளியுடன் உடன் தொடர்புகொண்டு அதன் நேர், எதிர் குணங்களைச் சரியாகப் பட்டியலிட்டு உரைப்பது அவரது இலக்கியப் பங்களிப்பின் முக்கிய பதிவாகும். அத்தனைச் சரியாக கணிப்பார். சிலசமயம் தவறினாலும் தன் கருத்தில் விலகாத குணமுடன் இருப்பார். தெரிந்த நண்பர்கள் இல்லை..இல்லை..புத்தகன் நீங்கள் இப்படி பார்த்திருக்கவேண்டும்.. என்றால் அப்படியா.. என்று உடனே உணர்ந்துகொள்ளும் மனப்பக்குவமும் உண்டு. யாராக இருந்தாலும் மனந்திறந்து பாராட்டுவார். எல்லோரையும் எல்லோரிடமும் அறிமுகம் செய்வார். கூடுதலான பாராட்டுச் சொற்களைக் கொண்டதாக அந்த அறிமுகம் இருக்கும்.

அவருக்குள் பல கனவுகள். பிள்ளை பொறியியல் படிப்பின் இறுதியாண்டில். பெண் பொறியியல் படிப்பில் முதலாண்டில். பல திட்டங்கள். வீடு கட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் கரந்தையில் வெகு முயன்று ஒரு இடம் வாங்கிப் பதிவு செய்து வைத்திருக்கிறார். வழக்கமான பிரச்சினைகள். ஆனால் எல்லாம் அவரது ஆளுமையின் எல்லைக்குள் வைத்திருந்தார். பதவியுயர்வும் வந்தது.

எத்தனையோ இலக்கியம் குறித்து பேசியிருக்கிறோம். எத்தனையோ கூட்டங்களில் கலந்துகொணடிருக்கிறோம். சமீபமாக இடைவெளி விழுந்தது என்றாலும் கைபேசியில் பேச்சைத் தொடர முடிந்தது.

20.09.2010 அன்று அவரது கைபேசியில் இருந்து அழைப்பு. சிதம்பரத்தில் அலுவலகத்தில் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட மறு நொடியில் அந்த அழைப்பு..என்ன புத்தகன்? நல்லாயிருக்கீங்களா? என்றதும்............பதில் பின்வருமாறு
இருந்தது.

நான் புத்தகன் பையன் சசி பேசறேன் அப்பா நேத்து ராத்திரி இறந்துட்டாங்க...

அதிர்ந்துபோனேன். என்னடா சொல்றே?

ஆமாம்.

என்னாச்சு?

நேத்து ராத்திரி 12.30க்கு உறாரட் அட்டாக். இறந்துட்டாங்க..


இன்னும் மீளமுடியாத வலியில் இருக்கிறேன்...


இலக்கியம் என்றோம்
பேசினோம்
சிரித்தோம்
விவாதித்தோம்
எழுதினோம்
கலைந்து கலைந்து
கூடினோம் புத்தகன்..

எந்தப் படைப்பிற்காக
இந்த மீளா மௌனத்தை
கையிலெடுத்துக் கொண்டீர்கள்...

உங்கள் கவிதைகளைப்போலவே
ஆழமான வலியை மனதில்
தைத்துவிட்டுப் போய்விட்டீர்கள்...


நிலா அழுது பார்த்ததில்லை...

நீங்கள் புகைத்த சிகரெட்டின் புகைபோலவே
வலியூடுருவுகிறது மனவுணர்வெஙகும்
வலியன்றி வேறு வழியறியா
மௌனத்தில் புதைந்து நிற்கிறேன்...